சதுக்க பூதங்களின் நிலம்

 

கீழடியில்

காலடி வைத்தவர்கள்

எவருக்கும்

மனம் சிதறிவிடுகிறது

புத்தி பிசகிவிடுகிறது

 

கண்டெடுக்கும்

ஒவ்வொரு பொருளிலும்

ஆதித்தாயின்

முலை சுரக்கிறது

 

தோண்டி எடுக்கும்

ஒவ்வொரு ரகசியத்திலும்

காலத்தின் பெருவெளியொன்று

விரிகிறது

 

மூதாதைகளின்

கதகதக்கும் கரங்களை

எப்படி விலக்குவது

என்று தெரியாமல்

மருகித் திரிகிறோம்

 

வந்து நேரமாகிறது

இருள் வந்துவிட்டது

எப்படி வீடு திரும்புவதென நீ

தெரியவில்லை

 

வழி தவறி யாரும்

இதற்குள் வரவேண்டாம்

வழிமறித்து நிற்கின்றன

சதுக்கபூதங்கள்

*

நிலவைத் தொடமுடியாத துயரம்

 

அன்பே

நேற்றிரவு சந்திரயான் 2

நிலவில் தரையிறங்கும்போது

நான் உன் கனவில்

தரையிறங்கிருப்பேன் என

இந்த நூற்றாண்டின்

சிறந்த காதல் கவிதைகளில்

ஒன்றை எழுதியிருந்தேன்

 

என்ன நடந்துவிட்டது பார்

நம் காதலில் நடந்ததுபோலவே

சந்திரயான் மிஷனிலும் நடந்திருக்கிறது

 

தரையிறங்கும்போது

தொடர்பறுந்துவிட்டது என்கிறார்கள்

 

இரண்டாம் சுற்றுவரை

எல்லாம் சரியாக இருந்தன

மூன்றாம் சுற்றில்தான்

பிரச்சினைகள் ஆரம்பமாயின என்கிறார்கள்

 

முழுத்தோல்வி என்று சொல்லமுடியாது

பாதி வெற்றி என்கிறார்கள்

 

நிலவைத்தொடும் முயற்சியில்

ஒருநாள் வெற்றிபெறுவோம் என்கிறார்கள்

 

இதெல்லாம்

நமக்குள்ளும் நிகழ்ந்திருக்கின்றனதானே

 

கவிதைகளில்

படிமங்களைப் பயன்படுத்துகையில்

மங்கலகரமான படிமங்களையே

பயன்படுத்தவேண்டும் என

ஆசான் சொல்லித்தந்தும்

ஒரு தரித்திரம் பிடித்த படிமத்தால்

நாட்டை எவ்வளவு பெரிய

தோல்விக்குள் செலுத்திவிட்டேன் பார்

 

தூக்கிலிடுங்கள்

என்னை

*

 

எவ்வளவு வெளிச்சம் மிச்சமிருக்கிறது?

 

