‘நான் கனவு காண்கின்றேனா, அல்லது நான் இன்னொருவருடைய கனவில் வரும் பாத்திரமா?’
‘ஆலிஸின் அதிசய உலகம்’காலையில் ‘வாக்கிங்’ போகும்போது ஒரு காட்சியைக் கண்டேன். கையில் ‘காமிரா’ இருந்திருந்தால், படம் பிடித்திருப்பேன்.
இருள் பிரிந்தும் பிரியாத விடியற்காலை. ஒருவன் ஒரு வீட்டுச் சுவரோரத்தில், ஒரு மரத்தருகே நின்றுகொண்டு சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தான். அவன் கையில் பிடித்திருந்த ‘லீஷி’ல் ஒரு நாய்.தெருவை வேடிக்கைப் பார்த்தவாறு சாவகாசமாய் நின்று கொண்டிருந்தது. அப்பொழுது அந்தப் பக்கம் வந்த இன்னொரு நாய், அதன் அருகே நின்று ‘குசலம்’ விசாரிக்கத் தொடங்கியது. சாதரணமாக, நாய் மரத்தருகே சிறுநாய் கழிப்பதும், அதைப் பிடித்துக் கொண்டிருக்கும் மனிதன், அந்தப் பக்கம் வரும் சிநேகிதனுடன் பேசிக் கொண்டு நிற்பதும் இயல்பான காட்சி.
ஆனால் இது, வித்தியாசமாக இருந்தது. நாய் மனிதனை’ லீஷி’ல் பிடித்துக் கொண்டு உலா வந்திருக்கிறதா அல்லது மனிதன் நாயைப் பிடித்துக் கொண்டு வந்தானா என்ற ‘தோற்ற மயக்க’உணர்வா அல்லது ‘கனவா’ தெரியவில்லை- எனக்குள் ஏற்பட்டது.
மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வித்தியாசம், மனிதனால்தான், தூக்கத்திலும், விழிப்பு நிலையிலும் கனவு காண முடியும், மிருகங்களுக்கு இது சாத்தியமில்லை என்று நான் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நினைத்துக் கொண்டிருந்தேன். பிறகு, டால்ஃபின்களும், மனிதக் குரங்குகளும்(Primates) கூட சிக்கலான கனவுகளைக் காண முடியுமென்று விஞ்ஞானிகள் நிரூபித்தார்கள்.
சமீபத்தில், எலிகளாலும், அவர்களுடைய விழிப்பு நிலை அநுபவங்களை உறங்கும்போது, கனவுகளாகக் காண முடியுமென்று அமெரிக்கா எம்.ஐ.டி. யைச் சேர்ந்த டாக்டர் மாத்யூ வில்ஸன்,
கென்வே லூயி என்கிற இரண்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். எலி தான் பகலில் பூனையிடமிருந்து சாகசமாகத் தப்பியதைக் கனவு காணலாம், ‘மிக்கி மௌஸ்’ போல. ஆகவே பல விஷயங்களில், மனிதனுக்கும், மிருகத்துக்குமிடையே உள்ள இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது. ஒரு வேளை, மிருகம் மனிதனாகவும், மனிதன் மிருகமாகவும் மாறிக் கொண்டு வரலாம்.நமது தொலைக்காட்சி செய்திகளைப் பார்க்கும்போதும், என்னுடைய ‘வாக்கிங்’ அநுபவத்தையும் வைத்துப் பார்க்கும்போது, இரண்டாவதுதான் நடந்து கொண்டு வருகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
கனவுக்கும் காதலுக்கும் நெருங்கிய உறவு உண்டு. ‘கனவு நிலை உரைத்தல்’ என்று வள்ளுவரே ஓர் அதிகாரம் காமத்துப் பாலில் பாடியிருக்கிறார். தலைவிக்கு நனவைக்(யதார்த்தம்) காட்டிலும், கனவே பிடித்திருக்கிறது. காரணம், கனவில் வரும் காதலன் அவளை விட்டுப் பிரிவதில்லை. யதார்த்தத்தில் பிரிகிறான்.ஆகவே, ‘நனவென்ற ஒரு பாவி’ என்று பரிமேலழகர் உரை எழுதுகிறார், வள்ளுவர் பிறிதோரிடத்தில், ‘அழுக்காறு (பொறாமை) எனவொரு பாவி’ என்று கூறியிருப்பது போல. கனவில் அவன் வந்தால் போதும், நனவில் வர வேண்டாம் என்றும் இருக்கலாம்! இது அவன் காதலனா அல்லது கணவனா என்பதைப் பொறுத்த விஷயம்.
