17.06.2023 ஆம் நாளிட்ட இந்து தமிழ் திசை ஏட்டில் (மதுரைப் பதிப்பு) “பழநி பஞ்சபாண்டவர்கள் மலையும் பஞ்சபூதங்களும்”என்னும் தலைப்பில் செய்திக் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது பழநி கொழுமம் சாலையில் பாப்பம்பட்டி அருகே உள்ள அயிரை மலை பற்றிய கட்டுரை அது.சுற்றுலா நோக்கில் எழுதப்பட்ட அக்கட்டுரையில் மலையின் வரலாறு பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது:

மகாபாரதத்தில் சகுனியின் சூழ்ச்சியால் சூதாட்டத்தில் துரியோதனனிடம் நாட்டை இழந்த பஞ்ச பாண்டவர்கள், வனவாசத்தின்போது திரவுபதியுடன் இந்த மலையில் தங்கி இருந்ததாக நம்பிக்கை. இந்த மலையின் தென்புறத்தில் அமைந்துள்ள மலை ‘துரியோதனன் மலை’என்றுஅழைக்கப்படுகிறது. சீனாவில் இருந்து இந்தியா திரும்பி வந்த போகர் சித்தருக்கு பிரம்மஹத்தி தோஷம் இருந்தது. இந்த தோஷம் நீங்க ஐவர் மலையில் வேள்வி நடத்தினார்.

அப்போது புவனேஸ்வரி அம்மன் தோன்றி, இந்த தோஷம் போக நவபாஷாணத்தால் முருகன் சிலை செய்து பழநியில் வைத்து வழிபட வேண்டும் என்று கூறியுள்ளார். எனவே,பழனிமலைக்கோயிலில் உள்ள நவபாஷாண சிலையை இந்த மலையில் தங்கியிருந்து போகர் உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஐவர் மலை பழநிக்குத்’தாய் வீடு’ என்றும் கூறப்படுகிறது.

ஐவர் மலையில் வற்றாத இரண்டு புஷ்கரணிகள் (சுனைகள்) உள்ளன. ஒன்று தாமரை மலர்களுடன் சூரிய புஷ்கரணி என்றும், மற்றொன்று அல்லி மலர்களுடன் சந்திர புஷ்கரணி என்றும் அழைக்கப்படுகின்றன. சூரியனின் கதிர்கள் தாமரை மலர்கள் மீதும் சந்திரனின் கதிர்கள் அல்லி மலர்கள் மீதும் விழும்படியான அமைப்பு இந்த புஷ்கரணிகளின் தனிச்சிறப்பு.

150 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் இருந்து நாராயண பரதேசி என்பவர் இந்த மலைக்கு வந்து தங்கியுள்ளார். பஞ்சபாண்டவர்கள் தங்கியிருந்ததை அறிந்து இங்கு திரவுபதி அம்மனுக்குக் கோயில் உருவாக்கி வணங்கியுள்ளார். காலப்போக்கில் அவர் அங்கேயே முக்தி அடைந்தார். அவரது சீடர் பெரியசாமி இம்மலையில் பலருக்கு தியானம்,யோகா போன்றவற்றைக் கற்பித்துப் பின்பு இங்கேயே முக்தி அடைந்தார்.

தற்போது உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பலர் இங்கு வந்து யோகா தியாப் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். இந்த மலையில் குழந்தை வேலப்பருக்குக் கோயில் உள்ளது. பழநி மலையைப் போல் இங்கும் இடும்பனுக்கு தனிக் கோயில் உள்ளது. மலை அடிவாரத்தில் மற்றும் மலை உச்சியில் உச்சிப் பிள்ளையார் கோயில் உள்ளது.

இங்குள்ள தூபத்தில் ஆடி அமாவாசை அன்று ஏற்றப்படும் தீபம் காற்று பலமாக வீசினாலும் அணையாதவாறு அமைக்கப்பட்டுள்ளது. இம்மலையில் வள்ளலார் சன்மார்க்க சங்க மடமும் உள்ளது. கூன் பாண்டியன் காலத்தில் விரட்டியடிக்கப்பட்ட சமண முனிவர்கள் தப்பித்து, இங்கு வந்து தங்கி வாழ்ந்துள்ளனர். அவர்கள் பயன்படுத்திய கல் படுக்கைகள் இங்கு உள்ளன இதற்குச் சான்றாக திரவுபதி அம்மன் கோயிலின் வெளிப்புறத்தில் மேல் பகுதியில் பதினாறு சமண முனிவர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சிலைகளின் கீழ் இச்சிலை செய்து வைத்துள்ளவர்களின் பெயர்கள் வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.16 சமண முனிவர்களும்’அயிரை மலைத் தேவர்’ என்று அழைக்கப்பட்டனர்.இதுவே அக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள மலைக்கான’வரலாறு’.

