போன ரெண்டெலெக்‌ஷனுக்கு மின்னெவரைக் கிமே கூட பொன்ராசு தன் கட்சி சின்னமான ரெட்ட மாட்டு வண்டிக்கித்தான் ஓட்டுப்போட்டான். கட்சி ரெண்டா பொளந்து முத்துச்சாமி தனிக்கட்சி தொடங்கனப்பவும் பொன்ராசு தன் கொள்கையில் விடாப்புடியா இருந்து முத்துச்சாமி பக்கம் போகாம, குப்புச்சாமி பக்கமே நீடித்தான். பொன்ராசுக்கு போன எலெக்‌ஷன் வரைக்கும் கட்சிப்பதவி, காசு பணம்னு பெரிய ஆசையும் இருந்ததில்ல. குப்புச்சாமி தலைமையில் இருந்த ‘மானமுள்ள மானிடர் கட்சி’யில அவனொரு முசுவான மெம்பர். ‘மாமாக’வில் அவன் இருக்க காரணம் அவிய அய்யன் சின்னத்துரை. சின்னத்துரையிம் ‘மாமாக’வில் சாகறவரைக்கிம் முசுவாயிருந்து ஜோலி பார்த்தவர்.

மசக்காளிபாளையத்தில் நாலுகாணி நெலம் வாங்கி சின்னத்துரை புதுவீடு கட்டனப்போ செவுத்துல ரெட்ட மாட்டு வண்டி சின்னம் பதிச்சு கட்டினார். பொன்ராசுக்கு அப்ப பத்து வயசு. அரசியல்ல அவனுக்கு ஆனாஆவன்னாகூட தெரியாது. ‘இதென்னங்கப்பா செவுத்துல மாட்டுவண்டி படம் போட்டிருக்கு…’ன்னு தன் அப்பனிடம் அப்பாவியாகக் கேட்டான். அப்போதுதான் சின்னத்துரை ‘மானுமுள்ளவிய அல்லாரும் புதுசா வூடு கட்னாக்க இப்டி ரெட்ட மாட்டு வண்டி சின்னம் பதிக்கோணுஞ்சாமீ…’ ன்னு அரசியல் அரிச்சுவடியை மகனுக்கு கற்றுக்கொடுக்கத் தொடங்கினார். ‘நா செத்தாக்க எனக்குப் பாடை எல்லாங்கட்டாம ரெட்டமாட்டு வண்டியில சுடுகாட்டுக்குக்கொண்டோயி எரிக்கோணும் நாச்சம்மா….’ன்னு அவர் தன் இல்லாளிடம் கோரிக்கை வெச்சதும் அப்போதுதான். ‘இதென்னாடா தும்ப மசுராப்போச்சு’ன்னு அப்போதக்கி நாச்சம்மா மனசுக்குள்ள நெனச்சுக்குட்டாலும், டக்குன்னு மொகரய செண்டிமெண்டலா மாத்திக்கிட்டு ‘சுமங்கலியா பூவோடயிம் பொட்டோடயிம் போய்ச்சேரோணுங்குறதுதானுங் மாமா கலியாணம் மூச்சன்னயில இருந்து எண்டர வேண்டுதல்…’ ன்னு டூப்புவுட்டு சின்னத்துரையை மனசௌக வைத்தாள். அந்த கேயார்விஜியா வசனத்துக்கு நால்ரப்பவுன்ல அட்சயதிரிதியையன்னைக்கி செயின் வந்து சேர்ந்தது நாச்சம்மாவுக்கு. ‘ராஸ்கோல் நாஞ்செத்ததுக்குப் பொறவு இன்னொன்னு கட்றதுக்கு ப்ளான் போட்ருப்பானாட்டமிருக்குது’ ன்னு புருஷனைச் சபித்தவள், அதை வெளியில காட்டிக்காம, சிநேகிதி ஒருத்திகிட்ட எதோ விஷியமா போன்ல பேசும்போது, ‘நாச்சம்மாள்ன்னு எம்பட பேரு போடவேணாம். திருமதி சின்னத்துரைன்னு போடோணும்…’ன்னு கண்டிஷன்போட்டு, அதைய புருஷனுங்கேட்டு குளுந்துபோயி, ரெண்டு கைக்கிம் பவுன் வளையல் வாங்கிக்கொண்டாள்.

