கடந்த 2018ஆ-ம் வருடம், கர்நாடகச் சட்டசபைத் தேர்தல் முடிவு முழுமையாக வந்து சேர்வதற்குள் பல கூத்துக்கள் அரங்கேறின. வரலாற்றில் பதிவு பண்ண வேண்டிய அளவுக்கு அழுகுணி ஆட்டம் ஆடியது பாரதிய ஜனதா கட்சி. நள்ளிரவு உச்சநீதிமன்றத்துக்குப் போய் முறையிட்டுக் கதறின எதிர்க்கட்சிகள். சற்றே நெகிழ்ந்து அந்த நீதிபதிகள் இட்ட கட்டளைகளால்தான் ஒரு வருடத்திற்கேனும் அங்கு மக்களாட்சி பிழைத்திருந்தது. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களைக் கடத்தி, அதைக் கொண்டு பின்வாசல் வழி நுழைந்து, மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட்டார் எடியூரப்பா. பெரும்பான்மையை நிரூபிக்க இடைத்தேர்தல் முடிவுகளுக்காகக் காத்துக் கிடக்கிறார்! மாறாக, இப்போது நடந்து முடிந்த மகாராஷ்டிர சட்டசபைக்கான தேர்தலில், அப்படி எந்தப் பதிவுக்கும் அவசியமில்லாமல், சற்றும் குழப்பமின்றி பாரதிய ஜனதா – சிவசேனை கூட்டணி தனிப்பெரும்பான்மைக்குச் சற்று அதிகமான தொகுதிகளை வென்றிருந்ததால், மீண்டும் அதிகாரப்பூர்வமாய் அரியணை ஏறத் தயாரானார் முதல்வராய்த் தொடர்ந்த தேவேந்திர பட்னவீஸ்!
அந்த முடிவுகளில் கிட்டிய துளியூண்டு மகிழ்ச்சி, தேசிய ஊடகங்கள் கணித்தளவுக்கு அந்தக் கூட்டணி பெரு வெற்றியைப் பெற்றுவிடவில்லை. அவர்கள் 200 முதல் 230 தொகுதிகள் வரை பாரதிய ஜனதாவும் சிவசேனையும் சேர்ந்து பெறுமென்று கணித்திருந்தார்கள். ஆனால், தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான 145 தொகுதிகளைக் காட்டிலும் 16 தொகுதிகளை மட்டுமே அதிகமாக வென்றிருந்தது அந்தக் கூட்டணி!
அதுவே திடீர் திருப்பத்தைத் தருமென யாருமே கனவுகூடக் கண்டிருக்கவில்லை. அதைவிட பேராச்சர்யம், அந்தத் திருப்பம் இவ்வளவு பிடிவாதமாக நீளுமென்பதை ஒருவரும் கணிக்கவில்லை. அதுவே தற்கால தமிழ் சினிமாக்களுக்கு வைப்பதுபோல 2, 3, என்று முந்தைய தலைப்புத் தொடர்ச்சிக்கு அவசியமாகிப் போனது. அமித்ஷா அண்ட் கோ கர்நாடாகவில் ஆடிய ஆட்டத்தைத் தொகுத்துதான் ‘ஆடிய ஆட்டமென்ன’ என்று முதல் பகுதியை எழுதியிருந்தேன். இப்ப மகராஷ்ட்ரா, இது இரண்டாம் பகுதி!
சிவசேனைக் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னா, தொடர்ந்து பாரதிய ஜனதா ஆட்சியைக் கடுமையாக விமர்சித்த வண்ணம்தான் இருந்தது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி, இந்தித் திணிப்பு, விவசாயிகளின் தற்கொலை, அவர்களுக்குக் கடன் தள்ளுபடி செய்வதில் காட்டும் பாராமுகம், நாட்டின் பொருளாதார மந்தநிலை, போன்றவைகளை மட்டுமல்லாது மாநில அரசியலில் அத்துமீறும் பாஜகவினரின் நடவடிக்கைகளையும், முறையற்ற வழிகளில் அதிரடியாக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சிப் பிடிக்கும் தந்திரங்களையும் கண்டித்து எழுதி வந்தது!
ஆனாலும், ஒவ்வொரு தேர்தலின்போதும் முதலில் சிலுப்பிக் கொண்டாலும், இறுதியில் சிவசேனை பாரதிய ஜனதாக் கட்சியுடனேயே கைகோர்த்தது. 2019 மக்களவைத் தேர்தலில் தேர்தல் அறிவித்த பின்னர் கூட அவர்களுடன் கைகோர்க்க சிவசேனை தயங்கியது. பிறகு ஏதேதோ வாக்குகள் கொடுக்கப்பட்டு அவர்களைத் தங்கள் கூட்டணியில் இணைத்தார் அமித்ஷா!
