திருத்தப்பட்ட குடியுரிமை சட்ட மசோதா மத்தியில் நிறைவேற்றப்பட்டபிறகு நாடெங்கிலும் போராட்டங்கள் நடைபெற்றுவருவதை நாம் அறிவோம். அதை இந்த அரசு எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதில் இருந்து, நவீன இந்திய அரசு என்பது குறித்த சில புரிதல்களுக்கு நம்மால் வரமுடிகிறது. அதிக பட்சமாக உத்தரப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட்ட 19 பேர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்திருக்கிறார்கள். போராட்டக்காரர்களை கலவரம் செய்தவர்கள் என்றே குறிப்பிடுகிறது அங்கு ஆளும் பிஜேபி அரசு. ஒருபடி மேலே போய், கலவரக்காரர்களை நாங்கள் பழிவாங்குவோம் என்கிறார், உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத். எனக்கு இதுதான் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

ஒரு மாநில அரசு, தனக்கு எதிரான போராட்டங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்பது நிர்வாகரீதியாக சரிதான். ஆனால் இது மக்களாட்சி. அரசு கொண்டு வந்திருக்கும் ஒரு மசோதாவுக்கு எதிராக மக்கள் தெருவுக்கு வந்து போராடுகிறார்கள் என்கிறபோது அவர்களை ஜனநாயகப்பூர்வமாக எதிர்கொள்வதே தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் கடமை. அதில் அரசு தவறுகிறபோது அங்கு தோற்பது அந்த அரசு நிர்வாகம் மாத்திரம் அல்ல மாறாக, மக்களே தோற்கிறார்கள் என்றுதான் பொருள். இதுவே மக்களாட்சியின் அடிப்படை. இந்த விழுமியங்களை ஆளும் அரசு புரிந்துகொள்ளவில்லை என்பதே இந்தப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்குகிறது.

“நாங்கள் உங்களைப் பழி வாங்குவோம்” என்பது, எப்படியான நேரங்களில் ஆட்சியாளர்கள் உச்சரிக்கும் சொல்லாக இருந்திருக்கிறது? நாட்டின்மீது நிகழ்த்தப்படுகிற பயங்கரவாத தாக்குதல்களின் போது, அந்தத் தாக்குதலுக்கு மற்ற நாடுகள் உதவியாக இருக்கிறபோது, அரசு இத்தகைய கடுமையான சொற்களைப் பிரயோகப்படுத்துகிறது. அதுவும் கூட, இத்தகைய கடுமையான தாக்குதல்களின் போது, அரசு எங்களைக் காக்கத் தவறிவிட்டது என்று சிவில் சமூகம் அரசின்மீது நம்பிக்கையிழந்துவிடக் கூடாது என்பதற்கான ஒருவித தற்காப்பு நடவடிக்கை போன்ற குரல்தான் அதன் உள்ளே தொனிக்கிறது. ஆனால் ஜனாயகப்பூர்வமான மக்கள் திரள் போராட்டங்களின்போது, போராடும் சொந்த மக்களை நோக்கியே அரசு இவ்வாறு சூளுரைக்கவேண்டிய அவசியம் ஏன் ஏற்படுகிறது?

அதற்கு குறிப்பாக ஒரு காரணம் மட்டுமே இருக்கிறது. இந்த அரசு, ஜனநாயகம் என்பதை ‘வரையறுக்கப்பட்ட ஒரு வட்டத்திற்குள் மக்கள் அமைதியாக வாழ்வது’ என்று புரிந்துகொண்டிருக்கிறது. இதுகூட மேலோட்டமாகப் பார்க்கையில் சரிதான். ஆனால் “வரையறை” என்பதன் அர்த்தம் என்ன என்பதே இங்கு கேள்வி. இதை இன்னும் ஆராய்ந்து பார்க்கையில், அரசு, நிர்வாகம், ஒழுக்கம் போன்றவற்றின் அர்த்தங்களை இந்த வலதுசாரி அரசு மாற்றி எழுத முற்படுவது புரிகிறது. அந்த சாய்மானத்தில் இருந்துதான், மத அடிப்படையிலான நெறிப்படுத்தும் அரசாக தன்னை அது வெளிப்படுத்துகிறது. இது வெறும் காட்டிக்கொள்வதாக மட்டும் இல்லாமல் அந்த சித்தாந்தத்தை செயல்படுத்தவும் முயல்கிறது. இந்த செயல்திட்டமே, அரசுக்கு மக்களிடம் உரையாட இனி ஒன்றுமில்லை எனும் நிலைப்பாடாக வளர்கிறது.

