னைத்துத் தளங்களிலும் முரண்களைக் கொண்டு இயங்குகிற சக்திகளால் நாடு தற்போது நிலைகுலைந்து கிடக்கிறது. மதச்சார்பின்மை பேசப்படும். ஆனால் கடும் மத துவேஷமும், வெறியும் இருக்கும். பெண் விடுதலை பேசப்படும். ஆனால் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் முதலிடம் பிடிக்கும். சாதி வேண்டாம் என்று சொல்லப்படும். ஆனால் எல்லாமே சாதிய அடிப்படையில்தான் நடக்கும். கல்வியிலும் இங்கு அப்படித்தான்.

நாட்டில் கல்வியின் தரத்தைப் பன்னாட்டு அளவில் மதிப்பிட்டே நம் இடத்தை அறிகிறோம். நமது ஆட்சியாளர்கள் கல்வியைப் பன்னாட்டுத்தர மதிப்பீட்டுக்கு உயர்த்துவோம் என்று அவ்வப்போது முழங்குகிறார்கள். கல்வியில் மேம்பட்டிருக்கும் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்கள். பின்லாந்தில் உயர்நிலை வகுப்புகள் வரை தேர்வுகளே இல்லை. பார்த்து எழுதிடும் முறைதான் அங்கே அமலில் இருக்கிறது. இங்கும் அதைப்போன்று நடைமுறைப்படுத்துவோம் என்று அறிக்கை கொடுக்கிறார்கள். ஆனால் மீண்டும் அதே பிற்போக்குத்தனங்களை நடைமுறைப்படுத்துகிறார்கள்.

தமிழக அரசு அண்மையில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்திருப்பது முரண்பாட்டின் உச்சம். அடிப்படைவாத சிந்தனையின் வெளிப்பாடு. குழந்தைகள்மீதான உளவியல் தாக்குதல். குழந்தை உரிமை மீறல். பிஞ்சு மனங்களில் மன அழுத்தத்தையும், பீதியையும் ஏற்படுத்தி, அறிவுச் செயல்பாட்டின்மீது ஒவ்வாமையையும், வெறுப்பையும் உண்டாக்கி, பள்ளிகளிலிருந்தே அவர்களை விரட்டியடித்திடும் செயல்பாடு. இந்த அறிவிப்பு தமிழகக் கல்வித் தரத்தின்மீது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். தேசிய அளவில் கடும் எதிர்ப்பைச் சந்தித்திருக்கும் புதிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இந்தத் தேர்வு முறையைப் பிற மாநிலங்களையெல்லாம் முந்திக்கொண்டு இங்கே அறிவித்திருப்பது இவர்கள் மத்தியில் ஆள்கின்றவர்மீது கண்மூடித்தனமாக வைத்திருக்கும் பற்றையே காட்டுவதாக இருக்கிறது.

குழந்தைகளின் உளவியல் கூறுகளையோ, சமூகத்தில் நிலவும் வாழ்வியல் காரணிகளையோ, நவீனக் கல்விமுறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களையோ, தமிழகத்தில் வரலாற்றுப் போக்கில் வளர்ந்து வந்திருக்கும் கல்விச் சிந்தனைகளையோ கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமலேயே இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

குழந்தைகளின் அறிவு முதிர்ச்சி மெல்ல மெல்லவே ஏற்படுகிறது. ஐந்து வயதிலேயே ஓரளவுக்கு அது முறைசார்ந்த கல்விக்குத் தன்னை உட்படுத்திக் கொள்ளும் நிலையை எட்டுகிறது. ஆனால் புதிய கல்விக்கொள்கை மூன்று வயதிலேயே குழந்தையின் மூளை வளர்ச்சியடைந்துவிடுவதாகவும், அதனால் மூன்று வயதிலேயே கல்வியைத் தொடங்கி விடவேண்டும் என்றும், அந்த வயதிலேயே பல மொழிகளையும், இந்திய தத்துவ மரபுகளைப் பிரதிபலித்திடும் கதைகளையும், பண்பாட்டுப் பழக்க வழக்கங்களையும் கற்பிக்கத் தொடங்கி விடவேண்டும் என்றும் பரிந்துரைக்கிறது.

