2.77 ஏக்கர் நிலம். பாபர் மசூதி இருந்த இடம். ராம்ஜென்மபூமி என நம்ப‌ப்படும் இடம். சர்ச்சைக்குரிய அயோத்தி ஸ்தலம். அதைத்தான் பல்லாண்டு காலம் பகடையாட்டம்போல் உருட்டியபின் இப்போது உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு சொல்லியிருக்கிறார்கள்.

நிலம் முழுக்க இந்துக்களுக்குப் பாத்தியப்பட்டது, அங்கே மத்திய அரசு அமைக்கும் ட்ரஸ்ட்டின் வழிகாட்டுதலில் ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம் என்பது தீர்ப்பு. (முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலம் அயோத்தியில் வேறு எங்காவது வழங்கப்படும். அவர்கள் அங்கே மசூதி கட்டிக்கொள்ளலாம் என்று கரிசனம் காட்டப்பட்டிருக்கிறது). உச்சநீதிமன்றத் தலைமை நீதியரசர் ரஞ்சன் கோகய் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட பெஞ்ச் (அதில் ஒருவர் இஸ்லாமியர்) அளித்திருக்கும் இந்தத் தீர்ப்பின் சிக்கலே இது உண்மையைவிட நம்பிக்கைக்கு முக்கியத்துவம் தந்திருப்பதுதான். ஆதாரங்களை, தரவுகளை, வாதங்களைவிட பெரும்பான்மையின் அபிலாஷைகளைப் பிரதானமாக எடுத்துக்கொண்டு நீதித் துறையானது செயல்பட முடியுமா என்றே விளங்க‌வில்லை.

ASI என்றழைக்கப்படும் இந்திய அகழ்வாராய்ச்சித் துறையின் (Archaeological Survey of India) அறிக்கையை மேம்போக்காகத் தன் ஆதாரமாகக் காட்டுகிறது இந்தத் தீர்ப்பு. அந்த அறிக்கையின் விஷயங்களைக் கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கொள்ளலாம்.

1) மசூதி 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அது காலி இடத்தில் கட்டப்படவில்லை.

2) மசூதிக்குக் கீழே 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பெரிய கட்டுமானம் இருக்கிறது.

3) 85 தூண்கள் கொண்ட, மசூதி அளவு அல்லது அதைவிடப் பெரிய கட்டுமானம்.

4) அந்தக் கட்டுமானம் இந்து மதத்துக்குரியது; நிச்சயம் இஸ்லாமுக்கு உரியதல்ல.

5) ஆனால் அது ஒரு ராமர் கோயில் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

6) அந்த முந்தைய கட்டுமானத்தின் சுவர்களின்மீதுதான் மசூதி கட்டப்பட்டிருக்கிறது.

7) இந்தக் கட்டுமானம் எப்படி அழிந்தது என்பது தெரியவில்லை.

8) மசூதி கட்டுவதற்காக இக்கட்டுமானம் இடிக்கப்பட்டது என்பதற்குச் சான்றில்லை.

9) கட்டுமான மிச்சங்கள் கொண்டு மசூதி கட்டப்பட்டதற்கும் சான்றுகள் இல்லை.

10) 7–10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டவடிவ வழிபாட்டிடமும் அடியில் உள்ளது.

11) அதுவும் இந்து மதத்துக்குரியதே. அது ஒரு சிவன் கோயிலாக இருக்கலாம்.

12) அங்கு கிமு 2ஆம் நூற்றாண்டு வடக்கத்திய கருப்புப்பூச்சிட்ட பாண்டம் கிட்டியுள்ளது.

ஆனால் சர்ச்சைக்குரிய நிலத்துண்டின் பாத்யத்தைச் சட்டப்பூர்வமாகத் தீர்மானிக்க இந்த அகழ்வாய்வுகள் போதாது எனக் குறிப்பிடும் தீர்ப்பு அது தொடர்பாய் வேறு சில உள்ளீடுகளை எடுத்துக்கொள்கிறது. அவற்றில் முக்கியமானது 18ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய‌ப் பயணியான‌ ஜோசஃப் டிஃபென்தலரின் அயோத்தி பயணக் குறிப்புகள் (Description Historique Et Geographique de L’Inde). அதன் சாரத்தை இப்படிச் சொல்லலாம்:

1) ராமர் விஷ்ணுவின் அவதாரம், அவர் பிறந்த இடம் அது என இந்துக்கள் நம்பினர்.

