புத்தாண்டு பிறந்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கடந்த ஆண்டைப் பற்றிய ஒரு மீள் பார்வையும், பிறக்கும் ஆண்டைப் பற்றிய கனவுகளும் நம் வழக்கம் ஆகிவிட்டது. மேலும் கொரோனாவோடு நாம் போராடிய இரண்டு புத்தாண்டுகளுக்குப் பிறகு 2022ஆம்தான் மக்களுக்கு சற்று ஆசுவாசத்தைக் கொண்டுவந்த ஆண்டாக இருந்தது. பொருளாதார நடவடிக்கைகள் உயிர் பெற்றன. மக்கள் கலாச்சார வாழ்வுக்குப் படிப்படியாகத் திரும்பினர். விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், பயணங்கள் என உலகம் தன் இயல்பு நிலைக்குத் திரும்பியது. கொரோனாக்காலம் விட்டுச்சென்ற வடுக்கள் இன்னும் முழுமையாக அகலவில்லை என்றபோதும் மனித குலம் இதுபோன்ற எத்தனையோ கொள்ளை நோய்களையும் கொடும் துயரங்களையும் எப்படிக் கடந்து மீண்டுவந்ததோ அதேபோல இப்போதும் தனது மீட்சியின் பாதைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. அந்தவகையில் நாம் நம்பிக்கையுடன் இந்தப் புதிய ஆண்டில் நுழைகிறோம்.
உலகளவில் உக்ரைன் போர் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. போரின் துயரங்களை நாம் பார்த்துக்கொண்டிருந்தபோதே உலகக்கோப்பை கால்பந்தாட்டப்போட்டி சர்வதேச அளவில் கவனம்பெற்ற பெரும் நிகழ்வாக அமைந்தது. இந்த இரண்டு உதாரணங்களும் மனித குலம் மகிழ்ச்சிக்கும் துயரத்திற்குமிடையே எப்போதும் ஊடாடிக்கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது. இங்கிலாந்தில் நடந்த ஆட்சி மாற்றம், ஈரானில் பெண்கள்மீதான ஆடைக்கட்டுப்பாட்டிற்கு எதிராக நிகழ்ந்த கிளர்ச்சி, கால்பந்தட்ட வீரர் பீலேவின் மரணம் எனப் பல சம்பவங்கள் உலக அளவில் சென்ற ஆண்டின் தடங்களாக இருக்கின்றன.
இந்திய அளவில், அரசியல் பொருளாதார அளவில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும் முயற்சிகள் எதையும் ஒன்றிய அரசு முன்னெடுக்கவில்லை. மாறாகத் தனியார் மயமாக்கலை ஊக்குவிக்கிற முயற்சிகளைத் தொடர்ந்து ஒன்றிய அரசு தீவிரமாக முன்னெடுத்து வருவதுடன் மக்கள் விரோதச் சட்டங்களையும் இந்தித் திணிப்பு, மாநில உரிமைகள் பறிப்பு என ஒரு எதேச்சதிகாரத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசின் மாநில உரிமைப் பறிப்புக்கு எதிரான போராட்டங்கள், பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் தீவிரமடைந்து வருகின்றன. கேரளாவில் கவர்னர் ஆரிஃப் முகமது கானுக்கு எதிராகப் பெரும் போராட்டமே வெடித்தது.
கவர்னரின் சட்டவிரோதச் செயல்களால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. ஆன்லைன் ரம்மியால் உயிரிழப்புகள் தொடர்ந்துகொண்டிருக்கும் சூழலில் அதற்கு எதிரான தடைச் சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்க மறுத்து வருகிறார். அதுமட்டுமல்ல, தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பியிருக்கும் 20க்கும் மேற்பட்ட மசோதாக்களைக் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார். இது வெளிப்படையான அரசியல் சாசன மீறல் மட்டுமல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் மீது தொடுக்கப்பட்ட ஒரு யுத்தம் என்றே சொல்லலாம். ஏற்கனவே வருமான வரித்துறை, புலனாய்வு அமைப்புகள், தேர்தல் ஆணையம் போன்றவற்றைச் செயலிழக்க வைத்திருக்கும் ஒன்றிய அரசு இப்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களையும் செயலிழக்க வைக்கும் முயற்சியில் இறங்யிருக்கிறது. கவர்னர்கள் இதற்கான அடியாட்களாகச் செயல்பட்டு வருகின்றனர். கவர்னருடைய அதிகாரங்கள் மறுவரை செய்யப்படுவதற்கும் அரசியல் சாசனத்திற்கு விரோதமாகச் செயல்படும் தமிழக ஆளுனரைத் திரும்பப் பெறுவதற்கும் திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது.
