உலர்ந்த பலா மற்றும் மாவிலைகள் பொன் கம்பளம் பரப்பிய பாதை. உலர்ந்த மற்றும் முழுக்க உலராத இலைகள். இளம் பழுப்பு, மஞ்சள் நடுவே கரும்புள்ளிகள். ஜேப்பில் கண்ணாடியைக் கை தேடியது. எடுத்து வர மறந்திருக்கிறேன். தலை உயர்த்திப் பார்த்தேன். மங்கோஸ்தீன், மாமரம், பலா, அவற்றின் கிளைகளில் நடுவே மறந்து வெளிப்பட்டு கூவி விட்டு மீண்டும் மறையும் குரலே வடிவான நிழல் குயில். அந்த இடுங்கின மண் பாதையின் ஒரு பக்கம் வெயிலில் அந்த சருகுகள் பொன்னிறத்தில் ஒரு ஜரிகை போல மின்னியது. இந்தப் பக்கம் இதமான நிழல். என் பின்னே தேவி வழக்கத்துக்கு மாறான வேகத்துடன் நடந்து வந்து கொண்டிருந்தாள். அவளது மிருதுவான பாதங்கள் சருகுகளையும் கல்லையும் மண்ணையும் ஒன்றாய் பாவித்து அசிரத்தையாய் மிதித்து வரும் அந்த சன்னமான ஓசை. அதில் அவளது சதைப்பிடிப்பான பின்புறம், அவளது முன்னங்கால்களின் மென்மயிர்கள், அவளது பின்னங்கழுத்தின் பூனைமயிர்கள், அவளது திரட்சியான முலைகள் என ஒவ்வொன்றையும் என்னால் உணர முடிந்தது.

மீண்டும் கை ஜேப்புக்கு சென்று துழாவி விட்டுத் திரும்பியது. எனக்கு கிட்டப்பார்வை. ஆனால் இன்று இங்கு எதிர்ப்படும் ஒவ்வொன்றும் அவ்வளவு துல்லியமாய் தெரிகின்றன. எத்தனையோ முறைகள் பஷீரின் கதைகளில் நான் படித்துணர்ந்த இடங்கள் அல்லவா! பேப்பூரின் பாதைகளில் படிந்த அவரது ஒவ்வொரு கால் தடமும் என் குருதியில் கலந்து விட்ட ஒன்று. அவருடன் நான் இந்தக் காற்றை சுவாசித்திருந்தேன். இங்கு பெய்த மழையில் நனைந்திருக்கிறேன். இந்த ஊர் மக்களின் மொழியில் உரையாடியிருக்கிறேன்.

இங்கு பிறந்த வளர்ந்த, மடிந்த, செழித்த, சீரழிந்த ஒவ்வொரு முஸல்மானின் கதையையும் நான் அறிவேன். காலையில் தேகப்பயிற்சியும் சிற்றுண்டியும் முடிந்த பின், சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஒரு மணிநேரம் எழுதிய பின், என் இசைத்தட்டுகளை எடுத்து வருவேன். அன்று என்னை அரவணைத்து தாலாட்டப் போவது யாரது கரங்கள்? கேட்டுக் கேட்டு லயித்து நான் மனம் உடையும் அந்த நொடியின் நூறாவது பகுதியில் துகளில் என் அம்மாவின் கரகரவென்ற குரல் மிகவும் தேய்ந்து ஒலிப்பது கேட்கும். பிறகு மறைந்து போகும். அந்தக் குரலின் பிசிறை அறியும் தருணத்துக்காகவே நான் காத்திருப்பேன். அதற்காகத் தானா இந்த இசையின் கரங்களுக்கு என்னை ஒப்புக் கொடுக்கிறேன். அம்மா, என் அம்மா, நான் உன்னை இந்த நொடியில் உம்மா என அழைக்கப் போவதில்லை. இந்த தருணங்களில்  பீடியின் புகையில் என் எண்ணங்கள் உலவ கஸல் ஆலாபனைகள் என்னை மீண்டும் மீண்டும் கட்டியிழுத்து சுகானுபவ வதையில் நீடிக்கச் செய்திருக்கின்றன.

பேருந்து நாளைக்கு இரண்டுதான். அதுவும் காலை ஐந்து மணிக்கே வந்து காத்து நின்று இரண்டு மணிநேரத்துக்குப் பின் வந்தபோது ஊரெல்லாம் பண்டிகைக்கோலம். பேருந்துக்குள் உட்கார, நிற்க, ஏன் அதன் கூரையில் உட்காரக் கூட இடமில்லை. ஆட்கள் ஜன்னல் கம்பியில் கூட பற்றித் தொங்கினார்கள். எல்லார் ஜேப்பிலும் சின்னச் சின்ன தேசியக் கொடிகள் குத்தப்பட்டுள்ளன. பேருந்து வாயிலில் நிற்கும் சின்னப் பையன்களின் கூட்டம்.  விறைத்த கதராடை அணிந்தவர்களில் ஒரு சின்னப் பையன் மட்டும் நீல லுங்கி, வெள்ளை ஜிப்பா அணிந்து தனியாய் தெரிகிறான்; ஓட்டைப் பல் சிரிப்பு கொண்ட அந்தப் பையன் தன்னை விட உயரமான ஒரு கொடியை உயர்த்திக் கொண்டு “ஜெய்” என கூவுகிறான். அவன் கூவி முடித்ததும் அவனைச் சுற்றி நிற்கும் பையன்கள் ஓவெனக் கூச்சலிடுகிறார்கள்.

எங்களது கதர் ஆடையும், தேவியின் ஜரிகையில் தெரிந்த மூவர்ணமும் தனித்து தெரிந்திருந்த வேண்டும். புகை கக்கியபடி மெல்ல வந்த அந்தப் பேருந்தின் பின்னால் அதை விட வேகமாய் நடையிட்டு வந்த ஊர்வலத்தில் இருந்து ஒரு முதியவர் எங்களை நோக்கி ஒரு குழந்தையைப் போல ஓடி வந்தார். தேவியை நோக்கி வணங்கினார். “அம்மா, உங்களைப் பார்த்தால் பாரதமாதாவே தரிசனம் அளித்தது போல இருக்கிறது!” என்றார். அவரது கண்கள் நிறைந்து பளிச்சிட்டன. தேவி வணங்கி விட்டுச் சொன்னாள், “நன்றி! நான் ஒரு கல்லூரி மாணவி. இவர் என் ஆசிரியர்.” என்னைக் காட்டிச் சொன்னாள்.  அவர் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் தன் கையில் இருந்து டப்பாவில் இருந்து லட்டு எடுத்து நீட்டினார், “எடுத்துக்கோ சார்”. நான் பெயருக்கு ஒரு சின்ன பூந்தியைப் பொறுக்கி வாயில் இட்டு அந்தத் தித்திப்பில் கண்ணைச் சிமிட்டினேன். “இன்னும் கொஞ்சம் எடுத்து அள்ளி வாயில போடுங்க. இன்னிக்கு நமக்கு சுதந்திரம் கிடைச்ச நாள். எத்தனை எத்தனை வருசங்கள் காத்திருந்து கிடைச்ச வரம் இது. சாப்பிடுங்க. சந்தோசமா கொண்டாடுவோம்.” நான் திரும்பி நின்றேன். பேருந்து போய் விட்டது. அவரது வயதுக்கு, இன்னும் சுதந்திர தினத்துக்கு வயதாகவில்லை.

சாலையில் திடீரென்று வெறுமை நின்றது. அது என்னை வெறித்துப் பார்த்தது. நான் அதனிடம் “உனக்கு என்ன வேணும்?” எனக் கேட்டேன். அவர் நான் திரும்பியதை உணராமல் அதே திசையில் நோக்கி, தனியாய் பேசுவது போல, ஆனால் என்னிடம் தான் பேசினார்: “நான் பொறந்தது அடிமை இந்தியாவில். நாங்க இதுக்காக எத்தனைக் காலமாய் காத்திருந்தோம் தெரியுமா? காந்தி மகான்… அவர் தோன்றும் வரை எங்க வாழ்க்கைக்கெல்லாம் அர்த்தமே இல்லாமல் இருந்தது. அவர் எங்களுக்கு சரியான திசையைக் காட்டவில்லை என்றால் எங்கே போயிருப்போம்? இது ஒரு மகத்தான தருணம். சுதந்திர மண்ணில், சுதந்திரமான காலத்தில், என்னை நானே ஆளுகிற காலத்தில் வாழ்கிறேன். நான் எங்கு வேண்டுமெனிலும் போகலாம், என்ன வேண்டுமெனிலும் சொல்லலாம்…” எனக்கும் லேசாய் கண் கலங்கியது. அவர் இருபதுகளில் தன் அரசு வேலையை ராஜினாமா செய்து விட்டு காங்கிரஸில் இணைந்தவர். இருபதாண்டுகள் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றிருக்கிறார். கோழிக்கோட்டில் நடந்த உப்பு சத்தியாகிரகத்தில் போலீசார் தலையில் அடித்ததில் ஒரு கண்ணில் பார்வை இழந்தார். அவரது மூன்று குழந்தைகளில் இருவர் கொள்ளை நோயில் உயிரிழந்தன. மனைவி மனநலம் சிதைந்து உறவினர் கவனிப்பில் இருக்கிறார்.

