தன் நடைப் பயணத்தினிடையே ராஜஸ்தானில் ஒரு பொதுக்கூட்ட மேடையில், ராகுல்காந்தி ஆற்றிய உரையில், நாட்டிற்கு மிக முக்கியமான ஒரு சேதியை வழங்கியிருக்கிறார்.
ராஜஸ்தானின் பாமர மக்கள், தங்கள் குழந்தைகளை ஆங்கிலம் பயிலச் செய்ய வேண்டுமென்பதே அது !
ராஜஸ்தான்
மார்வாடிகளுடன் எனக்குப் பரிச்சயம் அதிகம். சவுகார்பேட்டையில் ஒரு மார்வாடியிடம்தான் வணிக நுணுக்கங்களைப் பல்லாண்டுகள் கற்றுக்கொண்டேன். ராஜஸ்தானி இந்திக்கு நெருக்கமாகவே இருக்கும். எனவேதான் அவர்களுக்கு இந்தி சரளமாக வருகிறது என நினைத்துக் கொண்டேன். ஆனால் உண்மை அப்படி அல்ல !
ராஜஸ்தான் மாநிலத்தவரின் தாய்மொழி மார்வாரி எனப்படும் ராஜஸ்தானி. இந்தி மொழியை முதற்பாடமாகவும், ராஜஸ்தானி அல்லது ஆங்கிலத்தை இரண்டாவது மொழிப் பாடமாகவும், ஏனைய பாடங்கள் அனைத்தையும் இந்தி வழியில் படிப்பதும்தான் அங்கிருக்கும் சாமானியர்களுக்கு வழங்கப்படும் கல்வி.
பிழைப்பு தேடி இந்தியாவெங்கும் பயணிக்கும் அவர்களுக்குத் தெரிந்த ஒரே மொழி இந்தி மட்டுமே. ஆங்கிலப் பரிச்சயம் மிகக் குறைவு. அவர்களுடைய உச்சரிப்பிலேயே அதை நம்மால் எளிதில் உள்வாங்க முடியும். தவ்ஜண்ட், இஸ்கூல் என்றே பெரும்பாலும் பேசுவார்கள்.
ஒருமுறை ராஜஸ்தானிலிருந்து வந்திருந்த ஓனரின் உறவுப்பெண், இப்பல்லாம் நம்ம ஊர்ல எல்லாப் பொண்ணுகளும் படிக்கப் போறாங்க தெரியும்ல ? பள்ளிக்கு போன பின்னாடி மார்வாரில பேசுனா நாகரீகமில்லைன்னு இந்திலதான் பேசுறாங்க என்று அதைப் பெருமையாகச் சொன்னார். முன்பெல்லாம் நம் வீடுகளிலும் நாம் சரளமாக ஆங்கிலத்தில் பேசினால் வாய்பிளந்து ரசித்த கூட்டம் இருந்ததுதானே ?
ராஜஸ்தான் அரசுப் பள்ளிகளில் இதுதான் நடைமுறை. தாய்மொழியைத் தவிர்க்க விரும்பாதவர்கள் பெரும்பாலோர் புறக்கணித்துவிடுவது ஆங்கில மொழிப்பாடத்தை. அப்படி அவர்களை நிராகரிக்கச் செய்ய எளிய பரப்புரைகளே போதுமானதாக இருக்கிறது. இந்தி நம் தேசியமொழி. நமது தாயைப் போன்றது அது. ஆங்கிலமோ வெள்ளைக்காரர்களின் மொழி. கிறுத்துவர்களுடைய மொழி. அதைப் படிப்பதென்பது தாய்க்குச் செய்யும் துரோகத்திற்கு நிகரானது. நம்முடைய தாய்மொழியும், இந்தியுமிருக்க ஆங்கிலம் ஏன் என்று அந்த மக்களை நோக்கிப் பிற்போக்கு மூடர்களால் செய்யப்படும் பரப்புரைகள், எளிதாக அவர்களைக் கவர்ந்துவிடுகின்றன !
