கூவம் ஓரமாக அந்தக் கைவிடப்பட்டு பாழடைந்த பழைய சத்துணவுக் கூடம் ஓட்டை உடைசல்களுடன் மூன்று முள் மரங்களுக்கிடையே ஒரு குகை போல கிடக்கிறது. குடியிருப்பு, குடும்பமென கட்டுப்பாடு இல்லாமல் இரவு பகலெனச் சுற்றித் திரியும் போக்கிரிகளுக்கான புகலிடம், உள்ளூர் போலீசாருக்கு மாத நிலுவைகளைச் சரிக்கட்ட, அவசர தேவைகளுக்கு உடனடி பலன் தரும் நாற்றம் வீசும் கதகதப்பான தரித்திரக் கட்டிடம் அது. கூடத்தின் உடைந்த சிமெண்ட் கூரையின் துளைகள் வழியாக முள் மரத்தை தாண்டி சூரியன் சொட்டி அறையில் வெள்ளமாய் தேங்கி மஞ்சளாய் ததும்பிக்கொண்டிருந்தது. தரைகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக இருக்க பழைய கந்தல் பாய்மீது போதையின் ஆழத்தில் மூஞ்சி குறட்டையெழுப்பியபடி தூங்கிக்கொண்டிருந்தான். மூஞ்சி மாதிரியான நிதானமற்ற ஆட்களின் பாக்கெட்டில் சில்லறைகளை உருவவென்றே வரும் பக்தன் என்கிற பத்தா, பத்தடி தொலைவில் உட்கார்ந்து சரியான சந்தர்ப்பத்தில் அவனை நெருங்கி கொள்ளையடிக்க காத்திருந்தான் ஆனால் அவனுக்கு மூஞ்சை நெருங்கத் துணிச்சலில்லை. அதைவிடவும் அவனது ஊக்க குறைவுக்கு காரணம் உள்ளே வரும்போதே பாழடைந்த கூடத்துக்கு வெளியே மண்ணில் பாதி புதைந்து இரவின் கவனமற்ற கால்களால் மிதிபட்ட பச்சை நிற ஐம்பது ரூபாய் நோட்டு அவனிடம் சிக்கியிருந்தது. புதையலைக் கண்ட களிதுள்ளும் மனதுடன் அதை மண்ணிலிருந்து பறித்து உள் பாக்கெட்டுக்குள் சொருகிப் பத்திரப்படுத்தியிருந்தான். தனது செயலுக்கான முன்னோட்டமாகத் தரையில் சிதறிக் கிடக்கும் அரைகுறையாகப் புகைத்துப் போட்டிருந்த சிகரெட்டுகளைப் பொறுக்கி குவியலாகத் தன் முன்னே வைத்துக்கொண்டு அவற்றை ஆசையோடுபார்த்தான். கையிலிருக்கும் தீப்பெட்டியை ஆட்டிப்பார்த்தான் சொர்க்கத்தின் சிரிப்பொலி கேட்டது. அவனும் கூட சிரித்துக்கொண்டான்.

அப்படி ஒரு இடம் அங்கு இருப்பதே அந்தப் பகுதியிலிருக்கும் பலருக்குத் தெரியாது. மாணவர்கள், குடும்பத் தலைவிகள், வங்கிப் பணியாளர்கள், ஆட்டோ ரிக்ஷா, டாக்சி ஓட்டுனர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் அப்படி பலர் அந்தப் பகுதிகளை கடக்கும் போது முகத்தை திருப்பிக்கொண்டு போகிறவர்கள்தான். அதற்கு மைதானத்தின் மூலையில் தனித்துவிடப்பட்ட அந்தக் கூடத்தின் வாடை சாலை வரை பரவி நாசிகளில் விரும்பத்தகாக நெடியேற்றுவது மட்டும் காரணமில்லை. அங்கே ஒரு கொலையும், ஒரு தற்கொலையும் நடந்திருந்தது. அதோடு மனிதக் கழிவுகள் தரையெங்கும் பழையதும், புதியதுமாய். ஏனோ அங்கு மற்ற கால்நடைகளைப் போலவே பன்றிகளும் வருவதில்லை, ஒன்றிரண்டு ஆடுகள் தவிர. கூடத்துக்கு அப்பால் கூவம் நதியோடுகிறது. அதை எட்டடி சுவர் மறைத்து நிற்கிறது. நதியின் வாடைக்கும், கூடத்தின் வாடைக்கும் தொடர்பில்லை. நதியை அழுக்காக்கியவர்களைத் தண்டிக்க அவர்களை நகருக்கு வெளியே கொண்டு போய் தள்ளிய பிறகு நதி மணம் பரப்பிக்கொண்டு ஓடுகிறது. நகரின் பெரிய மனிதர்கள் அதன் கரையில் நின்று நுரையீரலை நிரப்பிக்கொண்டு போகிறார்கள். கரையோர மக்கள் நதியின் ஒரு பாதியை ஜெ அதிசயம் என்றும், மறு பாதியை க அதிசயம் என்றும் பெயரிட்டிருக்கிறார்கள்.

