நல்ல காலம்

ஜனங்களுக்கு நல்லவர்களைப் போலவே கெட்டவர்களும் வேண்டும்

வெளிச்சத்தைப் போல இருட்டும் குளிரைப் போல வெயிலும்

ஒவ்வொருமுறை ஆறிய காயத்தைச் சொறியும் சுகம்

எல்லாமும் சரியான ‘நல்ல காலம்’ ஒரு கனவு.

 

ஜனங்களுக்கு இருக்கும் மோகம் வாழ்க்கையின்மீது மட்டுமே அல்ல.

அது பொறாமையோடு இணைந்த அமானுஷ்ய சங்கிலி

பொறுமையே கொந்தழிப்பு தன்னியல்பு திருப்தியடையும் வரை

வெளிப்படுத்தும் நடத்தையும் பேச்சும் ஒவ்வொரு மடியும் கைவிட்ட கனவு.

 

ஜனங்களுக்கு சந்தோஷம், அவர்கள் நிழல்கள் பற்றி எரியும்போது

ஜனங்களுக்கு சந்தேகம், அவர்கள் கண்ணாடிகள் விழுந்து உடையும்போது.

*

நல்ல வெள்ளியின் மத்தியானம்

சிலுவையின் ஆணிகளை

யாராவது மண்ணில் ஊன்றுங்கள்

செடியாக முளைப்பேன்

பூவாக மலர்வேன்

பழமாவேன் பசித்தவர்களுக்கு.

 

ஊன்றுங்கள் மண்ணில்

கொல்லும் இரும்பு ஆணி கரையட்டும்

பூமியின் அன்போடு ஒட்டி (இணைந்து)

மீண்டும் பிறப்பேன்

உங்கள் துக்கங்களை

சிலுவையில் அறையும்போது தோள்கொடுப்பேன்.

 

ஊன்றுங்கள் மண்ணில்

ஆணியை மட்டுமல்ல அதோடு மறக்காமல்

கோபம், தாபம், பொறாமைகளையும்

மக்கி எருவாகட்டும்

உலகம் முழுவதும் அன்பின் செடி படரட்டும்.

 

இயேசு மீண்டும் சொன்னார்

‘பகிரப் பகிர சோறு குறையாதிருக்கட்டும்

பகிரப் பகிர எழுத்தறிவு குறையாதிருக்கட்டும்.’

 

சிலுவையில் சொன்ன கடைசி வார்த்தை சத்திய வசனமாகட்டும்

சிலுவையில் சொன்ன கடைசி வார்த்தை சத்திய வேதமாகட்டும்.

*

காதலிக்கும் முறை

புலியைப் பயமுறுத்தும் மான்

தழலை அரவணைக்கும் பனி

வறட்சியிலும் வாடாத செடி

வெள்ளத்திலும் மிதக்கும் தாமரை

மழையிலும் உறங்காத மேகம்

வெய்யிலிலும் வியர்க்காத ஆறு

கண்டதில்லையா?

முள்ளைக் கண்டு பயப்படாதே

பூவை முத்தமிடு.

இதுவே காதலிக்கும் முறை.

*

தண்ணீர் மட்டுமே மந்திரம்

வயிறு எரிந்து கோபம் வரும்போது

அவசரப்படக் கூடாதய்யா

கடகடவென்று தண்ணீர் குடித்து எரிச்சலைத் தணிக்க வேண்டும்

துக்கம் ஏற்பட்டால் இரண்டு மடங்கு தண்ணீர் அவ்வளவே!

 

உடம்பு வலிக்கு மருந்து கொண்டுவரலாம்

மனசின் வலிக்கு எந்தக் குளிகையை விழுங்குவது?

கையில் பணமில்லாமல் எந்த வைத்தியனைப் பார்ப்பது?

தண்ணீர் மட்டுமே மருந்து

தண்ணீர் மட்டுமே மந்திரம்

 

கொண்டாட்டமான திருவிழா தினமும் வருகிறது

சப்பென்ற மிட்டாயை இங்கே யாரும் வாங்குவதில்லை

சர்க்கரை இல்லாத சர்பத்தை இங்கே யாரும் குடிப்பதில்லை.

 

இப்போதோ

சக்கரை, மிளகு, உப்பு

இங்கே சுவைக்குப் பேதமில்லை.

ஆனால் சப்பென்றிருப்பதை மட்டும் ஒப்புவதில்லை!

 

பசித்தாலும் அவசரப்படாதே

மூன்று மடங்கு தண்ணீரைப் புரையேறாதபடி குடித்துவிடு

உழைக்கும்போது விழிப்போடிரு இரண்டு கவளம் அதிகமாகச் சாப்பிடாதே

சாப்பாட்டுத் தட்டம் நிரந்தரமல்ல.

 

சுகம், துக்கங்களை விட்டுத்தள்ளு தண்ணீரே நிரந்தரம்

சோறு, பசியை விட்டுத்தள்ளு தண்ணீரே அமிர்தம்.

*

ஊர்வலம்

துப்பாக்கி, கத்திகளைப் பிடித்துக்கொண்டு

தெருக்களில் ஊர்வலம் போகும்

போலி தேசபக்தர்களை

சட்டம் எதுவும் செய்வதில்லை.

ஏனென்றால் எதுவும் இல்லை

நீதிமன்றங்களை செயலிழக்கச் செய்துவிட்டார்கள்

யாருக்கும் அதைப் பற்றி தெரியாது.

 

புல் அறுக்கும் அரிவாள் பிடித்த ஏழை விவசாயி

ஆட்டின் தோல் உரிக்கும் கத்தி பிடித்த முஸ்லிம்கள்

வேட்டையைப் பின்தொடரும் ஈட்டி ஏந்திய ஆதிவாசி

இவர்கள்மேல்

போலீஸின் கழுகுப் பார்வை.

