புகழ்பெற்ற நடிகை சுமித்ரா குமாரி கோபத்தோடு காரில் வந்துகொண்டிருக்கிறாள். அவளிடம் இரண்டு வழக்கறிஞர்கள் ஜம்ஷெத்கான் என்ற நாடக நடிகர் பற்றி இப்படிச் சொல்லிவருகிறார்கள்: “இதுல clear-ரா எழுதியிருக்கு. ‘நம்மோட படம் முடியற வரைக்கும் அவர் theatre performance பண்ணக்கூடாது’ன்னு, ஆனா
இதுலயும் அவருக்கு problem. ‘அப்பிடின்னா நீங்க payment-அ package-ஆ எடுத்துக்கங்க’ன்னா அவர் monthly-ஆ கேக்குறாரு. அதுக்கும் சரின்னு சொல்லிட்டோம். அப்பிடியிருந்தும் அவர் பிரச்சனை குடுத்துட்டு இருக்காரு. இந்த ஜம்ஷெத்கான் ரொம்ப ஆட்டம் காட்றாருங்க.”

ஜம்ஷெத்கானுக்கு அடுத்ததாக audition வந்த எந்த நடிகரையும் ராய் டாக்கிஸ் நிறுவன அதிகாரி ஸ்ரீகாந்த் ராய்க்குப் பிடிக்கவில்லை. காந்த ராய்க்கு யாரையாவது பிடித்திருந்தால் அவருக்காக எதையும் செய்யக்கூடியவர் என்பது சுமித்ராவுக்குத் தெரியும். ஜம்ஷெத்கான் இருக்கும் இடத்திற்குச் சென்று தூங்கிக் கொண்டிருப்பவனைத் தண்ணிரை ஊற்றி எழுப்புகிறாள். அவனிடம், “ஏன் நடிக்க மறுக்கிறாய்” என்று கேட்கிறாள். அவளிடம் அவன், நல்ல சம்பளம் வழங்கவேண்டும். ஸ்டுடியோ காம்பவுண்டுக்கு வெளியே நான் தங்குறதுக்கு அனுமதிக்க வேண்டும். வருஷத்துக்கு ஒண்ணு ரெண்டு நாடகம் நடிக்க ஒத்துக்கணும். அப்புறம் நான் நடிக்கும்போது யாரும் தலையிடாம இருந்தா ரொம்ப நல்லா இருக்கும்.

என்ற ஐந்து நிபந்தனைகளை வைக்கிறான். அந்தக் காலத்தில் ஸ்டுடியோவின் முழுக் கட்டுப்பாட்டில்தான் நடிகர்கள் இருந்தார்கள். நடிகர்கள் நிபந்தனை விதிப்பதை ஸ்டுடியோ முதலாளிகள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதனால் சுமித்ராவிடம் ஜம்ஷெத்கான் சொல்கிறான், “ஒருவேளை நன் பேசுனது முரட்டுத்தனமா இருந்தா என்னை மன்னிச்சிருங்க, ஆனா என் நிபந்தனைகளை நான் விட்டுக்குடுக்குறதா இல்ல. ‘மதன்குமார்’ன்னு நான் ஒருத்தன்தான் இருக்கேன்றதால இப்படியெல்லாம் பேசல… நான் போடுற நிபந்தனைகளால, ராய் டாக்கீஸ்காக… இன்னும் better-ஆ நடிக்க முடியும்…. இது உங்களுக்கே நல்லா புரியும்னு நினைக்கிறேன்.”

“உன்னோட சொந்த லாபத்துக்காக என்னோட தன்மானத்தை வம்புக்கு இழுக்குறியா?” – சுமித்ரா குமாரி.

“நீங்க தப்பா புரிஞ்சுட்டிருக்கீங்க! தெருவுல நாடகம் போடுறதுக்கு free-யா என்னைக் கூப்பிட்டீங்கன்னாக்கூட அடுத்த நிமிஷமே நான் அங்க வந்து நிப்பேன்” – ஜம்ஷெத்கான்.

“உனக்கு வாழ்க்கையில் ஜெயிக்கிறதுக்கு ராய் டாக்கீஸ் ஒரு வாய்ப்பு குடுக்குது” – சுமித்ரா குமாரி.

“நான்தான் ஏற்கனவே ஜெயிச்சுட்டேனே! ம்ம்ம்… ராய் டாக்கீஸ்ல்ல நடிக்கிறதுனால வாழ்க்கையில இன்னும் அங்கீகாரம் கிடைக்கலாம். ஆனா அது வெறும் fame-தான் success இல்ல. Success-க்கான அளவுகோல் என்னைப் பொறுத்தவரைக்கும் ஒண்ணுதான். எந்த நேரத்துல ஒரு வேலைய செய்யிறதுக்கு மனசு விரும்புதோ அந்த நேரத்துல அந்த வேலைய சுதந்தரமா செய்ய முடிஞ்சா அதுதான் உண்மையான success-ஸா இருக்கும்.”

