தற்போது இந்திய ஒன்றியத்தின் ஆளும்கட்சியான பாரதிய ஜனதா கட்சி, இந்தியாவில் தேசிய இனங்களே இல்லை என்று ஒரேயடியாக மறுத்திடும் அமைப்பு. ஒரே தேசம், ஒரே தேசிய இனம், ஒரே மதம் கொண்ட நாடு பாரதம் என்ற கருத்துடையவர்கள் அவர்கள். இந்தியா என்ற சொல்லையும்கூட சொல்வதற்கு மறுப்பவர்கள். இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய முஸ்லிம் லீக் என, இந்தியா தழுவி கட்சி நடத்தும் பலரும் “இந்தியா” என்று சொல்வர். பாஜக மட்டும் “பாரதம்” என்றே உச்சரிக்கும். கட்சியின் பெயரும் இந்திய ஜனதா கட்சி அல்ல. பாரதிய ஜனதா கட்சிதான். இந்தியா என்பது வரலாறு சார்ந்த சொல்லாடல். பாரதம் என்பது புராணம் சார்ந்த சொல்லாடல். இப்போது ஆன்ட்டி இந்தியன்ஸ் யாரென்றும் நீங்கள் யூகித்துக் கொள்ளலாம்.
பா.ஜ.க. கருத்துப்படி ஒரே தேசிய இனம் என்று பார்த்தால் தமிழினம் என்ற ஒன்று இல்லை என்ற அபத்தமான முடிவுக்கு வர
வேண்டியிருக்கும். இந்த அபத்தங்களை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தியா பல தேசிய இனங்களைக் கொண்ட நாடு. அப்படியானால் ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தை தேசிய இனம் என்று எதை வைத்து நிர்ணயிப்பது? தொடர்ச்சியான ஒரு நிலப்பரப்பில், ஒரு பொது மொழியும், பொதுப் பொருளாதார வாழ்வும், பொதுப் பண்பாடும், அப்பண்பாட்டில் உருவான உளவியல் உருவாக்கமும் கொண்டு, வாழ்ந்து, வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரு சமூகமே ஒரு தேசம். தமிழகத்தில் வாழும் மக்கள் ஒரு தனி தேசிய இனம். குறிப்பிட்ட நிலப்பரப்பு, பொது மொழி உள்ளிட்ட அனைத்தும் தமிழ் இனத்திற்கு உண்டு. கேரளம், ஆந்திரா, அசாம் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் இந்த இலக்கணம் பொருந்தி வருகிறது. எனவே, பல்வேறு தேசிய இனங்கள் சேர்ந்து வாழும் நாடாக இந்தியா திகழ்கிறது.
தேசிய இனங்களிடம் தேசியம் என்ற கருத்து ஒரு உணர்வாக எழுகிறது. அதாவது, ஒரு தேசிய இனத்தவரிடம் நமது மக்கள் நம்மவர் என்ற மனப்பான்மை நிலைத்திருக்கிற நிலையே தேசியம் எனப்படுவது.இத்தேசிய உணர்வை ஒன்று திரட்டி மாநில ஆட்சி அதிகாரத்தை திராவிட இயக்கம் தமிழகத்தில் கைப்பற்றியது.
இதேபோன்று பல நாடுகளில் தேசிய உணர்வுகளைப் பயன்படுத்தி பல இயக்கங்கள் மக்கள் செல்வாக்கு பெற்றன. அதாவது, முதலாளித்துவ பொருளுற்பத்தி முறை வளர்ந்த நிகழ்வோடு இணைந்ததாக தேசிய இனங்களின் வளர்ச்சி அமைந்தது. ஆனால், சேர, சோழ, பாண்டியர் காலங்களில் தனித் தனி நாடுகளாக இன்றைய தமிழகம் பிரிந்திருந்த சூழலில் நமது மக்கள் நம்மவர் என்ற தேசிய மனப்பான்மை இருக்கவில்லை.
தேசம், தேசிய இனம், தேசியம் என்பதெல்லாம் பிற்காலத்தில் எழுந்த கருத்தாக்கங்கள். முதலாளித்துவ சகாப்தம் தொடங்குவதற்கு முன்பு, இப்போது தேசியம் எனப் பேசப்படுகிற உணர்வு நிலை எழவில்லை. நிலப்பிரபுத்துவ சமூகத்தில் மக்கள் தங்களை, தங்களது கிராமங்கள், பகுதிகள், பிரதேசங்களைச் சார்ந்தவர்களாக மட்டுமே அடையாளப்படுத்திக் கொண்டனர். முதலாளித்துவம் பெரும் பொருளாதார மாற்றத்தை நிகழ்த்தியது. ஒரு உள்நாட்டு சந்தையை உருவாக்கியதால், நாட்டு அரசுகளின் கீழ் மக்கள் உள்வாங்கப்பட்டு, தேசம் சார்ந்த குடிமகன்களாக மாறினர். இவ்வளர்ச்சிப் போக்கு வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமாக நடைபெற்றது.
ஐரோப்பாவில் முதலாளித்துவ வளர்ச்சி வேகமாக நடைபெற்றபோது நாட்டு அரசுகளின் உருவாக்கம் அதையொட்டி நிகழ்ந்தது. முதலாளித்துவமும், நிலப்பிரப்புத்துவமும் ஒருங்கே இயங்கி வந்த ஆசிய நாடுகளில் நாட்டு அரசுகளின் உருவாக்கம் வேறு விதமாக நடைபெற்றது. ஒவ்வொரு நாட்டுக்கும் இதையொட்டி தனி வரலாறு உண்டு. அது ஒரு தனி ஆய்வு. எனினும் முதலாளித்துவ வளர்ச்சியே தேசிய அரசுகளின் உருவாக்கத்திற்கு வித்திட்டது என்பது பொதுவான உலக அனுபவம். முதலாளித்துவ லாப வேட்டைக்கு விரிந்து பரந்த சந்தை தேவை. இந்த ஒருங்கிணைந்த சந்தை தேவைக்காக மக்களின் தேசிய இன உணர்வுகளை முதலாளித்துவம் பயன்படுத்திக் கொள்கிறது. ஜார் மன்னன் ஆட்சியின்போது ரஷ்யாவில் வளர்ந்து கொண்டிருந்த முதலாளித்துவம், நாடுதழுவிய சந்தை வேண்டும் என்பதற்காக, ரஷ்ய இன
மேலாதிக்க வெறியை வளர்த்து, இதர தேசிய இனங்கள் ஒடுக்குமுறைக்கு ஆளாகி இருக்கும் சூழலை நிலைநிறுத்தியது. ரஷ்ய அல்லாத இதர இனங்களின் தேசிய எழுச்சியை அது அடக்குமுறை கொண்டு அடக்கி, ரஷ்யாவை பல தேசிய இனங்களின் சிறைக்கூடமாக நீடிக்கச் செய்திட கடும் முயற்சி மேற்கொண்டது.
