ருமுறை அன்புமணி, தன் பக்கத்தில் லைவ் வீடியோ ஒன்றைப் போட்டார். கார் ஓட்டிக்கொண்டே ஆடியோவில், பாகுபலி படத்தில் வரும், பாகுபலியாகிய நான், மகிழ்மதியின் அரசனாக என்று ஓடும். என் மனைவியும், மகளும்கூட எப்பப்பா நீங்க இதுபோலவே பதவி ஏத்துப்பீங்க என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள் என்றுவிட்டு அவரே அதற்காக சிரித்தும் கொண்டார், கொஞ்சம் பாவமாகத்தான் இருந்தது !

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவுக்கெல்லாம் கோடிக்கணக்கில் வாக்குகள் கிட்டுவதாகவும், தனக்கும் அப்படி மக்கள் வாக்களித்திருந்தால் இப்போது நான் தமிழக முதல்வராகியிருப்பேன் என்று புலம்பினார். ஓர் ஆள், ஒரே நாளில் ஐம்பது வாக்குகளென்று குறிப்பிட்ட டைம் வரை தொடர்ந்து போடலாம் என்றிருக்கும் அந்த வாக்கு விளையாட்டை இவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்கிறாரே, இவரா நடுவண் அரசில் அமைச்சராகவெல்லாம் இருந்தார் ? என்று முன்பைவிட இன்னும் பரிதாபகரமாக அவரைப் பார்க்க நேர்ந்தது !

ஆனால், உச்ச பரிதாபகரமாக நான் எதைப் பார்த்தேன் என்றால், அவர் சமீபத்தில் நாடாளுமன்ற மேலவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபின், அவருக்கு அவருடைய கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழாவின் போதுதான். “கடைசியில் ஒருவழியாக நான் எம்.பி.யாகிவிட்டேன்” என்று அவர் பேச்சைத் தொடங்கியவுடன், ஆர்ப்பரித்து மேடையிலிருந்தோரும், கீழிருந்தோரும் உற்சாகத்துடன் கைதட்ட, “எதுக்கு இந்தக் கைத்தட்டு? இப்படி எம்.பி.ஆனதற்கா?” என்று நா தழுதழுக்க அவர் கேட்க, கூட்டம் கப் சிப்பென்றானது!

ஆமாம். அந்தளவு மிக மோசமாக அவர் கிண்டல் செய்யப்பட்டிருந்தார். காரணம், அவர் திடுக்கென்று அதிமுக கூட்டணிக்குப் போனதுதான். அதிமுக கூட்டணியில் இருந்தது பாரதிய ஜனதா. பாரதிய ஜனதா கட்சியைவிட அவர் மிக மோசமாக விமர்சனம் செய்து கொண்டிருந்தது மாநிலத்தை ஆண்டுகொண்டிருந்த அதிமுகவைத்தான். ஜெயலலிதா காரின் டயர் நக்கிகள் என்று அதிமுகவின் அத்தனை அமைச்சர்களையும் மோசமான சொல்லாடல்களால் விமர்சித்ததோடு நில்லாமல், அவர்களுடைய ஒவ்வொரு துறை ஊழல்களையும் பட்டியலிட்டு அதை ஆளுநரிடம் அளித்தார். உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார். ஆளுங்கட்சி கொண்டுவந்த எந்தவொரு திட்டத்தையும் கடுமையாக எதிர்த்தார். முக்கியமாக, சென்னை – சேலம் எட்டுவழிச் சாலை திட்டம். அந்தச் சாலைத் திட்டத்துக்கும் தடை கோரி நீதிமன்றத்துக்கு சென்றவர்தான். அந்த மனு நிலுவையில் இருக்கும்போதே அவர் அதிமுக – பாஜக கூட்டணியில் போய் இணைந்ததை பலராலும் சீரணிக்க இயலவில்லை!

அதையொட்டி நிகழ்ந்த பத்திரிகையாளர் சந்திப்பில், வீசப்பட்ட கேள்விக்கணைகளை எதிர்கொள்ள முடியாமல் அவர் தடுமாறிப் போனார். அவ்வளவு வலுவான கூட்டணி, இருபக்கமும் ஆளுங்கட்சிகள் இருந்தும், தேர்தல் ஆணையமே இவர்கள் பக்கமிருந்தும், மிக மிக மோசமாக தோற்றுப்போனார். மக்கள் அறவே புறக்கணித்ததற்குப் பொறுப்பேற்று அவர் கட்சிப் பதவியை விட்டு விலகியிருந்திருக்க வேண்டும். மாறாக கூட்டணி ஒப்பந்தப்படி தங்களுக்கு ஒதுக்குவதாகச் சொன்ன நாடாளுமன்ற மேலவை பதவியைத் தனக்கே தரும்படி கோரினார். அதிமுகவும் விட்டுக் கொடுத்தது !