மூஞ்சிடமிருந்து தீவிரமான குறட்டையொலி கிளம்பி அவன்மீதே சூரிய ஒளியில் மினுக்கும் தூசி படலத்தைப்போல மிதந்துகொண்டிருந்தது.

இந்த அற்புதமான நேரத்திலே மாசி அங்கே எப்படித் தோன்றினான் என்பதே தெரியாமல் பத்தா ஆனந்தமாகப் புகைத்துக்கொண்டிருந்தான். ‘மாமே எழுந்துரு மாமே’ என்று குனிந்து மூஞ்சி யின் தோளைப் பிடித்து உலுக்கினான்.

மாசியின் குரல் கேட்டு சொர்க்கத்தில் திரிந்துகொண்டிருந்த பத்தாவுக்கு உடல் உதறலெடுத்தது. ஒருவேளை தவறவிட்ட ஐம்பது ரூபாயைத் தேடி வந்திருப்பானோவென சஞ்சலப்பட்டான். அந்த சஞ்சலமே அவனுக்கு இருமலை உண்டாக்கியது. மாசி பத்தாவை இப்போதுதான் கவனித்தான்.

“ஏய், நீ இங்க தா இருக்கிறியா இன்னா பத்தா, போதைலருக்கிறவன் ஜோபிலருந்து துட்டு உருவிக்குனு போலான்னு பாத்துக்கினுகீறியா?”

மாசி கேட்டதும் பத்தாவுக்குப் பக்கென்றிருந்தது. வார்த்தைகளைத் துப்ப மொழியைத் தேடினான். அவன் மண்டையைவிட்டு அது கழன்று எங்கே விழுந்துவிட்டிருந்தது. அது தெரியாமல் வார்த்தைகளை மன இடுக்குகளில் தேடிக்கொண்டிருந்தான். அகப்படவில்லை. அவன் சொல்ல நினைத்தது இதுதான்.

“இப்ப எழுந்துக்கிறவனா உங்கூட்டாளி… பசங்ககூட சேந்துகினு பொழுது விடியற வரைக்கும் குடி. இன்னா குடி குடிக்கிறானுங்கப்பா பாரு பொய்து விடிஞ்சதுகூட தெரியாம கெடக்குறான் அவனப்போய் எழுப்ப வந்துக்கீற.” சொல்ல நினைத்த வார்த்தைகள் கிடைக்காததால் பத்தா கறை படிந்த பல்லைக் காட்டி வெறுமனே பல்லிளித்தான் வாய தொறக்குறது அவ்வளவு பாதுகாப்பானதில்லையென்பது அவனுக்குத் தெரியும். பழைய அனுபவங்கள் அவன் முன்னே குவியலாக இருந்தது. ஒன்பது பல்லு தெறித்ததும், 14 தழும்புகள் உடலெங்கும் சாட்சியாக. முகத்தில் மட்டும் ஆபத்தான நாலு பாவம், மிக அற்பமான சில்லறைத் திருடனுக்கு அளவுக்கு அதிகமாகவே பரிசுகள் கிடைத்திருந்தன. அதனாலோ என்னவோ பாவம், அவன் தன் சொந்த மொழியைக்கூட மறந்துவிட்டான். பேசுவது அவ்வளவு லாபகரமானதில்லை. காலம் அவனுக்குக் கற்பித்திருந்தது. சமீப காலமாக வெறும் பல்லிளிப்புதான் போதையில் கிடக்கும் மூஞ்சை உலுப்பும் மாசியைப்பார்த்து சைகையால் ம், அவனை எழுப்ப முடியாது என்பது போல பாவனை காட்டினான்.

