அண்மையில் மூடப்படும் அரசு பள்ளிகள் நூலகங்களாக மாற்றப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பு கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது. ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் கல்வியும், மருத்துவமும் எந்தவகையிலும் சீரழிந்திடுவதை அனுமதிக்க முடியாது. துரதிர்ஷ்டவசமாகத் தமிழக இளைய தலைமுறையினரின் எதிர்காலம், கல்விக் கொள்ளையர்களிடமும் ஊழல் அரசியல்வாதிகளிடமும் சிக்கியிருப்பது, கொடூரமானது. பள்ளி ஆசிரியர், கல்லூரிப் பேராசிரியர் என எந்தவொரு பணிக்கும் பல லட்சங்களில் தொடங்கிய வசூல் கொள்ளையானது, துணைவேந்தர் நியமனத்தில் பல கோடிகளில் முடிந்திட்ட சூழலை உருவாக்கிய அதிமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ள கல்விச் சீரழிவைச் சீராக்கிட, இன்னும் சில பத்தாண்டுகள் ஆகும். கல்வி என்பது சேவை என்ற புரிதல் அற்றவர்கள், கல்விக்கூடங்களில் நுழைந்த காரணத்தினால், முனைவர் பட்டம் பெறுவதற்குக்கூட ஐந்தாறு லட்சங்கள் தர வேண்டியிருக்கிறது. அரசுப் பள்ளியில் இடமாறுதலுக்காகக் கையில் குறைந்தபட்சம் ஏழு லட்சங்களுடன் கோட்டையில் காத்திருக்கிற ஆசிரியர்கள்; நல்லாசிரியர் விருது வேண்டுமென்றால் சில பத்தாயிரம் ரூபாய்கள் தரவேண்டுமென்ற சூழல் எனப் பணத்தை அள்ளிச் சுருட்டுகிற நிலையை உருவாக்கியுள்ள கல்வித் துறையில் எதுவும் ரகசியம் இல்லை. இத்தகு சூழலில் அண்மையில் அமைச்சர் செங்கோட்டையன், “தமிழகத்தில் 1248 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு நூலகங்களாக மாற்றப்படும்.” எனச் சொல்லியிருந்த அறிக்கையை வாசித்தவுடன் அதிர்ந்து போனேன்.

கல்வி என்ற சொல்லின் பின்புலத்தில் சமூகத்தின் ஆன்மாவும் விழிப்புணர்வும் பொதிந்திருக்கின்றன. ஆங்கிலேயரின் காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலையடைந்த இந்தியா, எதிர்கொண்ட சவால்களில் முக்கியமானது, கல்வியைப் போதித்தல். ஒரு நாட்டின் வளமான எதிர்காலம் என்பது இளைய தலைமுறையினரின் மரபான கற்றலில் அடங்கி இருக்கிறது. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற மௌலானா அபுல்கலாம் ஆசாத் தொடங்கிய கல்விப் பணிகள், ஒப்பீடு அற்றவை. அவர், உயர் கல்வியை மேம்படுத்துவதற்காகப் பல்கலைக்கழக மான்யக் குழு தொடங்கியதுடன், ஏகப்பட்ட கமிஷன்களை நிறுவியது வரலாறு. இன்னொருபுறம் சாகித்ய அகாதெமி, லலித் கலா அகாதெமி எனப் பண்பாடு சார்ந்து நிறுவிய அமைப்புகளின் சுயேச்சையான பணிகளுக்கு வித்திட்டவர் ஆசாத். கல்வி என்பது வகுப்பறை மட்டுமின்றி நூலகம் சார்ந்தது என்ற புரிதலுடன் செயல்பட்ட ஆசாத்தின் பணிகள், இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்கன. ஈரான் நாட்டில் சுல்தான்களின் குடும்பப் பின்புலத்தில் இருந்து இந்தியாவிற்கு வந்த ஆசாத், நாட்டுப் பிரிவினையின்போது, பாகிஸ்தானுக்குச் செல்லாமல் இந்தியாவின் கல்வி வளர்ச்சியில் அமைச்சராக ஆற்றிய பணிகள், கவனத்திற்குரியன. நவீன இந்தியாவில் கல்வி மட்டுமின்றி, இலக்கியம், பண்பாடு வளர்ச்சியை திட்டமிட்டுச் செயலாற்றிய ஆசாத்தின் செயல்களைச் சிதிலமாக்கி, கல்வியை மாஃபியாக்கள், கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்களமாக மாற்றுகிற பி.ஜே.பி. அரசினுக்குக் கல்வி விழுமியம் குறித்து அக்கறை எதுவும் இல்லை. காவிகளின் காலடியில் வீழ்ந்து கிடக்கிற தமிழக அதிமுக ஆட்சியில் காவு வாங்கப்படுகிறது கல்வி.

