இது பி.டி.சாமி பற்றியோ. எண்டமூரி வீரேந்திரநாத் பற்றியோ இன்ன பிற அமானுஷ்ய எழுத்தாளர்கள் பற்றியோ அல்ல. எழுத நேரமில்லாத பெரிய மனிதர்களுக்கு, அவர்கள் எழுதுவதைப் போலவே எழுதித் தரக்கூடிய ghost writer ஒருவர் பற்றியது. தமிழ்ச் சூழலில் எல்லோருமே எழுத்தாளர்கள் என்பதால் இந்த ரக எழுத்தாளர்கள் யாரும் இல்லை – அதாவது எனக்குத் தெரிந்து இல்லை. இதே காரணத்தால் இப்படியான எழுத்தாளர்களைக் குறிக்கும் சொல்லும் தமிழில் இல்லை. எனவே நானே ஆவி எழுத்தாளர் என்ற சொல்லை உருவாக்கிவிட்டேன். முதலில் வைத்த பேய் எழுத்தாளர் என்ற சொல் எனக்கே பிடிக்காமல் போனது. பில் கிளிண்டனின் மனைவி ஹில்லாரி உட்பட ஏகப்பட்ட பிரபலங்களுக்குப் புத்தகம் எழுதிக் கொடுத்தவரான பார்பரா ஃபியன்மன் டோட்டின் எழுத்துலக அனுபவங்கள் Pretend I’m Not Here என்று வந்திருக்கிறது. பார்பரா போல் ஏராளமான ஆவிகள் இருந்தாலும் கூட, இவர் மட்டும்தான் இந்தத் தொழில் பற்றி பெரிய புத்தகமே எழுதியிருக்கிறார். மேற்கத்திய நாகரீகத்தில் எதுவுமே கேவலம் இல்லை. எனக்குப் பிடித்திருக்கிறது. எனவே நான் இதைச் செய்கிறேன். எனக்கு நேரமில்லை. எனவே நான் ஒருவரை என் சார்பாக என் வேலையைச் செய்ய நியமித்திருக்கிறேன் என்று எளிதாகச் சொல்லக் கூடிய இடம். நாட்டில் எவருக்குமே எந்த அற உணர்வுகளும், தரங்களும் இல்லாவிட்டாலும், எழுத்தாளர்கள், கலைஞர்கள் மட்டும் பட்டினிகிடந்தாவது அறநெறிகளைக் காக்க வேண்டும், எல்லாவற்றிற்கும் கருத்துச் சொல்ல வேண்டும், யோக்கிய சிகாமணியாக இருக்க வேண்டும் என்று நம் ஊரில் எதிர்பார்ப்பது போல் அங்கெல்லாம் எதிர்பார்க்க மாட்டார்கள் என்பதால், பார்பரா தான் பிறருக்காக எழுதியது தொடர்பான அனுபவங்களை வெளிப்படையாக எழுதியிருக்கிறார்.

பிறருக்காக எழுதுபவர் என்பதால் ஏதோ சாதாரணமானவர் என்று நினைத்துவிடக் கூடாது. பெர்க்கலி பல்கலைக்கழகத்தில் படைப்பூக்க எழுத்து பற்றிய பட்டப்படிப்பு படித்தவர். வாஷிங்டன் போஸ்ட்டில் வேலை பார்த்தவர். இப்போது கலிஃபோர்னியாவின் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத் துறையில் வருகைதரு பேராசிரியராக இதழியல் கற்பிப்பவர்.