கடைசியில் சின்னத்துரைதான் முதலில் செத்தது. பொன்ராசு தன் அப்பன் ஆசைப்பட்டதுபோல பாடை கட்டாமல் ரெட்டமாட்டு வண்டியில் பொணத்தைத் துக்கிக்கொண்டோக ஏற்பாடுகள் செய்தபோது, நாச்சம்மாள் அதைத்தடுத்து நிறுத்தி ‘நீ எண்ட்ரா ஒங்கய்யனுக்குமேல பைத்தியக்காரனா இருப்பியாட்ட… போடா போயி பாட கட்ட ஆள் கூட்டீட்டு வா…’ ன்னு அவனை முடுக்கியுட்டு, தனது முதல் அதிரடியைத் துவக்கினாள். கண்ணீரஞ்சலி போஸ்டரில் எல்லாரையும் போல ‘இமயம் சரிந்தது’ ன்னு போட்டு ‘உன் பிரிவால் வாடும் உத்தம பத்தினி நாச்சம்மாள்’ன்னும் கொட்டை எழுத்துல போட்டதில்தான் திருமதி சின்னத்துரை சுத்துபத்து முப்பத்தெட்டு கிராமத்துலயும் ‘பேமஸ்’ ஆனாள். அது அவளோட ரெண்டாமத்த அதிரடி. அந்த கண்ணீரஞ்சலி போஸ்டர பார்த்த பொம்பளைங்க  பலபேரு ‘நம்ம புருஷஞ்செத்தாலும் இப்படி போஸ்டரடிச்சு, உன் பிரிவால் வாடும் உத்தம பத்தினின்னு பேர் போட்டுக்கொணும்ன்னு கங்கணங்கட்டிக்கிட்டு, புருஷன் சாவை எதிர்பார்த்துக் காத்திருக்கத்தொடங்கினர்.

அப்பஞ்செத்ததுக்குப் பொறவு பொன்ராசோட ஆத்தா குல வழக்கபிரகாரம் மஞ்சச்சீல எதுவும் கட்டிக்கில. சரியுடு. அது அந்த காலப் பழக்கம்ன்னாலும் பொட்டழிக்கோணும்ல? அதையிஞ்செய்யல நாச்சம்மா. ஒறம்பரைக அறிஞ்சவங்க தெரிஞ்சவிக அம்புட்டுப் பேருஞ்சொல்லியும் அது கேக்கல. எப்பயிம் எப்டி இருப்பாளோ அதேமாரி வெளீல போகவர பக்கத்தூட்ல நாயம் பேசிச்சிரிக்க புருஷனத் தூக்கித்திண்ட ஜாடையே துளி கூட இல்ல அவகிட்ட. இவபோக்கு இப்டித்தானாட்டம்ன்னு ஊர்சனமும் கம்முன்னு விட்ருச்சு.

இருந்திருந்தாப்ல ஒரு நா, நாச்சம்மா முத்தன் கட்சியில சேர்ந்து உறுப்பினர் கார்டும் வாங்கிப்போட்டா. சின்னத்துரை உசுரோட இருந்த வரைக்கிம் அந்தூட்ட ‘மானமுள்ளவிய வூடு’ ன்னுதான் ஜனங்க சொல்லுவாங்க. மத்தவிய வூடெல்லாம் மானமில்லாதவிய வூடான்னு கேக்காதீங்க. மானமுள்ள மானிடர்கட்சின்னு குப்புச்சாமி தன் கட்சிக்கு பேர் வெச்சதுக்கு சின்னத்துரைய குத்தஞ்சொல்ல முடியுங்களா?

