திரு நரேந்தர் தாமோதர் தாஸ் மோடி அவர்களின் ஒன்பது ஆண்டுகால ஆட்சி இந்திய அரசின் நிலைப்பாடுகளில் செயல்பாடுகளில் பாரதூரமான விளைவுகளை/ பாதகங்களை ஏற்படுத்திவிட்டிருக்கிறது என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. உள்ளார்ந்த அடிப்படைவாத, ஆம் இந்துத்துவ அடிப்படைவாதம், தீவிரம் என்கிற ’ஒற்றைத்’ தகுதியே மோடி அவர்களை ஒரு முகமற்ற ஆர்.எஸ்.எஸ் தொண்டன் நிலையிலிருந்து இன்றைய உச்சத்திற்கு உயர்த்தி இருக்கிறது. ஏறத்தாழ தொன்னூறுகளின் நடுவில் அறிஞர் உளவியலாளர் , அரசியலறிஞர் அஷிஸ் நந்தி , குஜராத்தில் ஒரு இளைஞரைச்(? ) சந்தித்து உரையாடுகிறார். அந்த உரையாடலின் முடிவில் திரு நந்தி அவர்களிற்கு ஒரு எண்ணம் , அதை ஒருவிதமான அச்சமென்றும் கூறலாம், தோன்றுகிறது. அந்த எண்ணம், இப்படியான மனிதர் ஒரு நாளில் இந்தியாவின் ஆட்சியதிகாரத்தில் பங்கெடுக்க நேர்ந்தால், இந்தியாவிற்குப் பேராபத்தாக முடியலாம் என்பதுதான். அந்த இளைஞர் வேறு யாரும் இல்லை, நமது “ பாரதப் “ பிரதமர் நரேந்திர மோடி அவர்களேதான். உளவியல் அறிஞரின் அச்சம் இன்று உறுதிப்பட்டு விட்டதையே நாம் காண்கிறோம். அந்த ‘ இந்துத்துவத் தீவிரம்’ என்ற “ஒற்றைத்” தகுதி கொண்ட மனிதர் , திரைப்படங்களில் ஒருபாடல் காட்சியில் நேர்ந்து விடும் பெரும் மாற்றங்களைப் போல, நேரடியாக குஜராத் முதல்வரானதும், அதன் பின்னான படுபாதகங்களும் ஒருபோதும் இந்திய இறையாண்மை மீது படிந்த அழித்திட முடியாத கறை. இந்திய கூட்டாட்சிக் குடியரசின் வரலாற்றின் கறுப்புப் பக்கங்களில் தலையானது. அந்த ‘ ஒற்றைத்’ தகுதி கொண்ட மனிதர் இன்று இந்தியாவின் அனைத்து விதமான பன்மைத்துவத்தையும் அழித்தொழித்து விட முனைந்து நிற்கிறார். இந்தியாவை பார்ப்பன – பனியா குற்றக் குழுமம்( மாஃபியா) மற்றும் ஆர்.எஸ்.எஸ் இன் ஒப்பந்தத்தின்படி “ ஒற்றைப் பாரதமாக்கும் “ பணியே அரசியலாகத் தொழிற்படுகிறது. இதற்கான இலக்கு 2024 ஆம் ஆண்டு எனத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. நிற்க.
