புகார்ப் பெட்டி

ப்போதும்

புகார்ப் பெட்டியைச் சுமந்தலைவது சலித்துப் போகிறது

 

இப்பெட்டியினுள்

உன் மீதான புகார்களை

சேமித்து வைத்திருக்கிறேன்

 

ஒவ்வொரு நாளும்

வளரும் இப்பெட்டியின் கனம்

வாழ்வின் கனத்தை நினைவூட்டியபடி இருக்கிறது

 

உன்னை சந்திக்கவே வந்திருக்கிறேன்

வெகுநேரம் காத்திருந்தபின்னும்

இன்றும் நீ வரவில்லை

 

இன்றைய கணக்கில் ஒன்று கூடிவிட்டது பார்

புகார்ப்பெட்டிக்கு

 

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டத்தை

பாரம் தாங்காது போட்டுடைத்து விட்டேன்

நடுத்தெருவில்

 

உடைந்து கிடக்கும் பெட்டியிலிருந்து

ஊர் பார்க்கக் கொட்டுகிறது கண்ணீர்

 

அதைக் கண்ணீர் எனலாம்

புகார் எனலாம்

துயரம் எனலாம்

அல்லது

காதல் எனலாம்

 

 

கானுலகில் காத்திருத்தல்

ந்தக் கானகத்தின் நறுமணத்திலிருந்து

என்னை விடுவித்துவிடு

இம்மணம் தரும் போதையில்

தடுமாறும்

என்னைப் பற்றிக்கொள்

ரீங்காரமிடும் சில்வண்டுகளின் ஓசையிலிருந்து

என்னைக் காப்பாற்ற வந்துவிடு

 

வழியில் காட்டு விலங்குகளின்

காலடித் தடங்களையும்

கருந்தேள் ஒன்றையும்

அப்போதுதான் உரிக்கப்பட்ட

பாம்புச் சட்டைகள் மின்னியதையும் கண்டேன்

உன் வருகையின்போது

இவையேதும் குறுக்கிடாமலிருக்கட்டும்

 

கற்களும் முட்களுமான இப்பாதையில்

எப்படியோ வழிதவறி

காட்டின் மையத்திற்கு வந்துவிட்டிருக்கிறேன்

 

வெகுநேரமாயிற்று

உன்னைக் காணவில்லை

வழிபார்த்துக் காத்திருக்கவும்

வந்த தடம் தெரியவில்லை

இருளில் துலங்கும் நெடிதுயர்ந்த மரங்களோ அச்சமூட்டுகின்றன

அகாலத்தின் வேர்கள்

என்னைப் பின்னுகின்றன

வந்துகொண்டிருக்கிறாயா

 

நீ வருகையில் நட்சத்திரங்கள் ஒளியை உமிழட்டும் அன்பே

கானகம் இரண்டாய்ப் பிளந்து

வழிவிடட்டும்

நான் வந்த வழியில் பரவிய

என் உடலின் மணம்

உன்னை வழிநடத்தட்டும்

புழங்கிய பாதையில் வருவது போல

பயணித்து வா

 

வந்து சேர்ந்தபின்

என்னைக் காணாமல் திகைக்காதே

காரிருளின் தனிமையில்

ஒன்றறக் கலந்து நான் கரைந்துவிடவோ

ஓடையொன்றில் மூழ்கிப்போகவோ

குகையின் ஆழங்களில் மறைந்து போகவோ

மரக்கிளையின் துணையோடு

விண்ணேகவோ நேர்ந்திருக்கலாம்.

 

கானகத்தின் இடையே

உனக்காகக் காத்திருக்கும்

என் காலடித் தடங்களும்

காற்றில் கலந்திருக்கும்

என் மூச்சும்

என் வியர்வைத் துளிகள்

சிந்திய இம்மண்ணும்

உனக்குப் போதுமானதல்ல என்றறிவேன்

 

பறித்த பழங்களின் மிச்சங்களும்

உண்டவற்றின் எச்சங்களுமாய்

இந்த அடர்வனம் என் தடயங்களைத்

தாங்கியபடி இருக்கிறது.

 

கலங்காதே

இத்தனை தடயங்களைத்

தன்னிடம் விட்டுச் சென்றவளின்

காதலன் வரும்போது

அவன் பாதங்கள் பட்டு

இந்நிலம் கொஞ்சம் அதிரத்தானே செய்யும்

 

அடர்வனத்தின் வேர்கள்

அவ்வதிர்வைக் கடத்தி

என்னை உயிர்ப்பிக்காதா என்ன

 

மாடப்புறா

ன் மாடத்திலிருக்கும் புறாக்களில் ஒன்றாக

நீ என்னை பாவிப்பது குறித்த

எச்சரிக்கை மணி ஒலிக்கத்தான் செய்கிறது

 

உன் மாடத்தில்

உன் தரிசனத்திற்கென

காத்திருக்கையில்

ஒவ்வொரு சிறகாக இழந்துகொண்டிருப்பதான என் அச்சம்

புறந்தள்ளக்கூடியதல்ல என்பதை

நீயும் அறிவாய்

 

முழுதாய் என் சிறகுகளை இழக்குமுன்

பறக்கத் தொடங்குவதுதானே

முன்னிருக்கும் வழி?

 

மாடப்புறாக்களில் ஒன்று பறக்கத் தொடங்குகையில்

பிற புறாக்களும் கூடவே பறந்துவிடுவதை

நீ கண்டதுண்டுதானே?

 

உன் மாடத்திலேயே

நீண்டுவிட்ட

என் பொழுதுகளை

மீட்கவென்றே

என் மாளிகைக்குத் திரும்பிய

இந்நாளில்தான்

காண நேர்கிறது

என் மாடத்தில்

காத்திருக்கும் புறாக்களை

 

jkavinmalar@gmail.com