”எல்லாமே குழப்பம்தானே…! என் வாழ்க்கையே குழப்பம் தானே…! IPS-சோட cut off mark, four seventy-ஆ (470) இருந்துச்சு. ஆனா(ல்) எனக்கு கிடைச்சது four sixty nine (469). ஒரே ஒரு mark…! எல்லாத்தையும் மாத்திருச்சு! ஆனா இந்தக் கீழ் சாதிக்காரங்க வெறும் 245 மார்க் எடுத்துட்டு SP Rank-ல உக்காந்துட்டு… எனக்கு ஆர்டர் போடுறாங்க! எங்க அப்பா ஒரு IPS… எங்க அண்ணன் ஒரு IPS… ஆனா(ல்) நான் ஒரு loser”
என்று ஆஷ்ரம் (ஆசிரமம்) தொடரில் அழுதுகொண்டே பேசுகிறான் உஜாகர். இந்த வெப் தொடரில் வரும் இந்த வசனம் படத்துக்கோ, காட்சிக்கோ, கதாபாத்திரத்திற்கோ சம்பந்தம் இல்லாமல் வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருந்தாலும், “பெரும்பாலும் யாருக்குமே தெரியாத MX Player போன்ற இணைய தளத்தில் வரும் ஒரு தொடரில் இதுபோன்ற வசனம் வந்தால் இப்ப என்னவாம்” என்று நாம் நினைப்போம்.
MX Player பற்றி பெரியவர்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அது முழுக்க முழுக்க இளைஞர்கள் பயன்படுத்தும் ஓர் இணைய தளம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இதை OTT தளம் என்றும் சொல்லமுடியாது. YouTube தளம் என்றும் சொல்லமுடியாது. இரண்டும் கலந்து இருக்கிறது. பணம் கட்டிப் படம் பார்த்தால் இடையில் விளம்பரங்கள் வராது. பணம் கட்டாமல் படம் பார்த்தால் இடையில் வரும் விளம்பரங்களைப் பார்த்து நொந்து செத்துவிடவேண்டும். ஆனாலும் இளைஞர்கள் பெரும்பாலும் பணம் கட்டாமல்தான் பார்க்கிறார்கள்!
இந்தத் தளத்தில் வரும் தொடர்கள் பலவற்றில் பாலியல் காட்சிகள் தாராளமாக இருக்கின்றன. அதனால் விளம்பரங்களைச் சகித்துக்கொள்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஒவ்வொரு தொடரையும் கோடிக்கணக்கான இளைஞர்கள் பார்க்கிறார்கள். அதிலும் ஆஷ்ரம் தொடரை 150 கோடி பேர் பார்த்துள்ளதாகச் சொல்கிறார்கள்! இப்போது சொல்லுங்கள், உலகெங்கும் இருக்கும் 150 கோடி இளைஞர்களிடம், ஓரு உருக்கமான காதல் காட்சிக்கு இடையில், இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும், கீழ்ச்சாதியை இழிவாகவும் பேசும் ஒரு வசனத்தை வைத்தால் அது இளைஞர்களின் மனத்தில் தவறான புரிதலைக் கொடுக்குமா? கொடுக்காதா?
வெப் சீரியல்களில் சமூக நீதிக்கெதிரான கருத்தைப் பதிவு செய்யும்போதெல்லாம் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதுபோல ஒரு கருத்தாடலை மறக்காமல் செய்கிறார்கள். “நான் உயர்ந்த ஜாதி. அதனாலேயே எனக்கு வேலை கிடைக்கவில்லை. ஆனால் தகுதியே இல்லாத தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவன் மிக உயர்ந்த பதவியில் அமர்ந்துகொள்கிறான்” என்கிறார்கள். இது திட்டமிட்டுச் செய்யும் விஷமப் பிரச்சாரம்தான். ஆனால் செய்துகொண்டே இருக்கிறார்கள். ஒரு தொடரை எத்தனைப் பேர் பார்க்கிறார்கள், எந்தத் தளத்தில் பார்க்கிறார்கள் என்பது பற்றியெல்லாம் கவலைப்படாமல், தங்கள் கருத்தைப் பதிவு செய்துகொண்டே இருக்கிறார்கள். இதுதான் அவர்கள் பலம்.
