கொல்கத்தாவில் ஒரு முதியவரின் மரணத்தைத் தொடர்ந்து நிகழ்ந்த பயிற்சி மருத்துவர்களின்மீதான தாக்குதல் நாடு முழுவதும் மருத்துவர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் மட்டுமல்லாது தேசிய அளவில் மருத்துவர்கள் ஒற்றைக் குரலாக இந்தத் தாக்குதலைக் கண்டித்துப் பல்வேறு வகையான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்திய மருத்துவ சங்கம் நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்து இருந்தது. இந்தப் போராட்டத்திற்குப் பின்னணியில் இருந்த அரசியல் காரணங்களைத் தாண்டி நாம் ஒரு விஷயத்தை தீவிரமாக ஆராய வேண்டியுள்ளது. மருத்துவர்களின்மீதான தாக்குதல்கள் சமீப காலங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு என்ன காரணம்? “மருத்துவர்களின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்”, “மருத்துவர்களின் மீது தாக்குதல்களில் ஈடுபடுவோருக்கு தண்டனையை அதிகரிக்க வேண்டும்” என்பவைதான் மருத்துவர்களின், மருத்துவ சங்கங்களின் கோரிக்கைகளாக இருக்கின்றன. மருத்துவர்களின் பாதுகாப்பை அதிகரித்தால் இந்தத் தாக்குதல்கள் குறைந்துவிடும் என மருத்துவர்கள் நம்புகிறார்கள் என்றால் உண்மையில் அது எனக்குப் பெரும் வியப்பாக இருக்கிறது. ஏனென்றால் மருத்துவர்களின்மீதான தாக்குதல் என்பது ஏதோ ஒரு சமநிலையின்மையின் வெளிப்பாடு. அந்த வெளிப்பாட்டை மட்டுமே பிரதான பிரச்சினையாக நினைப்பது மேலோட்டமான புரிதல். ஒரு பிரச்சினையின் வேரை விட்டுவிட்டு அதன் கிளைகளை மட்டும் வெட்டிக்கொண்டிருப்பதற்கு சமமானது அது. இந்தப் பிரச்சினையின் ஒரு பரிணாமத்தை மட்டும் எடுத்துப் பார்த்தால் மருத்துவர்களின் கோரிக்கையில் உள்ள அபத்தம் புரியும். பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் யாரிடம் கோரிக்கை வைக்கிறார்கள்? அரசாங்கத்திடம். யாரிடம் இருந்து பாதுகாப்பு வேண்டுமென அவர்கள் கேட்கிறார்கள்? மக்களிடம் இருந்து. மருத்துவர்களையும், மக்களையும் எதிரெதிர் துருவத்தில் நிறுத்த முயலும் அரசாங்கத்தின் முயற்சிக்கு இது ஒரு பெரும் வெற்றிதானே! உண்மையில் மருத்துவர்கள் மக்களின் பக்கம்தானே நிற்க வேண்டும்? ‘மருத்துவர்கள் என்பவர்கள் மக்களின் பிரதிநிதிகள்’ என்ற கோட்பாட்டில் இருந்து மருத்துவர்கள் விலகி வந்திருப்பதும் மக்களுக்கும் மருத்துவர்களுக்குமான இடைவெளி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேயிருப்பதும்தான் இந்தப் பிரச்சினையின் வேர். அதை எப்படிக் களைவது என்பதை யோசித்தால் தவிர இந்தத் தாக்குதல்களைத் தடுக்க முடியாது என்பதை மருத்துவர்கள் உணர வேண்டும்.