2) சொர்க்கவாசல், ராமரின் தொட்டில், சீதையின் சமையலறை என சர்ச்சைக்குரிய இடத்திலும் அதைச் சுற்றியும் இந்துக்கள் வழிபட்டுக் கொண்டிருந்தார்கள்.

3) ராமர் கோட்டையை இடித்துவிட்டு அவுரங்கஸீப் 3 குவிமாடம் கொண்ட ஒரு மசூதியைக் கட்டினார் என்றார்கள். சிலர் அது பாபர் என்றும் சொன்னார்கள்.

4) கோட்டையின் 14 தூண்களைக் கொண்டுதான் மசூதி கட்டப்பட்டிருந்தது.

5) தரையிலிருந்து ஐந்து அங்குல உயரத்தில் இருந்த ஒரு சதுரப் பெட்டியை அவர்கள் ராமரின் தொட்டில் என நம்பினார்கள். இந்துக்கள் அங்கே வழிபட்டனர். அந்த இடத்தை மூன்றுமுறை வலம்வந்து பின் கீழே நிலத்தில் விழுந்து சேவித்தனர்.

6) ராமர் பிறந்த தினத்தைக் கொண்டாட பெரும் எண்ணிக்கையில் மக்கள் கூடினர்.

இதைக்கொண்டு பாபர் மசூதி செல்வாக்காய் இருந்த காலந்தொட்டே இந்துக்கள் அங்கே பரவலாய் ராமரை வழிபட்டு வந்தார்கள் என உச்சநீதிமன்றம் கருதுகிறது. அதாவது அங்கே ஸ்தூல வடிவில் ஒரு மசூதி இருந்தது. இந்துக்களுக்கு எந்தவகையிலும் ராமரை வழிபட மனத்தடையாக அப்போதெல்லாம் இருக்கவில்லை.

ஜன்ம சகீஸ் என்ற சீக்கிய மத நூலில் குருநானக் 1510 வாக்கில் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்ட ராமர் கோயிலுக்குச் சென்று வழிபட்டதாக ஒரு குறிப்பு வருகிறது. (அதாவது இது பாபர் மசூதி கட்டப்பட்ட காலத்திற்கு 20 ஆண்டு முந்தைய காலம்.) இதையும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கையில் கணக்கில் கொண்டிருக்கிறது.

பிரச்சனைக்குரிய இடம் மொத்தம் நான்கு ஆட்சிகளுக்குகீழ் இருந்திருக்கிறது:

1) 12ஆம் நூற்றாண்டு முதல் 1525 வரை – கோயில் இருந்ததாகச் சொல்லப்படும் காலம்.

2) 1525 முதல் 1856 வரை – மசூதி கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த முகலாயர் ஆட்சி.

3) 1856 முதல் 1947 வரை – பிரிட்டிஷ் ஆட்சி.

4) 1947 முதல் – இந்திய யூனியனின் ஆளுகை.

ஆனால் 1856இல் பாபர் மசூதி பிரிட்டிஷ் கைக்குப் போகும் வரை அங்கே இஸ்லாமியர் வழிபாடு நடத்தியதற்கான சான்றுகள் இல்லை என்பதுதான் பிரச்சனை. 1856இல் பிரிட்டிஷ்காரர்கள் அங்கே நிலவிய பதற்றத்தைக் கண்டு பாதுகாப்பின் பொருட்டு மூன்று குவிமாடக் கட்டுமானத்தின் வெளியே வேலி போட்டார்கள். இஸ்லாமியர் அதன் உள்ளே வழிபட்டுக் கொள்ள வேண்டியது; வெளியே இந்துக்கள் வழிபடலாம்.

