ஆடை நாடாவும் தூக்குக் கயிறும்

 

 

தற்கொலை தொடர்பான

வாக்கு மூலங்களில் சில சாட்சியங்கள்

கடக்க முடியாத படிமங்களாகிவிடுகின்றன.

ஆறாத காயங்களாகி விடுகின்றன

 

தற்கொலை செய்துகொண்ட

மாணவியின் அம்மா

சாட்சியமளிக்கிறாள்

“என் மகள் குழந்தையைப் போன்றவள்

தன் ஆடையின் நாடாவைக்கூட

அவளால் இறுக்கமாக கட்ட முடியாது

அது சருமத்தை அழுத்தும் வலியை

அவளால் தாள முடியாது

அவளால் எப்படி

ஒரு தூக்குக்கயிறின் முடிச்சு

கழுத்தை இறுக்குவதற்குத் துணிய முடியும்?”

 

பிள்ளைகளின் தற்கொலைகள் பற்றிய

அன்னையரின் சித்திரங்கள்

எப்போதும் அப்படித்தான் இருந்திருக்கின்றன

 

வலி பொறுக்க மாட்டாத குழந்தைகளுக்கு

அது எப்படி சாத்தியம் என

ஒரு போதும் நம்ப மறுக்கிறார்கள்

 

ஆனால் அது முடிகிறது

ஒரு கண்ணுக்குத் தெரியாத முடிச்சு

தன்னை மூச்சுத்திணற வைக்கையில்

ஒரு ஆடையின் நாடாவைக் கூட கட்ட முடியாதவர்கள்தான்

ஒரு உறுதியான

பாதியில் அறுந்துவிடாத

தூக்குக் கயிறில் நேர்த்தியான

முடிச்சுகளைப் போடுகிறார்கள்

 

குழந்தைகள் பெரியவர்களாக

வளர்வதன் சாட்சியமே

அவர்கள் தூக்குக்கயிறில்

முடிச்சுப்போட கற்றுக்கொள்வதுதான்

 

ஒரு கொடுமையான காலத்தில்

நம் குழந்தைகள்

கற்றுக்கொள்ள என்னதான் இருக்கிறது?

எனது பெயர் என்னும் துயரம்

 

 

“அப்பா.. எனது பிரச்சினையே

எனது பெயர்தான்”

செல்போனில் வைக்கப்பட்டிருந்த

ஒரு பெண்ணின்

தற்கொலைக் குறிப்பின் வாசகம்

கண்ணில் விழுந்த ஒரு துரும்பைப்போல

உறுத்துகிறது

 

உங்களுக்கு அது விசித்திரமாக இருக்கலாம்

ஒருவர் பெயர் அவரை

தற்கொலைப்பாதை வரை

அழைத்துச் செல்லுமா எனில்

ஆம், அழைத்துச் செல்லும்

அவளது பெயர்

குறுவாளின் பளபளக்கும் முனையாக

அவளைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது

பிறகு ஒரு நாள் அது

அவள் தொண்டையில் இறங்கியது

 

எனக்கும் அப்படி இருக்கிறது

ஒரு பெயர்

நான் அந்தத் துயரத்தை நீண்டகாலமாக

சுமந்துகொண்டிருக்கிறேன்

 

அந்தப் பெயரினால்

நான் சில இடங்களில்

வாசல்படியிலேயே நிறுத்தப்பட்டிருக்கிறேன்

சில இடங்களில்

சகிப்புத் தன்மையுடன்

வரவேற்பரை வரைக்கும்

 

பாதுகாப்பு மிக்க

நுழைவாயில்களில்

காவலர்கள் எல்லோரையும்

ஒரு முறை சோதித்தார்கள் எனில்

என்னை மட்டும் மூன்றுமுறை சோதித்தார்கள்

என்னை ஒரு முறை

என் கடவுளை ஒரு முறை

என் பெயரை ஒரு முறை

 

என் பெயரினால்

எனது விண்ணப்பங்கள்

எல்லா இடங்களிலும்

கடைசிக்குத் தள்ளப்படுகின்றன

 

சுங்கச் சோதனைகளில்

சந்தேகத்தின் பெயரில்

என் ஆசன வாயில் திறந்துபார்க்கப்படுகிறது

 

என் சிநேகிதி

உன் வீட்டில்

எப்போதும் இறைச்சி வாடையும்

மீன் கவுச்சியும் அடிக்குமா என்று கேட்கிறாள்

 

என் ரத்தத்தில்

வெடிமருந்து வாசனை இருக்கலாம் என

என் நண்பர்களே சந்தேகிக்கிறார்கள்

 

