காட்சியில் பிஸினஸ்மேன் ஒருவரைக் காட்டுகிறார்கள். அவர் ஒரு கிரிக்கெட் Bookie என்கிறார்கள். ஒரு சைபர் கேஃபை நடத்துபவரைக் காட்டுகிறார்கள். அவரும் ஒரு கிரிக்கெட் Bookie என்கிறார்கள். தெருக்கோடியில் பெட்டிக்கடை வைத்திருப்பவரைக் காட்டுகிறார்கள். அவரையும் கிரிக்கெட் Bookie என்கிறார்கள். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா கிரிக்கெட் Bookie-களால் நிறைந்திருக்கிறது என்கிறார்கள்.
காட்சியில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவனைக் காட்டுகிறார்கள். அவன் bet கட்டுகிறான். மிகப் பெரிய பிஸினஸ்மேனைக் காட்டுகிறார்கள். Betting-ல் பத்து லட்சத்தைக் கட்டிவிட்டுத்தான் அன்றைய நாளை அவன் தொடங்குகிறான். அன்றாடம் ஆட்டோ ஓட்டிப் பிழைப்பு நடத்தும் இரு தொழிலாளர்களைக் காட்டுகிறார்கள். அவர்களும் Bet கட்டுகிறார்கள். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா Bet கட்டுபவர்களாலும் நிறைந்திருக்கிறது என்கிறார்கள்.
”ஒவ்வொரு Bookie-க்கும் தனித்தனி circle இருக்கு. தனித்தனி market இருக்கு. ஒவ்வொரு Bookie-யும் அவங்களவிட பெரிய Bookie-க்கு சர்வீஸ் பண்றாங்க. இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் betting பிஸினஸ்ன்றது unofficial, illegal, disorganised-ன்னாலும் அது நிக்காம ஓடிட்டு இருக்கு. Match-ல எந்த team ஜெயிக்குதுன்னு மட்டும் bet கட்டமாட்டாங்க. ஒவ்வொரு session ஒவ்வொரு situation மேலயும் infact toss மேலயும் bet கட்டுவாங்க. நிறைய பேர் ஏதோ பகடைக் காய உருட்டுறமாதிரி betting-ல்ல பணத்தைக் கட்டிட்டுப் போயிர்றாங்க. ஆனால், result என்னன்றது முதல்லயே தெரிஞ்சுருச்சுன்னா நிலமைய நமக்கு சாதகமா மாத்தலாம். Ground-ல பாக்குற match-க்கும், நாம TV-ல்ல பாக்குற live-க்கும் 8 second வித்தியாசம் இருக்கு. அந்த advantages Bookie-க்குத்தான். இது ஒரு Illegal betting maket-டா இருந்தாலும், Indian betting market- தான் இந்த உலகத்திலேயே பெருசு. And it’s growing really fast. ஒவ்வொரு PPL match-லயும் நேரடியா100 கோடி bet கட்றாங்க; சட்டவிரோதமா 10000 கோடி bet கட்றாங்க. அதுக்கு Bookies எல்லா tricks-யும் use பண்ணி, எல்லா control-லையும் அவங்க கைல வச்சிருக்காங்க. Fixing is a dirty word, illegal….! Right? எனக்கு இது ஒரு Business”.
கதையின் முக்கிய கதாப்பாத்திரமாக வரும் விக்ராந்த் தவான் இதைச் சொல்லும்போது நமக்குப் பேரதிர்ச்சியாக இருக்கும். PPL என அவர்கள் சொல்வது IPL (Indian Primier League) கிரிக்கெட்டைத்தான் என்பது குழந்தைகளுக்குக்கூடத் தெரியும். ரசிகர்களின் ஆர்ப்பாட்டம், விளையாட்டு வீரர்களின் உத்வேகம், டீம் ஓனர்களின் கொண்டாட்டம் ஆகியவற்றிற்குப் பின்னால் அந்தரங்கத்தில் bet கட்டுபவர்களும், Bookie-களும் எப்படி உறவுகொள்கிறார்கள் என்பதை மிகச் சிறப்பாகப் படம்பிடித்துக் காட்டுகிறது Inside Edge.