அந்தக் காலத்திலாவது பரவாயில்லை, சில கோடி மக்களை சில சேதிகள் அவர்கள் வாழ்நாள் முழுவதுமே கூடப் போய்ச் சேராது. ஆனால், நவீனத் தகவற்புரட்சியால் உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் சுவாரசியமான காட்சி பதிவானால், பரப்பப்பட்ட அடுத்த நிமிடம் உலகின் இன்னொரு மூலையில் பல்லாயிரம் மக்களால் அது ரசிக்கப்படுகிறது. ஓரிரு நாட்களில் பல நூறு கோடி பார்வையாளர்களை அது ஈர்த்தும்விடுகிறது !
இதனால் நன்மைகள் மட்டும் விளையாமல், பக்கவிளைவாக பூமர் மாமாக்களின் இத்தகைய பிற்போக்குப் பரப்புரைகளும் காட்சித் துணுக்குகளாய் சமூக வலைத்தளங்களில் பரவி அது சாமானியனின் கவனத்திற்குப் போகிறது !
அவனைப் பொறுத்தவரையில், புதுவரவான அந்த மூசாவின் மாயக்கண்ணாடி எதைக் காட்டினாலும் அதை அப்படியே அவன் மூளை நம்பிவிடுகிறது. விளைவு, அவன் படித்திராத ஆங்கிலத்தை அவனுடைய பிள்ளைகள் படிப்பதும் பாவம் என நம்பிவிடுகிறான் !
அங்கு அரசியல்வாதிகள் ஏன் இந்தி வெறி பிடித்து அலைகிறார்கள் ? இந்தியை ஏன் வலுக்கட்டாயமாகத் திணிக்கத் துடிக்கிறார்கள் ?
இதற்கான காரணங்களையெல்லாம் நம் முன்னோர்கள், நூற்றாண்டுகளுக்கு முன்பே முன்மொழிந்துவிட ;
ராகுல்காந்தி இப்போதுதான் நம் தாத்தாக்களின் சொற்களை வழிமொழிந்து பேசியிருக்கிறார்.
இத்தகைய திடீர் மாற்றத்திற்கு அவருக்குச் சமீபத்தில் நெருக்கமான திராவிடக் காதல்தான் காரணமாக இருக்க முடியும். 2017 க்குப் பின்னரே அவர் மெல்ல தமிழர்களிடம் நெருங்கி வந்தார், குறிப்பாக திமுகவிடம்.
ஏனோ அதற்கு முன்புவரை நம்மை நம்பாதவராக கொஞ்சம் மேலோட்டமாகவே அணுகி வந்தார். நம் மண்ணில் வைத்துக் கொல்லப்பட்ட அவருடைய தந்தையின் பேரிழப்புதான் பிரதான காரணி. போக, திமுகவைப் பற்றி, கலைஞரைப் பற்றி பரப்பப்பட்ட பல நூறு அவதூறு புனைச்சுருட்டுகளை அப்படியே அவர் ஏற்றதாலும் இருந்திருக்கலாம் !
கலைஞர் சுகவீனமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில் பார்க்க வந்தவர், திமுகவினர் கலைஞர்மீது வைத்திருந்த மாசற்ற பாசத்தைக் கண்டு வியந்துபோனார். ஸ்டாலின், கனிமொழி போன்றோர் ராகுலிடம் காட்டிய அன்பில் சிலிர்த்தார். பல வருடங்கள் தவறான சேதிகளால் வீணடிக்கப்பட்டோம் என்பதை உணர்ந்தார். அதன்பின்னரே திமுகவுடன் அவர் மிகவும் நெருங்கி வந்தார். அதற்கேற்ப, ராகுலைப் பிரதமராக்குவோம் என்று முதல் தலைவராக முன் மொழிந்தார் ஸ்டாலின். இந்தியாவின் வேறெந்தத் தலைவர்களும் அதுவரை அப்படிச் சொல்லவில்லை. அல்லது சொல்லத் தயங்கிக் கொண்டிருந்தனர். அது ராகுலை இன்னும் ஈர்த்தது. எந்தளவுக்கு என்றால் நானே தமிழன்தானே என வட இந்திய நிருபர்களிடம் சொல்லுமளவுக்கு !
தொடர்ந்து தமிழ்நாடு, தமிழ், தமிழர், அவர்களுக்கிருக்கும் தனிக் குணம் பற்றியெல்லாம் உண்மையான வரலாறு சொல்வதென்ன என்று தேடித் தேடி வாசித்திருக்கிறார், கேட்டறிந்திருக்கிறார், பார்த்திருக்கிறார் !