சமீப காலங்களில் பொதுமக்களுக்கு மருத்துவர்களின்மீது வெறுப்பும், வன்மமும் அதிகரித்து வருவதற்கு முக்கியமான காரணம், மருத்துவர்களின்மீதான நம்பிக்கையின்மை. சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்று தமிழ்நாட்டில் நடந்த ஒரு பிரச்சினையில் ஒரு மருத்துவர் கொல்லப்பட்டார். ஒரு காலத்தில் மருத்துவர்களை கடவுளுக்குச் சமமாக மதித்துக் கொண்டிருந்த இந்த சமூகம்தான் மருத்துவர்களைக் கொலைசெய்யும் அளவிற்குச் சென்று இருக்கிறது. இதை வெறும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினையாக மட்டும் நாம் இன்னமும் சுருக்கிப் பார்த்துகொண்டிருக்க முடியாது. மக்கள் மருத்துவர்களின்மீதான நம்பிக்கையை இழக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதை மருத்துவர்கள் இந்த சம்பவங்களின் வழியாக உணர வேண்டியது அவசியம். மருத்துவர்களின்மீதான தாக்குதல்கள் என்பது இந்த நம்பிக்கையின்மையின் வெளிப்பாடுகள் அவ்வளவே. நாம் இந்த வெளிப்பாடுகளின்மீது அதிகபட்ச வெளிச்சத்தைப் பாய்ச்சுவதன் வழியாக இதனுள் நடந்துகொண்டிருக்கும் ஆதாரமான பிரச்சினைகளைக் கவனிக்க மறுக்கிறோம்.
மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டுமானால் நாம் அவர்களின் நலன்மீது உண்மையான அக்கறையுடன் இருக்க வேண்டும். மருத்துவர்களுக்கு மக்களின் நலன்மீது அக்கறையை வெளிப்படுத்துவதற்கு இங்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. மருத்துவத்துறையின்மீதும், அலோபதி மருத்துவத்தின்மீதும் தொடர்ச்சியான போலி பிரச்சாரங்கள் இங்கு திட்டமிட்டு நடந்துகொண்டிருக்கின்றன. மருத்துவர்கள் அந்தப் பிரச்சாரங்களுக்கு எதிராக எந்த அடிப்படை அறிவியல் விளக்கத்தையும்கூட மக்களுக்குத் தர முன்வரவில்லை. உதாரணமாகத் தடுப்பூசிகளுக்கு எதிராக சமீப காலங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் பிரச்சாரங்களை நாம் அறிவோம். எத்தனை மருத்துவர்கள் அல்லது மருத்துவ சங்கங்கள் அந்தப் பிரச்சாரங்களை முறியடித்து மக்களைக் காக்கும் வேலையைச் செய்தன? உண்மையில் மக்களின் நலன்மீதும், மருத்துவத்துறையின்மீதும் அக்கறையிருந்தால் அதை எதிர்த்துப் பேசியிருக்க வேண்டும்தானே? தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் வணிக கொள்ளைகளுக்கெல்லாம் எதிராக மருத்துவர்கள் பேசாமல்போனதின் விளைவாகவே மருத்துவர்களுக்கும் அதில் பங்கு உண்டு என மக்கள் நினைக்க தொடங்கியிருக்கிறார்கள். தேவையற்ற பரிசோதனைகளையும், தேவையற்ற வைத்தியங்களையும் செய்யச் சொல்லி கார்ப்பரேட் நிறுவனங்கள் மருத்துவர்களை நிர்ப்பந்திக்கும்போது அதை எதிர்த்து மருத்துவர்களின் குரல் ஒலித்திருந்தால் அது மக்களின் குரலாக இருந்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லையே! “கார்ப்பரேட் மருத்துவமனைகளின்மீதும், தனியார் மருத்துவமனைகளின்மீதும் மக்களுக்குக் கோபமிருந்தால் ஏன் அரசாங்க மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களையும் தாக்குகிறார்கள்?” என்ற கேள்வி இங்கு எழலாம். அது உண்மைதான்.
மருத்துவர்களின்மீதான பெரும்பாலான தாக்குதல்கள் அரசாங்க மருத்துவமனையில்தான் நடக்கின்றன. அதுவும் பயிற்சி மாணவர்கள், இளநிலை மருத்துவர்களே இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். கார்ப்பரேட் மருத்துவமனைகளின் வணிகக்கொள்ளைக்கு ஏதோ ஒருவகையில் அரசாங்க மருத்துவமனைகளும் காரணம் என மக்கள் நினைக்கிறார்கள். அரசாங்க மருத்துவமனைகளின் போதாமைகளின் விளைவாகவே மக்கள் தனியார் மருத்துவமனையை நாடிச் செல்கின்றனர். இந்தப் போதாமைகளுக்கு எதிராக எந்த அரசாங்க மருத்துவர்களும் இதுவரை குரல் கொடுத்ததாய் தெரியவில்லையே. ‘அரசாங்க மருத்துவமனைகளின் போதாமைகளுக்கு மருத்துவர்கள் காரணமல்ல, அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளே காரணம்’ எனக் காரணம் சொல்லி மருத்துவர்கள் தப்பித்துக் கொள்ளலாம். தனக்கென்று ஒரு பிரச்சினை ஏற்படும்போது தன்னை அரசாங்கத்தின் பிரதிநிதியாக முன்னிறுத்திக்கொள்ளும் மருத்துவர்கள் அரசாங்கத்தின் போதாமைகளுக்கும் பொறுப்பு ஏற்பதுதானே முறை?