குற்றக் குழுமங்களின் செயல்பாடுகளில் அதி தீவிரமானது, அதன் ’ செயல்கள்’ மக்களிடையே ஆழமான அச்சத்தை உருவாக்க வேண்டுமென்பதே. ஆனால் தினசரியாக ‘ செயல்களைச்’ செய்யும் குற்றக் குழுமம், அந்தத் தொடர்ச்சியான அதிர்ச்சிகள் உருவாக்கும் ‘ அச்சவுணர்வின் ‘ இயங்குதளம் எந்தப் புள்ளியையும்/ செயல்களின் மீதும் குவிமையம் கொண்டதாக இருந்துவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்தும். மோடி, அமித் ஷா, மோகன் பகவத் என்ற பெயர்களும் பிம்பங்களும் அந்த ‘ அச்சவுணர்வை ‘ தூண்டுவதாக இருந்தால் போதுமானது. இந்தியாவின் சிறுபான்மையினரை நாட்டின் எதிரிகளாகக் கட்டமைக்கும் பணியை வெகுகாலமாகச் செய்தவர்கள்தான் இந்தக் கூட்டம். ஆட்சியதிகாரம் கிடைத்தவுடன் அயோத்தியில் ராமர் கோயில், காஷ்மீர் சிறப்பு நிலை ஒழிக்கப்படுவது, அதன் மாநிலத் தகுதியும் பிடுங்கப்படுவது எனக் களியாட்டம் ஆடியது. பற்றாக்குறைக்கு இந்தியக் குடியுரிமை திருத்த சட்டம். கலாச்சார ரீதியாக முத்தலாக் முறை ஒழிப்பு, புர்காவிற்காவிற்கெதிரான நடவடிக்கை என இஸ்லாமியச் சிறுபான்மையினரை இந்தியாவில் பாதுகாப்பற்றவர்களாக உணரச் செய்திருக்கிறார்கள் இந்தக் குற்றவாளிகள். ஆனால் இந்தியாவின் தலைமையமைச்சராக இந்த நடவடிக்கைகள் எதற்கும் பொறுப்பேற்காமல், வண்ணமய உடையலங்காரங்களில் வலம் வருகிறார் மோடி எனும் நடிகர்.
இந்த நிலையில் மீளவும் அந்த மனிதர் தன் இருப்பை நிறுவிய தனித்த பயங்கரவாதங்களின் நினைவூட்டல்கள் இந்த மொத்தத்துவத்தின் பகுதியாக மறைபொருளாக மட்டுமே இயங்க வேண்டும். தனித்து இயங்கினால் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடக் கூடும். இந்த வகையில்தான் குஜராத் பயங்கரம் குறித்த தனித்த நினைவூட்டலைச் சாத்தியமாக்கும் பி.பி.சி. ஆவணப்படம் மீதான கோபத்தை உருவாக்கியிருக்கிறது. இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு சர்வதேச ஊடகத்தின் மீது ‘ அவசரக்கால நடவடிக்கையாக’ தடையாணை பிறப்பித்திருக்கிறது மோடி அரசு. இந்த குஜராத் பயங்கரவாதம் தொடர்பான ஆவணப்படம், அதன் மீது அடுக்கப்பட்டுள்ள பல்வேறு தொடர் ‘ செயல்பாடுகளின் அடுக்கை’ களைத்து விடக்கூடுமென்ற அச்சம் நிலவுகிறது. குஜராத் ‘ செயல்கள்’ உருவாக்கிய அச்சத்தின் மீது தொடர்ந்து கட்டப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதங்கள் கட்டமைத்துள்ள ‘ அச்சவுணர்வு ‘ களைந்து விடக் கூடாதல்லவா.
மோடி அரசின் தடை குறித்த விவாதங்கள் பல்தள வாசிப்புகளைச் சாத்தியமாக்கியிருக்கின்றன. இந்தப் பல்தள வாசிப்பில் மிக முக்கியமான பேசு பொருளாக இருக்கும் ஜாக்ய ஷாப்ரி அம்மையார் முறையீட்டு வழக்கு தள்ளுபடியை பாரதிய ஜனதா அரசு கையாளும் விதம் விபரீதமானது. ஜாக்ய ஷாப்ரி அம்மையார் 2002 ஆம் ஆண்டின் சிறுபான்மையினருக்கெதிரான கொலைபாதக பயங்கரங்களில் கொலையுண்ட காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஏஜான் ஷாப்ரி அவர்களின் மனைவி. இவர் 2012 ஆம் ஆண்டில் குஜராத் பயங்கரம் தொடர்பான மீள் விசாரணை கோரி உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்தார். அந்த மறு விசாரணையை என்.ஐ.ஏ. நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டது. இடையில் பாஜக வை, அதன் அசல் உரிமையாளரான ஆர்.எஸ்.எஸ். யிடமிருந்து ஒப்பந்தத்தின் அடிப்படையில் “ விலைக்கு” வாங்கியது குஜராத் குற்றக் குழுமம். அந்த ஒப்பந்தத்தின்படி ஆர்.எஸ்.எஸ். கொள்கையான ‘ இந்துத்துவ இந்தியாவை ‘ உருவாக்கித் தருவது, அதற்குக் கைமாறாக இந்தியப் பொருளாதாரத்தை ஒட்டு மொத்தமாக குஜராத் பனியாக்களின் பொறுப்பில் விட்டு விட வேண்டுமென்பதாகும். இதன் செயல்பாட்டுத் தளத்தில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கட்டாய ஓய்விற்கு அனுப்பப்பட்டனர். பனியா மூலதனமும், மோடியின் இந்து தீவிரவாத நிலைப்பாடும் இந்தி பேசும் மாநிலங்களின் பேராதரவைப் பெற்றுத் தந்தது. மோடி தலைமையிலான அரசு 2014இல் அமைந்தது. இயல்பாக குஜராத் பயங்கரவாதக் கொலைகள் தொடர்பாக புலன் விசாரணை செய்த என்.ஐ.ஏ ’ மோடியையோ அல்லது இன்னபிற அதிகாரிகள் மீதோ குற்றம் சாட்டும்படிக்கு ஒன்றுமில்லை’ என ‘ முடித்து’( Closure Report ) வைத்தது.
