மத்திய அரசு வெளியிட்டிருக்கும் புதிய கல்விக்கொள்கை வரை 2019 மீதான நாடு தழுவிய விவாதம் நடந்து கொண்டு வருகிறது. அரசின் கருத்துக் கேட்பு முடிவுக்கு வர இருக்கும் சூழலில், அக்கொள்கை வரைவில் உள்ள உயர்கல்வித்துறை குறித்த சில அம்சங்களைக் கவனிக்க வேண்டியுள்ளது. மத்திய அரசானது, பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள முற்பட்ட வகுப்பினருக்கான பத்து சதவீத இட ஒதுக்கீடு போன்ற மாபெரும் விமர்சனங்களுக்குரிய முன்வடிவுகளை கருத்துக் கேட்போ, கோரிக்கையோ இல்லாமல் எடுத்து நிறைவேற்றும் சூழலில், நானூறு பக்கங்களுக்கும் மேற்பட்ட வரைவு தேசிய கல்விக்கொள்கையினைப் பொது விவாதத்துக்கு உட்படுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது. எவ்வளவு எதிர்கருத்துகள் வந்தாலும், விமர்சனங்கள் வந்தாலும் தனது அசுர பலத்தால் இந்த அரசு இக்கல்விக்கொள்கையை முன்னெடுத்துச் செல்லும். முன்னுரையே பதினைந்து பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த கொள்கை வரைவும் சுற்றிச் சுற்றிக் குழப்பும் படியாகவே எழுதப்பட்டுள்ளது அல்லது அதைப் புரிந்து கொள்ளும் அறிவு நமக்கில்லையா என்று தெரியவில்லை. இக்கட்டுரையில், வரைவு தேசியக்கல்விக்கொள்கையின் இயல் 9 மட்டும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
உயர்கல்விக்கான இயல் 9, தரமிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள்: இந்தியாவின் உயர்கல்வி அமைப்புக்கானதொரு புதிய மற்றும் முன்னேற்றத்துக்கான தொலைநோக்குப் பார்வை என்ற தலைப்போடு கொடுக்கப்பட்டுள்ளது. அதன் குறிக்கோளாக சொல்லப்படுவன: உயர்கல்வி அமைப்பை மறுசீரமைத்தல், நாடு முழுவதும், உலகத்தரத்திலான பல்வேறு கல்விப் புலங்கள் ஒருங்கமைந்த உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்குதல் -இதன் மூலமாக 2035 ஆம் ஆண்டுக்குள்ளாக மொத்த சேர்க்கை விகிதத்தினை 50% அதிகரித்தல்.
வரைவு அறிக்கையில் இந்தியாவின் உயர்கல்வி அமைப்புகள் சந்திக்கும் சவால்களாக குறிப்பிடப்பட்டுள்ளவை சுருக்கமாகப் பின்வருமாறு அறிந்து கொள்ளலாம்.
பிளவுண்டிருக்கும் உயர்கல்வி அமைப்புகள்: பலதரப்பட்ட கல்வி நிலையங்கள் உள்ளன.
மிகவும் ஆரம்பக்கட்டங்களிலேயே உயர்சிறப்பு பாடப்பிரிவுகளில் மாணவர்களை அனுமதித்தல்: இதன் காரணமாக ஒரே மாதிரியான பாடப்பிரிவுகளைக் கற்ற அதிகப்படியான மாணவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். அவர்கள் தமது பாடப்பிரிவுகளைத் தவிர்த்த வேறெதையும் அறியாதவர்களாக உயர்கல்வி நிலையங்களில் இருந்து வெளி வருகிறார்கள்.
சமூக பொருளாதாரத்தில் பின் தங்கிய பகுதிகள் சேர்க்கை விகிதம் குறைவு: தற்போதைய உயர்கல்வி மொத்த சேர்க்கை விகிதம் 25% உள்ளது (35 மில்லியன்). இதை 50% ஆக அதிகரிக்க வேண்டும்.
ஆசியர்களுக்கும் கல்வி நிலையங்களுக்கும் தன்னாட்சி அதிகாரமின்மை: இதனால் புதியன படைத்தல் தடைபடுகிறது. மேலும், கல்வி நிறுவனங்களுக்கு அவர்களின் புதுமையான செயல்முறைகளுக்குத் தேவையான பொருளாதாரங்களை தமது மட்டங்களில் இருந்தே திரட்டிக்கொள்ளவும் தன்னாட்சி அவசியம்.
ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தமது தொழிற்புலத்தில் முன்னேற்றமும் தலைமைத்துவமும் அடைவதை ஊக்குவிக்கும் வழிமுறைகள் இல்லை; தன்னாட்சி இன்மையின் விளைவுகள் இவை. இப்படியான முன்னேற்றங்கள் ஒருவரின்/கல்வி நிறுவனத்தின் சாதனைகளின் அடிப்படையில் அல்லாமல், வயது மற்றும் அனுபவம் சார்ந்து பதவி உயர்வுகள் தரம் உயர்த்துதல் ஆகியன அமைகின்றன.
பெரும்பாலான கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. பல்வேறு ஆய்வுப்புலங்களுக்கு, ஆய்வுக்கான நல்கைகளை தெரிவு செய்து, அளிப்பதற்கான வெளிப்படையான நடைமுறைகள் இல்லை.
உயர்கல்வி நிறுவனங்களில் பொருத்தமற்ற நிர்வாகம் மற்றும் தலைமை: உயர்கல்வி நிறுவனத்துக்கான தலைமைப்பதவிகளுக்கான தெரிவில் வெளிவட்டார தலையீடு அதிகம் உள்ளது.
உயர்கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும்/கட்டுப்படுத்தும் அமைப்புகளின் செயல்பாடுகள் சில நல்ல கல்வி நிறுவனங்களை நெருக்கடிக்குள்ளாக்கும் அதே காலக்கட்டத்தில், அனுமதி பெறாத போலியான கல்வி நிறுவனங்களும் இங்கே செயல்பட்டுக்கொண்டுள்ளன.
மேற்சொன்ன சவால்களைக் கடந்து, தரம் மிக்க, அனைவருக்குமான உயர்கல்வியை வழங்கிட பின்வரும் முன்னெடுப்புகளைக் குறிக்கோளாக கொண்டுள்ளதாக வரைவு அறிக்கை சொல்கிறது.
அரசின் முன்மொழிதல்கள்
P 9.1 : மிகப்பெரும் மற்றும் பல துறைகளை உள்ளடக்கிய கல்வி நிறுவனங்களை உருவாக்குதல். குறைந்தபட்சம் 5000 மற்றும் அதற்கு மேல் மாணவர்களைக் கொண்ட கல்வி நிறுவனங்களை உருவாக்குவது இதன் இலக்கு.
நமது பார்வை: பல்கலைக்கழகங்கள் என்ற பெயரிலேயே அது பல கல்விப்புலங்களை அணுகும் ஒரு நிலையம் என்ற பொருள் உள்ளது. ஆனால் உண்மையில், சில பத்தாண்டுகளில் செக்டார் ஸ்பெசிபிக் என்று சொல்லப்படுகிற, துறை சார்ந்த உயர்கல்வி அமைப்புகள் நிறைய உருவாக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக 1970கள் வரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக, மருத்துவம் பொறியியல், வேளாண்மை, உடற்கல்வி, சட்டம் போன்ற கல்விப் புலங்கள் இருந்தன. இந்த ஒரே பல்கலைக்கழகம், அதாவது பல கல்விப்புலங்களை உள்ளடக்கிய பன்மைத்துவம் மிக்க பல்கலைக்கழகம், தமிழகம் முழுவதுமுள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களை மேற்பார்வை செய்து அங்கீகாரம் வழங்கி வந்தது. ஆனால், காலத்தின் கட்டாயத்தில் கல்வி நிறுவனங்கள் பெருகியதன் காரணமாக, அண்ணா பல்கலைக்கழகம், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், கோவை வேளாண் பல்கலைக்கழம், விளையாட்டு பல்கலைக்கழகம், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், சமீபத்தின் கவின்கலை பல்கலைக்கழகம் ஆகியன உருவாக்கப்பட்டன. இவையெல்லாம் ஒரே பல்கலைக்கழகத்தில் இருந்த