இந்துக்கள் முதன் முதலாக சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ளே அனுமதிக்கப்படாமல் தடுக்கப்பட்டது அதுதான் முதல் முறை எனத் தெரிகிறது. ஆக, இந்தச் சிக்கலின் ஆதிவிதையை இட்டது கம்பியாலும் செங்கல்லாலும் ஆன அந்தச் சுவர் வேலிதான். ஆக, இந்துக்களுக்கு ஆரம்பத்திலிருந்தே அந்த சர்ச்சைக்குரிய இடத்தில் பாத்யதை இருக்கிறது என்றாகிறது. உச்சநீதிமன்றம் திரும்பத் திரும்பச் சொல்வது இதைத்தான். சுன்னி வக்ஃப் வாரியம் உள்ளிட்ட முஸ்லிம்கள் தரப்பு அந்த இடத்தின்மீதான தன் தொடர் உரிமையைச் சரிவர நிரூபிக்கவில்லை என்கிறது. மாறாக, இந்துக்கள் தரப்பு சொல்வதுபோல் ஆரம்பத்திலிருந்தே அங்கே இந்துக்கள் ராமரை வழிபட்டு வந்ததையும் அது ராமரின் பிறப்பிடம் என்று நம்பி வந்ததையும் ஏற்றுக்கொள்கிறது.

இந்த அடிப்படையில்தான் 2010ஆம் ஆண்டின் அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பான சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாக வகுந்து நிர்மோகி அகரா மற்றும் இந்து மஹாசபா ஆகிய‌ இரண்டு இந்துத் தரப்புக்களுக்கு தலா ஒரு பகுதி, இஸ்லாமியத் தரப்புக்கு ஒரு பகுதி என்பதை நிராகரிக்கிறது உச்சநீதிமன்ற அமர்வு. அது வெறும் கணிதத் தீர்வு.

இதெல்லாம் உச்சநீதிமன்றத்தின் தரப்பு. ஆனால் இதற்கு வலுவான‌ மாற்றுத் தரப்பும் உண்டு. முதலில் ASI-யின் ஆய்வுகளையே சந்தேகிக்கிறார்கள். மசூதி கட்டப்பட்டது தொடர்பான‌ கல்வெட்டுகளில் கோயில் இடிப்பு பற்றிய குறிப்புகள் ஏதுமில்லை என வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபீப் சுட்டுகிறார். (பொதுவாக தம் இஸ்லாமிய மத விசுவாசத்தைக் காட்ட இதை அவர்கள் பெருமையாகக் குறிப்பிடுவது வழக்கம்.)

முஸ்லிம்கள் சார்பாய் வாதிட்ட சுன்னி வக்ஃப் வாரியம் ஆரம்பத்திலிருந்தே இந்த வழக்கில் (அலகாபாத் உயர்நீதிமன்றத்திலும் சரி, பின்னர் உச்சநீதிமன்றத்திலும் சரி) பாபர் மசூதி காலியிடத்தில் கட்டப்பட்டதாகவே சொல்லி வந்தது. 1991இல் 4 பிரபல வரலாற்றாய்வாளர்கள் பாபர் மசூதியை ஆராய்ந்து அங்கே முன்பு கோயில் இருக்கவில்லை என்றும் எதையும் இடித்து மசூதி கட்டப்பட்டிருக்கவில்லை என்றும் அறிக்கை அளித்தார்கள். (Historians Report to the Nation என அது அழைக்கப்படுகிறது.)

அதற்கு அடுத்த ஆண்டே மசூதி இடிக்கப்பட்டது. 2001இல் அலகாபாத் உயர்நீதிமன்றம் அந்த இடிபாடுகளைத் தோண்டி அங்கே முன்பு கோயில் இருந்ததா எனக் கண்டறிய ASI-க்கு உத்தரவிட்டது. இதற்கு மிக‌ முக்கியக் காரணம் 1993இல் தனேஷ்வர் மண்டல் என்பவர் எழுதிய புத்தகத்தில் (Ayodhya: Archaeology after Demolition) ஏற்கனவே இருந்த கோயிலின் தூண்களின் மீது பாபர் மசூதி கட்டப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுவதை மறுத்திருந்தார். ஒரு குழு வன்முறையான மசூதி இடிப்புக்குப் பின் அந்த இடத்தில் கிடைக்கும் பொருட்களை முழுக்க‌ நம்புவதற்கில்லை என்றும் சொல்லி இருந்தார்.