மக்களை, தங்களுக்கு எது நல்லது எது கெட்டது என்று தெரியாத வெகுளிகள் என்பதாகவும் அது கற்பனை செய்துகொள்கிறது. அதனால்தான் இந்தப் போராட்டத்தின் நியாயம் என்ன என்று ஆராயாமல் தெருவில் நின்று போராடுபவர்களை வேகவேகமாக ஒழுங்குபடுத்த முயல்கிறது. ஒட்டுமொத்தமான ஒரு அரசுக்கும், அதன் ஒரு உறுப்பான காவல் அமைப்புக்குமான இடைவெளி குறைவது அவ்வாறுதான். அரசும் காவல் அலகும் ஒரே உருவம் எடுத்துவிட நேர்கிறபோது மக்களின் மாண்பு வெறும் எண்களாகச் சுருங்கிவிடுகிறது. இந்த அபத்த சூழல் மக்களை மேலும்மேலும் அரசின்மீது நம்பிக்கையிழப்பவர்களாக மாற்றுகிறது. நம்பிக்கையிழந்த மக்கள் இன்னும் துரிதமாக ‘மற்றவர்களாகி’ விடுகிறார்கள். இந்தியா முழுக்க நடக்கும் வன்முறையின் பின்புலமாக அரசின் இந்த மனநிலை இருப்பதே இந்தியா இன்று எதிர்கொள்ளும் சவால்.

ஒரு சமூகமாக, ஜனநாயகம் என்ற சொல்லின் அர்த்தத்தை நாம் எப்படியாக புரிந்துகொண்டிருக்கிறோம் என்பதில் இந்த வலதுசாரி அரசின் ஊக்கத்திற்குப் பங்கிருக்கிறது. ஏனெனில் பொதுமக்களின் கனவில் அரசின் கனவிற்குப் பங்கிருக்கிறது. இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. பெரும்பாலான நேரங்களில் அரசு பொதுமக்களின் கனவைத் தகவமைப்பதை தனது செயல்திட்டமாகக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மைதான். இந்த மோடி அரசும்கூட, ‘இந்து ராஷ்டிரா’ எனும் விரிந்த கனவின் அடிப்படையிலேயே தனது செயல்திட்டத்தை வகுத்துக் கொண்டதாக இருக்கிறது. அதனால்தான் இந்தக் கருத்தாக்கத்துக்கு எதிராக இருக்கும் ஒவ்வொன்றையும் சீரழிவு என்பதாக அது வரையறுக்கிறது.

ஆனால் மக்களிடம் நேரடியான உரையாடலுக்குச் சென்றால், அவர்களது சந்தேகங்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பதால், சில போலியான தோல்விகளை பெரிதாக்கி அவர்கள் முன்வைக்கிறது. உதாரணத்துக்கு, முந்தைய ஆட்சியாளர்களின் ஊழல். இந்த ஊழல் என்ற சொல்லைப் போல பொருள் திரிந்துபோயிருக்கும் இன்னொரு சொல் இன்றைய முதலாளித்துவ சமூகத்தில் கிடையாது. இந்துத்துவர்கள் முன்வைத்த ஊழலுக்கு எதிரான கூச்சலின்முன்னே அவர்களே நிற்கமுடியவில்லை என்பதுதான் ‘ரஃபேல்’ விவகாரத்தில் நாம் கண்டது. ஏனெனில் ஒரு முதலாளித்துவ பொருளாதாரத்தை தனது வழிமுறையாக வரித்துக் கொண்டிருக்கிற அரசு, ஊழல் எனும் சொல்லை அதன் மரபார்ந்த தன்மையில் வைத்து மாத்திரம் அணுகமுடியாது.