பொதுவாகவே, யதார்த்தத்தைக் காட்டிலும், கற்பனையும், கனவுகளும்தான் கவிஞர்களுக்கு இன்பம் தரவல்லன. யதார்த்தத்துக்கு, காலம், இடம், சமூக நியதி போன்ற வரையறைகளும், கட்டுப்பாடுகளும் இருப்பதினால், சிறை விரித்து எல்லையற்ற கற்பனைப் பெரு
வெளியில், மனத்தடைகளின்றிப் பறக்க இயலாது. கனவில் இது சாத்தியம். நம் உள் மனத்தில், யதார்த்தமென்ற ஒரு பாவியினால், தடைகளுக்கு உட்பட்டிருக்கும் வரம்பற்ற ஆசைகளும், ஆதங்கங்களும், கனவு நிலையில் விழித்தெழுகின்றன. உடம்பு உறங்குகின்றது. உள்மனத்துக்கு ஓய்வில்லை.
‘யதார்த்தத்தில், சமூக நியதியின் காரணமாக, மனிதன் தன்னுடைய. இயல்பான ஆசைகளையும், எண்ணங்களையும் அடக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது; அடக்கப்பட்ட உணர்வுகள் உறக்கத்தின்போது தங்களைப் பலவிதமான குறியீடுகள் மூலம் அறிவித்துக் கொள்கின்றன. இவைகள்தாம் கனவுகள். இவற்றின் ஆதாரத் தாயகம், பாலுணர்வு (sex)’ என்று ஸிக்மன்ட் ஃப்ராய்ட் கூறுகிறார். ஆனால் அவருடைய ஒரு காலத்திய சிஷ்யர், கார்ல் யூங் கருத்தின்படி,’தொடர்ந்து வரும் ஒரு சமூக மரபுப் பிரக்ஞையின் வெளியீடுகளாகிய தொன்மங்களின்(myths) குறியீட்டு(symbolic) நினைவுகளாகவும் கனவுகள் இருக்கக் கூடும்’ என்பதுதான். ‘A dream is one’s private myth and a myth is a public dream’ என்கிறார் அவர்.
உதாரணமாக, சமூக நாடோடிக் கதையாக வழங்கும் ‘ஜெகதலப் பிரதாபன்’ வரலாற்றில், ஜெகதலப் பிரதாபன் ஒடுக்கப்பட்ட ஓர் இனத்தில் பிறந்த ஏழை இளைஞன். அவன் கனவு காண்கின்றான். என்ன கனவு? ‘ சொர்க்க உலகில், இந்திரகுமாரி இன்னிசை பாட, வருணகுமாரி கால்களை வருட மலர் மஞ்சத்தில் அவன் பள்ளிகொண்டு, வாழ்க்கையை அநுபவிக்க வேண்டும்’ என்று.. அவன் கனவாகிய அந்தரங்கத் தொன்மம், ஒடுக்கப்பட்ட அனைத்து இளைஞர்களின் கனவுக் குறியீடாக மாறி, தொன்மக் கதையாக உருப் பெறுகிறது. இதுவே அக் குறிப்பிட்ட சமூகத்தின் பகிரங்கக் கனவும் ஆகும்.
கனவு காணப் பெண்களுக்கும் உரிமை உண்டு என்பது போல, பாகவதத்தில் ஓர் அசுரப் பெண்ணும் கனவு காண்கின்றாள். பாணாஸ்வரனின் மகள் உஷா.
ஓர் அழகிய இளைஞன் அவள் கனவில் வருகின்றான். அவன் கிருஷ்ணனுடைய பேரன் அநிருத்தன். பிரத்யுமனனின் மகன். அநிருத்தன்மீது காதல் கொள்கின்றாள் உஷா.
அநிருத்தன் தூங்கும்போது, அவன் கனவில் புகுந்து, அவனைக் கடத்திக் கொண்டு வந்து விடுகிறாள் அவள் தோழி சித்திரலேகா. பின் நவீனத்துவக் கதைகள் பாகவதத்திலிருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
தமிழ்ப் பெண் ஒருத்தியும் கனவு காண்கின்றாள். அவள் கனவு பேரனைப் பற்றியதன்று; தாத்தாவைப் பற்றியது. அந்தத் தாத்தாவின் விசேஷம் என்னவென்றால் அவர் என்றும் இளைஞன்! அவன்தான் கிருஷ்ணன். அவனை மணமகனாக வரித்து, அவனுடன் திருமணம் செய்து கொள்வதாகக் கனவு கண்டவள், சூடிக் கொடுத்த நாச்சியார் என்றறியப்படும் ஆண்டாள். ஒரு திருமணப் பெருவிழா, இந்தக் காலத்து வீடியோ படக் காட்சிகள் போல், ஆண்டாளின் மனக்கண் முன், கனவாக விரிகின்றது.
நடக்க இருக்கும் திருமணத்தை முன்கூட்டியே அறிவிக்கின்றது இக்கனவு..