காலகட்டத்தில் சாத்தியப்படாத பல துறைசார் படிப்புகளும், மிகவும் பரந்து பட்ட ஆராய்ச்சி வாய்ப்புகளும் இப்போதைய துறைசார் பல்கலைக்கழகங்கள் மூலமாக சாத்தியப்பட்டுள்ளன. சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட மரபார்ந்த மிகவும் பழமையான உலகப் புகழ்மிக்க பல்கலைக்கழகங்கள் கூட சம்பளம் உட்கட்டமைப்பு வசதிகளை பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற அடிப்படை செயல்பாடுகளுக்கு கூட போதிய நிதியின்றி தடுமாறி வருகின்ற சூழலில் அத்தகைய புகழ்மிக்க பல்கலைக்கழகங்களை மற்றும் Tata Institute of Fundamental Research போன்ற உயர் ஆராய்ச்சி நிறுவனங்களையும் இந்தப் பொருளாதார நெருக்கடியில் இருந்து காப்பது குறித்த வழிமுறைகள் இந்த வரைவு அறிக்கையில் காணப்படவில்லை. ஏற்கனவே உள்ள துறை சார்ந்த அல்லது ஒற்றைப் புலம் சார்ந்த பல்கலைக்கழகங்கள் இணைக்கப்படுமா அல்லது பல துறைகள் சார்ந்த பன்மைத்துவ மிக்க புதிய பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிலையங்கள் உருவாக்கப்படும் என்பது குறித்த தெளிவான விளக்கங்கள் இந்த வரைவு அறிக்கையில் இல்லை. மேற்சொன்னது போல துறை சார்ந்த பல்கலைக்கழகங்கள் தமது நோக்கங்களை மிகச் சிறப்பாகவே நிறைவேற்றி வருகின்றன. இவற்றின் மூலமாக அந்தந்தத் துறைகளில் மிகவும் புதுமையான மற்றும் அவசியமான படிப்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஆராய்ச்சிகளில் மிகவும் பரந்துபட்ட தளத்தில் மிகத் தீவிரமான நோக்கில் இந்தப் பல்கலைக்கழகங்களில் செயல்படுத்தப்படுகின்றன. இந்தப் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டு ஒப்பீட்டளவில் வெகு சில ஆண்டுகளே ஆகின்றன. ஆனால் அவற்றின் செயல்பாடுகள் போற்றத்தக்கதாக உள்ளன. குறிப்பாக அல்லது எடுத்துக்காட்டாக அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கோவை வேளாண் பல்கலைக்கழகம் ஆகியவை தமது நிர்வாகம் கல்விப்புலம் ஆராய்ச்சி ஆகிய அனைத்து துறைகளிலும் தமது தனித்தன்மையை நிரூபிக்கும் விதமாகவும் அத்தகைய நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தினை மெய்ப்பிக்கும் விதமாகவும் செயல்பட்டு வருகின்றன. அங்கீகாரம் வழங்குதல், மேற்பார்வை செய்தல் போன்ற நிர்வாகச் செயல்களைத் தொய்வின்றி செய்ய இதுமாதிரியான துறைசார் பல்கலைக்கழகங்களும் மிக அவசியம். புதிதாக உருவாக்கக்படும் உயர்கல்வி நிறுவனங்கள் வேண்டுமானால் பல துறைகள் சார்ந்த கல்வி நிறுவனங்களாக உருவாக்கப்படலாம்.
P 9.2. : மிகவும் தாராளமயமாக்கப்பட்ட இளநிலை உயர்கல்வியை நோக்கி நடைபோடுதல்: பழங்காலத்தில் 64 கலைகளையும் பயிற்றுவித்து வந்த தக்ஷசீலம் மற்றும் நாளந்தா பல்கலைக்கழகங்களின் போக்கினை ஒட்டி, அனைத்து அறிவுப்புலங்களையும் ஒருங்கிணைத்த இளநிலைக் கல்வியை உருவாக்குதல்.
