ஜனநாயகத் தேர்தல் அரசியலில் ஆட்சி மாறியதும் புதிய அரசு செய்ய விரும்பும் காரியங்களில் ஒன்று பெயர் மாற்றம். ஆட்சியில் உள்ள ஒருகட்சி தாம் கொண்டு வரும் புதிய திட்டங்களுக்குப் புதிய பெயரைச் சூட்டலாம்; தவறில்லை. தம் ஆட்சிக்காலத்தில் கட்டும் கட்டிடங்களுக்கு, உருவாக்கும் நகர்களுக்குத் தம் நோக்கத்திற்கு இயைந்த பெயர்களை வைக்கலாம். அதுதான் இயல்பு. முந்தைய காலத்தில் வழங்கும் ஒரு பெயரை மாற்ற வேண்டுமானால் அதற்கு வலுவான காரணம் இருக்க வேண்டும். மேலும் பெயர் பற்றிய வரலாற்றை முறையாகப் பதிவு செய்வதும் அவசியம். வரலாற்றில் அக்கறை காட்டாத சமூகம் அப்போதைய எதிர்வினைகளோடு கடந்து போய்விடுகிறது. பிற்காலத்தில் வரலாற்றை அறிவது கடினமாகிறது.

முந்தைய ஆட்சியாளர்கள் மீது கொண்ட வெறுப்பினால் பெயர் மாற்றம் செய்வது ஜனநாயகப் பண் பல்ல. வெறுப்பையே தம் தாரக மந்திரமாகக் கொண்டியங்கும் இப்போதைய ஒன்றிய அரசு பலபெயர் மாற்றங்களைச் செய்து வருகிறது. அதற்கு அடிப்படை வெறுப்புதான், ஜவஹர்லால் நேரு காலத்தில் தில்லியில் ‘ராஜ்பத்’ என ஒரு சாலைக்குச் சூட்டியிருந்த பெயரை இப்போதைய பாரதிய ஜனதா கட்சி அரசு ‘கர்த்தவ்யபத்’ எனச் சமீபத்தில் மாற்றியிருக்கிறது. ஜவஹர்லால் நேருவின் மீது கொண்ட வெறுப்பினால் இந்த மாற்றம் நடந்திருக்கிறது. மேலும் மதத்தின் அடிப்படையில் வைத்துள்ள பெயராகவும் தோன்றுகிறது. ‘கர்த்தவ்யபத்’ என்றால் ‘கடமைச் சாலை’ என்று பொருளாம். தவிர்க்க முடியாமல் எனக்குக் ‘கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே’ என்னும் பகவத் கீதை வாசகம் நினைவுக்கு வருகிறது.

அரசு என்பது பேரலகு. அரசியல் காரணங்களால் அங்கே ஏதேதோ நடக்கும். ஆனால் அதன் சிற்றலகான அரசு அலுவலகங்களில் ஏற்படும் பெயர் பற்றிய பிரச்சினைகள் சிலவற்றில் எனக்கு அனுபவம் உண்டு. அரசு கலைக்கல்லூரிக்கு ஒருவர் முதல்வராகப் பதவி ஏற்றதும் அவர் பார்வை ‘முதல்வர் வரிசைப் பட்டியல்’ என்னும் பெயர்ப்பலகையைத்தான் ஏறிடும். இதுவரைக்கும் எத்தனை முதல்வர்கள் பதவி வகித்துள்ளனர், தான் எத்தனையாவது முதல்வர் என்று மனம் கணக்கிடும். ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் அதன் உயரலுவலராகப் பதவி வகித்தவர்களின் பெயர்ப் பட்டியல் கொண்ட பலகைகள் இருக்கும். அந்த உயரதிகாரியின் அறைக்குள்ளோ அதற்கு வெளியிலோ அவ்வலுவலகத்தின் நுழைவாயிலிலோ இந்தப் பலகையைக் காணலாம்.