இன்னொரு விசயத்தையும் வெப் சீரியல்கள் மறக்காமல் செய்கின்றன. இந்த ஆஷ்ரம் தொடரிலும் அதுபோன்ற இடம் ஒன்று வருகிறது. ஆஷ்ரமத்தில் போதை மருந்தைக் கலந்த லட்டைக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால், சமீப காலமாக அவர்களுக்குப் போதை மருந்து வருவதில் நிறைய தடங்கல் வருகிறது. ஆஷ்ரமத்தின் தலைவர் பாபா ,”ஏன் போதை மருந்து முன்பு போல கிடைப்பதில்லை” என்று கேட்கிறார். அதற்கு அவரோடு இருக்கும் போபா சாமி என்னும் நண்பன் சொல்கிறான், “முன்ன மாதிரி ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம் வழியா போதை மருந்தை கொண்டுவர முடியாது. புதுசா வந்துருக்குற Central Government security-ய பயங்கரமா tight பண்ணிட்டாங்க. இனி வெளில்லர்ந்து ஒரு பய வரமுடியாது” என்கிறான். மோடி ஆட்சிக்கு வந்து எட்டு வருசம் ஆனபின்னாலும் ‘புதுசா வந்துருக்குற Central Government’ என்று கூஜா தூக்குகிறார்கள்.
எனக்கு ஆஷ்ரம் தொடரைப் பார்க்கும் எண்ணம் எல்லாம் இல்லை. உயிர்மையில் வெப் சீரீஸ் பற்றித் தொடர்ந்து கட்டுரை எழுதுவதைப் பார்த்த ஒரு நண்பர் முகநூல் வழியாக வந்து ”வெப் சீரீஸ் பற்றி எழுதும் அன்பர்களே! ஆஷ்ரம் வெப் தொடரையும் பற்றியும் எழுதுங்க” என்று வேண்டுகோள் வைத்தார். சரி, அவரது வேண்டுகோளை ஏற்று ஆஷ்ரம் தொடரைப் பற்றி எழுதலாம் என யோசித்தேன். தொடரைப் பார்க்கும் முன்பு முதலில் IMDb-யில் சென்று ஆஷ்ரம் தொடருக்கான ரேட்டிங்கைப் பார்த்தேன். பார்த்ததும் அப்படியே ஷாக்காகிவிட்டேன்! என் வாழ்நாளில் 1/10 ரேட்டிங் எடுத்த படத்தை இதுவரை நான் பார்த்ததே இல்லை. எவ்வளவு மோசம் என்றாலும் மூன்றோ நான்கோ மதிப்பெண் கொடுப்பார்கள். ஆனால் இந்தத் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் ஒரு மதிப்பெண்ணைத்தான் கொடுத்திருந்தார்கள்!
சமீபகாலமாக, இந்திய வலதுசாரி ஆதரவாளர்கள் (சங்கிகள் என்றால் எளிதாகப் புரியும்) IMDb-க்குள் சென்று அமிர்கான், ஷாருக்கான், இடதுசாரி ஆதரவாளர்கள் ஆகியோரின் படங்களுக்கான ரேட்டிங்கைக் குறைத்துவிடுகிறார்கள். அதனால் இந்தியப் படங்களைப் பற்றித் தெரியாத வெளிநாட்டு சினிமா ஆர்வலர்கள் குறைவான ரேட்டிங் உள்ள படங்களைப் பார்க்காமல் போய்விடுகிறார்கள் என்று சொல்கிறார்கள். ஆஷ்ரம் என்ற கதை ஆசிரமத்தில் நடக்கும் அநியாயங்களை எடுத்துச் சொல்லியதால் மனது புண்பட்டு ரேட்டிங்கைக் குறைத்துவிட்டார்களோ என நினைத்தேன். ஆனால் அது உண்மையில்லை என்பதை தொடரைப் பார்த்தபின்பு தெரிந்துகொண்டேன்.
