கடந்த ஜூன் மாதம் தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் அரசியல் களத்தில் வெப்பமிகுந்த ஒரு காலமாக இருந்தது. ஒன்றிய அரசு நாடளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் இந்தச் சூழலில் தனது முழு மிருகபலத்துடன் தனது எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. ஜனநாயகத்தின் பல்வேறு அவல நாடகங்கள் தொடர்ந்து அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கையாண்ட விதம் ஒன்றிய அரசு அரசியல் எதிரிகளைப் பழிவாங்க எத்தகைய எல்லைக்கும் செல்லும் என்பதைக் காட்டியது. பத்தாண்டுகளுக்கு முந்தைய செந்தில் பாலாஜியின் வழக்கில் தானாக உள்ளே வந்து அதைக் கையில் எடுத்துக்கொண்ட அமலாக்கத்துறை அவரை சிறைப்படுத்தி துன்புறுத்த வேண்டும் என்ற மலிவான உள்நோக்கத்துடன் செயல்பட்டது வெட்ட வெளிச்சமாகியது. செந்தில் பாலாஜியை பதினெட்டு மணிநேரம் தொடர் விசாரணைக்கு உட்படுத்திய பிறகு அமலாக்கத்துறை அவரைக் கைது செய்து அழைத்து செல்கையில் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயத்தில் மூன்று வால்வுகளில் 90% அடைப்பு இருக்கிறதென்று மருத்துவர்கள் உறுதி செய்து உடனடியாக பைபாஸ் செய்ய வேண்டும் என தெரிவித்தப் பிறகும் அமலாக்கத்துறை அவர் ‘நடிக்கிறார்’, நாங்கள் எய்ம்ஸ் மருத்துவரை வைத்து பரிசோதித்துக் கொள்கிறோம் என அடாவடித்தனம் செய்தது. சங்கிகளும் அடிமை அ.தி.மு.க.வினரும் அந்தக் குரலை எதிரொலித்தனர்.

செந்தில் பாலாஜியின் மனைவியின் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவில் வழக்கறிஞர்கள் முக்கியமாக இரு வாதங்களை முன்வைத்தனர். மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள ஒருவருக்கு நீதிமன்ற காவல் வழங்கியது ஏற்கமுடியாததென்றும், சிகிச்சையில் இருக்கிற அவரை விசாரிப்பதற்காக அமலாக்கத்துறைக்கு வழங்கிய அனுமதி காலம் முடிந்துவிட்டால், அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க முடியாதென்றும் வாதிடப்பட்டது. மேலும், வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ மிக முக்கியமான வாதத்தை முன்வைத்தார். அமலாக்கத்துறைக்கு விசாரிக்கவும் கைது செய்யவும்தான் உரிமை இருக்கிறதென்றும் ஒருவரை காவலில் எடுத்து விசாரிக்க சட்டப்படி எந்த உரிமையும் இல்லை என்றும் வாதத்தை முன்வைத்தார். இந்த வாதம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது எனலாம். அமலாக்கத்துறை தனக்கு இல்லாத ஒரு அதிகாரத்தினை செந்தில் பாலாஜியிடம் மட்டுமல்ல இந்தியாவில் பல அரசியல்வாதிகளிடம் பயன்படுத்தியுள்ளது. செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை தலையிடுவதற்கான ஒரு அவசியமும் இல்லை.

உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி வழக்கில் நியமித்திருந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவையே அறிக்கை அளிக்குமாறு கேட்டதே தவிர, அமலாக்கத்துறையை அல்ல. இது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினால் பதிவுசெய்யப்பட்ட ஒரு வழக்கு. செந்தில் பாலாஜியினுடைய வங்கிக் கணக்கில் அவரது வருமானத்திற்குக் கூடுதலாக இருந்ததாக சொல்லப்படும் பணம் லஞ்சமாகவோ முறைகேடாகவோ பெறப்பட்டதா என்பதை நிறுவுவதற்காக இந்த வழக்கில் தானாக அமலாக்கத்துறை உள்ளே நுழைந்தது. பா.ஜ.க. அரசு கொண்டுவந்த ஒரு சிறப்பு சட்டதிருத்தத்தின்மூலம் சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றம் தொடர்புடைய எந்த வழக்கையும் அமலாக்கத்துறை தானாக கையிலெடுத்துக்கொண்டு விசாரிக்கமுடியும். இதைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியா முழுவதும் உள்ள எதிர்கட்சித் தலைவர்களை பா.ஜ.க. அரசு நர வேட்டையாடிவருகிறது. ஆவணங்களின் அடிப்படையிலான ஒரு வழக்கில் கைதுக்கோ நீதிமன்ற காவலுக்கோ எந்த அவசியமும் இல்லை. மேலும் முறையாக சம்மனும் வழங்கப்படாமல் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த முற்பட்டது. இதெல்லாம் இன்று நீதிமன்றத்தின் முன் விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