அறிவியலுக்குப் புறம்பான இந்தப் பார்வைதான் மூன்று, ஐந்து மற்றும் எட்டு வகுப்பு மாணவர்களுக்கே பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற பரிந்துரையை வழங்கும் நிலைக்கு இட்டுச்செல்கிறது. இதை அறிவியல் கண்ணோட்டத்துடன் விமர்சித்தால், சக்கர வியூகத்தில் சென்று போரிடும் முறையை கிருஷ்ணன் சொல்லும்போது அம்மாவின் கர்ப்பத்திலிருக்கும் அபிமன்யு கேட்டுத் தெரிந்து கொண்டதாகவும், தாயின் கர்ப்பத்திலிருக்கும்போதே நாராயண மந்திரத்தை பிரகலாதன் அறிந்துகொண்டதாகவும் சொல்கிறார்கள்!

தொடக்க மற்றும் நடுநிலை வகுப்புகளில் இருக்கும் மாணவர்களுக்குத் தேர்வு என்பதே ஒரு சுமைதான். கல்வித்துறையில் பல ஆய்வுகளை மேற்கொண்ட அறிஞர்கள் பலரும் எட்டாம் வகுப்புவரையில் தேர்வே தேவையில்லை என்று கூறியிருக்கின்றனர்.

யுனெஸ்கோவின் கல்விப்பிரிவு 1971ஆம் ஆண்டு வெளியிட்ட எம்.ஏ.பிரைமரின் ஆய்வு நூல் (கீணீstணீரீமீ வீஸீ ணிபீuநீணீtவீஷீஸீ: கி கீஷீக்ஷீறீபீ றிக்ஷீஷீதீறீமீனீ) கல்வியில் ஏற்படும் தொய்வு, தேக்க நிலை, இடை நிற்றல் போன்றவை எல்லாம் முதலில் தேர்வுகளாலேயே உருவாவதாகச் சொல்கிறது. கல்வி இடை நிற்றலுக்கான காரணங்களை அகவயம், புறவயம் என்று பிரிக்கும் பிரைமர் மற்றும் பால் ஆகியோர், கடினமான தேர்வு மற்றும் மதிப்பீட்டு முறைகளை அகவய காரணங்களில் முதலாவதாகச் சொல்கின்றனர். புறவயக் காரணங்களில் முதலாக அவர்கள் குறிப்பிடுவது வறுமை மற்றும் குடும்பச் சூழல்.

நம்முடைய கல்வி அறிஞர் நெ.து.சுந்தரவடிவேலு, ‘கீழ் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் அனைவரையும் மேல் வகுப்புக்கு அனுப்பிவிடவேண்டும். அதற்காகத் தேர்வு எதுவும் தேவையில்லை’ என்று 1963லேயே பரிந்துரை செய்திருக்கிறார். பெரியார் அவர்கள் அக்கருத்தைப் பெரிதும் வரவேற்றுப் பாராட்டியிருக்கிறார்.

தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு உடல் வலுவும் ஆரோக்கியமும் குறைவு. அவர்கள் எளிதில் நோய்களுக்கு ஆட்படக்கூடியவர்கள். என்னதான் ஆசிரியர்கள் அன்பாக இருந்தாலும் தங்கள் சக வயதுடைய மாணவர்களிடம் மட்டுமே பிணைப்புடன் இருக்கக்கூடியவர்கள். இந்த வயதில் அவர்களுக்கு கல்வி ஒரு சுமையாக இருந்தால் அதை அவர்களால் இயல்பாகக் கற்க முடியாது.

கல்வியைத் திணிக்கும்போது வெறுப்பும், பயமும் உருவாகும். அதனால்தான் கல்வி அறிஞர்கள் பலரும் இந்தத் தொடக்கநிலைக் குழந்தைகளுக்கு விளயாட்டு முறையிலான கல்வியை வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். ஆனால் இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, சிந்தனை மரபுக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத, பல நூறு ஆண்டுகளாகத் தங்களைத்தவிர பிறர் படிக்கக்கூடாது என்று வலியுறுத்திவருகிற கூட்டம் இந்த உண்மைகளை ஏற்காமல் மூன்றாம் வகுப்பிலிருந்தே பொதுத்தேர்வு என்று கட்டாயப்படுத்துகிறது.

