இந்திய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் புயல் இந்த இதழ் வெளிவரும்போது தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. தமிழகம் 38 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்களித்து முடித்திருக்கிறது. இன்னும் நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு மே 19 வாக்களிக்கவிருக்கிறது. மே 23 இந்தியாவின் தலைவிதியை மட்டுமல்ல; தமிழகத்தின் தலைவிதியையும் மாற்றப்போகும் தீர்ப்பு எழுதப்படவிருக்கிறது. சுதந்திர இந்திய வரலாற்றில் இதுவரை எந்த ஒரு தேர்தலும் இத்தனை குழப்பங்களும் அச்சங்களும் நிறைந்ததாக இருந்ததில்லை. நெருக்கடி நிலைக்குப் பிறகு வாக்குச்சீட்டுகளால் அதிகார மாற்றத்தை ஏற்படுத்திய தேசம் இது. மக்கள் தங்கள் ஆள்காட்டி விரல் மையினால் எதையும் சாதிக்க முடியும் என்று நம்பிய ஒரு காலம் இருந்தது. ஆனால் இந்தத் தேர்தலில் எது உண்மை எது பொய் என்கிற குழப்பம் மக்களிடம் பரவி இருக்கிறது. நாடு முழுக்க வாக்குப்பதிவு எந்திரங்களில் நிகழ்ந்த கோளாறுகள், வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்குமா என்கிற அச்சம், இன்னும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கு முன் எதிர்பாராத சம்பவங்கள் நடக்குமா என்கிற யூகங்கள் என இந்தத் தேர்தல் களம் ஒவ்வொரு நாளும் நிச்சயமற்ற திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
பாஜக இந்தத் தேர்தலில் தனது தோல்வி முகத்தை உணரத் தொடங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். கருத்துக்கணிப்புகளின் மூலமாக பாஜக தனிப்பெரும் கட்சியாக வரக்கூடுமென்ற பொய்யான பிம்பங்கள் ஊதி பெருக்கப்பட்டாலும் கள எதார்த்தம் மோடியின் ஆட்சியை ஆட்டம் காணச் செய்யக்கூடியதாகவே இருக்கிறது. தென் மாநிலங்களில் பாஜகவின் படுதோல்வி ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று, உத்தரப் பிரதேசத்தில் பாஜக படுதோல்வி அமையுமென பாஜக ஆதரவு ஊடகங்களே தெரிவிக்கின்றன. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வளர்ச்சி கருப்புப்பண ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு என்ற முகமூடிகளை அணிந்து மாபெரும் வெற்றிபெற்ற மோடி இப்போது அவை அனைத்தையும் கழற்றி வீசிவிட்டு இந்துத்துவ வகுப்புவாதம், இந்துத்துவ தேசியவாதம் என்ற இரண்டு ஆயுதங்களுடன் களத்தில் நின்றுகொண்டிருக்கிறார். இந்துத்துவ தேசியவாதத்திற்கு புல்வாமா தாக்குதல் மற்றும் பாலகோட் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், அந்தத் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்டவர்கள் தேச விரோதிகளாக முத்திரை குத்தப்பட்டார்கள். இந்துத்துவ வகுப்புவாதம் பாஜகவின் தேர்தல் பிரச்சாரம் முழுக்க ஊடுருவி இருந்தாலும் உத்தரப் பிரதேசத்தில் 2008ஆம் ஆண்டு மாலேகான் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக அடையாளம் காணப்பட்டு சிறையில் இருந்தவரும் இப்போது உடல்நலத்தைக் காரணம்காட்டி வெளியே வந்தவருமான பிரக்யாசிங் தாக்கூரை போபால் தொகுதி வேட்பாளராக பாஜக அறிவித்ததன் மூலம் எந்தப் பாசாங்கும் இல்லாமல் தனது மத பயங்கரவாதத்தை வெளிப்படுத்திக் கொண்டுள்ளது. மாலேகானில் மசூதி ஒன்றின் அருகில் அபினாவ் பாரத் என்கிற இந்துத்துவ பரிவார அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் ஆறுபேர் இறந்தார்கள். இந்த தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனம் பிரக்யாசிங்கின் பெயரில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த அபினாவ் பாரத் அமைப்பு நடத்திய சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் 63 பேர் கொல்லப்பட்டனர். ஊபா சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட பிரக்யாசிங்கின்மீதான வழக்கைத் திட்டமிட்டு நீர்த்துப்போக செய்தது. வழக்கை நடத்திய தேசிய புலனாய்வு முகமை அவரைக் குற்றமற்றவரென விடுவிக்கக் கோரியது. முக்கிய சாட்சிகள் பொய் சாட்சிகளாகின. ஆனால் பிரக்யாசிங்கிற்கு எதிரான சாட்சியங்கள் வலுவாக இருந்ததால் அவரை வழக்கிலிருந்து விடுவிக்க விசாரணை நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த நிலையில்தான் பிரக்யாசிங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தனது உடல்நிலையைக் காட்டி ஜாமீனில் வெளியே வந்தார். அவரைத்தான் பாஜக இப்போது தனது வேட்பாளராக அறிவித்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திக்விஜயசிங்கை எதிர்த்துதான் இவர் களமிறக்கப் பட்டிருக்கிறார். இந்துத்துவ தீவிரவாதம் என்கிற சொல்லை முதன்முதலில் பொதுவெளியில் முன்மொழிந்தவர் திக்விஜயசிங். அவருக்கான பதிலாகத்தான் ஒரு இந்துத்துவ பயங்கரவாதி களமிறக்கப்பட்டுள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்த மூன்று முக்கிய கருத்துகளைப் பிரக்யாசிங் தெரிவித்தார். முதலாவதாக, பிரக்யாசிங்கின் பயங்கரவாத தொடர்புகளைக் கண்டறிந்து அவரைக் கைது செய்தவரும் பின்னர் மும்பைத் தாக்குதலின்போது பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் மர்மான முறையில் இறந்தவருமான காவல்துறை அதிகாரி ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டத்திற்கு தன்னுடைய சாபமே காரணம் என்றார். நாளெல்லாம் தேச பக்தியை வாந்தி எடுக்கும் பாஜக பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் உயிர்நீத்த மாவீரனுக்கு செலுத்தும் மரியாதை இதுதான். இரண்டாவதாக, பாபர் மசூதி இடிப்பின்போது அதில் தான் முன்நின்று பங்கேற்றதைப் பெருமையுடன் அறிவித்துக்கொண்டார். பாபர் மசூதி இடிப்பு வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் இருக்கிறது. மூன்றாவதாக, பசு மாட்டு மூத்திரம் அருந்தியதால் தனது மார்பகப் புற்றுநோய் குணமானதாகப் பிரகடனம் செய்தார். ஆனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களே அந்தக் கூற்றை மறுத்தார்கள். தேசவிரோதச் செயல், மதபயங்கரவாதம், மூடநம்பிக்கையைப் பரப்புதல் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவமாகத் திகழும் பிரக்யா சிங்கை வேட்பாளராக்குவதன் மூலமாகத் தனது இந்துத்துவ அணித்திரட்டலை பாஜக பச்சையாகச் செயல்படுத்திக்கொண்டிருக்கிறது.
ஒருபுறம் பிரக்யாசிங் போன்ற பயங்கரவாதிகளுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துவிட்டு இலங்கையில் நடந்தது போன்ற குண்டுவெடிப்புகள் இங்கு நடைபெறாமல் இருக்கவேண்டுமென்றால் எனக்கு வாக்களியுங்கள் என மோடி கேட்டுக்கொண்டிருக்கிறார். பயங்கரவாதத்திற்கு எதிராக உயிர் நீத்த ஹேமந்த் கர்கரேவை இழிவுபடுத்திய ஒருவருக்காக வாக்கு கேட்டுக்கொண்டு அபிநந்தனையும் இந்திய ராணுவத்தையும் சொந்தம் கொண்டாடுகிறார். மோடியின் தேசபக்தியின் அளவுகோல்கள் வெளிப்படையானவை. அது இந்த நாட்டை மதரீதியாகத் துண்டாடும் தேசபக்தி. அதன் அடிப்படையில்தான் அவர் வாக்கு கேட்டு வந்துகொண்டிருக்கிறார்.
