Ayali Web Series Episodes Leaked Online For Download on Isaimini - News Bugzகடந்த 2022ஆம் வருடம் ஜுலை மாத உயிர்மை இதழில், விலங்கு என்னும் தமிழ் வெப் சீரீஸ் பற்றி எழுதியிருந்தேன். அந்த எழுத்தின் இறுதியில் இப்படி எழுதியிருந்தேன்:
வெப் சீரீஸுக்குள் நாம் என்ன அரசியல் நிலைப்பாட்டில் இருக்கிறோம் என்பது முக்கியம். அயல்நாட்டு வெப் சீரீஸ்களில் மக்கள் சார்ந்த இடதுசாரி அரசியலைத் தங்கள் கதைகளுக்குள் அழகாகப் பொதித்து வைக்கிறார்கள். இந்தி சீரீஸ்களில் வலது சாரி அரசியலை அப்பட்டமாக ஆதரிக்கிறார்கள். ஆனால் தமிழ் சீரீஸ்களில் மட்டும் அரசியல் பார்வையே இல்லாமல் கடந்து போகிறார்கள். விலங்கு இதுவரை தமிழில் வந்த வெப் சீரீஸ்களில் ஒரளவுதரமான வெப் சீரீஸ்தான். ஆனால் நிறைவான வெப் சீரீஸின் வருகைக்காகத் தமிழ் நிலம் இன்னமும் காத்துக்
கொண்டுதான் இருக்கிறது.

தமிழ் நிலத்தின் காத்திருப்பை அயலி தமிழ்ச்செல்வி வந்து தீர்த்திருக்கிறாள். Zee5 OTT தளத்தில்தான் விலங்கு வெளிவந்தது. இப்போது அயலியும் அதே OTT தளத்தில் வந்திருக்கிறது. தமிழில் வெளிவந்த இரண்டு சிறந்த வெப்சீரீஸும் ஒரு தளத்தில் வெளியாகி இருக்கிறது என்றால் அந்த நிறுவனத்தில் இயங்கும் படைப்பு உருவாக்கக் குழு சிறப்பாகச் செயல்படுகிறது என்று பொருள்.

இந்தி வெப் சீரீஸ்களில் புதைந்து கிடக்கும் வலதுசாரி அரசியலை உயிர்மையில் வந்த விமர்சனங்கள் பலவற்றில் பதிவு செய்துள்ளேன். இந்தியில் என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனித்தால்தான் அயலியின் தமிழ் செய்த புரட்சியைப் புரிந்து கொள்ளமுடியும். மிர்ஸாப்பூர் என்ற வெப் சீரீஸில் தம்பி அண்ணனை நன்கு படிக்கச் சொல்வான். அதற்கு அண்ணன், “நல்லா படிச்சு மட்டும் என்ன புடுங்க போறோம். எப்பிடி இருந்தாலும் ரிஷர்வேசன் கோட்டாவுல வர்றவன் எல்லா சீட்டையும் எடுத்துக்குவான்” என்று பதில் சொல்வான். Aspirants என்ற வெப் சீரீஸில் உயர்சாதி பிராமணன் (சர்மா) பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சார்ந்த மாணவனைப் பார்த்து ““நீ இட ஒதுக்கீட்டுக்கு நன்றியைச் சொல், அதனால்தான் உனக்கு வாய்ப்பு கிடைத்தது. இல்லையென்றால் நீயெல்லாம் இந்தப் பதவிக்குத் தகுதியில்லாதவன் தெரிந்துகொள்.. உனக்குக் கேட்கிறதா…? உனக்குத் தகுதியே இல்லை. உனக்குக் கேட்கிறதா? இல்லை என்றால் உன் பக்கத்தில் வந்து சொல்கிறேன். நீ ஒரு செவிடன்” என்று சொல்வான்.

