டாக்டர் பயல் தாத்வி. உயர்கல்வி நிறுவனங்களில் பசைபோல அப்பிக்கொண்டிருக்கும் சாதிய கோரமுகத்தின் அடுத்த பலி. டாக்டர் பயல் தாத்வி, மும்பை BYL Nair மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவத்திற்கான முதுநிலை மருத்துவப் பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி கடந்த மே 22 ஆம் தேதி கல்லூரி விடுதியில் தூக்கிட்டு இறந்திருக்கிறார். ரோஹித் வெமுலாவைபோல, JNU பல்கலைக்கழகத்தின் முத்துகிருஷ்ணனைப் போல, உயர் கல்வி நிறுவனங்களின் சாதிய ஒடுக்குமுறையில் உயிரிழந்த ஏராளமான தலித், பழங்குடி மாணவர்களைப் போல பயல் தாத்வியும் தன்னை மாய்த்துக் கொண்டார். இதுவும் ஒரு செய்தியாக இன்னும் சில நாட்களில் நம்மைக் கடந்து விடும். ஆனால் முதல்முறை கல்வியின் வாசனையை நுகரும் ஏராளமான முதல் தலைமுறை ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அப்படி அல்ல. “நீங்கல்லாம் படிச்சி என்ன செய்யப் போறீங்க?” என்ற கேள்வியை ஒரு கூர்மையான கத்தியாக செதுக்கி அவர்கள் நுழையப் போகும் உயர்கல்வி நிறுவனங்களின் வாசலில் தொங்கவிட்டிருக்கிறது சாதிய சமூகம்.
டாக்டர் பயல் தாத்வி பழங்குடியின மாணவி, ஏராளமான கனவுகளுடன் இளநிலை மருத்துவத்தை முடித்துவிட்டு, தனது லட்சியமான மகப்பேறு மருத்துவத்துறையினுள் பெரும் உழைப்பிற்கும், சிரமத்திற்கும் பிறகு சேர்ந்திருக்கிறார். அந்தத் துறையில் சேர்ந்த நாளில் இருந்தே அவரின் சீனியர் பெண்களால் ஒடுக்குமுறைக்கும், கேலிப்பேச்சிற்கும், ஏளனங்களுக்கும் ஆளாகியிருக்கிறார். “உங்களுக்கெல்லாம் ரிசர்வேஷனில் மிக எளிமையாக இது போன்ற வாய்ப்புகள் கிடைத்துவிடுகிறது” என்பதைப் பல நேரங்களில், பல சந்தர்ப்பங்களில் திரும்பத் திரும்ப பயலைப் பார்த்துச் சொல்லியிருக்கிறார்கள். உண்மையில் இது போன்ற கிண்டல்களையும், அகங்காரங்களையும் பயல் தனது வாழ்க்கையில் நிறைய முறை கடந்துதான் வந்திருப்பார். அதனால் இந்த கேலிப்பேச்சுகளை ஆரம்பத்தில் அவர் பெரிதுபடுத்தவில்லை. இந்த சிக்கல்களுக்கும், தடங்கல்களுக்கும் இடையேதான் அவர் தனது படிப்பை முடிக்க வேண்டும் என அவருக்குத் தெரியும். அப்படித்தான் தனது முதல் வருடத்தை முடித்திருக்கிறார். ஆனால் ஒரு முதுநிலை மருத்துவப் படிப்பு அதுவும் அறுவை சிகிச்சை சார்ந்த படிப்புகளில் இரண்டாம் வருடமும், மூன்றாம் வருடமும் மிக முக்கியம். அறுவை சிகிச்சைக்கான வாய்ப்பு அந்த வருடங்களில்தான் கிடைக்கும். அந்த வாய்ப்பை அவரது சீனியர் மாணவர்களும், துறையின் மூத்த மருத்துவர்களும்தான் ஏற்படுத்தி தர வேண்டும். ஒருவேளை ஏதேனும் காரணங்களுக்காக அந்த வாய்ப்புகள் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டால் எப்போதும் அந்தத் துறையை முழுமையாக கற்றுகொள்ள முடியாது. தான் லட்சியமாக கொண்ட ஒரு துறையில் சேர்ந்தும் அதை முழுமையாக தன்னைக் கற்றுக்கொள்ள விடாமல் தொடர்ச்சியாகத் தடுக்கும்போதுதான் பயல் தனது எதிர்காலத்தைப் பற்றி அச்சம் அடைந்திருப்பார். இந்த அச்சத்தின் விளைவாகவே அவர் தனது துறைத் தலைவரிடமும், கல்லூரி நிர்வாகத்திடம் சென்று முறையிட்டிருக்கிறார். ஆனால் வழக்கம்போல நிர்வாகம் அதை அலட்சியப்படுத்தியது. உயர்கல்வி நிறுவனங்களில் இது போன்ற உளவியல் தாக்குதல்கள் சாதியின் பெயரால் நடைபெறும்போது அது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு ஏராளமான முன்னுதாரணங்கள் நம்மிடையே இருந்தும் நிர்வாகம் இதை அலட்சியப்படுத்தியதின் விளைவுதான் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையின்மையை, விரக்தியை பயலுக்கு ஏற்படுத்தி இருக்கும். அந்த நம்பிக்கையின்மையின் தீவிரம் அதிகமாகிய ஒரு கணத்தில்தான் பயல் இப்படிப்பட்ட முடிவை எடுத்திருப்பார்.