பொதுத்தேர்வை எதிர்கொள்ளக்கூடிய அளவுக்கு மனப்பக்குவமோ, அத்தேர்வுக்குத் தன்னைத் தயார் செய்துகொள்ளும் வாழ்கைச் சூழலோ அரசு பள்ளிகளில் படித்து வருகின்ற ஏழை மாணவர்களுக்கு இல்லை. கிராமப்புறங்களிலும், மலைப் பகுதிகளிலும், காட்டுப் பகுதிகளிலும், மாநிலத்தின் எல்லையோரப் பகுதிகளிலும் வாழ்கின்ற மக்களின் குடும்பச் சூழ்நிலைகள் அவலம் நிறைந்தவை. சிக்கலானவை. அக்குடும்பங்களில் இருக்கின்ற குழந்தைகளே அந்த அவலங்களுக்கும், சிக்கல்களுக்கும் முதலில் பலியாகின்றவர்களாக இருக்கின்றனர். அம்மாவுக்கும் குடிகார அப்பாவுக்கும் சண்டை என்றால் பள்ளிக்கு வராமல் போகும் பிள்ளைகள் இருக்கிறார்கள். கால்நடைகளை மேய்த்திடும் குடும்பத்தில் யாராவது நோய்வாய்ப்படும்போது அந்த வீட்டின் குழந்தைகள்தான் பள்ளிக்குச் செல்லாமல் நிலைமை சரியாகும்வரை கால்நடை மேய்க்கப் போக வேண்டும். விவசாயக் குடும்பங்களிலிருந்து வரும் குழந்தைகளுக்கும் இதே நிலைதான். பள்ளி ஊருக்குள்ளேயே இருக்கிறதென்றால் ஆடு மாடுகளைப் பட்டியிலிருந்து அவிழ்த்துவிடவும், தண்ணீர் காட்டவும் செல்லவேண்டும். ரேஷன் கடைக்குப் போக வேண்டும்.

அம்மாவும் அப்பாவும் காலையில் ஐந்து மணிக்கு வேலைக்குச் செல்லவேண்டும் என்றால் சாப்பாட்டு வேலைகளில் உதவிடுவதற்காக அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் அம்மாக்களோடு எழுந்துகொள்ளும் பெண் குழந்தைகள் உண்டு. கொஞ்சம் வளர்ந்துவிட்டாலே பெண் குழந்தைகள் குழந்தைகளாகப் பார்க்கப்படுவதில்லை. பெண்களாகவே பார்க்கப்படுகிறார்கள். பாலியல் சீண்டல்களுக்கும், வல்லுறவுக்கும் ஆளாகி உயிரையும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் இழக்கிறார்கள்.

ஆறாம் வகுப்பு தொடங்கி எட்டாம் வகுப்பு வருவதற்குள்ளாகவே பல பெண் குழந்தைகள் பருவமடைகிறார்கள். மருத்துவம் சொல்லுகின்ற 11 முதல் 19 வயதிலான வளரிளம் பருவத்தின் தொடக்கக் காலமாக அது விளங்குகின்றது. பின்னர் அக்குழந்தைகளுக்கான புறச்சூழல் உடனே மாறிவிடுகிறது. பருவமடைந்த பெண் குழந்தைகள் மாதவிடாய் காலங்களில் சுகாதாரமாய் நேப்கின் மாற்றிக்கொள்ளவோ, அவற்றை அப்புறப்படுத்தவோ, அந்தச் சங்கடத்தைப் பகிர்ந்துகொள்ளவோ கூட இன்னும் நடுநிலைப் பள்ளிகளில் போதிய வசதிகளில்லை. அவர்கள் மாதவிடாய் நாட்களில் பள்ளிக்கு வராமல் நிற்கிறார்கள்.