உப்பு சத்தியாகிரக அனுபவத்தைப் பற்றி தேவியிடம் அவர் சொன்னபோது அவளது முழங்கையின் மயிர்கள் கூச்சிடுவதைக் கவனித்தேன். தேவி முதன்முறையாய் அவரை நோக்கி “அப்பா” என்கிறாள். அவர் தன் நடுங்கும் கரங்களை அவளது உச்சந்தலையில் வைத்து ஆசீர்வதித்து விட்டு மெல்ல நடந்து சென்று சுவரில் சாத்தி வைத்திருந்த கொடியைக் கையிலெடுத்து அதை ஊன்றி மெல்ல நடந்து சாலையில் இறங்கிச் சென்று மறைந்தார்.

அடுத்த பேருந்துக்கு இன்னும் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும்? இல்லை பேருந்து இன்று இனிமேல் வராதா? தலைநகரத்தில் ஒரே கோலாகலமாக இருக்கும். பேரணிகள், தெருமுனை மேடைகளில் உரைகள், தேசபக்திப் பாடல்கள், இடதுசாரித் தோழர்கள் கூட இன்று “பாரத் மாதா கி ஜெய்” என கூவாமல் இருக்க மாட்டார்கள். ஆனால் இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? “யாருக்கு வேண்டும் இந்த சுதந்திரம்? வெளியுலகம் இதை விடப் பெரிய சிறை அல்லவா” எனும் பஷீரின் வரிகள் அநிச்சையாய் நினைவுக்கு வருகின்றன? ஆம், யாருக்கு வேண்டும் இப்போது சுதந்திரம் காலத்தின் அடிமையாக நான் இருக்கும்போது யாருடன் இருப்பது சுதந்திரம்? என் சுதந்திரத்தை யாரை என்னிடம் இருந்து பறிக்கிறது?

எண்ணங்கள் முன்னும்பின்னுமாய் என்னை ஆக்கிரமிக்கின்றன. நான் இப்போது என்ன பண்ண வேண்டும்? திரும்ப வீட்டுக்குப் போய் விடலாமா அல்லது இவளை அழைத்துப் போய்த்தான் ஆக வேண்டுமா? பேப்பூர் சுல்தானைப் பார்ப்பதற்கான அபாரமான சந்தர்ப்பம் அல்லவா? எத்தனை எத்தனை கடிதங்களுக்குப் பிறகு அவர் பதிலளித்திருக்கிறார். என் அப்பாவை நினைவு வைத்துக் குறிப்பிட்டிருந்தார். அப்போதுதான் எனக்கு அவரைப் போய் பார்க்கும் துணிச்சலே வந்தது. என் தெய்வத்தைப் பார்க்கப் போகிறேன். வேறென்ன வேண்டும்? மனம் ஏன் இப்படி சஞ்சலப்படுகிறது? எனக்கு என்னதான் வேண்டும்?

இனி பேருந்து வராது. நாங்கள் நடக்கத் தீர்மானிக்கிறோம். வழியெங்கும் அவள் சுல்தானின் பல்வேறு கதைகளைப் பற்றிப் பேசி வருகிறாள். ‘‘பாத்தும்மாவின் ஆட்டை” வரிக்கு வரி விவரிக்கிறாள். “முச்சீட்டுக்காரனின் மகளில்” வரும் வசனங்களை அப்படியே ஒப்பிக்கிறாள். ஒருநாள் கோடை மழையின்போது அவள் குடை ஏந்தி மெதுவாய் நடந்து மழைத்தாரைகளைச் சிலாகித்தபடி வருகிறாள். வராந்தாவில் ஏறி குடையைச் சாய்த்து விட்டு ஈரமான தன் கூந்தலை உதறுகிறாள். அப்போது நான் சொன்னேன், “சைனபா, நீ வீட்டுக்குப் போய் தலைமுடியை உலர்த்து. சொகமில்லாம போயிடப் போகுது.” அதைக் கேட்டு அவள் தனங்கள் அதிர சிரித்த அழகு இருக்கிறதே. அன்றில் இருந்து, என்மீது அன்புமிகும்போது என்னை மண்டன் முத்தப்பாவின் நினைவாக மண்டன் மாஷே என அழைப்பதை வழக்கமாக்கினாள். பஷீரின் வாழ்க்கையில் நடந்ததாய் சொல்லப்படும் பல்வேறு சம்பவங்களை என்னிடம் கூறி அவையெல்லாம் உண்மைதானா என்கிறாள். நான் என் ஐயப்பாடுகளைக்கூற அவள் காயப்பட்டது போல முகம் கோணுகிறாள். பஷீரின் கதைகளைப் போன்றே அவரைப் பற்றிய தொன்மங்கள் ஒவ்வொன்றும் அவளுக்குப் புனிதமே. “பஷீரையும் அவரது கதைகளையும் ரெண்டாய் பார்ப்பது தப்பல்லவா மாஷே?” நான் பதில் கூறாமல் அவளது பெரிய விழிகளுக்குள் நோக்குகிறேன். அவற்றுக்குள் விழுந்து மூழ்கி இறந்து போகாதா என் தேகம்? உயிர் வதை! தூய வதை! உயிர் கொண்ட என் பிரியத்தின் வாதை! அதை இறக்கி வைக்க தவிப்பதன் வதை!

தேவி பிறந்தது ஏப்ரல் 15 அன்று. எல்லா விதங்களிலும் அவள் சுதந்திரத்தின் குழந்தை. தனிப்பட்ட அங்கலாய்ப்புகளொரு மனிதனுக்கு முக்கியமே அல்ல எனும் எண்ணம் அவளுக்குள் வலுவாகப் பதிந்திருந்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின் தோன்றிய இரண்டாம் லட்சிய அலையின் மீதேறி வந்தவள் அவள். நான் என் வகுப்பொன்றில் “பூவம் பழம்” கதையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். ஒரு பக்கம் சிரிப்பலையும் இன்னொரு பக்கம் மனைவிமீது ஒருவர் வன்முறை செலுத்தலாமா என்பது குறித்த சர்ச்சையும் எழுந்த வகுப்பு அது. ஆனால் வகுப்பு முடிந்த பின் அனைவரும் கதையை மறந்து விட்டனர், தேவியைத் தவிர. அவள் என்னைத் தேடி நான் கல்லூரிக்கு வரும் வழியில் ஒரு பலாமரத்தின் கீழே நின்றாள். அதன் வெண்மலரிதழ்கள் அவளது தோள்களிலும் கூந்தலிலும் ஒட்டிக் கிடந்ததை அவள் பொருட்படுத்தாமல் நின்றாள். சட்டென என் பாதையில் அவள் வெளிப்பட்டபோது நான் திடுக்கிட்டேன். ஒரு யட்சியைப் போல, பேரழகு மட்டுமே ஏற்படுத்தக் கூடிய பயத்தை ஒரு நொடி எனக்குத் தந்தாள். பளீரென்ற சருமம், திரண்டு வழியும் சுருள் சுருளான கேசம், பெரிய கண்கள், சற்றே ஆண்மை தொனிக்கும் சிரிப்பு, பாவாடை, சட்டையில் மீறித் தெரியும் பூரிப்பான தேகம்.

“தெய்வமே நீ யார்?”

என் வாயில் இருந்து சொற்கள் வெளிவரவில்லை. அவளே தன் பெயரை, பின்னணியைக் குறிப்பிட்டாள். படபடவெனப் பேசினாள். “பூவம்பழம்” தன்னை ஏன் பாதித்தது என உருப்போட்டது போல சொன்னாள். ஆனால் என்னதான் சொல்ல வருகிறாள் என என்னால் புரிந்து கொள்ள முடியாதபடி முன்னுக்குப் பின் முரணாய் உணர்ச்சிக் குழம்பாய் அவளது பேச்சு இருந்தது. சில சொற்களை அவள் கூறும்போது அவள் கண்களில் இருந்து நெருப்பின் ஒளி வெளிப்பட்டு என் நெஞ்சைத் தீண்டி மறைந்தது. அச்சொற்களை மீண்டும் சொல்ல மாட்டாளா என்று ஏங்கியபடி நான் கவனித்துக் கொண்டிருந்தேன்.

அதன் பிறகு மீண்டும் பலமுறை சந்தித்தோம். எர்ணாகுளம் போகும் போதெல்லாம் பஷீரின் சர்க்கிள் புக்ஹவுஸ் கடைக்கு அடிக்கடி செல்லும் வழக்கம் எனக்கு இருந்தது. அங்கு சென்று அவரது கதை நூல்களின் மொத்த கட்டையும் வாங்கி வந்து தேவியிடம் ஒப்படைத்தேன். அவளுக்கு என்னுடன் வந்து கடையில் அவரைப் பார்க்க விருப்பம்.

‘‘இந்த ஞாயிறு போகிறேன். நீ வருகிறாயா?”