எதிர்க்கட்சிகள் அந்தந்த மாநிலங்களின் சூழ்நிலைக்கேற்ப சில இடங்களில் ஒன்றுபட்டும் வேறுசில இடங்களில் மாறுபட்டு நின்றாலும்கூட பாஜகவிற்கு வாய்ப்பளிக்கக் கூடாது என்பதுதான் அவற்றின் ஒரே இலக்காக இருக்கிறது. அந்தவகையில் தேர்தலுக்குப் பின் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி ஒன்று அமைவதற்கும் ராகுல் காந்தி தலைமையில் ஒரு புதிய ஆட்சி அமைவதற்குமா வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. தேசிய அளவில் பாஜக கூட்டணியிலிருக்கும் கட்சிகள் தம் அளவில் பலவீனமானவை. மோடியின் இந்த மதவாத யுத்த தந்திரம் வெற்றிபெறாதென்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
மோடி இந்தத் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டுமென்பது ஒரு ஆளும் கட்சிக்கு எதிரான அரசியல் போராட்டம் மட்டுமல்ல; கோடிக்கணக்கான இந்தியர்களின் நிகழ்காலத்தோடும் எதிர்காலத்தோடும் தொடர்புடையது. மோடி மக்களுக்குக் கொடுத்த எந்த வாக்குறுதிகளுக்கும் விசுவாசமாக இருந்ததில்லை. இந்தியப் பொருளாதாரத்தையும் ஜனநாயக அமைப்புகளையும் எப்படி அழித்தொழிக்க முடியுமென்பதை அவர் நிரூபித்துக்காட்டினார். தான் நாட்டுமக்களுக்கு அளித்த எந்தக் வாக்குறுதிகளுக்கும் அவர் வருந்தவும் இல்லை பொறுப்பேற்றுக்கொள்ளவும் இல்லை. அவர் முற்றிலும் இதயமற்றவராகவும் குற்றவுணர்வற்றவராகவும் நடந்துகொண்டார். அவர் தான்வகித்த பதவிக்கான ஒரு சிறு நியாயத்தைக்கூட செய்யவில்லை. கார்ப்பரேட்டுகளின் நலனுக்காகப் பணமதிப்பு நீக்கத்தையும் ஜிஎஸ்டியையும் கொண்டுவந்தார் அதனால் மக்களுக்குக் கிடைத்தது எதுவுமில்லை. இந்தியா முழுக்க கோடிக்கணக்கானோர் வேலை இழந்தனர். விவசாயிகள் வாழ்வாதாரங்கள் இழந்தனர். பாகிஸ்தான் என்ற எதிரி பிம்பத்தைக் கட்டமைத்து இந்த நாட்டு மக்களின் தலையில் அவர் பல்லாங்குழி ஆடிக்கொண்டிருக்கிறார். மோடியால் இந்தியா இனி தாங்கமுடியாத அளவிற்குக் களைப்படைந்துவிட்டது. மே 23ஆம் தேதி ஒரு மாபெரும் விடுதலையை எதிர்நோக்கி இந்த நாடு காத்துக்கொண்டிருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் 22 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் அதிமுக ஆட்சி தொடருமா இல்லையா என்பதை முடிவுசெய்யும் சக்தியாக இருக்கப்போகிறது. தேர்தல் நடந்து முடிந்திருக்கும் 18 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெறும் என்ற கருத்துகள் உள்ளன. 22 தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால் தாங்கள் படுதோல்வி அடைவோம் என்பது அதிமுகவிற்குத் தெரியும். எனவே பல்வேறு சித்துவிளையாட்டுக்கள் மூலம் நான்கு தொகுதிகளுக்கு மட்டும் தனியாக இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. நான்கு தொகுதிகளுக்கும் மட்டும் நடந்தால் அதிகார துஷ்பிரோகம், பணபலம் ஆகியவற்றை அந்தத் தொகுதிகளில் முழுமையாக நிகழ்த்தலாம் என்பதுதான் திட்டம். அப்படியும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்கிற பதற்றம் அதிமுகவிற்கு வந்துவிட்டது.