வளரிளம் பருவத்தின் தொடக்கத்திலிருக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உடல் மற்றும் மனரீதியான மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆறாம் வகுப்புவரை சிறு குழந்தைகளாக இருக்கும் மாணவர்கள் ஏழு, எட்டு வகுப்புகளுக்கு வருகையில் முற்றிலுமாக மாறுகின்றனர். எதிர் பால் கவர்ச்சி, வெட்க உணர்வு, அவமான உணர்வு, புறச்சூழல்கள் பற்றிய தெளிவு, நடத்தை மாறுதல் போன்ற குணாம்ச மாறுதல்களை அவர்களிடையே பார்க்க முடிகின்றது. இவ்வயதில் படபடப்பு, கோபம், பதற்றம் போன்ற உள்ள எழுச்சியுணர்வுகளும் அதிகமாக ஏற்படுகின்றன. இதனால் அவர்களால் படிப்பில் கவனம் செலுத்த இயலாமல் போகிறது.

இப்படி எண்ணற்ற காரணிகளைச் சொல்ல முடியும். எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு வேலை மற்றும் வளரிளம் பருவ பாதிப்பு என்றால், ஐந்தாம் வகுப்பு மாணவர்களோ குழந்தைகள். அவர்களுக்கு ஒழுகும் மூக்கைத் துடைத்துக்கொள்ளும் அளவுக்கான முதிர்ச்சியோ, கழிவறை பயன்பாட்டு உணர்வோகூட இருக்காது. இந்த இயல்புக்காரணிகளூடே பார்த்தால் அறிவிக்கப்பட்டிருக்கும் பொதுத்தேர்வுகள் இம்மாணவர்கள்மீது பெரிய எதிர்மறையான தாக்கத்தைத்தான் ஏற்படுத்தும். நினைவாற்றலோ, அக்கறையுணர்வோ அதிகமாக இல்லாத பருவத்திலிருக்கும் குழந்தைகளுக்கு, குழந்தை மய்ய கல்விப் பார்வையில் சொல்வதென்றால் இத்தேர்வுகள் அப்பட்டமான மீறல்தான். இந்த வயதில் அவர்கள் பெறும் கல்வி ஆதார அடிப்படை கல்விதானே ஒழிய தகுதியாக்கிடும் கல்வியல்ல.

இத்தேர்வு அறிவிப்பிலிருக்கும் சில நடைமுறை குழப்பங்களையும் பார்க்கலாம். தற்போது தமிழகத்தில் இருப்பது முப்பருவக்கல்வி முறை. ஒவ்வோர் பருவத்துக்கும் ஒரு நூல் என்று வழங்கப்படுகிறது. ஆனால் ஐந்து, எட்டு வகுப்புகளுக்கு நடத்தப்படவிருக்கும் தேர்வு வினாக்கள் மொத்த பாடத்திலிருந்தே கேட்கப்படும். ஏற்கனவே வழங்கப்பட்ட முதல் இரண்டு பருவத்தின் நூல்களைப் பெரும்பாலான மாணவர்கள் தொலைத்துவிட்ட நிலையில் அவர்கள் தேர்வுக்கு எப்படிப் படிப்பார்கள்?

தற்போது நடத்தப்படவிருக்கும் இத்தேர்வுகள் வெறும் பயிற்சிக்கானதுதான். எழுதுகிற அனைவருமே தேர்ச்சி அடைவார்கள் என்று விளக்கங்கள் சொல்லப்படுகின்றன. எல்லாரும் தேர்ச்சி அடைய பொதுத் தேர்வு எதற்கு? அப்படியானால் ஆண்டுதோறும் பள்ளிகளிலேயே நடத்தப்படும் தேர்வுகள் பயிற்சிக்கானவையில்லையா? மேலும் ஆசிரியர்கள் பள்ளிகளில் வேலையின்றி உட்கார்ந்துகொண்டிருப்பதாக அரசு நினைக்கிறதா? ஏனென்றால் இத்தேர்வுக்கான வினாக்களை மந்தன முறையில் தயாரித்து அச்சடித்து கட்டுக்காவல் மய்யத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும். பிறகு பள்ளிகளுக்கு விநியோகிக்கவேண்டும். தேர்வு எழுதிய பிறகு அத்தாள்களை மீண்டும் கட்டுக்காப்பு மய்யத்துக்குக் கொண்டுவந்து சேர்க்க வேண்டும். பின்னர் மதிப்பீட்டுப் பணி. அதற்குப்பிறகு மதிப்பெண்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும். இப்பணிகள் எல்லாவற்றுக்கும் முன்பாக தனியார் பள்ளிகளில் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம் நூறு ரூபாய் என்றும், எட்டாம் வகுப்பு மாணவர்களிடம் இருநூறு என்றும் வசூலிக்கப்படும் தேர்வுக்கட்டணத் தொகையை தனி கணக்கு தொடங்கி பராமரிக்க வேண்டும். இப்பணிகளுக்குப் பல பள்ளிகளுடைய தலைமையாசிரியர்களும், ஆசிரியர்களும், ஆசிரியப் பயிற்றுநர்களும் பணி அமர்த்தப்படுவர். அப்படியானால் எவ்வளவு கற்பித்தல் பணி பாதிக்கப்படும்? மாணவரின் கல்வித்திறனை சோதிக்கும் முயற்சி என்றால் நடுநிலைப்பள்ளிகளில் ஏற்கனவே உள்ள ஸ்லாஷ் தேர்வு எதற்கு?