சுமித்ரா குமாரிக்கும் ஜம்ஷெத்கானுக்கும் இந்த உரையாடல் நிகழ்ந்து மூன்றுவாரங்கள் கழித்து, ராய் டாக்கீஸ் ஸ்டுடியோவில் இருக்கும் புரஜெக்டரில் ஜம்ஷெத்கான் audition செய்த காட்சியை ஸ்ரீகாந்த் ராய் பார்த்துக்கொண்டிருக்கிறார். அதில்,மகன் துப்பாக்கியைக் கையில் வைத்து அப்பாவிடம் விரக்தியோடு சொல்கிறான், “என் வாழ்க்கையில நான் செஞ்ச தப்பால இப்ப வருத்தம் மட்டும்தான் எஞ்சியிருக்கு, ஆனா அதுக்காக நான் வருத்தப்பட்டு, அதுக்கு மன்னிப்பு கேட்கணும்ன்றது, என் கொள்கைக்கு ரொம்ப விரோதமானது. ஆனா அதுக்கு முன்னாடி என்கிட்ட இருக்குற கொஞ்ச நஞ்ச மனிதாபிமானத்தையும் இழக்குறதுக்குள்ள இங்கிருந்து கிளம்பிடுங்கப்பா….”

“குன்வர்…, நீ அப்பிடி எல்லாம் செய்யக்கூடாது” – அப்பா.
அப்பாவை நோக்கி துப்பாக்கியை நீட்டி, மகன் சொல்கிறான், “இது இன்ஸ்பெக்டர் வர்மாவுக்காக, இது சுஜாதாவோட கணவன் சோஹனுக்காக, கடைசியா இந்த உலகம் எனக்குக் குடுத்த துரோகத்துக்காக…! நான் அத்தனை பேரையும் அழிக்கத்தான் போறேன். என்னைத் தடுக்கலாம்னு குறுக்க வந்தீங்கன்னா என் அப்பான்னுகூட பாக்கமாட்டேன்.”
“கொன்னுடு…! என்னைக் கொன்னாலும் பரவாயில்ல… ஆனா(ல்), சுஜாதாவோட கணவன் கௌரவத்துக்கு ஏதாவது களங்கம் ஏற்பட்டா நான் உன்னை சுட்டுடுவேன்…!” என்கிறார் அப்பா.

“உங்களுக்கு அதான் வேணும்ல, என்னை மன்னிச்சுடுங்கப்பா” என்று சொல்லிக்கொண்டே, மகன் துப்பாக்கியை எடுத்து அப்பாவைக் குறிபார்க்கும் முன்பு, அப்பா மகனைச் சுட்டுவிடுகிறார்.

குண்டடி பட்ட மகன், அப்பாவிடம், “அப்பா என்னோட
துப்பாக்கில்ல குண்டே இல்லப்பா” என்று பரிதாபமாகச் சொல்லிக்கொண்டே இறந்துபோகிறான்.

இந்தக் காட்சி புரஜக்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஸ்ரீகாந்த் ராய் இந்தக் காட்சியைப் பார்த்த பிறகு, தன்னுடைய உண்மையான விசுவாசி பினோத் தாஸிடம் “சுமித்ரா குமாரி லக்னோல்ல இருக்கா(ள்). மூணு வாரத்துக்கு முன்னால ஜம்ஷெத்கானைக் கூப்பிட்டு வர்றேன்னு போனா(ள்). ரெண்டு பேரும் அங்க ரொமான்ஸ் பண்ணிட்டிருக்காங்க. ஹீரோவ introduce பண்ணணும்ன்ற pressure மட்டும் இல்லைன்னா, சுட்டுக் கொல்லச் சொல்லியிருப்பேன். உனக்கு லக்னோவுக்கு டிக்கெட் போட்டிருக்கேன். எனக்கு என்னோட மனைவியும், இந்த ராய் டாக்கீஸோட ஸ்டார் மதன்குமாரும் இங்க வந்தாகணும். ரெண்டு பேரையும் இங்க கூப்பிட்டு வா” என்று சொல்கிறார்.

ஆம், மூன்று வாரங்களுக்கு முன்பு ஜம்ஷெத்கானை அழைத்து வருவதற்காகச் சென்ற ஸ்ரீகாந்த் ராயின் மனைவி புகழ்பெற்ற நடிகை சுமித்ரா குமாரி இப்போது உலகை மறந்து அவனோடு வாழ்ந்துகொண்டிருக்கிறாள். “உன்னால ஒரு சாதாரண தியேட்டர் ஆர்ட்டிஸ்டோட வாழமுடியுமா?” என்று ஜம்ஷெத்கான் கேட்கிறான். “I will அந்த சாக்குல நான் கொஞ்சம் வாழ ஆரம்பிப்பேன். ராய்டாக்கீஸ்ல என்னால மூச்சுக்கூட விடமுடியவில்லை” என்று சொல்லி அவன்மீதான காதலில் கட்டுண்டு கிடக்கிறாள்.