சென்ற மாதம் நான் உயிர்மையில் ஆஷ்ரம் என்ற வெப் சீரீஸ் பற்றி எழுதியிருந்தேன். அதில் ஒரு உயர்சாதி போலிஸ் அதிகாரி, ” IPS-சோட cut off mark, four seventy-ஆ (470) இருந்துச்சு. ஆனா(ல்) எனக்கு கிடைச்சது four sixty nine (469). ஒரே ஒரு mark…! எல்லாத்தையும் மாத்திருச்சு! ஆனா இந்தக் கீழ் சாதிக்காரங்க வெறும் 245 மார்க் எடுத்துட்டு SP Rank-ல உக்காந்துட்டு… எனக்கு ஆர்டர் போடுறாங்க! எங்க அப்பா ஒரு IPS… எங்க அண்ணன் ஒரு IPS… ஆனா(ல்) நான் ஒரு loser” என்று தன் காதலியிடம் புலம்புவான்.
இப்படியாக, சமூக நீதிக்கெதிராக, உயர்சாதி எண்ணங்களோடு எடுக்கப்படும் இன்னும் எத்தனையோ இந்தி வெப் சீரீஸ்களை உதாரணம் காட்டமுடியும். தங்கள் சீரீஸை யார் பார்க்கிறார்கள், எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்ற எண்ணம் எதுவும் இல்லாமல், தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராகவும், இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் இந்தி வெப் சீரீஸ்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அதுபோன்ற சீரீஸ்களுக்கு ஆதரவான நிறுவனங்களும் அங்கு மிக அதிகம்.
அதற்கு நேர் எதிராக அரசியல் உணர்வே இல்லாமல் உப்பு சப்பில்லாத ஹாரர், மர்டர் கதைகளைத்தான் தமிழில் வெப் சீரீஸ் என்ற பெயரில் எடுத்துவருகிறார்கள். தமிழ் சீரீஸ்களின் தயாரிப்பும் அபத்தமாக இருக்கும். நம் நிலம் சார்ந்த கதையைச் சரியாகத் தேர்ந்தெடுக்காதவரையில் இந்தி சீரீஸ்களோடோ, வெளிநாட்டு சீரீஸ்களோடோ போட்டி போடமுடியாது என்பதுதான் உண்மை.

அந்த வகையில், தமிழ் நிலம் சார்ந்த படைப்பாக மட்டுமில்லாமல் தமிழ் நிலத்திற்கே உரிய படைப்பாகவும் அயலி வந்திருகிறது. இப்போதுதான் முதன்முறையாக ஒரு தமிழ் வெப்சீரீஸை உலகமே திரும்பிப் பார்க்கிறது. தமிழின் அடையாளம் சனாதனத்துக்கு எதிரான சமூக நீதியின் குரல் என்பதை அயலி உரத்துப் பேசுகிறது.

இதுவரை வெப் சீரீஸ் பற்றி எழுதும்போதெல்லாம், ‘இந்த வெப்சீரீஸைப் பலர் பார்த்திருக்கமாட்டார்கள்’ என்று நினைத்தே எழுது
வேன். முதன்முறையாக பலரும் பார்த்துவிட்ட அயலியின் கதையைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்கிறேன். இப்போதுவரையிலும் அயலியைப் பார்க்காதவர்களுக்கு இது ஒரு புரிதலைக் கொடுக்கும்.

கி.பி. 14ஆம் நூற்றாண்டு. “பசுமையாகவும் அழகாகவும் இருந்த அந்தப் பனையூர் கிராமத்தில், அயலின்னு ஒரு குல தெய்வம் இருந்துச்சு. அயலி ஒரு கன்னி தெய்வம்’ன்றதால ஆண்கள் கோயில் எல்லைய தாண்டி உள்ள போக அனுமதி கிடையாது. பெண்கள் மட்டும்தான் உள்ள போகமுடியும். அதுலயும் வயசுக்கு வராத பெண் குழந்தைகள் மட்டும்தான் அயலிய தொட்டு வணங்க முடியும். அயலியோட அருளாள செழிப்பாவும் மகிழ்ச்சியாவும் இருந்த அந்தப் பனையூர் கிராமத்துல, பக்கத்தூர் இளைஞன் ஒருத்தன் தேனெடுக்க வந்தான். அதுல ஒரு துளித்தேன் சிதறி பனையூர் கிராமத்துப் பெண்மேல விழ! காதல் வந்திருச்சு. இந்த உலகத்தையே மறந்து அவங்க காதலிச்சிட்டிருந்தப்ப ‘ஊரு கட்டுப்பாட்ட மீறிட்டோமே’ அப்பிடிங்கிற ஞாபகமே அவங்களுக்கு வரல. ஊர்மக்களோட கோபத்துக்கு பயந்த காதலர்கள் ஊரவிட்டே ஓடுனாங்க. அந்த சம்பவத்துக்குப் பிறகு பனையூர் கிராமத்துல நிறைய பிரச்சனைகள் வந்துச்சு. வயல்கள் சாம்பலாயிருச்சு. மீன்கள் செத்து மிதந்துச்சு. ஆடுமாடுக எல்லாம் செத்து விழுந்துருச்சு. எல்லாத்துக்கும் மேல அம்மை நோய் பரவிச்சு. பனையூர் கிராமம் வாழவே தகுதியற்ற இடமா மாறிருச்சு. அந்தப் பொண்ணு பண்ணுன தப்பாலதான் ஆத்தா நம்மள எல்லாம் தண்டிக்கிறாள். இனிமேலும் இங்க இருந்தா நாமலும் அழிஞ்சுருவோம்னு பயந்து ஊரவிட்டே போக முடிவெடுத்துட்டாங்க. புதுக்கோட்டை பக்கம் வீரபண்ணை கிராமத்துக்கு வந்தாங்க. அம்மனோட கோபத்தாலதான் நம்ம ஊரே அழிஞ்சிருச்சு, இனிமேலும் அது நடக்கக்கூடாதுன்னா பெண் குழந்தைங்க வயசுக்கு வந்த உடனேயே கல்யாணம் பண்ணி வைக்கனும்னு உறுதியா முடிவெடுத்தாங்க. பெண் குழந்தைகளும் என்னைக்குமே பழக்கவழக்கத்த மீறமாட்டோம்னு சத்தியம் பண்ணிக் குடுக்க ஆரம்பிச்சாங்க. 500 வருசம் ஆகியும் வீரபண்ணை கிராமத்து மக்கள் அந்தப் பழக்க வழக்கத்த மாத்திக்கவே இல்ல” என்ற முன்னுரையோடு கதை தொடங்குகிறது.

