இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கண்களில் முதன் முதலாகப் பயம் தெரிகிறது. அவர் குரலில் பதற்றத்தைக் காண முடிகிறது. தான் வெல்ல முடியாத மனிதன் என அவர் கொண்டிருந்த நம்பிக்கை படிப்படியாகத் தகர்ந்து கொண்டிருக்கிறது. காலம் தனக்கு எதிராகச் செல்கிறது என்பதை அவர் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து கொள்கிறார்.

மோடி 2019 ஆம் ஆண்டு தேர்தலிலேயே தோற்கடிக்கப்பட்டிருக்கவேண்டியவர். அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான ஒரு காரணமும் அந்த தேர்தலில் இல்லை. பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராக தமிழ்நாட்டில் கிடைத்த முடிவுதான் இந்தியா முழுக்க எதிரொலித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. அவர்களுக்குத் தேவையான இடங்களை வட இந்தியா முழுமையாகக் கொடுத்தது. புல்வாமா தாக்குதல் மூலம் கடைசி நேரத்தில் ஒரு தேசபக்தி அலையை மோடி உண்டாக்கினார். ஊடகங்கள் அந்த அலையை வட இந்தியர்களின் மனங்களுக்குள் ஆழமாகக் கொண்டு சென்றன. இப்போதும் புல்வாமா தாக்குதல்கள் குறித்து சந்தேகங்கள் நீடிக்கின்றன. புல்வாமா தாக்குதல் நடந்தபோது ஜம்மு & காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் ’ஒன்றிய அரசின் அலட்சியமே இதற்குக் காரணம்’ என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். சி.ஆர்.பி.எஃப். தங்கள் வீரர்களை அழைத்துச் செல்ல விமானம் கேட்டது. ஆனால் அதற்கு உள்துறை அமைச்சகம் மறுத்தது என்றும் இது தொடர்பாக கேள்வி எழுப்பிய என்னை மோடி மௌனமாக இருக்க சொன்னார் என்றும் அவர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். நாற்பது இந்திய வீரர்களைப் பலி கொண்ட அந்த சம்பவத்தின் சூத்தரதாரிகள் யார் என்பது இன்னும் ஒரு புதிராக இருக்கிறது. ஆனால், அந்தச் சம்பவத்தின் மூலம் 2019 தேர்தலில் மாபெரும் ஆதாயத்தை பா.ஜ.க. அடைந்தது. மோடி ‘சௌகிதார்’ என்ற வேடத்தைப் பூண்டார். புல்வாமா தாக்குதலைவிட இந்த நாட்டிற்கு மிகக் கொடுமையான சம்பவமாக மோடி இரண்டாம் முறையாக பிரதமரானார்.

மோடி இரண்டாம் முறை பிரதமரானதற்கு அந்தச் சம்பவம் மட்டும் காரணமல்ல. சில மாநிலக் கட்சிகள், எதிர் கட்சிகளின் குறுகிய நோக்கங்களும் காரணமாக அமைந்தன. பல மாநிலங்களில் பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகள் சிதறின. அதற்கான விலையை இந்த நாடு கொடுத்தது. கொரோனா காலத்தில் உலக நாடுகளிலேயே செயலற்ற பிரதமராக மோடி இருந்தார். லட்சக்கணக்கான வட இந்தியர்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் அகதிகளாக நடந்துச்சென்ற காட்சியை உலகம் கண்டது. எந்த நாட்டிலும் நடந்திராத கொடுமை இது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலமாக சிறுபான்மை மக்களிடையே நாடு முழுக்க பெரும் அச்சத்தை விளைத்தார். அதை எதிர்த்துப் போராடியவர்கள் தலைநகரில் சமூக விரோதிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டார்கள். மோடி கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்துப் பல நூறு நாட்கள் டெல்லியில் விவசாயிகள் கடும் வெயிலிலும் குளிரிலும் போராடினார்கள். பலர் உயிரைவிட்டார்கள். வேறு வழியின்றி மோடி பின்வாங்கினார். பல்வேறு கருப்புச் சட்டங்கள், கண்மூடித்தனமான தனியார்மயமாக்கல், படுமோசமான பொருளாதாரக் கொள்கைகள், பிளவுவாத அரசியல் வழியே இந்த நாட்டை இருண்டக் காலத்திற்குக்கொண்டு சென்றார் மோடி. பெட்ரோல், கேஸ் சிலிண்டரின் கடும் விலையேற்றம் விலை வாசியை நாடு முழுக்க உச்சத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது. மோடி அரசின் தோல்விகள் பல மாநிலங்களில் பா.ஜ.க.வின் தொடர் தேர்தல் தோல்விகளாக மாறியிருக்கிறது. சமீபத்திய உதாரணம் கர்நாடகா.
தனது தோல்வி முகத்தை உணரத்தொடங்கியிருக்கும் பா.ஜ.க. தனது மூர்க்கமான ஆட்டங்களை தீவிரப்படுத்தியிருக்கிறது. அமலாக்கத்துறையின் மூலமாக எதிர்கட்சிகளின்மீது அரச பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திkகொண்டிருக்கிறது. மாநிலக் கட்சிகளைச் சேர்ந்த பல தலைவர்கள் விசாரணை என்ற பெயரில் சிறைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களது அரசியல் செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன. அக்கட்சிகள் குறித்த எதிர்மறை பிம்பங்கள் ஊடகங்களில் பரப்பப்படுகின்றன்.

பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களைக் கொண்டு ஒரு போட்டி அரசாங்கத்தை மோடி நடத்திக் கொண்டிருக்கிறார். அந்த மாநில பா.ஜ.க. அலுவலகமாகவே கவர்னர் மாளிகை மாற்றப்பட்டிருக்கின்றன.

எதிர்க்கட்சிகள் மீண்டும் பிளவுண்டுபோகும், தான் சுலபமாக வெல்லலாம் என்ற மோடியின் கனவு இன்று இரண்டு விதங்களில் கொடுங்கனவுகளாக மாறியிருக்கிறது. முதலாவதாக, நாடு முழுக்க ஒன்றுபடவே மாட்டார்கள் என்று மோடி நம்பிய எதிர்கட்சிகள் இன்று பெரும் அணியாக இணைந்து நிற்கிறார்கள். பாட்னா மற்றும்பெங்களூர் மாநாடுகள் மோடிக்கு எதிரான பெரும்படையாக திரண்டிருப்பதை தெள்ளத் தெளிவாகக் காட்டியது. இந்த அணித்
திரட்டலில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய பங்கு மகத்தானது. கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக எதிர்க்கட்சிகளை இணைப்பதில் அவர் இடையறாத முயற்சிகளை மேற்கொண்டுவந்திருக்கிறார். அதேபோல ராகுல்காந்தியின் பாரத் ஜோடா யாத்திரை மோடிக்கு எதிரான தேசிய அளவிலான உணர்வுகளை ஒருங்கிணைக்கக்கூடியதாக இருந்தது.

மோடி இன்னொரு முறை ஆட்சிக்கு வந்தால் தங்கள் கட்சிகளை மட்டுமல்ல , இந்தியாவில் தேர்தல் ஜனநாயகத்தையே முழுமுற்றாக ஒழித்துவிடுவார் என்பதனை பெரும்பாலான எதிர்கட்சிகள் உணர்ந்துவிட்டன. மகாராஷ்டிராவில் சிவசேனாவையும் தேசியவாத காங்கிரஸையும் பிளந்ததுப் போல நாட்டில் எந்தக் கட்சியையும் சிதைக்கக்கூடியவர் மோடி என்பதை எதிர்க்கட்சிகள் புரிந்துகொண்டிருக்கின்றன.