சில வாரங்களுக்கு பீகாரில் உள்ள மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மூளை அழற்சியால் இறந்துபோனார்கள். நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த சம்பவத்தின்போது அவசர சிகிச்சை பிரிவிற்குள் நுழைந்த பத்திரிகையாளர்கள் அங்கு பணியில் இருந்த மருத்துவர்களை நோக்கி தங்களது மைக்குகளை நீட்டி அவர்களிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தனர். ஏராளமான குழந்தைகள் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் அந்தத் தருணத்தில், இருக்கும் வெகு சில மருத்துவர்களையும் அவர்களது பணியைச் செய்யவிடாமல் ஊடகத்தினர் அவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிற்கவைத்து தங்களது கடமையை முடித்துக் கொண்டனர். “ஏன் அங்கு மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறது?” என்ற ஒற்றைக் கேள்வியைகூட அவர்கள் அரசாங்கத்தை நோக்கி வைப்பதற்கு தயாராக இல்லை. வழக்கம்போலவே மருத்துவர்களைப் பலிகடாவாக்கும் போக்குதான் அங்கு இருந்தது. அந்தப் பிரச்சினையில் அரசு என்னவிதமான நிலைப்பாடு எடுத்தது என்பதை மருத்துவர்கள் கவனித்தார்களா எனத் தெரியவில்லை. “அந்தக் குறிப்பிட்ட மருத்துவமனையின் போதாமைகளும், மருத்துவர்களின் திறமையின்மையும்தான் காரணம்” என்ற வகையில்தான் அரசின் விளக்கம் இருந்தது. அரசாங்கமும் பழியைத் தூக்கி மருத்துவர்களின்மீதும், மருத்துவமனையின்மீதும் போட்டுவிட்டு தனது கையைத் துடைத்துக்கொண்டது. மருத்துவர்களைச் சுற்றி நிகழும் அந்த அரசியலை புரிந்துகொள்ளாமல் இன்னமும் மக்கள் ஆபத்தானவர்கள் என்று சித்தரிப்பதையே மருத்துவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தால் எப்படி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும்?
வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஜான் என்ற வைராலஜியில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர் 2012இல் இருந்து தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் பீகாரில் முசாஃபர்பூரில் தொடரும் இந்தக் குழந்தைகளின் மரணத்தைப்பற்றி ஒரு ஆய்வை மேற்கொண்டார். ஆய்வின் முடிவில் அவர் சில உண்மைகளையும், வைத்தியமுறைகளையும் பரிந்துரைத்தார் அதாவது அதுவரை நம்பப்பட்டு வந்ததுபோல அது மூளைக்காய்ச்சல் அல்ல(encephalitis). அது ஒருவிதமான மூளை அழற்சி(encephalopathy) என்றார். இரண்டிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றன. மூளைக்காய்ச்சல் என்பது ஒருவித வைரஸ் தொற்றால் வருவது. ஆனால் மூளை அழற்சி என்பது தொற்று அல்ல. மூளையில் சர்க்கரையின் அளவு குறைவதால் ஏற்படுவது. அங்கு இறக்கும் குழந்தைகள் அனைவரும் லிட்சி பழத்தோட்டத்தில் வேலைசெய்யும் ஏழைத் தொழிலாளர்களின் குழந்தைகள். பெரும்பாலான நேரங்களில் இரவு உணவை உண்ணாமல் அந்தக் குழந்தைகள் உறங்க செல்கிறார்கள். அதன் விளைவாக உடலில் சர்க்கரை அளவு குறைகிறது. காலை எழுந்தவுடன் உடலில் சர்க்கரையின் அளவு குறைந்த நிலையில் லிட்சி பழத்தை அந்தக் குழந்தைகள் எடுத்து சாப்பிடும்போது அது சில வேதியியல் பாதிப்புகளை அந்தக் குழந்தைகளின் மூளையில் ஏற்படுத்துகிறது. அதன் விளைவாகவே அந்தக் குழந்தைகளின் மூளை பாதிக்கப்படுகிறது. அந்த சூழ்நிலையில் உடனடியாக நான்கு மணி நேரத்தில் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று சர்க்கரையின் அளவைப் பரிசோதித்து உடனடியாக அவர்களுக்கு டெக்ஸ்ட்ரோஸ் என்னும் சர்க்கரைகரைசல் கொடுத்தால் அந்தக் குழந்தைகளைக் காப்பாற்றிவிடலாம் என்பதை டாக்டர் ஜான் அறிக்கையாக சமர்ப்பித்தார்.