தோழர் லெனின் தலைமையில் புரட்சி நடைபெற்று கம்யூனிஸ்ட் ஆட்சி வந்த பின்புதான், தேசிய இனங்களுக்கு சமத்துவம் கிடைத்தது. ஆனால், இந்தியாவில் வேறான நிலைமை இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அன்று வளர்ந்து வந்த இந்திய தேசிய உணர்வுகள் வளர்ந்து வலுப்பெற்று, அது விடுதலை இயக்கமாக மலர்ந்தது. பிரிட்டிஷ் ஆட்சியின் ஆதிக்கத்தில் இருந்ததால் சந்தை, லாப வாய்ப்புக்கள் பிரிட்டிஷ் முதலாளித்துவத்திற்கு சாதகமாக இருந்தது. இந்திய உள்நாட்டு முதலாளித்துவம் அவற்றைத் தனக்குரியதாக்கிக் கொள்ள முயற்சித்தது. இதன் காரணமாக உள்நாட்டு முதலாளித்துவம் விடுதலை இயக்கத்தை ஆதரித்தது. காங்கிரஸ் தலைமையிலான தேசிய இயக்கத்திற்கு முதலாளிகள் பக்கபலமாக இருந்தனர். இதே இந்தியப் பெரு முதலாளித்துவம் விடுதலைக்குப் பிறகு மொழி வழி மாநிலம் என்ற தேசிய இன எழுச்சி ஏற்பட்டபோது, தங்களது விரிந்து பரந்த, நாடு தழுவிய சுரண்டலுக்கும், சந்தை வாய்ப்புகளுக்கும் ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சத்தால் அந்த எழுச்சியை அடக்கி ஒடுக்கினர்.
மக்கள் போராட்டத்தால் அக்கோரிக்கை வெற்றி பெற்று மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. அதாவது முதற் கட்டத்தில் இந்தியா என்ற தேசிய உணர்வு சார்ந்த ஒற்றுமையை இந்திய முதலாளித்துவம் ஆதரித்தது. இரண்டாவது கட்டத்தில், மாநில அளவில் உருவான தேசியத்தை அது எதிர்த்தது. எனவே, முதலாளித்துவம் தனது மூலதனக் குவியலை மையமாகக் கொண்டு தேசிய இன எழுச்சியை நிராகரிக்கிறது அல்லது தேசிய இனங்களுக்கிடையே இன வெறியைக் கிளப்பி அதனைப் பயன்படுத்திக் கொள்கிறது. உழைக்கும் மக்களிடம்
தனது மேலாண்மையை தக்க வைத்துக் கொள்ள, முதலாளித்துவத்திற்குப் பயன்படும் முக்கியமான சித்தாந்தக் கருவி தேசிய இனவெறி. கடந்த பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்து வரும் வரலாறு இது. தேசிய உணர்வுகளைத் தனது ஆதாயத்திற்கு முதலாளித்துவம் பயன்படுத்தி இன மோதல்களையும், இன வன்முறையையும் தூண்டி ஒற்றுமையைக் குலைக்கிறது.
இந்தியச் சூழலில் மாநில முதலாளிகளும், நிலப்பிரபுக்களும் பிராந்திய உணர்வுகளைச் சுரண்டல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். “முதலாளித்துவத்தை வீழ்த்தி, பாட்டாளி வர்க்கம் வெற்றி பெறுவது, ஒடுக்கப்பட்ட தேசங்களின் விடுதலைக்கான திறவுகோல்”. என மார்க்ஸ் எழுதினார். எனவே வருண, வர்க்க அடக்குமுறைக்கு ஆளானவர்கள் கிளர்ந்தெழுந்து அதிகாரத்தைக் கைப்பற்றுவது தேசிய இனப்பிரச்னை தீர்வதற்கான வழியாக அமைந்துள்ளது. பார்ப்பனீயம் எனும் வருண அடக்குமுறைக்கும், முதலாளித்துவம் எனும் வர்க்க அடக்குமுறைக்கும் எதிராகப் போராட வேண்டும் என்றார் அண்ணல் அம்பேத்கர். பல தேசிய இனங்கள் வாழும் ஒரு நாட்டில், அந்த இனங்களிடையே முழுச் சமத்துவம் இல்லாத நிலை இருந்தால், அந்நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய ஒன்றாகத் தேசிய இனப் பிரச்னை உள்ளது. இந்தியா இதற்கோர் உதாரணம். இன்னமும் இந்தியாவில் சமத்துவம் எட்டப்படவில்லை. ஒரு இனமோ, பல இனங்களோ, சிறப்புச் சலுகைகள், உரிமைகள் கொண்டிருப்பதும், இதர இனம் அல்லது இனங்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வரும் நிலையும்
ஒரு நாட்டில் இருந்தால் அங்கு தீர்க்கப்பட வேண்டிய பிரச்னையாக தேசிய இனப் பிரச்சனை உள்ளது.
