திரைப்படப் பாடல்களின் காப்புரிமைத் தொகை சார்ந்த பல சர்ச்சைகள் தமிழ்ச் சூழலில் தொடர்ந்து எழுந்தவண்ணமே இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட இசையமைப்பாளரின் பாடல்களை மேடையில் பாடுவது, பதிவிறக்கம் செய்வது, பொது இடங்களில் ஒலிபரப்புவது போன்ற அனைத்துக்கும் காப்புரிமைத் தொகை செலுத்தியே ஆக வேண்டும் போன்ற பேச்சுகள் இங்கே தொடர்ந்து உருவாகிக்கொண்டே இருக்கின்றன. இதன் நிஜம்தான் என்ன? திரைப்படப் பாடல்களின் உரிமை உண்மையில் யாருக்குச் சொந்தமானது?
ஓர் இயக்குநர் அல்லது கதாசிரியர், திரைக் கதையாசிரியர் ஒரு கதைத் தருணத்தை யோசிக்கிறார். அந்தக் காட்சியில் நிகழும் நிகழ்வுகளையொட்டி அங்கே ஒரு பாடல் இடம்பெற வேண்டுமென்று அவர் திட்டமிடுகிறார். அப்படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தமானவருக்கு அதை அவர் எடுத்துச் சொல்கிறார். அதற்கேற்ப அவ்விசையமைப்பாளர் ஒரு மெட்டை உருவாக்கி, அதில் அந்தக் கதை தருணத்தை வெளிப்படுத்தும் வரிகளை எழுத ஒரு பாடலாசிரியர் ஒப்பந்தமாகிறார். இம்மூன்று விஷயங்களும் இணையும்போது ஒரு பாடல் உருவாகிறது. போட்ட பணம் திரும்பிவரும் என்று எந்தவொரு உத்தரவாதமும் இல்லாமல் இவையனைத்துக்கும் முதலீடு செய்ய ஒரு தயாரிப்பாளர் முன்வருகிறார். பாடல் உருவான பின்னரும் அதைப் பிடிக்காமல் மாற்று மெட்டுகளையும் வரிகளையும் பலமுறை அந்த இயக்குநர் கேட்கக்கூடும். இறுதியில் இயக்குநர் விரும்பித் தேர்ந்தெடுத்த, ஒப்புக்கொண்ட மெட்டில், அவருக்குப் பிடித்த வரிகளில் அவருக்கும் ஏற்புடைய ஒரு பாடகனின் அல்லது பாடகியின் குரலில் அப்பாடல் பதிவாகிறது. வழக்கமாக ஒரு திரைப்பாடல் உருவாகும் விதம் இதுவே.
பின்னர் அந்த இயக்குநர் அப்பாடலைப் படமாக்குகிறார். மெட்டு, வரிகளும் பாடகர்களின் குரல் மற்றும் உணர்வுபூர்வமான பாடுமுறை, சிறப்பான காட்சிப்படுத்தல் போன்றவை ஒன்றிணையும்போதுதான் ஒரு சிறந்த பாடல் உருவாகிறது. இப்படி உருவாகும் ஒரு பாடலின் முழு உரிமையைக் கொண்டாடும் தகுதி இதில் யாருக்கு இருக்கிறது என்பது ஒரு சிக்கலான கேள்வி. அப்படி ஒரு காட்சி அந்த இயக்குநரின் மனதில் தோன்றவில்லையென்றால் அந்தப் பாடலே உருவாகியிருக்காதே? அதனால் அந்தப் பாடலின் முழு உரிமை அவருடையது என்று சொல்லலாமா? சிறப்பான மெட்டு அமையவில்லையென்றால் பாடல் ரசிகர்களைச் சென்றடைவது கடினம். ஆதலால் அப்பாடலின் முழு உரிமை அந்த இசையமைப்பாளருக்குச் சொந்தம் என்று சொல்லலாமா? பாடலின் வரிகள் ரசிகனைக் கவர்ந்திழுக்கவில்லையென்றால் அவனால் அந்தப் பாட்டுக்குள்ளே போகவே முடியாதே. அப்போது அந்தப் பாடலாசிரியருக்கு முழு உரிமையையும் அளிக்கலாமா? அப்பாடல் காட்சி சிறந்த நடிகர்களால் நடிக்கப்பட்டு சிறப்பாகப் படமாக்கப்படவில்லையென்றால் யாருமே அதைப் பார்க்க மாட்டார்களே? மீண்டும் இயக்குநருக்கு முழு உரிமையும் அளிப்பதா? இதெல்லாம் மிகவும் சிக்கலான கேள்விகள். இந்திய திரைப்பாடல்கள் என்பது முழுக்க முழுக்க ஒரு கூட்டு முயற்சி. அதில் பங்கேற்கும் ஒரு தனி ஆளுமை அதை முற்றிலுமாகத் தனதென்று உரிமைகோர முடியாது என்பதுதான் உண்மை.
