எங்கள் தாத்தாவுக்கு ஒரு கிணறு இருந்தது
இன்றுதான் சொன்னார்கள்
எங்கள் தோட்டத்துக் கிணற்றில்
தண்ணீர் வற்றிவிட்டது என்று
அங்கு கட்டாந்தரையில் புல் முளைத்துக்கிடக்கிறது
என்பதைக் கேட்ட பிறகு
எனக்கு நாக்கு உலர்ந்துவிட்டது
அப்போது நான்
இந்தப் பெரு நகரத்தின் தண்ணீர் லாரி
ஒன்றின்பின் ஒரு பிளாஸ்டிக் குடத்துடன்
நின்றிருந்தேன்
எங்கள் தாத்தா கிணற்றோடு
அந்தத் தோட்டத்தை வாங்கி
நூறுவருடங்கள் சென்றுவிட்டன
கடும் பஞ்சகாலத்திலும்
அக்கிணற்றில்
நீர் வற்றி ஐந்து தலைமுறைகளாக
யாரும் கண்டதில்லை
எவரும் அடைக்க முடியாத
வற்றாத ஊற்றொன்று
அந்த நிலத்தில் திறந்திருந்தது
அதுவே பிறகு
என் கவிமனமும் ஆயிற்று
என்று நான் நம்பிக்கொண்டேன்
சிறுகுளம்போல
அகன்று ஆகாயம் நோக்கி
வட்டமாய் வாய்பிளந்து நிற்கும்
அந்தக் கற்கிணற்றைக் கடப்பவர்கள்
குனிந்துபார்த்தால்
மரண பயத்தில் அடிவயிறு கூசும்
ஒரு சொட்டு உப்பறியாத
அக்கிணற்று நீர் தேனாய் இனித்ததை
என் பால்யம் முழுக்க பருகியிருக்கிறேன்
அதில் விரால்மீன்கள்
துள்ளி மறையும் கோலமும்
கிணற்றுச் சுவரிடுக்கில்
தவளைகளின் இடையறாத சத்தமும்
நெஞ்சைவிட்டு ஒருபோதும் அழிந்ததில்லை
பாவாடையுடன்
கிணற்றில் நீந்துவதற்குப் பாய்ந்த
நங்கை ஒருத்தி
என் கனவுகளில்
வெகு காலமாக நீந்திக்கொண்டிருக்கிறாள்
அவள் துவைத்துக் காயப்போட்ட புடவை
இரு தென்னை மரங்களுக்கு நடுவே
முப்பதுவருடங்களாக காய்ந்துகொண்டிருக்கிறது
பம்ப் செட் கிணற்றைப்பற்றி
நான் கேட்ட ரகசியக் கதைகள்
என் நினைவின் ஆழத்தில்
எங்கோ புதைந்துவிட்டன
பெருமழைக் காலமொன்றில்
ஓரடி இடைவெளியில்
தளும்பிக்கொண்டிருந்த தண்ணீரை
கிணற்றங்கரையில் அமர்ந்த நிலையில்
தொட்டுப்பார்த்தபோது
அது ஒரு வினோத மிருகத்தின்
உடலைத் தொடுவதுபோலிருந்தது.