திருமதி சின்னத்துரையின் அரசியல் வியூகம் இப்படியாக இருந்து அவள் ‘ரோஷமுள்ள மானிடர் கட்சி’யில சேர்ந்துரவும் பொன்ராசுட்ட அவஞ்சிநேகிதக்காரன் ‘ஹோப்ஸ்குமார்’ “மாப்ள இனிமே உங்க வூடு ரோஷமுள்ளவிய வூடா” ன்னு நக்கலா கேக்கவும், ஏற்கனவே ஆத்தா நாச்சம்மா மேல எக்கச்சக்கமா ஆத்தரத்துல இருந்த பொன்ராசு, ஹோப்ஸ்குமார் கன்னுத்துல ஓங்கி ‘ரய்ய்ய்’ ன்னு ஒரு இழுப்பு இழுத்தான். ஆனா அதுக்குப் பரிகாரமா பொழுதோட அவன சிங்காநல்லூர் கூப்ட்டுப்போயி ஆறு பீர் வாங்கியூத்த வேண்டியதாப் போனது வேறவிஷியம்.

ஆத்தாளோட அதிரடி அரசியல் வியூகத்த பொன்ராசுவால ஜீரணிச்சுக்கவே முடியல. ஓமத்தண்ணி, லெமன்சோடா, கஷாயம் கருமாதி எல்லாம் குடிச்சுப் பாத்துட்டான். தட்டுவாணி முண்டய அருவாவெடுத்து ஓரேபோடாப் போட்டுத்தள்ளி முண்டத்த காந்திபுரம் பஸ்ஸ்டாண்ட் முக்குல பயணிகள் கவனத்துக்கு விட்டுட்டு, தலைய அப்பன் சின்னத்துரை சமாதியில சமர்ப்பிக்கலாமான்னு யோசிச்சான். கட்சி மாறுனதுக்குப் பொறவு ஆத்தா மூஞ்சீல முழிக்கவும், அவ ஆக்கி வைக்கிற சோத்தத்திங்கவும் புடிக்கல அவனுக்கு. இதே மன உளைச்சலோட தாராவரம், பல்லடம், ஒண்டிப்புதூர், சூலூர், சிங்காநல்லூர், ராமநாதவரம், புலியகொளம்ன்னு திக்காலக்கி கால்போன போக்குல திரிஞ்சுக்கிட்டிருந்தவன் பொழப்புக்குன்னிருந்த டர்னர் ஜோலிய வுட்டுட்டு லேத் பக்கம் போறதியவே மறந்துட்டான். மசக்காளிபாளையத்தில கண்ணுக்குத் தட்டுப்பட்டவிய அல்லாரும் “என்னடா பொன்ராசு உங்காத்தா கடசீல இப்டிப் பண்ணிப்போட்டா…” ன்னு எளவுச்சங்குதி விசாரிக்கிறாப்ல விசாரிக்க ஆரம்பிக்கவும் பொன்ராசுக்கு தொங்கீரலாமான்னு நெலம ஆகிப்போச்சு.

அவனென்ன தான் பண்டுவான்? செல்லும் செல்லாதுங்குறதுக்கு செட்டியார்கிட்டபோங்குற மாதிரி, மனசுக்கு நோவுன்னா மளார்ன்னு நொழையிறது டாஸ்மாக்தானுங்களே. பன்னன்டுக்கு நட தொறக்கறதுக்கு மின்னயே அல்லையில கையுட்டு பிளாக்ல வாங்கி மண்ட ஆரம்பிக்கிறவன் நைட் பத்துமணிக்கி கட சாத்தற வரைக்கிங் குடிச்சிப் பொரள, ஹோப்ஸ்குமாருக்கு கண்ணாமுழிதிருகீருச்சு, மப்புல அவிய ஆத்தாள கண்டாரோலி கழுதமுண்ட அவுசாரி அது இதுன்னு  வாயிக்கி வந்ததெல்லாம் திட்டினான்.

