கதவைத் திறந்ததும் காற்று முகத்தில் அறைந்தது. இன்னும் மழைக்காலம் ஆரம்பிக்கவில்லை. ஆனாலும் மழைக்குரிய மனோபாவம் ஒரு போர்வை மாதிரி இந்த ஊரின் மேல் ஈரத்தைப் படர்த்தியிருந்தது. யாரோ யாரையோ துரத்திக்கொண்டு ஓடினார்கள். எதிர்வீட்டில் இரண்டு பைய்யன்கள் ஆளுக்கொரு காற்றாடியை சிரித்துக் கொண்டே வானில் ஏற்ற முனைந்தனர். கோபியின் முகமே சரியில்லை. உள்ளே வாடா என்றதற்கு முத்தண்ணன் உன்னைக் கூட்டியாரச் சொன்னாரு. தாமஸ் எறந்துட்டாப்ளயாம் என்றான். அந்த வாக்கியம் எனக்கு முதலில் சரியாகப் புரிபடவில்லை. என்னடா உளர்றே என்றேன். நெசந்தான். வயித்து வலி தாங்காம தென்ன மருந்தை ஜின்னோட கலந்து அடிச்சிட்டாப்ளயாம். ஊரே கூடியிருக்கு என்று மட்டும் சொன்னான். இத்தனை வாக்கியங்களை எப்படி சந்தேகிப்பது.
துக்கத்தின் வசீகரம் அது கேள்விப்பட்டவர் வசம் மாறிவிடுகிறது. அவன் லேசானாற் போலத் தெரிந்தான். எனக்கு தாமஸின் முகமும் குரலும் பல்வேறு ஞாபகங்களும் சரமாரியாக வரத் தொடங்கின. இந்தத் தினத்தின் விடியல் தாமஸின் மரணச் சேதியைத் தன் முதுகில் கட்டிக் கொண்டபடி விடிந்திருக்கிறது. கோபி ப்ரிட்ஜ் தண்ணீரைக் குடித்தவன் ஸோபாவில் அமர்ந்தான். வாஷ்பேஸினில் முகம் கழுவக் குனிந்தவன் எத்தனைமுறை நீரை அள்ளி முகத்தில் தெளித்தபடி இருந்தேன் எனத் தெரியவில்லை. ஒரு எதிர்பாராதது எல்லாவற்றின் இயல்புகளையும் கலைத்துப் போட்டு விடுகிறதல்லவா. முத்தண்ணனும் கார்மேகமும் கூரியர் கம்பெனி ஒன்றின் ஆரம்ப கால பார்ட்னர்ஸ். தற்போது கார்மேகம் எந்தத் தொழிலும் செய்யவில்லை. முத்தண்ணன் எனக்கு தூரச் சொந்தம். அந்தக் கம்பெனியை இப்போது கவனிப்பது நான்.
கிளம்பிப் படிகளில் இறங்கினேன். டூவீலரை கிளப்பி தயாராக இருந்தான் கோபி. வண்டியில் செல்லும்போது தாமஸ் அண்ணனின் முகம் மறுபடி வந்து போனது. மரணம் என்பது என்னமாதிரியான ஏற்பாடு. தாமஸை நினைக்கையிலேயே கார்மேகம் அண்ணனின் ஞாபகமும் சேர்ந்தே வந்தது. தாமஸ் என்றாலே கார்மேகம். அவர் பழைய சேர்மன். அவன்தான் அவருடைய வலதுகரம் தளகர்த்தன் எல்லாமே. கார்மேகம் என்றால் தான் தாமஸைத் தெரியும். இன்றைக்கு தாமஸ் செத்ததாக அர்த்தமில்லை. கார்மேகத்தின் முக்கால்வாசி மரணமும் சேர்ந்தே ஆனாற்போலத்தான். கார்மேகம் எப்படித் தாங்குவார் இதை? நினைத்ததைப் படித்தாற்போல கோபி ஆரம்பித்தான்.
“யோவ்… ராஜு… கார்மேகண்ணன் விஷயத்தைக் கேட்டதும் ரொம்ப அப்செட் ஆயிட்டாப்லய்யா. மயக்கம் போட்டு பத்து நிமிசம் கழிச்சிதான் எழுந்தாப்ல. ஒரே புலம்பலு… பாவம்யா அந்த மனுசனைப் பார்க்க முடியலை.”