தமிழ்நாடும், கேரளாவும் அவருக்கு மிகப் பிடித்துப் போனது. கேரளாவில் போட்டியிட்டும் வென்றார். திராவிடர்களின் மொழிப்பற்றும், இந்திமறுப்பும் அவரைச் சிந்திக்கத் தூண்டியிருக்கிறது. அதன் வெளிப்பாடாகவே மிகச் சரியான ஆலோசனையைப் பாமர மக்களுக்கு அவர் வழங்கியுள்ளார்.
” உங்களை இந்தி மட்டும் படி என்று ‘அவர்கள்’ வலியுறுத்துவது உங்களை மேலே ஏற்றவா ? ஒருபோதுமில்லை. அவர்களுக்கு இங்கு மட்டுமல்ல, இந்தியாவில் அவர்கள் எங்கு வாழ்ந்தாலும், நீங்கள் அவர்களுக்கு மட்டுமே வேலை செய்ய, தொடர்பு மொழியாக இந்தி தேவைப்படுகிறது. அதனால்தான் உங்களை இந்தியை மட்டுமே படிக்கச் சொல்கிறார்கள். அவர்கள் சொகுசாக வாழ என்றென்றும் அடிமைகள் தேவை. இந்தியை மட்டும் படிக்கும் நீங்கள்தான் அதற்குச் சரி. இந்தியைத் தவிர்த்து நீங்கள் ஆங்கிலம் படித்துவிட்டீர்கள் எனில் உங்களை அவர்களால் ஏமாற்ற முடியாது. நீங்களும் உள்ளூர் தாண்டி உலகில் எங்கும் வேலைக்குப் போகலாம். அங்கு உங்களுக்கு இந்தி உதவாது, ஆங்கிலம்தான் பயன்படும். உங்களை, உங்கள் குழந்தைகளை இந்தியைப் படிக்கச் சொல்லிவிட்டு, முதலமைச்சர்கள் தொடங்கி அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்களின் குழந்தைகளை கான்வெண்டில் சேர்த்து ஆங்கிலத்தைப் பயில வைக்கிறார்கள். அமித்ஷாவின் பேரன் இந்தியைப் படித்து கொண்டிருக்கப் போவதில்லை. இனியும் இந்தி போதுமென்று ஏமாந்து கொண்டிருக்காதீர்கள். ஆங்கிலம் படிக்கச் செய்யுங்கள். ”
தமிழ்நாடு
நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபொழுது, தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகள் பெரும்பாலும் தமிழ் வழிக் கல்வியில்தான் இயங்கியது. அரசு உதவி பெறும் அறக்கட்டளை பள்ளிகளில் ஒரே ஒரு பிரிவு மட்டும் ஆங்கில வழிக் கல்வியை அளிக்கும். அதில், படித்த பெற்றோர்களின் பிள்ளைகள் அல்லது அரசு வேலையிலிருப்போர், பெரும் பணக்காரர்களின் பிள்ளைகள் மட்டுமே படித்தனர். தனியார் பள்ளிகள் மட்டுமே ஆங்கில வழிக் கல்வியை முழுமையாக வழங்கின. அது முழுக்கவே மேல் மட்ட மக்களுக்காக இயங்கியவை.
தன் பிள்ளைகள் கையெழுத்துப் போடவாவது தாய்மொழியான தமிழைக் கற்றாக வேண்டுமென்றுதான் பெரும்பாலான சாமானிய மக்கள் அன்று எண்ணினார்கள். இன்று இருப்பது போல போதுமான வருவாய் அல்லது நிரந்தர தொழிற்பாதுகாப்பு போன்ற எந்த அம்சங்களும் இல்லாத பொழுது என்பதால் அவர்கள் தங்களின் குழந்தைகளை அரசுப்பள்ளியில் மட்டுமே படிக்க வைத்தனர். அன்றெல்லாம் வீட்டுக்கு நாலஞ்சு பிள்ளைகள் வேறு இருக்கும். அரசுப் பள்ளிகள் அல்லது அறக்கட்டளைப் பள்ளிகள் மட்டுமே தோதாக இருந்தன. விளைவு, தமிழ் வழிப்பாடமே அன்று பெரும்பாலோருக்கு அமைந்தது !