படிப்பை முடித்ததும், வாஷிங்டன் போஸ்ட்டில் வேலைக்குச் சேர்ந்தார். நேரடி செய்தியாளராக அல்ல. வாட்டர்கேட் ஊழலை அம்பலப்படுத்திய உலகப் புகழ் பெற்ற செய்தியாளரான பாப் உட்வர்டின் ஆய்வு உதவியாளராகச் சேர்ந்தார். பாப் உட்வர்ட் ஒருவரை நேர்காணல் செய்யச் செல்லும் முன் அந்தப் பிரபலம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் பார்பரா சேகரிக்க வேண்டும். அந்தப் பிரபலம் சார்ந்த துறை பற்றிய விபரங்கள், அவரது குடும்பம் அனைத்தையும் பற்றி தகவல்களைச் சேகரித்து அவற்றையெல்லாம் கோர்வையாக எழுதி உட்வர்டுக்குத் தரவேண்டும். அவர் நேர்காணல் செய்து எடுத்து வந்த ஒலிநாடாவைப் போட்டுக் கேட்டு அதை எழுதி டைப் செய்ய வேண்டும். உட்வர்ட் செய்திக் கட்டுரை எழுதினாலும் இப்படித்தான். அவர் ஒரே கேள்வியை இருபது பேரிடம் கேட்டிருப்பார். இருபது பேரின் பதில்களையும் வரிசையாக எழுதி, அவை ஒரே மாதிரி இருக்கின்றனவா, மாறுபடுகின்றனவா, மாறுபட்டால் எதனால் மாறுபட்டன என்றெல்லாம் பார்த்து அவருக்குக் குறிப்புகள் தரவேண்டும். உட்வர்ட்டுக்கு இப்படியான வேலைகள் செய்தே, பார்பரா எழுதுவதன் நுட்பத்தை, தகவல் சேகரிப்பதன் நுட்பத்தை, சேகரித்ததைப் பயன்படுத்தும் நுட்பத்தை அறிந்தார். உட்வர்ட் தான் எழுதியதைத் திருத்தும் போது தன் மனச்சார்பை வெளிப்படுத்தும் விதமாகத்தான் பயன்படுத்தியிருக்கும் பெயரடைகளை எல்லாம் நீக்குவார். எந்த நிகழ்ச்சி என்றாலும், அதன் காலவரிசை முக்கியம் என்பார். எப்போது நடந்தது? அது யார் யாருக்கெல்லாம் தெரியும்? அவர்களுக்கு எப்போது அது தெரியும்? என்ற மூன்று கேள்விகள் மிக முக்கியம் என்பார். எல்லாவற்றையும் திரும்பத் திரும்ப சரி பார். ஒரு கூட்டத்தைப் பற்றி எழுத வேண்டும் என்றால் அதில் கலந்து கொண்ட ஒவ்வொருவரிடமும் பேசு. எதையும் நீயாக ஊகிக்காதே. இவை தொடர்புடைய புள்ளிகள் என்று உறுதிப்படுத்திக் கொள்ளாத வரை, நீயாக அந்தப் புள்ளிகளை இணைக்காதே. இப்படி பல விஷயங்களை பார்பராவிற்குக் கற்றுத் தந்த அந்த உட்வர்ட் தான் பார்பராவை ஆவி எழுத்தாளராக்கினார்.

வாட்டர்கேட் ஊழலை உட்வர்ட்டுடன் சேர்ந்து அம்பலப்படுத்திய மற்றொரு செய்தியாளர் கார்ல் பெர்ன்ஸ்டீன். அவர் எழுதும் புத்தகத்திற்கு அடிப்படை தரவுகளைத் திரட்டி, அவற்றை ஒழுங்குபடுத்தி, மேலோட்டமாக அவற்றைத் தொகுத்து எழுதித் தந்து இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக ஆவி அமுதாவானார் பார்பரா. இப்படி புத்தகம் எழுதித் தருபவர் பெயர் புத்தகத்தின் அட்டையில் இடம் பெறாது. எழுதியவர் நன்றி தெரிவிக்க இரண்டு பக்கம் ஒதுக்கியிருப்பாரல்லவா, அதில் இந்த பார்பரா இல்லாமல் இந்தப் புத்தகமே சாத்தியமில்லை என்ற ரீதியில் ஒரு வரி இருக்கும். பெரிய பதிப்பகங்களின் வாட்ச்மேன் கூட, அந்த வரியில் சொல்லப்பட்டவர்தான் அந்தப் புத்தகத்தை உண்மையில் எழுதியவர் என்று கண்டுபிடித்துவிடுவார். பதிப்பகங்கள் இப்படியான ஆட்களை உடனே தொடர்பு கொண்டு விடும்.

“நமக்குத் தெரிஞ்ச செனட்டர் ஒரு அம்மா இருக்காங்க. அவங்க வாழ்க்கை வரலாறு எழுதணும்னு ஆசைப்படறாங்க. .. என்ன… அம்மா ரொம்ப பிஸி… வீட்ல நாலு ரூம் நெறைய பேப்பர் கட்டிங், அவங்க பேசின கூட்டங்களோட ஒலிப்பதிவு சி.டி. எல்லாம் இருக்கு. எல்லாத்தையும் ஒழுங்குபடுத்தி, அவங்க கிட்டயும் அப்பப்ப டிஸ்கஸ் பண்ணி, ரஃப்பா ஒண்ணு எழுதித் தர நம்பகமான ஒரு ஆள் வேணுங்கறாங்க… நம்ம நண்பர் ஒருத்தர் உங்களப் பத்தி சொன்னாரு.. ஒரு நா நம்ம பதிப்பகத்துக்கு வாங்க… பேசிக்கலாம்…“ என்று அழைப்பு வரும். பார்பரா வாழ்க்கை வரலாறு எழுதிக் கொடுத்த செனட்டர் அம்மா மார்ஜொரி என்பவர். அந்தப் புத்தகம் பெரிய ஹிட்டானது. மார்ஜொரி பெரிய மனதோடு வித் பார்பரா என்று அட்டையில் போட்டு அதிகாரபூர்வ அங்கீகாரம் தந்தார். மார்ஜொரியின் மகன் கிளிண்டனின் ஒரே சீமந்த புத்திரி செல்ஸியைக் காதலித்து, மணந்து கொள்ள, மார்ஜொரி கிளிண்டனின் சம்பந்தியாகிவிட, அவர், அவரது புத்தகம், அவரது ஆவி எல்லாம் புகழின் உச்சியில்.