சென்ற ஆண்டில் தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் பேசப்பட்டதைவிட மிக அதிகமாக ஆளுநரைப் பற்றிய பேச்சுகள் ஊடகங்களில் இடம் பிடித்தன என்பது எந்த அளவிற்கு மக்கள் பிரதிநிதித்துவம் அற்ற ஒரு நபரை வைத்து பா.ஜ.க. இரட்டை ஆட்சி ஒன்றை நடத்திக்கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது.
ஆளுநரின் செயல்பாடுகளால் மட்டுமல்ல, அவரது ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த கருத்தியல் பிரச்சாரமும் பெரும் விவாதங்களை உருவாக்கியது. திராவிடம், திருவள்ளுவர், இந்திய மரபு குறித்தெல்லாம் வரலாற்றுக்கும் அறிவியலுக்கும் புறம்பாக அவர் நிகழ்த்திவரும் பேச்சுக்கள் தமிழகத்தில் கடும் எதிர்ப்புகளைச் சென்ற ஆண்டு சந்தித்தன.
திராவிட முன்னேற்றக் கழக அரசு பதவி ஏற்ற பிறகு இந்த ஓராண்டில் கொண்டுவந்த பல திட்டங்களும் செயல்பாடுகளும் தமிழகத்தை ஒரு புதிய தளத்தில் செலுத்திக்கொண்டிருக்கின்றன. கல்வித் துறையில் கொண்டுவந்த இரண்டு புதிய திட்டங்களை வரலாற்று நிகழ்வுகள் என்றே சொல்ல வேண்டும். ஒன்று, அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச காலை உணவுத் திட்டம். இது நூற்றாண்டு திராவிட இயக்க வரலாற்றில் கல்வி சார்ந்த பெரும் முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது. அதேபோல அரசுக் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம். எந்த ஒரு பொருளாதாரக் காரணத்தினாலும் பள்ளியிலிருந்தோ கல்லூரியிலிருந்தோ இடைநிற்றல் நிகழக்கூடாது என்ற தொலைநோக்குடன் இந்தத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. பள்ளிகளில் நடக்கும் கலைப்பயிற்சிகளும் கலைத் திருவிழாக்களும் மாணவர்களின் பன்முக ஆற்றலை வளர்க்கக்கூடிய களமாக அமைந்திருக்கின்றன.
அதேபோல இந்த மழைக்காலத்தை தமிழக அரசு முன்னெச்சரிக்கையுடன் கையாண்ட விதம், எல்லாத் தரப்பு மக்களிடமும் பாராட்டைப் பெற்றுத் தந்திருக்கிறது. வழக்கத்தைவிட சென்னையில் அதிகமான மழைப்பொழிவு இருந்தும்கூட நீர் தேங்காத சாலைகளை மக்கள் வியப்புடன் கண்டனர். மழைநீர் வடிகாலுக்காக முன்னெச்சரிக்கையுடன் செய்யப்பட்ட பணிகளின் காரணமாக, வழக்கமாக மழைநீர் தேங்கும் எந்த இடத்திலும் நீர் தேங்கவில்லை. கடந்த பத்து ஆண்டில் சென்னை மக்கள் கண்ட அதிசயக் காட்சியாக இது இருந்தது.
தமிழக அரசு தனது சக்தியை மீறி பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து வந்தபோதும்கூட சிறுசிறு பிரச்சினைகளை தேடிக் கண்டுபிடித்து அரசைத் தாக்கும் முயற்சிகள் தீவிரமடைந்திருக்கின்றன. புற்றீசல்போல உருவாக்கப்பட்டிருக்கும் யூடியூப் சேனல்கள் வழியே தி.மு.க. அரசிற்கு எதிரான கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காகப் பணிக்கு அமர்த்தப்பட்டிருக்கும் டிஜிட்டல் கூலிப் படையினர், இரவு பகலாக இந்தப் பணியை மேற்கொண்டுள்ளனர்.
அ.தி.மு.க. துண்டு துண்டாக சென்ற ஆண்டில் மீண்டும் உடையத் தொடங்கியிருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வமும் உச்சக்கட்ட அதிகார யுத்தத்தில் இறங்கியிருக்கின்றனர். அ.தி.மு.க.வை முற்றிலும் தன்வசமாக்க வேண்டுமென்ற எடப்பாடியின் ஆவேசம் அ.தி.மு.க.வை மேலும் கலகலத்துப்போகச் செய்திருக்கிறது. ஆனால் எடப்பாடியால் சசிகலாவைக் கையாண்டதுபோல பன்னீர்செல்வத்தைக் கையாள முடியவில்லை. இவர்கள் இருவருக்கும் இடையிலான யுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு அடுத்த நாடளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களைப் பெறும் நோக்கோடு பா.ஜ.க. காய் நகர்த்தி வருகிறது.
தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. இருந்தபோதும்கூட பா.ஜ.க.தான் எதிர்க்கட்சி போன்ற ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அடுக்கடுக்காகக் கூறும் பொய்கள், அடுத்தநாளே அம்பலப்பட்டபோதும்கூட அதைப்பற்றி எந்தக் கூச்சமும் இல்லாமல் புதிய பொய்களை நோக்கிச் செல்ல அவர் தயங்குவதே இல்லை. மக்களுடைய தலையில் பொய்களின் குப்பைகளைத் தினமும் கொட்டிக்கொண்டே இருந்தால் சிறு பகுதியினரேனும் அதை நம்பி விடுவார்கள் என்று நம்புகிறார் போலும்.
தமிழக பா.ஜ.க. உள்கட்சிப் பிரச்சனையால் தமிழகத்தின் பெரும் கேளிக்கைக் கட்சியாக சென்ற ஆண்டில் மாறியிருக்கிறது. ஒருவருக்கொருவர் அலைபேசி உரையாடல்களைப் பதிவு செய்து வைத்துக்கொண்டு, பொது வெளியில் அம்பலப்படுத்துவது, ரகசிய வீடியோக்களை எடுத்து வைத்து பிளாக் மெயில் செய்வது, ஆபாசமான தனி மனிதத் தாக்குதலில் ஈடுபடுவது என எந்த அரசியல் கட்சிகளிலும் காணக்கிடைகாத காட்சிகளை அரங்கேற்றிக்கொண்டிருக்கின்றனர். அந்தக் கட்சியினுடைய உண்மையான முகம் மக்களிடம் வெளிப்பட்டிருக்கிறது.
ஆனால் சென்ற ஆண்டு அண்ணாமலையின் அரசியல் வாழ்வில் நடந்த மிகச்சிறந்த சம்பவமே அவர் கட்டியிருக்கும் 5 லட்ச ரூபாய் வாட்ச்சிற்கு பில் எங்கே என அமைச்சர் செந்தில் பாலாஜி எழுப்பிய கேள்விதான். ஆடிப்போன அண்ணாமலை அது ரஃபேல் உதிரிப் பாகத்தில் செய்த வாட்ச் என்பதால் தான் ஒரு தேச பக்தன் என்று சொன்னதிலிருந்து தொடங்கி, பில்லை ஏப்ரல் மாதம் வெளியிடுகிறேன் என்று தலைதெறிக்க ஓடினாரே ஒழிய கடைசிவரை பில் வரவே இல்லை.
அரசியல் நிகழ்வுகளில் சென்ற ஆண்டு மிக முக்கியமானது ராகுல் காந்தியின் நடைப் பயணம். காங்கிரஸிற்கு புத்துயிர் ஊட்ட மட்டுமல்ல, பாசிச ஆட்சிக்கு எதிராக இந்தியா முழுக்க மக்களின் உணர்வுகளைத் திரட்டுவதற்கு கன்னியாகுமரியில் தொடங்கிய இந்தப் பயணம் பெரும் வெற்றி என்றே சொல்ல வேண்டும். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸை உள்ளடக்கிய ஒரு மாபெரும் கூட்டணியை அமைக்க வேண்டும் என்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் அறைகூவலுக்கு வலு சேர்க்கும் விதமாக இந்தப் பயனம் அமைந்துள்ளது. எதிர்க்கட்சிகள் சிதறுண்டு போனால் தான் மீண்டும் எளிதாக நின்றுவிடலாம் என்ற கணக்கில் பா.ஜ.க. இருக்கிறது. பா.ஜ.க.விற்கு எதிரான சக்திகள் மீண்டும் ஒருமுறை சிதறுண்டு போய்விடக்கூடாது என்பதற்காகத் தமிழக முதலமைச்சர் தொடர்ந்து முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார்.
புத்தாண்டு எப்போதும்போல சவால்களும் கனவுகளும் நிறைந்ததாக இருக்கிறது. மீண்டும் கொரோனா அச்சம் தலைதூக்கியிருக்கிறது. பெருந்தொற்றின் துயரக்காலம் மீண்டும் வராதென நம்புவோம். மிகப்பெரிய பேரிடர்களைக் கடந்து வந்துவிட்டோம். எதையும் எதிர்கொள்ளும் வலிமை நம்மிடம் இருக்கிறது.