கிழிந்த காலணிகளுடன் ஓடும் சொர்க்கத்தின் குழந்தைகள்

சொர்க்கத்தின் குழந்தைகள்
மைதானங்களில்
எப்போதும் கிழிந்த காலணிகளுடனோ
காலணிகள் இல்லாமலோதான்
ஓடிக் கொண்டிருக்கிறார்கள்

சொர்க்கத்தின் குழந்தைகள்
தங்கள் நரகத்தின் இருளிலிருந்து
வெறும் காலுடன் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்
வனங்களில் மான்கள் ஓடுவதுபோல
நீருக்கடியில் மீன்கள் நீந்துவதுபோல
ஆகாயத்தில் பறவைகள் செல்வதுபோல
அவர்கள் மைதானங்களில்
சுழல் வட்டப்பாதைகளில்
ஓடிக் கொண்டிருக்கிறார்கள்

அவர்களுக்கு முதல் வாய்ப்புதான்
கடைசி வாய்ப்பும்
வழியில் அவர்கள் காலிடறி விழுந்துவிட்டால்
இன்னொரு மைதானம் அவர்களுக்கு இல்லை
இன்னொரு சந்தர்ப்பம் அவர்களுக்கு இல்லை
அவர்கள் துப்பாக்கியிலிருந்து சுடப்பட்ட
ஒரு குண்டைப்போல காற்றில் பறந்து செல்கிறார்கள்

அவர்கள் ஓடும்முன்
தங்கள் கிழிந்த காலணிகளை
ஒருகணம் உற்றுப்பார்க்கிறார்கள்
தங்கள் அருகில் ஓடத் தயாரக இருக்கும் கால்களின்
புத்தம் புதிய பளபளக்கும் ஷூக்களை பார்க்கிறார்கள்
ஓடுவது கால்களே தவிர
காலணிகள் அல்ல என
தங்களைத் தாங்களே சமாதானம் செய்துகொள்கிறார்கள்

சொர்க்கத்தின் குழந்தைகளில் யாரோ ஒருத்தி
கிழிந்த காலணிகளுடனோ
வெறுங்காலுடனோ எல்லைக்கோட்டைத் தொட்டுவிடுகிறாள்
அவள் தன் தலையை உயர்த்தி
இந்த உலகத்தோடு பேசத் தொடங்குகிறாள்
தன் பசியைப் பற்றி
தன் அவமானங்களைப் பற்றி
தன் ஏழ்மையான பெற்றோரைப் பற்றி
தன் கிழிந்த காலணிகளைப் பற்றி

அவளுக்குத் தன் கனவுகள் பற்றி
தன் ஓட்டத்தின் நுட்பங்கள் பற்றி,
தான் கடக்கும் நேரத்தை எப்படி படிப்படியாகத்
குறைத்துக்கொண்டாள் என்பது பற்றி,
ஓடும்போது தன் மனமும் உடலும்
எவ்வாறு மாறுகிறது என்பதுபற்றி
சொல்வதற்கு நூறு விஷயங்கள் இருக்கின்றன
ஆட்டக்காரர்கள் தங்கள் ஆட்டத்தின்
உன்மத்தம் பற்றிப் பேசுவதை
நான் நிறைய கேட்டிருக்கிறேன்
ஆனால் ஒரு சொர்க்கத்தின் குழந்தையிடம்
அவளது துயரங்களைத் தவிர
வேறு எதையும் நாம் கேட்கவிரும்புவதில்லை

சொர்க்கத்தின் குழந்தைகள்
எப்போதும் தங்கள் கிழிந்த காலணிகளைப்பற்றி
பேசத் தூண்டப்படுகிறார்கள்
நீங்கள் அவர்களை
ஒரு வினோத உயிரியாய் பார்க்கிறீர்கள்
ஒரு வேற்றுக்கிரகவாசியைப்போல பார்க்கிறீர்கள்
உங்கள் குற்ற உணர்வின் மலர்களை
அவர்களது கிழிந்த காலணிகள் மேல் வைக்கிறீர்கள்
சாதிப்பதற்கு வறுமை ஒரு தடையல்ல
என்ற ஒரு சமாதானத்தின் மூலம்
அவர்களது எல்லா வரலாற்றுத் துயரங்களுக்கும்
நியாயம் செய்துவிடுகிறீர்கள்