மார்ஜொரி தன் பங்கிற்கு தன் சம்பந்தியம்மாளுக்கு ஒரு புத்தகம் எழுதித் தர முடியுமா? என்று கேட்ட போது, பார்பரா வானத்தில் பறந்தார். ஹில்லாரி கிளிண்டனின் ஆவி என்றால் சும்மாவா? தினமும் வெள்ளை மாளிகை போக வேண்டும். ஹில்லாரியின் ஆவணங்கள் அனைத்தையும் படிக்க வேண்டும். அவரது நேர்காணல்கள் அனைத்தையும் பார்த்து, கேட்டு குறிப்பு எடுக்க வேண்டும். அவ்வப்போது எழும் சந்தேகங்கள் பற்றி ஹில்லாரியிடம் கேட்டு தெளிவுபெறவேண்டும். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவர் கூடவே இருந்து அவரைக் கவனிக்க வேண்டும். வெள்ளை மாளிகையின் ஹில்லாரியின் அலுவலகம் “முதல் பெண்மணி குழந்தைகள் வளர்ப்பு பற்றி ஒரு புத்தகம் எழுதி வருகிறார். பேராசிரியர் பார்பரா அவருக்கு உதவி செய்து வருகிறார்“ என்று பத்திரிகைக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது.

ஒரு நாள் புத்தகம் பற்றி ஹில்லாரியுடன் பேசிக் கொண்டிருக்கும் போது. கிளிண்டன் சாப்பிட வந்துவிடுகிறார். “இந்த பாப்பாதான் என்னோட புக்குக்கு ஹெல்ப் பண்ணுது” என்று ஹில்லாரி அறிமுகப்படுத்துகிறார். கிளிண்டன் கைகுலுக்குகிறார். “எங்களோடு சாப்பிட வருகிறீர்களா?“ என்கிறார் கிளிண்டன். மூவரும் சாப்பிடுகிறார்கள். சாப்பிட்டதும், “வேலை இருக்கா? இப்பவே போகணுமா?“ என்கிறார் ஹில்லாரி. “ஆமா, ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் வந்து உட்கார்ந்திருக்கிறார். அவரோடு சேர்ந்து ஏதோ படம் பார்க்க வேண்டுமாம். வருகிறீர்களா?“ என்கிறார் கிளிண்டன். சரி, ஓவராக ஆடக் கூடாது என்று “மன்னிக்கவும், வேலைகள் பாதியில் நிற்கின்றன’’ என்று சொல்லி விடுகிறார் பார்பரா. சொந்தமாக எழுதும் எழுத்தாளனுக்குக் கூடக் கிடைக்காத அனுபவம்!