நமது பார்வை: இதற்கு முன்பாக சொல்லப்பட்ட பலதுறை சார்ந்த கல்வி நிலையங்களை உருவாக்குதல் என்ற கொள்கையினோடு இணைத்து இந்தக் கொள்கையும் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், முன்னதாக முன்னுரையில் சவால்கள் வரிசையில் சொல்லப்பட்ட கல்வி நிறுவனங்களின் வகைப்பாட்டுக்கும் இதற்கும் முரணாக உள்ளது. இளநிலை உயர்கல்வியானது பெரும்பாலும் பல்கலைக்கழகங்கள் தவிர்த்த கல்லூரிகளில் மட்டும் வழங்கப்படும் என்ற கொள்கையின்படி பார்த்தால் இந்தக் கொள்கையை இன்னும் விரிவாக அணுக வேண்டியுள்ளது. சாய்ஸ் பேஸ்டு கிரடிட் சிஸ்டம் (சி.பி.சி.எஸ்) என்கிற முறையின்படி இப்போதும் இளநிலை அறிவியல் பாடப்பிரிவு பயிலும் ஒரு மாணவர் கலைத்துறையில் உள்ள உதாரணத்துக்கு ஓவியத்தையோ அல்லது வரலாற்றையோ விருப்பப்பாடமாக எடுத்துப் படிக்கும் சுதந்திரம் உள்ளது. சி.பி.சி.எஸ் முறையை இன்னும் விரிவாகவும், ஆழமாகவும் நடைமுறைப்படுத்தும்போது ஒரு மாணவர் மூன்று அல்லது நாண்காண்டு இளநிலை உயர்கல்வி படிப்பை முடிப்பதற்குள் பலதுறையில் பரந்து பட்ட அனுபவத்தைப் பெற முடியும்.
இளநிலை உயர்கல்வியில் சூப்பர் ஸ்பெசாலிட்டி எனப்படும் உயர்சிறப்பு பிரிவிவுகளை வழங்குவது மாணவர்களுக்குப் பரந்துபட்ட அறிவைப் பெறுவதற்குத் தடையாக இருக்கும். ஆகவே இளநிலை அளவில் மாணவர்களுக்கு பரந்து பட்ட பலதுறை அறிவைப் புகுத்துவது சரியான அணுகுமுறையாகவே இருக்கும். அவர்கள் முதுநிலை மற்றும் முனைவர் பட்ட கல்விப்படிப்புகளில் இணையும்போது உயர்சிறப்பு பிரிவுகளில் தம்மை ஈடுபடுத்திக்கொள்வது மேலும் நலன் பயக்கும்.
P 9.3 : ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அளித்தல்: ஆசிரியர்களுக்கு தன்னாட்சி அளிப்பதன் மூலம் அவர்கள் மிகவும் இலகுவான மற்றும் பயனளிக்கக்கூடிய கற்பிக்கும் முறைகளைத் தேர்வு செய்ய முடியும். கல்வி நிறுவனங்கள் தன்னாட்சி பெறுவதன் மூலம், நிதியாதாரங்களைப் பெருக்கிக்கொள்ள வழி செய்யப்படும். மேலெழுந்துவரும் புதிய கல்விப்பிரிவுகளை அறிமுகம் செய்யவும் இது உதவும்.
நமது பார்வை: உண்மையில், பல்கலைக்கழகங்கள் மற்றும் சில தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் தவிர மற்ற அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு தன்னாட்சி என்பது குறைந்த அளவிலேயே உள்ளது. உதாரணத்திற்கு அண்ணா பல்கலைக்கழக இசைவு பெற்றக் கல்லூரிகளில் பாடத்திட்டம் மிகவும் இறுக்கமானது. அதை அண்ணா பல்கலைக்கழகமே முடிவு செய்கிறது. ஒரு பொறியியல் கல்லூரியில் உள்ள ஆசிரியர் அதை மாற்ற முடியாது. சொல்லிக்கொடுக்கும் முறைகள் நேர அளவு, தேர்வு முறைகள் ஆகிய அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டவை. இதன் மற்றொரு அபாயம் என்னவெனில் இத்தகைய கல்லூரிகளில் படித்து வெளிவரும் மாணவர்கள் ஒரே விதமான அனுபவத்தையும் அறிவையும் பெற்றிருப்பர். புதுமையான முன்னெடுப்புகளை செய்வதற்குக் குறைந்த அளவிலேயே இடமுள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி வழங்காமல் ஆசிரியர்களுக்கு என்று தனிப்பட்டு வழங்க முடியாது. ஆனால் கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி வழங்குவதில் மிகக் கடுமையான நெருக்கடிகள் உள்ளன. அண்ணா பல்கலைக்கழகம், ஏ.ஐ.சி.டி.இ. போன்ற கடுமையான மேற்பார்வை அமைப்புகள் இருப்பதாலேயே நிறைய தனியார் கல்லூரிகள் முறையான வசதிகளுடன் குறைந்தபட்ச தரமுள்ள கல்வியை அளித்து வருகின்றன. எல்லோருக்கும் தன்னாட்சி அளிக்கும் போது, அவர்களைக் கட்டுப்படுத்தும் கடுமையான அமைப்புகள் இல்லாதபோது வெறும் லாபநோக்கிற்காக மட்டும் நடத்தப்படும் தனியார் கல்வி நிறுவனங்கள் இந்தத் தன்னாட்சியை தமது லாபத்திற்காகப் பயண்படுத்தி அதிக வருமானம் சம்பாதிக்கலாம். அது நேரடியாக மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வியின் தரத்தை பாதிக்கும். மேற்சொன்ன கொள்கையைக் கட்டுப்படுத்தும் அமைப்புகளின் பங்கேற்புடன் நிறைவேற்றுவதே நடைமுறையில் வெற்றியை அளிக்கும்.