தேசிய இனப் பிரச்சினைக்கு இறுதி இலக்கு எது? எந்த தேசிய இனத்துக்கும் சிறப்பு அந்தஸ்து அல்லது உரிமைகள் என்பது அகன்று, அனைத்து இனங்களும் சம உரிமை, சம அந்தஸ்து பெற்று வாழுகிற ஒரு சமுதாயம் அமைவதுதான் இறுதித் தீர்வு. இது பொருளாதாரச் சமத்துவத்திற்கான போராட்டத்தோடு இணைந்தது. இந்த இலக்கை அடைய உழைக்கும் மக்கள் தேசிய இனப் பிரச்சினை குறித்த கோரிக்கைகளை எழுப்பிப் போராட வேண்டும். பண்பாடு, மொழி, கலை உள்ளிட்ட அம்சங்கள் முற்போக்கான கோரிக்கைகளை முன்னிறுத்தி மக்களைத் திரட்ட வேண்டும். ஒரு நாட்டின் உழைக்கும் மக்கள், மொழியால், பண்பாட்டால் வேறுபட்டிருக்கலாம். ஆனால், முதலாளித்துவத்தால் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகும் வர்க்கங்கள் எனும் வகையில் உலகத் தொழிலாளி வர்க்கங்கள் ஒரே தன்மை கொண்டவர்கள். சுரண்டலிலிருந்து விடுதலை என்ற பொது நோக்கம் கொண்டவர்கள். வர்க்கம் என்றால் வேறொன்றுமல்ல. ஒரே நிலையில் உள்ள கூட்டம் என்று பொருள்.
பல சமயங்களில் பிரிவினைக் கோரிக்கைக்கு பின்னணியாக இருப்பது இன வெறி. ஒரு தேசிய இனம் சார்ந்த
மக்களுக்கு எதிராக மற்ற இன மக்களைத் தூண்டிவிட, ஆளுகிற முதலாளித்துவத்திற்கு இனவெறி பயன்படுகிறது. தேசிய ஒடுக்குமுறை எந்த வடிவில் இருந்தாலும், உலகின் எந்த மூலையில் நிலவினாலும் அதனை உழைப்பாளி மக்கள் எதிர்க்க வேண்டும்.
உலக உழைக்கும் மக்களோடு இணைந்து இந்த எதிர்ப்பினை வலுப்படுத்த வேண்டும். இனப்பிரச்சனையை அணுகுவதில் சர்வதேசப் பார்வை முக்கியமானது. ரஷ்ய நிலைமைகளில் தேசிய இனப்பிரச்னைக்கு தீர்வாகப் பிரிந்து போகும் உரிமை உள்ளிட்ட சுய நிர் ணய உரிமையைத் தனது திட்டத்தில் முன்வைத்தார் லெனின். இது ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்டு வந்த ரஷ்ய அல்லாத தேசிய இனங்களுக்கு பெரும் நம்பிக்கையை ஊட்டியது. அவர்கள் போல்ஷ்விக் கட்சியின் மீதும், புரட்சியின் மீதும் நம்பிக்கைவைத்தனர். அனைத்து தேசிய இனங்களின் உழைக்கும் மக்களின் ஒற்றுமை மூலம் புரட்சி வெற்றி பெற்றது. எனவே, சுயநிர்ணய உரிமை என்பது நாட்டைத் துண்டாட எழுப்பப்பட்ட கோரிக்கை அல்ல.
இந்தக் கோரிக்கை எழுப்பப்பட்டபோது, இது பிரிவினைக்கு இட்டுச் செல்லும் என்ற விமர்சனம் எழுந்தது. விவாகரத்து சட்ட உரிமையை உதாரணமாகக் காட்டி லெனின் வாதிட்டார். விவாகரத்தை அனுமதிக்கும் சுதந்திரம், குடும்ப உறவுகளை அழிக்க ஊக்கமளிக்கும் என்று சொல்வது முட்டாள்தனமானது என்றார் லெனின். ரஷ்யாவில் போல்ஷ்விக் கட்சியின் செயல் திட்டத்தை லெனின் உருவாக்கினார். அதில், எல்லா தேசங்களிலும், நிலவும் அனைத்து வகை தேசிய வெறிகளை எதிர்த்து வெற்றிகரமாக நடத்த வேண்டிய போராட்டத்தை அவர் வலியுறுத்தினார். அவரே இதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். லெனின் ரஷ்ய தேசிய இனத்தில் பிறந்தவர். ரஷ்ய இனம் சார்ந்தோரிடம் நிலவும் ரஷ்ய இனவெறியை கண்டிக்க அவர் எப்போதும் தயங்கியதில்லை.
இந்திய தேசிய இனப்பிரச்னையை எவ்வாறு அணுக வேண்டும்?
தேசிய இனப்பிரச்சனையை தனித்துப் பார்ப்பது சரியானது அல்ல. ஜனநாயக அரசு அமைப்பதின் பிரிக்க முடியாத பகுதி. “ஜனநாயகம் என்பது சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ நிலைநிறுத்தப்படுவதல்ல. ஜனநாயகம் என்பது எல்லோரும் கூடி வாழும் வாழ்க்கை
முறை” என்றார் அண்ணல் அம்பேத்கர். தேசிய இன உரிமைகளுக்கான போராட்டம் பொதுவான புரட்சிகரப் போராட்டத்துடன் இணைந்தது. தேசிய சமத்துவத்திற்கான போராட்டத்தை நடத்துகிறபோது, எந்த முனையிலிருந்து தேசிய வெறி எழுந்தாலும், அதனை எதிர்த்து உறுதிமிக்க, ஊசலாட்டமில்லாத நிலை எடுக்க வேண்டும். ஹிந்தி மொழியை ஒரே மொழி எனச் சொன்ன போது நடத்தப்பட்ட போராட்டங்கள் ஹிந்தி மொழி எதிர்ப்பல்ல. ஹிந்தி திணிப்புக்கான எதிர்ப்புதான். இந்தியதேசியம் எனும் வகையில் ஒன்றிய அரசின் மையப் படுத்தப்பட்ட அதிகார மேலாதிக்கத்திற்காக பெரு முதலாளிகளின் குரலாக செயல்படுகிற கட்சிகளின் தேசிய வெறியை எதிர்க்க வேண்டும். அக்கட்சிகளின் தேசியம் இந்நாட்டின் பல தேசிய இனங்களின் இருப்பையே அங்கீகரிக்கவில்லை.