தேர்தல் முடிவுகளில் பெரிய பின்னடைவைச் சந்திக்குமென எதிர்பார்த்த அந்தக் கூட்டணி, சூதாட்டம் போல ஜாக்பாட்டை அள்ளியது எதிர்பாராத ஒன்று! மக்களவைத் தேர்தல் முடிந்து நான்கு மாதங்கள்கூட பூர்த்தியாகியிருக்காத நிலையில் மராட்டியச் சட்டசபைத் தேர்தலுக்கான அறிவிப்பு வந்தது. இம்முறையும் உடனடியாக அந்தக் கூட்டணி கைகூடவில்லை! பிறகு உன்னைவிட்டா எனக்கு வக்கு இல்ல, என்னைவிட்டா உனக்கு வேறவழி இல்ல என்ற சித்தாந்த அடிப்படையில் மீண்டும் கைகோர்த்தனர்!
மராட்டிய சட்டசபைக்கு நிகழ்ந்த தேர்வு முடிவுகள் வந்துகொண்டிருந்தபோதே, அரியானா தேர்தல் முடிவுகளும் வந்தன. அங்கும் தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகளைகூடத் தவிடுபொடியாக்கி, ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மை பெறாமல் தள்ளாடிக் கிடந்தது. ஆனால், ஆட்சியமைக்க ரவுடிகளுடனும் தயக்கமின்றி சகவாசம் கொண்டு, மைனாரிட்டி அரசை அங்கு வெற்றிகரமாக அமைத்தும்விட்டது. இங்கிட்டுப் பாத்தா உத்தவ் தாக்கரே திடீர் குண்டொன்றைப் போட்டார்!
பாரதிய ஜனதா முன்பே வாக்களித்தபடி, இரண்டரை ஆண்டு கால முதல்வர் பதவியை எங்களுக்கே முதலில் தரவேண்டும். எங்கள் கட்சி ஆள்தான் முதல்வராவார் என்றது சிவசேனை!
ஆஹா, அப்படியெல்லாம் நாங்க யாருக்குமே அம்மா சத்தியமா வாக்கு கொடுக்கவில்லை என்று அதிர்ச்சி முகம் காட்டினார் பட்னவீஸ்!
ஹலோ பட்டு சார், நீங்க உங்க ஓனரப் பேசச் சொல்லுங்க. உங்க கூடல்லாம் பேசறதில்ல என்றார் உத்தவ் தாக்கரே!
பங்காளிகள் தங்களுக்குள் சும்மா விளையாட்டுக்கு மோதிக் கொள்கிறார்கள், சீக்கிரம் சமாதானமாகிவிடுவார்கள் என அனைவரும் நம்பிக்கொண்டிருக்க, அங்கு சட்டமன்றம் காலாவதியாகி, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டிய சூழல் உருவான போதுதான் பலரும் திடுக்கிட்டனர்!
சிவசேனை கோரிக்கைகளை ஏற்க முடியாது, நாங்கள் ஆட்சியமைக்கப் போவதில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்ததோடு நில்லாமல் தன் பதவியை விட்டும் விலகினார் முதல்வர் தேவேந்திர பட்னவீஸ். அதற்கிடையே சிவசேனை, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி ஆட்சிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. ஓரிரு நாள் பொறுங்கள், கூட்டணி இறுதியாகிவிடும் என்று இவர்கள் சார்பாக விடப்பட்ட கோரிக்கையை நிராகரித்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்திவிட்டார் மராட்டிய ஆளுநர் திரு.பகத்சிங் கோஸ்யாரி. உத்தர்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவர் தீவிர ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் நீண்ட நாள் உறுப்பினர்!
அதன்பின் பாரதிய ஜனதா கட்சி, காட்சியிலிருந்து விலகிவிட, மூன்று கட்சிகள் இணைந்து தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டேயிருந்தன. அது தொடர்கதையாகிப் போனதால், ஊடகங்களே பொறுமையிழந்து வேறு சேதிகளுக்குத் தாவிவிட, இதுவரை தன் மகனான ஆதித்ய தாக்கரேவை முதல்வராக்க விரும்பிய உத்தவ் தாக்கரே, சற்று மனம்மாறி தானே முதல்வராகப் போவதாகக் கூற, அதை மனமுவந்து இரு காங்கிரஸ்களும் ஆதரித்தன. கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கும் மேலாக நீண்டு வந்த இந்தப் பேச்சு, கடந்த வெள்ளி அன்று, அதாவது 22.11.2019 இரவு 11 மணிக்கு இறுதிக்கட்டத்தை எட்டியது. மறுநாள் காலை 23.11.2019 பத்துமணிக்கு ஆளுநரைச் சந்தித்து, குடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்கி, உத்தவ் தாக்கரேவை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கக் கோருவது என்று ஒருமனதாக முடிவெடுத்து, அதை ஊடகங்களுக்கும் அறிவித்துவிட்டு அனைவரும் உறங்கச் சென்றனர்!