2015இல் இருந்து அந்தப் பழத்தோட்டத்தின் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சர்க்கரையைக் கண்டறியும் குளுக்கோமீட்டர் என்னும் கருவி வைக்கப்பட்டு உடனடியாக டெக்ஸ்ட்ரோஸ் கொடுக்கப்பட்டதின் விளைவாக குழந்தைகளின் இந்த மரணங்கள் தடுக்கப்பட்டன. ஆனால் சென்ற ஆண்டு முதல் இந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள குளுக்கோமீட்டர்களும், வைத்திய முறைகளும் சரியாகப் பராமரிக்கப்படாததின் விளைவாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடனடியாக வைத்தியம் செய்ய முடியாதநிலை ஏற்பட்டது. அதன் விளைவாகவே இத்தனை மரணங்கள் அங்கு நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் இவை எதைப்பற்றியும் எந்த ஒரு விவாதமும் செய்யாமல் மருத்துவர்களைக் குற்றவாளியாக்கும் போக்கையே அரசாங்கமும், ஊடகங்களும் செய்கின்றன. உண்மையில் மருத்துவர்கள் தேசிய அளவில் இந்தப் பிரச்சினைக்குத்தானே போராடியிருக்க வேண்டும்? இந்தப் பிரச்சினையை முதன்மையாக வைத்து அரசாங்க மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்த அரசாங்கத்தை நிர்ப்பந்தித்திருந்தால் மக்கள் பெருமளவு மருத்துவர்களுடன் சேர்ந்து போராடியிருப்பார்கள். ஒரு பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்டதற்கு நாடு முழுவதும் உள்ள அத்தனை மருத்துவர்களையும் ஒருங்கிணைத்துப் போராடிய மருத்துவ சங்கங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்ததற்கோ அதற்கான பழியையும் மருத்துவர்களின்மீதே சுமத்தியதற்கோ எந்தவிதக் குரலும் கொடுக்காமல் அமைதியாக கடந்து வந்தது ஏன்? இந்தக் கேள்வியை ஒவ்வொரு மருத்துவரும் தன்னை நோக்கி கேட்டுக்கொள்ள வேண்டாமா?
மக்களின் நலன் தொடர்பாக அரசாங்கத்தின் போதாமைகளை மறைத்துக்கொள்ள மருத்துவர்களை ஒரு துருப்புச் சீட்டாக அரசு பயன்படுத்திக்கொள்கிறது. இதை மருத்துவர்கள் இன்னமும் உணர்ந்துகொள்ளாமல் மக்களிடம் இருந்து தங்களைக் காக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கைவைத்துக் கொண்டிருந்தால் மக்களிடம் இருந்து இன்னும் அந்நியப்பட்டுதான் போவார்கள். மருத்துவத்துறையின் வணிகமாக்கலில் ஒரு மிகப்பெரிய மோசமான விளைவாக நான் நினைப்பது மக்களையும், மருத்துவர்களையும் எதிரெதிர் துருவத்தில் நிற்கவைத்ததுதான். இந்தநிலைக்கு மருத்துவர்களும் ஒருவகையில் காரணமே. ஒரு அரசாங்க மருத்துவத்தில் போதுமான வசதிகள், குறைகள் இருக்கும்போது மக்களின் சார்பாக மருத்துவர்கள் நின்று அந்தக் குறைகளையெல்லாம் சரிசெய்ய முயற்சிகள் எடுத்திருந்தால் மக்கள் மருத்துவர்களின் பக்கம் நின்றிருந்திருப்பார்கள். மருத்துவர்கள் செல்லவேண்டிய பாதை இதுதான். மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். மக்களின் பொதுநலனுக்கு எதிராகத் தீட்டப்படும் எந்த ஒரு தீவிரமான திட்டத்தையும் மருத்துவர்கள் தீவிரமாக எதிர்க்க வேண்டும்.