பா.ஜ.க.வின் இந்து தேசியம் எனும் கருத்து,
மதம் சார்ந்து தேசிய இனத்தை வரையறுக்கிறது. இதனால் தனித்தனி தேசியப் பண்பாடுகளை அது நிராகரிக்கிறது. அத்துடன், சிறுபான்மையினரின் பண்பாட்டையும் நிராகரிக்கிறது. பல தேசிய இனங்களையே மத அடிப்படையில் பிளவுபடுத்தும் தன்மை
கொண்டது. அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களுக்கும், அவரவர் சமூக வாழ்க்கை முறைகளை, நாட்டின் ஜனநாயக அரசியல் சாசன விதிமுறைகளுக்கு உட்பட்டு, பின்பற்றும் உரிமை உண்டு. ஆனால், பா.ஜ.க. இந்த உரிமையை மறுக்கிறது. எனவே, சங் பரிவாரத்தின் தேசியம் பற்றிய பார்வை, ஒற்றுமைக்கும், தேசிய இனங்களின் ஜனநாயக உரிமைக்கும் எதிரானது. மறுபுறம், இந்தியப் பொருளாதாரத் தளத்தில்,பெரு முதலாளிகளுக்குப் போட்டியாக, தங்களை வலுப்படுத்திக் கொள்ள பிராந்திய முதலாளித்துவம் முயற்சிக்கிறது. இதற்கு அவ்வப்போது தேசிய வெறியைப் பயன்படுத்திக் கொள்கிறது. மாநில சுயாட்சிக்காக உழைக்கும் மக்கள் குரலெழுப்ப வேண்டும். அத்துடன் கீழ்மட்ட உள்ளாட்சி அமைப்புகள் வரை அதிகாரம் பரவலாக்கப்பட்டால்தான் தமிழினக் குடிமக்கள் ஒவ்வொருவரும் சம உரிமை கொண்டவர்களாக வாழ முடியும். பல தேசிய இன மக்கள் உழைப்பாளிகள் என்ற வகையில், நாடு தழுவிய அளவில் மொழி, பண்பாட்டு, இன உரிமைகளுக்காகத் திரளும் போது இனச் சமத்துவம் சாத்தியமாகும்.
தற்போதைய நிலையில் இந்திய தேசிய இனப்பிரச்னை மூன்று குறிக்கோள்கள் கொண்டது.1 அனைத்து மொழிகளுக்கான சமத்துவம், 2.மத்திய-மாநில உறவுகள் சீரமைத்தல், 3.நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பல பகுதிகளுக்கிடையே உள்ள சமச்சீரற்ற நிலை மாறி சமமான வளர்ச்சி. இவை 75 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் நீடிக்கின்றன. இம்மூன்று அம்சங்களை மையமாக வைத்து மக்கள் இயக்கம் வளர்க்கப்பட வேண்டும். மூன்றாவது அம்சமாக சொல்லப்பட்ட சமச்சீரற்ற வளர்ச்சி, உலகமயம், தாராளமயம், தனியார்மயம் எனும் பெருமுதலாளித்துவ, கார்ப்பரேட் வளர்ச்சிப்பாதை ஏற்படுத்திய விளைவு, இந்திய ஆளும் வர்க்கக் கொள்கைகளை எதிர்த்த ஒன்றுபட்ட போராட்டமே தேசிய இனப்பிரச்சனைக்கான ஜனநாயகத் தீர்வாக அமையும்.
தேசிய இனப்பிரச்சனைகளை ஏகாதிபத்தியம் எவ்வாறு கையாள்கிறது என்பதை நினைத்துப் பார்ப்பது அவசியம். 1950- 60களில் காலனிய ஆதிக்கம் உலகளவில் தகர்க்கப்படும் காலத்திற்கு முன்பு, தேசிய இனப்போராட்டங்களுக்கு, அவை பெரும்பாலும் காலனிய எதிர்ப்பு இயக்கங்களாகவும் அமைந்த நிலையில், ஒரு வலுவான ஏகாதிபத்திய எதிர்ப்பு உள்ளடக்கம் இருந்தது. ஆனால், அதற்குப்பின் வளரும் நாடுகளுக்கு எதிரான வகையில் ஏகாதிபத்தியம் பல தேசிய இன எழுச்சிகளை தூண்டி விட்டது. வளரும் நாடுகளில் சிலவற்றைப் பலவீனப்படுத்தும் நோக்குடன் இந்நாடுகளில் பிரிவினை வாத இயக்கங்களை ஆதரித்தது. அவற்றிற்கு பண மற்றும் ஆயுத உதவி அளித்தது. இப்பின்னணியில், பல தேசிய இன உணர்வு அடிப்படையிலான இயக்கங்கள் முற்போக்கு உள்ளடக்கத்தை இழந்து, ஏகாதிபத்திய நலன்களுக்கு சாதகமாக செயல்படும் நிலை ஏற்பட்டது. ஆப்பிரிக்காவில், காலனி ஆதிக்கத்தை எதிர்த்த தேசிய இனப் போராட்டங்களை உடைக்க, குழு-இனப் பிரிவினை வாதங்கள் கிளப்பி விடப்பட்டன. சோவியத் யூனியனுக்கும், சோசலிசத்திற்கும் எதிராகவும், இச்செயல்பாடுகள் ஏகாதிபத்தியத்தால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. இந்திய நாட்டில் வடகிழக்கு மாநிலங்களிலும், சீனாவில் திபெத் பகுதியில் பிரிவினைவாத சக்திகளைக் கிளப்பி விடுவதிலும் ஏகாதிபத்தியத்தின் பங்கு பெருமளவில் இருந்தது.
எழுபது ஆண்டுகள் ஒன்றுபட்ட நாடாக இருந்த யூகோஸ்லேவியா, குரோஷியா, ஸ்லோவினியா, போஸ்னியா என துண்டு துண்டான நாடுகளாக பெரும் ரத்தக் களறிக்கு இடையில் பிரிந்தன. இன மோதல்களில் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். மக்கள் தங்களிடயே போரிட்டு கொடூரமாகச் சாகும் நிலையை ஏகாதிபத்தியவாதிகள் தங்கள் சுயநலத்திற்காக ஊக்குவித்தனர்.