“ஒரு கதையை உண்மையாகச் சொல்லும் தைரியமில்லை. படத்தை இயக்கிய பிரகாஷ் ஜா ஆஷ்ரமத்தில் நடக்கும் லீலைகளை எல்லாம் முழுவதும் சொல்லத் தயங்கியிருக்கிறார். குறிப்பாக, தொடரின் தொடக்கத்தில் அவர் சொல்லும் பொறுப்பு துறப்பு (DISCLAIMER) கேலிக்குரியது மட்டுமல்ல, தேவையில்லாதது” என்று நாளிதழ் ஒன்று இந்த சீரியலைப் பற்றி விமர்சனம் எழுதியிருந்தது. அந்த நாளிதழ் சொல்லும் பொறுப்பு துறப்பு இதுதான்:
“அனைத்து மதத் தலைவர்களுக்கும் அவர்களின் ஸ்தாபனங்களுக்கும் நாங்கள் மரியாதை செலுத்துகிறோம். நமது தேசத்தில் பின்பற்றப்படும் அனைத்து மதங்களும், சமயங்களும், எண்ணங்களும், கலாச்சாரமும், பாரம்பரியமும் நமது சொந்தம்தான். அவற்றைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம். ஆனால் எப்போதாவது சிலர் இந்தப் புகழ்பெற்ற பாரம்பரியத்தில் சிலவற்றைச் சிதைப்பதன் மூலம் சமுதாயத்தின் அப்பாவி விசுவாசிகளை சுரண்டிக்கொள்கிறார்கள். நமது மதிப்பிற்குரிய, உண்மையான மற்றும் மரியாதைக்குரிய மதத் தலைவர்களின் கௌரவமான ஸ்தாபனத்தைக் கெடுப்பதன் மூலம் அதற்குக் கெட்ட பெயரை உருவாக்குகிறார்கள். இந்த விஷயத்தில் ஒரு முயற்சி தான் ஆசிரமத்தின் கற்பனைக் கதை” என்று ஒரு சலாம் போட்டுவிட்டுக் கதையைத் தொடங்குகிறார்கள்.
ஆசிரமத்தில் பாலியல் அத்துமீறல்களும், ஆன்மிகச் சர்வாதிகாரமும் நடப்பது புதிதா என்ன? நித்தியானந்தா காற்று வருவதற்காகக் கதவைத் திறந்தபோதே எல்லா அநியாயங்களையும் பார்த்தவர்கள்தாமே நாம்? பின்பு எதற்கு இந்தக் கும்பிடு என்றால் அதுதான் இந்திய ஜனநாயகம். இங்கு கோயிலை, ஆசிரமத்தை, மோடியைக் கும்பிட்டுவிட்டுத்தான் controversial-லான சீரியலை எடுக்க முடியும். முரண் என்னவென்றால் இங்கு controversial-லே அவர்கள்தான்!
The Crown என்ற வெப் சீரீஸ் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிஸபெத்தின் கதை என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டு படம் எடுக்கிறார்கள். எலிஸபெத்தின் மகள் ஆன்ன் எலிஸபெத் என்பவர் ஆந்த்ரூ பார்க்கர் என்பவரோடு உறவில் இருக்கிறார். கமில்லா ஆந்த்ரு பார்க்கரையும் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸையும் ஒரே நேரத்தில் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் சார்லஸை விட்டுப் பிரிந்து ஆத்ரு பார்க்கரைத் திருமணம் செய்ய முடிவு செய்கிறார். இதனால் சார்லஸ் மனமுடைந்துபோகிறார். அப்போது ஆன்ன் சார்லஸிடம் சொல்கிறாள், “கமில்லாவும் பார்க்கரும் நம்மை ஏமாற்றவில்லை. நாம் தான் அவர்களை ஏமாற்றுகிறோம்” என்கிறாள்.
பின்னாளில் கமில்லா ஆந்த்ரூவை மணக்கிறார். சார்லஸ் டயானாவைத் திருமணம் செய்கிறார். கமில்லாவோ திருமணத்திற்குப் பிறகும் இங்கிலாந்து அரசர் சார்லஸைக் காதலிக்கிறாள். சார்லஸ்-டயானா வாழ்க்கையில் விரிசல் ஏற்படுகிறது. கோபமடைந்த டயானா பிற ஆண்களோடு உறவு வைத்துக்கொள்கிறாள். டயானாவின் காதல்களை மட்டுமில்லை, இங்கிலாந்து ராணி எலிஸபெத்தின் மென்மையான காதல்களையும், அவருடைய தங்கை மார்கரெட்டின் அடாவடித்தனமான காதல்களையும் ஒளிவு மறைவின்றி எடுக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் பொறுப்பு துறப்பு சொல்வதே இல்லை. இந்தியாவில் இருப்பது போலித்தனமான ஜனநாயகம். கர்னி சேனா போன்ற அமைப்புகள் ஆஷ்ரம் என்ற தலைப்பையே எதிர்த்துப் போராடியிருக்கிறார்கள். எதிர்ப்புக்குப் பணிந்து ஆஷ்ரம் என இருந்த தலைப்பை ஒரு இழிவான ஆஷ்ரம் என மாற்றியிருக்கிறார்கள்.
