1 அத்தனை வலிமிகுந்த உருவெளித்தோற்றம்

கேள், கவனமாய்க் கேள்

நான் சொல்வதை. இப்போது

உலகத்தை உன் கண்ணாடிகளுக்குள் காண்பாய்.

 

தண்ணீர் உனக்குள் என்ன சொல்கிறது என அறிவாய்

தீ உனக்குள் என்ன சொல்கிறது என அறிவாய்

 

உன்னிலிருந்து தொங்கும் மூன்று கண்களைக் காண்பாய்

மூன்றாவது உன்னுடைய ஆத்திரமே எனக் காண்பாய்

உன்னிலிருந்து தொங்கும் நான்கு கண்களைக் காண்பாய்

மற்றது உன்னுடைய பதற்றம் எனக் காண்பாய்

உன்னிலிருந்து தொங்கும் எட்டுத் தலைகளில்

மற்றதாய் இருப்பது உன் அச்சம் எனக் காண்பாய்

உனக்குள்ளிருக்கும் நாய்களைக் காண்பாய்

உனக்குள்ளிருக்கும் பன்றிகளைக் காண்பாய்

 

ஒரு முக்கோணமாக ஆகிவிட்ட உன்னைக் காண்பாய்

ஒரு முக்கோணமாக ஆகிவிட்ட உன்னைக் காண்பாய்

ஒருபோதும் ஆவியாகாத உன் குரல்களினாலான

முடிவற்ற வடிவங்களைக் கடப்பாய்

கேள், அச்சமின்றிக் கேள், ஏனெனில்

இன்ஃபுளூயென்ஸா போலச்

சீறும் உன்னுடைய இரவேதான் இது

கிணற்றின் தரையில் உன்னைப் பெற்றெடுக்கும்

துக்க உடையின் இரவுதான் இது

நூறாவது, நூற்றியொன்றாவது முறையாகப் பூக்கும்

உன்னுடைய இரவு இது.

 

திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப

பசியினால் நடுங்கும் மரணத்தின் இரவு.

புறப்பட மூட்டை கட்டும் உன் உடம்பின்

அத்தனை துவாரங்களினதும் இரவு.

ஏனெனில்

உன்னுள் இறந்தவர் விழிக்கும் இரவு

நத்தைகளின் இரவு சிறகுகளற்ற வவ்வால்களின் இரவு

முகமற்று மூளையற்று கிணற்றின் அடியாழத்தில்

வழுக்குபவர்களை விழிப்புற வைக்கும் இரவு

 

ஏனெனில்,

நேற்று இறந்த உனதும்

கயிற்றைத் தாண்டிக் குதிப்பதற்கு முந்தைய

உனதுமான இரவு

ஒவ்வொரு தடவை நீ எழுந்து குதிக்கும்போதும்

இறந்த ஒட்டகச் சிவிங்கி இறந்த ட்ராகன்

இறந்த கோழி அடியாழத்தில் வீழ்கின்றன

பார், பார்

அச்சமின்றிப் பார்

 

2 இரவுணவுப் பட்டியல்

ம்மாவின் அரிசிப்பானையில் அரிசி இல்லை

அம்மாவின் பணப்பையில் பணம் இல்லை

அம்மாவின் அடுப்பறையில் நெருப்பு இல்லை

 

இன்று, வாணலியில் மயிர் வறுத்தாள் அம்மா

நேற்று, தொடைகளைக் காய்ச்சினாள்

நாளை, இனிப்பும் புளிப்புமான விரல்களைச் சமைப்பாள்

 

சமையலறையில், காய்வெட்டும் பலகைமீது அறைகிறது கத்தி

சமையலறையில், நெட்டுக்குத்தாய்ப் பாய்கிறது எலும்பு

சமையலறையில் தொடைகள் பொரிக்கப்படுகின்றன

 

அம்மாவின் அரிசிப்பானைக்குள் அம்மா இருக்கிறாள்

அம்மாவின் பணப்பைக்குள் அம்மா இருக்கிறாள்

அம்மாவின் சமையலறையில் அம்மா இருக்கிறாள்

அம்மாவின் கத்திக்குக் கீழ் அம்மா இருக்கிறாள்

 