இந்த சம்பவத்தில் நாம் கவனிக்கவேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. அதை ஒட்டியே நாம் சில விவாதங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. உயர்கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் சக மாணவர்களால் புறக்கணிக்கப்படுவதற்கு, ஏளனம் செய்யப்படுவதற்கு முக்கிய காரணமாக அவர்கள் வந்த இடஒதுக்கீடே சொல்லப்படுகிறது. “சாதியினால் மிக சுலபமாக மேற்படிப்பிற்கான வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைத்துவிடுகிறது” என்பதுதான் அவர்களின்மீதான வசவுகளின் மையமாக இருக்கிறது. இது உண்மையா? அவ்வளவு சுலபமாகவா பட்டியலின மக்களுக்கு இந்த வாய்ப்புகள் கிடைத்து விடுகிறது? ஒரு உயர் சாதி மாணவருக்கு இருப்பதைப் போன்ற வாய்ப்புகள், ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. ஒரு மேற்படிப்பை நோக்கி வரும் உயர்சாதி மாணவனின் பாதையும், ஒடுக்கப்பட்ட மாணவனின் பாதையும் வேறு வேறு. ஒரு பட்டியலின மாணவன் தன்னை நிரூபித்தால் மட்டுமே அவன் பத்தாவதைக் கூட தாண்ட முடியும் என்ற நிலைதான் பொதுவாக இங்கிருக்கிறது. நன்றாகப் படித்தால் மட்டுமே அவன் மேற்கல்விக்கு செல்வதற்குரிய வாய்ப்பு அவனது குடும்பத்தால் வழங்கப்படும். பல்வேறு பொருளாதார, சமூக நெருக்கடிகளில் அவனைப் படிக்க வைப்பது தேவையில்லாதது என்ற மனநிலை கொண்ட பெற்றோர்களும், சமூகமும் இங்கிருக்கிறது. ஒடுக்கப்பட்ட ஒரு மாணவன், கல்வியில் மேலே வரும்போது சாதகமற்ற சூழ்நிலையும் அவன் கூடவே வந்து கொண்டிருக்கும். அந்த சாதகமின்மைகளையும் அவன் தனது கல்வியால் வெல்ல வேண்டும். அத்தனை பேரின் நம்பிக்கையையும் அவன் பெற வேண்டும். அப்போதுதான் அவன் உயர்கல்வியை நோக்கி நகர முடியும். ஆனால் ஒரு உயர்சாதி மாணவனுக்கு அப்படியல்ல. ஒரு மேற்படிப்பு என்பது அவனது எந்த முயற்சியும், உழைப்பும் இன்றியே அவனுக்குக் கிடைத்து விடும். அதற்கு மேல்தான் அவன் அவனை நிரூபிக்க வேண்டும். அதற்கும் கூட நமது அமைப்பு அவர்களுக்கு அத்தனை சாதகமாக இருக்கும்.