காற்று மாசும், பனியும் படர்ந்து விடிந்தும் விடியாமலிருந்த அந்தச் சனிக்கிழமை காலை, அத்துணை மாபெரும் அதிர்ச்சியை இந்திய மக்களுக்கு அளிக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. முதல்வராகப் பதவியேற்றார் தேவேந்திர பட்னவீஸ், துணை முதல்வராகப் பதவியேற்றார் அஜீத்பவார் என்று பளீர் செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது!
தூக்கக் கலக்கத்திலிருந்த நான், இதுதான் தெரிஞ்ச விஷயமாச்சே, அது ஏன் விடிகாலைல பதவியேத்துக்கிறாய்ங்க, நல்ல நேரத்துக்கு அடிமையான லகடபாண்டிக போல என்றே அந்தச் செய்தியை நான் எதிர்கொண்டேன். துணை முதல்வர் யார் என்பதை உள்வாங்கிய நான் முதல்வர் யார் என்பதை சரியாகக் கவனிக்கவே இல்லை!
இந்தியாவின் எந்த ஊடகங்களுமேகூட இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதால் அவர்களுக்கும் என்ன நடந்தது, நடக்கிறது என்றும் புரியாமல் குழம்பிக் கிடந்தனர். செய்திகளை வாசிக்காது வெறும் எழுத்துக்களை மட்டுமே ஓடவிட்டுக் கொண்டிருந்தனர். பிறகுதான் எங்கும் உத்தவ் தாக்கரே பெயர் இல்லாமல் பட்னவீஸ் பெயர் மட்டுமே வருவதைப் பார்த்து, தலையை உலுக்கி, எஞ்சியிருந்த தூக்கம் அத்தனையையும் உதறி, தெளிவடைந்தேன்!
லேசே எனக்கு நெஞ்சடைப்பு வந்ததைப் போன்று இருந்தது. துளி சம்பந்தமில்லாத எனக்கே இப்படி இருந்ததெனில், மகாராஷ்ட்ராவில் சிவசேனை- காங்கிரஸ் தொண்டர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? அதற்குள் சமூகவலைத்தளங்களில் உத்தவ் தாக்கரே முதுகில் குத்திய சரத்பவார், வாழும் சாணக்கியன் அமித்ஷா, அதிசயம் நிகழ்ந்தேவிட்டது. அற்புதம், என்றெல்லாம் பதிவுகள் ஆர்ப்பரிக்க ஆரம்பித்தன!
மீண்டும் ஓர் அதிரடித் திருப்பமாய் காலை எட்டரைக்கு சரத்பவாரின் ஒரு ட்வீட் பரப்பப்பட்டது. அதில் அஜித்பவாரின் செய்கைக்கும், தேசியவாத காங்கிரஸுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. பாரதிய ஜனதாவுக்கு அவர் ஆதரவளித்தால் அது அவருடைய தனிப்பட்ட விருப்பம். எங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் அஜித்பவார் பக்கம் போக மாட்டார்கள். நாங்கள் தொடர்ந்து உத்தவ் தாக்கரேவுக்கே எங்கள் ஆதரவை அளிக்கிறோம்!
பனி உருகி ஆவியாகி சற்றே வெளிச்சம் பரவியது. ஆக, சரத்பவார் கட்சி உடைபட்டிருக்கிறது. அவருடைய கட்சியிலிருந்து பெருவாரியான எம்.எல்.ஏ.க்களை தன்வசப்படுத்தி அஜீத்பவார் அவருடன் அங்கு அழைத்துச் சென்றுவிட்டார். வழக்கம்போல அமீத்ஷா-மோடி தன் பலத்தைக் காட்டிவிட்டனர். இந்தியாவில் இனி இவர்களை அசைக்க எவராலும் முடியாது என்று முன்பைவிட பலமான ஆதரவு அவர்களுக்குப் பெருகி வலம்வர ஆரம்பித்தது!
சரி, இதெல்லாம் எப்படி சாத்தியமானது என்று அடுத்தடுத்து செய்திகள் வந்தபடி இருந்தன. வெள்ளி இரவு 11:30 மணிக்கு உத்தவ் தாக்கரே தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்பது என்கிற இறுதி முடிவு எடுக்கப்பட்டு அனைவரும் கலைந்து சென்றபின், 11:45 மணிக்கு தேவேந்திர பட்னவீஸைத் தொடர்புகொண்ட அஜீத்பவார், தன்னிடம் 54 தேசியவாத எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதமிருப்பதாகவும், துணை முதல்வர் பதவி அளித்தால், அவர்களுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கலாமென்றும் உறுதி கூறினாராம்.
உடனடியாக நடுவண் உள்துறை அமைச்சர் அமீத்ஷாவைத் தொடர்புகொண்ட தேவேந்திர பட்னவீஸ், இந்தச் சேதி சரத்பவாருக்கோ, சிவசேனாவுக்கோ தெரிவதற்குள், விடியும்முன் ரகசியமாக நானும், அஜீத்பவாரும் பதவியேற்றுக் கொண்டால்தான் பெரிய பிரச்சினைகளோ, குழப்பமோ ஏற்படாது, ஆவண செய்யவும் என்றிருக்கிறார்!