வரலாறும்,கதையும் :

கண்ணுக்குப் புலப்படுகிற சான்றுகளையும்,கண்ணால் பார்க்கப்படாமல் நம்பிக்கைகளாக வழங்கப்படும் கதைகளையும் கலந்து ‘சொல்ல’ ஆரம்பித்து பின்னர் இரண்டும் ஊடு கலந்து மலையின் வரலாறு ஆகிவிட்டிருக்கிறது. இந்தக் கட்டுரையும் அப்படியே.இது இக்கட்டுரையின் போக்கு மட்டுமல்ல, நவீன வரலாற்றியலின் போக்காகவும் இருக்கிறது. அதற்கான உதாரணமே மேலேயுள்ள கட்டுரை. செய்தி வழங்குகிறோம் என்கிற பொருளில் எழுதப்பட்டுப் பரவுவதால் இந்த’வரலாற்றின்’ உள்மெய்(உண்மை) என்ன என்று நாம் விவாதிக்க வேண்டியுள்ளது.

மலைக்கான’வரலாறு’ இரண்டாக இருப்பதைப் பார்க்கிறோம். மலையில் குகைகளும், இரண்டு சுனைகளும் உள்ளன. இரண்டு சுனைகளும் சூரிய புஷ்கரணி,சந்திர புஷ்கரணி என்றழைக்கப்

படுகின்றன. மலையில் கல் படுக்கைகளும் உள்ளன. குழந்தை வேலப்பர் கோயிலும் உள்ளது. 16 சமண முனிவர்களுக்கான உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சிலைகளின் கீழே வட்டெழுத்தில் பெயர்கள் உள்ளன. மொத்தத்தில் மலையில் கண்ணுக்குப் புலப்படும் சான்றுகள் சார்ந்து அமைந்திருப்பவை இவை மட்டுமே. எனவே இச்சான்றுகளைக் கீழ்கண்டவாறு சாராம்சப்படுத்திக்கொள்ளலாம்:

இம்மலையில் சமண முனிவர்கள் இருந்திருக்கிறார்கள், அவர்களுக்கான கல்படுக்கைகள்- உருவங்கள்- வட்டெழுத்துகள் வெட்டப்பட்டு தற்காலம் வரையிலும் இருக்கின்றன. புலப்படும் இச்சான்றுகள் தவிரஇவற்றிற்கெனக் கதைகளோ நம்பிக்கை இல்லை அல்லது வேறொன்றோடு தொடர்புபடுத்தப்பட்டு இருக்கின்றன.

இதன்படி அயிரை மலையின் வரலாற்றைச் சான்றுகள் அடிப்படையில் சொல்ல வேண்டுமானால் சமணம் சார்ந்து மட்டுமே சொல்ல முடியும். இம்மலை பற்றிக் கதை எதுவும் இருக்கக் கூடாது என்பது நம் வாதமல்ல. ஆனால், எங்கு முரண்பாடு எழுகிறதென்றால் வழங்கப்படும் கதை,வரலாற்றுச்சான்றுகள்  அடிப்படையில்  கிடைக்கும் புரிதலை அப்படியே மாற்றுகிறது, மறைக்கிறது, புதிய ஒன்றைக் கற்பிக்கிறது. இக்கற்பிதம் இதுபோன்ற ஊடகங்களின் வழியாக வெகுஜனவாசிப்புக்குப் பரவுகிறது.

பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின்போது திரௌபதியுடன் இம்மலையில் தங்கி இருந்தனர், இதன் தென்பகுதி மலையில் துரியோதனன் தங்கியிருந்தான், புவனேஸ்வரி அம்மன் தோன்றினாள்,பழனி நவபாசாண சிலையைப் போகர் இம்மலையில் தங்கியிருந்து செய்தார் என்பவை வழங்கப்பட்டுவரும் கதையில் இருக்கின்றன. இக்கதைகள் மலையை இன்றைய இந்து மத நம்பிக்கைகளோடு இணைக்கின்றன.ஆனால்,  இங்கு சமணம் போன்று சான்றுகள் அடிப்படையிலான சிலையோ சிற்பமோ கோயிலோ இன்றைய இந்து மதத்திற்கு இல்லை. திரௌபதி கோயில் கூட பிற்காலத்தில்தான் எழுப்பப்பட்டது என்பதான ஒரு குறிப்பு இக்கட்டுரையிலே சொல்லப்பட்டுள்ளது.