ஹில்லாரியின் புத்தகத்தை வெளியிட்டவர்கள் சைமன் அண்ட் செஷ்டர். பார்பராவிற்கு அவர்கள்தான் பணம் தந்தார்கள். பார்பரா புத்தகத்தை முடித்துத் தந்துவிட்டார். ஹில்லாரி தான் கைப்பட ஒரு புத்தகம் எழுதியுள்ளதாகவும், விரைவில் அது வரப்போகிறது என்றும் சொன்னார். செய்தியாளர்களை அழைத்து தன் கையால் எழுதிய கத்தை கத்தையான கையெழுத்துப் பிரதியை வேறு காட்டினார். பதிப்பாளர் பார்பராவிற்குத் தரவேண்டிய கடைசி தவணையைத் தராமல் நிறுத்தி விட்டார்கள். ஹில்லாரி தனது ஆவி எழுத்தாளரை ஏமாற்றியது பற்றி விஷயம் கசிந்தது. அமெரிக்கர்கள் அத்தனைக்கும் ஒரு கேட்டை சேர்த்துவிடுவார்கள் அல்லவா? இந்த சர்ச்சைக்குப் பெயர் தேங்க்யூகேட். பின்னர் பிரச்சனையைப் பெரிதுபடுத்த வேண்டாம் என ஹில்லாரி சொல்லி, பதிப்பாளர் பாக்கித் தொகையைத் தந்தார். ஆனால், கோபத்தில் பார்பராவிற்கு ஒரு காம்ப்ளிமெண்ட்ரி பிரதி கூடத்தரவில்லை. நாம் எழுதியதை நாமே காசு கொடுத்து வாங்குவதா என்ற கோபத்தில், பார்பராவிடம் இன்றுவரை இந்தப் புத்தகத்தின் பிரதி மட்டும் இல்லை. கிளிண்டன், ஹில்லாரி பற்றி ஏகப்பட்ட செனட் விசாரணைகள் நடந்த போது, வேண்டுமென்றே பார்பராவை சம்மன் தந்து அழைத்து, விசாரிப்பார்கள். இவர் அந்த விபரங்கள் எல்லாம் தெரியாது என்பார். அவர்களது நோக்கம் பார்பரா மூலம் தகவல்கள் அறிந்து கொள்வதல்ல. ஹில்லாரியை அசிங்கப்படுத்துவதுதான். பார்பராவிற்கும் இந்த டீலிங் மிகவும் பிடித்துப்போய்விட்டது. பல முறை தொலைக்காட்சிகளில் வந்து புகழும் சேர்ந்தது.

பிரபலங்களுடனான அனுபவங்கள் ஒருபுறமிருக்க, பிறருக்காகப் புத்தகம் எழுதுவது பற்றிய ஏராளமான தகவல்களைச் சொல்கிறது இந்தப் புத்தகம். புத்தகத்தை எழுதித் தந்துவிட்டு, கிளம்பும் தருணத்தில், பிள்ளையைப் பெற்றுத் தந்துவிட்டு, பணத்தை வாங்கிச் செல்லும் வாடகைத் தாய் போல தான் உணர்வதாக பார்பரா சொல்கிறார். பிரபலங்களைப் பற்றிய பல அரிய தகவல்கள் அவர்களது வாய்வழியாகவே கிடைக்கும். ஆனால் அவை எதையும் புத்தகத்தில் பயன்படுத்த முடியாது. அரசியல்வாதிகளுக்கு இயல்பாகவே தேவையின்றி, வாயைக் கொடுக்கக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு அதிகமாக இருக்கும். மற்றொருபுறம் எழுத்தாளருக்கு தனக்குத் தெரிந்ததை எல்லாம் தான் எழுதுவதில் கொட்டிவிட வேண்டும் என்ற வேகம் இருக்கும். இந்த இருவரும் சேர்ந்து ஒரு புத்தகம் எழுதுவது என்பது மிகக் கடினம். அவர் சொல்லவே தயங்குவார். இவர் எல்லாவற்றையும் தெரிந்துகொண்டு எழுதிவிட நினைப்பார். யாருக்காக எழுதுகிறோமோ அவரது எழுத்துகள், பேச்சுகள், அவரைப் பற்றி வந்த செய்திகள் என அனைத்தையும் சேகரிக்க வேண்டும். அவரது மொழி நடையை அறிய வேண்டும். அவர் ஏதேனும் சில வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துபவரா? அவருக்குப் பிடித்தமான கவிதை வரிகள் என்னென்ன? பழமொழிகள், சொலவடைகளைப் பயன்படுத்துவாரா? பேச்சு வழக்கில் எழுதுபவரா? நல்ல செம்மையான மொழிநடை கொண்டவரா? இலக்கணத்திற்கு முக்கியத்துவம் தருபவரா? முக்காற் புள்ளியை சரியாகப் பயன்படுத்தத் தெரிந்தவரா? என்று பல்வேறு விஷயங்களையும் கவனிக்க வேண்டும். இவையனைத்தையும் வைத்து அவருடைய மொழிநடையிலேயே எழுத வேண்டும் என்கிறார் பார்பரா. எனக்கு சிறுவயதில் என் அம்மாவும், அக்காவும் என் எழுத்தைப் போலவே கோழிக் கிண்டினாற் போல் வீட்டுப் பாடம் எழுதித் தந்தது நினைவுக்கு வருகிறது!