Web Series Review - Ayaliஇப்போது 1990, அந்த வீரபண்ணை ஊரில் பள்ளிக்கூடம் இருக்கிறது ஆனால் பெண்கள் வயதுக்கு வந்ததும் படிப்பை நிறுத்திவிடுவார்கள். உடனடியாகப் பெண்களுக்குத் திருமணமும் செய்துவைத்துவிடுவார்கள். இந்தச் சூழலில், தவசி குருவம்மாள் தம்பதியருக்குப் பிறந்த தமிழ்ச்செல்வி என்னும் சிறுமி, படிப்பில் சிறந்தவளாக இருக்கிறாள். தன் படிப்புக்குத் தடையாக எது வந்தாலும் அதை உடைத்துவிட வேண்டும் என நினைக்கிறாள். அதனால் அவள் பூப்படைந்ததை மறைக்கிறாள். இதற்காக அயலி தெய்வம் தன்னை தண்டிக்கும் என நினைக்கிறாள். தெய்வம் தண்டிப்பதாகத் தெரியவில்லை. ‘படிப்பது ஒரு குற்றமா? எந்த தெய்வம் படிக்கக் கூடாது என்று சொல்லும். சாமி நம்மள காப்பாத்துறதுக்குத்தான இருக்கு. கொல்றதுக்கா இருக்கு?’ என யோசிக்கிறாள். சாமி, சடங்கு, பாரம்பர்யம் என்பதெல்லாம், பெண்கள் தங்கள் கையை மீறிப் போய்விடக்கூடாது என்பதற்காக ஆண்கள் போட்டு வைத்த வேலி என்பதை உணர்கிறாள். தன் வளர்ச்சிக்குத் தேவையான பகுத்தறிவைத் தன் அனுபவத்திலிருந்து வளர்த்துக்கொள்கிறாள். தமிழ்ச்செல்வியின் செயலுக்கு முதலில் அம்மா தடையாக இருந்தாலும், பின்னர் துணையாக இருக்கிறாள். பத்தாம் வகுப்பில் மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கிறாள். அவளுடைய வளர்ச்சி அந்த ஊரில் உள்ள மற்ற சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் ஊக்கமளிக்கிறது. அடுத்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பெண்கள் பலர் படிப்பதற்குத் தமிழ்ச்
செல்வி போட்ட விதையே ஆதாரமாகஇருந்தது என்று சீரீஸை முடித்திருக்கிறார்கள்.

அயலி என்ற புனைவு தெய்வத்திற்குள் பெரியாரையும் அம்பேத்கரையும் உறுத்தாமல் புகுத்தியிருக்கிறார்கள். “அயலி வெப் சீரீஸ் முழுக்க பெரியாரும் அம்பேத்கரும் நிறைந்திருக்கிறார்கள். ஆனால் எந்த இடத்திலும் புகைப்படமாகவோ, சிலையாகவோ அவர்கள் இடம்பெறவில்லை. பெரியாரும் அம்பேத்கரும் வெறும் அடையாளங்கள் இல்லை. சமூக மாற்றத்திற்கான உயிரோட்டங்கள்” என அயலியின் இயக்குநர் முத்துகுமாரும் சொல்கிறார்.