“நீ வேற மேட்ற சொன்னனு வையி, பட்டுன்னு எயிந்து ஒக்காந்திக்குவான் பாரு.” என்ற மாசியின் வார்த்தைக்கு இப்படிப் பதில் கொடுக்க நினைத்தான்:

“அப்பிடி இன்னா மேட்று மாசி” கேட்டால்…

அதற்கு மாசி என்ன மாதிரியான பதிலைத் தருவான் என்றும் யோசித்தான்.

“யோவ்… பழைய பீங்கா மேட்ற கேட்ணுப்போயி மோள அட்சி காப்ரா பண்றதுக்கா போய்யா” என்று துப்புவான் என்று நினைத்துக்கொண்டவன் தனக்குத் தானே சிரித்துக்கொண்டான்.

“தோபார்றா, குஷ்மா பையன் என்னப்பாத்து காப்ரான்னுது. இன்னாமோ மட்டப் பண்ண போறதுங்கமாரி. எங்கன்னா மாட்டுங்க அப்ப காட்றேன் வேலைய பஸ்ட் சாட்சி நான்தான்” இப்படி மாசிக்குப் பதில் கொடுக்க ஆசைப்பட்ட பத்தா அதற்கான மாசியின் பதிலையும் தனது பதிலையும் யோசித்தான்.

“.அதுக்குள்ள உன்ன போட்றன் இரு.”

“வேலையப்பார்றா, எவ்ளோ சீட்டாக்கைய பாத்துட்டு வந்திருக்கிறோம்.” இருவருக்குமான உரையாடல் பத்தாவின் மனத்திரையில் ஓடியது. இப்போது மன நிறைவாகப் பொறுக்கிய சிகரெட்டிலிருந்து பெரிய தோதான ஒன்றை எடுத்துப் புகைத்தான். காசம் தொற்றிய அவனது நலமற்ற நுரையீரல்களிலிருந்து ஈரமான புகையும் பல லட்சம் காசப் பூச்சிகளும் பெருஞ்சத்தத்துடன் வெளியேறிது.

மாசி அவனை எரிச்சலுடன் திரும்பிப்பார்த்து…

“கோத்தா டேய், உன்னும் சாவாம எதுக்குடா இருமி நோயப்பரப்புற? ஓட்றா இங்கருந்து” என்று அவனை விரட்டினான்.

அவ்வளவுதான், ஆபத்து நெருங்கிவிட்டது. இங்கிருந்து ஓடிவிடுவதுதான் பாதுகாப்பென்று சேகரித்த துண்டு சிகரெட்டுகள் மற்றும் ஐம்பது ரூபாய் பரிசுடன் தேங்கி நின்ற சூரிய வெள்ளத்தைக் கலக்கிக்கொண்டு ஓடினான். இந்தக் கலவரங்கள் மூஞ்சிக்கு விழிப்பைத் தந்தது அவன் எரிச்சலுடன் மாசியைப் பார்த்தான். மாசி குனிந்து மூஞ்சை உலுக்கி காதோடு கமுக்கமாகச் சொன்னான்.

“மாமே, தங்கம் மல்சமான வேட்ட. எயிந்துரு மாமே.”

அரை போதையிலும் மூஞ்சி சட்டென எழுந்து உட்கார்ந்து கொண்டு மாசியை முறைத்தான். தலை கனக்க புரண்டுப் பார்த்தான். சூரியன் சிமிட்டிக் கூரை உடைசல் வழியே ஒழுகி அவன் கண்ணில் சொட்டியது. உணர்ச்சி மிக்க நடுவிரலால் அதைத் துடைத்துக்கொண்டு மாசியை மீண்டும் பார்த்தான். தங்கத்தின் ஒரு துண்டு போல மாசி நின்றுகொண்டிருந்தான். மாசிக்குத் திருட்டைப் பழக்கியதும், அந்தப் பணத்தை ஜல்சா பண்ணக் கத்துக்கொடுத்ததும் அவனே.