வாழ்க்கை வரலாறு எழுதுவது இன்னும் கடினம். அவரது சிறுவயது நண்பர்கள், பெற்றோர், மனைவி, உடன்பிறந்தோர், உடன் பணிபுரிந்தோர் எல்லோரிடமும் பேச வேண்டும். அவற்றை எல்லாம் தொகுக்க வேண்டும். அந்த வாழ்க்கை வரலாற்றை எந்த இடத்திலிருந்து தொடங்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். இது மிகவும் கடினமான ஒன்று. ஒரு அரசியல் பிரமுகரோ அல்லது புகழ் பெற்ற ஆளுமையோ தனது 50ஆவது வயதில்தான் வெளியில் தெரியும்படியான பேரும் புகழும் பெற்றிருப்பார். அவரது கதையில் பரபரப்பே அந்த 50ஆவது வயதிற்குப் பிறகுதான். இந்த 50 வயது வரையிலான கதையை முதல் 200 பக்கங்களுக்கு விலாவரியாகச் சொல்லிக் கொண்டிருந்தால், வாசகன் புத்தகத்தைத் தூக்கிப் போட்டுவிட்டுப் போய்விடுவான். அவரது 50ஆவது வயதில் ஆரம்பித்து பிளாஷ்பேக், சமகாலம், பிளாஷ்பேக், சமகாலம் என்று மாற்றி மாற்றி எழுத வேண்டும். இதை விட முக்கியம், இதை அந்த பிரபலத்திற்குப் புரிய வைக்க வேண்டும். அவர் அவரது ஒன்றாம் வகுப்பு டீச்சரின் நேர்காணலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றால் சிரமம்.

நாமாக ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதினால், அவர் பிளஸ் 2 படிக்கும் போது கோடை விடுமுறையில் சித்தி வீட்டுக்குப் போனது பற்றி எழுதிவிடலாம். ஆனால், ஒரு பெரிய மனிதருக்காக அவரது பெயரிலேயே எழுதும் போது இதெல்லாம் முடியாது. கடந்த காலம் என்பதே அவர்கள் நம்மிடம் சொல்வதற்காகத் தேர்ந்தெடுக்கும் சம்பவங்கள்தான் என்கிறார் பார்பரா.

ஒரு ஆவி எழுத்தாளராக, நான் ஒரு பிரபலத்தின் புத்தகத்தை எழுதும் காலம் முழுக்க அந்தப் பிரபலமாகவே வாழ்வேன். நான் எளிதில் நுழைய முடியாத அதிகாரத்தின் உச்சிகளுக்கெல்லாம் எளிதாகச் செல்வேன். சிறு குழந்தை தன் செருப்பை விட்டுவிட்டு, அம்மாவின் செருப்பைப் போட்டுக் கொண்டு,
தட்டுத் தடுமாறிக் கொண்டு வீடு முழுக்க சுற்றிவரும் சந்தோஷம், இப்படி வேறொரு நபராக சிலகாலம் சுற்றித் திரிவதில் இருக்கிறது என்கிறார் பார்பரா. அதோடு கூடவே, ஏராளமான பணம். சர்வ சாதாரணமாக 150000 டாலர் தருகிறார்கள். அதிக கடன் இல்லாமல், பெரிய மாளிகை போன்ற சொந்த வீடு. எதிர்காலத்திற்காக ஓரளவிற்கு சேமிப்பு. ஆண்டுக்கு ஒரு முறை வெளிநாட்டுச் சுற்றுலா என்று எல்லாம் இந்த ஆவியின் அருள்தான். ஆனாலும், முப்பது வருடத்திற்கு முன்னால் இவரோடு கற்றுக்குட்டி செய்தியாளராக இருந்தவர்கள் இப்போது எங்கேனும் சந்திக்கும் போது, நான் பிபிசியில் இருக்கிறேன், நான் நியூயார்க் டைம்ஸில் இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, “சரி, நீ என்னப்பா பண்ற?’’ என்று கேட்கும் போது சற்று சங்கடமாகத்தான் இருக்கிறது என்கிறார் பார்பரா. வெளியில் பல்கலைக்கழகப் பேராசிரியர் என்று சொல்லிக் கொள்வது தான் கெத்தாக இருக்கிறது.

இதைப் படித்து முடித்த போது, தமிழில் இப்படி ஆவி எழுத்தாளர்கள் யாரேனும் இருக்கிறார்களா? என்று எனக்குக் குறுகுறுவென்று இருந்தது. அப்படியான ஆவிகள் தமிழில் உண்டு என்ற தகவல் தெரிந்தவர்கள் அடியேனுக்குத் தெரிவித்தால், நன்றியுள்ளவனாக இருப்பேன்.

 

ஆர்வமுள்ளோர் வாசிக்க – Pretend I’m Not Here – Barbara Fienman Todd

subbarao7@gmail.com