அயலியைப் பற்றி இந்து தமிழ்திசையில் வந்த விமர்சனத்தில், “(வீரபண்ணை கிராமத்தில்) பருவம் எய்தியவுடன் பெண்களுக்கு உடனே திருமணம் என்கின்ற விநோத நடைமுறை இருக்கிறது” என எழுதியதைப் படித்தபோது எனக்குச் சிரிப்புதான் வந்தது. அயலி பற்றிய இந்த விமர்சனம் எழுதியவர் இப்போதிருக்கும் கிராமங்களைப் பார்க்காதவர் போல என்று நினைத்துக்கொண்டேன். வயதுக்கு வந்த பெண்ணின் படிப்பை நிறுத்தி, உடனடியாகத் திருமணம் செய்துவைக்கும் வழக்கம் தமிழகத்திற்குப் புதிதில்லை. ஏன் இந்தியத் துணைக்கண்டத்திற்கே புதிதில்லை. குழந்தைத் திருமணம், இளம் விதவைகள் ஆகியோரின் அவலங்களைக் குறித்துப் பாரதியாரும் எழுதியிருக்கிறார். 1921-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஒரு வயதுக்கு கீழ் மட்டும் 597 விதவைகள் இருந்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
எனவே, அயலி போன்ற தெய்வங்கள் வந்துதான் பெண்களின் படிப்பைக் கெடுத்துத் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. ஏற்கனவே நாடு அப்படித்தான் இருக்கிறது. நான் கல்லூரியில் பணியாற்றுவதால் கூடுதலாக ஒரு செய்தியைக் கூற
முடியும். இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு மூவலூர் ராமாமிர்தம் கல்வி உதவித் தொகை வழங்குவதால் லட்சக்கணக்கான மாணவிகள் பன்னிரண்டாம் வகுப்பை முடித்த பிறகு கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்கள். இல்லை என்றால் திருமணம் முடித்து குழந்தைப்பேறுகூட அடைந்திருப்பார்கள்!

சாதி, மத, சடங்கு, சம்பிரதாயங்களைக் காக்க நினைக்கும் மக்கள் அதன் அத்தனை பாரங்களையும் பெண்கள் மீதுதான் இறக்கி வைக்கிறார்கள். இவை பழமைவாதிகளின் (conservative) செயல்பாடுகள். பழமைப் பற்றாளர்கள் விதியை உருவாக்குவார்கள். அந்த விதியை இம்மியும் பிசகாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு பெண்களுடையதாகும். இதை வழிநடத்துவதாகக் காட்டிக்கொள்ளும் ஆண்கள் கடுமையாக நடந்து
கொள்வார்கள். அவர்களைப் பெண்கள் எதிர்த்துப் போராடுவது மிகக் கடினம். எதிர்த்தாலும் கொல்லப்படுவார்கள். நாட்டில் நடக்கும் பேரிடர்களுக்குக்கூட பெண்களின் நடத்தைதான் காரணம் என்பார்கள்.

எனக்கு அயலியைப் பார்க்கும்போது இங்க்மர் பெர்க்மெனின் The Seventh Seal என்ற படம் ஞாபகத்துக்கு வந்தது. கி. பி. 14ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் கடுமையான பிளேக் நோய் பரவியது.

மக்கள் கூட்டம் கூட்டமாக இறந்தனர். The Seventh Seal என்ற படம் அந்தக் காலகட்டத்தில் நடப்பதாகக் காட்டப்படும். இதில் முதன்மைப் பாத்திரமாக வரும் ஆண்டனியோஸ் ப்ளாக் என்பவனும் மரணமும் படம் முழுவதும் சதுரங்கம் விளையாடிக்கொண்டிருப்பார்கள். சதுரங்கத்தில் தோற்றால் ஆண்டனியோஸை மரணம் அழைத்துச் செல்லும். வென்றால் ஆண்டனியோஸை விட்டுவிட்டு மரணம் சென்றுவிடும். மரணத்தை

யார் வெல்ல முடியும்? என்பதுதான் கதை.

ஒரு பெண்ணை வண்டியோடு கட்டிவைத்திருப்பார்கள். ‘பிளேக் நோய் பரவுவதற்கு அவள்தான் காரணம். அவள்மேல் சாத்தான் இறங்கியிருக்கிறது’ என்று ஒரு கிறித்தவ பாதிரியார் சொல்லியதை நம்பிய மக்கள் அவளைக் கட்டி வைத்திருப்பார்கள். ஆண்டனியோஸ் அவளிடம் சென்று பேசும் அந்த உரையாடல் உலகப் புகழ்பெற்றது.