முன்னெல்லாம்தேக்குப் பலகையைச் செதுக்கி வண்ணம் தீட்டிப் பெயிண்டால் பெயர் எழுதி வைத்திருப்பார்கள். இப்போது சில அலுவலகங்களில் நவீனத் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்திப் பெயர்ப் பலகை வைக்கிறார்கள். ஆனாலும் பெயிண்டால் எழுதினால்தான் தம் பெயர் வரலாற்றில் இடம்பெறும் என்னும் நம்பிக்கை பலருக்கு இருக்கிறது. ஆகவே பலகையை மாற்றுவதில்லை.

சில முதல்வர்களுக்குப் பொறுமை இருக்காது. பதவியேற்றதும் தம் பெயரைப் பொறித்து விடுவதில் அவசரம் காட்டுவர். ஒவ்வொருவர் பெயருக்கு நேராகவும் அவர் பதவியேற்ற நாளும் பதவி வகித்த கடைசிநாளும் ‘முதல் – வரை’ எனக் குறிப்பிட்டு எழுதப்பட்டிருக்கும். புதியவர் வருவதற்கு முன் பதவியில் இருந்தவர் தம் பெயரையும் பதவியேற்ற நாளையும் பொறித்திருப்பார். இடமாறுதலிலோ ஓய்வு பெற்றோ செல்பவர் தம் கடைசி நாளைப் பொறிக்காமல் சென்றுவிடுவார். அதைப் பார்த்ததும் புதியவர் முகம் சுழிப்பார். பலகையைப் பார்ப்போர் என்ன நினைப்பர்? முந்தையவர் தானே இப்போதும் முதல்வராக இருப்பதாக எண்ணத் தோன்றும்? ஆகவே அவர் எடுக்கும் முதல் நடவடிக்கை முந்தையவரின் இறுதி நாளை எழுதிவிட்டுத் தம் பெயரையும் பதவியேற்ற நாளையும் உடனே பதிவு செய்வதுதான். அதைப் பார்த்த பிறகே முக்கியமான செயலைச் செய்து வரலாற்றில் தாம் இடம்பெற்றுவிட்டதை உறுதி செய்த நிம்மதி வரும்.

அரசு கல்லூரி முதல்வர் வரிசையில் இடம்பெற்றிருக்கும் பல பெயர்களுக்கு எந்த அர்த்தமும் கிடையாது. வெறும் பெயர்களாக மட்டுமே அவை எஞ்சியிருக்கும். அவற்றை நினைவுகூர்பவர்களோ மனதில் கொண்டிருப்பவர்களோ அரிது. கிழவர்களாகி விட்ட பழைய மாணவர் எவரேனும் கல்லூரிக்கு வேறு வேலையாக வரும்போது அந்தப் பெயர்ப் பலகையை ஏறிட்டுப் பார்த்து ‘நான் படிக்கும் போது இவர்தான் முதல்வராக இருந்தார்’ என்று சொல்வதுண்டு. ‘சரி, அவர் செய்த நற்காரியங்களைப் பட்டியலிடுங்கள்’ என்றால் பெரும்பாலும் சொல்வதற்கு ஒன்றும் இருக்காது. வெகுசிலரைப் பற்றியே நல்ல நினைவுகளைப் பகிர்வார்கள். சில முதல்வர்களைக் கண்டபடி ஏசும் மாணவர்களும் உண்டு. சரி, ஏதோ ஒருவகையில் இந்தப் பெயர்ப் பலகைக்கும் பயனிருக்கிறது என்று நினைத்துக் கொள்வேன்.