இதன் பொருள், ஊழலுடன் சமரசம் செய்துகொள்ளவேண்டும் என்பதல்ல. மாறாக கண்காணிப்பு முறைமைகளில் தம்மை செறிவூட்டிக்கொள்ளும் அதே சமயத்தில், அதை முழுக்கவும் இல்லாது செய்துவிட முடியாது என்கிற நுண்ணுணர்வும் அரசுக்கு இருக்கவேண்டும். அங்குதான் அரசை இயக்குபவர்களுக்கு இருக்கவேண்டிய நவீனத்துவம் மீதான பரிச்சயம் முக்கியப் பங்குவகிக்கிறது. நம்மைவிட தொழில்நுட்பத்திலும் கண்காணிப்பிலும் பன்மடங்கு முன்னேறியநிலையில் இருக்கும் அமெரிக்காவோ, இங்கிலாந்தோ, ரஷ்யாவோ ஏன் கறுப்புப் பணத்தை முற்றாக ஒழித்துவிட முடியவில்லை என்கிற எதார்த்தவாதக் கேள்வியில் இருந்துதான், கறுப்புப் பண ஒழிப்பு என்கிற செயல்திட்டத்தை நாம் வகுத்துக்கொள்ள முடியும். இது பொருளாதாரத்துக்கு மட்டும் அல்ல, சமூகவியலுக்கும் இந்த சுபாவமே அடிப்படை. இந்த அணுகுமுறையில்தான் இவ்வரசு தோற்றுப்போன அரசாக இருக்கிறது.

ஒரு நாட்டின் பொருளாதாரம், அந்நாட்டின் பல்லினச் சமூகங்களுக்கு இடையே நிலவும் இணக்கமான உறவுடன் ஆழமாக பிணைக்கப்பட்டிருக்கிறது என்பதே நவீன பொருளியல் வந்தடைந்திருக்கும் இடம். இதைப் புரிந்துகொள்வதில் இந்த அரசு பாரதூரமான தவறுகளைச் செய்கிறது. வெறும் கண்காணிப்பு அரசாக, தண்டனை தரும் அரசாக இருந்துவிட்டால் மாத்திரமே இணக்கத்தை சாத்தியப்படுத்திவிட முடியும் என்று அது நம்புகிறது. இல்லை, அதற்கு வாய்ப்பில்லை என்றே மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது. நாட்டின் நிதியமைச்சர் திரும்பப் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு சீர்திருத்த நடவடிக்கைக்குப் பின்னேயும் இருப்பது இந்தக் கொள்கை சார்ந்த தோல்விதான்.

இதை அப்படியே சமூகத்தளத்தில் வைத்துப் பார்த்தால் கலாச்சாரம் சார்ந்த விஷயங்களிலும் இந்த அரசின் தோல்வி புரியும். முக்கியமாக, மக்களிடம் மண்டியிருக்கும் அதிருப்தி. சிறுபான்மையினர் மட்டும் அல்ல, இந்த அரசின்மீது பெரும்பான்மை மக்களே எரிச்சலடைந்திருக்கிறார்கள். போராடுவதற்குத் தெருவில் இறங்கும் மக்கள் சொல்லும் செய்தி அதுதான். உலகின் இரண்டாவது பெரிய இஸ்லாமிய நாடு இந்தியா. இந்திய அளவில் இஸ்லாமியர்களை சிறுபான்மையினர் என்று வரித்துக்கொள்வது, வெறும் எண்ணிக்கையளவிலான வசதியே தவிர, அவர்களை சிறுபான்மையினராக மட்டுமே ஒரு அரசு கற்பனை செய்துகொள்வது பிழை. ஒரு குடிமகன், ஒரு நாட்டின்மீது செலுத்தும் ஆதிக்கம் என்பது அவன் சார்ந்திருக்கும் இனத்தின் எண்ணிகையை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக அதில் தொழிற்படும் நுட்பமான காரணிகள் நிறைய உண்டு. ஆனால் அவை ஒவ்வொன்றையும் தேடிப் போய் பகுப்பாய்வு செய்துகொண்டும் இருக்கமுடியாது. அதற்கு ஒரு எளிய வழி இருக்கிறது. எல்லோருக்குமான அரசாக இருக்க முயல்வதுதான் அது. இந்த நிபந்தனைக்கு முகம் கொடுக்கவில்லை என்றால் அமைதியை, இணக்கமான வாழ்வை, பொருளியல் தன்னிறைவை நோக்கி மக்களை வழிநடத்தும் அரசாக அது இருக்கமுடியாது.

இந்த அரசின் சிக்கல் இந்தப் புள்ளியில் நிலைகொண்டிருக்கிறது. ஒரு கட்சியாக, இயக்கமாக அதன் கனவுகள் வழிமுறைகள் அனைத்தும் ஒரு வட்டத்துக்குள் செறிவு கொண்டதாக, ஒற்றைப்படையானதாக இருக்கமுடியும். ஆனால் அரசு அவ்வாறு இருக்கமுடியாது. தனது கொள்கைக்கும் அதை செயல்படுத்தும் சாத்தியத்துக்குமான இணைப்புப் புள்ளிகளை ஒரு அரசு இனங்கண்டே ஆகவேண்டும். அங்குதான் உரையாடலின் தேவை இருக்கிறது. ஆன்மீகத்தின் இடம் இருக்கிறது.