1991- க்குப் பிறகு இந்தியா உலகமயச் சூழலில் முழுமையாகத் தன்னை இணைத்துக் கொண்ட பின்னரே, தமிழ்நாட்டில் சாமானிய மக்களின் வாழ்சூழல், தின வருவாய் மெல்ல மாற ஆரம்பித்தது. அவர்களுடைய வருவாய் பெருகிய அதேவேளையில் புற்றீசல் போல தமிழ்நாடு முழுவதுமே மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் முளைத்தன. அவை பெரும்பாலும் கல்வியை வணிகநோக்கில்தான் கற்றுத்தர முனைந்தன. ஆனால் ஆங்கில வழிக் கல்வியைத் தந்தன !
ஒருவகையில் மக்கள் சுரண்டப்பட்டாலும், இன்னொருவகையில் அதிக மாணவர்கள் ஆங்கில வழிக் கல்வியில் பயிலும் சூழல் பெருகியது.
கலைஞர் போன்ற நிர்வாக அறிவும், கணிப்பும் கொண்டவர்களால் தகவல் தொழில்நுட்பத் துறைகள் சிறப்பாக்க் கட்டமைக்கப்பட்டன. ஆங்கிலம் எளிமையாக வாய்த்த நம் பிள்ளைகள் பலருக்கு அது வேலைவாய்ப்பை அள்ளிக் கொடுத்தது !
உலகளாவிய Y2K பிரச்சினையின்போது, நன்கு படித்த, ஆங்கில மொழியறிவு மிக்க, நம் மாநிலப் பிள்ளைகளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு இலகுவாகக் கிட்டியது. அவர்களுடைய பெற்றோர் தன் வாழ்நாள் முழுக்க உழைத்தும் சம்பாதிக்காத பணத்தை, வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களிலேயே அவர்கள் ஈட்டத் துவங்கினர் !
ஆங்கிலத்தை மிகவும் விரும்பி படித்ததால் அதற்கடுத்த இருபது வருடங்களில் தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் சிறந்த மாநிலமாக மின்னிக் கொண்டிருந்தது !
இதெல்லாம் எளிதில் வாய்த்தனவா என்ன ?
தமிழ்நாட்டில் இந்தியை பூசி மொழுகிவிட எப்போது நினைத்தார்கள் ? இந்தியா விடுதலை அடைந்தபின்பா ? இல்லை. 1920களிலிருந்தே அதற்கான வேலையை மெல்லத் துவங்கிவிட்டனர்.
இந்தி எதிர்ப்பு போர்
பெரும்பாலான தமிழர்களுக்கு இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் 1965 – 1966இல் நடந்ததாகவே மூளையில் பதிவாகியிருக்கும். அது தி.மு.க.வை மட்டும் குறை சொல்வதற்காக சங்கிகள் புரிந்த லீலை. 1923 களிலேயே இந்தி எதிர்ப்பு குரல்கள் தமிழகம் முழுவதும் ஓங்கி ஒலித்தன !
திராவிடர் கழகம் சார்பாக அச்சிடப்பட்டு, 1940 களில் வெளிவந்த, ஆசிரியர் மா. இளஞ்செழியன் அவர்கள் எழுதிய நூல், ‘தமிழன் தொடுத்த போர்.’
இந்நூல், நமக்குத் துல்லியமாக இதுபற்றி விளக்குகிறது. 1923லிருந்தே அன்றைய பல காங்கிரஸ் தலைவர்கள், குறிப்பாக இராஜகோபால், சத்தியமூர்த்தி போன்றோர் இந்தியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று கோரிவந்த நிலையில், தமிழ் அறிஞர்கள் ஒருசேர அதைக் கடுமையாக எதிர்த்து எழுதியும், பேசியும் வந்தார்கள் !
மகாத்மா காந்தியை வர்ணாஸ்ரமப் பித்து பிடித்தவர் எனப் பெரியார் விமர்சித்தார். அதற்கான காரணங்கள் இல்லாமலில்லை. 01/02/1936 அன்று சென்னை சைதாப்பேட்டை பொதுக்கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசிய காந்தியடிகளாருக்குத் தமிழக மக்களுக்கு இந்தி தெரியாதிருந்தது ஒரு குறை.