பிறர் தன் திறமையை

ஒருமுறை நிரூபித்தால்

நான் இருமுறை நிரூபிக்க வேண்டும்

பிறர் தன் விசுவாசத்தை

ஒருமுறை நிரூபித்தால்

நான் நான்குமுறை நிரூபிக்க வேண்டும்

பிறர் தன் தேசபக்தியை

ஒரு முறை நிரூபித்தால்

நான் நூறுமுறை

 

நான் என் பெயருக்காக

வேட்டையாடப்பட்டபோது

ஓடி ஒளிந்துகொள்ள முயன்றேன்

அவர்கள் என் பெயரின் வாசனையால்

நான் இருக்குமிடத்தை

எளிதில் தெரிந்துகொண்டார்கள்

 

நான் பிறகு

ஒரு தலைமறைவு குற்றவாளிபோல

வேறொரு பெயரை சூடிக்கொண்டேன்

அவர்கள் நள்ளிரவில்

என்னைத் தட்டி எழுப்பினார்கள்

என் சொந்தப் பெயரின் அடையாள அட்டையை

என் முகத்தில் விட்டெறிந்தார்கள்

 

நான் கடற்கரை மணலில்

வெறுமனே உட்கார்ந்திருக்கிறேன்

யாரோ ஒருவன்

என்னை உற்றுப்பார்க்கிறான்

“ஏன் இங்கிருக்கிறாய்..

அரேபிய பாலைவனத்திற்குப்போ”‘ என்கிறான்

 

ஒரு இளம் பெண்

தன் பெயரின் சுமைதாங்காமல்

தூக்கில் தொங்குகிறாள்

அவள் உடலின் எடையைவிடவும்

அந்தப் பெயரின் எடை

ஆயிரம் மடங்கு கனத்ததாக இருக்கிறது

 

அவள் இறக்கிறாள்

அவளது பெயர் இறக்கவில்லை

அது துடித்துக்கொண்டிருக்கிறது

காயம்பட்ட ஒரு பறவையாக

வண்ணமிழக்கும் மலர்கள்

 

நான் நீண்ட காலமாகச் சென்று வரும் அந்த பிரமாண்டமான அலுவலகத்தில்

ரிசப்ஷனிஸ்டாக இருப்பவளை

பத்தாண்டுகளுக்கு முன்பு

அவள் பணிக்குச் சேர்ந்த முதல் நாளில்

முதல் முதலாகக் கண்டேன்

 

கன்னிமையின்

அன்றலந்த மலராக

அவள்தான் அந்தக் கட்டிடத்தின்

காற்றிற்கான ஒரே சாளரமாக

வந்தமர்ந்திருந்தாள்

நெற்றியின் சந்தனத் தீற்றல்

அவளது வாசனையை

எங்கும் பரவச் செய்தது

விரிந்த கூந்தலால்

மேகக்கூட்டங்களை அழைத்து வந்தாள்

 

அங்கே உள்ளே நுழையும்

ஒவ்வொருவருக்கும்

அவள் எழுந்து நின்று முகமன் கூறினாள்

பாரபட்சங்கள் ஏதுமின்றி

புன்னகையும் அன்பையும் பகிர்ந்தளித்தாள்

எல்லோரும் ஒரு கணம்

அவள் முன் நின்று

அனாவசியமாக கேள்விகளைக் கேட்டுக்

கடந்து சென்றார்கள்

 

அந்தக் கட்டிடத்தின் மேல்

வசந்தங்கள் போய் கோடைகள் வந்தன

அவள் படிப்படியாக

முகமன் கூறவேண்டியவர்கள்

முகமன் கூறத்தேவையற்றவர்கள் என

தன் உலகத்தை இரண்டாகப் பிரித்துக்கொண்டாள்

பாதிப்புன்னகைகள்

பாதி எழுந்து நிற்றல்.

வேலையில் மூழ்கியிருக்கும் பாவனை

போலிப் பிரகாசங்கள் என

அவளது முகமலரின் ஒவ்வொரு இதழாக

உதிரத் தொடங்கின

முகப்பூச்சுகளை அதிகரித்துக்கொண்டே சென்றாள்

சிகையலங்காரங்களின்

மோஸ்தர்களை மாற்றிக்கொண்டாள்

மலிவான வாசனைத்திரவியங்களைப்

பயன்படுத்தினாள்

பிறகு செல்போனின் மின் திரையில்

ஆழ்ந்து போனாள்

 

நான் அவள் அங்கிருப்பதையே

மறந்துவிட்டேன்

கிட்டத்தட்ட அவளுக்கும்

அது அப்படித்தான் இருந்திருக்கக் கூடும்

 

தினமும் அங்கிருக்கும் அவளைத்

தினமும் கடந்து செல்லும் நான்

பல ஆண்டுகளுப்பிறகு

இன்றுதான் கவனித்தேன்

 