அமலாக்கத்துறைக்கு ஏன் இந்த ஆவேசம்? செந்தில் பாலாஜி கொங்கு மண்டலத்தில் கடந்த தேர்தலில் பா.ஜ.க.வை குறிப்பாக அண்ணாமலையை மண்ணைக் கவ்வ வைத்தார் என்பதும், ரஃபேல் வாட்ச் விவகாரத்தில் அண்ணாமலையின் போலி நாடகங்களை செந்தில் பாலாஜி அம்பலப்படுத்தினார் என்பதும்தான். செந்தில் பாலாஜி அரசியலில் தீவிரமாக இருந்தால் பா.ஜ.க.வினால் கொங்கு மண்டலத்தில் தலைதூக்கவே முடியாது என்பதற்காகத்தான் எப்படியாவது சிறையிலடைத்து அவரை பலவீனப்படுத்த வேண்டும் என்ற மூர்க்கம். இதுதான் பா.ஜ.க. இந்தியா முழுவதும் நடத்தும் அரசியல்.
பா.ஜ.க.வின் இந்த அரசியலுக்கு எதிராகத்தான் பதினாறு எதிர்க்கட்சிகள் பாட்னாவில் மாபெரும் மாநாட்டைக் கூட்டினர். இந்த மாநாடு வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிரான ஒரு வலிமையான கூட்டணியை நிறுவுவதற்கான உறுதியை வெளிப்படுத்தியது. இத்தகைய ஒரு தேசிய அளவிலான புரிந்துணர்வை சாத்தியப்படுத்தியதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பெரும் பங்கு உள்ளது. பாட்னா கூட்டம் மோடியை பதற்றத்திற்கு ஆளாக்கியுள்ளது. தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகளை பாட்னா கூட்டம் முடிந்த சில நாட்களில் கடுமையாக தாக்கிப்பேசினார். எதிர்கட்சிகளை ஊழல்கட்சிகள் என விமர்சித்தார்.