“தங்கமா…? இன்னா எதுலனா என்ன கோத்து வுட்டு நீ தவுடாவலான்னு பாக்கிறியா? பித்தளைய பாத்தாலே கமுக்கமா பேக்கற பித்தள மாத்தி நீ. தங்க இருக்கிற எடத்தை எங்கிட்ட சொல்றியா போடா ஏய்.”

குடலுக்குள் இருந்த நடுத்தரமான மது இரைப்பைக்குத் திரும்பி வாய் வழியே வெளியேறத் துடிப்பது போல வயிற்றை எக்கிக்கொண்டு உறுமினான். பழுப்பேறிய கந்தல் பாயின் மேல் கிடந்த அவனுடைய தலையை அலுமினியப் பட்டறையில் பிறந்து அதன் வாசலிலேயே உயிரைவிட்ட பாச்சாவின் அச்சுறுத்தும் வலுவான கைகளைப்போல நான்கு கைகள் அவன் தலையைத் தரையோடு வைத்து அழுத்துவது போல பாரமாக இருந்தது.

காதில் விழுந்த ஆசையூட்டும் மாசியின் வார்த்தையை அப்படியாக ஒதுக்கிவிட முடியவில்லை. கடந்த காலங்களில் அவனோடு கூட்டு சேர்ந்த எதுவுமே தோல்வியில் முடிந்ததில்லை அவனிடம் அப்படிப் பேசியிருக்க கூடாது. புரண்டு பார்த்தான். போதை இன்னமும் அவன் ரத்தத்தில் தங்கியிருந்தது.

“தலை வலிக்குது கோச்சிக்காத மச்சி.” சொல்லிக் கொண்டே முயன்று எழுந்து உட்கார்ந்தான். “.இன்னாடா சொல்ற தங்கம் கிங்கம்னு.”

“மாமா..நம்ப பழைய பம்பிங் ஸ்டோர் இருக்குதுல்ல, அங்க வாயன் ஒரு மேட்ரு இருக்குது.”

“இப்ப பம்பிங் ஸ்டோர் எங்கடா இருக்குது? அதான் புட்பால் கிரவுண்டாயிடுச்சே?”

மாசி எச்சரிக்கையாக யாராவது இருக்கிறார்களாவென வலதும் இடதுமாகத் தலையைத் திருப்பி ஆராய்ந்தான். “கொஞ்ச எங்கூட வா. மேட்ற சொல்றன்.”

“ஆமா மாமா நேத்து பசங்க மேட்ச் ஆட கோல் போஸ்ட் நட்டுக்கினு இருந்தானுங்க. நம்ப புள்ளிங்களாச்சேன்னு நான் வாங்கி நோண்டுன மாமா. மூணடிதா நோண்டியிருப்பன். ஒம்மால இன்னா வாசன தெரிமா. அய்யோ, தங்க வாசன மாமே. உனுக்குதா தெரியுல்ல, பத்தடி தூரத்துலயே பொருள மோப்பம் புடிச்சிருவன். பச்ச தங்க வாசன மாமே, நோண்டிக்கினே இருந்தன். சட்டுன்னு பாத்தா ஏழடி கெடப்ற (கடப்பாறை) மண்ணு உள்ளப் போயிட்சி” ஆச்சரியமாக சொன்னான். மூஞ்சி படாரென மாசி கன்னத்தில் அறைந்து விட்டான். நாக்கைக் கடித்து அச்சுறுத்தியபடி,

“ஏய் கெடப்றய வித்து குட்சிட்டு மண்ணு உள்ள போயிட்சின்னு என்ன கோத்து வுட்டு நீ தவுடாவலான்னு பாக்குறியா? கோத்தா டேய் போய்டு.” சொல்லிக் கொண்டே திரும்பிப் படுத்துக் கொண்டான். அடி பலமாக இருந்தாலும் இதெல்லாம் சும்மா அன்புல தட்றதுதானே.

“இல்ல மாமே, நேத்தே பசங்களுக்கு வேற கடப்ற குட்த்துட்டன். நீ வேண்னா வந்துபாரு.