ஒரு முறை மலையிலிருந்து
நீரருந்த வந்த மான் காலிடறி
கிணற்றில் விழுந்துவிட்டது
நீர் சொட்டச் சொட்ட
அதை மேலே கொண்டுவந்தபோது
மிரண்ட விழிகளுடன்
அது ஒரு குழந்தையைப்போல பயந்திருந்தது
அந்தக் கிணற்றோரம் சைக்கிளை நிறுத்திவிட்டு
தற்கொலை செய்துகொண்ட ஒருவனின் நினைவும்
நகைக்காக கள்வர்கள் கழுத்தறுத்து மூழ்கடித்த
விதவையொருத்தியின் கதையும்
எத்தனையோமுறை கேட்டுக் கேட்டு
தூக்கம் வராமல் பயந்திருக்கிறேன்
நெடுஞ்சாலையோரமிருந்த
கிணற்றில் இளைப்பாற
லாரி ட்ரைவர்கள்
எப்போதும் அங்குதான் வந்திறங்குவார்கள்
இரவில் நரிகள் நீரருந்த வருமென்று கேட்டிருக்கிறேன்
பெருங்குழாயில்
அருவிபோல் கொட்டிய தண்ணீரில்
அம்மா பிடிவாதமாக என் தலையை செலுத்தி
திணறத் திணறக் குளிக்க வைப்பாள்
ஆற்றில் நீந்துவதுபோல பெரும்
நீர் தொட்டியில் நீந்திக் கரை சேர்வேன்
என் அப்பா அப்போதுதான் வெட்டிய
இளநீருடன் காத்திருப்பார்
தாத்தா பினாங்கில் துணியும் புகையிலையும்
விற்றுச் சேர்த்த புதையலொன்று
அக்கிணற்றில்தான் இருக்கிறது என்று
வயோதிக தோட்டக்காரன்
எனக்கு ஆசை காட்டியிருக்கிறான்
ஆனால் அந்தப் புதையலை’
கிணற்று பூதமொன்று காவலிருக்கிறது என்றும்
சேர்த்துச் சொல்வான்
பாகப்பிரிவினையின்போது
எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு
அந்தக் கிணறைமட்டும் எனக்குக் கொடுங்கள் என
நான் கேட்டதுண்டு
வாய்க்காலில் மூர்க்கமாய் பாயும்
கிணற்று நீரில் காலைத் தொங்கவிட்டுக்கொண்டு
நீரில் புரளும் இன்பத்தில்
அந்தியில் சூரியன் சரியும்வரை
வரப்பிலேயே அமர்ந்திருப்பேன்
எனக்குத் தகப்பன் இல்லை
தாய் இல்லை
இப்போது கிணறும் இல்லை
ஊரை விட்டு வந்து
ஆண்டுகள் கழிந்துவிட்டன
ஊருக்குத் திரும்பிவா என்றழைக்கும்
ஒரே அழைப்பாக
அந்தக் கிணறு மட்டுமே இருந்தது
எனக்கு இப்போது ஊர் எதுவும் இல்லை
என் பால்யம் என்பது
ஒரு கிணறு என்பதைத்தவிர ஏதுமில்லை
நான் என் சொந்தக்கிணற்றின் நீருக்காக
இவ்வளவு ஏங்கிப்போவேன் என்று தெரியாது
என் மாநகர பாவனைகள் உதிர்கின்றன
என் இதயம் உலர்ந்துவிட்டது
என்னால் இந்தக் கொடுமையான பருவத்தை
தாங்க முடியவில்லை
என் கிணற்றிலிருந்து யாராவது
எனக்கு ஒரு குவளை தண்ணீர் தாருங்கள்
*
இருப்பும் இன்மையும்
நான் எவ்வளவு நேரம்
இல்லாமல் இருந்தால்
நான் உன்னோடு
இருக்கவேண்டுமென
தோன்றுமுனக்கு?
நான் உன்னோடு எவ்வளவு நேரம்
இருக்க நேரும்போது
நான் இல்லாமலிருந்தால்
நன்றாக இருக்குமென
தோன்றிவிடுகிறது உனக்கு?
ஒரு சிறிய குடுவையில்
பிடிமானமற்று
அங்குமிங்கும் உருளும்
சிறிய பாசி மணி நான்
*
உப்பாகும் அன்பு
எனதிந்த பிரியத்தை
நானே தாங்க முடியவில்லை என்றால்
உன்னால் எப்படித் தாங்கமுடியும்?
பாரம் தாங்காமல்
ஒரு வண்டி குடைசாய்கிறது
கனிந்த ஒரு பழம்
கீழே விழுந்து உடைகிறது
தண்ணீர் நிரம்பி
ஒரு வரப்பு உடைகிறது
தாளமுடியாமல்
கண்களில் தளும்பும் கண்ணீரில்
எனதிந்தக் காதல்
அத்தனை உப்பாக இருக்கிறது
*
உயிர்ப்பின் தருணம்
ஒரு செடி
முதல் முதலாக
பூக்கும் கோலத்தை
அருகிலிருந்து யாரால் காணமுடியும்?