கார்மேகம் சாதாரண கவுன்ஸிலராக இருந்ததில் இருந்து அவருடைய நிழல்கூட நாலைந்து நாட்கள் விடுப்பெடுத்திருக்கும். நீங்காமல் இருந்தது தாமஸ் மட்டுந்தான். பாவம், இப்படிச் சட்டென்று துண்டை உதறினாற்போலக் கிளம்ப எப்படி மனசு வந்ததோ. திருப்புகழ் தெருவில் சாக்கடை வேலை நடந்ததால் பாதை மாற்றம் அறிவிப்பு தெரிந்தது. மறுபடி இன்னும் இரண்டு தெரு சுற்றி யாக்கோபு நகரில் திரும்பினான் கோபி. இன்னாசியார் தெரு நுழையுமிடத்திலிருந்தே திரளாகத் தலைகள் தெரிந்தன. தாமஸ் வீடு ‘ப’ வடிவத்தில் முன்னால் பெரிய காலி இடத்தோடு பெரிய்ய வீடு. தாமஸின் அண்ணன் ஜெபராஜ் ரெவின்யூ ஆபீசர். அங்கே நிற்பவர்களில் பாதிக்குமேல் அவருக்காக வந்தவர்கள். இதெல்லாம் அறிந்த நாடகத்தின் ரிபீட் காட்சிகள்தானே? கருநீலக் கலர் ஜைலோ கார் தூரத்தில் தெரிந்தது. அது கார்மேகம் அண்ணனின் கார். அருகிலேயே வயர் சேர்கள் நாலைந்து கிடத்தப்பட்டிருக்க, முத்தண்ணனும் கார்மேகம் அண்ணனும் தீவிரமாக எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களை நோக்கிப் போனேன்.
என்னைப் பார்த்ததும் “வா ராசு… கேட்டியா இந்தப் பய தாமஸ் இப்பிடிப் பண்ணிருக்கான் பாரு” என்றார் முத்தண்ணன். கார்மேகம் சின்னக் குழந்தைமாதிரி அழ ஆரம்பித்தார். ஏற்கனவே சிலபல முறைகள் அழுது அடங்கி இருப்பார் போலும். சுற்றி இருந்தவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எனக்கு ஒரு மாதிரி ஆனது. என்ன இருந்தாலும் ஏரியா முக்கியஸ்தர் இத்தனை வயதில் குழந்தை மாதிரி அழுகிறார். முத்தண்ணன் அவர் கையைப்பற்றி அழுத்தினார்.
இன்னும் பிரேதப் பரிசோதனை முடிவடைய வில்லைபோல. அங்கே காணப்பட்ட எல்லோருமே காத்திருத்தலின் அயர்ச்சியோடு தெரிந்தார்கள். எதிர்பாராமை அந்த இடத்தின் இயல்பை வெளிறச் செய்திருந்தது. குறுக்கும் நெடுக்குமாய் யாரெல்லாமோ போய்வந்து கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே ரகசியத்தைப் பகிர்கிற தொனியில் சப்தமெழாமல் பேசிக்கொண்டார்கள்.
“உங்களைவிட நாலைஞ்சு வயசு எளைய ஆள்தானே அண்ணே” என்றார் முத்து. அதற்கு கார்மேகம் அந்த இடத்துக்குப் பொருந்தாத அசட்டுப் புன்னகையோடு “ ஏழு வயசு சின்னவன். நான் கவுன்ஸிலரா இருக்கப்ப என்கூட வந்து ஒட்டிக்கிட்டான். என்னோட இருபத்தி எட்டு வருசமா இருக்கான். எத்தனையோ நடந்துச்சி. என் நிழல்கூட லீவெடுத்திருக்கும்யா.இவன் என்னைய விடவே இல்லை. என் பொஞ்சாதி வேணி சாகுறப்ப உங்கண்ணனை பார்த்திக்கிடுங்க கொழுந்தனாரேன்னு தாமஸ்ட்ட சொன்னப்ப சத்தியம் செய்து கொடுத்தான். எங்கிட்ட சொல்லாமப் போயிட்டான்.” என்றவர் சற்று இடைவெளிவிட்டு “நம்புறாப்லயா இருக்கு முத்து, எனக்குத் தெரியாம அவன் இருமினது தும்முனது கூடக் கிடையாது. நாள்பட்ட வயித்துவலி தாளாம தற்கொலை செய்துக்கிட்டான்னு சொன்னா ஏத்துக்கிட முடியலய்யா, மனசு ஆறவே மாட்டேங்குது.” கர்ச்சீஃபால் முகத்தை அழுந்தத் துடைத்தார்.