“இல்ல மாஷே. நான் ஒரு உறுதி பூண்டிருக்கிறேன். அவரது கதைகளை மொத்தமும் படித்து விட்டு மட்டுமே அவரைச் சந்திப்பேன்.”

“அது என்று?”

“என் பிறந்த நாளின்போது. எனக்கென்று போய் சந்தித்து ஆசீர்வாதம் பெற அன்று யாரும் இல்லை. பஷீரின் கால்களைத் தொட்டு வந்திக்க வேண்டும்.”

சில விடிகாலைகளில் தூக்கமற்று அவளது விடுதியின் வாயில் வரை சென்று, முதல் மாடியில் உள்ள அவளது அறையின் ஜன்னலை வெறித்துப் பார்த்து நின்றிருக்கிறேன். ஆனால் அவளது குழந்தைப் பேச்சு சட்டென என் இச்சையை அணைத்து விடும். அவளது உருவத்துக்கும் பேச்சுக்கும் இடையில் ஒரு முரண் என் மனதுக்குள் பெரிய கொதிப்பை உண்டுபண்ணி வந்தது. ஒரு கட்டத்தில் அவளை இரு தேவிகளாய் பிரிக்க நான் கற்றுக் கொண்டேன். சில நாட்கள் அவள் என் அறைக்குப் புத்தகங்களை அணைத்தபடி வருவாள். வகுப்பில் என்னை வெறித்துப் பார்த்தபடி மேஜையில் கவிழ்ந்து கவனித்திருப்பாள். தனிமையிலும் கூட்டத்திலும் அவளை நெருங்குகையில் எனக்குள் சௌந்தர்யவதியின் மீதான காமமும் குழந்தையின்மீதான ஆதுரமும் மாறி மாறி எழும். எப்படி அவளிடம் என் விருப்பத்தை தெரிவிப்பது எனப் புரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.

ஏப்ரல் 15 அவளது பிறந்த நாள் அன்று எப்படியும் சொல்லி விடுவதென தீர்மானித்து விட்டேன். முந்தின நாளிரவு என் நண்பன், என்னை விட இருபது வயது இளையவன், உண்ணி கள்ளின் புளிச்ச ஏப்பத்தை விட்டபடி சொன்னான், “ஒண்ணும் தப்பில்லடா மாதவா. ஆனா பட்டும்படாம இல்லாம நேரடியா களங்கமில்லாம மனசைத் திறந்து காட்டத் தெரியணும். எந்தப் பொண்ணாலும் அதுக்கு முடியாதுன்னு சொல்ல முடியாதுடா. அவ்வளவுதான் விசயம்.”

“அவ்வளவுதான்னா? எப்படி பிரேக் பண்றது? என்ன சொல்றது?”

“வெளிப்படையா மனசு சொல்றதை அப்படியே சொல்லு. உனக்குள்ள இருக்கும் அந்த இன்னசன்ஸை இழக்காம பேசு. இன்னசண்டா உண்மையா பேசுறேன்னா எவ்வளவு தப்பா இருந்தாலும் ஒரு பொண்ணு ஏத்துப்பா. ஆனால் ஒரு சரியான விசயத்தை பாசாங்கா சொன்னால் அது அவளுக்கு ஆபாசமா தெரியும்.”

ம்ஹும். இப்படி பேசுவது சுலபம் என்பது மட்டும் புரிந்தது. பெண்களிடம் சரளமாக உரையாடி வளராத தலைமுறை என்னுடையது. கண்ணாடி முன் நின்று கூட நேர்மையாய் பேச முடியாத தலைமுறையைச் சேர்ந்தவன் நான். ஆயிரமாயிரம் உணர்ச்சிகள் ஆற்றொழுக்காய் ஓடும் மனத்தைக் கொண்ட ஒருத்தியிடம் மனதைத் திறப்பது ரயில் தண்டவாளத்தில் தலையை வைப்பது போல.

ஆனால் அவளுக்கு எல்லா விதங்களிலும் தகுதியானவன்தானே நான். வயது? பஷீர் இளம்பெண்ணான  ஃபாத்திமா பீபியைக் கல்யாணம் பண்ணும் போது அவருக்கும் என் வயதுதானே! நிக்காஹுக்காக பேசும்போது  பஷீரின் பெயரைக் கேட்டதும் “இந்த ஆள் இன்னமும் உயிரோடவா இருக்கிறார்?” என்று கேட்டவர் அல்லவா அவர். ஆனால் கல்யாணம் பண்ணி இருவரும் இணக்கமான ஜோடியாய் இல்லையா? வயதில் என்ன இருக்கிறது?

நாங்கள் வயல் வரப்பின்மீது நடந்து போகும்போது வலப்பக்கம் வளைந்து போகும் சாலையில் ஒரு பேருந்தை செங்கொடி ஏந்திய பேரணியினர் தள்ளி நகர்த்துவதைப் பார்த்தோம். பயணிகளில் பாதிப் பேர் இறங்கி நடந்தனர் – பளீரென்ற கதராடைகளில் அவர்கள் பள்ளி இறுதியாண்டு விழாவில் ஃபேன்ஸி டிரஸ் போட்டி பங்கேற்பாளர்களைப் போலத் தோன்றினர். பேருந்தின் மீது நான்கு குழந்தைகள் காந்தியைப் போல வேஷமிட்டு உட்கார்ந்திருந்தனர். ஒரு காந்தி “இன்குலாப் ஜிந்தாபாத்” எனக் கூவ மற்ற இரு காந்திகளும் சிரித்தனர்.

“நல்ல வேளை, நாம பஸ்ஸுக்காக நிக்கல. இந்நேரம் அவர் எழுதிக் கொண்டிருப்பார். அவர் பன்னிரெண்டு மணிக்குத் தூங்கப் போகும் முன் நாம் அங்கு இருக்க வேண்டுமில்லையா? எனக்கு ஒரு நொடி அவரைப் பார்த்தால் போதும், அவர் அந்த குழந்தைச் சிரிப்பை என்னை நோக்கி சிரித்தால் போதும்னு இருக்குது. இந்த வாழ்க்கையில வேற ஒண்ணுமே எனக்கு வேணாம்.”

“அவர் உன்னைக் கூடவே தங்க கேட்டா என்ன பண்ணுவே?”

“என் உயிரைக் கேட்டாலும் கொடுப்பேன்.”

”சும்மாதானே சொன்னே?”

அவள் அழகாய் சிணுங்கி சிரித்தாள்.

எனக்கு ஏனோ தம் குடும்பம், பணம், வசதி, எதிர்காலம் அனைத்தையும் கைவிட்டு சபர்மதி ஆசிரமத்துக்குப் புறப்பட்ட அந்தக் கால இளம்பெண்கள் நினைவுக்கு வந்தனர். கூடவே, பஷீர் காந்தியின் வேடமிட்டால் எப்படி இருப்பார் என்றும் சிந்தித்தேன். சிரிப்பு வந்தது. அவள் என்னைத் திரும்பி விசித்திரமாய் நோக்கி விட்டு வேகமாய் நடையிட்டாள்.

ஒரு சாயாக்கடை. இரண்டு பெஞ்சு, நாற்காலிகள். கண்ணாடிப் பெட்டியில் முந்தின நாளின் பருப்பு வடை. தட்டில் ஆவி பறக்கும் புட்டு. தேநீர் ருசித்தபடி நாளிதழ்களைப் புரட்டி கண்ணை இடுக்கிப் படிக்கும் “வயசன்மார்”. திண்ணையில் சத்தமாய் அரட்டையடித்து சிரித்தபடி சில இளைஞர்களும் இளைஞர்களாய் தம்மைக் கருதிக் கொள்ளும் பாதி வழுக்கையான மத்திய வயதினரும். புதுவரவான எங்களைக் கண்டதும் கடையில் உள்ளோர் அனைவரும் வெவ்வேறு நிலைகளில் சில நொடிகள் திகைத்து பரஸ்பரம் பார்த்து பார்வையிலேயே விசாரித்துக் கொள்ள, சிலர் எழுந்து எங்களை நோக்கி வந்து பாதியில் நின்ற நிலையில், அவர்களில் ஒருவர் மட்டும் எங்கள் அருகே வந்து டிராபிக் கான்ஸ்டபிளைப் போல கையை நீட்டி “அதே புதிய ஆளானோ?” என்று வினவினார். தேவி மிக மெல்ல தலையசைத்தாள் என்றாலும் அதைக் கண்டு அவர் திருப்தியானார். இனிய புன்னகையும், புதியவர்களைக் கண்ட ஆர்வமும் கண்களில் ஜொலிக்க மேலும் சில அடிகள் எங்களை நோக்கி எடுத்து வைத்தார்.