ஆண்டனியோஸ்: நீ சாத்தானோடு சேர்ந்துகொண்டு எல்லாக் கெடுதல்களையும் செய்கிறாயா?
அவள்: எதற்குக் கேட்கிறாய்?
ஆண்டனியோஸ்: நானும்கூட அந்தச் சாத்தானைப் பார்க்க வேண்டும்!
அவள்: ஏன்?
ஆண்டனியோஸ்: நான் அவனிடம் கடவுளைப் பற்றிக் கேட்க வேண்டும். சாத்தானுக்குக் கடவுளைப் பற்றி நன்கு தெரியும்.
அவள்: நான் சொல்வதைச் செய்… என் கண்களைப் பார்…
(ஆண்டனியோஸ் அவள் கண்களைப் பார்க்கிறான். அதன்பிறகு ஆண்டனியோஸிடம் அவள் கேட்கிறாள்)
அவள்: நல்லது, என்ன பார்த்தாய்… அவனைப் பார்க்க முடிந்ததா?
ஆண்டனியோஸ்: நான் உன் கண்களில் கடுமையான சோகத்தைத்தான் பார்த்தேன், வேறு ஒன்றும் இல்லை.
அவள்: இல்லையா…? யாரையும் பார்க்கவில்லையா?
ஆண்டனியோஸ்: இல்லை.
அவள்: ஆனால் சாத்தான் எனக்குள் இருக்கிறான். அவன் எனக்குள் இருக்கிறான் என்பதால் நெருப்பு என்னைத் துன்புறுத்த முடியாது!
ஆண்டனியோஸ்: அவன் சொன்னானா?
அவள்: எனக்குத் தெரியும்…. அவன் எங்கு இருக்கிறான் என்பதை உன்னாலும் பார்க்கமுடியும். உன்னால் நிச்சயம் பார்க்க முடியும். எனக்குள் இருக்கும் சாத்தானை எந்தக் கஷ்டமும் இல்லாமல் அந்தக் கிறித்தவப் பாதிரியாரால் பார்க்க முடிகிறதே! அந்தக் காவலர்களால் பார்க்கமுடிகிறதே! அவர்கள் சாத்தானுக்கு அஞ்சி இருக்கிறார்கள். அதனால் என்னைத் தொடுவதற்குக்கூட தைரியமில்லாமல் இருக்கிறார்கள்!
பின் அவளை உயிரோடு எரிப்பார்கள். எங்கோ ஓர் இடத்தில் பிளேக் நோய் வர யாரோ ஒருத்தியை தண்டிப்பார்கள். உலகெங்கும் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநியாங்கள் எல்லாம் தெய்வங்களின் பெயராலேயே நிகழ்த்தப்படுகின்றன. பெண்களைக் கட்டுக்குள் வைக்க கடவுள் ஒன்றே போதுமானது. தேவை எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அவள் அறிவைப் பெற்றுவிடக்கூடாது. அறிவைத் தரக்கூடிய இடம் கல்வி. அதை மறுத்தால் போதும். பெண் ஆணின் கட்டுப்பாட்டிலேயே இருப்பாள்.

இந்த அயலியில் வரும் தமிழ்ச்செல்வி தன் தோழியிடம் ”நாம எப்ப பள்ளிக்கூடத்துக்குப் போகக்கூடாதுன்னு சொல்றாங்க” எனக் கேட்பாள். “நாம வயசுக்கு வந்தப்பின்னால” என்பாள் தோழி கயல். “இல்ல நாம எப்ப கோயிலுக்குப் போகக்கூடாதுன்னு சொல் றாங்களோ அப்ப இருந்து…! நம்ம ஊர்ல பள்ளிக்கூடத்துக்குப் போகணும்னா முதல்ல கோயிலுக்குள்ள போகணும்!” என்பாள் தமிழ்ச்செல்வி. நேரடியாகவும் குறி
யீடாகவும் இந்த வசனம் உணர்த்தும் கருத்துகள் பிரமிப்பானவை.