பல இடங்களிலிருந்தும் ஆட்கள் வந்து கொண்டே இருந்தார்கள். தாமஸின் அண்ணனுக்கு மாவட்டம் முழுக்க நல்ல செல்வாக்கு இருந்தது சரியாக உதவிற்று. நறுக்குத் தெறித்தாற்போல பிரேதம் பதினோரு மணிக்கெல்லாம் வந்துசேர வெளியே காலி இடத்திலேயே கண்ணாடி பெட்டியில் வைத்து எல்லோரும் அஞ்சலி செலுத்த ஆரம்பித்தார்கள். கார்மேகம் பிடிவாதமாக, “அவன் முகத்தை என்னால பார்க்க முடியாதுய்யா. வேணாம்” என மறுத்து விட்டார். காருக்குள் ஏறி அமர்ந்து குளிர்பான பாட்டிலில் கலந்திருந்த மதுபானத்தைக் குடித்துவிட்டு மறுபடி வந்தமர்ந்தார். ட்ரைவர் தன் செல்லில் எதையோ படம் பார்த்துக் கொண்டிருந்தான்.
திடீரென உற்சாகமாகி, “என்மேல பயங்கர பாசம்யா தாமஸுக்கு. எம்.எல்.ஏ.வுக்கு நின்னு தோத்தப்ப அவன்தான் என்னைய தினமும் வந்து பார்ப்பான். வீட்லயே முடங்காதீங்கன்னு சத்தம் போடுவான். அட என்னாங்க நீங்க இப்பிடியே இருந்தா எதும் மாறவா போவுது. நாலு எடத்துக்குப் போயி வந்தாத்தான் நம்மளை மறக்காம இருப்பாங்கன்னு அதட்டியே மறுபடி என்னைய மீட்டெடுத்தான். சரிஞ்ச தூணா இருந்தவனை அடுத்து வந்த சேர்மன் எலக்சன்ல ஜெயிச்சி மறுபடி தேரா வலம் வர வச்சான். இருபதாயிரம் ஓட்டு வித்யாசத்துல ஜெயிச்சேன். கூடவே இருந்து பெரிய துணையா இருந்தவன் ஒரே ஒரு தாமஸ்தான்யா” என்றவர் தன்னை மீறி பெருமூச்சொன்றை வெளிப்படுத்தினார். குழந்தைபோல அனிச்சையாக அவர் உடம்பு நடுங்கியது. அவர் அதைப் பொருட்படுத்தவில்லை.
அஞ்சலி செலுத்திய பலரும் தாமஸின் உடன்பிறந்த அண்ணன் ஜெபராஜைப் பார்த்து ஆறுதல் தெரிவித்தபடியே நேராக கார்மேகத்தைத் தேடிவந்து பேசிச் சென்றார்கள். ஏறியேறி இறங்கும் மலைப்பாதையின் பயணம் போலாகி அடிக்கடி தழுதழுத்தபடி இருந்தார்.
டெல்லியிலிருந்து விமானத்தில் வந்து இறங்கிய தாமஸின் அக்காள் லல்லி கார்மேகத்தைப் பார்த்ததும் பெருங்குரலில் கதறினாள். “நீ அவனை எப்பிடி விட்டுட்டே கார்மேகம்” எனக் கேட்டதும் “இல்லை லல்லிம்மா. எனக்கு எதுவுமே புரியலை லல்லிம்மா. அவன் என்னைய ஏமாத்திட்டான். எனக்கு எதுமே சொல்லாமப் போயிட்டான்” என்று கலங்கி அழுதார்.லல்லியை யாரோ கைத்தாங்கலாகப் பற்றி உள்ளே அழைத்துச் சென்றார்கள்.