பந்தயங்களில்
வெற்றி பெற்றவர்கள்
தங்கள் கைகளை உயர்த்தி வணங்குகிறார்கள்
சொர்க்கத்தின் குழந்தைகள் மட்டும்
தங்கள் உயர்த்திய கரங்களில்
ஒரு கிழிந்த காலணியையும்
வைத்துக் கொண்டிருக்கிறார்கள்
*
அழியாச் சுடர்

என் இச்சையின் சுடரை
நான் கைகளில் ஏந்தி
அமர்ந்திருக்கிறேன்
வெகு நேரமாக
யாரும் அதை
ஈர உதடுகளால் ஊதியணைக்க வரவில்லை

என் கை எரிந்துவிட்டது
நான் அமர்ந்திருந்த
புலித்தோல் எரிந்துவிட்டது
நான் வசித்த வனம் எரிந்துவிட்டது

இப்போதும்
அந்தரத்தில் அணையாது எரிகிறது
என் காமத்தின் சுடர்

ஒரு பெரும் காற்று
ஒரு பெரும் மழை
வரப்போகிறது
என்கிறார்கள்
*
ஒரு நாள் மூடப்படும்போது

ஒரு நாளின் கதவுகளை மூடிவிட்டு
எல்லோரும் போய்விட்டார்கள்
நீ எப்போது இந்த நாளிலிருந்துபோனாய்
என்பதுகூட தெரியாமல் அரவமில்லாமல் நீங்கியிருந்தாய்

மூடப்பட்ட ஒரு நாளின் இரவில்
நான் தண்ணீர் தண்ணீர் என்றும்
வலி வலி என்றும்
தனிமை தனிமை என்றும்
மன்றாடிக்கொண்டிருக்கிறேன்

மூடப்பட்ட இந்த நாளின் கதவை
யாரேனும் வந்து தட்டக்கூடுமென
எப்போதும் பாதித் தூக்கத்திலேயே இருக்கிறேன்
*
தனிமை பாழும் கிணறு

அப்பு வளர்ந்துவிட்டான்
ஒரு கட்டிலில் தூங்கினால்
என்னால் கைகால்களை
நீட்ட முடியவில்லை என
என் கட்டிலுக்கு அருகிலேயே
இன்னொரு கட்டிலைப்போட்டு
தூங்க வைத்தேன்
இரண்டு கட்டிலுக்கும் நடுவே
அரையடி துரம்கூட இல்லை

அதிகாலையில் தூக்கத்தில் எழுப்பி
‘உன் கட்டிலிலேயே துங்கட்டுமா?’ என்றவனிடம்
‘என்ன பிரச்சினை உனக்கு?’ என்றேன் எரிச்சலுடன்
‘ரொம்ப தனியா இருக்கிறமாதிரி இருக்கு
ரொம்ப பயமா இருக்கு’
இருளில் அவன் சொற்கள் தேம்புகின்றன

அருகில் இருப்பதும்
ஒன்றாக இருப்பதும்
வேறு வேறு எனச்சொல்லி
தளும்புகிறது
தனிமையின் பாழும் கிணறு
*
இஸ்லாமியர்கள் பயங்கரவாதத்தை எதிர்க்கவேண்டிய முறை

யாரோ கொலை செய்கிறார்கள்
யாரோ ரத்தம் சிந்துகிறார்கள்
ரத்தம் சிந்துபவர்களுக்காக நானும் கண்ணீர் சிந்துகிறேன்
ரத்தம் சிந்த வைப்பவர்களை நானும் சபிக்கிறேன்