பயல் ஒரு பழங்குடியின மாணவி. அவர் மருத்துவ படிப்பை நோக்கி நகர்ந்து வந்திருப்பதற்கும், மற்றவர்கள் வந்ததற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. பயலின் பாதைதான் அவர்களின் பாதையை காட்டிலும் கடினமாக இருந்திருக்கும். ஆனாலும் இடஒதுக்கீடு என்பதை மட்டும் வைத்துக்கொண்டு அவர் சுலபமாக வந்து விட்டார் எனச் சொல்வது எத்தனை அபத்தமானது. இடஒதுக்கீடு என்றாலும் கூட அவர்களுக்கும், பயலுக்கும் எத்தனை மதிப்பெண் வித்தியாசம் இருந்திருக்கும். ஒன்று அல்லது இரண்டு மதிப்பெண்கள் அவ்வளவே. ஆனால் ‘தலித் மாணவர்கள் தேர்ச்சியடைந்தாலே போதும், மருத்துவம் கிடைத்து விடும்’ என்ற பார்வை இங்கிருக்கிறது. தலித் மாணவர்கள் கட் ஆஃப்பிற்கும், மற்ற மாணவர்கள் கட்ஆஃப்பிற்கும் எவ்வளவு வேறுபாடு இருக்கிறது என்று ஒவ்வொரு வருடமும் வரும் மருத்துவ கட் ஆஃப் மதிப்பெண்களைப் பாருங்கள். ஒன்று அல்லது இரண்டு மதிப்பெண்கள் தான் இருக்கும். அதை வைத்துக்கொண்டு சுலபமாக வந்துவிட்டார்கள் என சொல்வது எத்தனை அநீதியானது.
இந்த சம்பவத்தில் நாம் கவனிக்கவேண்டிய இன்னொரு முக்கியமான அம்சம், பயலை சாதிரீதியாகப் பல வன்கொடுமைகளை நிகழ்த்தியது அவரது சக மாணவிகள். அதாவது முதுநிலை மருத்துவப் பட்டபடிப்பு படிக்கும் டாக்டர்கள். “படிச்சா சாதி போய்விடும்” என்று நாம் சொல்லிக்கொண்டிருப்பது எத்தனை தவறான ஒன்று என்பதை இது போன்ற சம்பவங்கள்தான் நிரூபிக்கிறது. நிரம்ப அறிவியலைப் படித்த, அதுவும் உடற்கூறியல் போன்ற பாடங்களை எல்லாம் படித்து வரும் மருத்துவர்களிடம் எப்படி இந்த சாதிய மனநிலை இருக்கிறது என்பது ஆச்சர்யமான ஒன்று. ஆனால் அது ஆபத்தான உண்மையும் கூட.
ஒரு மருத்துவக் கல்லூரியில் பயின்றவன் என்ற வகையில், என்னைப் பொறுத்த வரையில் சாதிய மனநிலை மிக அதிகமாக இருக்கும் கல்லூரிகளில் மருத்துவக் கல்லூரிகளும் ஒன்று. தமிழ்நாடும் இதற்கு ஒன்றும் விதிவிலக்கல்ல. இளநிலை மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேரும்போதே சாதி ரீதியான குழு திரட்டல்கள் அமைந்து விடுகிறது. பெரும்பாலும் இட ஒதுக்கீடு மதிப்பெண்களை வைத்தே இந்த குழு திரட்டல்கள் நடக்கிறது. தென் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இந்த மனநிலை இன்னும் அதிகமாகவே இருக்கிறது. பெரும்பாலும் இந்தக் குழு திரட்டல்கள் தலித் மாணவர்களுக்கு எதிரானதாகவே இருக்கும். தலித் மாணவர்கள் மட்டுமே இடஒதுக்கீட்டில் வந்தவர்கள் என்ற எண்ணம்தான் இந்த குழு திரட்டல்களுக்கான அடிப்படையாக இருக்கும். பெரும்பாலான பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தாங்களும் இடஒதுக்கீட்டில்தான் வந்தோம் என்பதை உணராமல் தலித் என்றால் ‘கோட்டாவில் வந்தவர்கள்’ என்ற மனப்பான்மையில் அவர்கள்மீதான பல வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவது தொடர்ச்சியாக இங்கு நடந்து வருகிறது. நான் முதுநிலை மருத்துவப் படிப்பு சேர்ந்த காலத்தில் எனது துறையில் இருந்த பேராசிரியர் ஒருவர் எந்த மாணவரைப் பார்த்தாலும் முதலில் கேட்பது அவரது சாதியைத்தான். பெரும்பாலான உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களை ஆசிரியர்கள் மதிப்பீடு செய்யும்போது அந்த மதிப்பீடு சாதியை சார்ந்தே இருக்கிறது என பல அறிக்கைகள் சொல்கின்றன. சாதி ரீதியாக மனிதர்களுக்கிடையே வேறுபாடுகள் உண்டு என மதம் சொல்வதை மருத்துவ அறிவியல் முற்றிலுமாக நிராகரிக்கிறது. அந்த மருத்துவத்தைப் படிக்கும் மாணவர்கள் இந்த அறிவியலை ஒரு அறிவாக ஏற்றுக்கொண்டால் மருத்துவக் கல்லூரிகளில் சாதியப் பாகுபாடே இருக்காது. ஆனால் யாரும் மருத்துவ அறிவியலை ஒரு அறிவாக ஏற்றுக்கொள்வதில்லை என்பதுதான் இதன் சிக்கல். அவர்களை பொறுத்தவரையில் மருத்துவம் என்பது அவர்களுக்குப் பணம் சம்பாதிக்க ஒரு வழி. மனிதர்களைப் பற்றிய அவர்களது புரிதல்களிலோ அல்லது மனித உடல் பற்றிய அவர்களது அறிவிலோ இந்த அறிவியல் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாததுதான் நமது நாட்டின் சாபக்கேடு.