மோடி தனது ஒன்பதாண்டுகால ஆட்சியில் எந்த எதிர்கட்சியின் மீதும் எந்த ஊழல் வழக்கையும் நிரூபிக்கவில்லை. மாறாக, அமலாக்கத்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சிலர் பா.ஜ.க. பக்கம் சாய்ந்ததும் வழக்குகள் மூடப்பட்டு அவர்கள் புனிதர்களாக்கப்பட்டனர். ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிப்படுத்திய அதானியின் பங்குச்சந்தை மோசடி பற்றி பா.ஜ.க. கள்ள மௌனம் சாதிப்பது மட்டுமல்ல, இந்த மாபெரும் பொருளாதாரக் குற்றம் குறித்து ஒரு நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையைக்கூட மறுக்கிறது. பிரதமரின் ‘பி.எம். கேர்ஃபண்ட்’டின் வரவு செலவு கணக்குகள் இன்றைக்கு வரைக்கும் மர்மமாக இருக்கின்றன. தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க. யார்யாரிடம் பெரும் பணம் திரட்டியதென்றும், அதற்கு பிரதிபலனாக அவற்றிற்கு என்ன கொடுத்தது என்பதும் புரியாத புதிராக உள்ளது. கர்நாடகாவில் பா.ஜ.க. அரசின் 40% சதவீத ஊழளுக்காக அது மண்ணைக்கவ்வியது. ரஃபேல் ஊழல் விவகாரம் இன்னும் விசாரணைக்குரிய ஒன்றாக இருந்து வருகின்றது. ஒட்டுமொத்த ஊடகத்தையும் பா.ஜ.க. தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதனால் பா.ஜ.க. மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் விவாதத்திற்குள்ளாவதில்லை. ஆனால், எதிர்கட்சிகள் மீதான சிறிய குற்றங்கள்கூட பெரிதாக முன்னிறுத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் முற்றிலுமாக தோல்வி அடைந்துவிட்ட மோடி எதிர்கட்சிகளை நோக்கி குறிப்பாக தி.மு.க.வை நோக்கி வாரிசு அரசியல் என்ற புலம்பலை முன்னெடுக்கிறார். இந்தியாவில் ஒன்றிய அரசிலும் சரி மாநிலங்களிலும் சரி அரசியல் குடும்பங்களை சேர்ந்தவர்கள் கட்சியிலும் ஆட்சியிலும் பொறுப்பு வகிப்பது புதிதல்ல. இது உலகம் முழுக்க அரசியலில் இருக்க கூடிய ஒன்றுதான். வாரிசுகள் அரசியலுக்கு வர தடைகளேதும் இருக்கின்றதா? வாரிசுகள் இல்லாதவர்கள் ஆட்சிக்கு வந்தால் நல்லாட்சியே கொடுப்பார்கள் என்றோ வாரிசுகள் மோசமான ஆட்சியையே கொடுப்பார்களென்றோ ஏதேனும் பொது அளவுகோல் இருக்கின்றதா. ஜெயலலிதா எவருடைய ரத்த வாரிசாகவும் இல்லாமல்தான் ஆட்சிக்கு வந்தார். ஆனால் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டார். மோடியும் கூட எவருடைய அரசியல் வாரிசும் இல்லை. ஆனால், இந்தியாவில் மோசமான கொடுங்கோல் ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கின்றார்.
நாடாளுமன்றத்தேர்தல் நெருங்க நெருங்க மதவாதப்பிளவுகளை உக்கிரமாக்கும் உரையாடல்களை பா.ஜ.க. முன்னிலைக்கு கொண்டுவருகிறது. அதில் முக்கியமானது பொது சிவில் சட்டம். இஸ்லாமியப் பெண்களுக்கு நன்மை செய்வதற்கு இந்த சட்டம் என பா.ஜ.க. நாடகமாடுகிறது. நனையும் ஆடுகளுக்காக ஓநாய்கள் அழுத கதைதான். ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகாவில் சங்கிகள் எப்படி கலாச்சார பயங்கரவாதத்தை அரங்கேற்றினார்கள் என்பதனை கண்டோம். ஹிஜாப்பிற்கு மட்டுமல்ல. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தொழுகைக்கு அழைக்கும் பாங்கு ஒலிக்குக்கூடத்தடை. லவ் ஜிஹாத் என்ற கட்டுக்கதையைப் பரப்பும் கேரளா ஸ்டோரி படத்தை ஆதரித்து மோடி கர்நாடகத் தேர்தலில் பிரச்சாரம் செய்கிறார். குடியுரிமை சட்டதிருத்தத்தின் மூலம் இஸ்லாமியர்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகினர். குஜராத் படுகொலை குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியே அனுப்பப்படுகின்றனர். பசுமாமிசம் உண்டதாகவும், ஜெய்  ராம் என சொல்ல வற்புறுத்தியும் நாடு முழுக்க இஸ்லாமியர்கள் தாக்கப்படுகின்றனர். ஆனால், இவர்கள் இஸ்லாமியப் பெண்களுக்காக பாடுபடுகின்றார்களாம்.
இஸ்லாமியர்களுக்கு பொது சிவில் சட்டம் கேட்கும் இவர்கள் இந்துக்களுக்கு எப்போது அதை அமல்படுத்தப்போகிறார்கள்? சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியும் பா.ஜ.க. அதை எதிர்த்தது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் சட்டத்தை பா.ஜ.க. ஆதரிக்கத்தயாரா? வழிபாட்டில் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்களை அனுமதிக்காத கோவில்கள் நாடு முழுக்க இருக்கத்தானே செய்கின்றன. இதைல்லாம் பொது சிவில் சட்டம் மூலம் இவர்கள் சரிசெய்ய தயாராக இருகிறார்களா?

பா.ஜ.க. தனது கப்பல் மூழ்கி கொண்டிருப்பதனை உணரத் தொடங்கிவிட்டது. அதனால்தான் அதனுடைய நாடகங்கள் இவ்வளவு மூர்க்கமாக உள்ளன. ஜனநாயகத்தில் மாபெரும் அலை எழுகின்றபோது எந்த ஒரு பாசிச சக்தியும் அங்கு நிற்க முடியாது.