ஆஷ்ரம் சீரியலை இயக்கியவர் பிரகாஷ் ஜா. ராஜ்நீதி போன்ற படங்களை எடுத்ததற்காக வெகுவாகப் பாராட்டு பெற்றவர். அவர் இயக்குநர் மட்டுமில்லை, ஓர் அரசியல்வாதியும்கூட. அப்படியென்றால் ஓர் உண்மை கலந்த கதையைச் சொல்லும்போது பிரச்சனைக்குரிய விசயங்களை மறைக்காமல் பேசுவதற்கான தைரியம் அவரிடம் இருந்திருக்க வேண்டும். சரி, தைரியம்தான் இல்லை, சொல்லும் கதையையாவது உருப்படியாகச் சொல்லியிருக்க வேண்டும்? எல்லாவற்றையும் சொதப்பி எடுத்திருக்கிறார். “Aashram is a classic example of overconfidence and laziness, resulting in overall mediocracy. There are too many subplots running within and the main story looses focus often. Ear jarring music and dated songs add to further woes” போன்ற பின்னூட்டங்களைப் படித்தப் பின்னரும் நான் இந்தத் தொடரைப் பார்க்கக் காரணம் அந்த முகநூல் அன்பரின் வேண்டுகோள் மட்டுமே!
கதையோ கதாபாத்திரங்களோ எந்த ஒழுங்கிலும் இல்லை என்பதால் இதுதான் கதை எனச் சொல்வது கொஞ்சம் கஷ்டம். என்றாலும் சொல்கிறேன். பம்மி லோச்சன் என்பவள் மல்யுத்த வீராங்கனை. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவள். அவளுடைய அண்ணன் சத்தி லோச்சன். இருவரும் அவர்களுடைய உறவினர் பையன் ஒருவன் திருமணத்தில் கலந்துகொள்கிறார்கள். திருமணத்தின் ஒரு நிகழ்வாக மணமகன் குதிரையில் ஜானவாசம் செய்கிறான். சௌத்ரி என்னும் உயர் ஜாதியினர் இருக்கும் தெருவழியாக ஆடிப் பாடிக்கொண்டு செல்லும்போது கடுமையாகத் தாக்கப்படுகிறார்கள். அந்த திருமணத்தில் அக்கி ராதி என்னும் உள்ளூர் நிருபரும் இருக்கிறார். தாக்குதலுக்கு உள்ளான பம்மியின் அண்ணனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, காவல்நிலையத்தில் தாக்குதல் குறித்துப் புகார் அளிக்கச் செல்கின்றனர்.
ஆனால் காவல் நிலையத்தில் FIR பதிவுசெய்ய மறுக்கிறார்கள். இன்னொரு பக்கம் உயர்ஜாதியினர், மருத்துவமனையில் இருக்கும் டாக்டர், நர்ஸ்களை எல்லாம் மிரட்டி, அடிபட்ட தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கு மருத்துவம் பார்க்கவிடாமல் தடுக்கிறார்கள். அப்போது கடவுளைப் போல வருகிறார் பாபா நிராலா. உயர்ஜாதியினரைத் தட்டிக் கேட்கிறார். அன்பே உலகம் என்பதைப் புரிய வைக்கிறார். தாழ்த்தப்பட்ட மக்களைக் காப்பாற்றியதால் பாபா நிராலா மீது பம்மிக்கு நல்ல எண்ணம் வருகிறது. அதனால் பாபா நிராலாவின் ஆஷ்ரமத்தில் சேருகிறாள் பம்மி. அவள் மட்டும் சேராமல் அவளுடைய அண்ணன் சத்தி லோச்சனையும் ஆசிரமத்தில் சேர்க்கிறாள்.
பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு ஒன்றை ஆஷ்ரமத்தில் நிகழ்த்துகிறார்கள். அந்த நிகழ்வில் பபிதா என்னும் பாலியல் தொழிலாளியை சத்தி லோச்சனுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள். பபிதாவும் சத்தியும் எளிமையான அழகான குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். ஒரு நாள் பாபா நிராலாவின் பார்வையில் பபிதா விழுகிறாள். அவளை அடைய வேண்டும் என்று நினைக்கிறார். சத்தியை ஆண்குறியை நீக்கி தூய்மைப்படுத்துகிறார்கள். “ஆண்குறி என்பது அன்பை அடைவதற்குத் தடையாக இருக்கிறது. இனி உடலோடு புணராமல் அன்பை உலகமாகக் கொண்ட ஆன்மாவோடு புணர்ந்து வாழ்” என பாபா நிராலா அவனுக்கு அன்புக் கட்டளை இடுகிறார். கூடவே அவனை வேறொரு ஊருக்கு அனுப்பிவிடுகிறார்.
பபிதாவுக்கு ஒரு லட்டை கொடுக்கிறார். பபிதா மயங்கிவிடுகிறார். மயங்கிய பபிதாவோடு பாபா நிராலா உறவுகொள்கிறார். பாலியல் தொழிலாளியாக இருந்த பபிதாவுக்கு ஆஷ்ரமத்தின் சூழல் புரிகிறது. பாபா நிராலாவிடம் எந்த எதிர்ப்பும் காட்டாமல் அவரோடு ஐக்கியமாகிவிடுகிறாள்.
பாபா நிராலா பபிதாவோடு தன் ஆசையை நிறுத்தாமல் அடுத்ததாக பம்மியின்மேல் தன் கவனத்தை வைக்கிறார். வழக்கம்போல் லட்டுவில் மயக்க மருந்தைக் கொடுத்து, பம்மியைத் தூக்கி வரச் செய்து, தன் அறையில் வைத்து உறவுகொண்டுவிட்டு மீண்டும் அவளுடைய இடத்திலேயே அவளைக் கொண்டுபோய் போட்டுவிடுகிறார்கள். தொடர்ந்து இதுபோல உறவுகொள்வதால் பம்மி பாதிக்கப்படுகிறாள். அவளால் மல்யுத்தப் போட்டியில் ஈடுபடமுடியாமல் சிரமப்படுகிறாள். பபிதாவுக்கு மட்டுமில்லாது ஆசிரமத்தில் இருக்கும் எல்லோருக்கும் இது தெரிந்தாலும் பம்மியிடம் இதைச் சொல்லாமல் மறைக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் பாபா நிராலா செய்யும் அநியாயம் பம்மிக்குத் தெரியவருகிறது. பாபா நிராலாவைப் பழிவாங்க வேண்டும் என நினைக்கிறார். பெரும் போராட்டத்திற்குப் பின் ஆசிரமத்திலிருந்து தப்பித்துச் செல்கிறாள். இதுவரை இரண்டு சீசன் முடிகிறது. மூன்றாவது சீசனில் பம்மி எப்படியாவது பாபா நிராலாவைப் பழிவாங்கிவிடுவாள் எனக் காத்திருந்தால், பம்மி ஓடுகிறாள் ஓடுகிறாள் ஒன்பது எபிசோடுகளில் ஓடிக்கொண்டே இருக்கிறாள். பத்தாவது எபிசோடில் பாபா நிராலாவுக்கு எதிராக வழக்கு தொடுக்கிறாள் பம்மி. அதிலும் தோற்றுவிடுகிறாள். இனிமேல் வரப்போகும் நான்காவது சீசனில் பம்மி பாபா நிராலாவை எப்படிப் பழிதீர்க்கப் போகிறாள் என்பதைக் காட்ட இருக்கிறார்கள். ‘டேய், மூன்று சீசனில் நீங்கள் எங்களை வைத்து செய்தது போதாதா…? நான்காவது சீசன் வேறா?” என நம்மைக் கேட்கவைக்கிறார்கள்.