டாக்டர் பயல் மீதான சாதிய துவேஷங்களைக் கட்டவிழ்த்து விட்டவர்கள் அத்தனை பேரும் பெண் மருத்துவர்கள் என்பதும் இங்கு கவனிக்கத்தக்க ஒன்று. சாதியை மையமாக வைத்திருக்கும் பண்பாடுகளும், கலாச்சாரங்களும் பெண்களுக்கு எதிரான மனநிலையைக் கொண்டிருந்தாலும் கூட சாதிய உணர்வும், பெருமிதங்களும் ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாகவே இருப்பது இங்கு சமூக முரண். ஒருவேளை சாதி இத்தனை நூற்றாண்டுகளாக இங்கு பிழைத்திருப்பதற்கு இதுவுமே கூட ஒரு காரணமாக இருக்கலாம். பள்ளிக்காலம் முதல் பல தடைகளையும், ஏளனங்களையும், பாகுபாடுகளையும் கடந்து வரும் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் உயர்கல்விக்கு வரும்போது அங்கு இந்தப் போக்கு இன்னும் தீவிரமாக இருப்பதைக் காணும்போது நிச்சயம் நம்பிக்கையிழந்து போவார்கள். அதுவும் உயர்கல்வியில் பெரும்பாலும் அவர்கள் ஆசிரியர்களையும், தங்களது சீனியர்களையும் சார்ந்து இருக்கும் சூழல் வரும்போது அவர்களால் இது ஒரு தாண்ட முடியாத பாதையாக மனதில் படிந்துவிடுகிறது. அதுவரை அவர்கள் பட்ட துயரங்கள், வலிகள், இன்னல்கள் அனைத்தும் வீணாகப் போய்விடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் மிகப்பெரிய மனவுளைச்சலுக்கு ஆளாகின்றனர். அந்த மன உளைச்சலின் விளைவாகவே அவர்கள் இது போன்ற விபரீத முடிவுகளை எடுக்கின்றனர். இது போன்ற தற்கொலைகள் நடக்கும்போது மட்டுமே அது பொது சமூகத்தின் பார்வைக்கு வருகிறது. ஆனால் ஏராளமான ஒடுக்கப்பட்ட மாணவர்கள் இந்த மனவுளைச்சலைத் தாங்கமுடியாமல் தங்களது படிப்பைப் பாதியிலேயேவிட்டுச் செல்கின்றனர். உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து படிப்பைத் தொடர முடியாமல் பாதியிலேயே வெளியேறும் மாணவர்களில் பெரும்பான்மையானவர்கள் தலித் மாண்வர்கள் என UGCயின் ஒரு அறிக்கை சொல்கிறது. அப்படி அவர்களை வெளியேற்றியது சாதியைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?