2003இல் அகழ்வாய்வுத் தொடங்கி ஆறு மாதத்தில் அறிக்கை அளிக்கப்பட்டது. 2007இல் மண்டலும், ஷெரீன் ரத்னாகரும் கிஷிமி அகழ்வாய்வு செய்த இடங்களைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அதனடிப்படையில் Ayodhya: Archaeology After Excavation என்ற நூலை எழுதினர். அதில் அகழ்வாய்வில் சில வேண்டுமென்ற விடுபடல்கள் இருப்பதைச் சுட்டிக் காட்டினர். அங்கே கிடைத்த கண்ணாடிப் பாண்டங்களும், ஓட்டு வில்லைகளும், விலங்குகளின் எலும்புகளும் மறைக்கப்பட்டன. அந்தப் பிரதேசம் முழுக்க காலங்காலமாக‌ இஸ்லாமியர்களின் கலாசார ஆதிக்கத்தில் மசூதியாகவே இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் இவை. (வைணவக் கோயிலில் எலும்பு வருமா!) ஜோசஃப் டிஃபென்தலர் ஒரு முக்கியமான வரலாற்று ஆசாமி கிடையாது. ஆனால் அவர் முன்வைக்கும் தகவல்கள் சாதகமாக இருப்பதால் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீர்ப்பில் ஆதாரமாகக் காட்டப்பட்டுள்ளது என்பது இன்னொரு குற்றச்சாட்டு.

இதெல்லாம் தாண்டி அயோத்தி ராமர் பிறந்த இடம் என்பதே கட்டுக்கதைதான் என்கிறார்கள். அதாவது ராமர் என்ற பாத்திரத்தை முன்வைக்கும் புராணங்களிலேயே அப்படிச் சொல்லப்படவில்லை என்ற பொருளில். ராமர் பிறந்த இடம் அயோத்தி என வால்மீகி ராமாயணம் குறிப்பிடவில்லை. துளசிதாச ராமாயணமும் அப்படிச் சொல்லவில்லை. துளசிதாசர் தன் ராமாயணத்தில் ஓரிடத்தில் அவத்புரியில் (அப்போதைய அயோத்தியின் பெயர்) ராம் ஜன்மோத்சவ் என்ற ராமரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தைத் தான் கண்ணுற்ற விஷயத்தைப் பதிவு செய்கிறார். கவனிக்க வேண்டும். அவரது பிறந்த நாள் கொண்டாட்டம்தான். கிறிஸ்துவின் பிறந்த நாள் கொண்டாட்டம் வேளாங்கண்ணியில் நடப்பதால் அவர் இங்கே பிறந்தார் என்றாகி விடுமா? தவிர, அது எழுதப்பட்டது அக்பரின் காலகட்டத்தில், ராமர் கோவில் இடிக்கப்பட்டதாகக் சொல்லப்படும் 50 ஆண்டுகள் கழித்து. அது அவருக்குத் தெரிய வந்திருந்தால் அதைப் பதிவுசெய்யாமல் இருந்திருப்பாரா எனக் கேட்கிறார்கள்.

சீனப் பயணி ஹுவான் சுவாங் (7ஆம் நூற்றாண்டு) அயோத்தி வந்திருக்கிறார், ஹர்ஷ வர்த்தனர் காலத்தில். அது ராமர் பிறந்த இடம் என அவர் குறிப்பிடவில்லை. இரானியப் பயணி அல்பெருனி (11ஆம் நூற்றாண்டு) மதுராவைப் பற்றி எழுதுகையில் அது கிருஷ்ணர் பிறந்த இடம் என்கிறார். ஆனால் அயோத்தி பற்றி எழுதுகையில் அது ஒரு முக்கிய நகரம் என்று மட்டுமே குறிப்பிடுகிறார். ராமரைப் பேசுவதில்லை. ஆக, உச்சநீதிமன்றம் ஆதாரமாகக் கொள்ளும் மக்களின் நம்பிக்கை என்ற விஷயமே அஸ்திவாரம் சரியில்லாமல்தான் இருக்கிறது. யாரோ எதையோ எப்போதோ கிளப்பிவிட்டதற்கு இன்று நாம் மிகப்பெரிய‌தொரு விலை கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

பெரும்பாலான நல்லவர்கள், சிந்தனையாளர்கள் அயோத்தி தீர்ப்பைக் கொண்டாடிக் கொண்டும் ஆதரித்துக் கொண்டும் இருக்கிறார்கள். புதிய பூனைக் குட்டிகள் மெல்ல வெளியே வருகின்றன. இதைச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அணுகுவதைவிட‌ அறம் சார்ந்து, தர்மத்தின் பேரில், மனசாட்சிக்கு உறுத்தலின்றிப் பதிலளிப்பதுதான் சரியான மார்க்கமாக இருக்க முடியும். சட்டத்தின் சாய்வுகள் இதில் இராது.

1) மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் புதிதாய்க் கோவில் கட்ட வேண்டும் என்று சொல்லியிருக்கும் தீர்ப்பு மிக நேரடியாகவே மசூதி இடிப்பை நியாயப்படுத்துவதாகி விடுகிறது. அது எவ்விதத்திலும் ஒரு பண்பட்ட சிவில் சமூகத்தின் சிந்தனை எல்லைக்குள் வரவே இல்லை. ஆயிரம் வலுவான வரலாற்றுத் தரவுகள், சரியான சமூகக் காரணங்கள் அங்கு கோயில் கட்டுவதற்குச் சாதகமாகவே இருக்கின்றன என ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் மசூதி இடிப்பு என்ற சில நூறு பேரின் அறிவுகெட்ட அயோக்கியத்தனத்தால் கோயில் கட்டும் தார்மீக உரிமையை ஒட்டுமொத்த இந்துக்களுமே இழந்தவர்கள் ஆகிறார்கள். அப்படியானதொரு சட்டப்பூர்வ மறுதலிப்பை அந்தக் குற்றத்துக்கான அடையாள தண்டனையாக வழங்கியிருக்க வேண்டும். அதுவே எதிர்காலத்தில் இத்தகு கேவலங்கள் நடப்பதைத் தடுக்கும். இப்போதோ இனி இப்படி இடித்தாலும் நமக்குச் சாதகமாகத் தீர்ப்பு வர வாய்ப்புண்டு என்ற நம்பிக்கை ஊன்றப்பட்டிருக்கிறது. டிசம்பர் 6 கருப்புச் சம்பவம் என்பதைக் கருப்புத் தொடக்கமாக ஆக்கி வைத்திருக்கிறது. அது கடும் வேதனையளிக்கிறது.

2) பாபர் மசூதி என்பது ராமர் கோயிலை இடித்து அதன்மீது கட்டப்பட்டது என்றே ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் அதை நாம் யாரும் பார்க்கவில்லை, உணரவில்லை. கொத்தாய் ஐந்நூறு ஆண்டுகள் ஓடிவிட்டன. அதனால் இன்று அது பெருவரலாற்றில் நாம் எளிதாய் கடந்துவிட முடிந்த சில வரிகள் மட்டுமே. ஆனால் பாபர் மசூதி இடிப்பு என்பது அப்படியானதல்ல; நாம் ரத்தமும் சதையுமாய்ப் பார்த்த அட்டூழியம். இன்றும் அதன் புகைப்பட, வீடியோ ஆதாரங்கள் நாம் காணக்கூடிய தொலைவில் உயிருடன் இருக்கின்றன. மனசாட்சி கொண்ட ஒருவர் அவ்வளவு எளிதாய் அதைக் கடந்துவிடவே முடியாது. 1992க்குப் பின்தான் அத்தனை மதத் தீவிரவாதச் சம்பவங்களும் இந்தியாவில் நடந்தேறின. எத்தனை உயிர்களை விலையாகக் கொடுத்தோம்! எவ்வளவு பொருட்சேதம்! நாடு அமைதியிழந்தது. கடும் வெறுப்பும் குற்றவுணர்வும் சூழ்ந்தது. நாட்டின் சமூகவியலே தடம் புரண்டது. டிசம்பர் 6 ஒவ்வொரு ஆண்டும் எத்தனை பாதுகாப்புச் செலவுடன் நடந்தேறுகிறது! ஆக, 16ஆம் நூற்றாண்டின் ஒரு வரலாற்றுக் குறிப்பையும், சமகாலக் கொடூரம் ஒன்றையும் நாம் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முடியாது என்பது மிக எளிய மனதுக்கே புரியும்.

