தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் ஒரு இளைஞரைப் பார்க்க என்னை அழைத்திருந்தனர். அவரும் அவரது மாமாவும் பைக்கில் சென்றனர். அந்தப் பையன் பைக்கை ஓட்டிச் சென்றான். ஒரு பேருந்தின் மேல் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பையனின் மாமா சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். பையனுக்குத் தலையில் அடிபட்டு மயங்கி விட்டான். மூளையில் ரத்தக் கசிவு. நினைவு திரும்பியதும் ‘மாமா எங்கே?’ எனக் கேட்டான். மாமா விபத்தில் இறந்துவிட்டார் எனச் சொன்னதும் அவன் அழத் தொடங்கினான். இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் “மாமா எங்கே?” எனக் கேட்டான். மீண்டும் அவர் இறந்துவிட்டார் எனச் சொல்லவும் மீண்டும் அழத் தொடங்கினான். இதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்?

இன்று காலை என்ன சாப்பிட்டீர்கள் என்று கேட்டால் சரியாகச் சொல்வீர்கள். அதுவே போன மாசம்  பதினேழாம் தேதி காலை என்ன சாப்பிட்டீர்கள் என்று கேட்டால் நம்மால் சொல்ல முடியாது. அதே சமயம் பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது உங்கள் வீடு தீப்பிடித்திருந்தால் அப்போது  சாப்பிட்டோம் என்பது நன்றாக நினைவிருக்கும். காரணம் என்ன? உணர்ச்சிகளுக்கும் நினைவுகளுக்கும் என்ன தொடர்பு?

மூளையின் எல்லாச் செயல்பாடுகளையும் போன்றே நினைவுத் திறனும் நம்மைத் தற்காத்துக் கொள்வதற்காக உருவானதே! இந்த இடத்தில் சுவாரஸ்யமான விஷயம் ஒன்றைச் சொல்ல வேண்டும். நினைவுகளில் முக்கியமானது இடம் தொடர்பான நினைவுகள்தான்.ஓர் இடத்தில் சிங்கமோ புலியோ இருந்தால் அந்த இடத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நீரோ உணவோ எங்கு கிடைக்கிறது என்பதையும் நினைவில் வைத்திருக்க வேண்டும். ஆகவே இடம் தொடர்பான நினைவுகள்தான் ஆதி மனிதனுக்கு முக்கியமானதாக இருந்திருக்கும்.

இப்போதும் யாருடனாவது நடந்த உரையாடலையோ அல்லது நடந்த நிகழ்ச்சியையோ நினைவு கூர்ந்தால் உடனே நமக்கு அது நிகழ்ந்த இடம்தான் நினைவுக்கு வரும். அந்த மரத்தடியில் நின்றிருக்கும் போதுதானே அந்தக் கால் வந்தது, இந்த இடத்தில் வைத்துத்தானே அவர் என்னை அப்படித் திட்டினார் என இடங்கள் நினைவுக்கு வரும்.

ஏன் போன மாதம் சாப்பிட்ட உணவு நமக்கு மறந்து விடுகிறது? ஆனால் பத்து வருடங்களுக்கு முன் வீடு தீப்பிடிக்கும்போது சாப்பிட்டது நினைவில் இருக்கிறது? நம் மூளை நமக்கு எது முக்கியமோ அந்தத் தகவலை மட்டுமே நினைவில் வைத்திருக்கும். தேவையில்லாத தகவல்களை மறந்து விடும். எது தேவையான தகவல், எது தேவையில்லாத தகவல் என்பதை மூளை எப்படி முடிவெடுக்கிறது? எந்த விஷயங்கள் நமக்கு உணர்ச்சிகளைத் தூண்டுகிறதோ அவைதான் முக்கியம் என மூளை முடிவெடுக்கிறது.

