‘இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது சார்’ ரவி மூன்றாவது முறையாக சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் மார்டினிடம் கூறினான். ‘எவனோ நாலுபேருக்கு அப்படி நடந்தால்…. அது எப்படி ஒரு அலை ஆகமுடியும்?.’ என்றார்  மார்ட்டின், அவருக்குக் கொட்டாவி…. கொட்டாவியாக வருகிறது. ‘சனியன்….. இந்த சைபர் – கிரைம்க்கு வந்தாலும் வந்தேன்… தூக்கம் அம்போ’ என்றார். உண்மைதான் இப்போது மணி இரவு 01.30…  ‘அப்படி எல்லாம் செல்ஃபோன்ல முடியாதுப்பா’ என்றார் மறுபடி.

விதவிதமா மனிதர்கள் இணையக் குற்றங்களில் ஈடுபட்டுப் படு கேஷீவலாக தப்பியும் விடுகிறார்கள். நிஜ குற்றங்கள்போல இவற்றை துப்பு துலக்குவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை’ ‘பேசாமல்… ஒரு ஐ.டி.கம்பெனியில் – சென்னையோ பெங்களுரோ….  லகரத்தில் சம்பாதித்து …. புருஷ லட்சணத்தோடு ஸ்திரி சம்போகம்… வாரக் கடைசி பார்டி அது இது என்று போயிருக்கலாம்’ என்று ரவியும் நினைப்பது உண்டு. படித்தது ஹேக்கிங் தொழில்நுட்பம்…. மென்பொருள் வித்தகன் படிப்பு. ஆனால் கிடைத்தது ‘துப்பு‘ த் தொழில். அப்பா போலீசு பணியில் இருக்கும் போதே சாராய கும்பலால் லாரி ஏற்றி சிவலோகப்  பதவி அடைந்து கருணை அடிப்படையில் இந்த பதவியை ரவிக்குத் தாரை வார்த்ததால்… இரண்டு அக்காக்களை கரைசேர்க்க … ரவி அரசுக்கு  உழைக்கிறான்.

‘ஆறுவகைக் குற்றங்கள் ரொம்ப சர்வசாதாரணமாக இணைய – வெளியில் நடக்கிறது. ’ என்பார் மார்ட்டின். அவர் ஒரு ரெண்டுகெட்டான் கேஸ். ‘ஐ.பி.எஸ் தேர்வு எழுதி தேராத கேஸ்கள்  இப்படித்தான்  அரைவேக்கடாக இருக்கும்’ என்று சக. காவலர் மேடம் ரத்னா அவர் காது படவே சொல்வது வழக்கம். ‘பத்து தடவை சொன்னால்தான்  புரியும்.’ ஆனால் மார்ட்டினைப் பொறுத்தவரை சைபர் கிரைம் அந்தந்த ஊரைச் சார்ந்தது. தில்லி, மும்பை… ஏன் கான்பராவில் இருந்தும் கனடாவில் இருந்தும் கூட இந்த சிந்தாதிரிப்பேட்டை  சார்ந்து  சைபர் கிரைம் சாத்தியம் என்பதை தனது இன்ஸ்பெக்டருக்குப் புரியவைப்பது ரவிக்கு  பெரிய சவாலாக இருந்தது. இணையக் குற்றம் என்பதே ஏதோ கம்ப்யூட்டர் உள்ள ஆபிசிலும் கம்ப்யூட்டர் செண்டரிலும் நடக்கும் திருட்டு இத்யாதி சம்பந்தப்பட்டது என கேனத்தனமாக உளறியவர்தான் இந்த மார்ட்டின். இதற்கு முன் மாடு காணாமல் போவது….. ஊர்கோயில் உண்டியல் திருட்டு என்று பார்த்தவருக்கு ஒரு திரைக்குப்பின் நடக்கும் எதுவும் நேரடி கிரைம் கிடையாது என்பதே ஆரம்பநிலைப்பாடாக இருந்தது. ஜோசப் அருள்நாதன் கேஸ் அந்த நினைப்பை மாற்றியது.