கிரிக்கெட் சூதாட்டத்தில் நிறைய வகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு ஓவரிலும் ஒருவன் எத்தனை ரன்ஸ் அடிப்பான், விக்கெட் விழுகுமா விழுகாதா?, நோ பால் போடுவார்களா இல்லையா என bet கட்டுவதைப் Spot fixing என்கிறார்கள். மொத்தமாக ஒரு டீம் வெற்றி பெறுமா பெறாதா என bet கட்டுவதை Match fixing என்கிறார்கள்.
இதனோடு, கிரிக்கெட்டிற்குள் இருக்கும் ஜாதிய வன்மம், மத பாகுபாடு, Cheerleaders-ஸோடு வைத்துக் கொள்ளும் பாலுறவுகள், Corporate உலகின் liaison உறவுகள், கிரிக்கெட் வீரர்களின் போதைப் பழக்கம், காதல், மணமுறிவு என அனைத்தையும் மிக அழகாகப் பதிவு செய்துள்ளது இந்த வெப் சீரீஸ்.
மேலோட்டமாக இருக்கும் கதை என்பது வெறும் புனைவுதான். சினிமாவுக்காக அதைச் செய்திருக்கிறார்கள். Game of Thrones சீரீஸ் போல இந்தக் கதையிலும் நல்லவர்கள் எல்லாம் கெட்டவர்கள் ஆகிறார்கள். கெட்டவர்கள் எல்லாம் நல்லவர்கள் ஆகிறார்கள். முதல் இரண்டு சீசனில் இந்த ஃபார்முலா சுவையாக இருக்கிறது. ஆனால் மூன்றாவது சீசனில் நம்மைக் கடுமையாகச் சோதிக்கிறார்கள். கதையைச் சுத்தமாக மறந்துவிட்டு இந்த சீரீஸைப் பார்த்து ரசித்தால் சிறப்பாக இருக்கும் என்பது என் கொள்கை. என்றாலும் கதையில் என்னதான் சொல்கிறார்கள் எனக் கேட்பவர்களுக்காக, இதுதான் கதை: ஜரினா மாலிக் என்பவர் நடிகை. மும்பை மாவ்ரிக்ஸ் என்ற கிரிக்கெட் அணியின் Co-Owner-ராகவும் இருக்கிறார். அரவிந்த் வாஷிஸ்ட் என்ற அனுபவம் வாய்ந்த வீரர் மும்பை மாவ்ரிக்ஸின் கேப்டனாக இருக்கிறார். நிரஞ்சன் சூரி என்பவர் அந்த அணியின் கோச். அணியில் மிகச் சிறப்பாக விளையாடும் வீரர் வாயு ராகவன். ஆனால் திரைமறைவில் அவர் செய்யும் சேட்டைகள் மிக அதிகம். போதைப் பழக்கம் உள்ளவர். மிகத் தற்காலிகமாகக் காதல் முறிவால் வாடிப்போய் இருக்கிறார். அந்த சோகத்தை Cheerleader பெண்களிடம் தீர்த்துக்கொள்கிறார். மாவ்ரிக்ஸ் அணியில் மற்றொரு முக்கியமான வீரர் தேவேந்தர் மிஸ்ரா. இவர்தான் Bookie-களோடு தொடர்பில் இருக்கும் முக்கியமான வீரர். பிரசாந்த் கனோஜியா என்பவர் துணிவெளுக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளம்வீரர். மிஸ்ரா பிராமண வகுப்பைச் சார்ந்தவர். கிரிக்கெட்டிற்குள் ஜாதிய ரீதியாக எவ்வளவு கொடுமைகள் நடக்கும் என்பதை மிஸ்ரா பிரசாந்த்தை வதைப்பதன்மூலம் காட்டுகிறார்கள். மும்பை மாவ்ரிக்ஸ் கிரிக்கெட் டீம் வலுவாக இருந்தாலும், அதன் பொருளாதார நிலை படுமோசமாக இருக்கிறது. வெண்ணீரிலிருந்து தப்பித்து அடுப்பில் விழுந்த கதையாக, பொருளாதாரப் பிரச்சனையிலிருந்து தப்பிக்க விக்ராந்த் தவானிடம் மும்பை மாவ்ரிக்ஸ் அணியும், ஜரினா மாலிக்கும் மாட்டிக்கொள்கிறார்கள்.