அப்பதவியில் இருக்கும் ஒருவர் தம் பெயரைப் பொறித்துக் கொள்வதில் பிரச்சினை ஏதுமில்லை. அவர் விருப்பம், வரலாற்றுத் தேவை என்றும் வைத்துக் கொள்ளலாம். தம் பெயருக்கு மேலாக இன்னொருவர் பெயர் இடம்பெற்றிருப்பதைச் சிலரால் தாங்கிக் கொள்ள முடியாது. அப்பெயர்களுக்கும் இவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றாலும் மனம் பொறுக்காது. தனக்கு மேலே இத்தனை பேரா என்பதை விடவும் இத்தனை பேருக்குக் கீழேதான் நானா என்னும் கேள்வி அவர்களை வாட்டும். என்ன செய்யலாம்? முந்தைய வரிசைப் பெயர்கள் எழுதிய பலகையில் இன்னும் இடமிருந்தாலும் அதை அப்படியே விட்டு விட்டுப் புதிய பலகையைக் கொண்டு வரச் செய்து அதில் தம் பெயரை முதலாவதாகப் பதிக்கச் செய்வதுண்டு. தம் ‘வரலாற்றுத் தந்திரம்’ வெளிப்பட்டு
விடக் கூடாது என்பதில் கவனம் கொண்ட சிலர் முழுவதையுமே மாற்றி முந்தைய பெயர்களுக்கு இடையே நல்ல இடைவெளி விட்டு எழுதச் செய்து இயல்பாகவே தம் பெயர் புதிய பலகையின் முதலாம் பெயராக அமையும்படி பார்த்துக் கொள்வர்.

இவையெல்லாம் முதல்வர்களின் பொது இயல்பு. இவற்றிலிருந்து மாறுபட்ட முதல்வர் ஒருவரை ஆத்தூர், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றியபோது கண்டிருக்கிறேன். தம் பெயரைப் பதிப்பது மட்டும் அவருக்குப் போதவில்லை. தமக்கு மேலிருக்கும் பெயர்களை எப்படி நீக்குவது என யோசித்தார். தமக்கு மேல் முப்பதுக்கும் மேற்பட்டோர் இருப்பதை எப்படியாவது குறைத்தால் தாம் இன்னும் கொஞ்சம் மேலேறிவிடலாம் என்று நினைத்தார். விளையாட்டு வீரர் ஒருவர் தர வரிசையில் முன்னேற விரும்புவதைப் போல என்று வைத்துக் கொள்ளுங்களேன். இரவுபகலாக அவருக்கு அதுதான் யோசனை. முதல்வருக்கு அடுத்த நிலையில் மூத்த பேராசிரியராக நானிருந்தேன். ‘இந்த வரிசையப் பாருங்க, எதாச்சும் தோணுதா?’ என்று ஒருநாள் என்னிடம் கேட்டார். பல கோணங்களில் இருந்து நன்றாகவே உற்றுப் பார்த்தேன். ஒன்றும் தோன்றவில்லை. அவர் சொன்னார், ‘ஒருத்தர் பேரே பலமுறை வருது பாருங்க’ என்றார். ஆம், வந்தது.

முதல்வர் பதவியில் இருப்பவர் ஓய்வினாலோ இடமாறுதலாலோ சென்றுவிட்டால் உடனே புதிய முதல்வர் போட மாட்டார்கள். அதற்குச் சில மாதமாகும். வழக்கு அதுஇது என்று ஆண்டுக் கணக்கில்கூட இழுக்கும். அத்தகைய சந்தர்ப்பங்களில் அக்கல்லூரியின் மூத்த பேராசிரியர் முதல்வர் பொறுப்பு வகிப்பார். ஒருவர் பதினைந்து நாட்களுக்கு மேல் முதல்வர் பொறுப்பு வகித்தால் அவருக்கு நிதி அதிகாரத்தை அரசு வழங்கிவிடும். நிதி அதிகாரம் கிடைத்தால் முதல்வருக்குரிய எல்லா அதிகாரங்களும் அவருக்கும் வந்துவிடும். சுயமாகச் செயல்படலாம்; முடிவெடுக்கலாம். முதல்வர் பதவி வகிப்பது எப்படியோ அப்படியேதான் நிதி அதிகாரத்தோடு முதல்வர் பொறுப்பு வகிப்பதும். அக்கல்லூரி கிராமத்துக் கல்லூரி ஆதலால் வரும் முதல்வர்கள் அதிக காலம் அங்கே இருப்பதில்லை. முயன்று இடமாறுதல் பெற்றுச் சென்றுவிடுவார்கள். அதன் காரணமாக அக்கல்லூரியின் மூத்த பேராசிரியர் ஒருவர் பலமுறை முதல்வர் பொறுப்பு வகித்துள்ளார். ஒரு முதல்வர் போய் அடுத்த முதல்வர் வரும் இடைவெளிக் காலம் எல்லாம் அவர்தான் முதல்வர் பொறுப்பு. ஆகவே பட்டியலில் அவர் பெயர் குறிப்பிட்ட இடைவெளியில் மீண்டும் மீண்டும் இடம்பெற்றிருந்தது.