ஸ்ரீகாந்த் ராயும் சுமித்ரா குமாரியும் இணைந்து உருவாக்கிய ஸ்டுடியோதான் ராய் டாக்கீஸ். அவர்கள் இணைந்து நடித்த நளதமயந்தி என்ற படம் அப்போது தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், சுமித்ரா குமாரி ஜம்ஷெத்கானோடு ஓடிப்போய்விட்டாள் என்ற செய்தி சினிமா வட்டாரத்தில் மிகப் பெரிய கிசுகிசுவாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. “இப்போ இருக்குற நிலைமையில ஜம்ஷெத்கான இங்க கூப்பிட்டு வந்தீங்கன்னா…. அவன் சுமித்ரா குமாரியோட ஒண்ணா இருந்திருவானே?” எனத் தயங்கித் தயங்கிச் சொல்கிறான் பினோத் தாஸ்.

“பொண்ணுங்களும் பொண்டாட்டிகளும் வந்துட்டும்
போயிட்டும் இருப்பாங்க. ஆனா(ல்), இந்த மாதிரி ஸ்டார்ஸ் கிடைக்கமாட்டாங்க. ஒருவேளை பொண்டாட்டியா, ஸ்டுடியோவான்னா நான் ஸ்டுடியோவத்தான் காப்பாத்துவேன்” என்கிறார் ஸ்ரீகாந்த் ராய். சினிமா என்பது வெறும் கலையில்லை. அது ஒரு ராட்சசக்கனவு. அந்தக் கனவுக்காக எல்லாவற்றையும் இழந்திருக்கிறார்கள். புதைந்துபோன இந்தியத் திரையுலகின் மாபெரும் கனவுகளைத் தூசுதட்டிக் காட்டியிருக்கிறது ஜூபிளி.

தமிழில் இருவர் என்ற திரைப்படம் வந்திருக்கிறது. இந்தியில் சமீபத்தில் பாம்பே வெல்வெட் வந்தது. கடந்த கால திரைப்பட ஸ்டுடியோக்கள், திரைப்பட ஆக்கங்கள், நிகழ்ந்த கதைகள், பழைய தியேட்டர்கள், ரசிகர்கள், வெற்றிகள், தோல்விகள் போன்றவற்றைக் காட்டும் படங்கள் பல வந்திருக்கலாம். இப்போது ஜூபிளி வந்தி
ருப்பதால் இதன் தாக்கத்தில் இன்னும் நிறைய படங்களோ, வெப்சீரிஸ்களோ வரலாம். ஆனால் ஜூபிளி போல கனவுகளையும், காதல்களையும் கலந்து தரும் இன்னொரு படைப்பாக்கம் வருவது சற்றுக் கடினம்தான். அப்படி என்ன இந்த வெப் சீரிஸில் இருக்கிறது என்று கேட்பீர்கள். கதை, திரைக்கதை, நடிகர்கள்,நடிப்பு, நுணுக்கமான காதல் உணர்வு, அழகியல், ஒளிப்பதிவு, இசை, ஆர்ட், எடிட்டிங் ஆகியவை அனைத்தும் திரையாக்கத்தில் மிகச் சரியாகப் பொருந்துவது கடினம். எப்போதாவது அரிதாக நிகழும் அதிசயம். அது ஜூபிளியில் நிகழ்ந்திருக்கிறது. அதனால்தான் கடந்த இரண்டு மாதமாக உலகெங்கும் இருக்கும் ரசிகர்கள் ஜூபிளியைக் கொண்டாடி வருகிறார்கள்.

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு, 1947 ஜூன் மாதம் 3ஆம் தேதி பஞ்சாப், வங்காளம் போன்ற எல்லைப்புற மாநிலங்களில் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையை முன் வைத்து, கலவரங்கள் வெடிக்க ஆரம்பித்தன. எல்லைப்புறத்தில் வெடித்த கலவரம் பீகார், உத்தரப் பிரதேசத்திற்குப் பரவிக்கொண்டிருந்த காலகட்டம் அது. 1947 ஜூலை மாதம் 13ஆம் தேதியில் ஜூபிளியின் கதை ஆரம்பிக்கிறது.
ராய் டாக்கீஸ் என்ற பம்பாயின் மிகப் பெரிய சினிமா ஸ்டுடியோவின் நிறுவனர் ஸ்ரீகாந்த் ராய் தன்னுடைய அடுத்த படத்திற்கு நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜம்ஷெத்கானையும், மனைவி சுமித்ரா குமாரியையும் அழைத்துவரும்படி பினோத் தாஸிடம் சொல்கிறார்.