நாங்கள் அவரிடம் வந்த நோக்கத்தைக் குறிப்பிட அவரது உற்சாகம் வடிந்தது. பதில் சொல்லாமல் திரும்பி தன் சகபாடிகளை, உள்ளே உணவருந்தும் வயோதிகர்களை, சாயா அடிக்கும் தாடிக்கார நபரை நோக்கினார். பிறகு அவர் என் தோளில் கையை வைத்து தனியே அழைத்து கடையின் பின்பக்கம் கொண்டு போனார். அங்கே குப்பைத்தொடியில் முகம் புதைத்திருந்த நாய் ஒரு நொடி எங்களைப் பொருட்படுத்தி விட்டுத் தன் பணியைத் தொடர்ந்தது. அவர் என்னிடம் சுருக்கமாய் சொன்னார், “பஷீர்-க்கா வீட்டில் யாரும் இல்ல. நீங்க இப்போ அங்க போறதும் நல்லதில்ல. அதுவும் இது போன்ற தொட்டா பொட்டும் வயசுள்ள சின்ன பொண்ணோட.”

நான் பேச ஆரம்பித்ததும் அவர் குறுக்கிட்டார், “க்கா மட்டும் தனியா இருக்கிறார். போன வாரம் தான் த்ருஷூர் பிராந்தாலயத்திலிருந்து திருச்சு வந்நது.”

பஷீரின் மனநிலைக் கோளாறு குறித்து, அவர் மருத்துவனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்ததை ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அது எல்லா படைப்பாளிக்கும் உள்ள சிக்கல்தானே?

நான் மீண்டும் பேச ஆரம்பிக்க அவர் குறுக்கிட்டுப் பேசியபடி திரும்பினார். கிட்டத்தட்ட எங்கள் மூக்கைத் தொடும் அளவு பக்கத்தில் தேவி நின்றிருந்தாள். அவர் ஐயோ எனக் கத்த, அதைக் கண்டு நானும் பீதியில் கத்த, தேவி அசையாமல் என்னை ஒரு புழுவைப் போலப் பார்த்தாள். அவர் சுதாரித்து “இவ்வளவு நேரமும் எங்க பின்னாடியா நின்னீங்க சிஸ்டர்?” என்று கேட்டார். அவள் தலையசைத்தாள். “சரி, வாங்க வாங்க” அவர் எங்களை அழைத்து மீண்டும் சாயாக்கடைக்கு வந்தார். அங்கு கண்ணாடிக் கோப்பைகளை அலம்பிக் கொண்டிருந்த சிறுவனின் தலையில் கட்டுப்போட்டிருந்தது.

“டா செக்கா இவ்விடே வா.”

அவன் ஓடி வந்தான்.

“இந்தப் பையன் இன்னிக்கு காலையில பால் கொடுக்க பஷீர்க்கா வீட்டுக்குப் போனப்போ மனிசன் கோபத்தில கட்டையைத் தூக்கி அடிக்க வந்திருக்கிறார். அவன் பயத்தில ஓடி கீழே விழுந்து தலையில் தையல் போட்டிருக்கு.”

அதன் பிறகு அவர் இறுதியாய் எச்சரித்தார்:

“அவர் முழு சிகிச்சை முடியாம ஓடி வந்திட்டதா சொல்றாங்க. அவரோட மனசு ஒரு நிலையில இல்ல. எப்போ என்ன சொல்வார், பண்ணுவார்னு யாரும் சொல்ல முடியாது. அதுவும் லேடீஸ் போனா அவர் நடவடிக்கை ரொம்ப மோசமா இருக்கலாம். அதனால் இந்தப் பொண்ணை அங்கே அழைச்சிட்டுப் போகாம இருந்தா நல்லது.”

முதலில் எனக்கு நிறைய கேள்விகள் இருந்தாலும் அவர் கடைசியாய் சொன்னது கேட்டதும் வாய் மூடிப் போனது.

நான் தேவியை தனியே அழைத்துப் போனேன். அவள் என் கண்களைத் திடமாய் சந்தித்தாள்.

“யார் என சொன்னாலும் நான் போறேன்.”

அவள் என் பதிலை முழுக்கக் கேட்காமல் பஷீரின் வீட்டுக்குச் செல்லும் வழியில் நடக்க ஆரம்பித்தாள். நான் பின்னால் சென்றபடி சொன்னேன்.

“என்னால் உன்னைத் தனியே அனுப்ப முடியாது.”

அவள் இப்போது எனக்குப் பின்னால் வர ஆரம்பித்தாள். ஒரு புது மணப்பெண் வீட்டுக்காரருக்குப் பின்னால் குனிந்த தலையுடன், எட்டிப் பிடிக்கும் இடைவெளியை தக்க வைத்து, நடந்து வருவது போல. பஷீர் வீட்டுக்கு செல்லும் உற்சாகம் எனக்கு அப்போதே தொற்றிக் கொண்டது. என் பொறுப்பின் கனபரிமாணத்தை என் தோள்களில் உணர்ந்தேன்.

பஷீர் வீடருகே ஆள் நடமாட்டமே இல்லை. ஒரு பர்லாங் தொலைவுக்கு காகங்களோ வேறு பறவைகளின் அரவமோ இல்லை. செம்மண் மதில்கள் நெடுந்தொலைவு நிற்க அவற்றின் மேல் படர்ந்து கிடக்கும் கொடிகளின் நிழல் பின்னிப் பிணைந்து புணரும் மலைப்பாம்புகளாய் செம்மண் தரையில் தரையெங்கும் கிடந்தன. ஒளிப்புள்ளிகள் அவற்றின் நடுவே நாங்கள் நடக்க நடக்க எங்களை வழிநடத்தின. அதைத் தவிர, அங்கே உயிரசைவுகளே இல்லை.

“இங்கே யாருமே இல்லையா?”

அவளது சின்ன நடுக்கம் ஒலிக்கும் குரல் எனக்கு மிகக் கிளர்ச்சியாய் இருந்தது. அருகே சென்றேன். அப்போது பங்கஜ் மல்லிக்கின் குரல் வந்து எங்களைத் தீண்டியது. கூடவே ஒரு தபலா தாளம் வந்து எங்களைத் தழுவியது.

“பஷீர் சார் இருக்கிறார். இது அவரது ரிக்கார்ட்டில் இருந்து ஒலிக்கிற பாட்டுதான்.”

‘‘ஸோஜா ராஜகுமாரி… ஸோஜா”

நாங்கள் மதிலை ஒட்டி நின்றோம். பிறகு வாயில் கதவின்மீது கையை வைத்து எட்டி நோக்கினோம். மங்கோஸ்தீன் மரத்தின் கீழே அவர் திரும்பி அமர்ந்திருந்தார், தன் சாய்வுநாற்காலியில், டீப்பாய் மீது சுழன்று தேம்பும் இசைத்தட்டின் அருகே, முகமற்ற ஒரு முதியவரின் நீண்ட சுருள் தாடி மயிர்களைப் போல மேலெழும்பும் பீடி புகைக்குக் கீழே. தரையெங்கும் நூற்றுக்கணக்கான தவிட்டுக்குருவிகளின் உடல்களைப் பரத்தியது போல எனத் தோன்றியது. நான் கால் வைத்து நடக்கும்போது அவை உயிர்பெற்று பறந்து விருட்டென என்னை நோக்கிப் பாய்ந்தால் என்ன பண்ணுவது? ஆனால் அந்த இடத்தில் கனிவின் மென்மையான பொன்னொளியும் பலாப்பழத்தின் இனிய குழந்தைத்தனமான வாசனையும் இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, வீட்டு வாசலுக்கு முதுகைக்காட்டிக் கொண்டு தனக்குள் ஆழ்ந்து விளையாடும் ஒரு குழந்தையைப் போன்று பஷீர்-க்கா இருக்கிறார்.

நாங்கள் எவ்வளவு நேரமாய் அங்கே நின்றிருந்தோம்? முன்பு எத்தனையோ நாட்கள் இதே போல அவரை நாடி வந்து உள்ளே நுழையத் துணிச்சலின்றி நின்று பார்த்து விட்டு நான் திரும்பினதில்லையா? அது முந்தின பிறவிகளிலா? காலாதிகாலத்துக்கு முன்னரா? தேவி கேட் கதவின் மேற்தாழ்ப்பாளை எடுத்து தட்டி சத்தமெழுப்பினாள். பஷீரின் கை இசைத்தட்டின் முள்ளை எடுத்து வைத்தார். நிசப்தம். அவர் எழுந்து சருகுகளில் மிதித்து வரும் ஒலி. தேவி எனக்குப் பின்பாய் பதுங்கிக் கொண்டாள்.

அவர் கைவீசியபடி வந்து கேட் கதவிடம் பேசுவது போல, “ஹ்ம்? எந்தா? எந்து வேணம்?”

“உங்களைப் பார்த்திட்டுப் போகலாமுன்னு… டவுனில் இருந்து அதுவும் இன்னிக்கு பஸ்ஸு ஏதும் கிடைக்கல. நடந்தே கிளம்பி வந்திட்டோம்… கொஞ்சம் தாமதமா…”

ஏன் இப்படித் திக்குகிறேன்? ஏன் இந்த எண்ணங்கள் குழம்பி ஆயிரம் திசைகளில் இழுத்துப் போகின்றன?

“ம்ம்ம் ஷெரி. பார்த்தாச்சில்ல?”

“ஆமா.”

“அப்போ கிளம்புங்க.”

இப்போது என்ன சொல்வது? கிளம்ப வேண்டியதுதானா?