இதன் அடுத்த எபிசோட்கள் எல்லாம் இவற்றின் விரிவாக்கங்களாக உள்ளன. விக்ராந்திடம் மாட்டிக்கொண்ட ஜரினா அவனிடமிருந்து கொஞ்சம் விலகியே இருக்கிறாள். ஆனால் விக்ராந்த் நின்ற இடத்திலிருந்து திட்டம்போட்டு ஜரினாவை ஆட்டிவைக்கிறான். முதலில் அவள் நடிக்கும் படத்திலிருந்து அவளுக்கான காட்சிகளைக் குறைக்கிறான். இன்னொரு நடிகையின் காட்சிகளை அதிகப்படுத்துகிறான். கதாநாயகி என அறிவிக்கப்பட்ட ஜரினாவின் காட்சிகள் எல்லாம் வெட்டி எடுக்கப்பட்டு, கெஸ்ட் ரோலில் நடிப்பதுபோல ஆக்கிவிடுகிறார்கள். இந்த சூழலில், ஜரினா விக்ராந்தை எப்படிப் பழிவாங்கினாள் என்பதும்;
தேவேந்தரை வைத்து பிரசாந்துக்கு டார்ச்சர் கொடுத்து சூதாட்டத்திற்கு உதவ வைக்கிறார்கள். பிரசாந்த் சூதாட்டக்காரனிடமிருந்து மீள வேண்டும் என நினைக்கிறான். பிரசாந்த் மும்பை மாவ்ரிக்ஸின் கடைகோடி வீரன்தான். ஆனால் அவன் நியாயமாக விளையாடினால் மிக உயரத்தில் இருக்கும் விக்ராந்த் தவான் பாதிக்கப்படுவான். பிரசாந்த் நியாயமாக விளையாடினா? இல்லையா? என்பதும்.
ஒரு பிரேக்குக்குப் பிறகு மீராவோடு காதல் வாழ்வில் சந்தோஷமாக இருக்கிறான் வாயு ராகவன். அவன் சந்தோசத்தின் உச்சத்தில் இருக்கும்போது Cheerleader பெண்ணிடம் வாயு ராகவன் உறவுகொண்டதால் அவள் கர்ப்பமாகிவிட்டதாகப் பரபரப்பான நியூஸ் வெளியாகிறது. அதனால் கோபம் கொண்ட மீரா வாயுவைப் பிரிகிறாள். இன்னொருவனைக் காதலித்து, அவனோடு சென்றுவிடுகிறாள். சில நாட்களாக நிறுத்தி வைத்திருந்த போதை மருந்தை மறுபடியும் உடலுக்குள் ஏற்றுகிறான். ஒரு போதைப் பார்ட்டியில் தன்னிலை மறந்து ஆடுகிறான். போலிஸிடம் மாட்டிக்கொள்கிறான். அவனை போஸிடமிருந்து மீட்டு தன் வழிக்குக் கொண்டு வருகிறான் விக்ராந்த். வாயு ராகவனை வைத்து தான் நினைத்த சூதாட்டத்தில் விக்ராந்த் வென்றானா? இல்லையா? என்பதும்;
நல்ல எண்ணத்தோடு டீமை வழிநடத்திக்கொண்டிருந்த நிரஞ்சன் சூரியை சூதாட்டத்திற்கு உதவும்படிச் சொல்கிறார்கள். அந்தக் குற்றவுணர்ச்சியிலிருந்து மீளாத நிரஞ்சன் சூரியை மேலும் மேலும் தவறான வழிக்குத் தள்ளுகிறான் விக்ராந்த். அதற்கு நிரஞ்சன் சூரி மறுத்தபோது அவரைக் கொல்லுகிறான் விக்ராந்த். நிரஞ்சன் சூரியின் மரணத்திற்கு நியாயம் கிடைத்ததா? இல்லையா? என்பதும். தன் அணியில் சூதாட்டத்தோடு தொடர்புடையவர்களை நீக்க வேண்டும் என்கிறான் கேப்டன் அரவிந்த். சூதாட்டம் செய்யும் வீரர்களை வெளியேற்றாமல் அரவிந்தையே வெளியேற்றுகிறாள் ஜரினா. கேப்டனே இல்லாமல் மும்பை வாவ்ரிக்ஸ் அணி வென்றதா? இல்லை தோற்றதா? என்பதும் முதல் சீசனின் கதை.