பினோத் தாஸ் லக்னோ போகும் ரயிலில் ஜெய் கன்னா என்பவனைச் சந்திக்கிறான். அவன் இளமையும் துள்ளலும் நிறைந்தவன். போகும் ரயிலில் ஒரு பெண்ணிடம் கசமுசா பண்ணிப் போலீஸில் மாட்டிக்கொள்கிறான். பினோத் தாஸ் ஐந்து ரூபாய் போலீஸுக்கு லஞ்சமாகக் கொடுத்து அவனைக் காப்பாற்றுகிறான். அவனிடம் பேசும்போது, அவன் கராச்சியில் கன்னா தியேட்டர் என்ற நாடகக் கம்பெனி நடத்துவதாகவும், ஜம்ஷெத்கானைக் கராச்சிக்கு அழைத்துச் செல்ல வந்திருப்பதாகவும் சொல்கிறான்

இப்போது பினோத் தாஸுக்கு, ‘தாம் தேடி வரும் ஜம்ஷெத்கான் லக்னோவிலேயே இருக்கப் போவதில்லை, கராச்சிக்குப் போகப் போகிறான்’ என்ற செய்தியும் கூடுதலாகக் கிடைக்கிறது. லக்னோவில் இறங்கியதும் இன்னொரு விசயமும் அவனுக்குத் தெளிவாகத் தெரிகிறது. ஜம்ஷெத்கான் மட்டுமில்லை, அவனோடு சுமித்ரா குமாரியும் கராச்சிக்கு போகப் போகிறாள். கோடிக்கணக்கான சொத்தை விட்டு, புகழ்பெற்ற சினிமா நடிகை என்ற பட்டத்தைத் துறந்து, ஓர் அன்றாடங்காய்ச்சி நடிகனோடு கராச்சி போகப் போகிறாள் என்பதைக் கேட்டு அதிர்ச்சியடைகிறான். இந்தச் செய்தியை ஸ்ரீகாந்த் ராய்க்குத் தெரிவிக்கிறான் பினோத் தாஸ்.

ஜெய் கன்னா லக்னோ இறங்கியதும் ஜம்ஷெத்கானைச் சந்திக்கிறான். அந்தக் காலத்தில் ஒருவன் களைப்பாக இருந்தால், விலைமாதரிடம் ஆற்றுப்படுத்துவது இயல்பான விசயம் போல. ஜெய் கன்னாவை நிலோஃபர் என்ற விலைமாதுவிடம் செல்லும்படி கூறுகிறான் ஜம்ஷெத். நிலோஃபர் ஜமின்தார்கள், நிஜாம்கள், சேட்டுகள் போன்ற பணக்காரர்களைத்தான் தன்னிடம் அனுமதிப்பாள். ஒரே ஒருவனுக்கு மட்டும்தான் பணமே இல்லாமல், காதலோடு அனுமதித்து, சுகத்தை வழங்கி, செலவுக்கு இல்லையென்றால் பணமும் கொடுப்பாள். அவன்… ஜம்ஷெத்கான்!

இந்தக் கதையில் மிகக் குறைவான நேரமே வந்தாலும், கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட பாத்திரம் ஜம்ஷெத்கான். அவனைக் கடைகோடியில் இருக்கும் விலைமாதுவும் நேசிக்கிறாள். புகழ்பெற்ற நடிகையும் நேசிக்கிறாள். அவனை நண்பர்களும் நேசிக்கிறார்கள். பணியாளர்களும் நேசிக்கிறார்கள். கலைவானில் நட்சத்திரமாக மின்னுவதற்குரிய அத்தனை தகுதிகளோடும் இருப்பதால் அவனை எல்லோரும் நேசிக்கிறார்கள்.

இந்தச் சூழலில், பிரிவினைக் கலவரம் லக்னோவில் மிக அதிகமாகிறது. கலவரத்திற்கு நடுவே ஜம்ஷெத்கான் லக்னோ ரயில்வே ஸ்டேசன் செல்வதற்காகக் காத்திருக்கிறான். பினோத் தாஸ் அவனைத் தன் காரில் ஏறிக்கொள்ளுமாறு சொல்கிறான். செல்லும்வழியில் பினோத் தாஸ் ராய் டாக்கீஸின் ஆள் என்பது ஜம்ஷெத்கானுக்குத் தெரிகிறது. காரிலேயே இருவரும் சண்டைபோட்டுக் கொள்கிறார்கள். கார் கவிழ்ந்துவிடுகிறது. பினோத் தாஸ் கஷ்டப்பட்டு வெளியே வந்துவிடுகிறான். ஜம்ஷெத்கானால் வெளியே வரமுடியவில்லை. தன்னைக் காப்பாற்றும்படி கேட்கிறான். ஆனால் பினோத் தாஸ்
அவனைக் காலால் எட்டி எட்டி உதைத்து மயக்க மடையச் செய்கிறான்.