கம்ப ராமாயணத்தில்அசோக வனத்தில் சிறையிருந்த சீதையின் துயரைப் போக்கத் தான் கண்ட கனவை அவளுடன் பகிர்ந்து கொள்கிறாள் திரிசடை.என்ற ஒரு பெண். வால்மீகி ராமாயணத்திலும் திரிசடை வருகின்றாள். ஆனால் அவளை ஒரு வயதான அரக்கியாகக் காட்டி, அவள் தன் கனவை மற்றைய அரக்கிகளுடன் பகிர்ந்து கொள்வதாகச் சொல்லுகிறார் வால்மீகி. கம்பனின் இலக்கிய மந்திரக் கோல் அவளை விபீஷணனின் மகளாகவும், சீதையின் உற்ற தோழியாகவும் காட்டுகிறது. அவள் சித்திரிக்கும் அவள் கனவு, சீதையின் வேதனையைத் தீர்க்கும் மாய மந்திரமாக ஆகிவிடுகின்றது! ஷேக்ஸ்பியர் நாடகங்களில், கனவுகள் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன. ஜூலியஸ் ஸீஸரில், ஸீஸரை ஸெனட் கூட்டத்துக்குப் போக வேண்டாமென்று தடுக்கிறாள் அவன் மனைவி கலிஃபூர்னியா. காரணம், அவள் முதல் நாளிரவு தீக்கனா காண்கின்றாள். அவன் அவள் சொல்வதை மீறிச் செல்கிறான், கொல்லப்படுகிறான். கொடுங்கோல் மன்னனாகக் காட்டப்படும் மூன்றாம் ரிச்சர்ட் போரில் கொல்லப்படுவதற்கு முன்னால் அவன் காணும் கனவில், அவன் கொன்ற அனைவரும் வரிசையாக வருகிறார்கள்.
பண்டைய கிரேக்கக் கதைகளில், நிக்ஸ் என்ற இரவின் தெய்வம், ஹிப்னாஸ் (உறக்கம்)தனடோஸ் (மரணம்) என்ற இரட்டைப் பிள்ளைகளை ஈன்றெடுப்பதாகக் கூறப்படுகின்றது. ஹிப்னோஸ், மார்ஃபியஸ் என்ற கனவுகளுக்குரிய பெண்ணின் தந்தையாகக் குறிப்பிடப் படுகிறார். இந்தப் பெண்ணைச் சூழ்ந்திருப்பவை அபின் செடிகள்! கனவுக்கும், அபினுக்கும் உள்ள சம்பந்தத்தை இது காட்டுகிறது!
உறக்கத்தையும், மரணத்தையும் இரட்டைக் குழந்தைகளாகக் கூறுவது, இரண்டிற்கும் வேறுபாடு இல்லை என்று சொல்வது போல் இருக்கிறது. ‘ஹாம்லெட்’டில், டென்மார்க் இளவரசன் கூறுகிறான்: ‘ மரணம் எனும் அப்பெரும் தூக்கத்தில் எந்த மாதிரியான கனவுகள் வருமோ, நினக்கவே பயமாக இருக்கிறது!’
வள்ளுவரின் கருத்தோட்டம் இந்த விஷயத்தில் ஆக்கப் பூர்வமாக(positive) இருப்பதைப் பார்க்கலாம் உறக்கம்>மரணம்> பிறப்பு என்பது அவர் பார்வை. மரணம் ஒரு முடிவன்று. அதைத் தொடர்வது பிறப்பு. இந்நிலயில் அனைத்துமே கனவாகத் தோன்றுவதில் ஆச்சர்யமில்லை… ‘நாம் அனைவருமே தூக்கத்தில் முடியப் போகும் கனவுகள்’ என்கிறார் ஷேக்ஸ்பியர் இன்னொரு நாடகத்தில்.
அபினுக்கும் கனவுக்குமுள்ள தொடர்பை வலியுறுத்துவது போல், கோல்ரிட்ஜ் என்ற ஆங்கிலக் கவிஞர், ‘ குப்ளாக்கான்’ என்ற ஓர் அற்புதமான கவிதைஎழுதியிருக்கிறார். அவரே இக்கவிதை அபின் மயக்கத்தில் எழுதப்பட்ட கவிதை என்பதை ஒத்துக் கொள்கிறார். இக்கவிதை, பாரதியின், ‘குயில் பாட்டு’ப் போல,” பட்டப் பகலில் பாவலர்க்குத் தோன்றுவதாம் ஓர் நெட்டைக் கனவு’.
அரசியல் கனவுகளும் இருக்கின்றன. அமெரிக்கக் கறுப்பர்களின் தாரக மந்திரம், ‘எனக்கொரு கனவு உண்டு’. (‘I have a dream’) என்ற ஒரு கூற்றுதான். மார்ட்டின் லூதர் கிங் (ஜூனியர்) கண்ட இக் கனவு, வெள்ளை மாளிகையில், ஒரு கறுப்பு இனத்தவரை அரியணையில் ஏற்றி வைத்தது.
parthasarathyindira@gmail.com