ஒரு சைக்கிளை விற்றல்

அப்பாவின் வலிகள் அவர் டைரியில் இருக்கிறது
அவரது மூடிய உள்ளங்கையில் இருக்கிறது
அவரது அலமாரியில் சட்டைத்துணிகளுக்கு
மறைவில் இருக்கிறது
பெயிண்ட் உதிர்ந்த ட்ரங் பெட்டியின் சிற்றறையில் இருக்கிறது
யார் வந்தாலும் உடனே மறைக்கும்
தலையணைக்கடியில் இருக்கிறது
அவர் எரிந்து முடிந்த சிதையின்
சாம்பலில் இருக்கிறது
அவரது பழைய சைக்கிளை விற்ற இன்றைய தினத்தில் எங்கிருந்தோ
பறவை ஒன்றின் ஒலி விட்டுவிட்டுக் கேட்கிறது
அப்பாவின் வலிகளும்
கூடவே கேட்கின்றன

பேச்சு

தெருமுனையில்
நோஞ்சான்
குட்டி நாயொன்று
தன் பளிங்குக்கண்களால்
என்னை ஆர்வமாய்ப் பார்த்தது
அதன் குட்டிவால்
ஏதாவது பேசேன் என்பதுபோல் சிறிதாக அசைந்தது
நான் பேசுவதற்கு ஒன்றுமில்லை
உதிரும் பூக்கள்
பேசுவதற்கு என்ன இருக்கிறது
லேசாகப் புன்னகைத்து வைத்தேன்

கடல்

யாரை நெருங்கும்போதும் அவர்கள் கடல் ஆகிறார்கள்
ஓசை கொள்கிறார்கள்
அலைகள் ஆகிறார்கள்
பின்வாங்குகிறார்கள்
கடலுக்கும் கரைக்கும்
ஒரே ஓரம்என
கடல் காகங்கள் கண்டுகொண்டன
நான் கடல் காகமல்ல
ஓரத்து நாணலில் சிக்கியிருக்கும்
காகிதம்
வரலாற்றில் கசக்கி எறியப்பட்ட
பழுப்பு நிறக் காகிதம்
என் அருகில் இருந்தாலும்
தொலைவில் இருக்கிறது
என் நிழல்
அது கூட என் துணையில்லை

நினைவு

நினைவுக்குள் சரிந்து வீழும்போது
நானுக்குள் அல்ல
நான் அல்லாதவைகளுக்குள் சென்று வீழ்கிறேன்
நான் அல்லாதவைகளின் ஊஞ்சல் என் தலையில் இடித்து
ஒரே ரத்தம்
அப்போது மேலேறிப் பாய்கிறது
ஒரு தவளை
ஒரு எரிகல்
தவளை விழுங்கும் எரிகல்
மற்றும்
எரிகல்லில் புகையும்
நான்

பூ

அம்மா தன் வலது கையால் சிறுமியின் இடது கையைப்
பற்றியபடி செல்கிறாள்.சிறுமி
தன் கையை உருவ உருவப் பார்க்கிறாள். அம்மாவின்
இடது கையெங்கும்
சிறுமியின் பள்ளிக்கூடப்பை, லஞ்ச் பாக்ஸ், தண்ணீர் பாட்டில், செய்முறைப் பயிற்சியின் பெரிய அட்டைவீடு,
பாதிபிய்த்த சாக்லெட்
மற்றும்
உலகிலேயே கனமான ஒரு பூ
மறுபடி திரும்பவராத
இன்றைய-மாலைநேரம் என்னும் பூ