வெறும் கைபேசி முகநூல் வழியே ஹைதராபாத்காரன் ஒருவன் நம்ம ஊர் போலிஸ் அதிகாரியின் மனைவியைத் திருடமுடியும் என்பதே அந்த ஜோசப் அருள்நாதன் கேஸ். எப்படியோ கெஞ்சி கூத்தாடி எஃப்.ஐ.ஆர் போடாமலேயே மானம் காக்க திரும்ப அழைத்து வரப்பட்ட  எஸ்தர் ஜோசப் ஒரே வாரத்தில் ‘தற்கொலை’ ஆனார். நம் சிந்தாதிரிப்பேட்டையில் கம்ப்யூட்டர் செய்த முதல் கொலை அதுதான். (பிறகு ரொம்ப நாட்களுக்கு நம்ம கிறுக்கு மார்டின் கள்ளக்காதல் மட்டுமே சைபர் கிரைம் என்று நம்பிக்கொண்டிருந்தது,  வேறு விஷயம்)

‘இது ஒரு கிரைம் அலையாக இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு சார்’ என்கிறான் ரவி.  மார்ட்டின் சார்  நெற்றியில் கவலை ரேகைகள், அவருக்குத் தெரியும் இந்த ஹேக்கர் பாய் ரவி இல்லாமல் சொல்லமாட்டான். தவிர அவன் இல்லாமல் போயிருந்தால் லேடீஸ் ஹாஸ்டல் ஆன்லைன் முத்த பண மோசடி கேஸ், இல்லாத வங்கிப் பெயரை சொல்லி நடந்த தங்கவேட்டை, பாஸ்வேர்டு மோசடி என்று அதிரடியாக இறங்கித் தீர்த்து வைத்து இன்ஸ்பெக்டர் மார்ட்டின் கெத்து காட்டி இருக்கமுடியாது.

‘நாமே செய்து பார்க்கலாமே’  என்றவர் தனது கைப்பேசியை எடுத்து கூகுளை சொடுக்கினர். ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்  மகலா’ தட்டச்சு செய்தார். ரவி பதறினான்.

‘சார்…. சார் பதியாதீங்க…. நோ’ அவன் சொல்வதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. மார்ட்டின் சாரின் மொபைல் ஃபோன் பீங்….. என்று அலறியபடியே இருட்டானது…. எந்தக் கொம்பனாலும் அதற்கு திரும்ப உயிர்தரமுடியாது….. ஆட்டம் குளோஸ். ‘டேய்…. டேய்’ என்கிறார். இப்படி அப்படி பழைய காலத்து ரேடியோவை, டி.வி பெட்டியை தட்டுவதுபோல டப்டப் என்று தட்டினார் மார்ட்டின். சுவிட்ச் ஆஃப் பித்தானை அழுத்தி அழுத்திப் பார்த்தார். ‘சார்.. அது காலி…. முயற்சி பண்ணத் தேவை இல்லை…. நான்தான் சொன்னேனே…’ என்கிறான் ரவி. ‘அந்த வரி ஒரு பாஸ்வேர்டு போல மொபைல் ஃபோன்களைக் கொன்றுவிடுகிறது. என்றான். ‘கைபேசித் தாக்குதல்’.

‘65ஆயிரம் கொடுத்து என் மகள் வாங்கிய பாரின் ஃபோன். என் மனைவி  ஃபோன் பண்ணினா என்ன செய்வது? மார்ட்டின் பதறினார். ’65 ஆயிரம் டா. இரண்டு கறவைமாடு வாங்கிப் போடலாம்’ என்றார். பெண்காவலர் ரத்னா அந்தக் களேபரத்திற்கு இடையிலும் ‘மாடு… மார்ட்டின்’ என்று ரவிக்கு மட்டுமே கேட்கும்படி நகைக்கிறார்.