உணர்ச்சிகளைப் பற்றிப் பேசும் போது மூளையின் லிம்பிக் பகுதி என்ற இடம்தான் உணர்ச்சிகள் உருவாகும் இடம் எனப் பார்த்தோம். அதே பகுதிதான் நினைவுகளுக்கும் முக்கியமானவை. குறிப்பாக, ஹிப்போகாம்பஸ் என்ற பகுதி. ஹிப்போகாம்பஸ் என்றால் கடல்குதிரை என்று அர்த்தம். அது மைக்ரோஸ்கோப்பில் பார்க்கும் போது கடற்குதிரை மாதிரியான தோற்றத்தில் இருப்பதால் அந்தப் பெயராம்.

இந்தக் கடல்குதிரை போன்ற பகுதி மிகவும் சென்சிட்டிவ்வான பகுதி, கொஞ்சம் ரத்த ஓட்டம் இல்லை, ஆக்ஸிஜன் இல்லை என்றால்கூட அப்பகுதி செயலிழந்து போய்விடும். தினமும் நடக்கும் நிகழ்வுகளில் எது உணர்ச்சிகளைத் தூண்டக் கூடியதோ அவற்றை மட்டும்தான் முக்கியமாகக் கருதிச் சேமித்து வைத்துக் கொள்ளும். இது பெரும்பாலும் தூங்கும் போதுதான் நடக்கும். அப்படி அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளில் முக்கியமானதைச் சேகரிக்கும் போதுதான் கனவுகள் வருகின்றனவாம். அதனால்தான் கனவுகள் பெரும்பாலும் நினைவுகளோடு தொடர்புடையனவாக வரும். மேலும் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகளை அதே போல் நடந்த பழையகால நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி ஒப்பிட்டுப் பார்த்து இது தேவையா இல்லையா என்று முடிவெடுக்கும். ஆகவேதான் கனவுகளில் பழைய நினைவுகள் அடிக்கடி வருகின்றனவாம்.

கம்ப்யூட்டரில் டைப் அடித்துக் கொண்டிருப்பதற்கு இணையாக இதைச் சொல்லலாம். டைப் அடித்துக் கொண்டிருக்கும் போது அவ்வப்போது நாம் அதை சேவ் பண்ணி வைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கட்டுரையை டைப் அடித்துக் கொண்டிருக்கும் போது சேவ் பண்ணுவதற்கு முன்பே திடீரென லாப்டாப் அணைந்து விட்டால் அந்தக் கட்டுரை லாப்டாப்பில் சேமிக்கப் படாமல் போய்விடும். அது போலத்தான் மூளை ஒரு விஷயத்தைச் சேமிக்காமல் விட்டால் அதை எத்தனை நினைவுபடுத்தினாலும் நினைவுக்கு வராமலேயே போய்விடும்.

அதனால்தான் சிலசமயம் மயக்க மருந்து கொடுத்தாலோ தலையில் அடிபட்டாலோ அந்த நிகழ்வு நடைபெறுவதற்குச் சில நிமிடங்களிலிருந்து சில மணி நேரங்கள்வரை என்ன நடந்தது என நினைவிருக்காது. விபத்தில் தலையில் அடிபட்டவர்களுக்குச் சில சமயம் அந்த விபத்து எப்படி நடந்ததே என நினைவிருக்காது. காரணம், சேவ் பண்ணுவதற்கு முன்பே மூளை ஸ்விட்ச் ஆஃப் ஆனதுதான் காரணம். உயர்ந்த உள்ளம் என்ற திரைப்படத்தில் கமல்ஹாஸன் பயங்கர குடிகாரராக இருப்பார். ஒரு முறை குடி போதையில் ஒரு கல்யாண வீட்டுக்குப் போன அவர் அந்த இரவு நடக்கும் விருந்தின் மொத்தச் செலவையும் ஏற்றுக் கொள்வதாகச் சொல்வார். மறு நாள் காலை அவருக்குச் சுத்தமாக அது நினைவில் இருக்காது. அது போல் பல சனிக்கிழமை இரவுகளில் சமூக ஊடகங்களில் தாங்கள் போடும் மெசேஜ்கள் மறுநாள் காலை மறந்துவிடுவதற்குக் காரணம் ஆல்கஹால் மேலே குறிப்பிட்ட கடல்குதிரையைப் (ஹிப்போகாம்பஸ்) பாதிப்பதுதான் காரணம். மூளையால் நடப்பதை நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. இதே பிரச்சனைதான் அல்சீமர்ஸ் டிமென்ஷியா (Dementia) எனப்படும் மறதி நோயிலும் ஏற்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் ஹிப்போகாம்பஸ் பகுதி சுருங்கி விடுகிறது, அதானால் அவர்களுக்கு மறதி நோய் ஏற்படுகிறது. இதை ரீட்டிரோகிரேட் அம்னீஷியா (Reterograde amnesia) என்கிறார்கள்.