“நீ ஒரு இஸ்லாமியனா
வெளியே வந்து பதில் சொல்” என
வீட்டிற்கு வெளியே யாரோ கூச்சலிடுகிறார்கள்
கதவுகளையும் ஜன்னல்களையும் வேகமாகத் தட்டுகிறார்கள்

நான் அப்போது என் தொழுகைப் பாயில் இருந்தேன்
நான் இன்னும் என் இரவு உணவை அருந்தவில்லை
என் குழந்தைகள் பயப்படுகிறார்கள்
என் இரண்டு கைகளையும் மேலே தூக்கிக்கொண்டு
வெளியே வருகிறேன்
என்னிடம் ஆயுதங்கள் இல்லை என்பதை
நான் தினமும் நிரூபிக்க வேண்டியிருக்கிறது
மேலும் ஒரு வெள்ளைக் கொடியை நான்
தூக்கிப்பிடித்துக்கொண்டு வெளியே வருகிறேன்
அந்தக் கொடியைத் தினமும் துவைத்துப்போட்டுத்
தயாராக வைத்திருக்கிறேன்
ஒரு சமாதானப் புறாவைப்
பறக்கவிட்டபடியே வெளியே வருகிறேன்
அதற்காகவே நிறைய வெண்புறாக்களை
வீட்டில் வளர்க்கிறேன்
ஒரு இஸ்லாமியனாகப் பிறப்பது மிகவும் சிக்கலானது
எப்போதும் ஒரு ஆயத்த நிலையில்
இருக்க வேண்டும்

“நீதான் அந்தக் குண்டுகளை வெடித்தாயா? என்கிறார்கள்
“இல்லை” என்கிறேன்

“நீ அவர்களுக்குத் தங்குமிடம் அளித்தாயா?” என்கிறார்கள்
“இல்லை” என்கிறேன்

“அவர்களுக்குப் பணம் கொடுத்தாயா?” என்கிறார்கள்
“இல்லை” என்கிறேன்

“அவர்களைப் பார்த்திருக்கிறாயா?” என்கிறார்கள்
“இல்லை” என்கிறேன்

“இந்தக் கொலைகளை ஆதரிக்கிறாயா?” என்கிறார்கள்
“இல்லை” என்கிறேன்

“உன் மதம் அதை ஆதரிக்கிறதா?” என்கிறார்கள்
“இல்லை” என்கிறேன்

“நீ வணங்கும் கடவுளைத்தான்
கொலைகாரர்களும் வணங்குகிறார்களா?” என்கிறார்கள்
“எனக்குத் தெரியாது” என்கிறேன்

“நீ பின்பற்றும் மதத்தைத்தான் கொலைகாரர்களும்
பின்பற்றுகிறார்களா?’ என்கிறார்கள்
“எனக்குத் தெரியாது” என்கிறேன்

“கொலைகாரர்கள் ஏன் உன்னைப்போலவே
தாடி வைத்திருக்கிறார்கள்?” என்கிறார்கள்
“எனக்குத் தெரியாது” என்கிறேன்

“நீ அந்தக் கொலைகாரர்களைக் கண்டிப்பதாக
உரத்துச் சொல்ல முடியுமா?” என்கிறார்கள்
“நான் இந்தக் கொலைகள் நடப்பதற்கு முன்பே
இந்தக் கொலைகளைக் கண்டித்துவிட்டேன்
நான் தினமும் ஐந்து வேலை தொழுகிறேன்
ஆனால் தினமும் பத்துமுறை
பயங்கரவாதிகளை கண்டிக்கிறேன்” என்றேன்

“நீ கண்டித்த பிறகும் அவர்கள் கொலை செய்கிறார்கள் என்றால்
நீ அவர்களை சரியாகக் கண்டிக்கவில்லை என்றுதானே அர்த்தம்?” என்கிறார்கள்
“நான் வேண்டுமானால் பத்து முறைக்குப் பதில்
இனி நூறு முறை கண்டிக்கட்டுமா?” என்கிறேன்