சின்னத்துரை தவறுனதுக்குப் பொறவு நாச்சம்மா அரசியல்ல தீவிரமா ஈடுவட்டாலும் எந்த ஆம்பள கூடவும் தப்பான சிநேகிதமோ தொடுப்போ கெடையாது. இது எந்தக் கோயில்ல வேண்ணாலும் சூடம் வச்சு சத்தியம் பண்டுலாம். அந்த விஷயத்துல மட்டும் பொம்பள அம்புட்டுக் கறாரு. உன் பிரிவால் வாடும் உத்தமபத்தினின்னு கண்ணீரஞ்சலிப் போஸ்டர்ல போட்டத்துக்கு இம்மி பெசகாம நடந்துக்குட்டா. அப்பயிம் உள்ளூர்ல ஒரு பண்ணாடி நாச்சம்மாவ சுத்திவந்து பிராக்கெட் போட்டுப் பார்த்தாரு. நாச்சம்மா அதுக்கெல்லாம் மசியில. சூடுகண்ட பூனையாட்டமாகிப்போன பண்ணாடி ‘அவிய ஆத்தாளுக்கும் மகனுக்குமுள்ளாறயே எதோ கசமுசன்னு இருக்குமாட்டப்போவ்…’ ன்னு கதைய கட்டியுட்டாரு. அதையிம் சனம் காதுல வாங்கிக்கில. சனத்துக்குத் தெரியிமல்ல ஆராரு எப்பிடின்னு.

பொன்ராசுக்கே ஆத்தா மேல அந்த மாரி ட்வுட்டிருந்தது. அவளுக்குத் தெரியாம ஆறேழு மாசம் பின்னுக்கே போயி பார்த்திருக்கான். அவங்கண்ணுக்கும் ஒண்ணும்தட்டுப்படுல. புருஷன் செத்ததுக்குப் பொறவு அவ பூவையிம் பொட்டையிம் அழிக்கிலியே தவுத்து துரோகம் எதுவும் பண்ல. பொன்ராசுக்கு தன்னோட செய்கைய நெனச்சு வெக்கமாப்போச்சு. ‘ஆனாலும் கச்சி மாறுனது புருஷனுக்குச் செய்யிற துரோகமில்லையா’ன்னு ஹோப்ஸ்குமார் கேட்டே போட்டான். ‘மூடிக்கிட்டுத் திரிவானா இந்த ஹோப்ஸ் நாயி, எதுக்கு இவனுக்கு இந்த எச்சுப் பண்ணாட்டு, என்ன மசுத்துக்கு இவன் நம்ப குடும்ப வெவகாரத்துல மூக்க மூக்க நொழைக்கோணும்’ன்னு பொன்ராசுக்கு மூக்குக்குமேல கோவம் பொத்துக்கிச்சு. ‘அன்னக்கி செவுனியில ரய்ய்ய்யின்னுவுட்ட மாரி மறுக்காவுடோணும்போல. வுட்டுர்லாம்.. வுட்டுட்டு அண்டா வகுறனுக்காரு நாலு அஞ்செண்ணம் பீர் வாங்கி ஊத்தியுட்றது. அதுக்கு எவதாலிய நானறுக்கறது…’ பொன்ராசோட நெலம இப்டியெல்லாம் பொலம்பறாப்ல ஆயிப்போச்சு பாருங்க. பேசாம ஹோப்ஸ்குமார் கழட்டி உட்றலாமான்னும் ஒரு கோணத்துல யோசிச்சு, கடசீல ‘இருந்துட்டுப்போறான் நாயி’ன்னு விட்டான். பொன்ராசும் ஹோப்ஸ்குமாரும் செட்டுச்சேர்ந்து மசக்காளிபாளையம் சுத்தீலும் போட்ட ஆதாளிக்கெல்லாம் செல்போன் வீடியோ ஆதாரமிருக்குது அவங்கிட்ட. கழட்டியுட்டம்னா அப்ரூவரா மாறுனாலும் மாறுவான் நாயி. அவங்குடும்பமே ஒரு நாறக்குடும்பம். காட்டிக் குடுக்கறகுடும்பம். ஹோப்ஸோட அப்பன் ஒரு போலீஸ் இன்ஃபார்மர். சுண்டுவிரல் தண்டபாணி அவம் பேரு. நஞ்சுண்டாபுரம், ராமநாதபுரம், புலியகுளம், பாப்பநாயக்கம்பாளையம், காந்திபுரம், வடகோவை, சாயிபாபா காலனி, லாலிரோடு எல்லாப் பக்கமும் ஆளிருக்குது அவனுக்கு. கொள்ளக்கேசுல அவன் குச்சானுகளுக்கு சப்போர்ட்டா இருந்துருக்கான். ’தேவையா நமக்கு’ ன்னு ஹோப்ஸ கழட்டி உடுற ஐடியாவ காத்தோட பறக்கவிட்டு வேற ரோசனைக்குப் போனான் பொன்ராசு.