மயக்கமருந்து , ஆல்கஹால் அல்லது லேசான தலைக்காயத்தினால் ஹிப்போகாம்பஸ் பகுதி தற்காலிகமாக மட்டுமே செயலிழக்கும். ஆகவே சில மணி நேரங்களுக்கு முந்தைய நிகழ்வுகள் மட்டுமே மறந்து விடும். ஆல்கஹால் அல்லது மயக்க மருந்தின் வீரியம் குறைந்தபின் மூளை பழைய நிலைமைக்கு வந்துவிடும். அதன்பின் நடப்பவற்றைப் பதிந்து கொள்ள முடியும்.

ஆனால் மேலே முதலில் குறிப்பிட்ட பையனுக்கு மூளையின் அப்பகுதி ரத்தக் கசிவினால் நிரந்தரமாகச் செயலிழந்து விட்டது, ஆகவேதான் அவனுக்குப் புதிதாக எதையும் கற்றுக் கொள்ள முடியாமல் போய்விட்டது. எந்த விஷயமும் அரை மணி நேரம் கழித்து மறந்து விடுகிறது. இது கம்ப்யூட்டரில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டு இனிமேல் எதையுமே சேவ் பண்ண முடியாமல் போய்விடுவதற்கு ஒப்பானது இது. எத்தனை டைப்படித்தாலும் அதைப் பதிந்து வைக்கவே முடியாமல் போய்விடும் . இதை ஆண்டிரோ கிரேட் அம்னீஷியா ( Antero grade amnesia) என்கிறார்கள், கஜினி திரைப்படத்தின் சஞ்சய் ராமசாமி மூலம் ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் (Short term memory loss) எனப் புகழ் பெற்றது. நல்ல வேளை, அந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்படுவது அபூர்வமே.

அந்தத் திரைப்படத்தில் (கஜினி) காட்டுவதில் ஒரு பிழை இருக்கிறது. பொதுவாக ஒரு விபத்து நடந்து தலையில் காயம் ஏற்பட்டால் சில நிமிடங்கள் முதல் சில நாட்களுக்கு முந்தைய நிகழ்வுகள்தான் மறக்கும். மிகவும் பழைய நினைவுகள் மறக்காது. ஹீரோவுக்கு விபத்துக்கு முன் அவர் வாழ்க்கையில் நடந்த எந்த விஷயமுமே நினைவில் இல்லாமல் போய்விடும்.  அந்த அளவுக்கு மறதி ஏற்பட வேண்டுமானால் அவரது மூளையில் 99 சதவிகிதமாவது பாதிக்கப்பட்டிருந்து அவர் கோமாவில் இருந்தால்தான் முடியும்.

சில வகை மறதி நோய்களில் காலையில் சாப்பிட்டது மறந்து விடுகிறது. ஆனால் பல வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகள் நினைவில் இருக்கின்றனவே அது எப்படி? சில அதிர்ச்சியான சம்பவங்கள் கனவிலும் நினைவிலும் ஃப்ளாஷ்பேக் போல் அடிக்கடி வந்து கொண்டே இருக்கின்றனவே?

இதற்கெல்லாம் விடை அடுத்த வாரங்களில்….

ramsych2@gmail.com