அப்போது அவர் பார்வை எனக்குப் பின்னால் கையுறையில் கையைப் போல் பொருந்தி நின்ற அவள்மீது பட்டது.

“யார் அது?”

தேவி வெளிப்பட்டாள். அவர் கண்கள் கூசியது போல கையால் வெயிலை மறைத்து நோக்கினார். பரிச்சயமாய் சிரித்தார். வணங்கினார். தேவியும் வணங்கினாள். சட்டென அவளது நிழலாய் நான் மாறி விட்டது போல, நான் விலகி வழி விட வேண்டுமென்பது போல. நான் சில அடிகள் விலகி நின்றேன். அவர் முகம் உடனே இருண்டது.

“ம்ம்ம்” என்று அடிபட்ட விலங்கின் உறுமலைப் போல முனகி விட்டுத் திரும்பி தன் இடத்துக்கு மீண்டார்.

தேவியை நோக்கினேன். பரவசத்தில் அவள் உதடுகள் துடித்தன.

“பஷீர் மாஷ் என்னை நோக்கி வணங்கினார்.” அவள் கைகளைக் குவித்து என்னை நோக்கி வணங்கினாள். அது என் இதயத்தை தொட்டு விட்டது. கேட்டைப் பிடித்துத் தொங்கும் பள்ளி மாணவனைப் போல நான் அந்த வாயிற்கதவைப் பற்றி நின்றேன். தேவி தன் தோளில் மாட்டியிருந்த பையை சரி பார்த்தாள். அதற்குள் பஷீரின் கதை நூல்கள், அவள் அவருக்கு எழுதிய நூற்றுக்கணக்கான கடிதங்கள், அவளது கதைக்கான குறிப்புகள், அவரைப் போலச் செய்து அவள் எழுதிப் பார்த்த கதைப் பிரதிகள் என அப் பை பத்து மாத கர்ப்ப வயிறாய் பிதுங்கி நின்றது. என் பார்வை எதிர்பட்டதும் மீண்டும் அதே போல வணங்கினாள். நான் பஷீர் இருக்கும் திசையிலாய் பார்த்தேன். நானும் பஷீரும் ஒன்று என்பது போல ஒரு பிரமை.

மீண்டும் இசைத்தட்டு சுழல, அவர் தன் தாள்கள் சிலவற்றை சரி செய்து திருத்திக் கொண்டிருந்தார். ஒரு தாளைக் கசக்கி சுருட்டி எறிந்தார். பீடி பற்ற வைத்தார். மீண்டும் சாய்ந்து கண்ணை மூடினார். மீண்டும் எழுதினார்… எங்கள் இருப்பு அவரது முதுகைச் சுட்டது போல வேகமாய் எழுந்து மீண்டும் எங்களை நோக்கி வந்தார். வாயில் இருக்கும் பீடியின் கங்கு என்னை நோக்கி “என்ன?” என்றது. நான் தேவியைக் காட்டி “இவள் உங்களைப் பார்க்க வேண்டும் என நீண்ட காலமாய் விரும்புகிறாள். கிட்டத்தட்ட மூன்று வருடங்களாய். அதனால் தான் அழைத்து வந்தேன்.” அவர் கேட் கதவைத் திறந்து அவள் அருகே வந்து பார்த்தார். அவள் வணங்கினாள். அவர் பதிலுக்கு வணங்கினார்.

“இது என்ன மிருகக் காட்சி சாலையா? ஆங்? இங்கே என்னைக் காட்சிக்கு வைத்திருக்கிறார்களா? நான் இங்கே யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை எனத் தெரியாதா? இங்கே திருடர்கள், கொள்ளையர்களின் சஞ்சாரம் அதிகம். தெரியாதா?”

சில நிமிடங்களின் மௌனம். அவளது ஆழமான மூச்சொலி என் பின்னங்கழுத்தை சீண்டுகிறது.

அவர் முகம் மெல்ல மெல்ல வெளிச்சம் பெற்றது. நெற்றிச் சுருக்கங்கள் இல்லாமல் ஆயின. தன் வழுக்கையைத் தடவினார். தேவியிடம் சொன்னார், “நீ பார்க்க ஸுஹ்ராவைப் போலவே இருக்கிறாய். அவள் நிஜம் தெரியுமா? என் உலகில் எதுவுமே யாருமே பொய்யில்லை. அப்போது எனக்கு எட்டு வயதிருக்கும். ஆனால் இப்போது மஜீதுக்கு கஷண்டி ஆயிடுச்சு. முடியே இல்ல பாருங்க.”

தேவி உள்ளே எட்டிப் பார்த்து, “ரோஜாப் பூக்கள் இன்னும் உண்டா?”

‘‘ஹா ஹா பார்க்கணுமா?”

“ஆமா.”

“ரெண்டு திருடர்களும் பயப்படாம வாங்க. ரோஜாவைத் தவிர வேறென்ன வேணும்?”

“ஒரு கட்டன்.”

‘‘வரு வரு.”

அவர் எங்களை ஒரு வேலையாள் மரியாதையாய் முதலாளியைப் பார்க்க அழைத்து செல்வது போல வழிநடத்தினார். சட்டென நின்று, “எல்லாம் பாழாய் கிடக்கிறது. இங்கே இனி நீங்க எடுத்துப் போக ஒன்றுமே இல்லை. ஆனால் மிகப் பெரிய பொக்கிஷம் ஒன்று இருக்கிறது. எந்தக் கொள்ளையனையும் அதை எடுத்துப் போக விட மாட்டேன். இங்கே பாருங்கள்.” அவர் தன் இடுப்பில் இருந்து ஒரு வளைவான கத்தியை உறையில் இருந்து எடுத்துக் காட்டினார்.

“நான் எழுத்துக்காரன் ஆகும் முன்னே ஒரு ஃபயில்வான், குஸ்திக்காரனாக இருந்தேன் கேட்டோ. இப்பழும் அதே.”

கத்தியை உறையை முத்தமிடுவது போல உள்ளே செலுத்தினார்.

இடப்பக்கமாய் தோட்டம். ரோஜாப் பதியன்கள் வளர்ந்து காடாகி முட்புதராய் ஆகியிருந்தது. அதன் மத்தியில் சில மலர்கள் சோகமாய் அழகாய் பரிமளித்தன.

“உங்க மனைவி மக்கள் யாரும் இல்லையா?”

“இல்லை. நாளை மறுநாள் வந்து விடுவாங்க.”

அவர் வீட்டுக்குள்ளே நோக்கி “ஃபாபீ, எடியே. ஃபாபீ” என்று கூவினார். இருட்டுக்குள் இருந்து நிசப்தம். அடுத்து அவர் ஒரு வசையை முணுமுணுத்தபடி உள்ளே சென்று இரு பிரம்பு நாற்காலிகளைக் கொணர்ந்தார்.

“எங்கே போய்த் தொலைஞ்சாங்களோ. எடீ…”

நாங்கள் பரஸ்பரம் பார்த்துக் கொண்டோம்.

“இரிக்யு.”

அவர் உள்ளே கட்டன் தயாரிக்க சென்றார்.

நாங்கள் பின்னால் சென்றோம். உள்ளே வரவேற்பறை தரையெங்கும் சிதறின பஞ்சு. கிழிக்கப்பட்ட ஒரு மெத்தை மூலையில் கிடந்தது. பல பொருட்களும் சிதறிக் கிடந்தன.

பஷீர் சட்டென வெளிப்பட்டார். “பயப்படாண்டாம். வெறும் பஞ்சு. மிதிச்சாலும் ஒண்ணுமாகாது.’’

சுலைமானியின் வாசனை இதமாய் பரவியது. தேவி பொருட்களை அடுக்கி வைத்து வரவேற்பறையை ஒழுங்குபடுத்தினாள். டீ டம்ளர்களை எடுத்து வைத்து பிரம்பு நாற்காலிகளை நாங்கள் சுற்றி அமரும் வண்ணம் இட்டாள். அடுத்து அவள் சமையலறைக்குள் எட்டிப் பார்த்து “அடுக்களையை ஒழுங்காகத்தான் வச்சிருக்கீங்க சார்” என்றாள்.

பஷீர் பற்கள் எல்லாம் தெரிய காந்திய சிரிப்பு சிரித்தார். பகத் சிங் மீசை சூடி வந்த காந்தியின் குழந்தைமை இவரது சொரூபம்.

அவர் டீயை மெல்ல உறிஞ்சி கண்களை சுருக்கி ரசித்தார். தேவியிடம் “உனக்கு நல்ல அடுக்கும் சிட்டையும் உண்டு” என்றார். அவள் வெட்கி சமையலறைக்குள் மறைந்து கொண்டாள்.

“ஐயோ”

“என்ன?”

“இங்கே அடுப்புக்கு பக்கமாய் ஒரு பூனை. இவ்வளவு நேரமும் என் கண்ணுக்கே படல. அசையாமல் முழிச்சு பார்த்திட்டு உட்கார்ந்திருக்கு. பார்க்க பயங்கரம். அது நிஜமாவே பூனையா?”