உன் பிள்ளைப்பிராய நதியின் கரை உன் அம்மா

உன் பிள்ளைப்பிராயத்தின் வழித்தடம் உன் அம்மா

 

கரையோர வழித்தடத்தில் தனியாக நீ

கடந்து செல்லும்போது

 

அம்மாவின் பலவீனக் குரல்: என் மகளே,

வந்துவிட்டாய், விரைந்து வா, உள்ளே வா

கதவு திறக்கும்போது

காலி அடுப்பு, குளிர்ந்த காற்று

உன் அம்மாவின் சமையலறையில்

பசியால் ஒட்டிப்போன உன் வயிறு

கருநிறச் சுவர்மீது தொங்கிக்கொண்டிருக்கிறது

துருப்பிடித்த வாணலிபோல

 

இன்றிரவு, உன் அம்மாவின் கரங்களை

அந்த வாணலியில் வறுப்பாய் நீ

 

3 மரணத்தின் அன்னை

ம்மாவுக்குத் தெரியாது, ஆனால்

நீ அறிவாய்

அம்மாவுடைய இதயத்தின் மூலையில்

சிறு மச்சமொன்று தலைதூக்குகிறது

அது ஒரு பாடலாய் ஆகிறது. நிராசையுடன்

மரணத்தைத் தேடி அலைகிற,

புகழ்பெற்ற, தனிக்குரல் பாடல்.

இலையுதிர்கால நள்ளிரவுபோன்று

நயமான பாடல்.

 

இறந்தவர்களின்

முடிவற்ற வந்தனங்கள்.

மிதக்கும் பாடலொன்றின் உச்சிபோல

இருக்கிறது உட்புறம் – அதன்மீது ஒரு பறவை

துப்பிவிட்டுப் பறந்து போகிறது

அம்மாவின் கருவிழிகள் பூமிக்கடியில்

அடைகாக்கின்றன, பொரிக்கப்பட்ட கருவிழிகள்

நிலவறை விண்மீன்கள்போல மிதக்கின்றன

உனக்கு சகலமும் தெரியும். ஏனெனில்

அன்னையின் மரணமே நீதான்.

 

அம்மாவுக்குத் தெரியாது ஆனால்

நீ அறிவாய்

அம்மாவின் கூந்தல் உச்சியில்

காகம் கூடுகட்டியிருக்கிறது. முட்களற்ற

தாத்தாகாலக் கடிகாரம்போல நின்றிருக்கும்

அம்மாவின் உடலுக்குள்

சிசுக்கள் கைவிரித்து சமனம் கொண்டு

டிக்டாக் டிக்டாக் எனக் காத்திருக்கின்றன

அடுத்த பிறவிக்காக.

அம்மாவுடைய காதுகளின் உட்புறம்

கறுத்த ஆடுகள் காத்திருக்கின்றன

அவளது செவிப்பறைகளைச் சாப்பிட.

அம்மாவின் காலடியில் இறக்கை படபடக்கும்

இறந்த பறவைகள் இரண்டு.

அழுகும் நாற்றம்.

 

உனக்கு எல்லாமே தெரியும். அம்மாவின்

உட்புறத்திலிருந்து வெளித்தள்ளப்பட்ட

உனக்கு எல்லாமே தெரியும்.

குளிர்ந்த அம்மணமான இருண்ட வானம்

வெதுவெதுப்பான உடம்பிலிருந்து பிய்த்தெடுக்கப்பட்ட

வடதுருவம் நோக்கிப் பறக்கும் வலசைப் பறவையின்

சிதிலக் கால்கள்போல இருக்கிறது

ஆகாயம் என்பதே கல்லறையின் உட்புறம்

என்றிருக்கையில்

பறப்பதில் அர்த்தமென்ன?