‘ஏம்பா… ரவி… எதுவுமே செய்யமுடியாதா’ கோவில் பிரசாதம் நீட்டுவதுபோல செல்போனை நீட்டினார்.

‘அதான்…. சொன்னேனே  சார்….. இது ஒரு சைபர் கிரைம் வேவ் அலை…. நீங்களே ஒரு விக்டிம்,,’ என்றான் ரவி மேசை கணிணியில் இருந்து முகத்தைத் திருப்பாமலே….

‘யாருன்னு பார்த்து பிடிச்சுகிட்டு வாங்கப்பா…. உதைக்கிற உதையில 65 ஆயிரத்தை கக்கனும்’ என்றார். பிறகு மேசைத் தொலைபேசி வழியே வீட்டை அழைத்து விஷயத்தை அந்த அர்த்த ராத்திரியிலும் பகிர்ந்தார்.

ரவி பிசி ஆனான். ஆங்கிலத்தில் ஹேப்பி பர்த்டே மகலா என்று டைப் செய்தால் ஒன்றும்  ஆகவில்லை. தமிழில் யூனிகோட் ஃபாண்ட் எல்லாமும் இந்த வைரஸின் ஆயுதமாக ஆக்கப்பட்டுள்ளதை முதலில் பதிவு செய்து கொண்டான். அடுத்த அரை மணி நேரத்தில் வேலூர், மயிலாடுதுறை முதல் மதுரை, ரேனிகுண்டா, விருதுநகர் என எல்லாக் காவல் நிலையங்களில் இருந்தும் போன்கள் பல லட்சம் கைபேசி அம்பேல். ஒரே ஒரு வாசகம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகலா. இதைத் தட்டச்சு செய்து பதிவேற்றினால் போதும் கைபேசியின் மதர்போர்டு காலி. வாட்ஸ்ஆப்,  இன்ஸ்டா முதல் முகநூல் வரை எதில் என்றாலும் இதே ரிசல்ட்தான். லாப்டாப், மேசைக் கணிணியில் அது வேலை செய்யவில்லை.

முதல் குளுவை பூக்கடைக் காவல்நிலைய சைபர் கிரைம்- அம்சத் விடுத்தான். ரவியின் வேலைத் தோழன். ஒன்றாகவே தேர்வாகி ஒன்றாகவே பயிற்சி பெற்றவன். ‘ரவி அண்ணே… மகலா கிரைமின் மையப்புள்ளி உங்கள் சிந்தாதிரிப்பேட்டை டவர் 1647 கே என்று வருகிறது’… என்றான். சிந்தாதிரிப்பேட்டை மேதினப் பூங்காவிற்கு  அருகே தான் அந்த டவர் 1647கே சென்னை தெற்கு காவல்துறை முதன்மைக்காவல் கண்காணிப்பாளர் நேரடியாக வாக்கி டாக்கியில் சைனில் வருகிறார். மீதி தூக்கத்தையும் இழந்த இன்ஸ்பெக்ட்டர் மார்ட்டின், ‘கலா… கலா…. அதாவது ம.கலா என்று யாரெல்லாம் இருக்கிறார்களோ… பிடித்துவா பிசி ரத்னா… புரிகிறதா’ என்கிறார். டீ சொன்னார்.

ரவிக்கு அவன் தனது கணினியில் கொடுத்திருந்த பணிமுடிந்து – பீங் என்று ஒலிவர…. ‘வாவ்…’ என்றான். ‘என்னப்பா கலா கிடைச்சிடுச்சா’ என்றார் மார்ட்டின். மேலும் மேலும் ஃபோன் ஒலித்துக்கொண்டே இருந்தது.