இனவெறியும், ஏகாதிபத்திய தூண்டுதலும் சேர்ந்தால், பேரழிவு ஏற்படும் என்பதற்கு ஒரு உதாரணம் யூகோஸ்லேவியா. அமெரிக்க ஏகாதிபத்தியம் அங்கு தனது அரசியல், பொருளாதார, ராணுவ மேலாதிக்கத்தை நாட்டுப்பிரிவினை மூலம் வலுவாக உறுதிபடுத்திக் கொண்டது. இதேநிலையை தெற்காசியப் பிராந்தியத்தில் ஏற்படுத்த அவர்கள் விரும்புகின்றனர். சீனாவை மட்டுப்படுத்த இந்தியாவைப் பகடைக்காயாக பயன்படுத்துவது உள்ளிட்ட பல தந்திரங்களைக் கையாள்கின்றனர்.
தேசிய இனக் கோரிக்கைளை முதலாளித்துவத்தின் பார்வையிலிருந்து அல்லாமல், உழைக்கும் மக்களின் கோணத்தில் அணுகுவதே சரியானது. இனம் சார்ந்த கலை, இலக்கியம், இசை, மொழி, பண்பாடு என அனைத்துத் துறைகளிலும் முற்போக்கான கோரிக்
கைகள் உருவாக்கப்பட வேண்டும். அந்தக் கோரிக்கைகளுக்காக மக்கள் திரண்டிட வேண்டும். முதலாளித்துவம் இனக் கோரிக்கைளை முன்னிறுத்தி மக்களைத் தனது வசம் கைப்பற்றி கொள்ளும் என்ற வரலாற்று அனுபவம் இங்கு ஏராளமாய் இருக்கிறது. அதை உடைத்தெறிந்த வரலாறும் இங்கு இருக்கிறது. தேசிய இனம் சார்ந்த பிரச்சனையில் இத்தகைய அரசியல் பின்னணியுடன் தமிழ்நாட்டில் தேசிய இனக் கோரிக்கைகளை எழுப்புவர்களை அணுக வேண்டும்.
முதலாளித்துவம் எப்பொழுதெல்லாம் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை முற்றாகச் சூறையாடி, அவர்களை வாழ்வா, சாவா என்ற நெருக்கடிக்குத் தள்ளுகின்றதோ, அப்பொழுதெல்லாம் முதலாளி வர்க்கம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தேசிய வெறியையும், இனவெறியையும் கைக்கொள்ளும் என்பதுதான் உலக வரலாறு. எந்த ஒரு பாசிச சித்தாந்தமும் அதற்கான சமூகத் தேவை இல்லை என்றால், அது வெகுமக்களிடம் எடுபடாது என்பது பொதுவான கருத்தாக இருந்தாலும், அது துளிர்விட்டு முளைக்கும் போதே அதை சித்தாந்த ரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இல்லாமல் பலவீனமாக இருந்தோம் என்றால், பாசிசம் மெல்ல மெல்ல அதிருப்தியின் மீது படர்வதை நம்மால் தடுக்க முடியாமல் போய்விடும். இன்று அப்படியான ஒரு போக்குதான் தமிழகத்தில் சீமானின் வடிவில் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றது.
சீமானின் கடந்த கால அரசியல் நிலைப்பாடுகளையும், தற்போதைய அரசியல் நிலைப்பாடுகளையும் ஒப்பிட்டுப் பார்த்து விமர்சனம் செய்வது என்பது, மலத்தை குச்சிவிட்டுக் கிளறி ஆராய்ச்சி செய்வதைவிட அருவருப்பானது என்பதாலும், ஏற்கனவே சமூக வலைதளங்களில் சீமானின் இரட்டை நாக்குப் பேச்சுகள் குறைவின்றி கிடைப்பதாலும், அதைக் கிளறிப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. அவரது நோக்கம்தான் என்ன?
”பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான தமிழ் மண்ணை; இது பெரியார் மண், அண்ணாவின் பூமி என்று சொல்லி, ஐம்பது ஆண்டுகளுக்குள் தமிழகத்தைச் சுருக்குவதை எப்படி ஏற்றுக் கொள்வது? இந்த மண்ணில் சித்தர்கள் வாழ்ந்திருக்கிறார்கள், யோகிகள் இருந்திருக்கிறார்கள், சேர சோழ பாண்டியர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். தீரன் சின்னமலை நிலம் இது. மருதுபாண்டியர் வீரம் தெறிந்த மண் இது. இப்படி எத்தனையோ பெருமை இருக்கும்போது பெரியார் மண் என்று அடக்குவது தவறு. பெண் விடுதலைக்குப் பெரியார் மட்டும்தான் போராடினாரா? சாதி ஒழிப்புக்குப் பலரும் போராடி இருக்கும்போது ஒருவரை மட்டும் அடையாளப்படுத்துவது தவறு’’ என்பதே அவர் சுற்றிச் சுற்றிப்பேசும் பேச்சின் உள்ளடக்கம்.
சீமானின் இப்பேச்சைக் கேட்கும் யாரும் “அப்படி என்ன சீமான் தப்பாகப் பேசிவிட்டார், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தனக்கென தனித்த வரலாறும், பண்பாடும் கொண்ட ஒரு மண்ணை பெரியாரின் மண் என்று சொல்வது தப்புதானே, அதைத்தானே சீமானும் சொன்னார்” என்று குறுக்கித்தான் பார்ப்பார்கள். ஆனால் சீமானின் இப்பதிலுக்குள் ஒளிந்திருப்பது அப்பட்டமான இனத் துவேசம் என்பதைத் தாண்டி, சீமான் கட்சி நடத்துவதே இந்த மண்ணில் வேர்விட்டு விழுதுகளாக இறங்கி இருக்கும் பெரியார் என்ற மாபெரும் சிந்தனையாளரின் கருத்துக்களை ஒழித்து, பார்ப்பனீய சித்தாந்தத்தை தமிழர்கள் மீது திணிப்பதற்கான முயற்சிதான் என்பது புலப்படும். சீமானின் ஒரே நோக்கம் இம்மண்ணின் தனித்த பண்பாக அடையாளம் காணப்படும் பார்ப்பன எதிர்ப்பு மரபை எப்படியாவது ஒழித்துக் கட்டிவிட்டு, அந்த இடத்தில் பார்ப்பனீயத்தை குடியமர்த்துவதுதான். அதற்காகத்தான் இன்று சீமான் எல்லாமுமாகத் தன்னை காட்டிக் கொள்கிறார்.