இதற்கு நடுவே, கலவரக்காரர்கள் வருகிறார்கள். பினோத்
தாஸ் தப்பித்து ஓடிவிடுகிறான். ஜம்ஷெத்கானைக் கலவரக்காரர்கள் இழுத்துச் சென்று கொன்றுவிடுகிறார்கள். கலவரக்காரர்களால் ஜம்ஷெத்கான் கொல்லப்பட்டான் என்பது பினோத் தாஸுக்கும், ஜெய் கன்னாவுக்கும் தெரிகிறது. இதன்பிறகு பினோத் தாஸ் பம்பாய்க்கு வந்துவிடுகிறான். கராச்சிக்குச் செல்லவிருந்த சுமித்ரா குமாரியும் ஸ்ரீகாந்த் ராயால் பம்பாய்க்கு அழைத்துச் செல்லப்படுகிறாள். இந்தியாவிலிருந்து கராச்சி சென்ற ஜெய் கன்னாவும் அகதியாக பம்பாய்க்கு வருகிறான். லக்னோ கலவரத்தினால் பாதிக்கப்பட்டு நிலோஃபரும் பம்பாய்க்கு வருகிறாள். அதன்பிறகு இவர்களைச் சுற்றியே கதை நகர்கிறது.

பினோத் தாஸ் ஸ்ரீகாந்த் ராயால் மதன்குமார் ஆக்கப்படுகிறான். தன் காதலனைக் கொன்ற பினோத் தாஸைக் கொலைகாரன் என்று நிரூபித்து வாழ்க்கையிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று அவனைத் துரத்துகிறாள் சுமித்ரா குமாரி. மும்பை வந்து அகதியாக வாழும் ஜெய் கன்னா வறுமை, துயரம், போராட்டங்களைக் கடந்து இயக்குநராகவும், நடிகராகவும் வளர்கிறான். பம்பாய் வந்தபின் ஒரு விபச்சார விடுதியில் மாட்டிக்கொண்டு, பின் அங்கிருந்து தப்பித்து, ஒரு சேட்டுக்கு ஆசை நாயகியாகி, துணை நடிகையாகி, கதாநாயகி
யாகிறாள் நிலோஃபர். இவர்களில் சிலருடைய இறப்பு, சிலருடைய இழப்புகளோடு முதல் சீசன் முடிவடைந்திருக்கிறது. இரண்டாவது சீசன் எடுப்பதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.

ஜூபிளி நம்மை 1947 – 1953 காலகட்டத்திற்கே அழைத்துச் செல்கிறது. கதைகூட முழுவதும் கற்பனையில்லை. 1930- 40 களில் தேவிகா ராணி என்ற நடிகை புகழ்பெற்றிருந்தார். இவர் ரவீந்திரநாத் தாகூரின் வழிமுறையில் வந்த ஒருவரின் மாமன் மகள். பட்டப்படிப்பை லண்டனில் முடித்தவர். ஹிமன்ஷு ராய் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஜெர்மன் சென்று திரைப்படத்திற்கான பயிற்சி எடுத்தார்கள். இந்தியா வந்து மும்பை டாக்கீஸ் என்ற ஸ்டுடியோவை ஆரம்பித்திருக்கிறார்கள். கர்மா (1936) என்ற படத்தில் இருவரும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் வரும் உதடோடு உதடு முத்தம் பதிக்கும் காட்சி புகழ்பெற்றது என்கிறார்கள். 1937-இல் தன்னோடு நடித்த நஜூம் உல் ஹசன் என்ற நடிகரைக் காதலித்து அவரோடு ஓடிவிட்டார் தேவிகா ராணி. இதனால் ஸ்டுடியோ மிகப் பெரிய ஆட்டம் கண்டது. பின்னர் ராய் தன்னிடம் பணியாற்றிய சுஷாதர் முகர்ஜி என்பவரை அனுப்பி தேவிகா ராணியை அழைத்து வந்திருக்கிறார். ஸ்டுடியோவின் ஆதரவு இல்லாமல் எந்த நடிகரும் வாழமுடியாது என்பதால் நஜூம் உல் ஹசன் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டார்.

சுஷாதர் முகர்ஜியின் மைத்துனன் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவர். பொதுவெளியில் தயக்கத்தோடு பேசுபவர். அவரைத் தயார்படுத்தி அசோக்குமார் ஆக்கினார் ராய். இந்தியத் திரையுலகில் மிக நீண்டகாலம் புகழோடு இருந்த நடிகர்களில் அசோக் குமாரும் ஒருவர். மிகக் குறைந்த வயதில் ஹிமன்ஷு ராய் இறந்த பிறகு, 1944 வரை திரைப்படங்களைத் தயாரித்தார் தேவிகா ராணி. பின்னர் திரைப்படத் தொழிலிலிருந்து முற்றாக விலகி, ஸ்வெட்லோவ் ரோரிச் என்ற ரஷ்யாவைச் சார்ந்த ஓவியரைத் திருமணம் முடித்து, பெங்களூர் அருகே ஒரு பண்ணைவீட்டில் வாழ்ந்து மறைந்தார். தேவிகா ராணி இறப்புக்குப் பின்னே வாரிசு இல்லாததால், அவருடைய 420 ஏக்கர் பண்ணை வீட்டைக் கன்னட அரசாங்கம் எடுத்துக்கொண்டதாகச் சொல்கிறார்கள். பம்பாய் டாக்கீஸும் சிதிலமடைந்த நிலையில் இன்றும் இருப்பதாகச் சொல்கிறார்கள். மாபெரும் கனவுகள் எல்லாம் மாபெரும் சோகத்தோடுதான் முடியும்போல!