முதல் சீசன் கட்டுக்கோப்பாக இருக்க, இரண்டாவது சீசன் சற்றே தடுமாறுகிறது. என்றாலும் முதல் சீசன் முழுவதும் பாய்சாஹ்ப் என்ற சொல்லை அடிக்கடிச் சொல்கிறார்கள். அவர் விக்ராந்த் தவானுக்கும் ஆணையிடுபவராக, உச்சபட்ச பலம் பெற்றவராக இருக்கிறார் என்பதை யூகிக்க வைக்கிறார்கள். அவர் யார் என்பதை இரண்டாவது சீசனில் காட்டுகிறார்கள். அவர் இந்தியன் கிரிக்கெட் போர்டின் ((ICB) தலைவர். யஸ்வர்தன் பாடில் என்பது அவர் பெயர். கிரிகெட்டைச் சதுரங்கத்தைப் போல ஆட்டிவைக்கிறார். “என்னோட இடத்துல இருந்து எது சரி எது தவறுன்னு தீர்மானிக்க முடியாது. சில நேரங்கள்ல சரிக்கும் தவறுக்கும் இருக்குற வித்தியாசத்தைக்கூட சொல்லமுடியாது. Rules and Regulations இதெல்லாம் நமக்குக் கிடையாது. All these moral codes, principles, social morels. These are boundaries set by those in power” என்ற கொள்கையைக் கொண்டவர். ஒரு டீல் ஓகே ஆகிறது என்றால் அதற்காக எத்தனை ஆண்டு நட்பாக இருந்தாலும் அதை தலைமுழுகுவதற்குத் தயங்க மாட்டார். அவரைப் பொறுத்தவரைக்கும், “ஒரு door close ஆனாக்கூட இன்னொரு door open ஆயிரும்” என்பதை நம்புகிறார். மிகப் பெரிய ஆளுக்குப் பகையும் மிகப் பெரியதாக இருக்கும் என்பதால், அவருடைய பிரதான பகைவராக, உள்துறை அமைச்சர் இருக்கிறார்.
தேர்தல் நேரத்துப் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பிபிஎல் கிரிக்கெட்டை இந்தியாவில் நடத்தக்கூடாது என அவர் முட்டுக்கட்டைப் போடுகிறார். இந்தியாவில்தானே நடத்தக்கூடாது. இதோ பார் நான் தென் ஆப்பிரிக்காவில் நடத்துகிறேன் எனச் சொல்லி அங்கே நடத்துகிறார்கள். இந்தியாவில் என்றால் கொஞ்சம் பயந்து பயந்து சூதாட வேண்டும். தென் ஆப்பிரிக்கா என்றால் எந்தக் கவலையும் இல்லைதானே! ஒருவகையில் சூதாட்டக்காரர்களுக்கு அது குஷியான செய்திதான்.
முதல் சீசனில் சூதாட்டத்தைச் சரியாகக் கவனிக்காத விக்ராந்த் தவனை முற்றிலுமாக விலக்கிவிடுகிறார்கள். அந்த வேலையை யஸ்வர்தன் பாட்டீல் பார்த்துக்கொள்கிறார். ஆனால் என்ன ஆச்சர்யம் யஸ்வர்தன் பாட்டீல் புக் பண்ணிய தன்னுடைய அணி வீரர்களைவிட எதிர் அணியினர் இன்னும் மோசமாக விளையாடுகிறார்கள். அப்படியென்றால் எதிர் அணியை ஒருவன் இயக்குகிறான் அவன் யார்? வேறு யார் விக்ராந்த் தவான்தான். திரைமறைவில் யஸ்வர்தனும் விக்ராந்தும் சண்டைபோடுகிறார்கள். ஒரு காலத்தில் ஓர் அணியில் இருந்த வாயு ராகவனும் அரவிந்தும் இப்போது எதிர் எதிர் அணியிலிருந்து வெளிப்படையாக மோதுகிறார்கள். இவர்களில் யார் வெல்கிறார்கள் என்ற கதையைப் பரப்பரப்பாகக் கொண்டு செல்கிறார்கள். ஒரு கமர்ஷியல் திரைக்கதையை விறுவிறுப்பாக எழுதுவது எப்படி என்பதை இந்த இரண்டாவது சீசனைப் பார்த்துக் கற்றுக்கொள்ளலாம்.