2016இல், நான்தான் அடுத்த முதல்வராக்கும், முதல் கையெழுத்து, மாற்றம் முன்னேற்றம் என்றெல்லாம் வன்னிய சமூகத்து ஆட்களை கனவு காணச்செய்து, அதை நிராசையாக்கினார். சட்டமன்றத் தேர்தலில் மிக மோசமாகத் தோற்றார். நாடாளுமன்றத் தேர்தலிலும் தோற்றார். என்னமோ, அவர்கள் கட்சியில் வேறுஆட்களே இல்லாதது போல, ராஜ்யசபா உறுப்பினர் பதவியையும் பிடுங்கி தனக்கே வைத்துக்கொண்டார். இவ்வளவு பதவி மோகம் உள்ள ஆள், அந்தப் பதவிக்கு சற்றேனும் நியாயம் செய்திருக்க வேண்டாமா ?

25/12/2019 புதன்கிழமையன்று சென்னை தியாகராய நகரிலிருக்கும், இந்தியாவின் பிரபல நாளிதழான டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலகத்தினுள், திரு.வினோபா என்பவர் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட பாமகவினர் திமுதிமுவென நுழைந்து, அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்களை கடுமையாகத் தாக்க ஆரம்பித்தனர். நாற்காலிகள், கண்ணாடி தடுப்புகள், உடைக்கப்படுகின்றன. கணினிகளைப் பிடுங்கி தரையில் எறிந்திருக்கின்றனர், உள்ளே வேலை செய்துகொண்டிருந்த அனைத்துப் பணியாளர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றனர். ஏன்?

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களிலேயே மிக மோசமான வருகைப் பதிவேடு கொண்டவராக இருப்பவர் அன்புமணி ராமதாஸ்தான் என்கிற சான்றுப்பூர்வமான தகவலை, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ், கடந்த டிசம்பர் 24ஆம் தேதி பிரசுரித்திருந்தது!

நாடாளுமன்றம் கூடிய நாட்களில் வெறுமனே 15 விழுக்காடு நாட்கள் மட்டுமே அவர் அவைக்கு வந்திருக்கிறார். வந்தவர் ஒரு கேள்வியும் கேட்கவில்லை. ஒரு விவாதத்திலும் கலந்து கொள்ளவில்லை. நடைபெற்ற இரு விவாதக் கூட்டங்களிலும் அமைதியான பார்வையாளராக உட்கார்ந்து சென்றிருக்கிறார். அதிலும், குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாமீதான வாக்கெடுப்பில், அதற்கு ஆதரவாக வாக்களிக்காமல், எதிர்த்து வாக்களித்து, அந்த மசோதா புதிய திருத்தங்களுக்குச் செல்லாமல், அப்படியே நிறைவேறச் செய்ததன்மூலம் இஸ்லாமியர்களுக்கும், ஈழத் தமிழ் அகதிகளுக்கும் துரோகமிழைத்தார். இதற்காக நாடாளுமன்ற மேலவைக்கு வந்ததன்மூலம், ஓரிரு விழுக்காடு அவருடைய வருகைப் பதிவு கூடிவிட்டது, அவ்வளவுதான் இதன் பயன்!

இந்த அடையாளத்தைப் பெறவா அவர் இவ்வளவு போராடி, சூடுசுரணையற்று, அதிமுகவிடம் பதவியை கோரிப் பெற்றார்? ரெக்கார்டுகளுடன் இருக்கும் ஆதாரபூர்வ தகவல்களைச் சொல்லியதற்காக பத்திரிகைகளைத் தாக்கப் போகலாமா ? யார் உங்களுக்கு இவ்வளவு துணிவைக் கொடுத்தது மிஸ்டர் அன்புமணி?

2014 நாடாளுமன்றத் தேர்தலில், ஜெயலலிதா ஒட்டுமொத்தமாக 37 இடங்களை ஜெயித்தார் என நமக்குத் தெரியும். ஆனால் மீதமிருந்த அந்த இரண்டு தொகுதிகளை ஒரு கூட்டணி ஜெயித்தது. ஆமாம், போனமுறையும் பாமக, பாஜகவுடன்தான் கூட்டணி வைத்தது. அப்போது இவர்களுடன் மதிமுக, தேமுதிகவும் இருந்தது. அந்தக் கூட்டணி அபரிமிதமாக 20 விழுக்காடு வரை வாக்குகளைப் பெற்றது. ஆனால் ஒருபுறம் பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணனும், இன்னொருபுறம் அன்புமணி ராமதாசும்தான் வென்றிருந்தனர். அப்போது இந்த அலையில் திமுக முற்றிலுமாக காணாமல்போயிருந்தது!

எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால், இப்போது மட்டுமல்ல, அந்த 2014 – 2019 களிலும், மிக மிக மோசமான வருகைப் பதிவைக் கொண்டவர்கள் யார் யார் தெரியுமா? இதே அன்புமணியும், பொன்.ராதாகிருஷ்ணனும்தான்! வெட்கக்கேடு என்னவெனில் பொன்.ராதாகிருஷ்ணன் இணை அமைச்சராக வேறு இருந்தார். ஆனால் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 312 அமர்வுகளில் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டது வெறும் ஏழு அமர்வுகளில்தான், அதில் ஒரு கேள்வியையும் அவர் கேட்டதில்லை, பதிலும் அளித்ததில்லை. சரி, நம்மாள் என்ன பண்ணார்ன்னு பார்ப்போம் !

மாறாக, 312 அமர்வுகளில் 148 முறை அன்புமணி கலந்துகொண்டிருக்கிறார். அதில் 51 முறை அவர் கேள்விகளையும் எழுப்பியிருக்கிறார். ஆனால் அவருடைய வருகைப் பதிவேடு 50 விழுக்காட்டைக் கூட தொடவில்லை. தமிழக உறுப்பினர்களில் மிக மோசமான வருகைப் பதிவாளராக மூன்றாவது இடத்தைப் பெற்றார். இந்தக் காலகட்டத்தில் தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் சுப்ரியே சுலே 1181 முறை கேள்விகளை எழுப்பியிருக்கிறார். ஒரு வாரிசோடு ஒப்பிட இன்னொரு வாரிசுதான் நமக்குத் தேவைப்படுகிறது. ஆனால் சரத்பவாருக்கு வாய்த்தது, மருத்துவர் அய்யாவுக்கு வாய்க்கவில்லை என்பதுதான் உண்மை !

நம்ம அன்புமணி ராமதாஸ் சார், முன்பெல்லாம் ஒரு பழக்கத்துக்கு அடிமையாயிருந்தார். யாரைப் பார்த்தாலும் விவாதத்துக்கு வா, விவாதத்துக்கு வா என்றழைப்பார். அவர்கள் பதிலளிக்கிறார்களோ இல்லையோ, இவராக ஒரு நாளையும், இடத்தையும் தேர்ந்தெடுப்பார். அங்கு மேடை, நாற்காலிகள், ஒலிபெருக்கி சகிதமாகப் போய் அமர்ந்து கொள்வார். இவர் யாரைத் தர்க்கத்துக்கு அழைத்தாரோ அவர் வீடு பூட்டப்பட்டிருக்கும். அமெரிக்காவிலோ, லண்டனிலோ அவர் இருப்பார். இவரோ அரைமணி நேரம் காத்திருந்துவிட்டுக் கிளம்பிப் போவார். என்ன வியப்பு என்றால், கேள்விகள் கேட்கவும், விவாதத்திற்கும் இவ்வளவு வேட்கையுடன் இருக்கும் மனிதர், இதே வேலையைச் செய்ய கொடுக்கப்பட்டிருக்கும் பதவியை எவ்வளவு அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்? தன் மக்களுக்காக எவ்வளவு கேள்விகளை இவர் நாடாளுமன்றத்தில் எழுப்பியிருக்க முடியும்? எவ்வளவு தனி மசோதாக்களை இவர் கொண்டுவந்து அதை விவாதப் பொருளாக்கியிருக்க முடியும்?

‘யாருமில்லாத கடைல யாருக்குய்யா டீ ஆத்துற’ என்பது போன்ற வீம்புக்கெல்லாம் இனி மரியாதை கிட்டுமா? இதனாலேயே இவர்கள் இம்முறை மக்களால் நிராகரிக்கப்பட்டனர். அப்போதும் புத்தி வராவிடில் என்ன செய்வது?

இதோ, நம்ம அன்புமணி சார் தோற்று தர்மபுரி தொகுதியின் திமுக நாடாளுமன்ற உறுப்பினராகியிருக்கும் மருத்துவர் செந்தில்குமார் அவர்களின் வருகைப் பதிவேடு விழுக்காடு என்ன தெரியுமா? 100%. அவைக்கு முற்றிலும் புதியவரான அவர் அனைத்து விவாதங்களிலும் கலந்துகொண்டிருக்கிறார். தொடர்ந்து, தன் தொகுதி மேம்பாடுகளுக்காகவும், நாட்டின் பிற அவலங்களுக்காகவும் குரல் கொடுத்திருக்கிறார், பல கேள்விகளை எழுப்பி, பலமுறை சிறப்பாக உரையாற்றியிருக்கிறார்!

ஒழுக்கம் விழுப்பம் தரலாம் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்!

திறமையிருப்பவன் மந்திரியாகலாம்

உழைப்பிருப்பவன் தளபதியாகலாம்

திறமையும் உழைப்புமிருப்பவன்தான் மன்னனாக முடியும்!