‘கதை’யின் ஆற்றல்:

மக்களிடம் வரலாறு என்ற பெயரில் வினைபுரிவது சான்றுகள் ஏதுமில்லா இத்தகைய கதைகளே. தொல்லியல்

ஆராய்ச்சியாளர்களுக்கு மலைக்காக வழங்கப்படும் இக்கதைகள் பற்றி எந்தக் கவலையும் இருப்பதில்லை. கிடைத்துள்ள சான்றுகள் மட்டுமே வரலாறு. ஆனால், மக்களுக்கு அச்சான்றுகள் பற்றி கவலை இல்லை. கதை மட்டுமே வரலாறு. கதை தான் சமூகத்தில் உலவுகிறது. மக்களுக்கு கதைக்கும் வரலாறுக்கும் வேறுபாடு அவசியமில்லை. அவர்களுக்குத்’தெரிகிற’ கதைதான் வரலாறு. இவ்வாறு கதைகள் வழியாகவே எல்லாமும் நடந்திருக்கின்றன.

தொடர்ந்து கதை சொல்லப்பட்டு வருவதன் மூலம் அது’வரலாறாக’ நடமாடிக்கொண்டிருக்கிறது. ஒரே கட்டுரைக்குள் தொல்லியல் தரவுகள் ஒன்றாயிருக்க, கதை அதற்கு எதிரான முடிவை வழங்குகிறது. இவ்வாறு இரண்டையும் கலந்து சொல்லும் போது மெல்ல மெல்ல அவற்றுக்குள் இருக்கும் கதை மட்டுமே மேல் எழுகிறது. பிறகு வரலாறு சார்ந்த தொல்லியல் முடிவுகளையும் கதை தரும் சித்திரத்திலிருந்தே வாசிக்கப் பழகிவிடுகிறோம்.

ஏனெனில் கதை சம்பவங்களால் பின்னப்பட்டது. அதில் கதாபாத்திரங்கள் இருக்கும், பாத்திரங்களின் நல்லது கெட்டதுக்கேற்ற உணர்ச்சிகள் இழையோடும். எனவே அவை வெகுஜன ஈர்ப்புக்கானதாகிறது. இதன்படி கதை தொடர்ந்து சொல்லப்பட்டு சொல்லப்பட்டு சமூக நினைவுக்குள் செல்கிறது. மேலும் கதை பரவும் தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. எனவேதான் கதை வரலாற்றை உருவாக்குகிறது/ வரலாறாகவும் உருவாகிறது. கதை வரலாற்று ஆதாரங்களையும் தன்னுடையதாக்குகிறது.

மூல வரலாறும், கற்பித வரலாறும்:

இங்கு வரலாறு என்பதைமூல வரலாறு, கற்பித வரலாறு என்று இரண்டாகப் பிரித்துக் கொள்ளலாம்.மூல வரலாறு சான்றுகளால் ஆனது, கற்பித வரலாறு கதைகளால் ஆனது. கற்பித வரலாறு முற்றிலும் பொய் என்பது இதன் பொருள் அல்ல மாறாக, கற்பித வரலாறு மூலத்திலிருந்து ஒரு துளியை எடுத்துக் கொள்கிறது. இவ்விடத்தில் கற்பித வரலாறு மூல வரலாற்றிலிருந்து  எடுத்துக் கொண்டிருப்பது ஒரு பெயரை. பஞ்சபாண்டவர் மலை என்கிற பெயரே அது.

பஞ்ச பாண்டவர் என்பது இன்றைய  இந்து மதத்தின் புராணமாக கருதப்படும் மகாபாரதத்தில் வரும் பாத்திரங்களின்பொதுப்பெயர்.அதன்படி இப்பெயர் இந்து மதம் சார்ந்தது. எனவே இப்பெயரால் அழைக்கப்படும் மலையை இந்து மதத்தோடு தொடர்புப்படுத்தியே புரிந்து கொள்வர். ஆனால், கதை இவ்வாறு இருந்தாலும் இங்குக் கிடைக்கும் சான்றுகள் வேறொன்றைச் சொல்கின்றன.இந்தப் பெயரைத் தவிர இந்து மரபிற்கான வேறெந்த பழைய சான்றும் அம்மலையில் இல்லை. மாறாக அவை சமண சமய சான்றுகளாக இருக்கின்றன. இதுவொரு முரண். இந்த முரணுக்கு நவீன வரலாற்றியலிடம் தீர்வில்லை. சான்றுகள் படி வரலாறு என்று சொன்னாலும் மக்கள் கதையின் அடிப்படையிலேயே வரலாறு என்பதை அர்த்தப்படுத்திக்கொள்கின்றனர் என்கிற  முரணைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது கூட நவீன வரலாற்றியலுக்குத் தெரியவில்லை.