”ஆமாம் மாந்த்ரீகப் பூனை.”

நான் எனக்கு மிகவும் பிரியமான கதை அது என்றேன்.

“நாயரே, நான் எதையும் கற்பனை பண்ணி புதுசாய் சொல்வதில்லை. என்னுடைய உலகில் தினமும் சஞ்சரிப்பவர்கள்தான் என் பாத்திரங்களும். என் கதைகளும் கதையின் மொழியும் கூட இலக்கியத்துக்காய் உருவாக்கப்படுபவன அல்ல. உங்க கதைகளை ஒரு சஞ்சிகையில் படிச்சேன். நீங்க ஏன் ஒரு இலக்கிய தனித்துவ பாஷையில் எழுதறீங்க – யாருமே பார்க்காத கேட்காத புரியாத ஒரு உலகம் பற்றி. ஒரு படகோட்டிக்கு, ஒரு முச்சீட்டு களிக்காரனுக்கு தெரியாத புரியாத கதையை ஏன் ஒருத்தர் எழுதணும்?”

நான் என் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறினேன். ‘‘அன்றாடத்துக்கு அப்பாற்பட்ட, நுட்பமான ஒரு உலகை சித்தரிப்பதே என் இலக்கியம்.’’

“நான் ஒரு சாதாரண மனிஷன். எனக்குப் பெரிய தத்துவம், சாகித்யம் எல்லாம் புரியாது கேட்டியா?” அவர் சிரித்துக் கொண்டே சொல்லி விட்டு தேவியிடம் அவளது வாழ்க்கைப்பாடுகளை விசாரித்து அறிந்தார்.

பஷீர் சொன்னது என் மனத்தை விட்டகலாமல் சுற்றிச் சுற்றி வந்தது. தேவி வெளியே சென்று துடைப்பத்தை எடுத்து வந்து பஞ்சை எல்லாம் பெருக்கிப் போட்டாள். மெத்தையின் உறை மட்டுமே எஞ்சியிருந்தது – அதன் பல இடங்களில் கிழிக்கப்பட்டிருந்தது.

இது மட்டும் எளிய அன்றாட உலகமா என்ன?

‘‘நேத்து நான்தான் இந்த இபிலீசுகளைக் குத்தி வெளியே எடுத்து விரட்டினேன். நான் அதன்மீது படுத்து உறங்கிக் கொண்டிருக்கும்போது தான் அது புலப்பட்டது. என் மனத்துக்குள் இருந்து குத்திக் குடைந்து வதைப்பவை இதோ இந்த மெத்தையினுள் தான் குடியிருக்கின்றன. நான் உறங்கும்போது அவை வந்து என்னை முழுக்க கலைத்து விட்டு, பெரிய குழப்பத்தில், துயரத்தில் ஆழ்த்தி விட்டு மீண்டும் உள்ளே போய் பதுங்கிக் கொள்கின்றன. இவற்றை ஒழித்தால்தான் எனக்கு நிம்மதி! அப்போதே கிழிக்கத் தொடங்க இபலீசுகள் ஓவெனக் கூவிக் கொண்டு காற்றெங்கும் எழுந்து குதித்தன. நான் படைத்தவனின் பெயரை உச்சாடனம் பண்ணிக் கொண்டு அவற்றைப் பணிய வைத்தேன். அவற்றை முழுக்க கட்டுக்குள் கொண்டு வர காலை மூன்று மணி ஆகி விட்டது. இப்போது பிரச்சினை இல்லை.

இதோ இந்த குரூப் போட்டாவைப் பார்த்தியா? த்ரிஷூரில் வைத்தியர் வல்லபுழயின்  சானிடோரியத்தில் எடுத்தது அல்லவா?

இவர்கள் எல்லாம் என் வாசகர்கள் ஆகி விட்டார்கள். கொஞ்ச நாள் தளம் போட்டார்கள். அங்கே நான் ஒரு அழகான பூந்தோட்டம் அமைத்தேன். மனத்தின் பிரச்சினை சரியாகி விட்டது.’’

ஒரு சுதந்திர நாள் பேரணி வீட்டைக் கடந்து போனது. பஷீர் எழுந்து சென்று கேட்டை சாத்தினார்.

“எவனையும் நான் உள்ளே விட மாட்டேன். எரப்பாளிங்க. கொடி பிடிச்சிட்டு ஜாதையா வரக் கூடியவங்க கண்ணெல்லாம் உள்ளே இருக்கிற என்னோட பித்தளை சொம்பு, பானை மீதுதான். எனக்கு இந்தக் கதர் டிரஸ்னாலே அலர்ஜி.” அவர் காறித் துப்பினார், “சுதந்திரம்னா நம்மை நாமே திருடிக் கொழிக்கிறதுக்கான சுதந்திரமாயிடுச்சி.”

அவர் கண்கள் எங்களது கதராடையில் நிலைத்தன. அருகில் வந்து தொட்டுப் பார்த்தார்.

“ம்ம்ம், நான் இது போல கதராடை அணிஞ்சு என் ஆசிரியரான வெங்கடேஷ்வர ஐயர் கிட்ட அடி வாங்கி இருக்கேன். அப்போ நான் ஸ்கூல் பையன். வைக்கம் இங்கிலீஷ் ஹைஸ்கூலின் தலைமை ஆசிரியர் அவர். பிரம்பால் ஏழு அடி அடித்தார். அப்போல்லாம் கதராடை போட்டால் சொறி வந்து தோல் தடிக்கும். ஆனால் சுதந்திர தாகம் தீயாகப் பரவின காலம் அது. கதராடைன்னா விடுதலை உணர்வு, காந்தியின் கொள்கை, ஒரு ஆவேசம். உங்களைப் பார்த்தால் இந்த திருடனுங்களைப் போல இல்ல. தேவி, நீ நிஜமான ஸ்வதந்திர தேவியே என்னைத் தேடி வந்தது போலத் தோன்றுகிறாய்.”

தேவியின் முகம் சிவக்க எழுந்து போய் துடைப்பத்தை எடுத்து முற்றத்தை பெருக்கி ஒழுங்கு செய்தாள்.

வைக்கம் சத்தியாகிரகத்திற்கு தலைமை தாங்கும் பொருட்டு அந்த ஊருக்கு வந்த கதையை, அப்போது தான் காந்தி பயணித்த காரில் பற்றித் தொங்கிக் கொண்டு அவரைத் தொட்டதை, அதைச் சென்று தாயிடம் சொன்னதை நினைவுகூர்ந்தார். ‘‘நான் போய் சொன்னேன், ‘உம்மா, நான் காந்தியைத் தொட்டேன்.’ காந்தி என்றால் யாரென அவளுக்குத் தெரியாது.அம்மா பயந்து போனாள். அவளுக்கு ஒரே கவலைதான். இந்த காந்தியால் நம்முடைய பட்டினிக் கோலத்தை ஒழிக்க முடியுமா?

1930கள். காந்தி வைஸ்ராய் இர்வினிடம் ஏழு கோரிக்கைகளை முன்வைத்து அவை நிராகரிக்கப்பட, உப்பு சத்தியாகிரகம் தொடங்கினார் – ஒன்று வெற்றி பெறுவோம் அல்லது என் பிணம் அரபிக்கடலில் மிதக்கும். காந்தி சாவதா? நாங்கள் கொந்தளித்தோம். இங்கே கோழிக்கோட்டிலும் உப்பு சத்தியாகிரகம் நடந்து பலர் கைதானார்கள். போராட்டம் இந்தியா முழுக்க வெடித்தது. நான் காங்கிரஸில் இணைவதற்காகப் புறப்பட்டேன். ஆனால் நமது காங்கிரஸ் தலைவர்கள் என்னை முதலில் சி.ஐ.டி. என ஐயப்பட்டார்கள். அவர்கள் என்னை நம்பி ஏற்ற பின் காவல்துறையால் கைது செய்யப்பட்டு கண்ணனூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். கடுமையான வதை நாட்கள். 270 எனும் எண் கொண்ட கான்ஸ்டபிள் நம்பியார் என்னை ஒரு மிருகத்தைப் போல தாக்கினார். அவர் அடித்தது அல்ல, அடித்த விதம், அதிலுள்ள துச்சம், அவமரியாதை என் மனத்தில் ஏற்படுத்திய காயம் நீண்ட காலமாய் அகலவில்லை. அவரைப் பழிவாங்க முடிவு செய்தேன். காந்தி-&இர்வின் உடன்படிக்கையின் விளைவாக நாங்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டோம். வெளியே வந்ததும் நான் 270ஐக் கொல்வதற்காக ஒரு பேனாக்கத்தியை வாங்கிக் கொண்டேன். அப்போது தான் அச்சுதன் எனும் மூத்த கட்சிப் பணியாளர் எனக்கு புத்திமதி சொல்லி பழிவாங்கும் வெறி எவ்வளவு பயனற்றது என விளங்க வைத்தார். போய் அப்பா, அம்மாவைப் பார் என்று ரயிலேற்றி அனுப்பி வைத்தார். நான் தலயோலப்பிறம்புக்கு வந்து நள்ளிரவு வீட்டுக்கு வந்து சேர்ந்தால் என் அம்மா விளக்கேற்றி வைத்து இரவுணவுடன் காத்திருக்கிறாள். அவளுக்கு எப்படித் தெரியும் நான் அன்று வருவேன் என? என் அம்மா சொன்னாள், அவள் ஒவ்வொரு இரவும் உணவு தயாரித்து எனக்காகக் காத்திருப்பதாய். அம்மாவின் எளிய அன்பைப் பார்க்கத் தெரியாமல் சுதந்திரம் எனும், தேசத் தாய் எனும் சிக்கலான ஒன்றைத் தேடி எங்கெல்லாமோ அலைந்து என்னவெல்லாமோ செய்தேன். அன்றுதான் இந்த சுதந்திர ஆவேசத்துக்கு, இயக்கங்களுக்கு என்ன அர்த்தம் என என்னை நோக்கி நானே சிரித்தேன். சுதந்திரம் ஒரு குழந்தைத்தனமான நம்பிக்கையில் இருக்கிறது. அது போதுமே. அது மட்டுமே என்னைக் காப்பாற்ற முடியும். அது மட்டுமே.