திருமதி சின்னத்துரைங்கற பேர்ல ஆத்தா நெம்பவே பேமஸ் ஆயிக்கிட்டிருக்குற நேரத்துல எதுக்கு நாம அவளோட இமேஜ கெடுக்கோணும்னுல்லாம் புத்திசாலித்தனமா ரோசிச்சாலும் காலங்காலமா வூட்டோட அடையாளமா இருந்த ரெட்ட மாட்டுவண்டி சின்னத்த ஆளுகளவிட்டு சொரண்டச் சொன்னதியும் தாங்க முடியல அவனுக்கு. தன்னோட அப்பன சொரண்ட்ராப்லியே ‘ஃபீல்’ பண்ணான். அப்பன் சின்னத்துரை மொகறைல்லாம் கோரமாகி நத்தம் சொட்டச்சொட்டநின்னு கதறுனாப்ல இருந்தது. எழுபதுகள்ல தமிழ் சினிமால கதாநாயகி எதுனா ஒரு பயங்கரத்த பாத்ததியிம் புறங்கைய வாயில வச்சு கத்துற மாரி ‘நோ ஓஓஓ..’ ன்னு கத்துனான். சொரண்ட்றவங்க அல்லாரும் கையிலிருந்தத கீழவிட்டு பொன்ராசுவைப் பார்த்தனர். திருமதி சின்னத்துரை வீட்டுக்குள்ளார இருந்து வேகமா வெளியில வந்து ‘த்த…எதுக்குடா இந்தக் கத்து கத்துறியாம்மா?’ என்றாள் மகனைப் பார்த்து. ஆத்தாளுக்கும் மகனுக்கும் அன்னவரைக்கிமே பனிப்போர்தான் நடத்துக்கிட்டிருந்தது. ரெட்ட மாட்டு வண்டி சின்னத்த சொரண்ட்ற விஷியத்தில பகிரங்கமோதலே தொடங்கீருச்சி. பொன்ராசு கத்துனதுக்கு காரணம் சொன்னான்.

“எதுக்காத்தா ரெட்ட மாட்டு வண்டி சின்னத்த சொரண்ட்றானுங்க? அதுக்குத்தாங் கத்துனன்..”

“அட அதெதுக்கு கெரகம் செவுத்த நெப்பிக்கிட்டு?”

“ஆத்தா அது அய்யனோட ஞாவகார்த்தமா இருந்தது..”

“அட ஒங்கய்யனே போயிட்டானாமா… அதெதுக்கு? பெரிய்ய ஞாவுகார்த்தமாமா…”

“இப்ப நீ இதைய சொரண்டியுட்டு என்ன பண்டப்போற?”

“சொரண்டியுட்டு முத்தண்ணங் கச்சி சின்னம் பதிக்கோணும். எலெக்‌ஷன்வேற நெருங்குதல்ல…”

“என்ன குதர வண்டி சின்னமா?”