அதன் விளைவாகவே ஜனநாயகத்திற்காகவும் மாநில உரிமைகளுக்காகவும் எதிர்கட்சிகள் இந்த மாபெரும் கூட்டணியை உருவாக்கியிருக்கின்றனர். இந்தக் கூட்டணியின் இந்தியா (I.N.D.I.A -Indian National Developmental Inclusive Alliance) என்ற பெயர் மோடியை பீதி அடைய வைத்திருக்கிறது. இந்தியா, தேசபக்தி என்பதெல்லாம் தங்களுடைய தனிசொத்தென பரப்புரை செய்துவந்தவர்களுக்கு இப்போது ‘இந்தியா’வை எதிர்த்துக் களம் காண வேண்டிய நிலை. மோடி எந்த அளவிற்கு நிலைகுலைந்து போயிருக்கிறாரென்றால் ’தேசவிரோத அமைப்புகள் – பயங்கரவாத அமைப்புகளின் பெயருடன்கூடத்தான் இந்தியா என்ற பெயர் இருக்கிறது, மோசடி நிறுவனங்கள் பெயரை மாற்றுவதுபோல கூட்டணியின் பெயரை மாற்றுகிறார்கள்’ என்றெல்லாம் பிதற்ற ஆரம்பித்திருக்கிறார். அதோடு மட்டுமல்ல, இந்தக் கூட்டணிக்கு எதிராக என்.டி.ஏ. என்ற ஒரு போலியான கூட்டணி மாநாட்டையும் மோடி டெல்லியில் நடத்தினார். தன்னோடிருந்த பிரதானக் கட்சிகள் எல்லாம் கூட்டணியிலிருந்து விலகிவிட்ட நிலையில் துண்டுதுக்கடா உதிரிக் கட்சிகள் எல்லாம் இணைத்து தனக்கும் ஒரு கூட்டணி இருக்கிறது என்ற மாயத்தோற்றத்தை உருவாக்க மோடி முயன்றார். அது தேசிய அளவில் பெரும் கேலிக்கூத்தாக மாறியது.

மோடியின் இரண்டாம் கொடுங்கனவு இப்போது நடந்துக்கொண்டிருக்கும் மணிப்பூர் வன்முறைகள். இந்த மணிப்பூர் வன்முறையை மோடியின் குஜராத் கலவர மாடலின் 2.0 என்று சொல்லலாம். குஜராத் கலவரத்தின் போது மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தார். பெரும்பான்மைக்கார கலவரக்காரர்கள் சிறுபான்மையினரை நரவேட்டையாடினார்கள். ’மக்களின் கோபம் தணியட்டும் என்று மோடியின் அரசு கலவரக்காரர்களை அனுமதியளித்தது. அந்த உண்மையை உலகிற்குச் சொன்ன காவல்துறை அதிகாரிகள் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். தெஹல்கா பத்திரிக்கையின் ஆசிரியர் தருண் தேஜ்பால் வழக்கொன்றில் தேசிய அளவில் அவமானப்படுத்தப்பட்டு பொது வாழ்க்கையில் இருந்து அகற்றப்பட்டார். குஜராத் படுகொலை குற்றவாளிகள் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு சிறையிலிருந்து வெளியே அனுப்பப்பட்டார்கள். குஜராத் படுகொலையின் கதாநாயகன் மோடி இந்திய பிரதமராகவே மாறினார். 22 ஆண்டுகளுக்குப் பிறகு மணிப்பூர் என்ற சிறிய மாநிலத்தில் பா.ஜ.க. அரசு அதே குஜராத் கலவர மாடலை வெற்றிகரமாக மீண்டும் செயல்படுத்திக் கொண்டி
ருக்கிறது. சிறுபான்மை கிறித்துவர்களான குகி இனப் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டு உரிமையை, மெய்தேய் பெரும்பான்மையினருக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றபோது மோதல்கள் தொடங்கின. குகி இனத்தவர்கள் ஒரு மெய்தேய் இனப்பெண்ணை பாலியல்
ரீதியாக துன்புறுத்தியதாக ஒரு போலி வீடியோ பரப்பப்பட்டது. அங்கிருந்துதான் பெரும் துயரங்கள் ஆரம்பமாயின. குகி மக்களின் வீடுகள் தீக்கிறையாக்கப்பட்டன். அவர்கள் வாழ்விடங்களில் இருந்து துரத்தப்பட்டார்கள். பெண்கள் மீதான பெருமளவிலான பாலியல் வன்முறைகள் துவங்கின. மெய்தேய் இன கலவரக்காரர்களிடம் மிக நவீன ஆயுதங்கள் இருந்தன. எங்கிருந்து அவர்களுக்கு அவை கிடைத்தன?
ஆயுதப்படை ஆயுதக்கிடங்குகளிலிருந்து அவை கொள்ளையடிக்கப்பட்டன அல்லது கொள்ளையிட அவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். அவர்கள் அந்த ஆயுதங்களுடன் இனப்படுகொலையில் இறங்கினார்கள். மணிப்பூரை ஆளும் பா.ஜ.க. அரசு அவர்களை தடுத்து நிறுத்தவில்லை. குஜராத்தில் என்ன நடந்ததோ அதுதான் மணிப்பூரிலும் நடந்துக்கொண்டிருக்கிறது. கலவரக்காரர்களைத் தடுப்பதற்கு பதில் மணிப்பூர் அரசு இணையத்தடைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அங்கு என்ன நடக்கிறதென்று வெளியுலகிற்குத் தெரியாமல் எல்லாக் கதவுகளையும் மூடினார்கள். அதையும் மீறி மணிப்பூரைப் பற்றிய கேள்விகள் ஊடகங்களில் வந்த போது மோடி தனது வெளிநாட்டுப் பயணங்களில் மும்மரமாக இருந்தார்.