“நீயும் நாளை ஒரு இஸ்லாமிய பயங்கரவாதியாக மாறமாட்டாய்
என்று என்ன உத்தரவாதம்” என்கிறார்கள்
” எனக்கு ரத்தத்தைக் கண்டால் மிகவும் பயமாக இருக்கும்
மேலும் உயிரோடிருப்பதைத் தவிர
வாழ்க்கையில் எனக்கு வேறு எந்த லட்சியமும் இல்லை” என்கிறேன்

“நீ இந்தக் கொலைகளுக்கு ஏன்
பொறுப்பேற்றுக்கொள்ள மறுக்கிறாய்” என்கிறார்கள்
“எனக்கு நிறைய குடும்பப் பொறுப்புகள் இருக்கின்றன

என் குழந்தைகளுக்கு நான் பொறுப்பாக இருக்கிறேன்
என் வேலைக்குப் பொறுப்பாக இருக்கிறேன்
என் நோய்களுக்குப் பொறுப்பாக இருக்கிறேன்
என் துயரமான தலைவிதிக்குப் பொறுப்பாக இருக்கிறேன்
மேலும் இந்த தேசத்திற்கு வேறு பொறுப்பாக இருக்க வேண்டியிருக்கிறது
இதில் நான் கொலைகளுக்கு எங்கே பொறுப்பேற்பது?”
என்கிறேன் விரக்தியோடு

“இவ்வளவு கொலைகளுக்குப் பிறகு
நீயும் உன் கடவுளும் இஸ்லாமியர்களாக
இருக்கத்தான் வேண்டுமா?” என்கிறார்கள்
“இருவரும் அதைப்பற்றி விரைவில்
பேசி ஒரு நல்ல முடிவெடுக்கிறோம்”
என்று வாக்குறுதி அளிக்கிறேன்

பிறகு அவர்கள் என் ஆடைகளைக் களைந்து சோதித்தார்கள்
நான் ஒரு இஸ்லாமியன் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டதும்
நிர்வாணமாக ஒரு மைதானத்திற்கு அழைத்துச் சென்றார்கள்
அங்கே இன்னும் நிறையபேர் நின்றுகொண்டிருந்தார்கள்
பயங்கரவாதத்திற்கு எதிரே கத்தும்படி கட்டளையிட்டார்கள்
நான் ஏற்கனவே கத்திவிட்டதைச் சொன்னேன்
மறுபடி கத்து என்றார்கள்
கத்தினேன்

“சத்தம் ஒழுங்காவே வரவில்லை”
என்று தலையில் அடித்தார்கள்
நான் இன்னும் சத்தமாகக் கத்தினேன்

“பயங்கரவாதிகளுக்கு கேட்கும்படி கத்து” என்றார்கள்
இயற்கையாகவே நான் மென்மையான குரல் உடையவன்
என் தொண்டை கிழியும்படி கத்தினேன்
எல்லோரும் சேர்ந்து கத்தினோம்
அந்தக் காட்சி பயங்கரமானது
அந்தக் காட்சி அவலமானது

இந்த உலகத்தில்
சமாதானத்தைக்கொண்டு வரும் பொறுப்பு
எங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது
விடிய விடிய கத்திக்கொண்டே இருந்தோம்
*
முத்தத்தின் பெயர் சாக்லேட்

முத்தத்திற்குப்பதில்
‘முத்தம்’ என பெயரிடப்பட்ட
ஒரு சாக்லேட் சிறந்தது
அவை கடையில் கிடைக்கின்றன
‘kiissss’ என அச்சிடப்பட்ட
பல்வேறு வண்ண உறைகளில் கிடைக்கின்றன
ஒருவருக்கு முத்தம் தருவதைவிட
முத்தம் என்ற பெயரிடப்பட்ட
சாக்லேட்டைத் தருவது
எல்லாவகையிலும் சிறந்தது
சங்கடங்கள் இல்லாதது
ஒவ்வாமைகளோ மனத்தாங்கல்களோ அற்றது
நீங்கள் ஒரு முத்தத்தைப் பகிர தடுமாறுவதுபோல
முத்தம் என்ற பெயரிடப்பட்ட சாக்லேட்டைப்
பகிர்ந்துகொள்வதில்
கலாச்சார சிக்கல்களோ
அந்தரங்க சிக்கல்களோ இல்லை