உயிர்ப்பின் ஆயிரம் ஒளிக்கற்றைகளில்
அம்மலர் பிரகாசிக்கிறது
ஒரு பருவம் துவங்குவதன்
முதல் கணத்தில்
கண்ணுக்குத் தெரியாமல் உதிக்கும்
நிலவொளியில் யாரால் நிற்க முடியும்?
நூறு நூறு பாதைகள் அவ்வெளிச்சத்தில்
தோன்றுகின்றன
ருதுவான மகளின்
வெப்பம் மிகுந்த கரங்களைப்
பற்றிக்கொள்கையில்
எதற்கென்று தெரியாத
விம்மல் ஒன்று வெடிக்கிறது
ஒரு மகள்
இன்னொரு மகளாய்
பிறந்து வரும் காட்சியைக்
காண்கையில் நெஞ்சின் ஆழத்தில்
ஏதோ ஒன்றை இழக்க நேர்கிறது
ஏதோ ஒன்றை அடைய நேர்கிறது
ஊருக்குள்
யானை வந்த அன்று
“யானை யானை”
என்று கத்திக்கொண்டே
குழந்தைகள் தெருவுக்குள் ஓடிவந்தார்கள்
*
சிறுமழை
யானை பார்க்க
ஒரு சிறிய குழந்தை
தத்தி தத்தி படியிறங்கி வருவதற்குள்
யானை தெருமுனைக்குச் சென்று
மறைந்துவிட்டது
குழந்தையின் கண்ணில்
யானையின் சிறிய வால் மட்டும்
ஒரு கணம் அசைந்தது
எங்கள் தெருவுக்கு
சற்று முன் மழை வந்தது
“மழை மழை “என்று சத்தம் கேட்கிறது
*
சாவென்பது
சாவென்பது
நான் இல்லாமல் போவதல்ல
என் சாவில்
நீ எனக்கு இல்லாமல் போவது
*
செல்லம்
முதலில் செல்ல விளித்தல்
அழியும்
பிறகு
செல்லம் அழியும்
*
காயங்களின் பலன்
கவனமற்று
கால் பதித்த இடத்தில்
கண்ணாடித்துண்டுகள் கிழித்த
உன் பாதங்களில்
ரத்தம் பெருகிக்கொண்டிருக்கிறது
ஒரு உடைந்த கோப்பை
எப்போதும் ரத்தவேட்கையுடன் காத்திருக்கிறது
உடைந்த எதுவுமே
அப்படித்தான் காத்திருக்கிறது
அந்த ரத்தத்தை
உன் கையால் தொடும்போது
அது தரையில் சொட்டும்போது
வனத்தில் ஒரு நெருப்பைப்போல
குருதி படர்கிறது
ரத்தத்தைக்காண உனக்குத்
தனிமையாக இருக்கிறது
‘நான் ரத்தம் சிந்துகிறேன் பார்’
என உரத்துக் கத்துகிறாய்
நீ ரத்தம் சிந்துவதைவிட
அது கேட்கப்படவேண்டும்
என்பதுதான் உன் துயரமாக இருந்தது
ரத்தத்தைக் காணும்போது
நாம் ஏன் இவ்வளவு தனிமைகொண்டுவிடுகிறோம்?
நீ அப்போதுதான்
உன் தனிமையைக் கண்டுகொண்டாய்
ஒரு கணம்
உன்னை நான் கண்டு
பிரியத்தால் பதறிவிட்டால் போதும்
உன் வலி மறந்துவிடும் இல்லையா?