அவளுக்கு வயதாகியிருந்தது

அவள் கண்களுக்கு கீழ்

கருவளையங்கள் சூழ்ந்திருந்தன

முடி கொட்டியிருந்தது

நிறம்கூட மங்கியிருந்தது

அந்தக் கட்டிடத்தின் காரைகள்

பெயர்ந்திருப்பதுபோல

அவள் குலைந்திருந்தாள்

அவள் அங்கிருப்பது

அவளுக்கே தெரியுமா என்பதுபோல

மறந்துபோன புகைப்படமாய்

அங்கே தொங்கிக்கொண்டிருந்தாள்

 

அந்த இடம் அவளைத்தின்றிருந்தது

நாம் நீண்ட காலம் இருக்கும்

எல்லா இடங்களும்

நம் தசைகளைத் தின்னுகின்றன

 

ஏனோ எனக்கு வருத்தமாக இருந்தது

அவள் அங்கிருந்து

இப்போதே கிளம்பி

வேறொரு அலுவலகத்தின்

வேறொரு ரிசப்ஷனில்

அமர்ந்துகொண்டாள்

மறுபடி ஒரு மலராகிவிடக்கூடும்

 

ஒரே இடத்தில் இருப்பது

ஒரே வேலையிலிருப்பது

ஒரே மனிதருடன் இருப்பது போலவே

நம்மை அவ்வளவு சீக்கிரம்

வண்ணமிழக்க வைக்கிறதா என்ன?

 

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்

 

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்

நான் எப்போதும்

ஒரு வேட்டையாடப்படும் மிருகமாக இருக்கிறேன்

 

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்

நீதி என்ற ஒன்று இருக்கிறது என

இவ்வளவுக்கும் பிறகு நம்பிக்கொண்டிருக்கிறேன்

 

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்

இணக்கமாக வாழும் பொறுப்பு

எனக்குத்தான் முழுமையாகத் தரப்பட்டிருக்கிறது

 

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்

எப்போதும் ஒரு அன்னியனின்

கடவுச் சீட்டுடன் நின்றுகொண்டிருக்கிறேன்

 

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்

எப்போதும் நிபந்தனையற்று

விட்டுக்கொடுப்பவனாக இருந்திருக்கிறேன்

 

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்

நான் பேச வேண்டிய நேரத்தில் எல்லாம்

மௌனமாக இருக்க

நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறேன்

 

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்

என் தேசபக்தியை நிரூபிக்க

எப்போதும் என் நெஞ்சைப்பிளந்து

காட்டி வந்திருக்கிறேன்

 

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்

பயங்கரவாதிகளைத் தேடுபவர்களால்

முதலில் ஆடை கழற்றிப்பார்க்கப்படுபவனாக இருந்திருக்கிறேன்

 

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் எனறால்

வேறு யாராகவும் இருக்க

நான் முற்றிலுமாக மறுக்கப்பட்டிருக்கிறேன்

 

ஆயினும் நான் ஒரு இஸ்லாமியனாகவே

இருக்க விரும்புகிறேன்

என் நெஞ்சில் நீங்கள்

கடைசியாகப் பாய்ச்சப்போகும்

ஈட்டியின் கூர்மையை

நான் காண விரும்புகிறேன்

 

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்

நீங்கள் அதை ஒவ்வொரு கணமும்

நினைவூட்டிக்கொண்டே இருக்கிறீர்கள்

 

உங்களை முகம் சுழிக்க வைக்கும்

அத்தரை உடலெங்கும் பூசிக்கொண்டு

ஒரு இஸ்லாமிய கதகதப்போடு

உங்களை அணைத்து

முகமன்கூற விரும்புகிறேன்

 

ஒரு போதும் நாங்கள் சண்டையிட வரவில்லை

இஸ்லாமியர்கள் அமைதியை விரும்புகிறோம்

பிரார்த்தனையின் அமைதியை

கபர்ஸ்தான்களின் அமைதியை

ஒரு தரப்பான நீதியின் அமைதியை

 

ஒரு இஸ்லாமியனாக வாழ்வது

மிகவும் கடினமானது நண்பர்களே

அவன் எப்போதும் உலகத்தின் சமாதானத்திற்காக வாழவேண்டும்

பிறகு தன்னைத்தானே

சமாதானப்படுத்திக்கொண்டு வாழ வேண்டும்

 

மேலும் ஒரு இஸ்லாமியனாக இருப்பது

தனியனாக இருப்பதல்ல

அது

ஒரு கூட்டு மனம்

ஒரு கூட்டுக் காயம்

ஒரு கூட்டுத்தண்டனை

ஒரு கூட்டுத் தனிமை

அதை இன்றுதான் அறிந்து கொண்டேன்