அயலியில் சொல்லப்படும் அரசியல் கடவுள் சிலையை உடைத்து நாத்திகத்தைக் கட்டமைக்கும் மேலோட்டமான அரசியல் இல்லை. முதலில் பெண்களும், மறுக்கப்பட்டவர்களும் கோயிலுக்குள் நுழையவேண்டும். அவர்கள் நுழைந்தால் அடுத்த கட்டமாக தெய்வம் அந்த இடத்தைவிட்டு ஓடி ஒழியும். சாதி, சமயம்,சடங்கு எல்லாம் கூடவே ஓடிப்போகும். எதன் பெயராலும் அறிவுக்குத் தடைபோட முடியாது. அதன்பிறகு பெண்ணை அடிமைபடுத்த முடியாது. இதைக் கதையோட்டம் சற்றும் கெடாமல் அழகாகச் சொல்லியிருக்கிறார்கள். அயலி பேசும் இந்த அரசியலை இதுவரை எந்தத் திரைப்படமும் இவ்வளவு தெளிவாக அழகாகச் சொன்னதில்லை.

அயலியின் இயக்குநர் முத்துகுமார், “அரசியல் பேசியே ஆகவேண்டும் என் பதற்காக இதை நான் எழுதவில்லை. குழந்தை திருமணத்தால் பெண்ணின் கல்வி தடைபடுகிறது. காரணம் யோசிக்கும் போது சாதி, மதம், பாரம்பர்யம், பண்பாடு எல்லாமும் வருகின்றன. அதுவே அரசியல் கதையாக மாறிவிட்டது” என்று ஒரு நேர்காணலில் சொல்கிறார்.

பெண்கல்வி என்ற நூலைக் கையில் பிடிக்கவைத்து பெரியாரின் கலகக் குரலைக் கதைமுழுவதும் பரப்பியிருக்கிறார்கள். ஒரு நல்ல கதை கிடைக்கும்போது மற்ற எல்லாமே நன்றாக அமைந்துவிடும். அதுபோல இந்தக் கதைக்கு அற்புதமான நடிகர்கள் கிடைத்திருக்கிறார்கள். ஒருமுறைக்கு இருமுறை இந்த சீரீஸைப் பார்த்தப் பிறகு அவர்கள் நம்முடைய உறவினர்கள் போல ஆகிவிட்டார்கள். தமிழ்ச்செல்வியாக நடித்திருக்கும் அபி நட்சத்திரா, குருவம்மாளாக நடித்திருக்கும் அனுமோல், மைதிலியாக வரும் லவ்வின் சந்திரசேகர் மேலும் முக்கிய கதாப்பாத்திரங்களாக வரும் அருவி மதன், புதுகை பூபாளம் ஜெகதீஸ், லிங்கா, ஜென்சன் எனப் பலரை இந்த சீரீஸைப் பார்த்த பிறகு
அடையாளம் கண்டுகொண்டேன். ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங்க் போன்ற தொழில்நுட்பத்திலும் அயலி சிறந்து நிற்கிறது.
மிக முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது கதை, திரைக்கதை, வசனம். வீணை மைந்தன், சச்சின், முத்துகுமார் இணைந்து எழுதியிருக்கிறார்கள். அவர்களுடைய உழைப்பு ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது. குறிப்பாக வசனங்கள் எல்லாம் பெரியாரும், அம்பேத்கரும் மத்தாப்பைக் கொளுத்திப்
போட்டு விளையாடுவதுபோல அவ்வளவு அற்புதம். இணையத்தைத் திறந்தாலே அயலியின் வசனங்கள் நிறைந்திருப்பதைக் காணலாம். சொல்லவேண்டுமென்றால் படத்தின் எல்லா வசனங்களையும் சொல்லவேண்டும். இருந்தாலும் என் மனத்திற்குப் பிடித்த வசனங்களை இங்கேபகிர்கிறேன்.

யார் என்ன சொன்னாலும் உன் அறிவுக்கு எது சரி’ன்னுபடுதோ அத செய். நான் என்ன தனியாவா யோசிக்கிறேன்? இவங்கதான் இப்பிடி யோசிக்க வைக்கிறாங்க. மேடைன்றது பேசுறதுக்கு மட்டுமில்ல. வழிநடத்துறதுக்கும்தான். நீ சத்தமா பேசணும்னு அவசியம் இல்ல. உண்மைய பேசுனா போதும் நாம கோயிலுக்குள்ள போற அன்னைக்கு அவுங்க சாமியவே வெளிய தூக்கி வீசிருவாங்க. அயலியே சொன்
னாலும் “நீயும் பொம்பளதான”ன்னு அவளையும் அடக்கி வச்சிருவாங்க ஒங் கௌரவத்த காப்பாத்தணும்னா ஒண்ணு நீ சாகணும். இல்ல ஒம் பொண்ண கொல்லணும். உங்களுக்கு இதவிட்டா வேற தெரியாதுல்ல.