‘அதில்லை சார்…. இந்த வைரஸ் கிரைமின் அடிப்படை நம் மேதினப் பூங்கா அருகில் டவர் 1647 கே…. ஆனால் இதில் மாட்டி முதலில் செத்த கைபேசி இருந்த இடம் சட்டக்கல்லூரி…. வளாகம் புதுப்பாக்கம் சார் ஆவடி ஸ்டேஷன்’ என்றான்.

‘ஆவடியா… நம்ம பழனிச்சாமி ‘ என்றார் மார்ட்டின் அடுத்த பத்தே நிமிடங்களில் ஆவடியும் பிஸியானது. பலவகையான ம.கலாக்களின் எண்கள் ஆராயப்பட்டன. டீ வந்தது.

‘ஏம்மா….. ரத்னா இந்த மாதிரி விஷயமெல்லாம் சி.சி.டிவி காமிராவில் …. பதிவாகாதா’ சம்பந்தமில்லாமல் கேட்டு அடுத்து ‘கொல்ட்டி மார்டின்’ ஆனார் இன்ஸ்பெக்டர்.

‘சென்னை முழுதும் மொத்தம் 68 ம.கலா’ என்று நண்பன் அம்சத் லைனில் சாட் செய்தான்  அவர்களது ஆதார் எண்களோடு பட்டியல் … வேறு.

‘எனக்கு இது ரொம்ப முட்டாள்தனமாகப் படுகிறது. யாருமே ம.கலா என்று தன் இனிஷியலையும் சேர்த்து அப்பட்டமாக கிரைமில் ஈடுபட வாய்ப்பில்லை அம்சத்… மகலா நடுவில் புள்ளி கிடையாது…. ப்ளீஸ்… நோட்’ என்றபடி ரவி… ஆறிய டீயைக் குடிக்கத் தொடங்கினான்.

‘அண்ணே… போச்சு என்றான் அம்சத்…. ‘என்னப்பா’ ரவி ஒரு தடவைகூட டீயை முழுசா குடித்ததே இல்லை. ‘என் தங்கை….. அமெரிக்கால….. டெக்ஸாஸ்… அதே வாசகம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகலா என்று டைப் செய்து கொடுத்துப் பார்க்கச் சொன்னேன் அங்கேயும் – கைபேசி காலி’ என்று குண்டைத்தூக்கி போட்டான்.

ரவி… ரத்னா… அம்சத்.. தங்களது நீண்ட இரவு, பகலான…. போது காலை பதினொறு மணிக்குச் சட்டக்கல்லூரி வளாகத்தில் இருந்தார்கள். அங்குப்படித்த 16 கலாக்களைத் தேடி ரத்னா போக அம்சத்தும் ரவியும் கணிணி ஆய்வகம் என்ற ஒன்று சட்டக் கல்லூரியில் ஏன் வந்தது. என வினவிக்கொண்டிருந்தார்கள். ‘இன்று எல்லாமே ஆன்… லைன்… எங்கள் நூலகமே இப்போது கணிணி ஹால்தான்’ டை கட்டிய கருப்பு கோட் விவரிக்க… ரவி சட்டென்று நின்றான். சுவரில் சிவப்பு நிறத்தில் அசிங்கமாக யாரோ கிறுக்கி இருந்தார்கள். ‘மொட்டை கமலா, சொட்டை கமலா, குட்டை கமலா….,’ ஒரு கல்லூரி வளாகத்தில் சுவரில் மாணவர்கள் எழுதி கிறுக்கி வைப்பது பெரிய விஷயமே அல்ல. தல தளபதி…. இப்படி பார்த்திருக்கிறான். இது வித்தியாசமாக…. பெரிதாக இருந்தது.