அம்முதல்வர் சொன்னார், ‘பொறுப்பு வகிப்பவர் எல்லாம் முதல்வர் அல்ல. பதவி உயர்வு பெற்று முதல்வர் ஆனால்தான் கணக்கு’ என்றார். ‘பொறுப்பு முதல்வர்களும் நிதி அதிகாரம் பெற்றவர்கள்தானே’ என்றேன். அவர் ஏற்கவில்லை. பல காரணங்களைச் சொன்னார். அத்தகைய சந்தர்ப்பங்களில் விவாதத்திற்குள் நான் செல்வதில்லை. சென்றால் பயன் ஏதும் விளையாது; வீண் பகை மட்டுமே உருவாகும். ஓவியர் ஒருவரை அழைத்து வரச் செய்து பட்டியல் முழுவதையும் மாற்றினார். பொறுப்பு முதல்வர்கள் எல்லாம் தூக்கப்பட்டனர். அவருடைய பெயர் கிட்டத்தட்ட பத்து இடங்கள் முன்னேற்றம் கண்டது. பெயர்ப் பலகையில் மட்டுமல்லாமல் கல்லூரிக் கையேட்டிலும் பெயர்களை நீக்கிவிட்டார். தம் பெயர்ப் பொறிப்பில் ஏற்படுவதை விடப் பிறர் பெயர்களை நீக்குவதில் பெருமகிழ்ச்சி கொள்ளும் மனதை அன்றைக்குக் கண்டேன்.

இப்போது முதல்வர் வரிசையைப் பார்த்துக் கணக்கிடும்போது காலத் தொடர்ச்சி கிடைக்கவில்லை; அங்கங்கே இடைவெளி விழுந்தது. ஓராண்டுக்கு மேல் பொறுப்பு முதல்வரே கல்லூரியை நிர்வகித்த காலமுமுண்டு. பெயர்ப் பலகையைப் பார்த்தால் அக்கால கட்டங்களில் கல்லூரி செயல்படவில்லை என்றாகிவிடுகிறது. வரலாற்றுக்கு அவர் தர்க்கம் ஒத்து வரவில்லை. சரி, வரலாற்றில் இடைவெளிகள் விழுவது இயல்புதானே. ‘இருண்ட காலம்’ இப்படித்தான் உருவாகிறது போலும். பலமுறை பொறுப்பு முதல்வராக இருந்தவர் மேல் அன்புள்ள சிலர் சென்று ‘அவர் பெயர் இருக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினர். அதெல்லாம் ஒத்துக்கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டார். முதல்வரின் சாதியைச் சேர்ந்த குழுவினர் சென்று ‘சார், அவரும் நம்மாள்தான்’ என்று சொல்லிப் பார்த்தனர். அதிகாரத்திற்கு முன்னால் சாதி எடுபடவில்லை.