குழந்தைகளின் அறிவு வளர்ச்சி மரபுக் (குடும்ப மற்றும் குல) காரணிகளால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது என்று சொல்வது அறிவியலுக்குப் புறம்பான அடிப்படைவாத சிந்தனை. உண்மையில் குழந்தைகளின் அறிவு புறச்சூழல்களாலேயே பெரிதும் தீர்மானிக்கப்படுகிறது. அவர்களின் அறிவுத் துலங்கல்களுக்கு குடும்ப, சமூக வாழ்நிலைச் சூழல்களே பலமாக அடிகோலுகின்றன.

அடிப்படைவாத சிந்தனை கொண்டோரால் இக்கருத்து ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. பொய்ப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சாதிய சமூகப் படிநிலைகளில் முதலிடத்தில் இருப்போரின் பிள்ளைகளுக்கு மட்டும்தான் அறிவு, திறமை, கலையார்வம் இருக்கின்றன என்று பொதுச் சமூகத்தை நம்பவைக்கும் முயற்சிகள் தொடர்ந்து செய்யப்படுகின்றன.

இந்த முயற்சிகளின் வெளிப்பாடுகளாகவே தகுதி, திறமை என்கின்ற கருதுகோள்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்தத் தகுதி, திறமை கருதுகோள்களை நிலைநிறுத்திடும் நோக்கிலேயே தகுதித் தேர்வுகளும், நுழைவுத் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. கட்டாயப்படுத்தப்படுகின்றன.

மய்ய அரசினால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கையின் அடிப்படையாக விளங்குவது இந்தத் தகுதி தேர்வு கருதுகோள்கள்தான். மூன்று வயது முதலே கல்வி. மூன்று, ஐந்து, எட்டு வகுப்புகளில் பொதுத்தேர்வு. ஒன்பதாம் வகுப்பிலிருந்து தொழிற்கல்வி. பத்து, பதினொன்று, மனிரெண்டு வகுப்புகளில் தொடர் பொதுத்தேர்வுகள். அதற்குப் பிறகு இளங்கலைப் பட்டப்படிப்பில் சேர்வதற்கும் ஒரு நுழைவுத்தேர்வு. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்விகளுக்கு நுழைவுத்தேர்வுகள். உயர்கல்வி மற்றும் ஆய்வுப்படிப்பில் சேரவும் நுழைவுத்தேர்வுகள். எல்லாம் முடிந்த பின்னர் வேலையில் சேர்வதற்கும் தகுதித்தேர்வுகள்.

தேர்வு என்ற கருத்து சிறந்ததை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றதை நிராகரிக்கும். சூப்பர், சுப்பீரியர் என்ற கருத்துநிலைகள் எப்போதுமே வல்லாதிக்கத்தின் வெளிப்பாடாகத்தான் இருக்க முடியும். நவீன உலகம், போட்டி நிறைந்த உலகம் என்ற கருத்துகள் ஊதி பெருக்கப்பட்டு தகுதி, திறமை, தேர்வு ஆகியவை தற்போது அரசுகளால் நியாயப்படுத்தப்படுகின்றன.