மூன்றாவது சீசனில் யஸ்வர்தனும் விக்ராந்தும் அண்ணன் தம்பிகள் என்கிறார்கள். அந்த இடத்திலிருந்து கதை முற்றிலும் பொருந்தாமல் போகிறது. பத்தாயிரம் கோடி புழக்கம் இருக்கும் சூதாட்டத்தை வெளிப்படையாக்கினால் என்ன? அரசுக்கு வருமானம் கிடைக்குமே? என்கிறார்கள். ஆன்லைன் ரம்மியிலேயே அம்பது லட்சம் அறுபது லட்சம் விட்டு தற்கொலை செய்துகொள்ளும் நாட்டில், கிரிக்கெட் சூதாட்டத்தையும் வெளிப்படையாக செய்ய ஆரம்பித்தால் என்ன ஆகும் என நினைத்தாலே அடிவயிறு கலக்குகிறது. Don’t rush sleep on it (ஒரு விசயத்தைக் காலம் தாழ்த்தி செய்தால் யோசிக்க நேரம் கிடைக்கும்) என்பது இந்த சீரியல் சொல்லும் ராஜதந்திரம். ஆனால் எந்த யோசனையும் இல்லாமல் அரசாங்கம் கிரிக்கெட் சூதாட்டத்தை வேகமாகக் கொண்டுவருகிறது எனக் காட்டியிருக்கிறார்கள். அதிபுத்திசாலிகளின் உலகத்தை முதல் சீசனில் வடிவமைத்தவர்கள் சிறுபிள்ளைகளின் விளையாட்டு உலகம்போல் மூன்றாவது சீசனை முடித்திருக்கிறார்கள். இன்னும் முடிவடையவில்லை. என்ன செய்யக் காத்திருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.
தொடக்கத்திலேயே சொன்னதுபோல இந்த சீரீஸின் கதையைப் பற்றிக் கவலைப்படாமல் சீரீஸை ரசிக்க வேண்டும். பல்வேறு இடங்களில் நடக்கும் கதையின் அகமுடிச்சும், புறமுடிச்சும் அவ்வப்போது இணைவதும் பிரிவதுமான திரைக்கதையை வியக்காமல் இருக்கமுடியாது. கிரிக்கெட் இந்தியாவின் ஆத்மா என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்த கிரிக்கெட்டையே டிஃபன், டீ, வடை, லஞ்ச், ஸ்நாக்ஸ், காஃபி, டின்னர் செய்து சாப்பிட்டால் ஒருவன் எப்படி இருப்பான் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள். அப்படி இருக்கிறது திரைக்கதைக்குள் விஷயஞானம். குறிப்பாக இந்தக் கதையில் வரும் ரோஹினி பாத்திரத்தை வடிவமைத்ததில் அத்தனை கிரிக்கெட் நுட்பம் இருக்கிறது.
ரோஹினி ஒரு கிரிக்கெட் அனலிஸ்ட். வாயு ராகவனின் தங்கை. டிவியில் ஒரு ரிகார்டட் கிரிக்கெட்டைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். அவர்களுடைய உரையாடல் இப்படி இருக்கும்.
வாயு ராகவன்: அடுத்த ball outswing-காத்தான் இருக்கும். Batsman leg stem guard எடுக்குறான் பாரு. நான் இருந்தா, point fielder- ர கொஞ்சம் பின்னால வச்சிருப்பேன். இவனோட square cut ரொம்ப dangerous
ரோஹினி: Just admit brother. I’m Smarter than you
வாயு ராகவன்: Okay predict next ball
ரோஹினி: Square leg-அ fine பண்றான்ல…. bouncer. I think he’s gonna full and swinging. He’s gonna get bold right through the middle
என்று சொல்வாள். மிகச் சரியாக அதேபோல அவுட் ஆவான். வாயு ராகவன் அவளைப் பார்ப்பான். அவள் சிரிப்பாள். “ஏய் ஏன் சிரிக்கிற… நீ இந்த மேட்ச ஏற்கனவே பாத்திருக்க” என்பான். அதற்கு ரோஹினி சொல்வாள். “It’s been recorded on camera I have seen it”
இதேபோல பிரசாந்த் சூதாட்டத்திற்கு ஒத்துப்போகும் காலகட்டங்களில் நிறைய நோ பால் போடுவான். நியாயமாக வேகமாக பந்து வீசும் ஒருவன் அதைவிட வேகமாக பந்துவீச முற்படும்போதுதான் நோ பால் வீசுவான். ஆனால், பிரசாந்த் நோ பால் போடும்போதெல்லாம் அவனுடைய pace குறைந்திருப்பதை அவனுக்குச் சொல்வாள். தடையங்களின்றித் திட்டமிட்டு ஒரு குற்றத்தைச் செய்யமுடியாது என்பது கிரிக்கெட்டையும் தாண்டி நாம் புரிந்துகொள்ள வேண்டிய விதி.