3) இதைக் கருத்தில்கொண்டு பார்த்தால் மசூதி இருந்த இடத்தில் மீண்டும் அதே போன்ற ஒரு மசூதியை எழுப்பி இஸ்லாமியச் சமூகத்துக்கு அளிப்பதுதான் மிக உச்சபட்ச நியாயமாக, நேர்மையான பிராயச்சித்தமாக இருந்திருக்கும். (நீண்டகால சமூக நல்லிணக்கத்தை முன்னிட்டு முந்தைய அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பை ஒட்டி அந்நிலத்தில் ஒரு சிறுபகுதியிலோ அல்லது அதற்கு மிக மிக அருகிலோ கோயில் கட்ட இடம் ஒதுக்கி இருக்கலாம். அருகருகே அவற்றை வைப்பதன்மூலம் நிர்வாக, பாதுகாப்புச் சிக்கல்களை எதிர்கொள்ளும் கறாரான‌ அறிவுரைகளை உடன் மத்திய, மாநில அரசுகளுக்குக் கொடுத்திருக்கலாம். அது ஒரு சமரச ஏற்பாடு.)

4) சரி, அதைத்தான் செய்ய முடியவில்லை என விட்டுவிடலாம். இஸ்லாமியருக்கு எங்கோ ஓர் ஐந்து ஏக்கர் நிலத்துண்டை அளித்து மசூதி கட்டிக்கொள் என்று சொல்ல முடியும்போது இந்துக்களுக்கும் அதேமாதிரி ஒரு நிலைத்தை அளித்து, கோயில் கட்டிக்கொள் என ஏன் சொல்ல முடியாது? அப்படிச் செய்வதுதான் எவ்விதத்திலும் சமநிலை பிறழாத நியாயம். மாறாக, பிரச்சனைக்குரிய இடத்தை இந்துக்களுக்கு அளித்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எங்கிருந்து வருகிறது? மொத்த தீர்ப்பிலும் என்னால் புரிந்துகொள்ளவியலாத அம்சம் என்று சொன்னால் அது மட்டும்தான்.

5) மசூதி இடிப்பில் மூளையாய்ச் செயல்பட்ட தலைவர்களுக்கு, களத் தளபதியாய்ச் செயல்பட்ட வெறியர்களுக்கு நீதித்துறை என்ன தண்டனை அளித்தது? முழுமையாய் அதை நிறைவேற்றாத வரையில் நிலத்தைப் பற்றிப் பேசவே வேளை வரவில்லை அல்லவா! அதில் சம்பந்தப்பட்ட அத்தனைப் பேருக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்பே இந்த நிலப் பிரச்சனை வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். இதில் ராமர் சார்பாக ஆஜரானது தியோகி நந்தன் அகர்வாலா மற்றும் த்ரிலோகிநாத் பாண்டே என்ற இரு விஷ்வ ஹிந்து பரிஷத்காரர்கள். 1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதியை இடித்ததில் முக்கியப் பங்கு வகித்த அதே விஷ்வ ஹிந்து பரிஷத்! எனில் இந்த வெற்றி எப்படிப் பார்க்கப்படும் என்று சொல்லவும் வேண்டுமா? மசூதியை இடித்த அதே ஆள் ராமர் கோயில் அங்கே கட்ட உரிமை கோருகிறான், அவனுக்கு நீதிமன்றம் அனுமதியளிக்கிறது. இதை நாம் எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

6) குறைந்தது, இம்மாதிரி இடிப்பு நடவடிக்கைகளுக்கு (அது எந்த மதம், சாதி, இன, மொழி அடிப்படையிலானது எனினும்) கடும் தண்டனை அளிக்கக் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் தனிச் சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு உத்தரவு இடப்பட்டிருக்கிறதா? அதாவது எதிர்காலத்தில் இம்மாதிரி சம்பவங்கள் நடப்பதை இலகுவாக்கும் தொனி இத்தீர்ப்பில் இருப்பதைச் சரி செய்யும் பொருட்டு பதிலீடாக ஏதாவது இருக்கிறதா?