அமீத்ஷா மோடியை அந்தக் குளிர் நள்ளிரவில் எழுப்பியிருக்கிறார். ரகசிய ஆலோசனை நடைபெற்றிருக்கிறது. இவர்கள் பதவியேற்க வேண்டுமானால் முதலில் அங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்க வேண்டும். அதற்கு முதலில் அந்த மாநில ஆளுநர் எழுத்துப் பூர்வமாக அதைப் பரிந்துரைக்க வேண்டும். அந்தப் பரிந்துரையை அமைச்சரவைகூடி, விவாதித்து, குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்கித் தீர்மானம் இயற்ற வேண்டும். அந்தத் தீர்மானம் பிறகு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு, அதை அவர் ஏற்றுக் கையெழுத்திட வேண்டும். இவ்வளவு நடைமுறைகள் தேவைப்படும் ஒரு விஷயத்தில், சில நிமிடங்களில் இதைச் சாதித்திருக்கிறார்கள். அம்புட்டு அதிகார வெறி!
பிரதமருக்குரிய சிறப்பு அதிகாரங்களுள் ஒன்று, அரசாங்கப் பரிவர்த்தனை விதிகள் சட்டப்பிரிவு 12-ஐப் பயன்படுத்தி, அமைச்சரவையைக் கூட்டாமலேயே இந்தத் தீர்மானத்தை பிரதமர் இயற்றமுடியும். பொதுவாக போர் அல்லது நாட்டின் மிக இக்கட்டான நிலையில் இதைப் பிரதமர் பயன்படுத்தலாம் என்பது அரசியலமைப்பு விதி. அதாவது இதற்குமுன் இதைப் பயன்படுத்தி எமர்ஜென்சியை அறிவித்திருந்திருக்கிறார் முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்தி!
எந்த வழியிலேனும் அதிகாரத்தை ருசித்துவிட வேண்டுமென்கிற நிலையிலிருக்கும் பக்தாள்கள், இந்த மிகச் சாதாரண விஷயத்திற்காகக்கூட இதைப் பயன்படுத்த முடிவெடுக்குமளவு வெறி அவர்களை ஆட்கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு வேலைக்காக டெல்லி கிளம்பவிருந்த மகராஷ்டிர ஆளுநர் பகத்சிங் பயணத்தை உடனடியாகத் தள்ளிப்போடுமாறு உத்தரவு வந்திருக்கிறது! நடுராத்திரி என்றும் பாராது தள்ளாத வயதிலிருந்த அவரை, குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்கக் கோரும் பரிந்துரையை உடனடியாக டைப் செய்து அனுப்புமாறும் உத்தரவிட்டிருக்கின்றனர்!
அவரிடமிருந்த அந்தப் பரிந்துரையை வாசித்த பிரதமர் மோடி, தன் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, அமைச்சரவையைக் கூட்டாமலேயே தீர்மானமாக்கி, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்! என்ன அவல நகைச்சுவை என்றால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை, அந்த நள்ளிரவில் எழுப்ப வேண்டிய எந்த அவசியமுமில்லை. பொதுவாகவே கைகளில் ரப்பர் ஸ்டாம்புடன் எந்தத் தீர்மானமென்றாலும் அதில் அதைக் குத்திக் கையெழுத்திட அவர், அவருடைய மாளிகை வாசலில் எப்போதும் தயாராகவேத்தான் இருப்பார்! இந்தத் தீர்மானத்தில் அவர் அதைக்கூடச் செய்யவில்லை. டிஜிட்டல் கையெழுத்திட்டதாய்ச் சொன்னார்கள். தங்களுக்கு ஒரு காரியம் ஆகவேண்டுமென்றால் பிரதமர், ஜனாதிபதிகளின் டிஜிட்டல் கையெழுத்துக்கள் கூடப் போதுமெனுமளவுக்கு இவர்களால் சட்டத்தை நன்கு வளைக்க முடிந்தது மக்களாட்சியின் சாபம்!
அவ்வளவுதான். இதெல்லாமே விடிவதற்குள் அரங்கேறிய நாடகங்கள். ஆறு மணிக்கெல்லாம் பதவியேற்பு உறுதிமொழி ஆணைகளுடன் ஆஜராகுமாறு தலைமைச் செயலருக்கு ஆளுநர் மாளிகையிலிருந்து உத்தரவு பறக்கிறது. அவரும் என்னைப்போலவே அந்தக் கும்மிருட்டில் திருதிருவென முழித்திருக்கிறார். எப்படிப் பார்த்தாலும் ஏழு, -ஏழரை ஆகிவிடும் என்றிருக்கிறார்!