இந்தத் தொடரில் நிறைய துணைக் கதைகள் இருக்கின்றன. சுந்தர் லால் – ஹூக்கும் சிங் என்ற இருவர் கதையைக் காட்டுகிறார்கள். இவர்கள் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி தலைவர்களாக இருந்து ஒருவரை ஒருவர் எதிர்க்கிறார்கள். ஆஷ்ரம் இவர்கள் இருவரையும் பகடைக் காய்களைப்போல் பயன்படுத்துகிறது எனக் காட்டுகிறார்கள். அந்தக் கதைகளில் திருப்பமோ சுவாரஸ்யமோ இல்லாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.
ஆஷ்ரமத்திற்குச் சொந்தமான இடத்தில் ஒரு பெண்ணின் சடலம் கிடைக்கிறது. அந்தப் பெண்ணின் கொலைக்கும் ஆஷ்ரமத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது என்பதுபோல் காட்டுகிறார்கள். மேற்கொண்டு உண்மைகளைக் கண்டுபிடிக்க மாறுவேசத்தில் செல்கிறார் இன்ஸ்பெக்டர் உஜாகர் சிங். அவருக்கு நடாஷா என்னும் மருத்துவர் உதவி செய்கிறார். மாறுவேசத்தில் சென்ற உஜாகர் சிங் ஆசிரம ரகசியம் தொடர்பான ஆவணங்களை எல்லாம் படம்பிடித்து வருகிறார். இவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்துவந்த அந்த ஆவணத்தை வைத்துக் கதையில் ஒன்றுமே செய்யவில்லை. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஒரு வசனத்தையும், தலித்துகள் எல்லாம் தகுதியில்லாமல் பதவிக்கு வந்து, அதிகாரிகளின் காலை நக்கி உயர்ந்த இடத்திற்குச் சென்றுவிடுகிறார்கள் என்ற பார்வையையும் உஜாகர் மூலம் முன்வைக்கிறார்கள்.
இப்படி எதுவுமே சரியில்லாத சீரியலைப் பார்த்துவிட்டு அதற்கு ஏன் விமர்சனம் எழுத வேண்டும் என்று கேட்கலாம். அதற்கான காரணங்கள் சில இருக்கின்றன. முதலில் இந்த சீரியலை ஏராளமான இளைஞர்கள் பார்த்திருக்கிறார்கள். எவ்வளவுதான் மோசமாகக் கழுவி ஊற்றினாலும், இந்தச் சீரியலைப் பார்க்கும் இளைஞர்களின் எண்ணிக்கைக் கூடிக்கொண்டே இருக்கிறது. அதற்கான காரணங்களை யோசிக்க வேண்டும் என்று தோன்றியது.
இந்த ஆஷ்ரம் சீரியலில் கடவுள் மனிதனின் (Godman) அதிகாரத்தையும், லீலைகளையும், ஆசைகளையும் ஓரளவு ஏற்றுக்கொள்ளும்படி பதிவு செய்திருக்கிறார்கள். நடிகர் ஜிதேந்தரின் மகன் பாபி தியோல்தான் பாபா நிராலாவாக நடித்திருக்கிறார். அவருடைய பார்வை, அமைதி, தேவப் பிரசன்னம் எல்லாம் பொருத்தமாக இருக்கின்றன. பாலியல் மற்றும் கொலைக் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்ட Gurmeet Ram Rahim Singh Insan என்பவரை ஞாபகப்படுத்துகிறார். அவருடைய தேரா சச்சா குழுவில் 70% தலித்கள் இருந்ததாகச் சொல்கிறார்கள். அதுபோல இந்தக் கதையில் வரும் பாபா நிராலாவும் தலித்களின் ஆதரவாளராக வருகிறார். ராம் ரஹிம் சிங் ஒரு பத்திரிகையாளரைக் கொன்ற வழக்கில் கைதானார். கைது செய்வதற்கு முன்பு தலித் மக்கள்தான் அவரைக் காக்கும் அரணாகச் செயல்பட்டார்கள். போலீஸாரை எதிர்த்துச் சண்டையிட்டார்கள். அந்தச் சண்டையில் சிலர் இறந்தார்கள். இந்தக் கதையில் ஒரு தலித் பெண்ணே பாபா நிராலாவை எதிர்த்து நிற்பதாகக் காட்டுகிறார்கள். “உனக்கான சமூக அந்தஸ்தைக் கொடுத்தது நான் தான். நீ எனக்குச் சொந்தம்தானே” என்று பாபா நிராலா பேசும்போது அவர் பக்கம் உண்மை இருப்பதுபோலத்தான் காட்டுகிறார்கள்.