அவருக்குப் பிறகு ஒரு கல்வியாண்டு முழுவதும் முதல்வர் பொறுப்பில் நானிருந்தேன். என் பார்வையும் பெயர்ப் பலகையில் சென்றது. ஆனால் எனக்குச் சிரிப்புதான் வந்தது. நண்பர்கள் சிலர் வந்து என் பெயரைப் பதிக்கவும் ஆலோசனை சொன்னார்கள். ‘நான் முதல்வர் இல்லையே, பொறுப்புதானே’ என்று சொல்லிச் சிரித்தேன். ‘பொறுப்புள்ள முதல்வர்களுக்குப் பட்டியலில் இடம் கிடைக்காது; பொறுப்பற்றவர்களுக்குத் தான் இடம்’ என்றேன். ‘என் பெயர் இலக்கிய வரலாற்றில் பதிந்திருக்கிறது, அது போதும்’ என்று சற்றே கர்வத்தோடும் பதில் சொன்னேன். பெயர்ப் பலகை விஷயத்தைச் சிரிப்பாய்ச் சிரிக்கும்படி மாற்றிவிட்டேன். ஒவ்வொரு முதல்வர் வரும்போதும் பெயர்ப்பலகையில் கவனம் செலுத்துவதால் இயல்பாகவே ஓர் எதிர்ப்புணர்வு எனக்குள் தோன்றிவிட்டது. கடைசிவரை பெயர்ப் பலகையை நான் மாற்றவும் இல்லை; பெயரைப் பதிக்கவும் இல்லை. வரலாற்றில் என் பெயர் இல்லவே இல்லை.

ஆனால் வரலாறு எப்படியும் திரும்பத்தானே செய்யும்?
என் நண்பரும் அறைத்தோழராக இருந்தவருமான முனைவர் கு.செல்வராஜ் இப்போது அக்கல்லூரியின் பொறுப்பு முதல்வராக உள்ளார். அக்கல்லூரியிலேயே இருபத்தைந்து ஆண்டுகளாகக் கணினி அறிவியல் துறையில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் அவரைச்சந்தித்தபோது ஆவலுடன் வந்து என்னைக் கட்டிக்கொண்டு ‘ஐயா, வரலாற்றை நேர் செய்துவிட்டேன்’ என்று சொன்னார். பழைய பலகைகளை எல்லாம் நீக்கிவிட்டு நீள்பலகை ஒன்றைச் சுவரில் பதிக்கச் செய்து முதல்வர் பொறுப்பு வகித்த அனைவர் பெயரையும் பலகையில் எழுதச் செய்துவிட்டார். என் பெயர் அப்பலகையில் இடம்பெற வேண்டும் என்று பெரிதும் விரும்பியவர் அவர். ‘உங்களுக்கு வேண்டுமானால் இங்கே பெயர் பொறிக்கும் தேவை இல்லாமல் போகலாம். பிரபல எழுத்தாளர் ஒருவர் இக்கல்லூரியில் முதல்வராக இருந்தார் என்னும் பெருமை கல்லூரிக்கு வேண்டும் ஐயா’ என்று அப்போது என்னிடம் வலியுறுத்தியவர் அவர். எனினும் நான் ஒத்துக் கொள்ளவில்லை. ‘உங்கள் பெயரைப் பொறிக்க வேண்டும் என்னும் ஆசை நிறைவேறிவிட்டது’ என்று பெருமகிழ்ச்சியோடு சொன்னார். என் பெயர் பொறித்து வரலாற்றைச் சமன் செய்ததோடு நட்புக்கோர் இலக்கணமும் ஆகிவிட்டார்.