அதற்குள் இங்கு அஜீத்பவார் தன்னுடன் சில தேசியவாத எம்.எல்.ஏ.க்களை வாங்க ஆளுநர் மாளிகைக்குப் போய் டீ சாப்பிட்டு வரலாம் என்றழைத்திருக்கிறார். அங்கு அவர்களுக்குச் சிறப்பு வரவேற்பளித்த ஆட்களைப் பார்த்து அவர்களும் திருதிருவென முழித்திருக்கிறார்கள். பாரதீய ஜனதா ஆட்கள் ஏன் நம்மை வரவேற்க வேண்டும், எதுக்கும் சரத்பவாருக்கு போனைப் போடுவோம் என்று போனைப் பார்த்தால் ஜாமரால் நோ சிக்னல். சரி, அஜீத்பவாரே இருக்கப்ப நமக்கென்ன என்று அந்த நடவடிக்கையைத் தொடர்ந்து கவனிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்!
அப்புறம்தான் அங்கு தேவேந்திர பட்னவீஸ் முதல்வராகவும், அஜீத்பவார் துணை முதல்வராகவும் பதவியேற்ற காட்சி அரங்கேறியது. அரசின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான தூர்தர்ஷனைக்கூட நிகழ்ச்சியை ஒளிபரப்ப அழைக்கவில்லை. இது ராஜதந்திரமா – கள்ள ஆட்டமா என்று அந்த தேசியவாத எம்.எல்.ஏ.க்கள் தலைமயிர்களைப் பிய்த்துக்கொண்டிருந்த வேளையில்தான் சரத்பவாருடைய அதிரடி ட்வீட் வெளியிடப்பட்டது! அப்போதுதான் தாம் அஜீத்பவரால் ஏமாற்றப்பட்டது அவர்களுக்குப் புலப்பட்டது. உடனடியாகப் பாய்ந்தோடி கிட்டிய பஸ் புட்போர்டில் தொற்றிக்கொண்டு, சரத்பவார் வீட்டை அடைந்தனர்!
உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனை எம்.எல்.ஏ.க்கள், சரத்பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஓரிடத்தில் ஒன்றுகூடி, பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்தனர். அதில் அஜீத்பவாருடன் அதிகாலையில் சென்றிருந்த சில எம்.எல்.ஏ.க்களும் அடக்கம். அஜீத்பவாருடைய சூழ்ச்சி தெரியாமல் சிக்கிக் கொண்டோம், தெரிந்தவுடன் அவரைவிட்டு ஓடோடி வந்துவிட்டோம் என்று அவர்கள் ஒப்புதல் வாக்குமூலமளித்தது உலகமெங்கும் ஒளிபரப்பானது!
என்ன இருந்தாலும் அதை பக்தாள்கள் நம்பாமல், பதவியேற்பு விழாவைப் பரவசத்துடன் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். தேவேந்திர பட்னவீஸ் அடுத்த வாரம் 30ஆ-ம் தேதி சனிக்கிழமை எப்படியும் தன் பலத்தை நிருபிப்பார், அவருக்கு சரத்பவார் ஆதரவளிப்பார், இப்போது அவர் உத்தவ் தாக்கரேவை சமாதானப்படுத்த நடித்துக் கொண்டிருக்கிறார் என உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். வாட்ஸ்அப்களில் அமித்ஷாவும், மோடியும் முடிவெடுத்து விட்டார்களெனில் ட்ரம்ப், புடின்களைக்கூடத் தூக்கியெறிந்துவிட்டு, வேற்று ஆட்களை நியமித்துவிட முடியும், அவர்களுடைய அடுத்த ஆபரேஷன் இம்ரான்கானைத் தூக்கிவிட்டு அங்கு வாசிம் அக்ரமை அதிபராக்குவது என்கிறரீதியில் மீம்கள் பரவ ஆரம்பித்தன!
சரத்பவாரை அடுத்த குடியரசுத் தலைவராக்குவதாகவும், அவருடைய மகள் சுப்ரியாவை மத்திய அமைச்சராக்குவதாகவும், அஜீத்பவார் மேலிருக்கும் அனைத்து வழக்குகளையும் நீக்கிவிடுவதாகவும் வாக்கு கொடுத்ததாலேயே இந்த அதிரடி நிகழ்ந்தேறியிருக்கிறது, எனவே இதில் ஏமாந்து போனது பேராசைப்பட்ட சிவசேனையும், கூட்டணி பேச்சுவார்த்தையை இழு இழு இழுவென இழுத்த காங்கிரசும்தான் எனப் புரளிகள் சகட்டுமேனிக்கு உலா வந்தன!
இந்த அவதூறுகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க சிவசேனை-காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஓர் அதிரடி முடிவை எடுத்தன. உச்சநீதிமன்றத்தில் மிக அவசர வழக்கு ஒன்றைத் தொடுப்பதே அது!
இந்த வழக்கை அனுமதித்து, விடுமுறை தினத்தில் மிக அரிய வழக்குகளில் மட்டுமே கூடும் உச்சநீதிமன்ற அமர்வு ஒன்றைக் கூட்ட ஆணையிட்டார் புது தலைமை நீதிபதி பாப்டே. அதன்படி நீதியரசர்கள் ரமணா, அசோக் பூசன், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு அந்த வழக்கை விசாரிக்க 24.11.2019 ஞாயிறு 11 மணிக்குக் கூடியது!