இன்னொரு பக்கம், ஜெய் கன்னா பாத்திரம் தேவ் ஆனந்தை ஞாபகப்படுத்துவதாகக் கூறுகிறார்கள். நிலோஃபர் என்ற கதாபாத்திரம் நர்கிஸ் தத் (சஞ்சய் தத்தின் அம்மா) என்ற நடிகையின் சாயல்கள் பலவற்றைக் கொண்டது என்கிறார்கள். அதாவது, நர்கிஸின்
பாட்டி பெரும் பணக்காரர்களின் ஆசைநாயகியாக இருந்திருக்கிறார். அந்தச் சூழலில் ஆடல் பாடல் பலவற்றைக்கற்றுத் திரைத்துறைக்கு வந்தவர் நர்கிஸ் என்கிறார்கள். எனவே, ஜூபிளியின் கதை என்பது நூறு சதம் கற்பனை இல்லை. இதில் வரும் ஆண் பெண் உறவுகள் சிலரை அதிர்ச்சியடைய வைக்கலாம். சினிமாவைவிட நிஜக் கதைகள் எப்போதும் அதிர்ச்சிகரமாகவே இருக்கும். ஜூபிளி கடந்த கால உண்மைகளில் சற்றே கற்பனையைத் தூவிவிட்டிருக்கிறது அவ்வளவுதான்!

ஜூபிளியைப் பல்வேறு கோணங்களில் ரசிக்கவும் விமர்சிக்கவும் இடமிருக்கிறது என்றாலும், அளவு கருதி, கதாபாத்திரங்களையும், காட்சிகளின் அழகியல் சிலவற்றையும் கூறலாம் என்று நினைக்கிறேன். ஜம்ஷெத்கானை ஏற்கனவே சொல்லிவிட்டதால், ஸ்ரீகாந்த் ராயிலிருந்து தொடங்கலாம்.

ஸ்ரீகாந்த் ராய்: இந்தக் கதாபாத்திரத்தில் பெங்காலி சினிமாவின் புகழ்பெற்ற நடிகர் ப்ரோசன்ஜித் சட்டர்ஜி நடித்திருக்கிறார். தமிழ் டப்பிங்கில் இந்தக் கதாபாத்திரத்திற்கு விஜய் ஆதிராஜ் என்பவர் குரல் கொடுத்திருக்கிறார் என்று சொல்லக்கூடாது, உயிர் கொடுத்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும். கம்பீரமான கணீர் குரலால் தமிழிலும் ஸ்ரீகாந்த் கதாபாத்திரம் கவனிக்கப்படுகிறது. சினிமாவைத் தொழிலாகப் பார்க்காமல் காலம் தாண்டிய கனவாகப் பார்க்கிறார் ராய். அந்தக் காலத்தில் பாடல் காட்சிகள் என்பது நடிகர்கள் நின்ற இடத்திலேயே நிற்க, சுற்றிலும் ஆர்க்கெஸ்ட்ரா வாசித்துப் படமாக்கியிருக்கிறார்கள். கேமரா ஒரே இடத்தில் static-காக நிற்பதால் என்ன சுவை இருந்துவிடப் போகிறது என நினைத்து முதன் முதலில் playback singing என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துகிறார். ‘உடே உடனுக்காடோலே’ என்ற பாட்டு ஓடும்போது ப்ரோசன்ஜித் சட்டர்ஜியும், அபர்சக்தி குரானாவும் நடிக்கும் அந்தக் காட்சியின் அழகை ரசித்துக்கொண்டே இருக்கலாம். playback singing-கைப்போல சினிமாஸ்கோப்பை அறிமுகப்படுத்த நினைக்கிறார். 1944-இல் தொடங்கிப் பல ஆண்டுகளாகத் தயாரித்துக்கொண்டிருக்கும் முஹல்லே ஆஸாம் திரைப்படத்தின் செலவுகளைப் பற்றி உலகமே திட்டிக்கொண்டிருக்கும்போது, அதைப் போன்ற பிரமாண்ட படத்தைத் தானும் தயாரிக்க வேண்டும் என நினைக்கிறார்.