திராவிடக் கட்சிகளின் மேல் உருவாக்கப்படும் வெறுப்பால், இளைஞர்கள் பலர் மாற்று அரசியல் சிந்தனையைத் தேடி நகர்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை முற்போக்கு அரசியலின் பக்கம் சென்றுவிடாமல், அதற்கு அணைபோட்டு தடுக்கும் தந்திர அரசியலை சீமான் கையில் எடுத்திருக்கின்றார். இளைஞர்கள் பார்ப்பனீயப் பாசிசத்தின் வெறுப்பு அரசியலைப் பார்த்து பெரியாரின் பக்கம் போகின்றார்கள் என்றால் பி.ஜே.பி.க்கு எதிராகவும், சாதிக்கு எதிராகவும் சில வார்த்தைகளைப் பேசுவார். அவர்கள் இடதுசாரி மார்க்சிய அரசியலின் பக்கம் போகின்றார்கள் என்றால் கொஞ்சம் ஊறுகாயாக பொதுவுடமையையும், சேகுவேராவையும் தொட்டுக் கொள்வார். வலதுசாரிப் பாசிசத்தால் கவரப்படுகின்றார்கள் என்றால் முப்பாட்டன் முருகன், மாயோன் போன்றவற்றைக் கலந்து முன் வைப்பார். இப்படித்தான் சீமான் தன்னுடைய அரசியலை சமீப ஆண்டுகளாகக் கட்டமைத்துக் கொண்டிருக்கின்றார்.
மாற்று சிந்தனை கொண்ட ஒரு புரட்சிக்காரன் போன்று உச்சக்குரலில் பேசினாலும், தான் கட்சி ஆரம்பித்த பிரதான நோக்கத்தைத் தவற விடாமல், அந்த மையப் புள்ளியைச் சுற்றியே தனது பார்ப்பன அடிமை அரசியலைக் கட்டமைத்துக் கொண்டு இருக்கின்றார். அதன் வெளிப்பாடுதான் இம்மண்ணை எப்படி பெரியார் மண் என்று சொல்லலாம், பெரியார் மட்டும்தான் பெண்களுக்கு ஆதரவாகப் பேசினாரா என்பது போன்ற பிதற்றல்கள். சீமான் உண்மையில் தமிழ் தேசியம் பேசும் நபராக இருந்தால், கடந்த 2000 வருடத் தமிழர்கள் வரலாற்றில் பெண்ணுரிமைக்காகப் பேசிய, அவர்களைப் போராட்ட களத்திற்குக் கொண்டு வந்த, அவர்களுக்கான உரிமைகளைத் தன்னுடைய போராட்டத்தின் மூலம் பெற்றுக் கொடுத்த ஒரு நபரையாவது மேற்கோள் காட்டி, ‘இவர்கள் எல்லாம் பெண் உரிமைக்காகப் பேசியவர்கள்’ என்று நேர்மையாக சொல்லிவிட்டு, அவர்களோடு பெரியாரை ஒப்பிட்டு ‘பெரியார் ஒன்றும் பெரிதாகப் பேசவில்லை’ என்று சொல்லி இருந்தால் அவரின் நேர்மையை நாம் பாராட்டலாம். ஆனால் போகிற போக்கில் அவதூறு செய்வது என்பது பாசிஸ்ட்கள் கடைபிடிக்கும் வழிமுறையாகும்.
கடந்த இரண்டாயிரம் ஆண்டு தமிழர்கள் வரலாற்றில் பெண்கள் மிக இழிவாக நடத்தப்பட்டார்கள் என்பதும், தமிழ் இலக்கியங்களில் பெண்களின் அடிமைத்தனமே அவர்களின் சிறப்பான குணங்களாகப் புகழப்பட்டன என்பதும், சீமான் போற்றும் சேர, சோழ, பாண்டியர்கள் அனைவருமே பெண்களைக் கோயிலில் தேவதாசிகளாக வைத்திருந்தார்கள் என்பதும் தானே உண்மை. உலகம் போற்றும் அறச் சிந்தனைகளை அளித்த திருவள்ளுவர்கூட “தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை” என்று சொல்பவராகத்தானே இருந்தார்.
இதைச் சீமான் ஏற்றுக் கொள்வாரா? இதை ஏற்றுக் கொண்டு ஓவ்வொரு பெண்ணுக்கும் சோதனை வைத்தால் என்னாவது? கம்பன் என்ன செய்தான் தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தித் தானே பாடல் எழுதினான்.
யாராவது ஒரு தமிழ் மன்னன் சாதிக்கு எதிராகப் போராடினான், பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்தான் என்று சொல்ல ஏதாவது ஒரு ஆதாரம் இருக்கின்றதா? இன்று சீமான் பெருமையாக சொல்லிக் கொள்ளும் மன்னர்கள் உண்மையில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் தஞ்சைப் பெரிய கோயிலில் 400க்கும் மேற்பட்ட பெண்கள் தேவரடியார்களாக பணியமர்த்தப்
பட்டனர் என்ற செய்தியை தஞ்சைப் பெரிய கோவில் வட வெளிச்சுற்றுச் சுவரில் உள்ள தளிச்சேரிக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இப்பெண்களுக்கு மணம் புரியும் உரிமை கிடையாது. இப்பெண்கள் அர்ச்சகர்களின் ஆசைக்குட்பட்ட வைப்பாட்டிகளாகவும் விளங்கினர். இப்படி தமிழ் மன்னர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தத் தேவதாசி முறை மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டி அவர்களின் முன்முயற்சியால் தான் ஒழிக்கப்பட்டது என்பதையும், அதற்குத் தமிழ்த் தேசியவாதிகளின் முன்னோர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர் என்பதும்தான் வரலாறு.