இந்தக் கதையில் முக்கியமான கதாபாத்திரமாக வரும் பபிதா இளைஞர்களின் விருப்பத்திற்குரியவளாக இருக்கிறாள். பாலியல் தொழிலாளியாக இருந்த அவளை மீட்டு சத்தி லோச்சனுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள். அந்தக் காட்சி முற்றிலும் புதுமையாக இருக்கிறது. பாலியல் தொழிலாளியாக இருக்கும் பபிதா கையில் ஒரு எண்ணைக் கொடுக்கிறார். சத்தி லோச்சன் கையிலும் ஒரு எண்ணைக் கொடுக்கிறார்கள். ஒரே நேரத்தில் ஆயிரம் பேருக்குத் திருமணம் நடக்கிறது. ஒவ்வொருவரும் அதே எண்ணுள்ள இணையைக் கண்டுபிடித்துத் திருமணம் செய்துகொள்ள வேண்டும். அப்படித்தான் பபிதாவும் சத்தியும் சந்தித்துக்கொள்கிறார்கள். திருமணம் முடித்துக்கொள்கிறார்கள். இனிமையாக நாட்கள் போகின்றன. ஒரு நாள் பாபாவின் பார்வையில் பபிதா விழுகிறாள். அதன்பிறகு அவர்களுடைய வாழ்க்கை சிதைந்துபோகிறது.
ஆசிரமத்தின் நடைமுறையின்படி சத்தியின் ஆண்குறியை நீக்கிப் பதவி உயர்வு கொடுக்கிறார்கள். வேறிடத்திற்கும் அனுப்பிவிடுகிறார்கள். முதல்நாள் மயக்க மருந்து கலந்த லட்டைப் பபிதாவுக்குக் கொடுத்து பாபா உறவுகொள்கிறார். கட்டிய கணவனின் ஆண்மையை நீக்கிவிட்டார்கள். பாபாவின் ஆசை தன்மேல் விழுந்துவிட்டது. அவள் இதற்கு முன்பு எத்தனையோ ஆண்களைக் கடந்துவந்தவள். ஆசிரமத்தின் பாபாவிடம் எப்படி வாழ வேண்டும் என்பதை அவளுக்கு யாரும் சொல்லிக்கொடுக்க வேண்டிய தேவையில்லை. அடுத்த நாள் தன்னை அலங்காரம் செய்துகொண்டு அவளாகவே பாபாவைப் பார்க்கப் போகிறாள். பாபாவின் பணியாளர்களிடம், “பபிதா பாபாவின் தரிசனத்தைப் பெறுவதற்காக வந்தாள் என்பதைச் சொல்லுங்கள்” என்று சொல்லிவிட்டு வருகிறாள்.
அன்று இரவு பாபாவின் ஆட்கள் பபிதாவை அழைக்கிறார்கள். பாபாவின் அறைக்குப் பபிதா போகிறாள். பாபா வழக்கம்போல் மயக்க மருந்து கலந்த லட்டை பபிதாவுக்குக் கொடுக்கிறார். லட்டை ஒரு ஓரமாக வைத்துவிட்டு பாபாவே மயக்கமடையும் அளவுக்குப் பாலியல் நிறைவைத் தருகிறாள். அவள் கொடுத்த தேவ சுகத்தில் மயங்கி, அடுத்த நாள் ஆசிரமத்தின் தலைவியாக இருக்கும் சாத்வி மாதாவைச் சற்று நகர்த்திவிட்டு அந்த இடத்தில் பபிதாவை உட்கார வைக்கிறார் பாபா.