அப்போது உன் கண்ணீர்
தானாக ஒரு மடங்கு கூடிவிடும்
நீ இங்கிருந்திருந்தால்
இது நிகழ்ந்திருக்காதுதானே
என நீ குற்றம்சாட்டும் போது
அன்பின் ஆயிரம் நட்சத்திரங்கள் மின்னுகின்றன
அன்பே
ஆற்றவேண்டும் என்பதற்குத்தானே
இந்தக் காயங்கள்
ஆற்றுப்படுத்தவேண்டும் என்பதற்குத்தானே
இந்தத் துயரங்கள்
*
மன்னிக்கப்படாதவை
“அப்போது எனக்காக
ஏன் நீ ஒரு வார்தை பேசவில்லை?” என்றுகேட்டாள்
அது நடந்து பத்து வருடங்கள் இருக்கலாம்
பதினைந்து வருடமாகவும் இருக்கலாம்
என் துயரங்களின் கரையான்கள்
என் நினைவின் பக்கங்களை
அரித்துவிட்டன
“நான் உன்னிடம் முறையிட்டபோது
அவ்வளவு தனிமையாக இருந்தேன்
நீ எனக்காக இருக்கிறாய் என
நான் அறிந்துகொள்ள
வாழ்க்கை அந்த ஒரே ஒரு சந்தர்ப்பத்தைத்தான்
எனக்கு அளித்தது
நீ அதை மௌனமாகக் கடந்துசென்றாய்”
அவள் குரல் நீதி கேட்கும் குரல் அல்ல
தண்டனையளிக்கும் குரல் அல்ல
எனக்கு எதையோ நினைவூட்டும் குரல்
இவ்வளவு ஆண்டுகளுக்குப்பிறகு
இதை ஏன் கேட்கிறாய் என
அவளிடம் நான் கேட்கமாட்டேன்
அவள் சவுக்கால் அடிக்கப்பட்டபோது
நான் கேட்கவில்லை என்பதல்ல
அவள் வருத்தம்
எந்தப் பச்சாதாபத்தின் நிழலிலும்
ஒரு கணம் நின்றதில்லை
வேறு யாரோ சவுக்கடிபட்டால்
நான் ரத்தம் சிந்துவதுதான்
அவளை மனமுடையச் செய்கிறது
தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை
அவள் அப்போதுதான் உணரத் தொடங்கினாள்
*
இன்னொரு நாள்
பின்னிரவில் தூக்கத்தில்
நெஞ்சில் வாள் பாய்ச்சி
எழுப்பிய வலியின் முன்
நான் இருகரம் கூப்பி அமர்ந்தேன்
‘நேரம் வந்துவிட்டதா ? ‘என்றேன்
தழுதழுத்த குரலில்
எனக்கு யாரும் பதிலளிக்கவில்லை
அறையின் மங்கலான வெளிச்சத்தில்
என்னைக்காண எனக்கு அச்சமாக இருந்தது
“எல்லோரிடமும்
முறையாக சொல்லிக்கொள்ள
கொஞ்சம் நேரமிருக்குமா?”
என்று கேட்டேன்
பதிலில்லை
“எனக்கு இறுதி முத்தமொன்று வேண்டும்
என் பிழைகள் மன்னிக்கப்பட வேண்டும்
எனக்கு சிறிய சமாதானங்கள் வேண்டும்
மேலும்
வருத்தப்படாதே தைரியமாக இரு என்று
நான் சொல்லிவிட்டு வரவேண்டும்
மேலும் அந்தப் பாட்டை
கடைசியாக ஒருமுறை கேட்கவேண்டும்…
இப்படி அவசரப்படுத்தினால் எப்படி….”
என்று கத்தினேன்
பதிலில்லை
நெஞ்சில் இறங்கிய
வலியின் குறுவாளைப்
பிடிவாதமாகப் பிடுங்கி எறிந்தேன்
குழந்தைகள் குரல் கேட்டு திடுக்கிட்டு விழிக்கிறார்கள்
ஒரு கனவு கண்டேன் என
அவர்களை சமாதானப்படுத்துகிறேன்
இந்த நாள் இருக்குமென்று
நான் நினைக்கவேயில்லை
என்ன அற்புதம் பாருங்கள்
இருக்கிறது