P 9.4 : பாடத்திட்டம், கற்பிக்கும் முறைகள், தேர்வு முறைகள் மற்றும் மாணவர்களுக்கான ஆதரவுமுறைகள் ஆகியன சீரமைக்கப்படும்: மேற்சொன்ன முறைகள் இயந்திரத்தனமாகப் பின்பற்றப்படுவது குறைக்கப்படும். மதிப்பீடு முறைகள் கல்விப்பிரிவுகளின் இலக்கு மற்றும் நோக்கினைத் தேர்வு செய்வதாக இருக்கும். திறந்தவெளி மற்றும் அஞ்சல் வழிக்கல்விகள் மேம்படுத்தப்படும்.
நமது பார்வை: மேற்சொன்ன அத்தனை சீரமைப்பு முறைகளும் காலந்தோறும் ஒவ்வொரு அரசாலும் பேசப்பட்டு வருகின்றன. சுமார் 200 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் மரபார்ந்த கல்விமுறையை மாற்றுவதற்கு மிகவும் பாரிய அளவிலான உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அவசியம். அதை லாப நோக்கில் செயல்பட்டுவரும் தனியார் கல்வி நிறுவனங்கள் எந்தளவு சிரத்தையோடு மேற்கொள்ளும் என்பது பெரிய கேள்விக்குறி. மத்திய மாநில அரசுகள் கல்வியில் அதிகளவு தனியார் மயமாக்கி வரும் சூழலில் இந்தக் கொள்கையை செயல்படுத்துவது மிகப்பெரும் சவாலாக அமையும்.
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விப்பிரிவுகளில் முன்னதாகவே, அவுட்கம் பேஸ்டு எஜுகேசன் (ஓ.பி.இ.) எனப்படும் விளைவு நோக்கிய கல்விமுறையானது பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. நேக் (NIRF) என்.பி.ஏ. (NIRF) மற்றும் என் .ஐ.ஆர்.எஃப். (ழிமிஸிதி) போன்ற தேசிய அளவிலான தர மற்றும் மதிப்பீட்டு அமைப்புகளும் மேற்சொன்ன அவுட்கம் பேஸ்டு எஜுகேசன் முறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதால் கல்வி நிறுவனங்கள் அந்த முறையைப் பின்பற்ற ஆரம்பித்துள்ளன. ஆனால் இது போன்ற முறைகளில் செயல்படும் போது வழக்கத்தைவிட அதிகமான உள்கட்டமைப்பு வசதிகளும், அதைச் செயல்படுத்தும் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவசியம்.