என்.ஐ.ஏ. வின் அறிக்கைக்கு எதிராக, ‘ பெரிய சதிச் செயல் ‘ ( Larger Conspiracy ) நடந்துள்ளது, அதனை விசாரிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்தார் ஜாக்ய ஷாப்ரி அம்மையார். அந்த வழக்கை விசாரணை செய்த ஏ.எம். கண்வில்கர் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு , ’ஏதோ சில அதிகாரிகள் செயல்படாமல் இருந்ததற்காக அரசியல் தலைமையைக் குற்றம் சொல்ல முடியாது ‘ என முறையீட்டைத் தள்ளுபடி செய்தது. இது நடந்தது 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில். இந்தத் தீர்ப்பில் மோடிக்கெதிராக சாட்சி சொன்ன காவல்துறை அதிகாரிகள் சஞ்சீவ் பட், ஸ்ரீகுமார் மற்றும் மோடியின் அமைச்சரவை சகா ஹரன் பாண்டியாவையும் , அவர்களது வாக்குமூலங்கள் பரபரப்பை உருவாக்க முனைந்தவையெனக் குற்றம் சாட்டியது. இதில் ஹரன் பாண்டியாவின் ’சந்தேக மரணம்’ பேசப்படவில்லை. மாறாக, இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்திய டீஸ்டா ஷீடல்வாட் ஆகியோர் மீது ‘ உள் நோக்கம் ‘ கற்பித்து கைது நடவடிக்கைக்கு ஆளாக்கியது. இவ்வளவு சிறப்பான தீர்ப்பின் அடிப்படையிலேயே தன்னைப் புனிதராக்கிக் கொண்டார் மோடி.
இந்த நிலையில் பி.பி.சி ஆவணப்படம் தற்போது புயலைக் கிளப்ப முனைகிறது. பார்த்த நண்பர்கள் சொன்னதன் அடிப்படையில் கீழ்கண்ட வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. ஆவணப்படத்தின் துவக்கத்திலேயே ஒரு இந்துத்துவப் போராளியின் குரல்( ? ) ஓங்கி ஒலிக்கிறது. “ இந்தியாவை இந்து நாடாக்கத் தொடர்ந்து போராடுவோம். வேண்டுமானால் கொலையும் செய்வோம் “ என்கிறது. அநேகமாக கோத்ரா ரயில் எரிப்பை ஒட்டி முதல்வராக மோடி விடுத்த அறைகூவலின் பிரதிபலிப்பாக இருக்கக் கூடும். ஆனால் இதனை, இந்தக் குரலை ஒருபோதும் மோடி கண்டித்ததே இல்லை எனத் துவங்கும் ஆவணப்படத்தின் ஆரம்பம் கொடுக்கும் அதிர்ச்சி வைத்தியம் மோடி அரசை ஆடிப் போக வைத்திருக்குமா எனத் தெரியவில்லை. மோடி , இந்துத்துவத்தின் போராளியாக, ஒரு சாதாரணத் தொண்டனிலிருந்து நேரடியாக குஜராத் முதல்வராக்கப்பட்டது துவங்கி இன்று வரை அவரது அச்சமூட்டும் மூர்க்கத்தின் வழியாகவே தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர். ஒரு அச்சமூட்டும் மனிதர், உள்ளூர எந்தவித நெகிழ்வுமற்றவராகத் தோன்றினாலும், தன்னளவில் தீராத அச்சத்தால் பீடிக்கப்பட்டவராக இருக்கும் வாய்ப்புள்ளது என்றொரு உளவியல் பார்வை உண்டு. மோடி அதற்கான முதன்மையான மாதிரி எனலாம்.