“ஆமாடா பொன்ராசு. நானுமிப்ப முத்தண்ணங் கச்சியில நம்மூரு மகளிரணித் தலைவி ஆயிப்போட்டனல்ல. எம்பட படம் போட்ட பிளக்சு பாக்லியா பஸ்ஸ்டாண்டு மேவரத்துல…”

பொன்ராசு திகைத்துப்போய் தன் ஆத்தாளைப் பார்த்தான். அவனுக்கு எப்பவோ ராயல்ல பார்த்த ‘அச்சமில்லை அச்சமில்லை’ படம் ஞாவகத்துக்கு வந்தது. நல்லவனாயிருந்த ராஜேஷ் அரசியலுக்கு வந்து அட்டூழியம் பண்ட ஆரம்பிச்சதியும், ராஜேஷின் காதல் மனைவி சரிதா அதைய சகிச்சுக்க மிடியாம புருஷனையே கொல பண்டிருவா.

பொன்ராசாவுக்கு கொஞ்ச நாளாவே ரண்டு கனவு. அடிக்கடி வந்து ராத்தூக்கத்த கெடுத்துட்ருது. ‘கட்சி மாறியதால் தாயைக் கொன்ற மகன்’னு பொட்டிக்கடைகள்ல பேப்பர் பேப்பரா தொங்கற மாற கனவு. ரெண்டாவது ‘சுப்ரமணியபுரம்’ பட ஸ்டைல்ல, ஹோப்ஸ்குமார ஆட்டோவுல ஏத்தி உக்காரவச்சு கழுத்த அறுக்கறமாற கனவு. ரெண்டுல எத மொதல்ல பண்ணோனும் எத ரெண்டாம்த்தா பண்ணுனோம்ன்னு கன்பியூஷன். ‘பார்க்கப் போனாக்கா நம்ம ஆத்தாவத்தான் மொதப்போட்டுத் தள்ளுவம்போல’ ன்னு நெனச்சுக்குட்டான். ஹோப்ஸ் ரெண்டாமிடத்துல இருந்தான்.

திடுதிப்புன்னு பொன்ராசுக்கு ‘நிந்த ஹோப்ஸ்க்கு எதுனால ஹோப்ஸ்குமார்ன்னு பேர் வந்தது’ன்னு ரோசன வந்துருச்சு. அவனென்ன ஹோப்ஸ் காலேஜ்க்கு படிச்சானாமா? அதெல்லாமில்ல. ஹோப்ஸ் காலேஜ்க்கு பொறவால அவிய மாமன் வூடு இருந்தது. மாமம் பொண்ணு பூங்கோத. நெம்பத்தூரம் போயி ஹோம்சயின்ஸ்ல படிச்சிட்டிருந்தா. மாமம் பொண்ணுங்கறதால பூங்கோத மேல ஹோப்ஸ்க்கு பாசம் நேசம் காதல் எல்லாம். பூங்கோத ஹோம்சயின்ஸ்க்கு தன்னோட ஸ்கூட்டியில போனா. ஹோப்ஸ்க்கு டூவீலர் எதுமில்ல. எவனும் அவனுக்கு ஓசி குடுக்குறதாவுமில்ல. அவிய அப்பன் இன்ஃபார்மர் தண்டபாணி ‘உனக்கெதுக்குடா மசுராண்டி டூவீலரு. பெரிய புடுங்கி கத்தையாக் கட்டுறியே அதுக்கா? மரியாதைக்கி ஓடிப்போயிரு. டூவீலரு அது இதுன்டு நாயம் பேசுன கொரவலியக் கடிச்சு துப்பீருவன்..’னு சொல்லவும், அப்பனை மனசுக்குள்ளாறயே கெட்ட வார்த்தைல திட்டி அக்கட்டால நவுந்துட்டான். அன்னயில இருந்து ‘பொல்லாதவன்’ படப்பாணியில் எவனோட டூவீலர ஆட்டயப்போடாலாம்ன்னு அவங்கண்ணு காந்திவரம் முழுசும் மேஞ்சுக்குட்டிருந்து. ஆனாக்க டூவீலர் வச்சிருக்கற எல்லாவரும் ரொம்ப ரொம்ப ஜாக்குரதயா இருந்ததால ஒண்ணயிம் நவுட்ட முடியாம தவியா தவிச்சுக்கிட்டிருந்தான். சரி… மாமம் பொண்ண டூவீலர்ல சேஸ் பண்ணி லவ்ஸ் பண்ண மிடியல. வூட்டுக்கே போயி அட்டாக் பண்ணுவம்னு அடிக்கடி வூட்டுக்குப் போக ஆரம்பிச்சான். அவ ‘போடா மசுரு நீயுமாச்சு ஒன்ட்ற லவ்வுமாச்சு’ன்னு ஏசி ரூம வுட்டு வெளியில வராம, சுக்ரவார்பேட்ட மார்வாடி மகன் கைலாஷோட போன்ல கடலபோட்டா. இவம்போயி ஹால்ல மணிக்கணக்கா ஒக்காந்து பூங்கோதையோட பாலிய வயசு போட்டோவ சைட்டடிச்சுட்டு வந்தான். அந்நேரத்துல பிரண்ட்ஸ் ஆரு போன் போட்டாலும் “நான் ஹோப்ஸ்ல இருக்கன் பங்காளி’ன்னு சொல்வான். சரி தொலையறான்னு அல்லாரும் சேர்ந்து ஒருநா அவனுக்கு ‘ஹோப்ஸ்குமார்’ன்னு பேர் வச்சம்.