நேரம் கடத்தவேண்டாமென்று அடுத்து சர்ச்சுக்குச் செல்வதற்கான ஆயத்தங்கள் நடந்தன. சர்ச்சிலிருந்து பரியல் க்ரவுண்டுக்குப் போய் அங்கே காரியங்கள் முடிவடைய எத்தனை நேரமாகும் எனத் தங்களுக்குள் விவாதிக்கத் தொடங்கினார்கள். அன்றைக்கு தேசியவிடுமுறை தினம் என்பதால் யாரும் காரணங்கள் சொல்லாமல் அமைதி காப்பதாக முத்தண்ணன் சொன்னார். கோபி தட்டில் தம்ளர்களை வைத்து அடுக்கி எல்லோருக்கும் தேநீர் தந்து கொண்டிருப்பது தெரிந்தது.
அமல்ராஜ் வாத்தியார் அப்போதுதான் சின்னமனூரிலிருந்து வந்தவர் நேரே தாமஸ் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். அவரைப் பார்த்ததும் இன்னும் கொஞ்சம் உணர்வு ததும்பி மறுபடி சகஜமானார் கார்மேகம். முத்தண்ணனும் அவரைவிட்டு எங்கேயும் போகாமல் கூடவே அமர்ந்திருந்தார். பழைய சிங்கமென்றாலும் முதுமையில் இப்படி ஒரு இழப்பைத் தாங்கமுடியாமல் தள்ளாடும் நேரம், சற்று தப்பினால் கார்மேகத்துக்கு எதாவது வந்து விடுமோ என்பதுதான் முத்தண்ணனின் பயம். அமல்ராஜிடம் கார்மேகம் எதையோ விவரித்துக் கொண்டிருக்கையில் தன் அச்சத்தை என்னிடம் சொல்லவே சொன்னார் முத்தண்ணன்.
அமல்ராஜ் சற்றே யதார்த்தமாகவும் டேக் இட் ஈஸியாகவும் பேச்சை மாற்றிக் கொண்டே இருந்தார். முத்தண்ணனிடம் திரும்பி, “முத்து, இந்த தாமஸ் பய என்ன பண்ணுவான் தெரியும்ல? கார்மேகம் எங்கன போனாலும் சரி. அந்த எடத்துக்குள்ள எண்டர் ஆகும்போது முன்னாடி ஓட்டமா நடந்து போயி, அண்ணன் வராங்க… அண்ணன் வராங்கன்னு சொல்வான். யாரா இருந்தாலும் அவங்க மனநிலை சட்டுன்னு தயாராவும்ல… கார்மேகத்தைப் பார்த்ததும் எழுந்து வணக்கம் போட்டு பார்க்கவே பந்தாவா இருக்கும். இதை தாமஸு எத்தினி வருசமா செய்தான் தெரியும்ல” என்று சத்தம் வராமல் சிரித்தார். அதை ஆமோதித்தவராய் மந்திரியைப் பார்க்கப் போனாலும் இவன் இப்பிடித்தான் செய்வான். “ஏண்டா இப்டி படுத்துறேன்னு” கேட்பேன். “அட என்னாங்க நீங்க, எங்கண்ணன் வர்றதை நாம்போயி சொல்றேன். எதும் தப்பா என்ன” அப்டின்னு அடக்கிடுவான் என்றவாறே புன்முறுவல் பூத்தார் கார்மேகம்.
மழை வருகிறாற் போலப் பெருஞ்சப்தத்துடன் இடித்தது. எல்லோருமே மழை வருமா என்று பேச ஆரம்பித்தார்கள். ‘இன்னும் பத்து நிமிசத்துல சர்ச்சுக்கு கௌம்பிடலாம்னு ஜெபராஜண்ணன் சொன்னாப்ல’ என வந்து சொன்னான் கோபி. எழுந்து தன் அவிழ்ந்த வேஷ்டியை முறுக்கிக் கட்டிக் கொண்டு அமர்ந்து கொண்டார் கார்மேகம்.