டாக்டர் நீங்கள் தேவையில்லாமல்

என்னைக் குழப்புகிறீர்கள்

என் பிரச்சினைகள்

வேறொரு பிரச்சினையின்

அறிகுறிகளாக இருக்கலாம் என்கிறீர்கள்

பிரச்சினை அதுதான் எனினும்

அதனாலேயே இன்னொரு பிரச்சினை

இல்லாமல் ஆகிவிடாது என்கிறீர்கள்

இப்போதைக்கு இந்தச் சோதனை முடிவுகள்

ஓரளவு போதுமானவை என்றாலும்

இதனால் மட்டும் முழுமையாக

என்ன நடக்கிறது என

தெரிந்துகொள்ள இயலாது என்கிறீர்கள்

இப்போதைக்கு எந்தப் பிரச்சினையும்

இல்லாதபோதும்

எல்லாப் பிரச்சினைகளுக்குமான

வாய்ப்புகளோடும் இருக்கிறாய் என்கிறீர்கள்

இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம்

நீ மட்டுமே பொறுப்பல்ல

உன் ஜீன்களுக்கும்

ஒரு பொறுப்பு இருக்கிறது என்கிறீர்கள்

அறிகுறிகளே இல்லாமல்கூட

மரணம் வரலாம் என்று அச்சுறுத்துகிறீர்கள்

இந்த மருந்துகள் வேலை செய்தால்

இந்தப் பிரச்சினை தணியலாம்

ஆனால் பின்னால் வேறுபிரச்சினைகள்

இருக்கலாம் என்கிறீர்கள்

 

டாக்டர் என் வாழ்க்கையில்

ஏற்கனவே ஆயிரம் குழப்பங்கள்

என் உறவுகளில் காதல்களில் இலட்சியங்களில்

கிட்டத்தட்ட நீங்கள் சொல்லும்

எல்லாச் சிக்கல்களும் இருக்கின்றன

நீங்கள் இப்போது

புதிய சிக்கலான சிலந்திவலையை

பின்னுகிறீர்கள்

 

நான் அறிய விரும்புவதெல்லாம்

ஒன்றே ஒன்றுதான் டாக்டர்

இந்த விளக்கு

உண்மையிலேயே

இன்னும் எவ்வளவு நேரம் எரியும்?

*

அழிவை வேண்டும் அன்பு

 

யாரோ ஒருவன்

ஓட்டப்பந்தயத்தில் முதலாவதாக

கோட்டைத் தொடுகிறான்

அவனுக்குப் பின்னால் ஓடியவர்கள்

அவனது உயர்த்திய கரங்களை

பற்றிக் குலுக்கிறார்கள்

பார்த்துக்கொண்டிருந்த நூறுபேர்

அவனை வெறுக்கிறார்கள்

 

யாரோ ஒருத்தி

முதலாவதாக மலையேறுகிறாள்

அவளுக்குப் பின்னால்

மலையேறிக்கொண்டிருந்தவர்கள்

அவளை வாழ்த்துகின்றனர்

சமவெளியில் நிற்கும் நூறுபேர்

அவள் கீழே விழவேண்டும் என்று  விரும்புகின்றனர்

 

யாரோ ஒருவன்

தன் சொல்லால் ஒரு சபையை வெல்கிறான்

அந்தச் சொல்லின் வசியத்தில்

அடுத்துப் பேச வந்தவர்கள்

தம் சொற்களை இழக்கிறார்கள்

பார்வையாளர்கள் சிலர்

காதுகளைப் பொத்திக்கொண்டு

வெளியேறுகிறார்கள்

 

யாரோ ஒருத்தி

தன் வசீகரத்தால்

இந்தப் பூமியை வெளிச்சமாக்குகிறாள்

நிலவும் நட்சத்திரங்களும் அவளுக்கு வழிவிடுகின்றன

யாரோ சிலர்

கண்ணாடியில் தம்மை  உற்றுநோக்குகிறார்கள்

பிறகு அவளது கொடும்பாவியை கொளுத்துகிறார்கள்

 

இந்த உலகின் மகத்தான துயரங்களில் ஒன்று

ஒருவர் வெல்வதைக் காண்பது

அதற்கு ஏன்

இவ்வளவுபேர் மனம் கசந்துபோகிறார்கள்?

 

அப்போது அவர்களுக்கு

நினைவுக்கு வந்துவிடுகின்றன

அவர்கள் தடுக்கி விழுந்த பாதைகள்

சறுக்கி விழுந்த படிக்கட்டுகள்

தவறவிட்ட சந்தர்ப்பங்கள்

வழிதவறிப்போன இருள் வெளிகள்

 

நான் வீழ்ச்சியடைய விரும்புகிறேன்

இன்று யாரோ சிலர்

நிம்மதியாக உறங்க

 