இந்த முரணுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது பஞ்சபாண்டவர் என்கிற பெயர்தான்.இம்மலையை ஒட்டி வழங்கப்படும் இந்து புராண கதைக்கான மூலமாக இருப்பது இப்பெயர்தான். இப்பெயர் இல்லாவிட்டால் அந்தக் கதைக்கான நியாயமே கிடைத்திருக்காது. இப்பெயரின் நீட்சியிலிருந்தே அக்கதை தனக்கான தர்க்கத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தச் சிக்கல் நவீன வரலாற்றியலுக்கே இருக்கிறது. ஏனெனில் எழுத்துப் பிரதிகள் சார்ந்தே அது சான்றுகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பெயர்  தமிழகமெங்கும் வேறு வகையில் இருக்கிறது.

ஜைன சமயத்தவை என்றும்  பௌத்தத்தினுடையவை என்றும் தொல்லியல் துறையினரால் அறுதியிடப்பட்டுள்ள குகைகளைக் குறிக்க தமிழ்ப்பகுதி உள்ளூர் மக்களால் பஞ்சாண்டவர்மலை / பஞ்ச பாண்டவர் மலை என்ற பெயரே பயன்படுத்தப்படுகிறது.  இத்தகைய குகைகளில் படுக்கைகளும் அவற்றின் மேலேயோ ஓரத்திலோ சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன. சிலைகளும் கூட இருக்கின்றன. சில குகைகளில் வரி வடிவங்களும் சேர்த்து பொறிக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் ஜைன பௌத்த சமயங்களை பிரதிபலிக்கின்றன. நவீன வரலாற்றியல் இவற்றை ஏற்றிருக்கின்றன. இக்குகைகளில் பிற சமயச் சிலைகளோ சிற்பங்களோ பெரும்பாலும் இருப்பதில்லை. சில குகைகளில் மட்டும் இருக்கின்றன என்றாலும் அவை காலத்தால் பிந்தி எழுப்பப்பட்டதாக இருக்கின்றன அல்லது பிற்காலத்தில் இந்து சமயத்தினுடையதாக ஆக்கப்பட்டதாகவும் இருக்கின்றன. இதில் சமணச் சிற்பங்களைப் பிற்கால இந்து மரபு

சிலைகளாக மாற்ற முயற்சித்திருப்பதையும் பார்க்கிறோம். மதுரை திருப்பரங்குன்றம் மலைக்குப் பின்புறத்தில் உள்ள தென்பெருங்குன்றத்தில் முந்தைய சிலைகளைப் பிற்கால மரபினதாக மாற்ற முயற்சி செய்து பாதியிலே விடப்பட்டது போன்ற தோற்றத்திலிருக்கும் சிலைகளை இப்போதும் காணலாம். சில இடங்களில் குகைகளுக்கு வெளியே எழுப்பப்பட்டிருக்கும் பிற்கால சிலைகளை உள்ளே இருக்கும் சிலைகளின் வயதோடு வைத்து எண்ணுவதாகவும் மாறி இருக்கிறது.

இக்குகைகள் மக்களால் பஞ்சபாண்டவர் (பஞ்சாண்டவர்) மலை என்று அழைக்கப்படுவதை நாட்டார் வழக்காற்று அர்த்தத்தில் முக்கியமானதாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஆனால், நாட்டார் மரபு இன்றைய இந்து மரபுக்கு உகந்த பாரத புராணக்கதையையும் ஏற்றதாக இருக்கிறது. இதுவொரு முரண். இவற்றை நாம் எவ்வாறு புரிந்து கொள்வது?