மூஞ்சிக்கு அப்பத்தான் அது நினைவுக்கு வந்தது. அவங்க அத்த ஒருத்தி நூத்தி மூணு வயிசு வரைக்கும் இருந்தது. அது சாகற வரைக்கும் அந்த பம்பிங் ஸ்டோரப் பத்தி கதை. கதையா சொல்லும் பம்பிங் ஸ்டோர் வர்றதுக்கு முன்னாடி அங்க வெள்ளக்காரன் பங்களா இருந்துச்சாம்.

வெள்ளக்காரன் உள்ளூர் பொம்பள ஒருத்திய சேத்துக்கிட்டு வாழ்ந்தானாம். அவள் புள்ள பெக்கமுடியாம செத்துட்டா. அந்த வெள்ளக்காரன் அவள அந்த வீட்டுத் தோட்டத்துலயே அவள் போட்டிருந்த தங்க நகைங்களோடவே வச்சி பொதச்சிட்டானாம். அப்பறம்தான் அந்த எடத்துல பம்பிங் ஸ்டோர் வந்துச்சாம். இப்ப அதுவும் தரைமட்டமாயி புட் பால் கிரவுண்டா மாறிடுச்சி. இதெல்லாம் மூஞ்சி மண்டைக்குள் ஓடியது. ஒரு வேள மெச்சாலுமே மேட்ரா இருக்குமா, யோசித்தான். .

“சத்திமா தங்க வாசன வர்து மாமே. உள்ள இன்னா பூத இருக்குதுன்னு பாத்துருவோம் வா.” மூஞ்சின் கை பிடித்து தூக்கினான். இப்பவும் மூஞ்சி மாசியை சந்தேகத்துடனே பார்த்தான் “உம் மேல சத்திமா மாமே” அவன் தலையில் அடித்தான்.

ச்சே, தலைல அடிச்சி சொல்றான், பைய எதோ கண்டுக்குணுதான் வந்துக்கிறான். சரி போய்தான் பாப்பமே என்று அசைந்தான்.

“வா மாமே இஸ்த்து பாப்போம் வந்தா. தங்கம், போனா மயிறு. அங்க மல்சமா இன்னாமோ இருக்குது. நீ வேண்ணா பாரேன், நம்ம பெர்சுங்க அப்பல்லா சொல்லுமே ஞாபக இருக்குதா? அங்க ஒரு குஜிலி இருந்தாளாமே. அவ மட்டையானப்போ அவ வச்சிருந்த நகைகளையும் அவகூடவே வச்சி பொதச்சிட்டாங்களாம்.”

‘அடப்பாவி, அந்தக் கதை உனுக்கும் தெரியுமா?’ மூஞ்சி மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.

“சரி வா, இன்னாமோ சொல்ற. அதையும்தான் பாத்துடுவமே. ஆமா மச்சா பள்ள தோண்டணுமே நம்பளால முடியுமா?”

“வா மாமே, போதையப் போட்டா பூமியய்யே ஓட்டப் போட்டுல்லா. வா எட்டு மணிக்கெல்லா பசங்க கிரவுண்டு கேட்ட மூடிக்கினு போயிடுவானுங்க. அப்ப ஆரம்பிச்சம்னா ஒன்னு, ரெண்டுக்கெல்லாம் மேட்ர முட்சில்லாம்.”

“ஆமா உனுக்கு குஜிலி மண்ட ஓடு, எனுக்கு தொரை மண்ட ஓடு. கோத்தா.. *பிதுர்ல்ல ரத்தம் கக்கி மட்டையாவப் போறம்.” சாவைப் பற்றி சந்தோசமாகப் பேசியபடி கிளம்பிப் போனவர்கள், இரவுக்காகக் காத்திருந்தார்கள்.

இரவு அவர்களை சூழ்ந்திருந்தது.