அதே போல கிரிக்கெட்டுக்குப் பின்னால் இருக்கும் மேட்ச் பிக்ஸிங்கையும் போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போகவில்லை. ஸ்கோர் போர்டில் எரியும் வெளிச்சம், டையை இறுக்கிக் கட்டுதல், சட்டை பட்டனைக் கழற்றிவிடுதல் எனப் புக்கிகள் கொடுக்கும் சிக்னல்களையும், ஷூ லேஸைக் கட்டுதல், டக் இன் பண்ணிய ஜெர்சியை இழுத்து விடுதல், பந்தை டவலால் துடைத்தல் எனக் கிரிக்கெட் வீரர்கள் வெளிப்படுத்தும் சிக்னல்களையும் விலாவாரியாகக் காட்டுகிறார்கள்.
இந்தி வெப் சீரியல்களில் நான் கண்டுவியக்கும் பொதுவான விசயம் நடிகர்கள். ஏற்றுக்கொண்ட கதாப்பாத்திரத்திற்கு நூறு சதம் பொருத்தமான நடிகர்கள் தோன்றுகிறார்கள். இந்த வெப் சீரீஸில் அவர்கள் ஒருபடி கூடுதலான பொருத்தப்பாட்டோடு இருக்கிறார்கள். விக்ராந்த் தவனாக வரும் விவேக் ஓபராயின் எலிகண்ட் லைஃப் ஸ்டைல் நம்மைக் கவரும். துரோகத்திற்கு முன்னதாக அவர் சிந்தும் எளிய புன்னகையின் பின்னுள்ள வில்லத்தனம் கவர்ச்சிகரமாக இருக்கும். ஒரு மிகப் பெரிய டீலை முடித்த பிறகு குஜ்ரால் என்பவர் விக்ராந்திடம் கேட்பார், “இது நீங்க தர்றேன்னு சொன்னதில பாதி Amount கூட இல்லையே” என்பார். அப்போது விக்ராந்த் சொல்வார், “மிஸ்டர் குஜ்ரால் zero-வுக்கு half-ன்றதே கிடையாது. நான் உங்களுக்குக் குடுத்தது zero rupees!”
வாயு ராகவன், ரோஹினி, அரவிந்த், ஜரினா என இந்த சீரியல்களில் வரும் நடிகர்கள் எல்லாருமே சிறப்பான நடிப்பை வழங்கியிருப்பார்கள். என்னை ஆச்சர்யபடுத்திய கேரக்டர் தேவேந்தர் மிஸ்ரா. பூணூல் அணிந்த மேனியோடு, துண்டை மட்டும் கட்டிக்கொண்டு, தெனாவட்டாக லிஃப்டில் அவர் தோன்றும் முதல் காட்சியே வித்தியாசமாக இருக்கும். பிரசாந்திடம் அவர் காட்டும் ஜாதிய வன்மத்தைப்போல எந்தப் படத்திலும் பார்த்ததில்லை. கிரிக்கெட்டிற்குள் நுழையும் முதல் தலைமுறை, அதுவும் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சார்ந்தவராக இருந்தால் எப்படியெல்லாம் வதைக்கப்படுவார்கள் என்பதைக் கண்முன் காட்டுகிறார்கள்.