மக்களிடம் உரையாடுவதன்வழியாக அவர்களை தமது கருத்தியலை நோக்கி ஈர்ப்பதற்கும், அதை கட்டாயமாக்குவதற்குப் பெருத்த வேறுபாடு உண்டு. சில தோல்விகளுக்குப் பிறகு பெருமுதலாளிகளிடம் உரையாடலுக்குச் செல்வதில் இந்த அரசுக்கு எந்த வெட்கமும் இல்லை. இவ்வளவு பணத்தைக் கொட்டியும், இவ்வளவு வரிவிலக்குகளை அறிவித்தும் ஏன் வியாபாரம் சூடுபிடிக்க மறுக்கிறது என்று மண்டையைப் பிய்த்துக்கொள்ளும் அரசு, அடுத்து என்ன செய்யவேண்டும் என்று, யார் அரசை ஏமாற்றுகிறார்கள் என்று நினைத்ததோ அவர்களிடமே ஆலோசனைக்குப் போகிறது. ஆனால் எளிய மக்களிடம் அதே இணக்கத்தையும் உரையாடல்தன்மையையும் வெளிப்படுத்துவதில் பிடிவாதம் காட்டுகிறது. இது ஜனநாயகத்துக்கும், இணக்கப்பாட்டுக்கும் எதிரானது. ஆனால் இதன் பின்னுள்ளது வெறும் நிர்வாகம் சார்ந்த, அரசின் மேட்டிமைத்தனம் மட்டும் அல்ல. மாறாக, இங்கு செயல்படுவது சித்தாந்த இறுக்கம். மேல்கீழ் என்பதில் நம்பிக்கை கொண்ட சகிப்புத்தன்மையற்ற பெரும்பான்மைவாதம்.

இந்த அரசின் மூர்க்கம் அப்படியே நீடிக்கமுடியுமா என்றால் இல்லை. அதை அரசு மெல்ல உணரத் துவங்குகிறது. ஆனால் அதை எதிர்கொள்வதில் மீண்டும் மீண்டும் தவறிழைக்கிறது. பொய்களின்வழியாக, மக்களைக் குழப்புவதன் வழியாக அமைதியை சாதிக்க முயல்கிறது. அந்த நப்பாசையில் கொஞ்சம் நியாயம் உண்டுதான். பொய்களின் வழியாக பெரும்பான்மை அதிகாரத்தை அடைந்த அரசல்லவா இது. ஆனால் அதற்கொரு எல்லை இருக்கிறது. கார்ப்பரேட்டுகளிடம் உரையாடத் தயக்கமில்லாத இந்த அரசு எப்படி போராடும் மக்களை எளிதாக நினைக்கிறதோ அதேபோலதான் மாற்றுக் கட்சியினரையும் நடத்த முயல்கிறது. உலக நாட்டுத் தலைவர்களைக் கூட அது காஷ்மீர் நிலவரத்தைக் காண அழைப்பு விடுக்கும். ஆனால் சொந்த நாட்டுத் தலைவர்களை விமான நிலையத்திலேயே தடுத்து அனுப்பும்.

ஆனால் இந்த பாரபட்சமான வழிமுறையை நீண்ட நாட்களுக்குக் கடைப்பிடிக்கமுடியாது என்பதே எதார்த்தம். உலகம் சந்தை அடிப்படையில் மாத்திரம் அல்ல, கலாச்சார அடிப்படையிலும்கூட சுருங்கிக்கொண்டே வரும் காலம் இது. ஒரு அரசு உலக அளவில் தனிமைப்படுவதற்கும் உள்ளுரில் தனிமைப்படுவற்கும் இன்று பெரிய வேறுபாடு இல்லை. தகவல் தொழில்நுட்பம் இந்த திசையில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது. உலகின் ஆகச்சிறந்த தையல் கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான விலை உயர்ந்த ஆடைகளை அணிந்துகொண்டு, அதேசமயம் மனதிற்குள் ஒரு குகை மனிதனாக தன்னை வைத்துக்கொள்ளமுடியாது. இந்த அரசு செய்யமுயல்வது அதைத்தான். அது வெளியேறியே ஆகவேண்டும் என்பதுதான் எதார்த்தம்.