தேவி, நீ அப்படியான ஒரு தாய். எனக்காக அனுதினமும் சஞ்சலமற்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் உம்மா நீ. யாருமே என்னை வந்து பார்ப்பதில்லை. ஆபத்தான பிராந்தன் எனும் சிக்கலான ஆளாகி விட்டேன். என்னை விலக்கி வைப்பதனால் பயப்படுகிறார்கள். அவர்கள் யாரும் வராததாலே நான் இந்த வீட்டுக்குள் சிறை வைக்கப்பட்டு விட்டேன். ஒரு மனிதனைக் கைது செய்து அடைக்க சிறையே தேவையில்லை. சிறை என்பது செங்கல்லும் சிமிண்டும் கலந்து உருவானதா? இல்லை. சிறை என்பது மனித உடல்களால் ஆனது. மனிதர்களின் மனம் உங்களுக்காய் திறந்து வழி விடாதபோது அவர்கள் ஒரு சிறைக்கூடமாகிறார்கள். ஆனால் இன்று நீ என்னை விடுவித்தாய். இரண்டாவது காந்தி-&இர்வின் உடன்படிக்கை இது! ஹா ஹா. ஸ்வதந்திரமே! அம்மே!’’

அவள் கஞ்சியும் சுட்டரைத்த சம்மந்தியும் செய்தாள். பலா இலையை “கோட்டி” கரண்டியாக்கி அதைக் கொண்டு சட்டியில் இருந்து கஞ்சியை கோரிக் குடித்தோம். அமிர்தம்.

மாலையின் மஞ்சள் வெயில். பஷீர் நீண்ட நேரம் அமைதியானார். ஒரு குருவி, தவளை, பூச்சி, எலியைப் போல நிச்சலனமாய் தன்னெதிரே இல்லாத ஒரு பிரகிருதியை கவனித்துப் பார்த்து இருந்தார். சட்டென எழுந்து தான் குளிக்க வேண்டும் என்றார். நாங்கள் பின்புறமாய் ஒரு பானையில் நீர் மொண்டு ஊற்றி, கல்லடுப்பில் வைத்து, கொதும்பை பற்ற வைத்து, தென்னமட்டையும் சொருகி எரிய விட்டோம். நீர் வெம்மையேற நான் அதனருகே அடுப்பை அணையாமல் பார்த்து இருந்தேன். பஷீரும் அவளும் முற்றத்துக்குப் போனார்கள்.

அவர் ரோஜாப் புதர் பக்கத்தில் போய் குத்திட்டு அமர்ந்தார். அங்கு மொய்த்துக் கொண்டிருந்த வண்டு ஒன்றை அமைதியாய் பார்த்தார்.

தேவியை நோக்கி, “இவன் போகட்டும், நான் உனக்கு ஒரு மிக அழகான ரோஜாப் பதியன் தருகிறேன்.”

அவள் தலையசைத்தாள்.

“நீ தினமும் தண்ணீர் விட்டுக் கவனித்துக் கொள்ள வேண்டும். செய்வாயா?”

“உயிருக்கு உயிராகப் பார்த்துக் கொள்வேன்.”

அவர் முகம் சட்டென இருண்டது. எழுந்து கொண்டார், முட்டியைப் பற்றியபடி.

அவர் வீட்டுக்குள் சென்று ஒரு கத்தையான கடிதங்களைக் கொண்டு வந்து ஒரு உறையை உருவி அவள் முன்னே இட்டார்.

‘‘இது நீதானே?”

அவள் மௌனித்தாள்.

“உன் கையெழுத்து… அது உன் குரலுடன், சொற்களுடன் ஒத்துப் போகிறது. அப்படித் தான் கண்டு கொண்டேன்.

எனக்கு உன்னைப் போல பல இளம் பெண்களிடம் இருந்து கடிதங்கள் வருவதுண்டு. சிலர் அடிக்கடி போன் பண்ணிப் பேசுவார்கள். நேரில் வந்து என்னிடம் என்ன பேச எனத் தெரியாமல் நாணிக் கோணுவார்கள். இந்த ஊரிலுள்ள எளிய முஸ்லிம் ஸ்த்ரீக்களும் குழந்தைகளும் கூட என் என் வாசகர்கள்தாம். அவர்கள் என்னைத் தேடி வந்து சூழும்போது ஃபாபி கதவுக்குப் பின்னால் நின்று கவனித்துக் கொண்டிருப்பாள். இப்போதும் கூட இருட்டில் அவள் இருப்பாள். நான் அப்படி வாசகிகளிடம் பேசுவது அவளுக்குப் பிடிக்காது. அதனாலே என்னுடைய காதல் கதைகளையும் பிடிக்காது. இது போன்ற கதைகளை நான் என்னை நாடி வரும் பெண்களிடம் பரிசீலனை பண்ணி நடித்து விட்டுதான் எழுத ஆரம்பிக்கிறேன் என்பது அவளது நம்பிக்கை. நான்தான் எதையும் கற்பனையில் எழுதுவதில்லையே

நான் ஒரு அழகன் அல்லவா? இப்பெண்களை யார் தான் தடுக்க முடியும்?’’

தேவியின் பக்கமாய் தன் சாய்வு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டார்.

‘‘ஆமாம். அதெல்லாம் என் கடிதங்களே. ”

பஷீர் ஒரு கடிதத்தை எடுத்து உறையில் இருந்து தாளை லாவகமாய் உருவிப் பார்த்தார்.

“உன் கையெழுத்தைப் பார்த்து என்னால் உடனடியாய் ஒன்று சொல்ல முடியும். சொல்லவா?”

“சொல்லுங்க ப்ளீஸ்.” அவள் முகம் அப்போதே வெட்கத்தில் சிவந்திருந்தது.

“தனித்தனியாய் இடைவெளி விட்டு எழுதுகிறாய். உன்னுடைய உலகம் தனிமையில் சுகித்திருப்பது. அதுவும் ‘அ’ அக்ஷரத்தை நீ பெரிதாய் விரித்து சுழித்திருப்பது பார்த்தால் நீ விகாசமான மனம் படைத்தவள் எனத் தெரிகிறது. ஆனால் உன் மனத்தில் ஒரு கருமையின் நிழல் படந்திருக்கிறது. அதை என் உள்மனம் சொல்கிறது. சரிதானே? விஷமிக்கண்டா. இந்த லோகத்தில் அற்புத அழகு படைத்த எந்த வாழ்வுக்கும் ஒரு களங்கம் வேண்டும். இல்லாவிட்டால் என்ன அழகு சொல்லு.”

அதன் பிறகு அவர் அவள் கையைப் பற்றி ரேகையை மெல்ல நெருடி உணர்ந்தார்.

“நன்றாக ரேகை பார்க்கத் தெரியும். பார்க்கவா? வடக்கே கொஞ்ச காலம் தேசாந்திரியாகத் திரிந்தபோது நான் கைரேகை பார்க்கும் தொழிலைச் செய்தேன். ஒருவரது பாதச் சுவட்டை நோக்கி முக்காலமும் சொல்லத் தெரியும்.”

நான் எழுந்து சென்று அவருக்கு உதவும் பொருட்டு ஒரு மலரைக் கொய்ய முடியுமா எனப் பார்த்தேன். வண்டு எழுந்து என் முகத்தைச் சுற்றி வட்டமடித்து விட்டு தன் ரீங்கார சிருங்காரத் தேடலைத் தொடர்ந்தது.

“இதில் எதைப் பறிக்கட்டும்?”

பஷீர் கோபமாய் திரும்பினார், “அவன் மேல, அந்த வண்டு, அவன் மேலே கையை வச்சே உன் கையை வெட்டிடுவேன்.”

நான் அதிர்ச்சியில் திகைத்து நின்றேன்.

“அவனை நான் தேனும் பாலும் கொடுத்து வளர்க்கிறேன். ஆமா.”