துஷார் மேத்தா, முகுல் ரோகித்கி போன்ற வழக்கறிஞர்கள் அரசு சார்பாக வாதிட, கபில்சிபல், அபிஷேக் சிங்வி போன்ற பிரபல வழக்கறிஞர்கள் வழக்குத் தொடுத்தோர் சார்பாக வாதிட்டனர்.
என்ன வழக்கென்றும் புரியவில்லை, நான் யாருக்கு ஆஜராகி இருக்கிறேன் என்றும் தெரியவில்லை என்று பதிலளித்த துஷார் மேத்தாவைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார் நீதியரசர் ரமணா. அவரைக் கடுமையாகக் கண்டித்துமிருக்கிறார். அவருடைய நோக்கம் வழக்கைத் தள்ளிப்போகச் செய்வதாக இருப்பதைத் தெள்ளத் தெளிவாகக் காணமுடிந்திருக்கிறது அவரால்!
துஷார் மேத்தா இன்னும் ஒருபடி மேலேபோய், இந்த வழக்கை விசாரிக்க ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறீர்கள்? எவ்வளோ வழக்குகள் உங்கள் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்க அவற்றையெல்லாம் உடனடியாக முடிக்குமாறு சொன்னாலும் இதேபோல உடன்படுவீர்களா? என்றெல்லாம் நீதி அரசர்களை, அவர்களுடைய நீதிமன்றத்திலேயே திமிராக விமர்சிக்குமளவு சீர் கெட்டிருந்தது அரசின் ஆணவம்!
தலைமை நீதிபதிதான் எங்களைப் பணித்தார், ஒரே வாரத்திற்குள் அனைத்து வழக்குகளை முடியுங்கள் என்று அவர் உத்தரவிட்டால் அதையும் நிறைவேற்ற நாங்கள் தயாராகவே உள்ளோம், எங்களைப் பற்றிய கவலைகளைவிட்டு நீங்கள் வழக்குப் பற்றிப் பேசுங்கள் என்றிருக்கிறது அந்த அமர்வு!
ஆளுநரின் செய்கை தவறான ஒன்று, எனவே அவருடைய நடவடிக்கைகளுக்குத் தடை விதியுங்கள் என்று முதலில் கோரினார்கள் எதிர்க்கட்சியினர். மராட்டிய அரசு சார்பாக ஆஜரான முகுல், ஆளுநர் நடவடிக்கையில் தலையிட நீதிமன்றங்களுக்கு அதிகாரமில்லை என வாதிட்டார்!
திங்கள் (25.11.2019) காலை பத்தரை மணிக்கு மீண்டும் விசாரிப்பதாகக் கூறி அமர்வு, அந்த வழக்கை ஒத்திவைத்தது. இதுவே ஆளுங்கட்சிக்கு கிட்டிய பாதி வெற்றியாகவும், நல்ல வாய்ப்பாகவுமே பார்க்கப்பட்டது! இனி எம்.எல்.ஏ.க்களைப் பாதுகாக்காவிட்டால் அவர்களை என்ன வேண்டுமானாலும் அதிகாரவர்க்கம் செய்யக்கூடுமென்பதை உணர்ந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனை தங்கள் ஆட்களை நட்சத்திர விடுதிகளில் வைத்துப் பாதுகாக்கத் தொடங்கியது!
மறுநாள் (25.11.2019-திங்கள் காலை 10 மணி) மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விவாதம் ஆரம்பித்தது. அரைத்த மாவையே துஷார் மேத்தாவும், முகுல் ரோகித்கியும் அரைக்க ஆரம்பிக்க, கபில்சிபலும், அபிஷேக்கும் தங்களுடைய ஆழமான தரவுகளை முன்வைத்தனர். அவர்கள் வைத்த கோரிக்கைகளாவன:
1.) உடனடியாக தங்களின் பெரும்பான்மையை தேவேந்திர பட்னவீஸ் – அஜீத்பவார் நிரூபிக்க வேண்டும் !
2.) அதிக நாள் வாய்ப்பளித்தால் அவர்கள் குதிரை பேரத்தில் ஈடுபட்டு மக்களாட்சி தத்துவத்தை சிதைத்துவிடுவார்கள் !
3.) ரகசிய வாக்கெடுப்போ, குரல் வாக்கெடுப்போ நிகழ்த்த அனுமதிக்கக்கூடாது!
4.) ஊடகங்கள் அந்த வாக்கெடுப்பை நேரடி ஒளிபரப்பு செய்யவேண்டும்!
5.) அஜீத்பவார் எந்த ஆதரவுக் கடிதத்தையும் ஆளுநருக்கு வழங்கவில்லை. இவ்வளவு துரிதகதியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்க வாய்ப்பே இல்லை, எப்படி அது சாத்தியமானது என்று ஆளுநரை அழைத்து விசாரிக்க வேண்டும் !