ஆனால் உலகம் முழுவதும் பெருவாரியாக விநியோகிக்கப்படும் ஆங்கிலப் பரப்பிசையில் (Western Pop Music) பாடல்களின் கருத்தாக்கத்தை யோசித்து உருவாக்குபவரும், வரிகளை எழுதுபவரும் மெட்டமைப்பவரும் அதன் கருவியிசைக் கோர்ப்பை உருவாக்குபவரும் அநேகமாக ஒரே இசைஞராகத்தான் இருக்கிறார். அதைக் காட்சிப்படுத்த வேண்டுமென்றால் அதையும் அடிப்படையில் யோசிப்பவர் அவரே. ஆதலால் அப்பாடலின் முழு உரிமையும் அவருக்கே சொந்தமாக மாறுகிறது. மற்ற கருவியிசைக் கலைஞர்கள், ஒலிப்பதிவு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் உரிய ஊதியத்தை வழங்கி தமது படைப்பூக்கத்திற்கான, உழைப்பிற்கான முழு ஊதியத்தையும் பெற்றுக்கொண்டதாக அவர்களிடமிருந்து ஒப்புதல் சான்றைப் பெற்றுக்கொள்கிறார். இவ்வாறாக அப்பாடலின், இசையின் முழு உரிமையும் அவ்விசைக் கலைஞருக்கு உரியதாக மாறுகிறது. அவருக்கு விருப்பம் இருந்தால் அவ்வுரிமையைப் பிற்பாடு வேறு யாருக்காவது மாற்றலாம். ஆனால் பலரின் கூட்டு முயற்சியால் உருவாகும் இந்திய திரைப்பாடல்களுக்கு இக்கூற்றுகள் அறவே பொருந்தாது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் காப்புரிமைச் சட்டம் என்பது முற்றிலும் மங்கலான ஒன்று. அறுபத்தி ரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்திய காப்புரிமைச் சட்டப் பிரிவு 52இன் அடிப்படையில்தான் இன்று வரைக்கும் இசை சார்ந்த காப்புரிமைகள் இங்கு கணக்கிடப்படுகிறது. 2012இல் சில மாற்றங்கள் இச்சட்டத்தில் ஏற்படுத்தியதாகச் சொல்கிறார்கள் என்றாலும் ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டே இருக்கும் மின்னணு, இணைய வடிவங்களுக்கு ஏற்ப அதில் பெரிதாக மாற்றங்கள் எதுவும் உருவாகவில்லை. ‘வருங்காலத்தில் வரப்போகும் அனைத்து வடிவங்களிலும்’ என்று ஒப்பந்தங்களில் ஒரு வரியைச் சேர்க்கிறார்கள் என்றாலும் அது சட்டரீதியாக நிலைநிற்கக்கூடியது அல்ல.