பொன்ராசுக்கு அவிய ஆத்தாளப்பத்தி நெஞ்சாங்குழி வரைக்கிம் வார்த்த முட்டுது. ‘புருஷனுக்கு துரோகம் பண்ட்றியேடி முண்ட. எங்கய்யஞ் செத்ததுக்குப்பெறவு நீ பொட்டழிக்கில பூவ அழிக்கில. அதெல்லாங்கூட மன்னிச்சுவுட்டர்லாம். கட்சி மாறிட்டியேடி. அதுமல்லாம அந்தாளு ஆச ஆசையா செவுத்துல பதிச்சு வச்சிருந்த சின்னத்தைமில்ல ஆளவச்சு சொரண்டிவுட்டுட்ட வௌங்குவியா? திருமதி சின்னத்துரைன்டு நீ பேரு புழுத்துலீன்னா என்ன மோசக்கழுதையாப் போச்சு. ஆருகேட்டா அந்தப் பேரு? பெரிய்ய மகளிரணித்தலைவியாம்மா. பிளக்சு நொட்டீருக்கலாம்மா…’ இதெல்லாம் பேச மிடியாம தத்தளிச்சான்.

திருமதி சின்னத்துரைக்கு மகனோட கொந்தளிப்பு புரிஞ்சுபோச்சு. உள்ளுக்குள்ள அவனோட கையாலாகாத்தனத்த நெனச்சு சிரிச்சுக்குட்டு “என்ட்ரா பொன்ராசு..கொரவலில நரம்பெல்லாம் பொடைக்கிது?’ன்னா ‘ஒண்ணுமில்லாத்தா. தண்ணி தவிக்கிது’ன்னு பம்முனான். ‘சால்ல ஒரு செம்பு மொண்டுகுடி’ன்னுட்டு போன் வரவும் ‘வணக்கம் திருமதி சின்னத்துரை’ன்னா. எலெக்‌ஷன், பணப்பட்டுவாடா அதுஇதுண்டு போன்பேச்சு அனுமார் வாலாட்ட நீளவும், அநாதையா கட்டில்ல கெடந்த ஆத்தாளோட பர்ஸ்க்குள்ள கையுட்டு ரண்டு ரெண்டாயர்ரூவாத்தாள உருவி தன் ஜோப்பீல திணிச்சுட்டு வண்டிய எடுத்தான்.