உயர் கல்வி நிறுவனங்களில் மருத்துவத்தைப் பொறுத்தவரை மிக அதிகமாக சாதிய ஒடுக்குமுறைகள் நிறைந்ததாய் சொல்லப்படுவது புதுடெல்லியில் உள்ள AIIMS மருத்துவமனை. 2007 ஆம் ஆண்டு மத்திய அரசால் AIIMS மருத்துவமனையில் தலித் மாணவர்களின்மீதான வன்கொடுமைகளை பற்றி விசாரிக்க ஒரு விசாரணைக் குழு ஏற்படுத்தப்பட்டது. சுக்தியோ தோரட் என்ற UGC அமைப்பின் இயக்குனரைத் தலைமையாகக் கொண்டு அமைக்கப்பட்ட இந்த விசாரணைக் குழு பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்தது. “தலித் மாணவர்கள் எல்லா இடங்களிலும் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்படுகின்றனர், அவர்கள் தனியாகவே உணவறையில் உணவுண்ண வேண்டும், மைதானத்தில் தனியாகவே விளையாட வேண்டும், கல்லூரியால் கொடுக்கப்பட்ட விடுதிகளில் இருந்து வெளியேறி அனைவரும் வேறு ஒரு விடுதியில் தங்கவேண்டும் என்ற பல ஒடுக்குமுறைகள், கட்டுப்பாடுகள் கிமிமிவிஷி மருத்துவமனையில் இருக்கின்றன” என்பதை சொல்லி மிகக்கடுமையான பாகுபாடுகள் தலித் மாணவர்களின் மீது AIIMS மருத்துவமனையில் நிறுவப்படுகிறது என்பதை ஆதாரப்பூர்வமாக அந்தக் குழு அறிக்கையாக சமர்ப்பித்தது. நீண்ட காலமாக அதை ஏற்றுக்கொள்ளாமல் AIIMS மருத்துவமனை நிர்வாகம் அதன் நிர்வாக இயக்குனர் மாறிய பிறகுதான் ஏற்றுக்கொண்டது. இந்த சாதிய ஒடுக்குமுறைகளுக்கு நமது உயர்கல்வி நிறுவனங்கள் ஒரு சாதகமான நிலைப்பாடையே கொண்டிருக்கின்றன என்பதைப் பல விசாரணை அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன. இதைத் தடுப்பதற்காக UGC கொண்டுவந்த நெறிமுறைகளை பாதிக்கு மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் இன்னமும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் இதில் வேதனையானது.
டாக்டர் பயல் அவர்கள் மீது சாதிரீதியான ஒடுக்குமுறைகளை நிகழ்த்திய மாணவிகள் மூன்று பேரும் கூட்டாக ஒரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்கள் அதில் அவர்கள் சொல்லும் ஒரு வரி முக்கியமானது “நாங்கள் சாதிய ஒடுக்குமுறைகளில் ஈடுபடுகிறோம் என்பது உண்மையல்ல, நாங்கள் என்ன நோயாளிகளிடம் சாதியைப் பார்த்தா வைத்தியம் செய்கிறோம்?” என்று கேட்டிருக்கிறார்கள். இந்த மனநிலையை எப்படிப் புரிந்துகொள்வது? ஒரு நோயாளி, நோயாளியாக இருப்பது வரை நீங்கள் சாதி பார்க்காமல் இருக்கலாம்; அதே நோயாளி நாளை உங்கள் அறையிலேயே, நீங்கள் படிக்கும் படிப்பையே படித்தால் அதே மனநிலையோடு உங்களால் அவர்களோடு பழக முடியுமா என்பதுதான் கேள்வி.
ரோஹித் வெமுலா மரணத்திற்குப் பிறகு ஹைதராபாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் இப்படி சொல்கிறார்: “பெரும்பாலான நேரங்களில் தலித் மாணவர்களின்மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகளையும், பாகுபாடுகளையும் நிரூபிக்க முடியாது. ஒரு மாணவனுக்கு நேரம் கொடுக்காமல் இழுத்தடிப்பது, மற்ற மாணவர்களின் முன்பாக மட்டம் தட்டுவது,அவர்களுக்கு வாய்ப்பு தராமல் இருப்பது, அவர்களின் மதிப்பெண்களைக் குறைத்துப் போடுவது போன்றவற்றை எப்படி நிரூபிக்க முடியும்?” இந்த சாதகமான சூழலைப் பயன்படுத்திக் கொண்டுதான் பெரும்பாலான ஒடுக்குமுறைகள் இங்கு நிகழ்கிறது. நான் இளநிலை மருத்துவம் முடித்து ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்தபோது ஒரு மூத்த மருத்துவர் இருந்தார். அவர் எல்லோரிடமும் மிகவும் நன்றாக, கனிவாகப் பேசக்கூடியவராக இருந்த அவர் தலித் மருத்துவர்களை எரிச்சலாகப் பேசுவார்: “உன்ன பாத்தாவே எனக்கு எரிச்சலா இருக்கு”, “நீங்கல்லாம் எதுக்கு டாக்டர் படிக்கிறீங்க?”, “உனக்கெல்லாம் சொல்லிக்கொடுக்கணும்னு எனக்குத் தலையெழுத்து” என்று அனைவரின் முன்பாகவும் அந்த மருத்துவர்களை அவமானப்படுத்தும்போது அவர்களின் மனநிலை எத்தனை மோசமானதாக இருக்கும்!