இந்தப் பெரும்பான்மைவாத நியாயத்தை முன்னிறுத்தியே தமிழக அரசால் ஐந்து மற்றும் எட்டு வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மய்ய அரசின் நெருக்கடியாலோ, புதிய கல்விக்கொள்கையில் சொல்லப்பட்டிருப்பதாலோ நாங்கள் இதைக் கொண்டுவரவில்லை என்று அரசுத்தரப்பில் சொல்லப்பட்டாலும் அதை மக்கள் நம்பத் தயாராக இல்லை.

நடப்புக் கல்வியாண்டில் கொடுத்து நிறைவு செய்யப்பட்ட புதிய பாடத்திட்ட நூல்கள் பல சர்ச்சைகளைக் கிளப்பின. அந்நூல்களின் அட்டைப்படங்களில் காவி வண்ணம் கூட்டப்பட்டிருந்தது விவாதத்துக்கு உள்ளானது. பின்னர் தமிழ் மொழியின் வயது குறைத்து அச்சிடப்பட்டிருந்தது சுட்டிக்காட்டப்பட்டு திருத்தப்பட்டது. தற்போது ஆர்.எஸ்.எஸ். பற்றி இடம் பெற்றிருக்கும் கருத்தைச் சுட்டிக்காட்டியதும், தாளை ஒட்டி அதை மறைக்கச் சொல்லியிருக்கிறார்கள். கவனத்துக்கு வராதவைகளாகவும் பல இருக்கின்றன. இன்றைய பள்ளிப்பாட நூல்களை ஆய்வு செய்கிற ஒருவர் அதில் வலதுசாரி கருத்துகள் கலக்கப்பட்டிருப்பதை மிக எளிதாக அறிந்துகொள்ள முடியும். இனி பாடத்திட்டம் முழுக்கவே வலதுசாரி சிந்தனையோடு உருவாக்கப்படும்நிலை வரலாம்.

அனைவருக்கும் கல்வி உரிமை திட்டத்தில் எட்டாம் வகுப்புவரை பொதுத்தேர்வு தேவையில்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது. 2005-2006 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசாணை (நிலை) எண் 64, 1 முதல் 5 வகுப்புவரை பயிலும் மாணவர்களைத் தேக்கமின்றி தேர்ச்சி அடைய செய்யவேண்டும் என்று சொல்கிறது. இப்படித் தனக்கு முன்னிருக்கும் அரசு ஆவணங்கள் எதையுமே இப்போதைய அறிவிப்பு பொருட்படுத்தவில்லை.

இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கான கல்வி எது என்று அதிகம் சிந்தித்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் பாபா சாகேப் அம்பேத்கர். இன்னொருவர் தந்தை பெரியார். இவர்களின் கல்விச் சிந்தனைகள் பாடநூல்களில் ஒருபோதும் முழுமையாக இடம் பெறுவதில்லை. ஆனால் குலக்கல்விமுறையை நியாயப்படுத்திப் பரிந்துரைக்கப்பட்ட வார்தா கல்வித் திட்டம் எட்டாம்வகுப்பு பாடநூலிலேயே சேர்க்கப்படுகிறது. ஜோதிபா பூலேவிற்கோ, சாவித்ரி பாய் பூலேவிற்கோ நம்முடைய பாட நூல்களில் இடமில்லை.

1923ஆம் ஆண்டு பம்பாய் மாகாண அரசால் கொண்டுவரப்பட்ட கட்டாய ஆரம்பக் கல்வி சட்டத்தில் கல்வியை நிர்வகிக்கும் பொறுப்பு அந்தந்தப் பகுதி முக்கிய பிரமுகர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று இருந்தது. இதை அம்பேத்கர் மிகக் கடுமையாக எதிர்த்தார். பாரம்பரியம் என்ற பெயரில் அந்த நிர்வாகிகள் சாதிய உணர்வுகளையே முன்வைப்பர். இது ஏழை எளிய தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்வி பெறுவதைத் தடுக்கும் என்றார். அம்பேத்கரின் தொலைநோக்கை எண்ணி இப்போது வியக்கமுடிகிறது. ஏனெனில் இன்று மய்ய அரசு சொல்லும் புதிய கல்விக் கொள்கையும், உள்ளூரின் முக்கிய பிரமுகர்கள் பள்ளியை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்பார்கள் என்கிறது. பேஷ்வாக்களின் சனாதன வெறி இன்னும் தணிந்தபாடில்லை.