‘டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரி இதுதான் இந்தியாவின் ஆகப் பழமையான சட்டக்கல்லூரி’ அவர்களுக்கு ஒரு இளம்பெண் செக்யூரிட்டி ஏதோ டூர்போவது மாதிரி விளக்கியபோது… நன்றி…. நன்றி என அம்சத் தேவைஇல்லாமல் அந்த இளம் செக்யூரிட்டியுடன் இரண்டுமுறை கைகுலுக்கியதை ரவியால் ரசிக்கமுடியவில்லை. மொத்தம் 340 மேசைக் கணினிகள் நவீன நூலக – அதிசய ஹால் அவர்களை அசரவைத்தது அங்காங்கே சுவரில் காதுகேட்கும் கருவி வைத்து சிலர் ஆடியோ புத்தகங்களையும் (கேட்பது?) வாசிப்பது தெரிந்தது.

‘முழு நூலகத்தையும் பராமரிப்பவர்… அவரைத்தான் பார்க்கவேண்டும்’ எனக் கேட்டு அவர் நாலைந்து நாட்களாக  விடுப்பில் இருப்பதும்…. அறிந்தான் ரவி. ‘அவங்க பேரு?’ என்றான் கிளம்பும்….. முன் ‘கமலா சார்… பிகே கமலா….’ என்றது ‘இளம்‘ செக்யூரிட்டி.

‘அவங்க… முகவரி பிளீஸ்’ என்று கேட்ட நண்பன் அம்சத்தை ஏற இறங்க பார்த்தார்கள்… ‘ சிபி.சிஐடி… கிரைம் பிராஞ்ச்’ என தனது ஐ.டியை நீட்டி முகவரிபெற்று கிளம்பிட  மேலும் அரைமணி ஆனது. ‘எந்தக் கலாவிடமும். எதுவும் தேறவில்லை.’ என்றபடி வந்தார் ரத்னா.

சிந்தாதிரிப்பேட்டை பழைய பிள்ளையார் கோயில் ரொம்ப ஃபேமஸ்… அதிலிருந்து கொஞ்சம் தள்ளி இருந்த அந்த முகவரி இரண்டு நாட்களாகப் பூட்டி இருந்தது. இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பூட்டை உடைக்க வாரண்ட் தயாரித்தபோது…. ‘வீட்டை உடைத்துப் பலனில்லை சார்…. ஆள்தான் வேண்டும்’ என்றான் ரவி… ரத்னா சிரித்தபடி ‘வாரண்ட் மார்ட்டின் ‘ என்றார்.

மொத்தம் அம்பேலான கைபேசிகளின் எண்ணிக்கை ஆறு லட்சத்தைத் தாண்டியது இருக்கட்டும்…. பத்திரிக்கையில் கையாலாகாத காவல்துறை என நாறடித்ததோடு பிரச்சனையை உலக ஊடகங்கள் வேறு கிழித்துத் தொங்கவிட்டு ஏகத்திற்குச் சிக்கலை அதிகப்படுத்திய மூன்றாம் நாள் கமலா என்ற அந்த சட்டக்கல்லூரி கணினி ஹால் மேற்பார்வையாளர் வீடு திறந்து இருந்தது. ரவி மணி பார்த்தான் இரவு பதினொன்று…. ‘நோ’  என்றது மனசு.

‘வணக்கம் சார் என்றான். வீட்டு கேட்டில் மஞ்சப்பையில் இருந்து பால் பாக்கெட் எடுத்த அரைத் தூக்க பெரியவர்…. ‘குட்மார்னிங்’ என்றார்.

காபி அருமையாக இருந்தது. ‘நானும் என் மகளும்தான்’ என்றார் ஆங்கில நாளிதழ் படித்தபடி…. ‘இதோ எழுந்து விடுவாள்…’

‘அப்போதே எழுந்துவிட்டேன்….  போலிஸ் வரும் என்று தெரியும்’ என்றபடி தன் பின்னால் நின்ற அந்த நோஞ்சான் நைட்டி மொட்டைப் பெண் கமலாவா என்று வியந்தான். ‘ மார்பகப் புற்றுநோய் …. பிரஸ்ட் கான்சர்..’ என்றாள். உறங்காமையும் வலியும் கமலாவின் கண்களில் கனமாகத் தெரியவே ‘சாரி…. ’ என்றான் ரவி.