கைது, விசாரணை, விடுதலை

நாடகம் திருவிழாக் கொண்டாட்டம்.

 

உரையாற்றுகிறவனுக்கு நெருங்கியவர்களெல்லாம் உரையின் போதையிலிருக்கிறார்கள்

கத்திகளில் படிந்த ரத்தம் நிதானமாகச் சொட்டிக்கொண்டிருக்கிறது.

*

கனவுக்குள் மறையும் தர்க்கம்

இப்போது இங்கே பரவுகின்றன நட்சத்திரங்கள்

விடியற்காலை உதிர்ந்து விழுந்த பாரிஜாத மலர்கள்போல

அந்த நறுமணத்துக்குள் மூழ்கியெழுந்த தேகம் முழுவதும் சந்தன வாசனை.

 

இது ஒரு வழி அல்லது சுழல்

கனவின் ஓட்டத்தில் நிறைய வண்ண வண்ண ஒளிவட்டங்கள்

விடுவிக்க ஒளியின் இழை, நூற்பதற்குக் காற்று

உடலுக்குள் இறங்கி வீசி வாழ்க்கையின் காமக்கேளிக்கை

 

இதன் ஓட்டம் அதிவேகம், விழுந்தால் முதுகு நிற்காது

பட்டாம்பூச்சியைப் பின்தொடரும் வழி முடிவதே இல்லை

மேகத்தைத் தொட அடம்பிடிக்கும் குழந்தை

உறங்குவதே இல்லை, சந்திரனோடு தினமும் அம்பாரி

இருளுக்கோ எள்ளளவும் கருணையில்லை

பாதிக்கனவில் எழுப்பி சுங்கம் கேட்கும் வியாபாரி.

 

மீண்டும் இப்போது பரவுகின்றன நட்சத்திரங்கள்

விடியற்காலை விழுந்து சிதறிய செஞ்செண்பகப்பூக்கள்போல

அந்த நறுமணத்துக்குள் மூழ்கியெழுந்த தேகம் முழுவதும் குங்கும வாசனை.

*

ஆர்வெல் மகானுபவனுக்கு

ஆர்வெல் மகானுபவனே

எதிர்பாராமல் வந்தது பன்றிகளின் அரசாட்சி

உன் கதை அதோடு முடியவில்லை.

சிவப்பு சால்வை, அரிவாளின் பிடி, உற்சவங்களின்

ஊர்கள் இப்போது காண்பதற்கு அபூர்வம்.

 

கேட்கிறாயா எங்கள் ஊரின் கதையை

குள்ளநரியொன்று புகுந்த

இடையர்கள் ஊரின் பொறாமைக் கதையை!

பசித்த ஊர் முழுக்க சாமி உண்டியல்கள்

உழைக்கும் தோள்களை வரிச் சங்கிலிகள் இறுக்குகின்றன.

 

காதி துணிக் கடைகள் பூட்டப்பட்டுள்ளன

பர்தா அணிந்த காவிக் கடைகள் சத்தம்போடுகின்றன.

நீ நம்பியே தீர வேண்டும்

சாப்பிடும் தட்டைச் சுற்றி ஆயிரம் கண்கள்

காற்றாலைகளின் பேச்சு தடைசெய்யப்பட்டுள்ளது

வெறும் காற்று மந்திரமே இங்கு பிரசித்தம்.

 

வா இரவில் பேசுவோம்

குள்ளநரியின் கதை, பாத்திரம்,

இப்படி குவியல் குவியலாகச் செய்திகள் ஏராளம்

எனக்கும் இங்கே தூக்கம் வரவில்லை, வந்தால்

மீண்டும் எழுவது நம்பக்கூடியதல்ல.

 

ஒரு காலத்தில் இந்த ஊர் நிறைய

மனிதர்கள் இருந்தார்கள், இப்போதும் அவ்வப்போது கண்ணுக்குத் தெரிகிறார்கள்

பேடிகளான பிறகு கூட்டில் அடைந்துவிட்டார்கள்

அவர்களுக்கு இப்போது எந்தக் கனவுகளும் இல்லை

காய்ந்து பொள்ளான வாழ்க்கையை விட்டு வேறெதுவும் இல்லை!

 

ஆர்வெல், அப்படி நீ வரும்போது

குள்ளநரியைப் பிடிக்கும் வலையொன்றைப்

பின்னிக் கொண்டுவர மறக்காதே.

வறுத்த மீன், ஒயின் வைத்துக்கொண்டு காத்திருப்பேன்

தாமதிக்காதே. நாளை என்பது எனக்கு நிச்சயமில்லை!

*

(1987ஆம் ஆண்டு மார்ச் மாதம், கர்நாடகத்தின் மண்டியா – தும்கூர் மாவட்டங்களுக்கு இடைப்பட்ட ஊரில் பிறந்த ராஜேந்திர பிரசாத், மைசூர்ப் பல்கலைக்கழகத்தில் எம். காம். பட்டம் பெற்றவர். தற்போது மண்டியாவிலும் பெங்களூரிலும் சொந்தத் தொழில் செய்கிறார். இலக்கிய வாசிப்பிலும் படைப்பிலும் (முக்கியமாகக் கவிதை) ஈடுபட்டுள்ள இவருக்குக் கர்நாடக சங்கீதத்திலும் புத்த மத ஆய்விலும் சமையல் கலையிலும் ஆர்வம். 2006ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை ஏழு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். பேந்த்ரே புத்தகப் பரிசு உள்ளாக மூன்று விருதுகளைப் பெற்றுள்ளார். )

கன்னடத்திலிருந்து தமிழில்: நஞ்சுண்டன்