பிறகுதான் அந்தக் காணொளி வெளியானது. கலவரக்காரர்கள் இரண்டு குகி இனப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஊர்வலமாக நடத்திச் செல்லும் காட்சி இந்தியாவை மட்டுமல்ல, உலகத்தையேஅதிர்ச்சியில் உறையவைத்தது. காலம் ஒரு கணம் நாகரீக உலகத்திலிருந்து வெகுதூரம் பின்னோக்கி சென்றது போன்ற உணர்வு. ஆம். அது நம் கண் முன் நடக்கிறது. நம் காலத்தில்தான் நடந்துக் கொண்டிருக்கிறது. அதன்பின் ஒன்றின்பின் ஒன்றாக பல புகைப்படங்கள், பல காணொளிகள், பல செய்திகள். அங்கு ஒரு அரசு இருந்ததா? இருந்திருந்தால் அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? கலவரக்காரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன. அவர்களை ஒடுக்க வேண்டிய காவல்துறையும் ராணுவமும் ஏன் வெறுமனே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது? மூன்று மாத காலமாக நடந்துகொண்டிருக்கும் இந்த அவலம் பற்றி மோடிக்கு எதுவுமே தெரியாதா? இதெல்லாம்தான் இந்த நாட்டு மக்களும் ஊடகங்களும் எதிர்கட்சிகளும் அறிய விரும்புகின்றன.

ஆனால் மோடி பேச மறுக்கிறார். பதிலளிக்க மறுக்கிறார். அவ்வளவு பெரிய புதிய பாரளுமன்றக் கட்டடத்தை எதற்காக மோடி எழுப்பினார்? அந்த பாராளுமன்றத்தை சந்திக்க ஏன் இவ்வளவு பயம்? பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் அந்த காணொளி வெளிவந்ததும் வேறுவழியில்லாமல் இரண்டு சொட்டு முதலைக் கண்ணீர் வடித்தார். நூற்றுக்கணக்கான கொலைகள், பல்லாயிரக்கணக்கான குகி மக்கள் காடுகளிலும் அகதி முகாம்களிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். முகாம்களில் மக்களுக்கு குடிக்கக்கூட தண்ணீர் இல்லையென்று அங்கிருந்து செய்திகள் வருகின்றன. பிரதமர் உணமையைக் கண்டு அஞ்சுகிறார். அவரது அரசு கையாலாகாத அரசு மட்டுமல்ல. இந்த நாட்டை பிளவுபடுத்தி மக்களிடையே இன வெறுப்பு, மத வெறுப்பு மோதல்களை உருவாக்கி அந்த நெருப்பில் அதிகாரக் குளிர்காயும் சக்திகளாக தான் ஏற்றுக்கொண்ட பொறுப்பை மோடி செவ்வனே நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்.
எதிர்கட்சிகள் ஒற்றுமை, மணிப்பூர் படுகொலைகள் என்ற மோடியின் இந்த இரண்டு கொடுங்கனவுகள் இந்த பாசிச ஆட்சியின் இறுதி அத்தியாயத்தை எழுதப் போகின்றன.