அதற்காகத் தான் வைத்திருந்த பணத்தை எல்லாம் கேம்ப்ளிங்கிலும், பங்கு மார்க்கெட்டிலும் விட்டு சம்பாதிக்க நினைக்கிறார். “ஸ்ரீகாந்த் ராய் எப்பவும் காலத்தைக் கடந்து நிற்கிறவன். என்னைக் கடந்து போற தகுதி அந்தக் காலத்துக்கு கிடையாது” என்று சொல்லும் ஸ்ரீகாந்த் ராயின் தன்னம்பிக்கையில் நம்மையும் கட்டிப்போட்டுவிடுகிறார்.
மதன்குமார்: ஆயுஸ்மான் குரானாவின் தம்பி அபர்ஷக்தி குரானாதான் மதன்குமார் வேடத்தில் நடிக்கிறார். நிஜத்தில் அசோக்குமார் கொஞ்சம் கூச்ச சுபாவம் கொண்டவர் என்கிறார்கள். இந்தக் கதையில் இறுக்கமான தயக்கத்தையும், தகிக்கும் வேட்கையையும் நடிப்பில் காட்டியிருக்கிறார் அபர்ஷக்தி குரானா. பினோத் தாஸாக இருக்கும்போது அவர் காட்டும் அடக்கம்,குற்றவுணர்வில் அவர் காட்டும் பயம், மதன்குமாராக அவர்காட்டும் கம்பீரம் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. “எங்களோட இந்தத் தொழில் இருக்குல்ல… படம்
காட்டுற தொழில்… இங்க எல்லாருக்கும் ரொம்ப தெரிஞ்சமாதிரி பேசுறதுக்குப் பிடிக்கும். பேசாம இருக்குறவன் தான் இங்க கடைசியில ஜெயிப்பான்” என்று கதையின் தொடக்கத்தில் பினோத் தாஸ் பேசுவான். சினிமாத்துறையைப் பொறுத்தவரை என்றென்றைக்கும் பொறுத்தமான வசனம் இது. பினோத் தாஸாக இருந்து, ராய் டாக்கீஸுக்குள் சுமித்ரா குமாரி கொடுக்கும் தொல்லைகளை எல்லாம் கடந்து, மெல்ல மதன்குமாராக வளர்ச்சியடையும் காட்சிகளில் காட்டும் அவரது நடிப்பு மிகச் சிறப்பாக இருக்கிறது.

நிலோஃபர்: தமிழில் மாலைநேரத்து மயக்கம் என்ற படத்தில் நடித்த வாமிகா கப்பிதான் ஜூபிளியில் நிலோஃபராக நடித்திருக்கிறார். ஆனால் ஜூபிளியில் நிலோஃபரைப் பார்த்தபிறகு கனவுகளின்றி உங்களால் உறங்கமுடியாது. நிலோஃபரைப் பற்றிச் சொல்லும்போதே ஜெய்கன்னாவைப் பற்றியும் சொல்ல வேண்டும். ஜெய் கன்னா என்ற கதாபாத்திரத்தில் சிதாந்த் குப்தா என்பவர் நடித்திருக்கிறார். மிக இளமையான தேவ் ஆனந்தைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். அகதியாக, வேலை தேடி பம்பாய் தெருக்களில் அலையோ அலை என்று அலையும்போது ஒரு மழைநாளில் நிலோஃபர் ஜெய் கன்னாவைப் பார்க்கும் அந்தக் காட்சியின் அழகியலையும், அப்போது ஜெய் கன்னாவின்மேல் மெல்லிதாக வெளிப்படும் நிலோஃபரின் காதலையும், அவள் கண்களையும் கேமரா கவிதையாக்குகிறது. அந்த இடத்தில் மட்டுமில்லை, ராய் டாக்கீஸில் பணியாளாக இருக்கும் ஜெய்கன்னாவுக்கு உணவு ஊட்டிவிடும்போது; ஜெய் கன்னா டைரக்டராகி கோபப்பட்டு கத்தியபிறகு அவன்மீது கொள்ளும் கோபத்தின்போது; மௌனமாக அவள் கண்கள் கொள்ளும் ஊடலின்போது; அவனை மன்னித்து அவள் சிந்தும் சிறு புன்னகையின்போது, படப்பிடிப்பின்போது, ஜெய் கன்னாவை மணக்கப்போகும் பெண்ணைப் பார்க்கும்போது, ஜெய் கன்னாவின்மீது படிந்துவிட்ட மணல் துகள்களைத் தட்டிவிடும்போது எனப் பல இடங்களில் நிலோஃபர் நம்மைக் கிறங்கடிக்கிறாள்.
இந்த வெப் சீரிஸில் ஓர் இடத்தில், “சினிமா மக்களோட தரத்தை உயர்த்திக்கொண்டு போக முடியும். By giving them a taste of poetry, of photography of music, of aspiration. Cinema can empower people” என்ற அருமையான வசனம் வரும். படத்தின் இயக்குநர் விக்கிரமாதித்ய மோத்வானே இப்படியொரு வசனத்தை வைத்ததோடு, அந்த அழகியல்களை எல்லாம் தன் படத்தின்மூலம் வெளிக்காட்டியும் இருக்கிறார். விக்கிரமாதித்ய மோத்வானே இதற்கு முன் எடுத்த படங்களில் Lootera என்ற படத்தைப் பார்த்திருக்கிறேன். அந்தப் படமும் 1950களில் கொல்கத்தாவில் நடக்கும் கதைதான். அந்தப் படத்திலும் சோனாக்ஷி சின்ஹா – ரன்வீர் சிங்க் காதல் காட்சிகளைக் கவித்துவமாகக் காட்டியிருப்பார். கடந்த காலப் பின்னணியில் உணர்வு பொங்கும் காதலை முன்னிறுத்துவதில் மோத்வானி மிகச் சிறந்தவராகத் தெரிகிறார்.