பாரதம் எழுதப்பட்ட வரலாறு:

இவ்விடத்தில் பாரத புராணத்தின் வரலாற்றை ஒரு பருந்துப் பார்வையாக தொகுத்துக் கொள்ளலாம். பாரதம் இந்தியாவில் பல்வேறு பண்பாட்டோடும் தொடர்புடையதாக இருந்து பல்வேறு பண்பாட்டிலிருந்தே கிளைத்து வளர்ந்திருக்கிறது. பல்வேறு படிநிலைகளை கடந்துதான் இன்றைய வடிவத்தை பெற்றிருக்கிறது. பிந்தைய நாட்களில் இந்து மரபு ஒருமுகப்பட்ட போது அதற்குரிய பிரதியாக மாறியிருக்கிறது. அதாவது தொடக்கத்தில் கதை கேட்டுக் கதை சொல்லும் வாய்மொழி மரபிலிருந்து உருப்பெற்று வளர்ந்துள்ளது. கொஞ்சம் கொஞ்சமாகப் பரவியும் இருக்கிறது. இவ்வாறு ஏற்கனவே இருந்தவற்றிலிருந்து திருத்தி தங்கள் நலனுக்கேற்ற உருவத்தைதான் பிராமணர்கள் கொடுத்திருக்கிறார்கள். பாரதம் எழுத்துக்கு மாறிய போது வெவ்வேறு காலகட்டங்களில் மூன்று பேரால் எழுதப்பட்டிருக்கிறது. இம்முயற்சியில் கதை ஒன்றிலிருந்து இன்னொன்றாக வளர்ந்திருக்கிறது என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார். இன்றைக்கு இருக்கக்கூடிய பாரதம் மூன்றாவது நிலையில் எழுதப்பட்டதாகும்.

பல்வேறு வாய்மொழிக் கதைகளாகவும் கிளைக் கதைகளாகவும் பாரதம் இருந்து வந்தாலும் கி.பி.1200 க்கு பின்தான் இன்றைய வடிவத்தைப் பெற்றிருக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அதிலும் தென்புல வழக்கு, வடபுல வழக்கு என்கிற இரண்டு வகைகள் இருந்துள்ளன. தமிழகத்தில் நாயக்க மன்னர்களுடைய காலத்திலேயே பாரதக் கதைகளை ஒட்டிய சிற்பங்கள், சிலைகள், ஓவியங்கள், சுதைகள் உருவாக்கப்பட்டதாகத்ஹ் தெரிகிறது.சங்க இலக்கியங்களில் புறநானூறு, பெரும்பாணாற்றுப்

படை, சிறுபாணாற்றுப்படை, அகநானூறு, கலித்தொகை ஆகியவற்றில் பாரதம் பற்றிய குறிப்புகள் உண்டென்றாலும் அவற்றில் பாரதக் கதைப் பகுதிகள் இடம் பெறவில்லை.

எழுத்தில் இவ்வாறு இடம்பெற்று வந்தாலும் பாரதத்தின் பரவலாக்கம் வழக்காறுகள் வழியாகவே நடந்திருக்கிறது. ஏறக்குறைய பல்லவர் காலம் முதல்  இருந்து வந்தாலும் நாயக்கர் காலத்திலிருந்துதான் இந்தப் பரவலாக்கம் அதிகரித்தது. திரௌபதி நாடகம், அர்ஜுனன் தபசு, பொன்னருவி மசக்கை, கர்ணமோட்சம்,அல்லி அரசாணி மாலை என்று இருந்து கட்டைக்கூத்தாகவும் தெருக்கூத்தாகவும் வழங்கப்பட்டு வந்திருக்கிறது.

ஜைன-பௌத்த பாரதங்கள் :

பாரதம் உருவாக்கத்தில் இந்து மதம் தலையிடுவதற்கு முன்பே ஜைன – பௌத்த சமயங்களின் பங்கு இருந்திருக்கின்றன.

அவை வாய்மொழி வழக்காறாகவும் பரவியிருக்கின்றன. ஜைன பாரதமாக கருதப்படும் ஹரிவம்ச புராணம் கி.பி.1 ஆம் நூற்றாண்டில் முதலில் எழுதினர். அதற்குப் பிந்தைய காலங்களிலும்ப் பாரத பாத்திரங்களை மையமாக வைத்துப் பல புராணங்களை இயற்றியதாகத் தெரிகிறது. அதேபோல பெளத்த சமயத்தில் புத்தரால் போதித்துள்ள “பாரதப் பத்து என்னும் தசசீலங்கள்” குறிப்பிடப்படுகிறது. பஞ்சம், பாண்டவர் என்னும் சொற்களுக்கு இவ்விரண்டு மதங்களிலும் அழுத்தமான இடமுண்டு.