மேலும்
ஒரு முத்தத்தைவிட
முத்தம் என்று பெயரிடப்பட்ட ஒரு சாக்லேட்
அதிக இனிப்பாக இருக்கிறது
அதிக வாசனையுடையதாக இருக்கிறது
ஒரு முத்தத்திற்குப் பின்னால்
ஒரு இதயத்தின் சுமை இருக்கிறது
ஒரு வாழ்வின் பொறுப்பு இருக்கிறது
முத்தம் எனப் பெயரிடப்பட்ட ஒரு சாக்லேட்டிற்குபின்னே
எதுவும் இல்லை
அது வெறுமனே நாவில் கரைந்துவிடுகிறது

அன்பே
எப்போதோ ஒரு நாள்
மனம் தளும்பி
என்னை நீ முத்தமிடக்கூடும்
அப்போது நான் அதை முத்தம் என்று
சொல்ல மாட்டேன்
அந்த முத்தத்திற்கு
நான் ‘சாக்லேட்’ என்று பெயரிடுவேன்
*
வெண்ணிற இரவுகள்

எனக்கு வயதாகிவிட்டது
நான் உச்சியில் எழுந்த
ஒரு நரையைப் பிடுங்குகிறேன்
ஆயிரம் ஆயிரம் வெண்ணிறக்கொக்குகள்
என் வயல் வெளியெங்கும் இறங்குகின்றன
அவற்றை விரட்ட எனக்கு
இரண்டு கைகளும் போதாது

அன்பே
எனக்கு வயதாகிவிட்டது
நான் இறக்கத்தான் வேண்டும்
ஒரு வெண்ணிற நட்சத்திரம்
எரிந்து உதிர்வதைப்போல
ஒரு பின்னிரவில் உதிர்வேன்
பயப்படாதே
உனக்கு வழிகாட்ட
ஆயிரம் வெண்ணிற நட்சத்திரங்கள்
ஆயிரம் வெண்ணிற நட்சத்திரங்கள்

வெண்ணிறம் என்பது வயோதிகம்
வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே நிகழும்
கடைசி சமாதானம்
*
யாராவது இருக்கிறார்கள்

எப்போதும்
யாராவது இருக்கிறார்கள்
எல்லா இடத்திலும்
யாராவது இருக்கிறார்கள்
எப்போது உறங்கினாலும்
யாராவது இருக்கிறார்கள்
எப்போது விழித்தாலும்
யாராவது இருக்கிறார்கள்

நான்
யாராக இருக்கிறேன் என்பது
எனக்கு மறந்துவிட்டது
நான் யாராக இருந்தேன்
என்பது எனக்கு மறந்துவிட்டது
எங்கும் யாராவது இருக்கிறார்கள்
உற்றுப்பார்த்தபடி
உற்றுக்கேட்டபடி
தனியறைகளில்
பொதுவிடங்களில்

என் உடலின் பாரங்களைவிட கனக்கின்றன
என் மேல் விழும் நிழலின் பாரங்கள்
யாருமே இல்லாதபோது பயப்படுவதைவிட
அதிகம் அஞ்சுகிறேன்
எப்போதும் யாராவது இருக்குமிடங்களில்

நான் என்னைப்பற்றி சிந்திப்பதில்லை
என் வாழ்க்கையைப்பற்றி சிந்திப்பதில்லை
என் ஆசாபாசங்களையோ
கனவுகளையோ சிந்திப்பதில்லை
அருகில் யார் இருக்கிறார்களோ
அவர்களையே சிந்திக்கிறேன்
அவர்களுக்கு இணக்கமாகிக்கொள்கிறேன்
அவர்கள் ஜோக்குகளுக்கு சிரிக்கிறேன்
அவர்களின் அபத்தங்களுக்குத் தலையாட்டுகிறேன்
எல்லாவற்றையும்
அன்பென்றும் நட்பென்றும் சகவாழ்வென்றும்
சமாதானப்படுத்திக்கொள்கிறேன்