ராஜராஜன் பார்ப்பனீயத்தின் ஊதுகுழலாக இருந்தது மட்டும் அல்லாமல், தாழ்த்தப்பட்ட மக்களை மிகவும் கேவலமாக நடத்தினான். அவனது ஆட்சிக் காலத்திலேயே தாழ்த்தப்பட்ட மக்கள் தனிக் குடியிருப்புகளில் அதாவது ஊருக்கு வெளியே குடிவைக்கப்பட்டனர். பெரிய கோவில் கல்வெட்டுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்த பகுதிகளைக் குறிக்கும் விதமாக பறச்சேரி, தீண்டாச்சேரி என்கிற பெயர்கள் குறிப்பிடுவதில் இருந்தே இதைத் தெரிந்து கொள்ள முடியும். எந்த ஒரு தமிழ் மன்னனும் சாதியை ஒழிக்கப் போராடவில்லை. சோழர்கள் மற்றும் தமிழகத்தின் குறுநில மன்னர்கள் பார்ப்பனர்களைக் கொண்டு வேத வேள்விகள் செய்தும், இரணிய கர்ப்பதானம், துலாபார தானம் போன்றவைகள் செய்தும், தங்களை சூத்திர அந்தஸ்தில் இருந்து மாற்றிக் கொள்ள முயற்சிகள் மேற்கொண்டாலும், அவர்களால் சத்திரியர்கள் ஆக முடிய
வில்லை என்பதையும் வரலாற்றுக் குறிப்புகள் காட்டுகின்றன. ஆனால் அவர்கள் தமிழ் மக்கள் சார்ந்த குலத்தவர்கள் என்பதிலிருந்து மாறி, சந்திர குலத்தவர், சூரிய குலத்தவர் என்று பெயர் சூட்டிக் கொள்ளப் பார்ப்பனர்கள் உதவி புரிந்தனர். மன்னர்கள்தான் பார்ப்பன அடிமைகளாக, ஆணாதிக்கவாதிகளாக இருந்தார்கள், சரி, சீமான் குறிப்பிடும் சித்தர்கள்தான் ஏதாவது பெண் உரிமை சம்மந்தமாக குரல் கொடுத்து இருக்கின்
றார்களா எனப் பார்த்தால் அருவருப்பு உணர்வுதான் ஏற்படுகின்றது. பாம்பாட்டிச் சித்தர் சொல்கிறார்:
செண்டுமுலை வண்டுவிழி கொண்ட தோகையைச்
சித்தப்பால் விழுங்கிய சீயென்று ஒறுத்தோம்:
குண்டுகட்டெ ருமையேறுங் கூற்றுப் பருந்தைக்
கொன்றுதின்று விட்டோம் நாம் என்று ஆடு பாம்பே!(51)
வட்டமுலையென்றுமிக வற்றுந் தோலை
மகமேரு என்று உவமை வைத்துக் கூறுவார்
கெட்ட நாற்ற முள்ளயோனிக் கேணியில் வீழ்ந்தார்
கெடுவர் என் றேநீர் துணிந்து ஆடுபாம்பே!(52)
மலஞ்சொரி கண்ணைவடி வாளுக் கொப்பாக
வருணித்துச் சொல்வார்மதி வன்மை இல்லாதார்:
குருநலம் பேசுகின்ற கூகை மாந்தர்கள்
கும்பிக்கே இரையாவர் என்று ஆடுபாம்பே!(53)
என்று பாடுகின்றார். இன்னும் பல படிகள் மேலே போய் பட்டினத்தார் என்ற சித்தர்,
“சீறும் வினையது பெண்ணுருவாகித் திரண்டுருண்டு
கூறு முலையும் இறைச்சியுமாகிக் கொடுமையினால்
பீறு மலமும் உதிரமுஞ்சாயும் பெருங்குழிவிட்டு
ஏறுங் கரைகண்டிலேன் இறைவாகச்சி ஏகம்பனே”
“பெண்ணாகி வந்ததொரு மாயப்பிசாசம்
பிடித்திட்டென்னைக்
கண்ணால் வெருட்டி முலையால்மயக்கிக் கடிதடத்துப்
புண்ணாங் குழியிடைத் தள்ளியென் போதப்
பொருள்பறிக்க
எண்ணா துனைமறந்தேன் இறைவாகச்சி ஏகம்பனே”
என்றும் கூறுகிறார்.
இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று சீமானைப் பெரிய பெண்ணியப் போராளியாக நினைக்கும் பெண் தோழர்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இன்னும் சங்க இலக்கியங்கள் தொடங்கி பார்ப்பன பக்தி இலக்கியம் வரை எப்படி சாதியையும், பெண்ணடி
மைத்தனத்தையும் இந்த மண்ணில் உரம் போட்டு வளர்த்தன என்று நம்மால் விலாவாரியாக எழுத முடியும். இது எல்லாம் சீமான் அறியாததும் அல்ல.
அவரின் காழ்ப்புணர்வுக்கு முக்கிய காரணம், பார்ப்பனீயம் தமிழகத்தில் வேர்கொள்ள முடியாமல், அதை தடுத்துக் கொண்டிருக்கும் பெரியாரிய சிந்தனைகளை எப்படியாவது அடி அறுக்க வேண்டும் என்பதுதான். அதனால்தான் பெரியார் மண் என்ற வார்த்தை அவரை சுட்டுக் கொண்டே இருக்கின்றது. “தமிழகம் பெரியார் மண் அல்ல, பெரியாழ்வார் மண்என்றும், “அண்ணா வளர்த்த தமிழ் அல்ல, ஆண்டாள் வளர்த்த தமிழ்” எனவும் தமிழிசை சவுந்தரராஜன் சொன்னபோது சீற்றம் அடையாத சீமான், இது பெரியார் மண் என்று சொல்லும்போது மட்டும் ஏன் சீற்றம் அடைகின்றார்?