அமல்ராஜ் வாத்தியார் தன் டூவீலரில் வருவதாகச் சொல்லிச் சென்றார். காரில் முன் சீட்டில் நான் அமர்ந்தேன். பின்னால் கோபிக்கும் முத்தண்ணனுக்கும் நடுவே அமர்ந்து கொண்டார் கார்மேகம். சர்ச்சுக்கு விடு என்றதும் ட்ரைவர் மதன் காரை செலுத்தினான். அசோக் நகர் ரெண்டாவது தெருவைக் கடக்கையில், “பாப்பா வீட்டாண்ட ஸ்லோ பண்ணு” என்றார். கார் ஊர்ந்து போக என்னிடம் பெரிய வீடொன்றைக் காட்டி “அதான் பாப்பா வீடு” என்றார். நான் தலையை அசைக்க “மாப்பிள்ளை கோயமுத்தூர், அங்கே அவருக்கு இதைவிடப் பெரிய வீடு இருக்கு” என்றார். அவரும் டாக்டர் என்று சொல்லும்போது அதில் பெருமிதம் தொனித்தது. தீப்திகா அவருடைய ஒரே மகள். ஃபாரீனில் இருந்தவள் ரெண்டு வருசமாய் இங்கேதான் இருக்கிறாள். “எத்தனை பசங்க…” எனக் கேட்டேன். அதற்கு இன்னும் பூரித்து “ரெட்டைப்பிள்ளைகப்பா…! வர்ஷன், வர்ஷினி ட்வின்ஸு” என்றவர். “இன்னம் பாப்பா வர்லை வண்டியை சர்ச்சுக்கு விடு” என்றதும் மதன் மறுபடி ஆக்சிலரேட்டரை மிதித்தான்.
“பாப்பா மேல தாமஸுக்கு ரொம்பப் பாசம்யா. அதும் சித்தப்பா சித்தப்பான்னு உருகும். எதா இருந்தாலும் அவன்ட்டதான் சொல்லும். மாப்பிள்ளைய லவ் பண்றேன்னு அவண்ட்டதான் சொல்லிச்சி. தாமஸ் பயதான் எங்கிட்டே பேசினான். வேற யாரு பேசமுடியும்? காலேஜ்ல பாப்பாவை யாரோ கிண்டல் பண்ணிட்டதா தெரிஞ்சு தாமஸ் போயி கலக்கி எடுத்திட்டான். பெரிய அளவுல பிரச்சினைய பேசி முடிக்க வேண்டியதாயிட்டு. ‘என்னடா என்னைய அடக்குவ நீ கோவப்பட்டுட்டேன்னு’ கேட்டேன். ‘அட! என்னாங்க நீங்க பாப்பா பயந்துகினி காலேஜுக்கு போவுமா? இப்ப பாப்பாவைப் பார்த்ததும் யாரும் வம்பிழுக்கத் தோணாதில்ல. விடுங்க… விடுங்க…’ அப்டின்னுட்டான். பாவிப்பய என்னைய அண்ணன்னு கூப்டதில்லை. ஆனா யார்ட்ட குறிப்பிட்டாலும் ‘அண்ணன் அண்ணன்தான்’. நான் ராமனான்னு தெரியாது. அவன் லச்சுமணனா இருந்தான். கடைசிவரைக்கும் வருவான்னு நினைச்சேன்யா. மண்ணப் போட்டுப் போயிட்டான் ராஸ்கல்” என்றவர் கண்களை மூடிக் கொண்டார். அதற்குப் பிறகு எதுவுமே பேசவில்லை. மனிதன் வினோதங்களின் உறைவிடம். எப்போது பேச்சை நிறுத்துவான் என்பதுகூட யாராலும் யூகிக்க முடியாது. சற்றைக்கெல்லாம் பெரிய சப்தத்தோடு குறட்டையுடன் தூங்கத் தொடங்கினார் கார்மேகம். கோபி எதையோ பேச முயல, “விட்றா தூங்கட்டும்.பாவம்” என்று சன்னமாய் எச்சரித்தார் முத்தண்ணன். சர்ச் வாசலில் நாங்கள் மூவரும் இறங்கிக் கொண்டோம். ட்ரைவர் தன் ஸீட்டிலேயே இருந்தான். கார்மேகம் தன் கனத்த உடலை சம்பிரமமாக அமர்த்தி உறங்குவதறியாமல் உறங்கிக் கொண்டிருந்தார்.