P 9.5 : ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகள் ஆகியவற்றின் நியமனம் மற்றும் பதவி உயர்வுகள் ஆகியவை தகுதியின் அடிப்படையிலேயே உறுதி செய்யப்படும். இக்கொள்கையின்படி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரின் 18 மற்றும் அவர்களின் பதவிக்காலம் பதவி உயர்வுகள், ஊதிய உயர்வுகள் அனைத்தும் அவர்களின் கல்வி ஆராய்ச்சி மற்றும் சேவை சார்ந்த தகுதிகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். உயர்கல்வி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவர்கள் முன்னதாகவே தெரிந்தெடுக்கப்பட்டு வளர்க்கப்படுகிறார்கள்
நமது பார்வை: அனேகமாக கல்வித் தரத்தின் உயர் கல்வித் தரத்தின் மீது எதிர்பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அனைவரும் வரவேற்கக் கூடிய ஒரு கொள்கை முடிவு இதுவாகத்தான் இருக்கும் ஆசிரியர்களின் நியமனம் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புக் காண நியமனங்கள் முறையானபடி அமையும் போது தகுதியானவர்கள் அப்படியான பொறுப்புகளில் நியமிக்கப்படும் போது இயல்பாகவே தரமான கல்வி உறுதி செய்யப்படுகிறது. குறிப்பாக இந்தக் கொள்கை முடிவு ஆசிரியர்களின் நியமனம் ஒப்பந்த அடிப்படையில் இராது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் பதவிக் காலம் ஆனது அவர்களின் கல்வி ஆராய்ச்சி மற்றும் சேவைப் பணிகள் சார்ந்த தகுதிகளின் அடிப்படையிலேயே நீட்டிக்கப்படும். அவர்களின் பதவி உயர்வும் சம்பள உயர்வும் இதனடிப்படையிலேயே முன்வைக்கப்படும். நிர்ணயிக்கப்படும் என்பது மிகவும் கடுமையான ஆனால் வரவேற்கத்தகுந்த ஒரு முடிவாகும் இதன் மூலம் அனைவருக்கும். இப்படியான கடுமையான வழிமுறைகள் உறுதியாக உயர் கல்வியின் தரத்தை உயர்த்தும் என்று நாம் எதிர்பார்க்கலாம். மேலும் இந்தக் கொள்கை அறிவிப்பு குறிப்பிட்டுள்ளபடி உயர்கல்வி நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புக் கான நியமனங்கள் முன்னதாகவே உறுதி செய்யப்படும். ஆனால் அது மிகவும் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கும். நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகள் இலகுவாக மாற்றப்படும்போது மாற்றிக் கொள்ளப் படும்போது பிரச்சினைகள் குறையலாம் மேலும் கொள்கை அறிவிப்பை குறிப்பிட்டுள்ளபடி முன்னதாகவே தெரிவு செய்யப்படும் தலைமைப் பொறுப்பு கணவருக்கு பலதரப்பட்ட பயிற்சிகளும் அளிக்கப்படும் என்று தெரிகிறது. இதுவும் வரவேற்கத்தக்கது.
P 9.6 : தேசிய ஆராய்ச்சி அமைப்பு உருவாக்குதல்
தேசிய ஆராய்ச்சி அமைப்பு (National Research Foundation – NRF) என்ற அமைப்பினை உருவாக்கி, கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சியை மேம்படுத்தும் பொருட்டு, ஆய்வுகளுக்கான நல்கைகளை வழங்குதல்.
நமது பார்வை: ஏற்கனவே இந்தியாவில் இது போன்ற ஆய்வுகளுக்கு நல்கைகள் தரும் அமைப்புகள் (அறிவியல் தொழில்நுட்பத்துறை, உயிர்த்தொழில் நுட்பவியல் துறை, அறிவியல்- பொறியியல் ஆராய்ச்சிப் பிரிவு, சுற்றுச்சூழல் அமைச்சகம், இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் போன்ற பல அமைப்புகள்) அதிகமாக உள்ளன. அவற்றுக்குப் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாத காரணங்களாலேயே ஆய்வுகளுக்கான நல்கைகள் குறைந்த அளவில் வழங்கப்பட்டு வருகின்றன. கொள்கை அறிவிப்பில் உள்ளபடி பார்த்தால் இந்த தேசிய ஆராய்ச்சி அமைப்பானது ஏற்கனவே உள்ள அமைப்புகளிலிருந்து வேறுபட்டது என்பதற்கு சரியான விளக்கங்கள் இல்லை. அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைக்கப்பட்டு புதிதாக இந்த தேசிய ஆராய்ச்சி அமைப்பு என்ற ஒன்றே ஒன்று உருவாக்கப்படுமா அல்லது ஏற்கனவே உள்ள அமைப்புகளுடன் கூடுதலாக இந்த தேசிய ஆராய்ச்சி அமைப்பானது உருவாக்கப்படுகிறது என்பதற்கான தெளிவான விளக்கங்களும் கொள்கை அறிவிப்பில் இல்லை. போக, கொள்கை அறிவிப்பானது, நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் செய்யப்பட்டு வரும் ஆய்வுகளை மிக அநியாயமான அளவுக்கு குறைத்தே மதிப்பிட்டுள்ளது. சரியான நிதி ஒதுக்கீடு இல்லாமல் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்களில் அருமையான ஆய்வுப்பணிகளும் தடைப்பட்டுள்ள சூழலில், கொள்கை அறிவிப்பானது தவறான நோக்கில் இதை அணுகியுள்ளது மிகவும் வருந்தத்தக்கது.