பௌத்த பாண்டவர் :

பஞ்சம் என்பது பெளத்த ஜைன சமயங்களில் ஐந்தைக் குறிக்கும். பௌத்தத்தில் பஞ்சசீலங்கள் வலியுறுத்தப்படுகின்றன. ஐவர் என்பது ஐந்து குணாம்சங்களின் மனித வடிவங்களாகும். இதில் முதலாமவரான தருமர் அமைதியானவர், கொடையாளி.இந்தத் தருமர் பாத்திரம் புத்தரோடு ஒப்பிடத்தக்கது. புத்தருக்குத் தருமர், தருமராஜன் என்ற பெயர் இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பாண்டவர் என்பதும் புத்தரைக் குறிக்கும் பெயராகும். இதைப்பற்றி அம்பேத்கரே எழுதியிருக்கிறார். அதாவது” பந்தர்பூரில் உள்ள சாமி விதோபாவின் உருவம் உண்மையில் புத்தரின் உருவம். ஆண்டவர் பாண்டுரங்கனின் பெயர் புண்டாலிக் என்பதிலிருந்து வந்தது. புண்டாலிக் என்றால் தாமரை. தாமரை பாலி மொழியில் பாண்டுரங் என்றழைக்கப்படுகிறது. ஆக பாண்டுரங்கன் புத்தரேயன்றி வேறு யாருமல்ல. புத்த மதத்தை அழித்தொழிப்பதற்குப் பிராமணர்கள் உருவாக்கிய தேவர்களையும் தேவதைகளையும் வணங்கி வழிபட்ட சாமானிய மக்களின் தடுமாற்றப் போக்கே இந்தியாவிலிருந்து புத்த மதம் மறைந்து போனதற்கு அடிப்படைக் காரணம்”- புனா தேஹூ சாலையில் கட்டப்பட்டிருந்த புத்த விகாரில் புத்தர் உருவத்தைத் திறந்து வைத்து (25.12. 1954) அம்பேத்கர் பேசியது இது

பஞ்சப் பரமேட்டிகள்:

ஜைனத்தில் பஞ்சப் பரமேட்டிகள் என்ற மரபு உண்டு. வழிபாட்டுக்கு உரியவர்கள் என்பது இதன் பொருள். அருகர், சித்தர், ஆச்சாரியார், ஆசிரியர்,சாதுக்கள் ஆகியோரே பஞ்சப் பரமேட்டிகள். இவர்களும் இவர்களில் சிலரும் இது போன்ற மலைகளில் வாழ்ந்திருப்பர்.

புத்தரால் போதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பாரதப்பத்து என்னும் தசசீலங்கள் வடமேரு என்னும் மலையில் பிம்பிசார மகாராஜனால் பதிப்பிக்கப்பட்டது என்பது நம்பிக்கை. இதில் இன்னொரு செய்தியும் இருக்கிறது. அதாவது மலைகளோடு பாரதத்தையும் அதன் காரணமாகப் பஞ்ச பாண்டவம் என்பதையும் பௌத்த -ஜைன  மரபுகள் தொடர்புபடுத்தும் அளவுக்குப் பாரதக்கதைக்கு  தொடர்புகிடைக்கவில்லை.