ஒரு நாளில் ஒரே ஒருமுறை
நான் கேட்பதெல்லாம்
நான்ஆடைமாற்றிக்கொள்கிறேன்
அல்லது
கொஞ்சம் கண்ணீர் சிந்திக்கொள்கிறேன்
சற்றேவெளியே இருக்கிறீர்களா?
*
அருகாமையின் பிரிவுகள்

நான் உன்னிடமோ
நீ என்னிடமோ திரும்பிவர
இன்னும்
எவ்வளவு காலம் என்று தெரியவில்லை

நமக்கிடையே ஆயிரம் மைல்கள் இல்லை
நேர்கொள்ள முடியாத கசப்புகள் இல்லை
நாம் தேடிவரும் ரயில்களைத் தவறவிட்டுவிடவில்லை
வாழ்வின் பாதைகள் இன்னும்
திசை பிரிந்துவிடவில்லை

இதோ இவ்வளவு அருகாமையில்
பிறருக்குக் கேட்காத அந்தரங்கக்குரலில்
ஒருவர் நிழல் மற்றவர்மேல் விழ
இந்தக் கேள்வியைக் கண்ணீருடன் கேட்டுக்கொண்டிருக்கிறேன்
“நாம் மீண்டும் எப்போது சந்தித்துக்கொள்வோம்?
நீ எப்போது திரும்பி வருவாய்?”

நம் காலத்தில்
பிரிவுகள் என்பது காலத்தினால் ஆனதல்ல
இடத்தினால் ஆனதல்ல
இருப்பினால் ஆனதல்ல
இருக்கிறோம்
இல்லாமலும் இருக்கிறோம்
*
அன்பின் கிண்ணங்கள்

கண் விழிக்கும்போது காணும்
காலி மதுக்கிண்ணங்கள்
தரும் சுயநிந்தனைகள்
தலைவலிக்கச் செய்கின்றன

காலிக்கிண்ணங்களில்நிரம்பும்
இந்த காலையின்
பொன்னிற வெளிச்சத்தை
நான் குடிக்கத் தொடங்குகிறேன்
பிறகு ஒரு கோப்பைத் தேனீரை
பிறகு நாளின் முடிவற்ற கசப்புகளை

அன்பின் கிண்ணங்களை
நிரப்பும்போதுமட்டும்
எப்படியோ அது கைதவறி சிதறிவிடுகிறது
*
ஒரு மரத்தை அணைத்துக்கொள்ளுதல்

நீ என்னை அணைத்துக்கொள்ளும்போது
பதிலுக்கு நான் உன்னை
அணைத்துக்கொள்ள வேண்டுமா
என்பதுகூட இப்போது எனக்குக்
குழப்பமாக இருக்கிறது

அவ்வளவு பயப்படுகிறேன்
அவ்வளவு தயக்கமுடையவனாகிவிட்டேன்
என் விருப்பங்களின்மீது
என் தேர்வுகளின்மீது
அவ்வளவு சுயநிந்தனைகொண்டுவிட்டேன்

நான் உன்னை அணைத்துக்கொள்வதை
எப்போதும் விரும்புவேன்
ஆனால் நான் அக்கணம்
விலக்கப்படுவது குறித்து
கொடுங்கனவுகள் காண்கிறேன்

இப்போது நான் அணைத்துக்கொள்ளப்படுகிறேன்
அணைத்துக்கொள்ளப்படும்
ஒரு மரம்போல
அணைத்துக்கொள்ளப்படும்
ஒரு சிலைபோல
என் கைகளை அசைக்க முடியாமல்
திகைத்து அமர்ந்திருக்கிறேன்