‘நோ… சாரி பிளீஸ் தயவுசெய்து…. நான்தான் செய்தேன் என்று கண்டுபிடித்தது…. அபாரமான விஷயம் வாழ்த்துக்கள் ஆனால் அவர்கள் செய்தது மட்டும் நியாயமா சார்’ என்று சரவெடி வெடித்து….’ டாடி…. வெளியே இருங்க…. பிளீஸ்’ என்றாள்.

‘நாங்கள் ஒன்றும் ஓடிவிடவில்லை…. கான்சர் இன்ஸ்டியூட்….. கமலாவுக்கு மூன்று நாள் டிரீட்மெண்ட் சார்’ என்றபடியே…. அடுத்த விநாடி பெரியவர் வாசலில் ஏதும் தெரியாதவர்போல படிக்கட்டில் உட்கார்வதை ரவி பார்த்தான்..

‘அந்தச் சட்டக் கல்லூரி மட்டுமல்ல சார்… மொத்தம் ஏழு டிஜிட்டல் நூலகம்… பழனி, செங்கல்பட்டு, திருச்சி… ஒரு இடம் விடாமல்…. எல்லாம் என் உழைப்பு… பட் மாணவர்களை நான் எதுவுமே சொல்லக்கூடாதா…. மிஸ் யூஸ் பண்ணிணாங்க சார். பூர்னோ கிராஃபி லேர்ந்து…. டேட்டா ஹாக்கிங் வரை… சட்டத்தைத் தெரிஞ்சு அதைப் பாதுகாக்க வேண்டிய பேராசிரியர்கள் கூட அந்த மாணவருக்கு துணை…! என்ன சார்… ஒரு எம்.எல்.ஏ… பையன்… மந்திரி பேரன்னா…. கொம்பா முளைச்சிருக்கு.? பிரைவசியே இல்லை சார்.. டாய்லெட் போய்விட்டு வெளியில் வரும்போது மொபைலில் என்னை போட்டோ எடுக்குமளவுக்குத் திமிர் ஏறிகிடக்கிறது ராஸ்கல்ஸ்,’ கமலாவுக்கு மூச்சு வாங்கியது.

ரவி எதையுமே மறுக்கவில்லை….. ‘சார்… எனக்குத் தலைல முடி இல்லதான் சார்… கீமோ டிரீட்மெண்ட… ஏன் இந்த வியாதி நாளைக்கு அவங்க வீட்ல யாருக்குமே வராதா…. சொட்டைக் கமலா…. குட்டைக் கமலானு.. தவறைச் சுட்டிக்காட்டி மெமோ கொடுத்தா நான் மொட்டைக் கமலாவாம்..’ சிரித்தாள் மிகத்துயரமாக.

      ரவிக்கு ஏனோ லாரிமோதி ரத்தத்தில் கிடந்த தன் கண்ணிய காவல்துறை அப்பாவின் முகம் நினைவுக்கு வந்தது. ‘எல்லாப் பிறந்தநாளுக்கும் கணினியில் வாழ்த்து அட்டை தயாரித்து கல்லூரி முழுதும் கைப்பேசியில் பகிர்வதற்கு நான்தான் உதவுவேன் சார்…. பட் போனவாரம் என் பிறந்தநாள்….. பேராசிரியர் முதல் செக்யூரிட்டி… மாணவர் என்று எல்லாருக்கும் தெரியும். யாருமே ஒரு சின்ன விஷ்கூட பண்ணல சார்… அன்றைக்குத்தான்  மொட்டைக் கமலானு யாரோ சுவரில் எழுதறான்… அதை அழிக்கனும்னு கூட யாருக்கும் தோணல… அந்த எம்.எல்.ஏ… பையன் என்ன அவ்வளவு முக்கியமா உங்களுக்கு… காலேஜ்… அவனுடையதா…. பிளடி…. ’ பற்களைக் கடித்தாள்….