பாதிரியார் பன்னீர் தெளித்து மந்திரங்கள் உச்சரித்துத் தன் சடங்குகளை நிறைவுசெய்தார். அவரது உச்சாடனத்தைக் கேட்டு அங்கிருந்த பலருக்கும் அமைதி கிடைத்தாற் போன்று மெல்ல இறுக்கம் விலகி நெகிழத் தொடங்கியது கூட்டம் அடுத்து கல்லறைக்குக் கொண்டு செல்வதற்காகக் கிளம்பினார்கள். “கார்மேகண்ணன் வீட்டுக்குப் போகட்டும்.நாம பரியலுக்கு ஆட்டோவுல போயிக்குவம்” என்றார் முத்தண்ணன். மதனிடம் அதைச் சொல்ல முயலும்போது எங்கிருந்தோ நாவற்பழக் கலரில் ஆடி கார் ஒன்று வந்து நின்றது. பாப்பா என்றழைக்கப்பட்ட டாக்டர் தீப்திகா முன்னே செல்ல அவள் கணவனாக இருக்கவேண்டும் பின்னாலேயே பெரிய மாலையைத் தாங்கிக் கொண்டு சென்றான். அடுத்த ஐந்தாம் நிமிடம் அழுதுகொண்டே மறுபடி வெளியேறிய தீப்திகா கார்மேகத்தின் காரை நோக்கி வந்தாள். முத்தண்ணனைப் பார்த்து லேசாய்க் கண் கலங்கினாள். சற்றுத் தள்ளியே அவள் கணவன் நின்றுகொண்டான்.
ட்ரைவர் கண்ணாடியைத் திறந்து வணக்கம் தெரி விக்க எட்டிப் பார்த்தவள், “அப்பா தூங்கிட்டாரா?.” அவன், “ஆமாம்.” என்றதும் “சரி, நம்ம வீட்டுக்குப் போயிடு. பெரிய வீட்டுக்குப் போவேணாம். என்ன? நாங்க கொஞ்ச நேரத்ல வந்திருவம்” என்று கார்மேகத்தின் காரை அனுப்பிவிட்டு எங்களைப் பார்த்து லேசாய் அயர்ச்சியுடனான முறுவலைத் தந்தாள்.
“சித்தப்பா இஸ் க்ரேட்… பட் அன் எக்ஸ்பெக்டட்” என்று தலையைக் குலுக்கிக் கொண்டாள். “பட் அவருக்கு வேற ஆப்ஷன் இல்லை. ஒருவகையில இதை நான் எதிர்பார்த்திருக்கணும். அவர் ரொம்ப தைரியமானவர்னு தப்புக் கணக்கு போட்டுட்டேன்” என்றாள்.
என்ன சொல்கிறாள் என்று முத்தண்ணனைப் பார்த்தேன். அவரும் அதே நேரம் என்னை ஒரு விநாடி பார்த்துத் திரும்பினார்.
“ஏம்மா தாமஸுக்கு என்ன உடம்புக்கு, ஏன் இப்பிடி ஒரு முடிவை எடுத்திட்டான்.” எனக் கேட்டார் முத்தண்ணன். அந்தக் கேள்வியை எதிர்பார்த்தவளாய் ஒன்றும் பேசாமல் தன் கையில் இருந்த கார்சாவியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் தீப்தி. சட்டென தலை உயர்த்தி “அவருக்கென்ன, அவருக்கு எதும் இல்லை. அப்பாவுக்குத்தான் ஸ்டேஜ் ஃபோர். இன்னம் ரெண்டு மாசம்தான் இருப்பார். எந்த மருத்துவமும் யூஸில்லை. அது சித்தப்பாவுக்குத் தெரிவிச்சம்” என்றவள் அரை விநாடி மௌனத்துக்கப்பால், “அப்பாவுக்கு எதுவுமே தெரியாது. அவர் இஷ்டத்துக்கு இருந்துட்டுப் போகட்டும்னு விட்டுட்டோம். நீங்களும் எதும் சொல்லீராதீங்க…” கை கூப்பினாள். காரில் ஓட்டுனர் ஸீட்டில் அமர்ந்து கணவன் எடுத்துக்கொடுத்த கூலிங் க்ளாஸை அணிந்ததும் வேறொரு முகமாக மாறினாள்.கார் கண்ணாடியை லேசாக இறக்கி தலையை அசைத்தபடியே ஸ்டேரிங்கை வளைத்துத் திருப்பிச் சாலையில் கலந்தாள். முத்தண்ணன் முகத்தைப் பார்த்தேன். அவர் வேறெங்கோ பார்த்தார். மழையைக் கலைத்தபடி எங்கிருந்தோ எழுந்த காற்று பெரிதாகச் சுழன்றடித்தது