கல்வி மட்டுமே அத்தனை ஒடுக்குமுறைகளிலும் இருந்தும் தன்னைக் காக்கும் என முழுமையாக நம்பி அதற்காகப் பல தடைகளை, சிரமங்களைக் கடந்து வரும் ஒரு ஒடுக்கப்பட்ட மாணவன் அந்தக் கல்வியின் நிமித்தமாகவே இன்னும் அதிகமாக ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகும்போது இந்த அமைப்பின்மீதும், சமூகத்தின் நிச்சயம் நம்பிக்கையிழந்துதானே போவான்? ஒரு சிவில் சமூகமாக அவர்களுகு ஒரு பாதுகாப்புணர்வை ஏற்படுத்துவதுதானே இந்த சமூகத்தின் கடமையாக இருக்க வேண்டும்? ஆனால் அதில் எந்த அளவிற்கு இந்த சமூகம் முனைப்பை காட்டுகிறது? ரோஹித் வெமுலா இறந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிறது. அதற்குப் பிறகும் கூட ஒடுக்கப்பட்ட மாணவர்களின் தற்கொலைகள் உயர்கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அப்படியென்றால் இதைத் தடுப்பதற்கான முனைப்பை இந்த சமூகம் கொண்டிருக்கவில்லை என்றுதானே பொருள். இரண்டாயிரம் வருடங்கள் தொடரும் இறுக்கமான சாதி அமைப்பு கொஞ்சம் தளர்ந்து ஒடுக்கப்பட்டவர்களுக்கான கல்வியை உறுதி செய்திருக்கிறது. அதன்வழியாக கல்வியை பெறும் முதல் தலைமுறை மாணவர்களையே சகித்துக்கொள்ள முடியாமல் அவர்கள் மீது ஏராளமான ஒடுக்குமுறைகளை நிறுவி அவர்களை கொத்து கொத்தாகக் கொன்று கொண்டிருக்கும் இந்த சமூகமே சாதிய சமூகம்தான் என்பதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும். இத்தனையும் தாண்டித்தான் ஒரு ஒடுக்கப்பட்ட மாணவன் இந்த சமூகத்தில் மேலெழும்பி வர வேண்டியிருக்கிறது. அவர்களைப் பார்த்துதான் “உனக்கு சுலபமாக வாய்ப்பு கிடைத்துவிட்டது” என மனசாட்சியே இல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
இனியும் கொலைகளை எண்ணிக்கொண்டிருக்காமல் இதைத் தடுக்கும் வழிகளை தீவிரமாக ஆராய வேண்டும். ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க ஒரு தன்னிச்சையான விசாரணை அமைப்பை ஒவ்வொரு நிறுவனமும் ஏற்படுத்த வேண்டும். அதன்மீது மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் அளவிற்கு அந்த அமைப்பு செயல்பட வேண்டும். அதன் வழியாகவே ஒரு பாதுகாப்புணர்வை நாம் அந்த மாணவர்களுக்குக் கொடுக்க முடியும். சாதிய மனப்பான்மையும், சாதிய ஒடுக்குமுறைகளும் இந்த சமூகத்தில் மாறாது; அதற்கு எந்த தனிநபர்களையும் குற்றம்சாட்டுவதைவிடவும் அந்த ஒடுக்குமுறைகளில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் வழிமுறைகளை நாம் ஏற்படுத்த வேண்டும். தற்கொலைகள் தனிநபர்களின் பலவீனம் என்ற அதே பழைய கோட்பாடுகளில் இருந்து வெளியே வந்து அதன் சமூக காரணிகளைத் திறந்த மனதுடன் ஆராய்ந்தால்தான் இது போன்ற தற்கொலைகளைத் தடுக்க முடியும். இல்லையென்றால் இந்தத் தற்கொலைகள் பயலுடன் முடியப்போவதில்லை.