“தமிழர்கள் அனைவரும் தங்கள் தாய்மொழியோடு சேர்த்து சமஸ்கிருதத்தையும் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் நடைமுறையில் அனைவருக்கும் அது ஆகக்கூடிய காரியமல்ல. எனவே எளிதான இந்துஸ்தானி என்கிற மொழியைக் கற்றுக்கொள்ளலாம். அது உங்களுக்குப் பயனளிக்கும்.”
இந்தி தெரியும். அதென்ன இந்துஸ்தானி ? இந்திய முஸ்லீம்களில் பெரும்பாலோர் இந்துஸ்தானி மொழியையே பேசுகிறார்கள். அதாவது இந்தி மொழியோடு உருது வார்த்தைகளைக் கலந்தால் வருவது இந்துஸ்தானி மொழி.
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். இந்தி மிக சமீபத்தில் உருவாக்கப்பட்ட ஒரு மொழி. எந்தச் சுயமுமற்றது. அதில் இலக்கியங்கள் ஏதுமில்லை. சமஸ்கிருதம் + உருது கலந்து, புரட்டிக் கொடுத்தால் அது இந்தி. எங்கெல்லாம் இந்தி பரவுமோ, அங்கெல்லாம் இருக்கும் வட்டார மொழிகளை அது தின்று, விழுங்கி முற்றிலுமாக அழித்துவிடும்.
மொழிவாரி மாநிலங்கள் பல உருவாக்கப்பட்டபோதும் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்கள் மட்டும் மொழி அடையாளமாக இல்லாமல், புவியியல் அடையாளமாய் அறியப்படுவதற்கு இந்தி எனும் கொலைக்கருவியே காரணம். அவ்விரு மாநிலங்களில் மட்டுமே இந்தி கிட்டத்தட்ட 27 மொழிகளை உறிஞ்சிக் குடித்துவிட்டது. இந்திதான் ஆட்சிமொழியாகவும், பல கோடி மக்களின் பேசுமொழியாகவும் அங்கு உள்ளது. முற்றிலுமாக அழிக்கப்பட்ட ஓரிரு மொழிகளில் சில பழங்குடியினர் பேசி வந்தாலும், அதன் எழுத்துரு முற்றிலுமாகவே மறக்கடிக்கப்பட்டு விட்டது !
சரி, நாம் கதைக்கு வருவோம்.
ராஜகோபால் முன் இப்படி காந்தி பேசிவைத்துவிட்டுப் போக, 1937 -இல், சென்னை மாகாணத்தின் ஆட்சியை காங்கிரஸ் பிடிக்கிறது. சென்னை மாகாணம் என்றால் அது தமிழ்நாடு மட்டுமல்ல, நிறைய ஆந்திரா, கொஞ்சம் கேரளா, கொஞ்சம் கர்நாடகா என்கிற பெரு நிலப்பரப்பு !
தன் தேர்தல் அறிக்கையில் இந்தி கட்டாயமாக்கப்படும் என்கிற எந்த அறிவிப்பையும் காங்கிரஸ் செய்திருக்கவில்லை. ஆனால், மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தில், 10/08/1937 அன்று உரையாற்றிய முதலமைச்சர் ராஜகோபால், வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில், பள்ளியில் அனைவருக்கும் கட்டாய இந்தி என்கிற சட்டத்தைக் கொண்டுவரவிருப்பதாக அறிவிக்கிறார்.
அவ்வளவுதான். மறுநாள் அது செய்தித்தாள்களில் வெளியானவுடன் தமிழ்நாட்டில் தீ பிடித்துக்கொண்டது !
பெரியார், அண்ணா துவங்கி கி.ஆ.பெ.விசுவநாதன், மறைமலை அடிகளார், பன்னீர்செல்வம், உமாமகேஸ்வரன், சோமசுந்தர பாரதி, ராமாமிர்தம் அம்மையார், தருமாம்பாள், ஈழத்தடிகளார் என்று ஒட்டுமொத்த தமிழர் தலைவர்கள் பொங்கியெழுந்து, அவரவர் பின்னால் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் சகிதம் களமிறங்கிப் போராட ஆரம்பித்தனர் !