பிறகு ரொம்பநேரம் கமலா எதுவும் பேசவில்லை…. அவளது உள்மனக் காயத்தின் வலியைத் தானும் அனுபவித்தபடி ரவி மவுனமாக இருக்கிறான்…

‘சோ…. ஏதாவது ஒரு மெசெஜ் தேவைனு நினைச்சேன்….. ஐ…. கிரியேட்டட் இட்… என் சொந்த வைரஸை நானே உருவாக்கினேன்.  ஆனால் அது எல்லாருக்கும் போகும்னு தெரியாமல்போச்சு… சின்னதா அந்தச் சட்டக்கல்லூரி வளாகத்தோடு மட்டும் விளையாட நினைத்தேன்…. பிறந்த நாள் வாழ்த்துக்கள் மகலா, ஆமாம் கமலாவை புரட்டிப்போட்டேன்…. கைபேசி யுத்தம் மொபைல் வார்… ஆனால் நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்கள்…’  என்றாள் கமலா,.

‘காப்பி ஆறிடிச்சி.. குடிங்க’ என்றபடியே அப்பா நிற்கிறார். வழக்கபோல் பாதிதான் குடித்திருந்தான்.

‘கிளம்பு கமல்….. இவரோட ….. ஸ்டேஷனுக்கு போவோம்’ என்ற பெரியவரிடம்… ‘நோ…. சார்….’ என்றான் ரவி…. ‘ஷீ….. நீட்ஸ்… ரெஸ்ட்..’

‘மேடம்…’ என்றான் கிளம்பியபடியே… ‘ ரெஸ்க்யூ…. பாஸ்வேர்டு…. பிளீஸ்’

‘கமலா தான்….’ என்றாள் ‘செத்த கைப்பேசி நம்பருக்கு கமலா என்று வாட்ஸ்ஆப் செய்தால் போதும்.. அது உயிர்பெற்றுவிடும்.’

‘இதுபோதும்… மேடம்…. தேவை என்றால் கூப்பிடுகிறேன்…’

வெளியே தன் பைக்கை ஸ்டார்ட் செய்தபடி இன்ஸ்பெக்டர் மார்டின் நம்பருக்கு ‘கமலா’ என்று வாட்ஸ் ஆப் செய்து விட்டுக் காவல்நிலையத்தை அழைத்தான் ரவி… ‘ரத்னா மேடம்….. அந்தக் கமலாகிட்டே பேசிட்டேன்…. அவங்க ம.கலானு தனக்கு யாரையும் தெரியாதுனு சொல்லிட்டாங்க…. வெச்சிடட்டுமா…’

அடுத்த இரண்டு மணிநேரத்தில் இருண்ட பலலட்சம் தொலைபேசிகள் உயிர்பெற்று ம. கலாக்களை தேடும் படலத்தை முடித்து வைத்தது இருக்கட்டும்.. யாராவது கலா என்று சொல்லிவிட்டாலே தனது 65 ஆயிரம் ரூபாய் கைப்பேசியை பத்திரப்படுத்தி ‘முன் ஜாக்கிரதை’ மார்டின் ஆகி இருந்தார் இன்ஸ்பெக்டர் மார்டின்.

 

பின் குறிப்பு 

சட்டக்கல்லூரி மாணவர்கள் ஐந்தாறு பேர் ஆவடி காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு அங்குக் ‘கழிவறையில் வழுக்கி விழுந்து’ அனைவருமே எலும்பு உடைந்து நொறுங்கி மாவுக்கட்டு போட்டதாகச் செய்திகள் வந்தது அல்லவா, அதற்கும் இந்தக் கதைக்கும் சம்பந்தமில்லை.

  • ••••••••••