இந்த வெப் சீரிஸில் அரசியல் ரீதியாகச் சொல்லப்படும் காட்சிகள் சிலவற்றை விமர்சகர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில், ரஷ்யாவும் அமெரிக்காவும் தங்கள் வல்லாண்மையை நிரூபிக்க இந்தியாவில் ரகசியமாகச் சில வேலைகள் செய்தார்கள் என்று காட்டுகிறார்கள். இந்தியப் படங்களில் மிகப் பெரிய முதலீடு செய்து, ரஷ்யாவின் சோசலிஸத் தத்துவங்களையும், ரஷ்ய அதிபர் ஸ்டாலினையும் பற்றிப் பிரச்சாரம் செய்யும் படங்களை எடுக்க வேண்டும் என்று ரஷ்யாவிலிருந்து வந்த அதிகாரிகள் கேட்டுக்கொள்வதாகக் காட்சிகள் வருகின்றன.

ரஷ்யாவின் தலையீடு இல்லவே இல்லை என்று மறுக்க முடியாது. மேரே நாம் ஜோக்கர், ஆவாரா போன்ற படங்கள் ரஷ்ய திரையரங்குகளில் போடப்பட்டு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன என்கிறார்கள். தேவிகா ராணி 1944-இல் ஒரு ரஷ்ய ஓவியனைத்தான் திருமணம் செய்திருக்கிறார். இந்த வெப் சீரீஸிலும் சுமித்ரா ராணியை ஒரு ரஷ்ய புலனாய்வு அதிகாரி விரும்பிக் கையைப் பிடிப்பதாக ஒரு காட்சி வருகிறது. எனவே, ஆதாரமே இல்லாமல் அரசியலைத் திணித்திருக்கிறார்கள் என்று சொல்லமுடியாது.
ஆனாலும், இந்திப் பாடல்கள் இந்தியக் கலாச்சாரத்திற்கு எதிரானது எனச் சொல்லி வானொலிகளில் ஒலிபரப்பத் தடைவிதிக்கப்பட்டதற்குப் பின்னால் ரஷ்ய அதிகாரியின் அரசியல் செயல்பாடுகள் இருந்தன என்றும், பணம் கொடுத்தாலும், சோசலிஸ கருத்துகளைப் பிரதிபலிக்க இந்திய ஸ்டுடியோக்களும் நடிகர்களும் தயங்கினர் என்றும், உழைப்பாளிகளைக் காப்பாற்றும் ஹீரோக்களின் திரைப்படக் கதைகளுக்குப் பின்னால் ரஷ்ய பண முதலீடுகள் இருந்தன என்றும்,
நடிகர்களின் அன்றாட செயல்பாடுகளைக் கண்காணிக்க ரஷ்ய அதிகாரிகள் டெலிபோனில் மைக் வைத்து ஒட்டுக் கேட்டார்கள் என்றும் கூறுவதை விமர்சகர்கள் கடுமையாக எதிர்த்துள்ளார்கள். அதேபோல, ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகள் இயங்கிய அதே காலகட்டத்தில் அமெரிக்க உளவு அதிகாரிகளும் செயல்பட்டார்கள். ஆனால் அவர்களைப் பற்றிய தவறான பதிவுகள் எதையும் ஜூபிளியின் இயக்குநர் முன்வைக்கவில்லை. இயக்குநருக்கு அமெரிக்க ஆதரவு கருத்தின்மீதும், ரஷ்ய எதிர்ப்புக் கருத்தின்மீதும் ஆர்வம் அதிகம் இருப்பதையே இவையெல்லாம் காட்டுகின்றன. இருந்தபோதும் பெருங்கனவோடு சினிமாவைக் காதலித்தவர்களையும், காதல் என்னும் பெருங்கனவில் காணாமல் போனவர்களையும் கவித்துவமாகக் காட்சிப்படுத்திய ஜூபிளியைப் பார்த்துக் கொண்டாடுவோம்.

sankarthirukkural@gmail.com