திருடர்களின் கைகள் மென்மையானவை. உள்ளமோ திறக்க முடியாத பூட்டுதான். மைதானத்தில் ஆள் நடமாட்டம் தீர்ந்து புகும்வரை காத்திருந்த திருடர்கள்…

மட்டமான சரக்கைக் குடித்துவிட்டு மாத்துக்கட்டுல பள்ளம் தோண்டிக்கொண்டிருந்தார்கள். மாசி மூழ்குமளவு பள்ளம் தூர்த்தும் கடப்பரையை இழுத்துக்கொண்ட துளை தட்டுப்படவேயில்லை. தங்கத்தின் வாடை பள்ளத்திலிருந்து ஊற்று போல கிளம்பி வந்தது. மூஞ்சும் அந்த வாடையை அனுபவித்த நிமிடங்களில் மாசி கத்தினான். கடப்பறையின் முனை தட்டுப்பட்டது. ஓரடிக்கு முனை தெரியுமளவு தூர்த்து கடப்பரையைப் பிடுங்கி மீண்டும் துளையில் விட்டால் உலோகத்தில் மோதும் ஓசை கேட்கிறது. “ஆமாம், அது தங்கம்தான் மச்சி.” மூஞ்சி கத்தினான்.

திருடர்களுக்கு கடப்பாறை தங்கத்தில் மோதுகிறதா, இரும்பில் மோதுகிறதாவென்று தெரியும். திருட்டைக் கற்றுத் தரும் சாத்தான்களிடம் பயின்ற திருடர்களுக்கு மட்டும் அது தெரியும். தங்கத்தின் வாடை அவர்களை போதையில் தள்ளுகிறது.

“பாத்தியா மாமே, தங்க வாசனை இன்னா கமகமன்னு சும்மா நரம்புல மருந்து அட்சா மாதிரி.”

“மாசி இது தங்க வாசன இல்லடா, பேய் வாசன. சாதாரணப் பேயா இருந்தா மல்லிப்பூ வாசன வரும். இது குஜிலிப் பேய். அதான் தங்க வாசன வருது.”

மாசி எதையுமே காதுல வாங்கறப்போலத் தெரியல. பேய் போல மண்ண தூர்த்துக் கொட்டிக்கொண்டிருந்தான். அந்த நேரம் தூரத்தில் போலீஸ் வாகனத்தின் ஒலி கேட்கிறது. இருவரும் எச்சரிக்கையடைந்து பள்ளத்தில் பதுங்கிக் கொண்டார்கள். இருளைப்பூசிய இரண்டு நாய்கள் இவர்களை நோக்கி குரைத்துக்கொண்டு ஓடி வந்தன. மாசி மண்ணாங்கட்டியெடுத்து நாய்களை நோக்கி வீசினான். அவை மிரண்டு அடர் இருளை உதறிக்கொண்டு ஓடின.

“மச்சா கவுன்சியா அதுங்க நாய் இல்லடா, நரிங்க மாதிரி இருக்குது.” போலீஸ் வாகனம் மைதான வாயில் கதவருகில் வந்து நிற்பது தெரிகிறது. வாகனத்திலிருந்து இறங்கிய காவலர் கேட்டைத் தடியால் தட்டுகிறார். “யோவ் தொறந்துக்கினு உள்ளப் போய் பாருய்யா. உள் பக்கம் தாப்பா போட்டிருக்குதாப் பாரு.” உதவி ஆய்வாளர் மிரட்டலாகச் சொல்வது பள்ளத்திலிருப்பவர்களுக்குக் கேட்கிறது. காவலர் கதவைத் திறந்துகொண்டு மைதானத்துக்கு வருகிறார்.

மாசி நடுக்கத்தில் மூத்திரம் பெய்துகொண்டிருக்கிறான்.. பத்து நாட்களுக்கு முன் வாங்கிய அடியின் உள் காயங்கள் இன்னமும் ஆறியிருக்கவில்லை கொடூரமான சித்ரவதைகள் அவன் நினைவுக்கு வந்து போகிறது. மறுபடியும் ஒரு பயங்கர விருந்தை அவன் விரும்பவில்லை.

“மாமே அவன் நம்பகிட்ட வர்றதுக்குள்ள செவுறு எகிறி குச்சி ஓடில்லாம் வா” மாசி சொல்ல, மூஞ்சி மாசி வாயைப் பொத்தினான்.

“டேய் அவனுங்க சும்மா ஒரு *குன்சாதான் வந்து *வாச்சா உட்றானுங்க போய்டுவானுங்க பாரு” குசுகுசுத்தான்.