இந்தக் கோரிக்கைளைப் பரிசீலித்த அமர்வு, ஆளுநர் அதிகாரத்தில் தலையிடுவதை விரும்பவில்லை என்றுவிட்டு, அதற்காக மக்களாட்சியைக் காக்காமலும் இருக்க முடியாது. அதைத் தகர்க்க காரியங்கள் நடைபெறும்போது, எங்கள் அதிகாரங்களைப் பயன்படுத்துவது அவசியம் என்றுவிட்டு, (26.11.2019 செவ்வாய்) இறுதித் தீர்ப்பு நாளை என்று மீண்டும் ஒத்திவைத்தது!
வழக்கு அதுபாட்டுக்கு போய்க்கொண்டிருக்க, முதல்வர் தேவேந்திர பட்னவீசும், துணை முதல்வர் அஜீத்பவாரும் சுறுசுறுப்பாகத் தங்கள் அலுவல்களைப் பார்க்கத் துவங்கினர். வெள்ள நிவாரணத் தொகை காசோலைகளில் கையெழுத்திட்டார் பட்னவீஸ். அஜீத்பவாரோ தன்மீது சுமத்தப்பட்டிருந்த வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகளைப் பார்க்கப் பணித்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒன்பது வழக்குகளிலிருந்து வழக்கிற்கான எந்த முகாந்திரமுமில்லை, சான்றுகளுமில்லை என அஜீத்பவார் சில மணிநேரங்களில் விடுவிக்கப்பட்டார், அடடா!
முதன்முறையாக இப்பத்தான் அந்தத் திருதிரு முழிகளோடு தென்பட்டார்கள் பக்தாள்கள். அது பொய்ச் சேதி எனச் சொல்லிப் பார்த்தார்கள். ம்ஹூம். சமீபகாலங்களில் பாரதிய ஜனதாவின் ஊழல் கைகோர்ப்புகளைப் பார்த்துப் பலரும் சலிக்கத் தொடங்கியிருப்பது நல்ல சமிக்ஞைதான். அதற்கு நீரூற்றி உரமுமிட்டது இந்த வழக்கு நீக்க நடவடிக்கைகள்!
வழக்குத் தொடுத்ததோடு நின்றுவிடவில்லை இந்த மூவர் கூட்டணி. திங்கள் மாலை மீண்டும் அனைத்துப் பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி ஊடகங்களை அழைத்து, எங்களுடன் 162 பேர் இருப்பதைக் காணுங்கள். அஜீத்பவாருடன் இப்போது ஒருவர் கூட இல்லை. வேண்டுமானால் இங்கு மகாராஷ்டிர ஆளுநர் நேரடியாக வருகை புரிந்து இதைச் சோதித்துக் கொள்ளட்டும். எங்களுக்கே ஆட்சியமைக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை அவருக்கு அனுப்பவிருக்கிறோம் என பேட்டியளித்தனர். சரத்பவார், சஞ்சய் ராவத், உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே, மல்லிகார்ஜூன கார்கே, அகமத் படேல் என விஐபிக்களால் நிரம்பிக் கிடந்தது அந்த மும்பை ஐந்து நட்சத்திர விடுதியான நியூ ஹயாத்!
இதெல்லாம் முடிந்தபின்னர் வலைத்தளங்களில் ஒரு புரட்சி அரங்கேறியது. #கீமீகிக்ஷீமீ162 என்கிற ஹேஷ்டேக்கில், வழக்கமாக இங்கு தமிழகம், கேரளாவில் பாஜகவினருக்கும், சங்கிகளுக்கும் எதிராக எழுதப்படும் வாசகங்களுடன் பல்லாயிரக் கணக்கில் ட்வீட்கள் வரையப்பட்டன. உலகளவில் அது வைரலானது. நாங்கள் இந்துக்களுமல்ல, இஸ்லாமியர்களுமல்ல, இந்தியர்கள். உன் மதவெறி வடையை இனியும் இங்கு உன்னால் சுட முடியாது என்றெல்லாம் அதில் தென்பட்ட வாசகங்கள் நன்னம்பிக்கையை விதைத்தன!
விடிந்தது. சரத்பவார் எந்தச் சதியும் செய்யவில்லை என்பது ஓரளவு புலப்பட்டது. அதுவே பக்தாள்கள் வயிற்றில் புளியைக் கரைத்திருந்தது. ஆனாலும் வழக்கம்போல இவர்கள் இல்லைன்னா என்ன காங்கிரஸை உடைக்கலாம், சிவசேனாவை உடைக்கலாம், நம்மதுதான் ஆட்சி என்று அள்ளிவிட்டுக் கொண்டிருந்தார்கள். மாறாக சிவசேனாவோ, எங்களை மட்டும் தொட்டுப் பார், மராட்டிய மண்ணை தூங்கா மண்ணாக்கிக் காட்டுகிறோம் என்று தங்களின் வழக்கமான அதிரடியைக் கொட்டியது. சொன்னதோடல்லாமல் டெல்லிக்குத் தப்பவிருந்த ஒரு மாற்றுக் கட்சி எம்.எல்.ஏ.வை, மும்பை விமான நிலையத்திலிருந்து தூக்கிவிட்டதாக சேதிகள் பரவின!