நிதி ஆயோக்கின் பரிந்துரைகளின்படி, அரசாங்க மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட அளவிலான அரசாங்க மருத்துவமனைகளைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை அரசு தீவிரமாக எடுத்துவருகிறது. மற்ற மாநிலங்களை விட்டுவிடுவோம். தமிழகத்தின் அடிப்படை மருத்துவ கட்டுமானம் வேறெந்த மாநிலத்தைவிட பலமானது. மருத்துவத் துறையின் அத்தனை புள்ளிவிவரங்களிலும் தமிழகம் மேலானதாக இருக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை, மருத்துவமனை பிரசவங்கள், மாவட்ட மருத்துவமனைகளில் இருக்கும் ஏராளமான துறைசார்ந்த மருத்துவர்கள் போன்று இன்னும் நிறைய விஷயங்களில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களைவிட முன்னணியில் இருக்கிறது. இன்று இவை அத்தனையும் ஆபத்தில் இருக்கின்றன. ‘நீட்’டின் வழியாக ஏராளமான வெளி மாநில மாணவர்கள் நமது மருத்துவ இடங்களில், மருத்துவ கல்லூரிகளில் நிறையத் தொடங்கிவிட்டார்கள். இதன் விளைவாக கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. மாவட்ட மருத்துவமனைகளைத் தனியார்மயமாக்கும் நிதி ஆயோக்கின் பரிந்துரைகளை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால் இந்த அடிப்படை மருத்துவ கட்டுமானம் ஆட்டம் காணத்தொடங்கிவிடும். அடிப்படை மருத்துவம் என்பது முசாஃபர்பூரில் மட்டுமல்ல, தமிழகத்திலும் எளிய மக்களுக்கும் எட்டாததாக மாறிப்போகும் வாய்ப்பிருக்கிறது. ஒரு எளிய ஒடுக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்த ஒருவன் மருத்துவராக ஆக முடியும் என்ற நிலை மாறிப்போய் அவர்களுக்கு அடிப்படை வைத்தியமே இனி எட்டாத கனிதான் என்பது எத்தனைக் கொடுமையானது? இந்தப் பிரச்சினைகளின் தீவிரத்தை முழுமையாகப் புரிந்துகொண்ட மருத்துவர்கள்தானே இதையெல்லாம் எதிர்த்து மக்களுக்காகப் போராட வேண்டும்? நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை வேறு எந்த வகையில் நம் மக்களுக்கு உணர்த்த முடியும்? அதற்கு இதைவிட சிறந்த வாய்ப்பு எது?
சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டு எழுப்பப்பட்ட மருத்துவக் கட்டுமானம் சீர்குலைந்து வரும் இந்தக் காலகட்டத்தில் அதை சீரமைக்க வேண்டிய பொறுப்பு மருத்துவர்களுக்கு உண்டு. அதை முன்வைத்து மருத்துவர்கள் முன்னெடுக்க வேண்டிய பல விஷயங்கள் இங்கிருக்கின்றன. அதில் முக்கியமானவை: அரசு மருத்துவமனைகளின் போதாமைகளைக் களைய வேண்டும், மாவட்ட அரசு மருத்துவமனைகளைத் தனியார்மயமாக்கும் அரசின் முயற்சிகளை ஆரம்ப கட்டத்திலேயே எதிர்த்து நாடு தழுவிய போராட்டங்களை மருத்துவர்கள் முன்னெடுக்க வேண்டும், எளிய மனிதர்களின் அடிப்படை மருத்துவ வசதிகள் பாதுக்காக்கப்பட வேண்டும், மருத்துவ அறிவியலின் அத்தனை வளர்ச்சிகளும் நாட்டின் கடைக்கோடியில் இருப்பவருக்கும் எந்தவித தங்குதடையும் இன்றி கிடைப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், கார்ப்பரேட் மருத்துவமனைகளின் கட்டணங்களை முறைப்படுத்துவதற்கு உரிய முயற்சிகளை எடுக்க வேண்டும், அதற்காக தன்னலமற்ற உரையாடலை மேற்கொள்வதற்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும்; மருத்துவமனைகளின் கதவுகளுக்கு உள்ளே ஒரு எளிய மக்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் புரிந்துகொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும், அவர்களின் வைத்தியம் சார்ந்த சிக்கல்கள், சங்கடங்கள், சந்தேகங்கள் போன்றவற்றைத் திறந்த மனதுடன் கேட்க வேண்டும், மிக முக்கியமாக நோயாளிகளுடன், அவர்களின் உறவினர்களுடன் முன் முடிவுகளற்ற, அதிகாரமற்ற, பகட்டற்ற உரையாடலுக்குத் தங்களைத் தயார் செய்ய வேண்டும். நோய்மையில் இருந்து ஒருவரை வெளிக்கொணருவது என்பது தங்களது கடமை. அந்த நோய்மைக்கான வைத்தியத்தைப் பெறுவது நோயாளிகளின் உரிமை என்ற வகையில்தான் ஒரு மருத்துவரின் நிலைப்பாடு இருக்க வேண்டும்.