அந்த நேரம் யாரோ காலைப் பற்றி இழுப்பது போலுணர்ந்த மாசி கத்த, மூஞ்சி அவன் வாயைப் இறுக்கப் பொத்தினான். காவலர் நாய் குரைத்ததில் *பிதுர்லாயி டார்ச்சை மைதானத்தை நோக்கி சுழற்றிவிட்டுத் திரும்பிப் போய் வாயில் கதவை மூடுவது தெரிகிறது. அவர்கள் வண்டியைக் கிளப்பிக்கொண்டுப் போகிறார்கள். மூஞ்சி துள்ளிக்கொண்டு மேட்டுக்குத் தாவினான். தங்க வாடை அமுங்கி மூத்திர நாற்றம் அதிகமாக, முகம் சுளித்தபடி “ இன்னாடா இவ்ளோ பீசாங்கோலியாகீற… தூ.. மாரு, வயிறுன்னு இம்மா அறுப்பு வாங்கனவன் போலீசப் பாத்தா மூத்துரம் அடிக்குற. தூ” மூஞ்சி துப்பினான்.

“உனுக்கின்னா, உள்ளப் போனா கூட்னு வர ஆளுகீது. நம்பன்னா அப்டியா? புட்சிகினு போய் மோளம் *காசற மாதிரி காசி அட்சி கீய்க்கிறானுங்க. *ஊஊட்டு அடியா யே ஊட்டு அடியா சவ்வுல்லா கீஞ்சி லூசாயிடுச்சி மாமே.”

மாசியின் குரல் அடியாழத்தில் கேட்பது போலிருந்தது. திடீரென ‘மாமே’ அரண்டு போய் கத்தியவன் எதையோ தூக்கி வெளியே போட்டான்.அதே வேகத்தில் அவனும் தாவி மேலே வந்தான் . அது மண்டை ஓடுதான் “நான் சொன்னல்ல, இது குஜிலி மண்ட ஓடு ,அடுத்து தொரை மண்ட ஓடு என்று சொன்னவன் பள்ளத்தில் குதித்தான்

“மச்சா அப்ப கண்டிப்பா தங்க இருக்கும்டா” என்றவன் பள்ளத்தை தூர்த்து எலும்புகள அள்ளிப்போடுகிறான். “ஏய்மாசி *குச்சகீச்சி காமிடா“ கத்தினான். மாசி மாச்சிப்பொட்டியை உரச வெளிச்சத்தில் மூஞ்சி கைகளில் தங்க சங்கிலிகள் மின்னுகிறது. இப்போது மாசியும் பள்ளத்தில் குதிக்கிறான் இருவரும் சேர்ந்து எலும்பையும் மண்ணையும் தங்க நகைகளையும் வாரி வாரிப் போடுகிறார்கள் மாசி அப்போதுதான் பார்க்கிறான் மூஞ்சி எலும்புக் கூடாக மாறித் தரையில் விழுவதை தானும் எலும்புக் கூடாக மாற மாசி அலறியபடி கறை ஏறத்துடிக்க பள்ளத்துக்கு மேலே இரண்டு நரிகள். அவனுக்கு ஓநாய்களைப் பற்றித் தெரியாது. ஓநாயைப் பார்த்தாலும் அவன் நரியென்றுதான் சொல்வான். அச்சத்தில் மேடேறத் துடிப்பவனை மூஞ்சினுடைய எலும்புக் கூடு அவனைப்பற்றி இழுக்கிறது. மூஞ்சி விடுறா மூஞ்சி விட்றா கத்துகிறான். அடி மாறி மாறி முதுகில் விழுகிறது. எலும்பாலான வலுவான அடி.

“இன்னா சாருக்குக் கனவுல கூட கூட்டாளிய பிரிஞ்சியிருக்க முடியலயா?…ம்” கேட்டுவிட்டு மாசியைப் பார்த்து உதவி ஆய்வாளர் மீசையை முறுக்குகிறார்.

இரவெல்லாம் பட்ட அடியில் மயங்கி அதுவே உறக்கமாக மாறி ….வர்ற கனவு கூடவா அந்த மாதிரி வரணும். “ஏன்டா நாலு நாலா சாவடி வாங்கறியே அப்பவே சொல்லியிருந்தா இம்மா அடி வாங்கத் தேவயில்லயே. ம் நேத்து கட்ன லாடத்துக்கு இப்ப பேசறியா. யோவ், அந்த மூஞ்சிய இழுத்தாங்கய்யா.”