ரெண்டு நா கழிச்சு பொன்ராசு வூட்டுக்கு வரவும், ரெட்டமாட்டு வண்டி சின்னம் பதிச்சிருந்த எடத்துல ‘குதரவண்டி’ பதிச்சிருந்தது. அதைய பாத்ததியும் ஏத்துனதெல்லாம் எறங்கி கைகால் ஒதறலெடுக்க ஆரம்பிச்சிருச்சு. போதாக்கொறைக்கி வூட்டுக்குள்ளாற ஆத்தாளும் ஹோப்ஸ்குமார்ம் தீவிரமான ஆலோசனையில இருக்கவும் பொன்ராசுக்கு மண்ட கிண்டயெல்லாம் காஞ்சு போச்சு. ஹோப்ஸ்க்கும் ஆத்தாளுக்கும் என்ன சம்மந்தம்னு யோசிச்சவன் ‘பங்காளி இப்பத்தேம் வர்றியாக்கும்’ன்னு ஹோப்ஸ் கேட்டதக் கண்டுக்காம விருட்டுனு வாசலுக்குப் போனான். ரெண்டு நாளா தெள்ளவாரி நாயி ‘ஸ்விட்ச் ஆஃப்’ல இருந்தப்பவே என்னடானு இவனுக்கொரு சம்சியம்.

பூங்கோத பொச்சுக்குப் பின்னாடி திரிஞ்சுக்குட்டிருக்கும் நாயி, செலவு மிச்சம்ன்னு நெனச்சு வுட்டுட்டான். இப்ப என்னடான்னா ஆத்தாளோட உக்காந்து ஆலோசன பண்டுது. இந்த நாயிக்கும் ஆத்தாளுக்கும் எப்டி கனெக்‌ஷன் ஆச்சு? இவனோட போக்கே ஒரு மாதிரி இருக்குதே. இப்படியேவுட்டா சரிவராதேன்னு பொன்ராசுக்கு ரத்தக்கொதிப்பு ஏறவும், இடுப்புல செருகீருந்த குவாட்டர் சரக்கெடுத்து மூடிதிருகி தண்ணி கலக்காம ராவா உள்ளவுட்டான். அடுப்புக் கூட்ன எடத்துல கெடந்த பச்சமொளகாவில ஒண்ணெடுத்து நறுச்நறுச்சுன்னு கடிச்சு முழுங்குனான். செத்தநேரத்துல மண்ட கிர்ர்ர்ருன்னுச்சு. மூலையில கெடந்த ஒலக்கைய கையில எடுத்தான். ரெண்டு பேரையும் ஒட்டுக்க போட்டுத் தள்ளீர வேண்டியதுதான்னு நெனச்சு கதவுப்பக்கம் போனவனுக்கு நெஞ்சடச்சுப்போச்சு.

முன்கதவ தாப்பாப் போட்டு ஆத்தாளும் ஹோப்ஸும் கட்டுக்கட்டா பணத்த எண்ணீட்டிருந்தாங்க. அத்தனியும் ரெண்டாயிரம் ரூவாத்தாளு. ‘என்ன எழவுடா இது. இத்தினி பணம் இவியளுக்கு எங்கிருந்து வந்தது?’ன்னு இவன் யோசன பண்டறதுக்குள்ளாற ஆத்தா பாத்துட்டா. “எண்ட்ரா பொன்ராசு ஒலக்கையிங் கையுமா நிக்கற. கம்பு குத்தப் போறியாமா. செத்த வந்து நீயும் இந்தப் பணத்தை எண்ணு. நானும் ஹோப்ஸுமா எண்ணி எந்நேரம் முடியுறது? கோழி கூப்பட்றதுக்கு மின்னாலவூடு வூடாப் போயி கதவு கேப்புல வீசீட்டு வந்துரோணும்’ன்னா.

பொன்ராசுக்கு ஒருமாறி நெலவரம் புடிபட்டுக்கிச்சு. ஒலக்கைய அக்கட்டால தூக்கிப்போட்டு ஜோதியில ஐக்கியமானான். திருமதி சின்னத்துரையின் அதிரடி அரசியல் வியூகத்தில் பொன்ராசுவின் வைராக்கியமெல்லா கரஞ்சு ஏனங்கழுவுன எச்சத்தண்ணி ஜலதாரையில ஓடுறாப்ல ஓடி வெளியில இருந்த டிச்சுக்குள்ளாற வுழுந்தது.