குடும்ப கௌரவத்த காப்பாத்துறேன்னு தன் சொந்த மகளையே கொல்ற எத்தனையோ அப்பனுங்க இருக்காங்க இந்த ஊர்ல. ஆனா பல பொண்ணுங்களோட வாழ்க்கைய சீரழிச்ச ஆம்பள பையன எந்த அப்பனாவது கொல பண்ணதா கேட்டிருக்கீங்களா?

தமிழகத்தின் அயலியின் தாக்கம் நேர்மறையானது. எனக்குத் தெரிந்து எதிர்மறையான விமர்சனம் ஒன்றைக்கூட பார்க்கவில்லை. அயலியைப் பார்த்த பிறகு சிலர் கல்விக்காகத் தாங்கள் போராடியதை இணை யத்தில் பதிவிட்டிருந்தார்கள். அதில் ரேவதி சதிஷ் என்பவரின் பதிவு பரவலாக அனைவராலும் பாராட்டப்பட்டது:

அயலி பார்த்திட்டிருந்தப்ப பத்தாப்புக்கு முன்னாடியே கல்யாணம் காட்சியெல்லாம் வர்றப்ப எட்டாம்’ப்படயோ ஒம்பதாம்’ப்பபோட நானும் முடிச்
சிருக்கணும்… பீடி சுத்தி படிக்க வைச்ச அம்மாவுக்கு அதுக்கு மேல தெம்பும் இல்ல திராணியும் இல்ல. ஆனா பத்தாப்பு படிக்க அனுப்புனா புள்ள கல்யாணத்துக்கு கவர்மெண்ட்டு காசு தருவாங்கன்னு எங்கம்மா படிக்க அனுப்புனாங்க. அதுல தொடர்ந்த கல்வி பயணம் இன்னைக்கு எம்.எஸ்சி. முடிச்சி நர்சிங் ஆபிசர்னு வந்து கவுரவமா அம்மாவையும் என்னையும் நிப்பாட்டிருக்கு. அயலி ஒரு பக்கம் பழைய நினைவுகளைக்கிளறிட்டிருந்தப்ப இன்னொரு பக்கம் முக்தார் வியன்னரசு இண்டர்வியூல கலைஞர் பேனா கையெழுத்து போட்டதை வாசித்துக்கொண்டிருந்ததைப் பார்த்தபோது மளுக்கென கண்ணீர் தளும்பியது. ஏன்னா அந்தக் கையெழுத்துலதான் நானும் பத்தாப்பு
வரை வந்திருந்தேன். அரசியல் வேற யாருக்கோ என்பது போன்ற மனநிலையில் இருந்தவளுக்கு ‘கலைஞரின் பேனா’ போட்ட திட்டமில்லாதிருந்தால் பள்ளிக்கூடம் போயிருப்பேனா, நானும் பேனா பிடிச்சிருப்பேனா என்பதே சந்தேகம்தான். கலைஞரின் கையெழுத்தில் என் வாழ்வெழுத்து உறுதியானது என்பதில் மிகையில்லை. அம்பாள் என்றைக்குடா பேசினாள்? என கேள்வியெழுப்பிய பேனா இதெல்லாம் நமக்கு விளம்பரப்படுத்திச் சொல்லாமல் அமைதியாக மரணித்துக்கொண்டதா? இதெல்லாம் தெரிந்தாலும்கூட மவுனமாக கடக்கும் நமது மனசாட்சிதான் செத்துவிட்டதா? பேனா என்ன செய்யும்? என்பதற்கு எடுத்துக்காட்டாக உலகம் முழுக்க உதாரணங்கள் இருக்கலாம்; நம்மிடம் இருக்கும் பேனாவை உலகமெங்கும் சொல்ல வேண்டியது வரலாற்றுக் கடமை இல்லையா?”
என்ற பதிவு ரத்தமும் சதையும் தோய்ந்த தமிழ் நிலத்துப் பெண்கல்வி வரலாற்றை என்றென்றைக்கும் பேசும். இதுபோன்ற விமர்சனத்தை வேறு வெப் சீரீஸ்கள் வாங்குமா என்பது சந்தேகமே!