அறிவர் அம்பேத்கரைப் போன்றே பள்ளியில் நடத்தப்படும் தேர்வுகளுக்கு எதிராக தமது கருத்துகளை பெரியார் பல்வேறு தருணங்களில் முன்வைத்திருக்கிறார். அவர் அன்றைக்கு சொல்லியிருக்கும் கருத்துகள் இன்றைய நவீன கல்விச் சிந்தனைகளோடு மிகத்துல்லியமாகப் பொருந்துகின்றன.

‘சாதாரணமாக நமது மக்கள் பெரும்பாலும் புஸ்தகப் படிப்பையும் புரியாமல் உருப்போட்டு பரீட்சைகளில் தேறிவிடுவதையுமே கல்வி என்று கருதிக்கொண்டு இருக்கிறார்கள். படிப்பு வேறு, அறிவு வேறு என்பதைக் கவனமாய் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லும் பெரியார் இன்னொரு இடத்தில், ‘கல்வியில் மார்க்கு எண்களைப் பார்த்துத் தகுதி, திறமை குறிப்பது பெரிய முட்டாள்தனமும் மிகப்பெரிய அயோக்கியத்தனமுமேயாகும். மார்க்கினால் கெட்டிக்காரத்தனம், சோம்பேறித்தனம், யோக்கியன், அயோக்கியன், அறிவாளி, மடையன் என்பதைக் கண்டுபிடிக்க முடியாது. தகுதி, திறமை மேல்சாதியாருக்கே ஏகபோக உரிமையா?’ என்று கேட்கிறார்.

தொடக்க கல்வியைக் கற்பிக்கும் பள்ளிகளில் பெண் ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும் என்று நுட்பமாக சிந்தித்துச் சொன்ன பெரியார், தொடக்கப்பள்ளிகளே கல்வியின் நாற்றங்கால்கள் என்றார். ‘துவக்கப் பள்ளிக்கல்வி என்பது நாற்றங்கால்களில் தூவப்படும் பொறுக்கு விதைகள் போன்றவை. விதைகள் சோடையானால் பயிரின் விளைவும் மோசமாக இருக்கும். எனவே துவக்கப்பள்ளி பிள்ளைகளுக்குப் பகுத்தறிவுப்பால் ஊட்டப்பட வேண்டும். அந்தப் பகுத்தறிவுப்பாலினை ஊட்டும் ஆசிரியர்கள் கண்டிப்பாக முழு பகுத்தறிவுவாதிகளாக திகழ வேண்டும். அப்போதுதான் அவர்களால் உருவாக்கப்படும் எதிர்கால சிற்பிகள் சிறந்த அறிஞர்களாக, விஞ்ஞானிகளாக உருவாக முடியும்’ என்று விடுதலையில் (24.09.1970) எழுதினார்.

பெரியாருடைய பெயரை தங்கள் ஆட்சியின் ஆதாரமாக ஒப்புவிக்கும் இன்றைய நமது ஆட்சியாளர்கள் அவர் எழுதியதைப் படிக்காததால்தான், நாக்பூர் ஹெட்கேவர் பவன் சித்தாந்தங்களை இங்கே புகுத்துகின்றனர்.

குழந்தைகள் பொம்மைகள் அல்ல. உயிரும் உணர்வும், உளவியலும் கொண்டவர்கள். இந்த உண்மையை அளவுகோலாகக் கொண்டே அவர்களுக்கான கல்வி வடிவமைக்கப்பட வேண்டும். பெரிய மனித சிந்தனையோடும், அடிப்படைவாத எண்ணத்தோடும் அது இருக்கக்கூடாது. இந்தப் பொதுத்தேர்வுகள் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதி. நவீன கல்வி முறையைப் பின்னுக்கு இழுக்கும் முயற்சி. கல்வி பரவலாக்கத்தைத் தடுக்கும் சதி.