ஆவணப்படத்தில் மோடி , அந்த நாட்களில் , பத்திரிகையாளர்களை சந்திப்பவராகவும், ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்பவராகவும் இருந்திருக்கிறாரென ஆச்சர்யமடைகிறார்கள். அதிலும் ஆங்கில ( பி.பி.சி ? ) செய்தியாளரிடம், குஜராத் படுகொலைகள் தொடர்பில் அவரது ( செய்தியாளரின் ) தகவல்கள் தவறெனச் சொல்கிறார். ஒரு தீவிர இறுக்கம் முகத்தில் தெரிந்தாலும், பதில்கள் தெளிவாகவே உச்சரிக்கப்படுவதைக் காண முடிகிறது என்கிறார்கள். தான் அடைந்து விட்ட உயரம் குறித்த உள்ளார்ந்த அச்சவுணர்வையும், அதனைக் கையாண்ட விதம் குறித்த அவதானிப்புகளும், இன்னும் கூடுதலாக அந்த மனிதர் குறித்த அவநம்பிக்கையைக் கூட்டுவதாகவே தோன்றுகிறது. ஆனால் அதேவேளையில் ‘ எந்தச் செயலையும் ‘ ஒரு மூர்க்கமாக எதிர்கொண்டு விடும் மனநிலையையும் ஆவணப்படம் காட்சிப்படுத்துகிறது. அதிகாரப்பூர்வமாக மூவாயிரம் இஸ்லாமியர் உயிரைப் பறித்த 2002 ஆண்டிலேயே மோடி தனது முதல்வர் பதவியைத் துறந்து, சட்டமன்றத்தைக் கலைத்து விட்டு, அதே ஆண்டின் டிசம்பர் மாதத்தில் 182 உறுப்பினர் எண்ணிக்கை கொண்ட குஜராத் சட்டமன்றத் தேர்தலில் 127 தொகுதிகளை வென்று தன்னை உறுதியாக நிறுவிக் கொண்டார் என்பது கவனத்திற்குரியது. இத்தனைக்கும் மோடியின் அரசியலதிகாரப் பயணம் தடைகள் கொண்டது. அன்றைய (2002இல் ) நாளில் , தவறான கட்சியிலிருக்கும் நல்ல மனிதர் (Right Man in the Wrong Party) என அங்கீகரிக்கப்பட்ட தலைமையமைச்சரான வாஜ்பேயி அவரைப் பதவி விலகச் செய்ய விரும்பினார். அதைவிடப் பாதகமானது அவரது ‘ துரோகப் பாதை’. அவரை வளர்த்து விட்டவர்களாகக் கருதப்பட்டவர்களிற்கு துரோகமிழைத்தே தன்னை நிறுவிக் கொண்டவர். குஜராத் கேசுபாய் படேல் துவங்கி அத்வானி வரை அதுதான் தொடர்கதை. ஆனால் அவர் ஒருபோதும் குஜராத் பனியா குற்றக் குழுமத்திற்கெதிரான எண்ணங்களைக் கூட வளர்த்தவரில்லை.
மோடியின் வெற்றிப் பயணத்தின் அடிப்படை இம்மியளவும் நெகிழ்வற்ற மூர்க்கமான மதவாதப் பிளவு மட்டுமே. ( RELIGIOUS POLARISATION ). இந்திய அரசியலின் கேவலம், மனிதாபிமானமற்ற மூர்க்கங்களை தீரங்களாகக் கொண்டாடும் போக்குதான். காலடியில் எதையும் சிதைத்தபடி வரும் மூர்க்கங்களை அசாத்தியமான தீரமென கொண்டாடுவதே. அந்தவகையில் தமிழ்நாட்டு லேடி ஜெயலலிதாவும், மோடியும் ஒருவகைதான். ஆனால் ஜெயலலிதா இயங்கிய தமிழ்நாடு அரசியல் அவருக்கு மதவாதத் தீவிரவாதத்திற்கு இடமளிக்கவில்லை. மோடியின் ஒரே தகுதியே மதவாதமும், அதன் தீவிரமும் மட்டுமே. அதற்கான அங்கீகாரக் களம் வடக்கே ஐந்தாறு மாநிலங்களில் நிலவுகிறது. அதன் மீது நின்றே தனது அராஜகங்களைக் கட்டவிழ்த்து விடுகிறார் மோடி. இந்தச் சிறுபான்மையினர் நலன் அழிப்பு என்ற ஒன்று போதும் அவரது வெற்றியை உறுதி செய்ய. இடையே இந்தியப் பொருளாதாரத்தை ஒட்டு மொத்தமாக குஜராத் குற்றக் குழுமத்திற்கு மாற்றி விட்டதை இந்த மதவாத போதையில் மறைந்து விட்டது.