 

உனக்கு எல்லாமே தெரியும், ஏனெனில்

நீயே மரணத்தின் அன்னை

 

4 குளிர்காலத்தின் புன்னகை

குளிராய் இருக்கிறது,

கதகதப்பான உடலிலிருந்து நீ வந்திருப்பதால்

பிரகாசமாய் இருக்கிறது,

கறுத்த உடலிலிருந்து நீ வந்திருப்பதால்

தனிமையாய் இருக்கிறது,

 

நீ உன் நிழலை இழந்துவிட்டாய் என்பதால்

குளிர்ந்து இருக்கிறது,

பூந்தொட்டியிலிருந்து தோண்டியெடுத்த மண்போல

வெளிச்சமாய் இருக்கிறது, பனிப்பாளத்துக்கடியில்

மீன்கள் முறைத்துப்பார்க்கும் சூரியகிரணம்போல

சூடாய் இருக்கிறது

உறைந்த கதவுக்குமிழை உதடுகள் தீண்டுவதுபோல

மீண்டும் குளிர்ந்திருக்கிறது,

பல்புபோன்ற இதயம் பாதி உறைந்திருக்கிறது

மீண்டும் குளிர்ந்திருக்கிறது,

பூஜ்யத்தைப் பூஜ்யத்தால் வகுப்பதைப்போல

கண்ணாடியைக் கண்ணாடியால் பகுப்பதைப்போல

 

இருக்கட்டும் இருக்கட்டும்

நீ ஏற்கனவே இறந்துவிட்டாய் என்பதால்

உன்னை நீ உதிர்த்த இடத்தில்

குளிர் வந்துவிட்டது

உன் உடம்பின் செந்நிறம் முழுவதையும்

வடித்துவிட்டு.

 

5 தாலாட்டு

ன் இறந்த குழந்தையைக்

கரங்களுக்குள் பொதிந்துகொள்கிறாள் தாயார்.

 

ஒரு தாலாட்டுப் பாடுகிறாள்

 

தாலாட்டில் இருப்பது இதுதான்:

 

உறங்கு, உறங்கு என் கண்ணே

சீக்கிரமே இறந்துபோ

அப்போதுதான் நீ

ஆசுவாசமாய் இருப்பாய்

அழ வேண்டியுமிருக்காது

 

குழந்தையின் தாய்

 

தன் அறைநடுவே குழி தோண்டி

தன் குழந்தையைப் புதைக்கிறாள்

 

அறையின் உட்கூரையிலும்

தன் குழந்தையைப் புதைக்கிறாள்.

சுவரிலும் அவளைப் புதைக்கிறாள். தன்

விழிப் பாவைகளிலும் புதைக்கிறாள்.

 

அந்தத் தாயின் பெயர் யாருக்குமே தெரியாது

ஆனால் குழந்தையின் பெயர் அவர்களுக்குத் தெரியும்

 

6 நாட்காட்டி

வெண்முயல் இறந்து செம்முயலாகிறது.

இறந்தபின்னும் குருதி ஒழுக்குகிறது.

சீக்கிரமே, செம்முயல் கருமுயலாகிறது.

தான் இறந்தபின்னும் அழுகுகிறது.

இறந்துவிட்டபடியால், அது சிறிதாகவோ

பெரிதாகவோ ஆகலாம், தன் விருப்பம்போல.

பெரிதாய் என்றால் மேகம்போல இருக்கிறது

சிறிதாய் இருக்கையில் எறும்புபோல.

எறும்புமுயலை உன் காதுக்குள்

திணித்துக்கொள்ள முயல்கிறாய்.

பார்வையில் படும் சகலத்தையும்

தின்னுகிறது எறும்புமுயல் – உன் காதுக்குள்

இருக்கும் பரந்த புல்வெளியையும்தான்.

அப்புறம் சூறாவளி மேகத்தைவிடப் பெரிதான

குட்டிமுயல்கள் இரண்டை ஈனுகிறது. உன் காதுகளில்

ரீங்கரிக்கிறது, ஒவ்வொரு ஒலியுமே ரீங்காரம்தான்.