அட, பேசத்தானே செஞ்சோம் ? இன்னும் சட்டம்கூடப் போடலையே ? அதுக்குள்ள இவ்வளவு பெரிய போராட்டமா என ராஜகோபால் திகைத்துப் போனார்.
நான் அனைத்து வகுப்புக்கும் இந்தி கட்டாயம்னு போடப் போறதில்லை. ஐந்து பாரங்கள் வரை மட்டுமே என்று ஒரு படி இறங்கினார்.
சட்டமன்றத்திலும் கடும் எதிப்புகள் கிளம்பின. கலிபுல்லாகான் போன்றோர் இந்தி தமிழை அழித்துவிடும் என்று கொதிக்க ;
உங்களுக்கும் வேணாம், எனக்கும் வேணாம் மூன்று பாரங்கள் வரை ஓகேவா ?
ம்ஹூம். நாளொருமேனி பொழுதொரு வண்ணமுமாக எதிர்க்குரல் நாலாப் பக்கங்களிலிருந்தும் அதிகரிக்க ;
இந்தி படிச்சா போதும், பாஸ்லாம் கட்டாயமில்லை. ஃபெயில் ஆனாலும் மேல் வகுப்புக்குப் போலாமாக்கும் என்று பல படிகள் கீழிறங்கினார்.
அடங்கவில்லையே ?
ஒருகட்டத்தில் பொறுமையிழந்த ராஜகோபால், இனி இந்தி எதிர்ப்பு போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன், இங்கு நான் முதலமைச்சரா அல்லது ஈரோட்டு ராமசாமி முதலமைச்சரா ? யார்னு பார்த்துடுவோம் என்று சவால் விட்டு, 21/04/1938 அன்று, இந்தி கட்டாயம் என்கிற தீர்மானத்தைச் சட்டமாக்கினார் ராஜகோபால் !
அன்றுமுதல், அதாவது 1938 முதல் 1940 வரை, முழுமையாக இரண்டு வருடங்கள் சென்னை மாகாணம் முழுக்கப் போர்க்களமாகவே காட்சியளித்தன !
இதென்னடா சனியன், தெரியாத்தனமா இதைத் தொட்டுட்டேனே, நல்லதைத்தானே செய்ய நினச்சேன் ? ஏன் என்னை இவ்வளவு எதிரியாகப் பார்க்கிறார்கள் தமிழர்கள் ? என்று ராஜகோபால் புலம்ப ஆரம்பித்துவிட்டார் !
பெரியார், அண்ணா உட்பட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டு மாதக்கணக்கில் சிறை வைக்கப்பட்டனர். அப்படிக் கைதாகி சிறையிலிருந்த பொழுதுதான் தாளமுத்து, நடராசன் என்கிற மொழிப்போர் தியாகிகள் உயிரிழக்க நேரிட்டது !
1939 இல்,படிப்படியாக அனைத்து தலைவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். இந்தி திணிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் விடுதலையான பெரியார் அதை ஏற்க முடியாது என்றார். சட்டத்தை முழுமையாகத் திரும்பப் பெறாவிடில் மீண்டும் போராட்டங்கள் வெடிக்கும் என எச்சரித்தார். ராஜகோபால் பதவியை விட்டே விலக நேரிட்டது. 21/02/1940 அன்று சட்டம் முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டதாக சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியானது. ராஜகோபாலின் கூற்றுப்படி தமிழர்களுக்கு முதலமைச்சர் தான்தான் என மெய்ப்பித்தார் பெரியார் !
அதன்பின்னர் தமிழர்கள் மறந்துபோயிருப்பார்கள் என்று நம்பித்தான்
1965இல் மீண்டும் இந்தியைத் திணிக்க முற்பட்டது காங்கிரஸ் அரசு. நினைவில் ஆழப்பதியுங்கள். அந்த ஒரு காரணத்துக்காக அன்று விலக்கப்பட்ட காங்கிரஸ், அதன்பின்னர் இந்த மண்ணை என்றுமே ஆள முடியாமற் போனது என்பதுதான் கள யதார்த்தம். பாரதிய ஜனதா கட்சி போன்று செயல்பட்டிருந்தால் காங்கிரஸ் இந்த மண்ணிலிருந்து என்றோ முற்றிலுமாகத் துடைக்கப்பட்டிருக்கும். ஆனால், ஜனநாயகக் போற்றிகளான திராவிடக் கட்சிகள் அப்படி அவர்களைக் கருதாமல், மாறி மாறிக் கூட்டணி வைத்து, காங்கிரசை அழியவிடாமல் பார்த்துக் கொண்டன என்பதுதான் வரலாறு !