நான் தோல்வியடைய விரும்புகிறேன்

யாரோ சிலர்

இன்று என்னை பிரியமாய்

அணைத்துக்கொள்ள

*

 

செல்ஃபியில் தோன்றும் முகம்

 

‘நீ செல்ஃபியில் அழகாக இல்லை

புகைப்படங்களில்தான் அழகாக இருக்கிறாய்’

என்றாள்

 

புகைப்படங்களுக்கும்

செஃல்பிகளுக்கும்

நிறைய வித்தியாசங்கள்

இருக்கின்றன

 

புகைப்படங்கள்

கேன்வாஸில் தீட்டப்படும்

ஒரு சித்திரம்போல

அவற்றில் இன்னொருவரின்

கண்கள் இருக்கின்றன

அது நீங்கள் வசீகரம்கொள்ளும்

ஒரு தருணத்தைக் கண்டுபிடிக்கின்றன

அதற்காகவே காத்திருக்கின்றன

அந்தக் கண்கள்

உங்களைக் காண்கின்றன என்பதாலேயே

நீங்கள் வசீகரம் கொள்கிறீர்கள்

உங்கள் உடல் அதற்காக

தன்னை மாற்றிக்கொள்கிறது

உங்கள் புன்னகையை

நீங்கள் செதுக்குகிறீர்கள்

இன்னொருவரால் காணப்படும்

எந்த ஒன்றும்

தன் வெளிச்சத்தால்

தான் காண்கிற எந்த ஒன்றையும்

வெளிச்சமூட்டுகின்றன

 

செஃல்பிகள் முன்

நான் நிர்வாணமாக நின்றுகொண்டிருக்கிறேன்

என் காயங்களும் தழும்புகளும்

என் செல்ஃபிகளில் தெளிவாகத் தெரிகின்றன

அங்கே யாருமில்லை என்பதால்

நான் கலைந்துகிடக்கிறேன்

அங்கே யாருமில்லை என்பதால்

என் மனதின் இருள்

என் முகத்தில் விழுவதைப்பற்றி

அக்கறையற்றிருக்கிறேன்

அங்கே யாருமில்லை என்பதால்

என் வெறுப்பையோ சுய வெறுப்பையோ

மறைத்துக்கொள்ள முடியாதிருக்கிறேன்

மேலும் என்னை நானே

அவ்வளவு அருகாமையில் காண்கையில்

அது என்னை அஞ்சவைக்கிறது

செல்ஃபிகளில் என் முகத்தை

திருகலாக்கிக்கொள்வதன் காரணம்

அதுதான்

என் அசலான முகமாக இருக்கிறது

 

நான் தனியாக இருக்கும்

ஒரு புகைப்படத்தில்கூட

என்னுடன் இன்னொருவர் இருக்கிறார்

அவருக்காக நான் புன்னகைக்கிறேன்

‘ஸ்மைல் ப்ளீஸ்’ என்கிறார், தயவாக

 

நான் இன்னொருவருடன்

எடுத்துக்கொள்ளும் செஃல்பிகளில்

இருவருமே தனியாக இருக்கிறோம்

அவரவரும் அவரவரை மட்டுமே

பார்த்துக்கொண்டிருக்கிறோம்

*

உயரத்தில் எங்கோ

 

ஏன் எல்லாமே

எனக்கு

இவ்வளவு உயரத்தில் இருக்கின்றன?

ஸ்விட்சுகள்

வாஷ்பேஷன்கள்

சிட் அவுட்கள்

ஜன்னலின் கதவுகள்

அடுப்பு மேடைகள்

நிலைக்கண்ணாடிகள்

நாற்காலிகள்

தாண்டுவதற்கான பால்கனி சுவர்கள்

 

தரையோடு வாழும்

நத்தைகள் என்ன செய்வோம்?

நீரோடு வாழும்

மீன்கள் என்ன செய்வோம்?

 

அருகில் இருக்கும் எல்லாமே

கைக்கெட்டாதிருக்கிறது