“மிர்ஸாபூர்ல நீ எந்த இடம்’டா தேர்டாயா, நான் புலியாரி’டா. சரி உன் முழுபேரு என்ன பிரசாந்த் கனோஜியாவா? கோத்தா இதை ஏன்’டா முதல்ல சொல்லல… அந்த பாட்டிலை அங்க வைடா தேவிடியா பயலே… உன் ஜாதியையும் அந்தஸ்த்தையும் மறந்துறாத… சாக்கடையில இருந்து வந்த பன்னி… நானும் இவனும் கிராமத்துல இருந்திருந்தா? ஆத்தங்கரையில என் ஜட்டியத்தான் துவைச்சிட்டு இருந்திருப்பான்… இல்லைன்னா என்ன கழுவிவிட கூப்பிட்டிருப்பேன்” என்பவை எல்லாம் பிரசாந்தைப் பார்த்து தேவேந்தர் வைக்கும் எளிமையான வசவுகள். இன்னும் கொடுமையான கெட்ட வார்த்தைகளைக் கேட்கவேண்டும் என்றால் நீங்கள் அந்த சீரீஸைத்தான் பார்க்க வேண்டும்.
தாழ்த்தப்பட்டவர் எவ்வளவு கொடுமையை அனுபவிக்கிறாரோ அதற்குச் சற்றும் குறைவில்லாத கொடுமையை இஸ்லாமியர் அனுபவிக்கிறார். இதற்கும் அவர் காஷ்மீரில் எதிர்கட்சியின் தலைவராக இருப்பவர் பையன்தான். ஆனால் அவரைத் தேர்வு செய்யும் இடத்தில்; பயிற்சி எடுக்கும் இடத்தில்; விளையாட்டு மைதானத்தில் என எல்லா இடங்களிலும் ஓரங்கட்டி வசைபாடுவார்கள். ஏனைய கிரிக்கெட்டர்கள் எல்லாம் ஜாலியாக இருக்கும்போது, புக்கிகளுக்குத் துணைபோகும்போது, தோல்வியைத் தொடும்போது, போதை மருந்து எடுத்துக்கொள்ளும்போது இஸ்லாமியர் மட்டும் எப்போதும் இந்தியாவின் நம்பிக்கைக்குரியவராகத் தன்னை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டும். நிருபித்தாலும் அவர் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராகமாட்டார்.
இது புதிதில்லை என்றாலும், சமீபகாலத்தில் தேசப்பக்தி என்பது இஸ்லாமியர்களின் கழுத்தை இறுக்கிக்கொண்டிருப்பதை எல்லா வெப்சீரீஸ்களும் எடுத்துக்காட்டுகின்றன. இந்தி சீரியல்களில் சப்கான்ஸியஸாகப் பதிவாகும் இதுபோன்ற பிரச்சனைகளைத் தீவிரமாக ஆராய வேண்டிய நேரம் இது.
தேசபக்தியை எல்லாச் சீரியல்களும் பேசுகின்றன. இந்த சீரியலும் விதிவிலக்கல்ல. ஆனால் இதில் சில வித்தியாசங்களையும் பதிவு செய்கிறார்கள். உதாரணத்திற்குக் கிரிக்கெட்டுக்குப் பிரச்சனை கொடுக்க வேண்டும் என நினைக்கும்போதெல்லாம் தேசபக்தியைக் கையில் எடுப்பதாகக் காட்டுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட அடிப்படைவாத இந்து அமைப்பு பணத்தை வாங்கிக்கொண்டு சொல்லும்போதெல்லாம் பிரச்சனை செய்வதாகக் காட்டுகிறார்கள். “ஏன் விளையாட்டை விளையாட்டாகப் பார்க்க மறுக்கிறீர்கள்” எனச் சொல்லும்போது அவர் ஓர் அழகான பதில் சொல்கிறார், “நம்முடைய ராணுவவீரர்கள் எல்லாம் பார்டர்ல நின்னுட்டு சண்டைபோட்டுட்டு இருக்காங்க… நீங்க இங்க கிரிக்கெட் பாத்துட்டிருப்பீங்களா… அதுவும் பாகிஸ்தான் டீமோட கிரிக்கெட்டா”
சாதி, மதம், மொழி சார்ந்த சின்ன சின்ன அடிப்படைவாத குழுக்கள் எல்லாம் இதுபோலப் பணம் வாங்கிக்கொண்டு செயல்படுகின்றன என்பது ஊரறிந்த ரகசியம். ஆனால் இந்த சீரியலில் அவை எல்லாமே கிரிக்கெட்டுக்காகவே நடக்கின்றன என்கிறார்கள். அதுதான் கொஞ்சம் அதிகம்.