மெக்காலே
இந்தியாவின் நவீனக் கல்விமுறையை வடிவமைத்த பெருமை மெக்காலே அவர்களையே சாரும். இந்தியாவுக்கு ஆங்கில வழியில் கல்வியைக் கொடுப்பது என்பது 1813 -இல் பிரிட்டிஷாரால் முடிவு செய்யப்பட்ட ஒன்று. பொறுப்பு கிறுத்துவ மதப் பரப்புரை நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 1835 இல் இந்தியாவிற்கு வந்த மெக்காலே இந்தியாவுக்கான கல்விமுறையை மேம்படுத்தினார். 1857 க்குப் பின் நேரடி பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் நிர்வாகத்தில் இந்தியா வந்தவுடன் அது பரவலாக்கப்பட்டது !
1890 களுக்குப் பின்னரே அந்தந்த பகுதிகளுக்கேற்பத் தாய்மொழியிலான பாடங்களும் அந்தக் கல்விமுறையில் சேர்க்கப்பட்டன. மெக்காலே கல்விமுறையைப் பற்றிக் குறை கூறும் பலரின் கூற்று ;
“அது வெறுமனே குமாஸ்தா பணிகளுக்கான கல்விமுறை மட்டுமே. அதாவது வெள்ளைக்காரர்களுக்கு உதவியாளர்களாக பணிபுரிய மட்டுமே அந்தக் கல்வி உதவுமே அன்றி, புதிய கண்டுபிடிப்புகளையோ, அறிவைக் கிளறும் தூண்டுதல்களை ஏற்படுத்துமளவுக்கோ அந்தப் பாடத்திட்டத்தில் ஏதுமில்லை.”
பார்ப்பனர்களுக்கும், ஆதிக்கச் சாதியிலிருந்த பெரு செல்வந்தர்களுக்கு மட்டுமே அந்தக் கல்வியும் கிட்டியது. சாமானியர்களுக்கு அதுகூட கிட்டவில்லை. ஒருபுறம் நாடு முழுக்க விடுதலைப் போராட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருக்க, அந்தக் கல்வியைக் கற்ற சில பிரிவினர் பெரும்பாலும் வெள்ளையர் நிர்வாகத்தில் அரசு வேலையில் ஊழியர்களாக நன்கு கொழித்தனர் !
படிப்படியாக மேம்படுத்தப்பட்ட அந்தக் கல்விமுறையை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றுதான் பெண்களுக்குக் கல்வி, ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு, இதர சலுகைகள் தரப்பட்டன !
சென்னை மாகாணத்தில் பிரிட்டிஷாரின் ஆதிக்கம் அதிகமிருந்ததால் கல்வியின் அடிப்படைக் கட்டமைப்பு மிகப் பலமாக இருந்தது. இருந்தும் ஆங்கில வழியிலான முழுக்கல்வி சாமானியர்களுக்கும் கிட்ட முழுதாக ஒரு நூற்றாண்டு ஆனது !
மெக்காலே கல்வி முறையைக் குறை கூறும் பலர், சங்கிகளாகவும், இந்தியை ஆதரிப்பவர்களாகவும் இருப்பதைக் காணலாம். இவர்கள் எதிர்ப்பதன் நோக்கத்தில் மதவிரோதம் இருக்குமேயன்றி வேறென்ன இருக்கப் போகிறது ? எந்த ஒரு காரணத்திற்காக மெக்காலேவை எதிர்க்கிறார்களோ, இந்தி அதே வேலையைத்தான் செய்யும். இருந்தும் அது நம் தேசிய மொழி என்று அதைத் தூக்கிப் பிடிப்பார்கள் !