Ayali Trailer out: ZEE5's latest highlights the importance of women's  education- Cinema expressஇப்படி நிறைகள் நிறைய இருந்தாலும் இரண்டு குறைகளையும் சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது. முதலாவது, குறை என்றுகூட சொல்லமுடியாது. சற்றே மெனக்கெட்டிருந்தால் எடிட்டிங்கில்கூட இந்தத் தவற்றைத் திருத்தியிருக்கலாம். மைதிலி நிறைமாத கர்ப்பினியாக இருக்கும் காட்சிக்கு அடுத்து பத்தாம் வகுப்பு ஹால் டிக்கெட் வாங்குகிறாள் தமிழ்ச்செல்வி. அதற்கடுத்து சிறிது நேரத்திலேயே மைதிலியின் கணவன் இறக்கிறான். கையில் ஒரு குழந்தை, வயிற்றில் மூன்றுமாத குழந்தை எனக் காட்டி காலக் குழப்பம் ஏற்படுத்துகிறார்கள். என்றாலும் மூன்று பூவைத் தரையில் போட்டு, “இப்ப என்னம்மா பண்ணனும்? என்ன பண்ணனும்னு சொல்லு!” எனக் கேட்டு அழுகும் லவ்வின் சந்திரசேகர் நடிப்புக்கு முன்னால் இந்தக் குறையெல்லாம் நம் கண்ணீரில் கரைந்துபோய்விடுகிறது.

இரண்டாவதாக, ஓர் இளைஞர் “மாமா பொண்ணு இருக்குன்னு சொல்லவே இல்ல?” என்கிறான். அதற்கு அந்தப் பெரியவர், “முட்டாப்பயலே முறைகெட்டு பேசுற நான் உன் சித்தப்பன்’டா!” என்கிறார். “எங்கம்மா வகையில நீ எனக்கு மாமன்.” என்கிறான் இளைஞன். “உன் அப்பன் வகையில நான் சித்தப்பன்” என்கிறார் பெரியவர். அதே போல இன்னொரு இடத்தில் ஊர்த் தலைவர் (சிங்கம்புலி) மூர்த்தி என்னும் ஆசிரியரைப் பார்த்து, “இவன் என்னடா என்னை ஒருநாள் மாமாங்கறான். ஒரு நாளைக்கி அண்ணேங்கிறான். ஒரு நாளைக்கி தலைவனே’ங்கிறான். கடவுளு நிறை போதையா இருக்கும்போது இவன தயாரிச்சு பூமிக்கு அனுப்பியிருக்காரு” என்கிறார்.

இரண்டுமே நகைச்சுவைக்காக வைக்கப்பட்ட காட்சிகள் என்றாலும், வீரபண்ணை, அயலி, கட்டுப்பாடு, கல்விமறுப்பு போன்றவை தமிழகம் தழுவிய பிரச்சனையின் குறியீடுகள் என நினைத்துவரும்போது, இந்த இரண்டு காட்சிகள் ‘புதுக்கோட்டையைச் சுற்றி, உண்மையிலேயே அண்ணன் தங்கை முறையில் திருமணம் முடிக்கும் இனக்குழு இருக்கிறதோ’ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. ஒருவேளை வெறும் நகைச்
சுவைக்காக இந்தக் காட்சிகள் வைக்கப்பட்டன என்று இருந்தாலும் தவிர்த்திருக்கலாம் என்பதே என் கருத்து.

அயலி போன்ற கதையை இன்றைய தமிழக அரசு பாராட்டாது போய்விடுமா என்ன? “பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்திய அயலி இன்றைய தொடரின் இயக்குநரை பாராட்டினேன்” என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாராட்டியிருக்கிறார். “அயலி பார்த்தேன். தமிழகத்தின் வரலாறே உருவாகி இருக்கிறது. எல்லோரும் கல்வி பயிலும் வாப்பினை உருவாக்கியது திராவிட மாடல் தான்” என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வாழ்த்தியிருக்கிறார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி இயக்குநர் முத்துகுமாரை வாழ்த்திப் பெரியார் சிலையைப் பரிசளித்திருக்கிறார்.

என்றாலும், எனக்கு ஒரு மனக்குறை உண்டு. பராசக்தியின் பேரன்கள் நினைத்தால் அயலி போன்ற ஆயிரம் ஆயிரம் படங்களை எடுக்க முடியும். அவர்கள் தொலைக்காட்சி நிறுவனங்களில் சோடா பீம்களும், பால கணேஷ்களும் வருவதற்குப் பதில் பெரியார் தாத்தாவையும், அம்பேத்கர் மாமாவைவும் வரவைக்க முடியும். ஆனால் பாருங்கள் பெரியார் அண்ணா கலைஞர் கருத்துகளைப் பேசும் அயலி என்ற தமிழ்த் தொடரை உருவாக்கியது ஒரு வட இந்திய நிறுவனம்.! என் கேள்வியெல்லாம், பராசக்தி பேனா நாளை கடலில் நின்று இந்த முரணை எப்படி எழுதும்?

sankarthirukkural@gmail.com