P 9.7 : உயர்கல்வி நிறுவனங்கள், கல்வியியல் மற்றும் நிர்வாகவியல் ரீதியில் தன்னாட்சி பெற்ற தன்னிச்சையான அமைப்புகளால் நிர்வகிக்கப்படும்.
நமது பார்வை: இன்றைக்கு அரசால் கட்டுப்படுத்தப்படும் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் மேற்சொன்னது போன்ற தன்னிச்சையான தன்னாட்சி மிக்க அமைப்புகளே நிர்வகித்து வருகின்றன. கல்வி நிறுவனங்களைப் பணம் போட்டு ஆரம்பித்தவர்களே அதை நிர்வகிக்கும் குழுக்களின் தலைவர்களாகவோ அல்லது ஒட்டுமொத்த நிர்வாகத்தின் தலைவர்களாகவோதான் இப்போதும் உள்ளனர். இதில் என்ன புதிதாக செய்யப்படும் என்பதற்கான நேரடியான விளக்கங்கள் கொள்கை அறிவிப்பில் இல்லை.
P 9.8 : எளிதான ஆனால் உறுதியான கட்டுப்பாடுகள்: தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் ஒரே ஒரு அமைப்பு கட்டுப்படுத்தும். அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் ஒரே மாதிரியாக அணுகப்படும்
நமது பார்வை: இந்தக் கொள்கை அறிவிப்பில் மிகவும் முக்கியமான அறிவிப்பு இதுவே ஆகும். கடந்த ஆட்சியில் கூட இதுபோன்ற அமைப்பினை உருவாக்குவதற்காக சில முறைகள் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு போதிய ஆதரவின்மையால் நிறைவேற்றப்படவில்லை. மேம்போக்காக பார்த்தால் ஒரே ஒரு அமைப்பு அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் திறம்பட, ஒன்று போல பாவித்துக் கட்டுப்படுத்தும் என்று தோன்றும். ஆனால் நம் நாட்டில் மிகப்பரவலான அளவில் வேறுபட்ட கல்வி நிறுவனங்கள் கல்விப்புலங்கள் உள்ளன. பெரும்பாலான பெரிய நாடுகளில் தனித்தனி அமைப்புகளே அந்தந்த கல்விப் புலங்களை நிர்வாகிக்கின்றன. உதாரணத்துக்கு, மருத்துவக் கல்வியின் நிர்வாக அமைப்பு வேறு; பொறியியல் கல்வியின் நிர்வாக அமைப்பு வேறு. இவ்விரு கல்விப்புலங்களிலும் பட்டங்களின் பெயர்கள் உட்பட பாடத்திட்டங்கள், கற்பிக்கும் முறைகள், மாணவர் சேர்க்கைத்தகுதிகள், ஆசிரியர் பணி நியமனத்தகுதிகள், உள்கட்டமைப்பு வசதிக்கான கட்டுப்பாடுகள் என அனைத்தும் வேறு வேறு வகைப்பட்டவை. நாட்டில் மருத்துவக் கல்வி, பொறியியல் கல்வி, வேளாண் கல்வி, கலை அறிவியல் கல்வி, உடற்கல்வி, நுண்கலைக் கல்வி போன்ற எண்ணற்ற கல்வி அமைப்புகள் உள்ளன. இவை அத்தனைக்குமான கட்டுப்பாடு அமைப்புகள் தனித்தனியே உள்ளன. அவற்றுக்கான கட்டுப்பாடு மற்றும் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் பொதுவானதொரு அமைப்பின் கீழ் கொண்டு வருவதென்பது கற்பனைக்கும் எட்டாத கடினமான காரியமாகும். அப்படியான பொதுவான அமைப்பு உருவாக்கப்பட்டால் அது மிகவும் குழப்பமான சிக்கல்களை உருவாக்கும்.
சுருங்கச் சொல்லின், இக்கொள்கை வரைவானது ஆளும் மத்திய அரசின் சில கொள்கைசார் போக்குகளைப் பழைய கல்விக்கொள்கைகளின் ஊடே புகுத்தி ஊதிப் பெரிதாக்கப்பட்ட ஒன்றாகப் பார்க்க முடியும். இவைகளை நிறைவேற்றுவது குறித்த நேரடியான வழிமுறைகள் இதில் இனம் காணப்படவில்லை. பழைய மொந்தையில் புதிய கள் என்றும் கொள்ளலாம்.