இப்போதும் மாசிக்கு என்ன நடக்கிறதென்று புரியல.

கனவிலிருந்து விடுபட்டு தான் கிடப்பது காவல்நிலைய மூத்திரத் தரையில். கண்டதெல்லாம் கனவு. தூவென துப்பினான்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் மூஞ்சி என்கிற முருகனை கிடங்குத் தெரு சேட்டு துணிக்கடையொன்றிலிருந்து இழுத்து வந்தார்கள். அதைப் பார்த்துவிட்டு மாசி கதறியழுதான்.

“சார் அவன் பாவம் சார். அவன நான் பாத்தே ஒரு வருசத்துக்கு மேலாவுது சார். அவன் திருந்தி சேட்டுகிட்ட வேலை செய்றான். அவன விட்ருங்க சார். திருட்டுப் போன நகையெல்லாத்தையும் நான்தான் திருடினன் வாங்க சார், வித்த எடத்தைக் காட்றன்.”

கைகளைத் தரையில் அடித்துக்கொண்டு கதறினான்.

“பாவம், மூஞ்ச விட்ருங்க சார். அவனையாவது திருந்தவிடுங்க” கண்ணீரோடு கை கூப்பினான். கால் முட்டி பாதம் கணுக்கால் எல்லாமே வீங்கி சீழ்பிடித்துப் போலிருந்தது. அவனால் நகரவும் முடியல. நான்கு நாட்களாக வைத்து சித்ரவதை செய்கிறார்கள். ஒரு காலத்தில் திருட்டு வேலைகள் செய்தவன்தான் இரண்டு ஆண்டாக அதையெல்லாம் விட்டு பெயின்ட் வேலைக்குப் போகிறான். நான்கு நாட்களுக்கு முன்பாக கூலி வாங்கிக்கொண்டு வரும் வழியில் இருந்த மதுக்கடையொன்றில் குடிக்கச் சென்றவனைக் குடிக்கும் முன்பே பிடித்து இழுத்து வந்திருந்தார்கள். மேஸ்திரி வந்து எவ்வளவு பேசியும் நடக்கல. இருபத்தைந்து சவரன் நகைய குடுத்துட்டு கூட்டுப்போகச் சொன்னார்கள்.

மாசி கண்ணாலும் பார்க்காத நகையைத் திருடி விற்றதாக யாரையாவது காட்ட வேண்டும். நீதியின் திட்டம் அதுவாக இருக்க, பேய்களிடம் அடிபட்டு சாவதை விட போலீசுக்கு மூணு, நாலு லட்சம் தண்டம் அழுவப் போற எவனாவது கொழுத்த ஊர் தாலிகளை விழுங்குற வட்டிக்கடைக்காரனைக் காட்டிவிட நான்கு நாட்களாக ஒப்பாத மனம் மூஞ்சிக்காக ஒப்பியது. இல்லனா மூஞ்சியையும் இதே போல சித்ரவதை செய்வாங்க. ஆள்காட்ட அழைத்துப் போக வண்டி தயாரானது.

“இருபத்தைந்து சவரன் சாதாரண ஆள்கிட்ட வித்திருக்க மாட்ட. பெரிய கடையாதான் பாத்து வித்திருப்ப இல்ல.”

அப்படி அவர் கேட்பதற்கான பொருள் மாசி மாதிரியான பழைய திருடர்களுக்கு நல்லாவே தெரியும். அவன் புண்ணாகிப் போன தலையை முடிந்த மட்டும் ஆட்டினான். நல்ல கொழுத்த கடைகள் வழியாகத்தான் வண்டி போகும். வேலை இனி சுலபம்தான்.

கொதிக்க கொதிக்க டீயும் நாலு பெரிய பட்டர் பிஸ்கட்டும் வாங்கி வந்து வந்த மூஞ்சி மாசி முன்பாக வைத்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் போனான். தன்னோடிருந்த தொடர்பை இரண்டாண்டுகளுக்கு முன்பே அறுத்துக்கொண்ட நண்பனை மச்சா மூஞ்சின்னு கூப்பிட ஆசையாக இருக்கிறது. அவனோ காதுகளைத் தொலைத்துவிட்டுப் போகிறான்.