பிரத்யேகச் சிறப்புகள் ஏதுமில்லாத இந்தி மொழி அடிமைத்தனம் மிக்கது என்பதைத் தாமதமாகவேனும் புரிந்து கொண்ட ராகுல், இந்தியைக் காட்டிலும் ஆங்கிலம் உங்களை மேம்படுத்தும் எனச் சாமானியர்களைத் தூண்டுவது, நிச்சயம் வட இந்தியாவில் புரட்சியை உருவாக்கும் என நம்புகிறேன் !
அழிவாயுதம்
இந்தி அடிமைகளை உருவாக்கும், நம் தாய்மொழியை அழிக்கும், மதப்பிரிவினைகளைக் கொண்டு வரும், இதையும் விஞ்சி, அது கலாச்சாரம், பண்பாட்டில் சிதைவுகளை ஏற்படுத்தும்.
மகாராஷ்டிராவின் தலைநகரம் மும்பை. ஆனால் இன்று அது முழுக்க இந்திமயமாக இருப்பதைக் காணலாம். அங்கு மேடைகளில் மராட்டி பேசப்படுவதில்லை. ஊடகங்களில் மராட்டி ஊறுகாயாக ஓரமிருக்கும், பிரதானமாக இந்தியே முன் நிற்கும். உத்தவ்வை எதிர்க்க மராட்டியில் பேச வேண்டிய அவசியம் மோடிக்கோ, அர்விந்த் கெஜ்ரிவாலுக்கோ இல்லை. உத்தரப் பிரதேசத்திலிருந்து வந்த அமிதாப்பச்சன் குடும்பத்தினருக்கு மராட்டி எழுதப் படிக்க, பேசக் கற்றுக்கொள்ள மெனக்கெடத் தேவையில்லை. அது வங்கத்திலிருந்து வந்த மிதுன் சக்கரவர்த்திக்கும், பிகாரிலிருந்து வந்த சத்ருக்கனுக்கும், சென்னையிலிருந்து போன கமல்ஹாசனுக்குமே கூடப் பொருந்தும். இந்தி தெரிந்தால் போதும் !
இந்தப் பருப்பு நம்மூரில் வேகுமா என்றால் வேகாது. காரணம், நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்தியைக் கண்டுகொண்டது நம் தமிழ்நாடு !
அறிவாயுதம்
தென் இந்திய நகரங்களான ஐதராபாத், பெங்களூரு, சென்னை போன்ற ஊர்களில் தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சிக்கு ஆங்கிலமே பிரதான பங்கு வகித்திருப்பது இன்றுதான் வட இந்தியத் தலைவர்களை உறுத்தியிருக்க வேண்டும். நொய்டா, குர்கான் போன்ற வட இந்திய ஐடி நகரங்களிலும் தமிழ் இளைஞர்களின் பங்களிப்பை அவர்கள் வியந்து நோக்கியிருப்பார்கள்.
முற்போக்குச் சிந்தனைமிக்க ராகுல் காந்தி போன்றவர்களுக்கு நிச்சயம் இந்தியின் பின்னிருக்கும் சூது விளங்கியிருக்கும். ராஜஸ்தான் மக்களுக்கு இதை இவர் இந்தியில்தான் விளக்கினார் !
கொத்துக் கொத்தாகத் தினமும் பல்லாயிரக்கணக்கில் வேலை தேடி தமிழகத்திற்கு வரும் மக்களில் பெரும்பாலோர் இந்தி படித்தவர்கள்தாம். அவர்கள் கடினமாக உழைத்து ஈட்டும் மாத வருவாயைக் காட்டிலும் பல மடங்கு, இங்கு ஆங்கிலம் படித்து வேலைக்குப் போன இளைஞர்களுக்குக் கிட்டுகிறது.
மொழிப்போர் தியாகிகளுக்கான ஒதுக்கீடு, சலுகை, ஓய்வூதியத்தைக் கண்டு சிலர் கொதித்து அவதூறு பேசுவதைக் கேட்டிருந்திருப்பீர்கள். ஆனால் அவர்களுடைய தியாகங்களினால்தான், நம் குழந்தைகளுக்குக் குழப்பமில்லாத அறிவாயுதம் கிட்டி, நம்மை நல்ல நிலையில் வைத்துள்ளது என்பதை அனைவரும் உணரவேண்டும் !
நன்றி ராகுல். உங்களால் நிச்சயம் வாடிய வடக்கு இனி வாழும் !