உன் காது இறந்துகொண்டிருக்கிறது. ஒரு முயல்

இறந்துகொண்டிருக்கிறது. சிலசமயம்

செத்த முயல் ரத்தம் தோய்ந்த விடாய்த்துணியாக

அவதாரமெடுக்கிறது. அவ்வப்போது

உனது ஜட்டிக்குள்ளிருந்து ஒரு செத்த முயலை

உருவியெடுக்கிறாய். ஒவ்வொரு மாதமும்

ஒரு செத்த முயலை உருவி சுவரில் மாட்டுகிறாய்.

சுவரில் நீ ஒரு கதறலை மாட்டுகிறாய், அது

முயல் காதுகளைப்போல மணக்கிறது.

ஆசிரியர் குறிப்பு

கிம் ஹைசூன்(Kim Hyesoon) 1955-இல் கொரியாவின் உல்ஜின்னில் பிறந்தவர். கொரிய இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். 1979-இல் ’கவிஞர் சிகரெட் பிடிக்கிறார்’ என்ற கவிதையும் இன்னும் நான்கு கவிதை களும் பிரசுரமானதோடு தம் கவிதை வாழ்வைத் தொடங்கினார். தென்கொரியாவின் சமகாலக் கவிகளில் முக்கியமானவர். சியோலில் வசிக்கிறார். ‘இலக்கியமும் அறிவுஜீவிதமும்’ என்ற இலக்கிய இதழில் பிரசுரமான பெண்கவிகளில் முன்னணியில் இருப்பவர்.

நடைமுறை வாழ்வின் அலகுகளைப் பேசிக்கொண்டு வரும்போதே, அவற்றில் ஒருவிதமான சர்ரியல் அம்சங்களை ஏற்றிவிடும் வித்தையை இவர் கவிதைகளில் காண முடிகிறது. பெண்மொழி என்று தனியாக ஒன்றை வரித்துக்கொள்ளாமலே, பெண்ணுலகின் நுட்பங்களை எழுதும் திறன் கொண்டவர். அநேகக் கவிதைகளில் இடம்பெறும் நீ என்பது ஒற்றைப் படர்க்கை நிலை அல்ல. அது நானாகவும் நீயாகவும் மற்றது ஆகவும் உருமாற்றம் அடைந்தபடியே இருக்கிறது. ஒரே கவிதையில் இம்மாற்றங்கள் நிகழ்ந்து முடிவது நூதனமாகவும் வசீகரமாகவும், அந்தக் கவிதையின் அர்த்தப் பரப்பை அடுக்குகள் கொண்டதாகவும் ஆக்கிவிடுகிறது – எடுத்துக்காட்டு: மரணத்தின் அன்னை கவிதை. இந்தக் கவிதைகளின் விசாரப் பொருளாக மரணமே இருப்பதும் குறிப்பிடத்தக்கது; மரணம் ஓர் அழகியல் நிகழ்வாக, தன் அத்தனை துயரங்களுக்கும் அப்பாற்பட்ட விட்டேற்றித்தன்மை கொண்டதாக உருமாறுவதும்தான். ஒருவகையில் துயரத்தின் பேரானந்தம் கொண்டவையாய் தொனிக்கும் கவிதைகள்.

இந்தக் கவிதைகளின் மொழி, எளிமையும் பூடகமுமாய் ஒரே சமயத்தில் தென்படுவது. உதாரணமாக, அம்மா என்று நேரடியாய்ச் சுட்டினாலும், இந்தக் கவிதைகளில் வரும் அம்மா ஒரு அம்மா அல்ல என்பது எத்தனை வெளிப்படையாய் இருக்கிறது… ஒரு சில கவிதைகளில் நிலவும் உச்சாடனத் தன்மை தமிழுக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று!

வார்த்தையிலிருப்பதை மொழிபெயர்த்துவிட்டேன்; அவற்றின் சுட்டலில் இருப்பதைத் தமிழில் பெயர்த்துவிட்டேனா என்பதே சந்தேகமாகத்தான் இருக்கிறது.

Autobiography of Death (மரணத்தின் சுயசரிதை) என்ற தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள் இவை.

 

writeryuvan@gmail.com