திரைப்பாடலின் முழு உரிமையும் தன்னுடையதென்று இசையமைப்பாளர் சொல்கிறார், பாடலாசிரியர் சொல்கிறார், தயாரிப்பாளர் சொல்கிறார், இசை நிறுவனம் சொல்கிறது, இப்போது பாடகர்களும் சொல்ல ஆரம்பித்துவிட்டனர். இந்திய திரைப்பாடகர்கள் உரிமை பாதுகாப்புச் சங்கம் என்ற ஒன்று உருவாக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. அது வழியாக பாடகர்களும் உரிமைத் தொகையைப் பெற ஆரம்பித்துவிட்டனர். ஐபிஆர்எஸ் என்ற ஓர் அமைப்பு பல ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. திரையிசைமைப்பாளர்களான சலீல் சௌதுரி, எம்.பி.ஸ்ரீனிவாசன் போன்றவர்கள்தான் அதை ஆரம்பித்து வைத்தவர்கள். இன்று மேடைக் கச்சேரிகளில் பாடப்படும் ஒவ்வொரு பாடலுக்கும் காப்புரிமைத் தொகை வாங்குவதற்கு இந்த அமைப்பு முயற்சிக்கிறது. ஆனால் இந்தியா முழுவதும் பட்டிதொட்டிகளிலெல்லாம் ஒவ்வொரு நாளும் அரங்கேறும் திரையிசைக் கச்சேரிகளுக்கு எப்படி காப்புரிமைத் தொகை வசூலிப்பது? நகரங்களில் நிகழக்கூடிய, பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்ட இசை நிகழ்ச்சிகளிலிருந்து மட்டும்தான் ஓரளவுக்குப் பணத்தை இந்த அமைப்பு வசூலிக்கிறது. அப்பணம் முற்றிலுமாக சம்பந்தப்பட்ட இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்களைச் சென்றடைகிறதா? உத்தரவாதம் எதுவும் இல்லை.
இன்றைய காலகட்டத்தில் பல இசையமைப்பாளர்களின் பாடல்களில் வரும் பல கருவியிசை பகுதிகள், அப்பாடல் பதிவில் பங்கேற்கும் கருவியிசைக் கலைஞர்களே உருவாக்குகிறார்கள். அப்படி உருவாக்கப்பட்ட இசைப்பகுதிகளின் காப்புரிமை யாருடையது? வேலை செய்த நாளுக்கான ஊதியத்தை மட்டுமே வாங்கிக்கொண்டு செல்லும் அந்த இசைக்கலைஞனுக்கு வேறு எதாவது தொகை வழங்கப்படுகிறதா? இல்லையென்பதே உண்மை.
ஒரு காலத்தில் பெயர்பெற்ற பல இசையமைப்பாளர்களின், பாடலாசிரியர்களின், கருவியிசைக் கலைஞர்களின் குடும்பங்கள் இன்றும் அவதிப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ‘காப்புரிமைத் தொகை, காப்புரிமைத் தொகை’ என்ற சத்தங்கள் மட்டுமே ஒலிக்கின்றன. எவ்வளவு சிறப்பாக இசையை உருவாக்கினாலும் அதைப் படைப்பூக்கத்தோடு வாசிக்க கருவியிசைக் கலைஞர்கள் இல்லாமல், அவ்வொலிகளை சிறப்பாகப் பதிவு செய்யும் ஒலிப்பதிவாளர்கள் இல்லாமல் இசையை உருவாக்கவே முடியாதே. இவ்வாறாக பல்வேறு கலைஞர்களின் கூட்டுமுயற்சியால் உருவாகும் இந்திய திரையிசையானது தன்னுடையது மட்டுமென்று முற்றிலுமாக உரிமை கொண்டாட யாராலுமே முடியாது என்பதே உண்மை.
இவையனைத்தையும் கணக்கிடும்போது இந்திய திரைப்பாடல்களின் காப்புரிமை என்பது நடைமுறையில் எண்ணற்ற சிக்கல்களைக் கொண்டது என்று புரிந்துகொள்வதில் சிக்கல்கள் எதுவும் இல்லை. இந்த அடிப்படை விஷயங்களைக் கருத்தில் கொள்ளாமல்தான் இங்கே காப்புரிமை குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இயல், இசை, நாடகம் மட்டுமல்லாது, பல்வேறு தொழில்நுட்பத் துறைகளின் ஒத்துழைப்பில்லாமல் உருவாக்கவே முடியாத சினிமா எனும் கலையின் பொது இருத்தலுக்கும் அதற்குள்ளே இடம்பெறும் வெவ்வேறு கலைகளின் தனி இருத்தலுக்கும் தகுந்த காப்புரிமைச் சட்டங்கள் உருவாகி அமல்படுத்தப்படாமல் இச்சிக்கல்களுக்கு முடிவே வராது. பாடல்களைக் கேட்பதும், பாடுவதும் மனிதர்களின் அடிப்படை உரிமை. காப்புரிமையின் பெயரால் அதற்குத் தடைவிதிப்பது மனித உரிமை மீறலன்றி வேறெதுவும் இல்லை.