சீமானின் உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இங்குள்ள மார்க்சிய-அம்பேத்கரிய-பெரியாரியச் சிந்தனையாளர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. கடந்த 2000 வருட தமிழர்கள் வரலாற்றில் பல பேர் சாதிக்கு எதிராகப் பேசி இருக்கின்றார்கள். ஆனால் அதை அரசியல் களத்திற்குக் கொண்டு வந்து இயக்கமாக மாற்றியவர் பெரியார். வீட்டில் உட்கார்ந்து கொண்டு ஓலைச்சுவடியிலும், தாள்களிலும் சாதி ஒழிய வேண்டும் என்று எழுதியவர் எல்லாம் சாதி ஒழிப்புப் போராளி அல்ல. நடைமுறையில் பெரும் மக்கள் திரளின் ஆதரவுடன் போராட்டம் நடத்தி, சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் உரிமையை வென்றெடுத்த தில்தான் பெரியாரின் தனித்தன்மை இருக்கின்றது. அவர் களப்போராளி, களங்கமில்லா போராளி.
2000 வருடங்களாக தமிழன் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு, தமிழ் மக்களை மொழி ரீதியாகவும், இன ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் இழிவுபடுத்திக் கொண்டிருந்தவர்களை ஓட ஓட விரட்டி அடித்த ஒரே தலைவர் பெரியார் மட்டுமே. சீமான் குறிப்பிடும் யாருமே அதைச் செய்யவில்லை என்பதுடன் அந்த இழிவுகளுக்குத் துணையாக இருந்தார்கள் என்பதுதான் வரலாறு.
சீமான் சொல்லுவதை எல்லாம் எந்தவித ஆய்வுக்கும் உட்படுத்தி பார்க்காமல் ஆரவாரம் கொள்வதற்கும் வரலாற்றில் பெயர் உண்டு. அதற்கு
கும்பல் மனநிலை எனப்பெயர். கும்பலின் வேலை யாதெனில் திருமண வீட்டில் ஒப்பாரி வைப்பதும், எழவு வீட்டில் சிரித்துக் கிடப்பதும்தான். யோனிப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்து கொண்டவர்களும், ஜாதகம் பார்த்து குழந்தைகளுக்குப் பெயர் வைத்தவர்களும், எந்தவித மக்கள் போராட்டத்திலும் கலந்து கொள்ள விரும்பாமல், வாட்ஸ் ஆப், பேஸ்புக்கில் மட்டுமே தங்களது அரசியல் அரிப்புகளை தீர்த்துக் கொள்ள நினைப்பவர்களும், சுயசாதி சங்கங்களில் இருந்து கொண்டு அப்பட்டமாக சாதிவெறியைக் கக்கிக் கொண்டு தமிழ்த் தேசியம் பேசுபவர்களும் தான் இன்று சீமான் கட்சியில் கணிசமாக இருக்கின்றார்கள். அது போன்ற கும்பல்களுக்கு நாம் தமிழர் கட்சி பாதுகாப்பான இடமாக இருக்கின்றது. தமிழ் மக்களை இழிவு செய்யும் சாதியையோ, மதத்தையோ, கடவுளையோ, எதையுமே விட்டுவிடாமல் புரட்சிக்காரன் வேடம் போட்ட புல்லுருவிகளுக்கு ஏற்ற இடம் நாம் தமிழர் கட்சி. ஜாதி தமிழனின் அடையாளம் என்றும் கூட இக்கூட்டம் பேசும்.
பாவம், அவர்களுக்கு ஜாதி என்ற சொல் தமிழில் இல்லை என்பது கூடத் தெரியாது. அதனால் “குடி” என்று சொல்லிக் கூத்தாடுகிறார்கள்.
சீமான் கட்சியில் 50% பெண்களுக்கு இடம் கொடுத்தாலும், ஏன் 100 சதவீதமே இடம் கொடுத்தாலும் அதனால் எந்த ஒரு மாற்றமும் ஏற்படப் போவ
தில்லை. பிற்போக்குத்தனத்தையும், பார்ப்பன அடிமைத்தனத்தையும், சாதி வெறியையும், இனவெறியையும் ஏற்றுக் கொண்ட பெண்களை வைத்துக் கொண்டு எந்த ஒரு சமூக மாற்றமும் சாத்தியமில்லை. ஆர்.எஸ்.எஸ்.,பி.ஜே.பி. சித்தாந்தத்தை தமிழகத்தில் இருந்து கருவறுப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் இந்த மண்ணில் பார்ப்பனீயத்தை வேர்கொள்ளச் செய்ய உள்வேலை பார்க்கும் சீமானின் இனவாத அரசியலை வேரறுப்பதும். மார்க்சிய- அம்பேத்கரிய- பெரியாரிய இயக்கங்கள் இப்பிரச்சினையை மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டு களப்பணி ஆற்ற வேண்டும். சீமான் இத்தகைய நுட்பமான பார்ப்பனீய அரசியலைப் புரிந்து செயல்படும் சிந்தனையாளரும் அல்ல. அவருக்கு இது போன்று உண்மையாக இயங்கத் தெரியாது.பார்க்கவும் தெரியாது. ஆனால் அவரை இயக்குபவர்களுக்கு இந்த நுட்ப அரசியல் இயல்பானது. அவர்கள் சொல்வது போல் மட்டுமே பேச தெரிந்தவர். சீமான் இயங்குபவரல்ல. பார்ப்பனீய ஆதிக்க சக்திகளால் இயக்கப்படுபவர். ஒன்றை நினைவில் வையுங்கள். பெரியாரை மட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் வரும் எவரையும் தோலுரிப்போம். அவர்கள் எவராகினும் பார்ப்பனீய ஆதிக்கக் கருத்தியலின் அடிவருடிகளே.
தமிழ் தேசியம் என்பது சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது. சீமானின் தமிழ்தேசியம் என்பது இந்துத்துவம் என அழைக்கப்படும் சங்கத்துவத்தின் தமிழ் வடிவமே.
xaviersuji@gmail.com