நாமக்கல், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் இரண்டாண்டு எட்டுமாதம் முதல்வராகப் (இது பதவி உயர்வு முதல்வர்) பணியாற்றினேன். இக்கல்லூரியிலும் பெயர்ப்பலகை முதல்வர் அறைக்குள் இருந்தது. யார் யார் முதல்வராக இருந்தனர் என்பதைப் பிறர்தானே அறிந்துகொள்ள வேண்டும் என்று சொல்லி அப்பலகைகளைக் கழட்டி முதல்வர் அறைக்கு வெளியில் மாட்டச் செய்தேன். முப்பத்தொன்பது பேர் முதல்வர் பட்டியலில் இருந்தனர். நாற்பதாம் முதல்வர் நான். பலகையின் இறுதியில் ஒரே ஒரு பெயர் எழுதும் அளவுக்கு இடம் இருந்தது. நண்பர்கள் சிலர் ‘கடைசியில் உங்கள் பெயர் வேண்டாம் ஐயா. புதுப்பலகை செய்து முதற்பெயராக எழுதிவிடலாம்’ என்று சொன்னார்கள். ‘முதலிலும் வேண்டாம்; கடைசியிலும் வேண்டாம், முடிந்தால் மாணவர் மனதில் பெயர் பொறிக்க முயல்கிறேன்’ என்று சொல்லிவிட்டேன். ஆனால் விதி விடவில்லை.

கல்லூரியில் நுண்கலை மன்றம் என்னும் அமைப்பு செயல்பட்டுக் கொண்டுள்ளது. மாணவர்களின் கலை இலக்கியத் திறன்களை மேம்படுத்துவதும் அப்போட்டிகளுக்கு அவர்களைத் தயார் செய்து அனுப்புவதும் அதன் வேலை. அம்மன்றச் செயல்பாடுகளுக்கு எனத் தனியறை ஒன்றை ஒதுக்கினேன். அதைத் திறந்து வைப்பதற்கு யாரை அழைக்கலாம் என்று யோசித்தபோது மாணவர் ஒருவர் நினைவுக்கு வந்தார். கல்லூரியில் தமிழிலக்கியம் பயின்ற ஆ.மகேந்திரன் அவர். இலக்கியம் பயின்றாலும் அவருக்கு ஓவியத்தில்தான் ஆர்வம். அதில் சான்றிதழ் பட்டம் பயின்று சில ஆண்டுகள் தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக இருந்தார். இப்போது அரசுப் பள்ளியில் ஓவிய ஆசிரியர். நுண்கலை மன்றத்தின் மூலம் பயன்பெற்றவர். பல போட்டிகளுக்குச் சென்று பெரிசு பெற்றுக் கல்லூரிக்குப் பெயர் பெற்றுக் கொடுத்தவர். புதிய அறையைத் திறந்து வைக்க அவரே பொருத்தம் என அழைத்தேன்.

நுண்கலை மன்றத்திற்கான அறையை ரிப்பன் வெட்டி மகிழ்ச்சியுடன் திறந்து வைத்தார் ஆ.மகேந்திரன். தான் வரைந்த சகல எழுத்தாயுதங்களுடன் கூடிய சரஸ்வதி ஓவியத்தை எனக்குப் பரிசாக வழங்கினார். அத்துடன் ஒரு கோரிக்கையும் வைத்தார். ‘ஐயா, எனக்கு ஒரு வேண்டுகோள்’ என்றார். ‘என்னப்பா?’ என்றேன். முதல்வர் வரிசைப் பெயர்ப் பலகையில் என் பெயரை எழுத வேண்டும் என்பது அவரது ஆசை.

‘என் கையெழுத்துல உங்க பெயர் இருக்கணும் ஐயா’
என்றார். இப்படியான கிறுக்குத்தனங்களை எல்லாம் என் மாணவர்கள் செய்வார்கள். அந்தப் பெயர்ப் பலகையின் கடைசியில் என் பெயரை அவர் எழுத்தில் பொறித்தார். மாணவர் கொடுத்த குருதட்சிணை அது.

இப்படியாக, நட்பாலும் மாணவராலும் இருகல்லூரி களின் வரலாற்றிலும் என் பெயர் பொறிக்கப்பட்டுத் துலங்குகிறது.

murugutcd@gmail.com