அகம் புறம் என இரண்டு பக்கமும் போட்டிகள் நிறைந்த உலகத்தின் கதை என்பதால் நல்ல வசனங்களுக்குப் பஞ்சமே இல்லை.
Success-க்கு ரொம்ப முக்கியம் time
இந்த கிரிக்கெட் game-ம நடத்துற யாருக்குமே இந்த game-ம பத்தி தெரியாது!
Cheerleader பெண்களுக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை
நம்ம வீக்னஸ நாமதான் win பண்ணனும்
Circus-ல இருக்குற சிங்கம் Ringmaster சொல்றதெல்லாம் கேக்குறதுக்குக் காரணம் அவன்மீது இருக்குற பயமில்லை. அவன்மீது சிங்கம் வச்சிருக்குற நம்பிக்கை.
ஒருத்தன் மாற்றத்தைக் கண்டு பயந்தா அவன்கிட்ட vision இருக்காது.
ஒருத்தன உன்னால ஜெயிக்க முடியலன்னா அவனோட join பண்ணிரு
இப்படி நிறைய….
சமீப காலமாக tubbing தொழில்நுட்பம் மிகச் சிறப்பாக வளர்ச்சியடைந்ததைப் பார்க்கமுடிகிறது. ஜூனூன் காலத் தமிழை நாம் எப்படி எல்லாம் கிண்டலடித்திருப்போம். இப்போது அந்தத் துறை மிகப் பெரிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இதை நான் Money Heist பார்க்கும்போதே உணர்ந்தேன். அந்த சீரியலில் ஓர் இடத்தில் வெளியில் இராணுவ வீரர்கள் இருப்பார்கள். உள்ளே புரஃபஸர் அனுப்பிய கொள்ளைக்காரர்கள். அப்போது வெளியில் சென்று சரண்டர் ஆகலாம் என ஒருவன் சொல்வான். அதற்கு இன்னொருவன் சொல்லுவது ஆங்கிலத்தில் இப்படி இருந்தது. “வெளில்ல என்ன ரெட் க்ராஸ்ல இருந்து வந்திருக்காங்கன்னு நினைக்கிறியா?” அதைத் தமிழில், “வெளில்ல என்ன புத்தனும் காந்தியும் நிக்கிறாங்கன்னு நினைச்சியா?” என்று மாற்றியிருப்பார்கள். எவ்வளவு அழகான மொழியாக்கம்.
இந்த சீரியலின் தமிழ் tubbing-கிலும் அப்படியான இடங்களைப் பார்த்தேன். வாயு ராகவன் மிக நிண்ட நேரம் வேகப்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்திக் கொண்டிருப்பார். கமண்டரி பாக்ஸில் இருப்பவர்கள். ஏன் வாயு ராகவன் ஸ்பின்னர்களைப் பந்து போடச் சொல்ல மாட்டேங்கிறார் என யோசிப்பார்கள். கடைசியாக வாயு ராகவன் ஒரு ஸ்பின்னரைப் பந்துபோடுவதற்கு அழைப்பார். அப்போது கிரிக்கெட் வருணனையாளர் “அடிச்ச மணி கோயிலுக்குக் கேட்டுச்சோ இல்லையோ வாயுவுக்குக் கேட்ருச்சு” என்று சொல்வார்.
அதேபோல இன்னொரு இடம். படத்தில் கேப்டனாக வரும் அரவிந்த் கோச்சிடம், ”Coach, Its worth a shot” எனச் சொல்லவேண்டிய ஒரு இடம் வரும். இதை அப்படியே சொல்லியிருக்கலாம். இந்தி சீரியலிலும் அப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால் தமிழில் இன்னும் புரியும்படி, “கடைசியா ஒரு தடவ try பண்ணவா?” என மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். தொழில்நுட்பம் தரும் மிகச் சிறிய இடைவெளியைக் கலையாக்குகிறார்கள். இந்தியா மாநில மொழிகளை வளர்க்கும்போது இதுபோன்ற தொழில்நுட்பக் கலை மேலும் வளரும் என்பதை அழகான இந்தியில் மொழிபெயர்த்து, யாராவது ஒருவர் அமித்ஷாவிடம் சொல்வார்களா?
sankarthirukkural@gmail.com