பெயர்
தனியாக ஆஸ்பத்திரிக்கு வருகிறவள்
ஒரு எளிய சேலையை அணிந்திருக்கிறாள்
மடியில் மஞ்சள்நிறப் பையை மடித்து வைத்திருக்கிறாள்
போகும்வரும் யாரையும் உற்றுப் பார்க்கிறாளில்லை
வரவேற்பு மேஜையில் அமர்ந்திருப்பவரிடம்
பெயரைக் கொடுத்து விட்டு
தரையையே பார்த்தபடி அமர்ந்திருக்கிறாள்
திடீர் என்று
பெயரைச் சொல்லி அவள்
அழைக்கப்பட்டதும்
திடுக்கிட்டு எழுகிறாள்:
உடனே திடுக்கிட்டு
உதிர்கிறது
அவளது பெயர்,
திடுக்கிட்டு
யாருடையது
சைக்கிளில் கேரியரில்
அமர்ந்து போகிறாள். வண்டியை
ஓட்டிச் செல்லும் கணவன் பேசிக்கொண்டே வந்தான்
குண்டும்குழியுமான சாலையில் சைக்கிள்
ஏறிஇறங்கிச்
செல்கையில் ஏனோ சிரிப்பாய் வந்தது அந்த வெண்சிரிப்பு
அவளுடையதாக இல்லை
வீசும் காற்றில் அலைவுறும் கேசத்தின் நடனமும் அவளுடையதாக இல்லை
ஈரச்சுவடுகள்
சாலையோரம்
ஊர்ந்துகொண்டிருந்த
நத்தை ஒன்றை
சில விநாடி
நின்று பார்த்தேன்
அதற்குள் –
உலகம்
முன்னால் போய்விட்டது05
வெகுதூரம், முன்னால்.
கூவிக்கூவி
அழைத்தேன்
திரும்பிக்கூடப்
பார்க்கவில்லை
என்னைச் சுற்றி
அப்படி
ஒரு மௌனம்
அப்படி
ஒரு இன்மை
என்கூட யாருமில்லை
நத்தையின்
ஈரச்சுவடுகள் தவிர
அதனால் என்ன, பரவாயில்லை