7) 100 கோடி பேர் கொண்ட பெரும்பான்மை மதத்தவரின் நம்பிக்கை புண்பட்டு விடக்கூடாது என்பதற்காக சிறுபான்மை மக்களை மறைமுகமாய் அச்சுறுத்தும் வகையிலான தீர்ப்பு இந்திய அரசியல் சாசனத்தின் செக்யூலர் என்ற சொல்லுக்கே முரணானது அல்லவா! பெரும்பான்மையின் கருத்துக்கும் நீதிக்கும் என்ன சம்பந்தம்? ஒட்டுமொத்த நாடே எதிர்த்து நின்றாலும் நீதி எதற்கு அதற்கு அஞ்ச வேண்டும்?

8) இரு தரப்பிலுமே இது எண்ண மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை மதம் பற்றி எந்தப் பெரிய பற்றுதலும் இல்லாத இந்துக்கள் (அல்லது அப்படிக் காட்டிக் கொண்டிருந்தோர்) கூட வெளிப்படையாக மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறார்கள். உண்மையில் இதில் சந்தோஷிக்க ஏதுமில்லை. பிணங்களின் மீது நடந்து சென்று ஓர் இலக்கை அடைவதில் என்ன பெருமிதம் இருக்க முடியும்? மறுபக்கம் இஸ்லாத்தின் தரப்பில் ஒரு கனத்த மௌனம் நிலவுவதைக் கவனிக்கிறேன். அவர்கள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கிறார்கள் எனத் தோன்றுகிறது. மதச் சார்பற்ற தேசம் என்று சொல்லிக் கொள்ளும் இந்நிலத்தில் தாங்கள் இரண்டாந்தரக் குடிமக்களா என்ற கேள்வி அவர்களுக்கு இச்சமயத்தில் எழக்கூடும். அது ஒரு பெருவலிதான். (ஆனால் அதை மறைத்துக் கொண்டு தாங்கள் பிரச்சனைக்குரியோர் அல்ல என்றும் தேசப்பற்று மிக்க இந்தியர்கள் என்றும் பெரும்பான்மைச் சமூகத்துக்கு நிரூபித்துக் காட்டவேண்டிய நெருக்கடி.) அப்படி இல்லை என்று சொல்லி அவர்களை ஆசுவாசப்படுத்த வேண்டிய இடத்தில் நாமனைவரும் இருக்கிறோம். தீர்ப்பின் பொருட்டு எந்த வன்முறையிலும் அவர்கள் இறங்காதது அவர்கள் ஏற்கனவே காட்டியிருக்கும் சிறந்த gesture. அமைதி தவழ அது இனியெப்போதும் நீடிக்கட்டும்.

9) தர்க்க, நியாயங்கள் தாண்டி, நடுநிலை தாண்டி இந்தத் தீர்ப்பானது அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் உத்தேசித்தது என்று சொல்கிறார்கள். எப்படி? குறிப்பிட்ட வடக்கு பெல்ட் தாண்டி மற்ற மாநில இந்துக்கள் ராமர் கோயிலில் பெரிய ஆர்வம் கொண்டிருக்கவில்லை. (சுன்னி முஸ்லிம்கள் அளவு ஷியா முஸ்லிம்கள் பாபர் மசூதி விவகாரம் மீது பெரிய ஆர்வம் காட்டவில்லை எனச் சொல்லப்படுவதைப் போல்.) எனில் இதில் மத நல்லிணக்கம் என்பது எங்கே வருகிறது? உண்மையில் இந்துராஷ்ட்ரம் என்ற விஷக் கருத்தாக்கத்தை வலுவாக்கவே இது உதவும்.

10) நான் ஏற்கனவே பல முறை சொல்லியிருப்பது போல் உண்மையில் இந்து மதத்தை அரித்து, அழித்துக் கொண்டிருப்பது இந்துத்துவர்களே. மதம் போதிக்கும் நல்லறத் தாத்பர்யங்களைக் கண்மூடித்தனமாய் இடித்துத் தள்ளிவிட்டு அதன்மீது வெறும் அடையாளங்களைக் கட்டி என்ன செய்யப் போகிறோம்? எல்லாவற்றிற்கும் மேலாக மஹாத்மா காந்தி இன்று இருந்திருந்தால் இத்தீர்ப்பை வரவேற்றிருப்பாரா? காந்தி கனவு கண்ட ராமராஜ்யம் இதுவா? ஸ்ரீராமர் இந்த வெற்றிக்கு மகிழ்வாரா?