அணைத்துக்கொள்ளப்படும் என்னை
வேறு யாரோவாக உணர்ந்தபடி
*
கோடையின் இலைகள்

உதிர்ந்த இலைகளில்
ஓரிலை என்பதற்கு மேல்
எதுவுமல்ல நீ

சித்திரையின் முதல் தழல்கள்
விரியும் முற்பகலில்
என் சட்டையில்லாத மேனியை
வெயிலுக்கு முழுமையாக
காட்டிக்கொண்டு அமர்ந்திருக்கிறேன்
அதில் ஒரு வைராக்கியம் இருக்கிறது
தன்னைத் தானே எரித்துக்கொள்ள முடியாதவர்களின்
எளிய சமாதானம் அது
மேலும் கொடும் வெயில் நம்மை அணைப்பதுபோல
எரிதழல் நம்மை அணைப்பதுபோல
ஒருவரும் அணைத்துக்கொள்வதில்லை

இலையுதிர் காலத்து
மரத்தடிகளிலும்
எப்போதாவது
நிழல் வரும் என
பிடிவாதமாய் காத்திருப்பவர்கள் முதுகில் இரண்டு சவுக்கடிகள் கொடுத்து
வீட்டிற்கு அனுப்பவேண்டும்

இந்தக் கோடை
இதயமற்றது
இந்தக் கோடை
நினைவுகளற்றது
*
உருளும் படிக்கட்டுக்கள்

ஒவ்வொரு வயதும்
வாழ்க்கையில்
ஒவ்வொரு படிக்கட்டு என்கிறார்கள்

நீ ஐம்பதாவது படிக்கட்டில் இருந்து
தலைகுப்புறக் கீழே விழுந்திருக்கிறாயா?

ஒரு கிளை முறியும்போது
கிளையிலிருக்கும் பறவை
காயமின்றி பறந்து செல்கிறது

ஆனால்
ஒரு நீண்ட படிக்கட்டில்
தள்ளிவிடப்படும் ஒருவன்
சிதறுகிறான்
படியெங்கும் வழிந்தோடும்
ஒரு தண்ணீர் குடம்போல

*உடலுக்கெதிரான நிந்தனைகள்

அம்மா செத்து
முப்பது வருடமாகிறது
இன்னும் கனவில் வந்து
சொல்லிக்கொண்டே இருக்கிறாள்
“உடம்பைப் பார்த்துக்கொள்
ஏன் இப்படி இளைத்துவிட்டாய்?”

பைத்தியக்காரி
இந்த உடம்பைத் தவிர
உன் கண்ணுக்கு என்னிடம்
எதுவுமே தெரியாதா?

நீ தந்த உடல் என்பதற்காக
அத்தனை கரிசனம்
அதனிடம் உனக்கு

இந்த உடல் நீ தந்தது எனில்
இந்த மனம் யார் தந்தது?
அதன் இருட்குகைக்குள்
வெளியேறும் வாசல் தெரியாமல்
உட்கார்ந்திருக்கிறேனே
ஒரு நாள் கனவில்
ஒரு விளக்கேற்றி வைத்திருப்பாயா நீ?

இருமலில் விம்மித் தணியும்
என் மார்பையே தடவிக்கொண்டு
ஏன் கண்ணீருடன் அமர்ந்திருக்கிறாய்
என் நெஞ்சில் எரியும் கனல்
உன் குளிர்ந்த கரங்களை எட்டுகிறதா?

அம்மா என் உடலை அழிய விடு
என் மனம் அழிய
முதலில் இந்த உடல் அழிய வேண்டும்
இச்சைகளால் ததும்பும்
அதன் தசைகளை
பள்ளத்தாக்கில்
நான் கழுகுகளுக்குவீசும்போது
அம்மா, உன் கண்களை
இறுகமூடிக்கொள்

நான் ஒரு இதயமற்ற செயலுக்கு
என்னைத் தூண்டுகிறேன்
என் அருகில் நில்லாதே
*