26.11.2019 செவ்வாய்க்கிழமை. மராட்டியத்தைப் பொறுத்தவரை இது முக்கியமான ஒரு நாள். மும்பைத் தாக்குதல் நிகழ்ந்த கோர நாள். 168 இந்தியர்களை எங்கிருந்தோ ஊடுருவிய அந்நியக் கைக்கூலிகள் அநியாயமாகக் கொன்று போட்ட நினைவுதினம். அதேவேளையில் இந்திய அரசியல் சாசனம் அறிமுகப்படுத்தப்பட்ட நாளும் இதுவே!
நீதிமன்றம் தன் அதிரடித் தீர்ப்பை வழங்கியது. 24 மணி நேரத்திற்குள் அதாவது 27.11.2019 மாலை 5 மணிக்குள் தேவேந்திர பட்னவீஸ் அரசு தன் பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும். தற்காலிகச் சபாநாயகரை ஆளுநர் நியமிக்கலாம், வாக்குச் சீட்டில் வாக்கெடுப்பு நிகழ வேண்டும், அனைத்து ஊடகங்களிலும் இது நேரலையாக ஒளிபரப்பப் படவேண்டும். போச்சு. எடியூராப்பாவுக்கு எத்தகைய ஆப்பு செருகப்பட்டதோ அதைவிடக் கூரான ஆப்பு பட்னவீசுக்குப் பரிசாகக் கிட்டியது!
இதை எதிர்க்கட்சிகள் வெற்றியாக ஆர்ப்பரித்து வரவேற்க, இங்கு மாலன்கள் உச்சநீதிமன்றத்துக்கெல்லாம் எங்கிருந்து இவ்வளவு அதிகாரங்கள் கிடைத்தது என்று மக்களிடமே கேள்விகளை எழுப்பினார்கள். அவர்களின் வயிறெரியும் வாடை டெல்லி மாசைவிட அதிகமாக மூக்கைத் துளைத்தது. இத்தனைக்கும் அயோத்தி தீர்ப்பை வானளவு புகழ்ந்த வாய்கள்தான் அது!
எடியூரப்பாவாவது சட்டமன்றத்தைக் கூட்டி அங்கு வாய்கிழியப் பேசிவிட்டு வாக்கெடுப்பைக் கோராமலேயே ஓடிப்போய் பதவிவிலகல் கடிதத்தை அளித்தார். இங்கு இன்னும் சற்று விநோதமாக இருந்தது!
தீர்ப்பு வந்த ஒரு சில மணி நேரத்திலேயே அஜீத்பவாரைக் காணவில்லை என்று ஊடகங்களில் சேதி பரவியது. அதாவது முதல்வர் பட்னவீஸ் அருகில் அவர் தென்படவில்லையாம். ஆமாம், அவர் தன் பதவியைத் துறந்து, ஆளுநருக்கு விலகல் கடிதத்தை அளித்துவிட்டு அதை ஊடகங்களுக்கும் தெரிவித்துவிட்டு எங்கோ மறைந்திருந்தார். பட்னவீஸ் நான் மூன்றரைக்கு உங்களையெல்லாம் சந்திக்கிறேன் என்று ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்தார் !
ஏதேதோ கதைகள் சொல்லிவிட்டு, ஆட்சியமைக்கப் போதிய பலமில்லை, குதிரை பேரங்களில் ஈடுபடுவது எங்கள் குல வழக்கமுமில்லை என்று அளந்துவிட்டு, எனவே பதவி விலகுகிறேன் என்று அந்த நாடகத்தை சுபமாக முடித்துவைத்தார்!
ஆனாலும், தற்காலிக சபாநாயகராக மூத்த உறுப்பினர் திரு.காளிதாஸ் அவர்களை நியமித்து அதாவது 27.11.2019 புதனன்று, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பதவியேற்பு சடங்குகள் நிறைவேற்றப்பட்டு, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை நிறைவேற்றினார் ஆளுநர்.
ஆமாம், அஜீத்பவாரும் பதவியேற்றார். அவர் தேசியவாத எம்.எல்.ஏ.க்களுடன் கலந்து, ஒன்றுமே நடக்கலை, அதெல்லாம் நான் கண்ட கெட்ட சொப்பனமாக்கும் என்றபடி இருந்ததை, அதே அவையிலிருந்த பட்னவீஸ் எப்படிச் சகித்திருப்பாரோ? பாவம்.
குற்றம் புரிந்தவர் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது வரிகளை வாழும் சாணக்கியர் அமித்ஷாவுக்கு அர்ப்பணிப்போம் !