ஒரு மருத்துவமனையில், நோயின் தன்மையால் ஒருவர் இறக்கும்போது அதற்குக் காரணம் ‘மருத்துவர்களின் போதாமை’ என்ற முடிவுக்கு நோயாளியின் உறவினர்கள் உள்ளிட்ட அனைவரும் வருவது ஆபத்தானது. ஆனால் அப்படி உடனடியாக அவர்கள் அந்த முடிவுக்கு வருவதற்கு என்னவெல்லாம் காரணம்? மருத்துவத்தின்மீதும் மருத்துவத்துறைமீதும் சமீபகாலங்களில் தொடர்ச்சியாக நடந்துவரும் வெறுப்பு பிரச்சாரங்கள், அதிகரித்துக்கொண்டே வரும் மருத்துவர்களுக்கும் மக்களுக்குமான இடைவெளி, அரசாங்க மருத்துவமனைகளின் போதாமைகளும், அதை இன்னும் பலவீனப்படுத்தும் அரசின் கொள்கை முடிவுகளும், கார்ப்பரேட் மயமாகிவரும் மருத்துவத்துறை என நிறைய காரணங்கள். இவையெல்லாம் மருத்துவர்களின்மீது மட்டும் நம்பிக்கையின்மையை ஏற்படுத்துவதில்லை மருத்துவத்துறையின்மீதே மக்கள் நம்பிக்கையிழந்து வருகிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.
மருத்துவர்களின்மீது தாக்குதல்களை நாம் இந்தக் காரணங்களின் வழியாகவே புரிந்துகொள்ள வேண்டும். மருத்துவத்துறையின் பிரதிநிதிகளாக மக்கள் மருத்துவர்களையே நினைக்கிறார்கள். அதனால்தான் அதன் போதாமைகளுக்காக மருத்துவர்கள் தாக்கப்படுகிறார்கள். தங்களது பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்பதை இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக மருத்துவர்கள் நினைக்கிறார்கள் என்றால் அவர்கள் தங்களை மருத்துவத்துறையின் பிரதிநிதிகளாக இன்னும் உணரவில்லை என்பதே பொருள். மருத்துவத்துறையைப் பாதுகாக்கும் பொறுப்பு மருத்துவர்களுக்குத்தான் இருக்கிறது என்று மக்களுக்குத் தெரிகிறது. ஆனால் மருத்துவர்கள் அதை உணராமல் இருப்பதுதான் வேதனை. வேறு யாருடைய நலனையும்விட மக்களின் நலன்தான் முக்கியம் என்பதை ஒரு மருத்துவர் உணரும்போது மருத்துவர்களின் பக்கம் மக்கள் நிற்பார்கள். மக்களின் உரிமைக்காக மருத்துவர்கள் போராடினால் மருத்துவர்களின் உரிமைக்காக மக்கள் போராடுவார்கள். இல்லையென்றால் ஒருவரை எதிர்த்து இன்னொருவர் காலம் முழுக்கப் போராடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். அது மருத்துவர்களுக்கும் நல்லதல்ல, மக்களுக்கும் நல்லதல்ல, மருத்துவத்துறைக்கும் நல்லதல்ல.