எனவே, இன்றைக்கு இம்மலைகளைக் குறிப்பிட பஞ்சபாண்டவர் என்ற பெயர் வழங்கப்பட்டாலும்  இந்து மதப் பெயர்களோ ஐவர் சிலைகளோ சிற்பமோ இல்லாமல் இருக்கின்றன. பிற்காலத்தில் பாரதம் இந்து மரபுக்குரியதாக ஆக்கப்படுவதற்கு முன்பிருந்தே சமண பௌத்த மரபை ஒட்டி வழங்கப்பட்டு வந்த பஞ்சபாண்டவர் என்ற பெயர் இந்து மரபுக்குரியதுபோல் ஆக்கப்பட்டது. மாமல்லபுரத்திலும் புகழ்பெற்ற ஐந்து ரதங்கள் பஞ்ச பாண்டவர் ரதங்கள் என்று கூறப்படுகின்றன.ஐந்து ரதங்களைப் பஞ்சம் என்ற பொருளில் வழங்கத் தொடங்கியே பஞ்ச பாண்டவ ரதங்கள் என்றாகியிருக்கின்றன. மற்றபடி இந்த ரதங்களுக்குப் பாரத பாத்திரங்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை. பஞ்ச பாண்டவர்களுக்குரிய கோயில்களோ, சிற்பங்களோ ரதங்களில் இல்லை. இதுதான் தமிழகமெங்கும் பஞ்ச பாண்டவர் மலை என்ற பெயர்களில் அழைக்கப்படும் குகைகளின் நிலை. ஆனால், சமண மலைகளில் எந்த சான்றுகளும் இல்லாவிட்டாலும் பிற்கால இந்து பாரதக் கதையை இணைத்தது மூலம் இந்த வரலாற்றையே தனதாக்கியிருக்கிறது வைதீகம்.அதற்கு ஒரே மாதிரியிருக்கும் பஞ்ச பாண்டவர் என்ற பெயரைப் பயன்படுத்தியிருக்கிறது. அப்பெயரைத் தனதாக்கியதன் மூலம் அப்பெயரோடு முந்தியிருந்தே தொடர்புடையதாக இருந்து வந்த அடையாளங்களையும் தனதாக்கியிருக்கிறது. அதற்காக அப்பெயரிலிருந்தே ஒரு கதையை உருவாக்கியிருக்கிறது. பொதுவாக ஒரிடத்தில் ஒரு சான்று இருக்கும். அச்சான்றை வைத்தே அதையொட்டிய கதைகளும் எழுகின்றன என்று கருதுகிறோம். ஆனால், இந்தக் கதையாடல் வரிசையில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. உருவாக்கப்படும் கதைக்கேற்ப சான்றுகளை பொருத்திக்கொள்ளும் முறையே வைதீக போக்காக இருந்து வந்திருக்கிறது.இவ்விடத்தில் நவீன வரலாற்றியலும் தவறி இருப்பதைப் பார்க்கிறோம்.பஞ்சபாண்டவர் என்ற பெயரை இந்து மரபென்று கருதி மெளனம் காத்து வருகிறது. இது மட்டுமல்லாமல் கதைக்கு அடிபணிந்து தன்னுடைய சான்றுகளை அதற்கேற்ப குறுக்கித் தருகிறது. அதாவது இத்தகைய கதைகள் கொண்ட அயிரை மலையில் சமணச் சிற்பங்கள் இருப்பதைப் பற்றிக் கூன் பாண்டியன் காலத்தில் விரட்டியடிக்கப்பட்ட சமண முனிவர்கள் தப்பித்து, இங்கு வந்து தங்கியுள்ளனர் என்ற சமாதானம் வழங்கப்படுவதை இதற்கான சான்றாகச் கூறலாம். இதன்படி அம்மலை முதலிருந்தே இந்து மரபுக்குரியதாக இருந்தது போலவும், அதில் ஒர் அசாதாரண சூழலை ஒட்டி தஞ்சமாகச் சென்று சேர்ந்தவர்கள் சமண முனிவர்கள் என்பது போலவும் அர்த்தம் உருவாகிவிடுவதைக் கவனிக்கலாம்.ஏனெனில் அது பிரதிகளில் இருந்து உருவானது.

அயிரையும் ஐந்தும் :

இன்னொன்று இந்ப்த பழநி பஞ்சபாண்டவர் மலைக்கு ஐவர் மலை என்ற பெயர் வழங்கப்படுவதாகவும் இக்கட்டுரை கூறியிருக்கிறது. ஆனால், இம்மலையிலுள்ள கல்வெட்டிலேயே  இம்மலையின் பெயர் அயிரை மலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மொழி முதன்மைவாதம் காரணமாக இப்பெயரின் வேராக ஐந்துதான் இருந்திருக்க முடியும் என்று கருதி ஐவர் மலை என்பதாக நவீன வரலாறு கூறுகிறது.

தூய தமிழில் அழைக்கப்படுவதால் மத நீக்கம் (ஜைன- பெளத்தம்) செய்யப்பட்ட பெயர் போலக் காணப்பட்டாலும், பஞ்சபாண்டவர் என்பதையே போலச் செய்திருக்கிறது(அயிரை – ஐவர்). இம்மலையைச் சமணமலை என்று ஒத்துக்கொள்ளும் ஜெயமோகன் அருகர் மலையே மருவி ஐவர் மலையாக ஆகியிருக்கலாம் என்கிறார். அருகர் என்பதைச் சமணமலை என்ற வகையில் மறுக்க முடியாது என்றாலும் அயிரை மலை என்பதுதான் சரி என்று தோன்றுகிறது. அடிப்படையில் அயிரை என்பது பாலி மொழிச் சொல்.ayira, ayiraka என்கிற பாலி மொழிச்சொற்களுக்குGentleman, Lord, Master, Noble போன்ற அர்த்தங்கள் உண்டு. இவையாவும் ஏதோவொரு விதத்தில் மேலான – சிறந்த – தெய்வத் தன்மை கொண்டவன் என்னும் அர்த்தங்களில்தாம் அமைந்துள்ளன. இந்த மலையில் வாழ்ந்த அல்லது அடக்கம் செய்யப்பட்ட துறவியர்களை இப்பெயர்கள் குறித்திருக்கலாம். இம்மலையிலுள்ள துறவி ஒருவரின் பெயர் அருகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அருகர் என்பது தீர்த்தங்கரரையும் புத்தரையும் குறிக்கும் பெயர் என்பது பலரும் அறிந்ததே. தமிழிலும் அயிர என்பதில் இருக்கக்கூடிய அய்(ஐ) என்றால் தலைவன், வழிகாட்டி என்றுதான் பொருள்.