1953ஆம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற காமராசரும் அவருடைய அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியனும், பள்ளிக் கல்வி இயக்குநராக இருந்த நெ.து.சுந்தரவடிவேலும் செய்த கல்விப் பணிகள், இந்தியாவிற்கே முன்னோடியாக விளங்கின. பள்ளிக் கல்வியில் காமராசர் செய்த சாதனைகளைத் தொடர்ந்து உயர்கல்வியில் 1969 இல் முதலமைச்சரான கலைஞர் மு. கருணாநிதி செய்த கல்விப் பணிகள், வரலாற்றுச் சிறப்புடையன. அன்றைய கல்வி அமைச்சராக இருந்த பேராசிரியர் அன்பழகன், தமிழகத்தின் கல்வி மேம்பாட்டில் செய்த செயல்பாடுகள் காரணமாக இன்றைய தலைமுறையினர் உயர்நிலை அடைந்துள்ளனர். தங்கம் தென்னரசு, கல்வி அமைச்சராக இருந்தபோது, கல்வியிலும் பொது நூலக வளர்ச்சியிலும் தமிழகம் தனித்து விளங்கியது. இன்று டைட்டல் பார்க் தொடங்கி, மென்பொருள் நிறுவனங்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அடைந்துள்ள பொருளாதார வளர்ச்சிக்குப் பின்புலமாக முன்னர் ஆட்சியில் இருந்த திமுக அரசாங்கத்தின் செயல்பாடுகள் உள்ளன. தமிழகம், இன்று கல்வியில் அடைந்துள்ள பிரமாண்டமான வளர்ச்சியின் பின்னர் பொதிந்திருக்கிற அரசின் முயற்சிகள், சாதரணமானவை அல்ல. கல்வி குறித்து சங்க இலக்கியம் தொடங்கி திருக்குறள், பழமொழி போன்ற நீதி நூல்களில் சொல்லியிருக்கிற கருத்துகள் கவனத்திற்குரியன.

வரலாற்றில் நாளந்தா பல்கலைக்கழகம் தொடங்கியபோது, துறவியரின் சேமிப்பில் இருந்த ஆவணங்கள் நூலகமாகின. தமிழகத்தைப் பொருத்தவரையில் ஜைனர்களின் அடைப்படையான தானங்களில் ஒன்றான ‘கல்விதானம்’ காரணமாகக் கல்வி பரவலானதுடன், ஓலைச்சுவடிகள் சேர்த்து வைக்கப்பட்டிருந்த இடம் பண்டாரம் எனப்பட்டது. மனித இருப்பில் நூல்கள் வகிக்கும் இடம், மகத்தானது. வரலாற்றை மாற்றக்கூடிய ஆற்றல் நூலகத்தில் சேமிக்கப்பட்டுள்ள புத்தகங்களுக்கு உண்டு. வாசகர்கள் விரும்புகிற புத்தகங்களைக் கண்டறிந்திட உதவுகிற நூலகர்களின் ஆற்றல் பன்முகத்தன்மையுடையது. அறிவு என்ற விருட்சத்தின் கிளைகள் எப்படியெல்லாம் கிளைகள் பரப்பி, நாள்தோறும் துளிர்க்கின்ற புதிய துறைகளைக் கண்டறிந்திட வேண்டிய நுட்பமான பணி, நூலகர்களுடையது. அறிவியல் ஆய்வுக்கூடங்களில் நூலகர்களின் பணிநிலை, அறிவியலாளர் என்று குறிப்பிடப்படுகிறது. உயர்கல்வியில் பேராசிரியருக்கு இணையாக நூலகர் கருதப்படுவதுடன், நூலகவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றிருப்பது, அவசியம். கல்வி அமைச்சரின் கூற்றினுக்குப் பின்னால் பொதிந்திருக்கிற அரசியல் கவனத்திற்குரியது. சாராய வியாபாரிகளும், ஊழல் அரசியல்வாதிகளின் பினாமிகளும், மாஃபியாக்களும் தொடங்கியிருக்கிற கல்வி நிறுவனங்கள் மூலம் கொள்ளையடிக்கிறவர்களின் நலன்களை முன்னிறுத்திய பேச்சுகள் திட்டமிட்டு எங்கும் உருவாக்கப்படுகின்றன. உலகமயமாக்கல் காலகட்டத்தில், எல்லாம் சந்தைக்கான உற்பத்திப் பொருளாக மாறிவரும் சூழலில், கல்வியும் விதிவிலக்கு இல்லாமல் ஆகிவிட்டது. கையில் பணக்கத்தையுடன், தனியார் கல்வி நிறுவனங்களின் கதவுகளைத் தட்டினால், நீங்கள் கேட்பது தாராளமாகக் கிடைக்கிறது. இரண்டு கோடி ரூபாய் இருந்தால், உங்களுடைய மகன் அல்லது மகள் மருத்துவராகி விடலாம். மருத்துவத்தில் எம்.டி., பட்டம் எனில் கொஞ்சம் விலை கூடுதல். ஐந்து கோடிகள் வேண்டும். அவ்வளவுதான். மக்களின் உயிரைக் காக்க வேண்டிய மருத்துவர்களை உருவாக்கிற கல்வியைத் தனியார்மயமாக்கிட ஆதரவளிக்கிற அரசாங்கத்திற்கு நூலகம், அடிப்படைக் கல்வி குறித்து என்ன அக்கறை இருக்க முடியும்?

தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் ஏற்கனவே நூலகம் எதுவும் இருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்ப வேண்டிய நேரமிது. சில இரும்புப் பீரோக்களில் முடங்கிக் கிடக்கும் நூல்களைப் பற்றி, பள்ளியில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும்கூடத் தெரிய வாய்ப்புகள் இல்லை. நூலகத்திற்கெனத் தனியான இடம், வாசிப்பறை என அடைப்படை வசதிகள் பெரும்பாலான பள்ளிகளில் இல்லை. பள்ளிகளில் நூலகம் இல்லாதபோது, நூலகர் என்ற பேச்சுக்கு இடமில்லை. நூலகர் என்ற பணியிடம் பள்ளியில் இல்லாதபோது, ஆசிரியர்களை நூலகர்களாக்குவேன் என்ற பேச்சுக்கு என்ன பொருத்தம் இருக்கிறது.