பபிதாவால் பாபாவைத்தான் மயக்கமுடியும். ஆனால் ஆசிரமத்தின் எல்லையை ஒருபோதும் கடக்கமுடியாது என்பதை நன்கு அறிந்திருக்கிறாள். அவளுக்கு நன்றாகத் தெரிகிறது, கணவன் சத்தியை இனி மீட்கவே முடியாது என்று. அவளுக்கு நன்றாகத் தெரிகிறது, கணவனின் தங்கையான பம்மியைப் பாபாவிடமிருந்து காப்பாற்றவே முடியாது என்று. ஆனால் ஆசிரமத்திற்குள் அவளுடைய அதிகாரத்தை விரிவாக்கிக் கொண்டே இருக்கிறாள். அரசியல் தொடர்புகளைக்கூடப் பெருக்கிக்கொள்கிறாள். பாபாவின் நன்னம்பிக்கையைப் பெறுகிறாள். அவளால் அதுதான் முடியும். பாபா என்ற ஆற்று நீரோட்டத்தில் போவது ஒன்றுதான் வழியே தவிர எதிர் நீச்சலடித்து முன்னேற வாய்ப்பில்லை என்று உணர்கிறாள். இதுதான் எதார்த்தம். இந்தச் சீரியலில் ஓரளவு அழகான பகுதி இருக்கிறது என்றால் அது பபிதா மட்டும்தான். பபிதா ஆடையைக் குறைக்கும்போதெல்லாம், பார்வையாளர்கள் மயங்கிவிடுவதால் ஆசிரம் சீரியல் உயிர்ப்போடு இருக்கிறது.
இந்த சீரியலில் திரைக்கதை உள்ளிட்ட எல்லாம் அபத்தமாக இருக்கின்றன என்றாலும், ஆசிரமம் என்ற புனிதத்தைக் கட்டுடைப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகவே பார்க்கிறேன். India: The Modi Question என்ற BBC Documentary வெளிவந்து சர்ச்சையைக் கிளப்பிவிட்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த சீரியலில் வரும் பாபா நிராலா சில சிந்தனைகளைக் கிளறிவிடுகிறார். ஆச்சாரங்களையும், மதக் கோட்பாடுகளையும் காக்க வேண்டியதுதான் ஆசிரமத்தின் வேலை. ஆனால் அந்த ஆசிரமத்தின் தலைவரே ஒழுக்கத்தின் எல்லா வரம்புகளையும் மீறுகிறார். அப்போதும் ஆசிரமத்தில் இருப்போர் பாபாவைக் குறைசொல்ல மறுக்கிறார்கள். அவரைக் காப்பாற்றத்தான் போராடுகிறார்கள். ஆசிரம ரகசியங்களைக் காக்க எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்கிறார்கள். கொலையும் செய்கிறார்கள். எல்லா மட்டத்து அதிகாரங்களையும் பயன்படுத்துகிறார்கள்.
பாபா நிராலாவைப் போலத்தான் மோடியும் எனக்குத் தெரிகிறார். கடந்த காலத்தில் நடந்த கொலைகளுக்கு அவர்தான் காரணம் என்கிறார்கள். அவருக்காக ஒரு பெண் துரத்தப்பட்ட செய்திகளைக்கூட பத்திரிகைகளில் படித்திருக்கிறோம். சுகபோகியாக இருக்கிறார். அவர்மீது ஆயிரம் குற்றச்சாட்டுகள் இருந்தாலும் மோடியின் பக்தர்கள் அவரைக் காப்பாற்றுவதில் குறியாக இருக்கிறார்கள். உலை வாயை மூட முடியும் உலகத்தின் வாயை மூட முடியாது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். என்றாலும், மூடிவிட முடியும் என்று போராடுகிறார்கள். அதற்காக உச்சபட்ச அதிகாரம் அனைத்தையும் பயன்படுத்துகிறார்கள். வலதுசாரிகளின் பலமே அதுதான். தங்கள்மீது சொல்லப்படும் எல்லாக் குற்றங்களுக்கும் எதிராக அவர்கள் வலிமையாகக் களமாடுவார்கள். அவர்களின் எதிரி ஜனநாயகவாதிகள் மட்டுமே. ஆனால் ஜனநாயகவாதிகளுக்கோ இன்னொரு ஜனநாயகவாதிதான் எதிரியாக இருப்பான். ஓர் இழிவான ஆசிரமம் மட்டுமில்லை, இந்திய நாட்டின் இழிவான தலைவரும் தொடர்ந்து வெற்றிபெறுவதற்கு ஒற்றுமையே காரணம். குற்றங்களை மறைப்பதில் காட்டும் ஒற்றுமை!