அவர் என்னை எதிர்பாராமல் நிமிர்ந்து பார்த்து “நாயரே” என்றபோது எனக்கு ஒருநொடி எப்படி எதிர்வினையாற்ற எனத் தெரியவில்லை. “ஒரு நிமிசம் இப்படி வாங்க.”

அவர் என்னை அழைத்துப் பின்புறம் கொண்டு சென்றார். பெரிய கல்லடுப்பில் காய்ந்த தென்னவோலைகள் எரிய, பெரிய இரும்புப் பானையில் நீர் கொதித்தது.

“என் தேவை ஒன்றை உங்களிடம் சொல்லப் போகிறேன்.”

“சொல்லுங்க சுல்தான்.”

“நான் சுல்தான் ஒண்ணுமில்ல. ஒரு சாதாரண மனிசன்.”

“அப்படி இல்ல. உங்களை மாதிரி ஒரு மிஸ்டிக் இந்த இந்திய மண்ணில் தோன்றினதில்ல. அதுவும் சிறுகதைகளில் உங்களைப் போல…”

“ச்சேச்சே. நான் வெண்டைக்காயோ கத்திரிக்காவோ இல்ல. நான் எளிய உணர்வுகளும் எண்ணங்களும் கொண்ட சாமான்யன். இப்போ எனக்கு ஒண்ணு தோணுது. வெளிக்கு போக முட்டிக்கிட்டு வர மாதிரி உள்ள அடக்க முடியாத அளவுக்கு அது எனக்குள்ள இருக்குது. என்னால் அதை வச்சிக்கிட்டு வேற மாதிரி இருக்க முடியாது. சொல்லவா?”

“ஓ.”

“சொன்னா அதை நீங்க நிறைவேற்றி வைக்கணும்.”

“என் உயிரைக் கொடுத்தாவது.”

“அந்தளவுக்கெல்லாம் வேணாம். நீங்க இதுக்கு மேல பாடுபடாம இங்கே இருந்து போனாப் போதும்.”

“…”

“ஆமா. எனக்கு அந்தப் பொண்ணு கூட படுக்கணும். இப்போ கொஞ்ச முன்னாடி அந்த எண்ணம் என் மண்டையில உதிச்சது. உடனே உங்ககிட்ட சொல்லணும்னு முடிவு பண்ணினேன். இதையெல்லாம் மறைக்கவோ தள்ளிப் போடவோ கூடாது.”

நான் தலையசைத்து விட்டு வெளிச்சம் முழுக்க மறைந்து இருள் சூழத் தொடங்கி உள்ளதை சுற்றுமுற்றும் திரும்பிக் கவனித்தேன். அவர் செருமி விட்டு ஒரு உலர்ந்த தென்னவோலையை இரண்டாய் மடித்து அடுப்பில் காட்டிப் பற்ற வைத்து தீவட்டியாக்கி என்னிடம் நீட்டினார்.

“வழியில நிறைய மூர்க்கன் பாம்பு திரியும். பார்த்து சவட்டிராதீங்க. நேரே போனா அம்பலம் வரும். அங்கே படுத்துக்கலாம்.”

நான் சற்று நேரம் அங்கே நின்று என்னை நிலைப்படுத்திக் கொண்டேன். தேவியிடம் சொல்லிக் கொள்ள முன்பகுதிக்கு வந்தபோது, பஷீர் அவளுக்காக ஒரு ரோஜா பதியனைத் தயார் பண்ணி ஒரு சின்ன துணிப்பையில் கட்டித் தந்தார்.

“உங்க விடுதியின் தோட்டத்தில் நடுங்கள். வாழ்க்கை புஷ்பிக்கட்டும் ஒரு பெரிய ரோஜாத் தோட்டம் உண்டாகட்டும்.” அவர் அவளது உச்சந்தலையைத் தொட்டு ஆசீர்வதித்தார்.

நான் சன்னமான குரலில் தேவியிடம் “போறேன். அவசரமா வேலை இருக்கு. நீ வேணும்னா…” அவள் என்னைக் கேட்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை. நான் விடுவிடுவென வாயிற்கதவை அடைந்து தீவட்டியை வீசிக் கொண்டு வெளியே வந்து நின்றேன். அதற்கு மேல் எங்கே நடந்து போவது? கோயில் இருப்பது எத்திசை? ஒரு பயம் வந்து என்னைக் கவ்விக் கொண்டது. முக்கால் மணிநேரம் அங்கேயே நின்று விட்டு ஒரு உணர்வால் உந்தப்பட்டு கேட்டைத் திறந்து உள்ளே சென்றேன். அங்கும் வெளிச்சம் அணைக்கப்பட்டு சில்வண்டின் வேதனை அறிவிப்பு மட்டும் இருந்தது. அதன் ஒலி புரண்டு அசையும் இருள் எனும் பிரம்மாண்டத்தின் வலி கொண்ட முனகலைப் போல அப்பகுதியை நிறைத்தது.

கதவை ஒரு முறை தட்டினேன். அவரது கத்தி நினைவுக்கு வர திரும்பி சுற்றி வந்து பின்பக்கம் சென்றேன். அங்கும் வாயில் மற்றும் ஜன்னல் கதவுகள் மூடியிருந்தன. அரவமே இல்லை. சில்வண்டும் அமைதியாகி விட்டது. கல்லடுப்பில் சாம்பல் புகை. ஒரு குச்சியால் அதைக் கிளறினேன். நெருப்பு கிடைத்தால் ஒரு கொதும்பைப் பற்ற வைக்கலாம். புணர்ச்சி ஈரத்தில் சிவப்பு சிவப்பாய் திறந்த பெண்ணுறுப்பாய் கங்குகள் சட்டென விழித்துக் கொண்டு நோக்கின. பூத்துக் காத்திருந்த வெக்கையின், நிர்வாணத்தின் ஒளி ஏற்படுத்திய லஜ்ஜை.

காலை ஏழு மணிக்கு நான் கேட்டை ஒட்டி நின்று எட்டிப் பார்த்தேன். அவர் தேகப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். உடம்பெல்லாம் எண்ணெயின் மிளிர்வு. கேட்டின் கீழ் இடுக்கு வழி ஒரு கரும்பாம்பு அவசரமாய் நெளிந்து என் கால்களை ஒட்டிக் கடந்து போகிறது. பதற்றத்தில் நான் தடுமாறி கேட்டில் நிலைதவறி விழ, அது முனகியபடி திறந்து கொண்டது. பஷீர் முதுகு வளைத்துப் பாதத்தை தொட்டு நின்ற நிலையில் தலையை மட்டும் உயர்த்தி “ம்ம்? என்ன வேணும்?” என்றார். என் நாவில் சொற்கள் கரைபுரண்டு வந்தன. சொல்ல முடியாமையின் தவிப்பும் ஆற்றாமையின் கோபமும் அநீதியின் முழுங்க இயலா கசப்பும் என்னை ஆட்கொண்டன. அவர் ஒரு துண்டைத் தன் தலையில் முண்டாசாகக் கட்டிக் கொண்டு என்னை நோக்கி வந்தார்.

“ஆராணடோ?”

“நான்தான்.”

“நான்தான்னா? ம்ம்ம்?”

நான் தேவியைக் குறிப்பிட்டு அவளை அழைக்கக் கேட்டேன்.

“அப்படி யாரும் இங்கே இல்ல.”

நான் அவரை நம்பாமல் “தேவி.”

“போடா.”

நான் முந்தின நாள் அங்கு வந்ததை, தேவியை விட்டுச் சென்றதை விபரமாய்க் கூற, அவர் இளக்காரமாய் சிரித்தபடி கேட்டார், “மனசினு நல்ல சுகமில்ல அல்லே?”

‘இல்லை’ என தலையசைத்தேன்.

“நான் நினைச்சேன். நல்ல சிகிச்சை எடுத்தால் சரியாகிடும். த்ருஷூரில் ஒரு சானிடாரியம் உண்டு. அங்கே போங்க. ம்ம் இங்க எல்லாம் நிற்கக் கூடாது.”

நான் மீண்டும் “தேவி.”

“யாரெடா இவன்? இங்கே தேவியும் இல்ல, மூகாம்பிகையும் இல்ல. இது ஒரு முஸல்மாண்டே வீடானு மனுஷா.”

நான் போகத் தயாரில்லை எனக் கண்டதும் அவர் சீரியஸாக  முகத்தை வைத்துக் கொண்டு சொன்னார், “தேவியை அல்லே காணாண்டது?”

“ஆமா.”

“நேரே போய் வடக்கே திரும்பினால் அம்பலம் வரும். சாயங்காலம் நடை திறப்பாங்க. அப்போ தேவியைத் தரிசனம் பண்ணலாம். சரியான கிறுக்கனுங்க.”

நான் அவரை நோக்கி ஓரடி எடுத்து வைத்தேன். அவர் தன் இடுப்பு பெல்ட்டில் இருந்து கத்தியை உருவி நீட்டினார்.

நான் செய்வதறியாது அவர் வீட்டுக்குள் நோக்கினேன். என் பார்வையைத் தொடர்ந்து அவர் கூவினார், “எடீ, ஃபாபீ…”

ஓவியங்கள்: கிரிஜா ஹரிஹரன்