22 தொகுதிகளில் ஒன்றிலாவது வெற்றிபெற முடியுமா நம்மால் என்ற பதற்றத்தில், டிடிவி தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்களை பதவிநீக்கம் செய்து சட்டமன்றத்தின் பலத்தைக் குறைத்து அதிலிருந்து தங்களுக்குத் தேவையான குறைந்தபட்ச பெருபான்மையைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என்பதுதான் அவர்களது அடுத்தகட்ட திட்டம். இந்தத் திட்டத்திற்கு மோடி மீண்டும் பிரதமராகி உதவுவார் என்ற நம்பிக்கையில் வாரணாசியில் மோடி வேட்புமனு தாக்கல் செய்யும்போது ஓபிஎஸ்ஸும் அவரது சகாக்களும் போய் நின்றுகொண்டிருந்தார்கள். மொத்தத்தில் ஜெயலலிதா மறைவிற்குப் பின் தொடர்ச்சியாகக் கணிசமான தொகுதிகளைக் காலியாக வைத்துக்கொண்டு குறைந்தபட்ச பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்திய யுக்தியை இனியும் தொடர முயற்சிக்கிறார்கள். ஆனால் மத்தியமாநில ஆட்சிகள்மீதான மக்களின் வெறுப்பு வெள்ளம் கரைகடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. தந்திரங்களும் சூதுகளும் எப்போதும் வெல்லுமென்று நினைப்பதிலிருந்து அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்வது தெரிகிறது.
இந்தத் தேர்தலில் கட்சிகள் கொள்கைகளைவிட நாம் கவலைப்படவேண்டிய வருத்தப்பட வேண்டிய விஷயம் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள்தான். இந்தியத் தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஆதரவாகக் கடந்த ஐந்தாண்டுகளில் மேற்கொண்ட செயல்பாடுகள் இந்தத் தேர்தலில் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறது. முக்கியமாக எதிர்க்கட்சிகள் மீதான வருமானவரி சோதனைகள் தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியின் அடியாளாகவே மாறிவிட்டது என நிரூபணமாகிவிட்டது. வேலூரில் தேர்தலைத் தள்ளிவைத்தது, தேர்தல் ஆணையம் மேற்கொண்ட ஜனநாயக ஆபாசத்தின் உச்சக்கட்டம். ஆளும்கட்சியின் வரைமுறையற்ற பண விநியோகத்தைத் தடுக்க தேர்தல் ஆணையம் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. உண்மையில் இது சுதந்திர இந்தியாவில் நடந்த மிக மோசமான பாரபட்சமான தேர்தல் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆட்சியாளர்கள் வருவார்கள், போவார்கள்; ஆனால் தேர்தல் ஆணையம் போன்ற ஜனநாயக அமைப்புகள் முற்றாகச் சீர்குலைந்துள்ளதால் மக்கள் தங்கள் வாக்களிக்கும் அதிகாரத்தின் மீது நம்பிக்கை இழந்துபோவார்கள், கடைசியில் அது ஒரு நாட்டைப் பேரழிவிற்கே கொண்டு செல்லும்.
இந்தத் தேசம் மே 23ஆம் தேதி ஒரு மாபெரும் விடியலுக்காக, ஒரு மாபெரும் மீட்சிக்காகக் காத்திருக்கிறது.