அறியக் கிடைத்த வரை இந்த ஆவணப்படம் எந்தவிதப் புதிய செய்தியையும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. ஜாவித் ஷாப்ரி உள்ளிட்ட 69 பேர் எரித்துக் கொல்லப்பட்டது, மோடிக்கெதிராக சாட்சியமளித்த அமைச்சர் ஹரன் பாண்டிய கொலை, யூசுப் தாவூத் குடும்பத்து இளைஞர்கள் ( பிரிட்டீஷ் குடிமகன்கள்) கொலைக்காக முதல்வர் மோடியை லண்டன் பயணத்தின் போது பிரிட்டீஷ் அரசு கைது செய்ய முயற்சித்தது போன்ற ஏற்கனவே அறியப்பட்ட தகவல்களே உள்ளன. குஜராத் கொலைகள் தொடர்பான வழக்குகள், காவல்துறை அதிகாரிகள் சஞ்சீவ் பட் , ஆர்.பி.ஸ்ரீகுமார் ஆகியோரும், டீஸ்டா சீடல்வாட் எனும் மனித உரிமைப் போராளியும் பொய்யான தகவல்களை அளித்தனர் எனக் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருப்பதும் நிச்சயமாகப் புதியவையல்ல.
அப்படியானால் எதற்காக இந்தப் பதற்றமான ஆவணப்படத்தை தடை செய்யும் நடவடிக்கை. இன்னும் சொல்வதானால், இந்த ஆவணப்படத்தை விட ஆழமான, தீர்க்கமான அவதானிப்புகளை வைத்த குஜராத் கொலைக்களம் பற்றிய ஆவணப்படங்கள் இங்கே ஏராளமாக ஏற்கனவே உள்ளன. எல்லாம் மோடியின் மூர்க்கத்தின் வெளிப்பாடுதான். தனது இலக்கான சர்வ வல்லமை கொண்ட சர்வாதிகாரி நிலையை அடையும் பயணத்தில் தடையாக இருக்கக் கூடிய ஊடகங்களை ஒழிப்பதுதான். ஒரு சராசரியான இந்தியருக்கே தெரிந்த செய்தி இந்திய ஊடகங்கள் முற்றிலுமாக மோடி துதிபாடி அவரது காலடியில் மண்டியிட்டுக் கிடக்கின்றன என்பது. எனவேதான் பி.பி.சி. மீதான நடவடிக்கை. இதனைச் செயல்படுத்தி விட்டால், 2024 தேர்தலுக்கு முன் அல் ஜஜீரா உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் இந்தியாவில் ஒளிபரப்பாவதை ஒட்டு மொத்தமாக நிறுத்தி விடலாம் என்பதே செயல் திட்டம். பின்னர் இந்தியாவிற்கான “ செய்திகளை” டைம்ஸ் நவ் நவிகா குமார் கூட்டமும், மனப்பிறழ்வுற்றதாகக் கருதப்படும் ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வாமிகளே வழங்குவார்கள்.
ஹர ஹர மஹா தேவ்
ஜெய் ஸ்ரீராம்
உங்களை துர்க்கனவாக நிரந்தரமாகத் துரத்த வைக்கலாம்.
மோடிக்கெதிரான சதிச்செயல் சாத்தியம் கொண்ட இணைய சேவையை அவரது பங்காளியான அதானி வடிகட்டி வழங்க பணிக்கப்படலாம். 2024 ற்கு முன்னரான மோடியின் அதிரடிகள் தொடரும். அதற்குப் பின் ………….. பார்க்கலாம். ஒன்று மோடி அல்லது பன்மைத்துவ இந்தியா இரண்டிலொன்றுதான் இங்கு இருக்க முடியும்.