மலையின் பிற அடையாளங்கள்:

இம்மலையில் இருப்பதாக்க் கூறப்படும் வேலப்பர், பாத விநாயகர் போன்ற தெய்வங்களும் பிற்காலத்தில் இந்து மரபோடு சேர்க்கப்பட்ட மரபுகளாகவே இருக்கின்றன. வேலப்பர் என்பது பழங்குடி மரபு. அது பின்னாளைய முருகமரபோடு சேர்க்கப்பட்டது. சமணக் குகைகள் உள்ள மலைகள் பலவற்றிலும் முருகன் இருக்கிறார். உண்மையில் இம்மலைகளிலுள்ள முருகன் தீர்த்தங்கரர் மரபு. அது முருகன் என்னும் பிற்கால இந்து மரபிலான வடிவத்தோடு சேர்க்கப்பட்டுத் தீர்த்தங்கர மரபு மறக்கடிக்கப்பட்டது என்பது தமிழில் ஆராயப்படாத வரலாறு. அருகிலுள்ள பழநிமலை முருகனே ஆண்டி கோலத்தில் நிற்கும் தீர்த்தங்கரரே ஆவார். இதேபோல, பாத வழிபாடு பௌத்த ஜைன மரபினதாகும். இது போன்ற சமணக் குகைகள் கொண்ட மலைகளில் பாதங்கள் வெட்டி வைக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகின்றன.அந்த மரபை நினைவுப்படுத்தும் பெயர்தாம் இம்மலையிலுள்ள பாத விநாயகர் ஆகும். மலையில் சிற்பமாக வெட்டப்பட்டுள்ள16 தீர்த்தங்கரர்களுள்23 ஆவது தீர்த்தங்கரர் பார்ச்சுவநாதர் தொடங்கி அவ்வநந்திக் குறத்தியார் என்ற பெண் துறவி வரை அடங்குவர் என்கிறது தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அறிவிப்புப்பலகை. பார்ச்சுவநாதருக்கே அம்பிகா, பத்மாவதி, ஜ்வாலாமாலினி ஆகிய தர்மதேவிகள் உண்டு. இவர்களை ஒட்டிய வழிபாடும் இங்கிருந்து, அதுவே திரெளபதி வழிபாடாக மாறியிருக்கலாம். இந்தச் சமணக் குடைவரையில் பிற்காலத்தில் திரெளபதி அம்மன் மாற்றம் வந்திருக்கலாம் என்று ஜெயமோகனும் கூறுகிறார். அதேபோல துரியாதீத மலையே துரியோதனன் மலை என்கிற பாரதப் பெயரோடு இணைக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

எனில், இந்தக் கட்டுரை சான்றுகள் அடிப்படையில் அமைவனவற்றையே உண்மை (வரலாறு) என்றும்,கதையாக இருந்தால் பொய் என்றும் சொல்லுவதாகக் கொள்ளலாமா? என்கிற கேள்வி எழலாம். தூய்மையான எதிர்மறை என்றுஎதுவுமில்லை. மாறாக, கதை என்பதன் தன்மையைப் புரிந்துகொள்ளவும், அது சான்றுகள் அடிப்படையிலான வரலாற்றை உறிஞ்சும் தன்மை கொண்டது என்பதை விளக்குவதற்கும் சொல்லப்பட்டது. முற்றான புனைவு சாத்தியமில்லை. வரலாற்றின் எந்தப் புள்ளியை எடுத்துக்கொண்டு புனைகிறது என்பதை அறிந்து கொண்டு எதிர்கொள்ள வேண்டும். மேலும், நவீன வரலாற்றியலின் பிரதி வழிப்பட்ட சான்றுகளே இத்தகைய சிக்கல்களுக்கு காரணமாகின்றன என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

stalinrajangam@gmail.com