செய்யும் தொழிலே தெய்வம். அந்தத் தொழிலைச் செய்யும் இடம் கோவில். எனவே அங்கு வந்து செல்வோர் தம் கைகால்களை வைத்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டும். எதையும் தொடக் கூடாது. எதையும் எடுக்கக் கூடாது என்பதில் அந்தத் தொழில் செய்வோர் மிக கவனமாக இருப்பார்கள். அதிலும் இந்த நூலகங்கள் இருக்கின்றனவே, அவை மிகப் பெரிய அறிவுக் கோவில்கள் என்பதால், அங்கே வேலை பார்ப்பவர்கள் இன்னும் கெடுபிடி அதிகமாக உள்ளவர்களாக இருப்பார்கள். சற்று சிரித்த முகமாக இருந்தால், கூடுதலாக இரண்டு புத்தகத்தை எடுத்துச் செல்லவா? என்று கேட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் கடுகடுவென்றே இருப்பார்கள். அங்கு சத்தம் போடக் கூடாது. சிரிக்கக் கூடாது. புத்தகங்களின் தூசியால் தும்மல் வந்தாலும் அடக்கிக் கொண்டு இருந்து விட்டு, வெளியே வந்த பிறகுதான் தும்ம வேண்டும். ஆதி காலம் தொட்டு நான் பார்த்த நூலகங்கள் இப்படித் தான் என்பதால், ஜினா ஷெரிடன் என்ற பெண் I work in a Public Libtary – A Collection of Crazy Stories from the Stacks என்று தனது நூலகர் பணி அனுபவங்களை எழுதிய புத்தகத்தைப் பார்த்ததும் படிக்க ஆரம்பித்து விட்டேன். ஜினா அமெரிக்கப் பெண். அமெரிக்க நூலகங்கள், அந்த நூலகத்திற்கு வரும் வாசகர்கள் பற்றிய மிக அழகான பதிவு இந்தப் புத்தகம்.
ஆரம்பத்திலேயே ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. நம் ஊர்களில் நூலகத்தில் புத்தகம் எடுத்துப் படிப்பவர் வெறும் வாசகர்தான். நூலகத்திற்குப் பெரிய அளவில் நன்கொடை ஏதாவது தந்தவர்களை மட்டுமே புரவலர் என்பார்கள். அமெரிக்க நூலகங்களில் படிக்க வருபவர், தூங்க வருபவர், பொழுது போக்க வருபவர், வம்பிழுக்க வருபவர் எல்லோருமே புரவலர் தான். ஜினா அவர்களைப் புத்தகம் முழுக்க Patron என்றே குறிப்பிடுகிறார். இத்தனைக்கும் இந்தப் புரவலர்கள் பெரிய அறிவுஜீவிகள் எல்லாம் இல்லை.கடபுடா என்று வாயில் நுழையாத பெயர்கள் உள்ள படைப்பாளிகளின் படைப்புகளைப் பற்றி எல்லாம் விசாரித்து நூலகரைப் பதறச் செய்பவர்கள் இல்லை. பார்க்கப் போனால், நம் தமிழ்நாட்டின் சராசரி நூலகப் புரவலர்களின் – மன்னிக்கவும் – நூலக வாசகர்களின் அறிவு மட்டத்தை விட அமெரிக்க புரவலர்களின் அறிவு மட்டம் மகா மோசமாகத்தான் இருக்கிறது. இந்த நூல் முழுக்கவே இந்தக் கூறு கெட்ட குக்கர்கள் நூலகத்திற்கு வந்து செய்யும் ரகளை பற்றித்தான். ஆனால் ஜினா ஒரு நல்ல நூலகர். அவர்களின் கிறுக்குத் தனங்களைப் பார்த்து எரிச்சலுறாமல், முடிந்த மட்டும் அவர்களுக்குப் புரிய வைக்கிறாள். நிறைவே கற்றுத் தருகிறாள்.
புத்தகத்தின் முதல் இரண்டு, மூன்று பக்கங்களிலேயே நமது நூலகங்களுக்கும், அமெரிக்க நூலகங்களுக்குமான மிகப் பெரிய வேறுபாடு தெரிந்து விடுகிறது. அங்கு நூலகங்கள் நூலகங்கள் மட்டும் இல்லை. அவை நம் ஊர் கம்ப்யூட்டர் சென்டர்கள் போன்ற சேவைகளையும் வழங்குகின்றன. அதனால், இயல்பாகவே புத்தகங்களைத் தேடி வருபவர்களை விட, இந்த சேவைகளுக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ஒருபுறம் நல்ல வாசகர்கள் சத்தமில்லாமல் புத்தகங்களை எடுத்துச் சென்று கொண்டிருக்க, மறுபுறம் கம்ப்யூட்டர் சேவை நாடி வந்தவர்களின் ரகளையில் ஜினாவிற்குப் பொழுது போகிறது. சமயத்தில் உயிரும் போகிறது!
ஜினா எழுதியிருப்பதைப் படிக்கும்போது அமெரிக்கா, அமெரிக்கர்கள் பற்றிய நமது கற்பனை தகர்ந்து போகிறது. மிகப் பெரிய நாடு என்றதும் நாம் இயல்பாகவே அங்கு எல்லாம் கம்ப்யூட்டர் மயம், மக்கள் எல்லோரும் பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் என்று நினைக்கிறோம். அப்படியல்ல. ஜினாவின் அன்றாடப் பணி இது பற்றி வேறு விதமாகச் சொல்கிறது. நூலகர் என்ற பணி பின்னுக்குத் தள்ளப் பட்டு, கம்ப்யூட்டர் சென்டர் பெண், அதுவும் வரும் புரவலர்களுக்கு கம்ப்யூட்டர் பற்றிப் பாடம் எடுக்கும் வேலையாகத்தான் இருக்கிறது.
உலகெங்கும் கணினிப் பயன்பாடு என்றாலே, அதன் முதல் பயன்பாடு பிட் படம் பார்ப்பதாகத் தான் இருக்கும் போலும். வரும் புரவலன்கள் (பிட் படம் பார்க்க வருபவனுக்கு எதற்கு?) பலரும் இங்கு பிட் படம் பார்க்க அனுமதி உண்டா? என்று கேட்கிறார்கள். எங்கள் மதுரையாக இருந்தால், பொம்பளப் பிள்ள கிட்ட வந்து என்னடா கேக்கற? என்று அங்கேயே வெட்டிப் போட்டு விடுவோம். ஆனால், கோபப்படாமல், அனுமதி உண்டு என்கிறாள் ஜினா. ஒரு பையன் வந்து, சட்டைப் பையிலிருந்து தன் அப்பாவின் படத்தையும், தன் வீட்டு நாயின் படத்தையும் எடுத்து ஜினாவின் மேஜையில் வைத்து, என் அப்பா நாயின் படத்தில் இந்த வளர்ப்புநாயின் தலையை வைத்து கிராபிக்ஸ் செய்யச் சொல்லிக் கொடு என்கிறான்.
மற்றொருவர் ஸ்கேனரைப் பயன்படுத்த வேண்டும் என்று வருகிறார். ஜினா எப்படிப் பயன்படுத்துவது என்று விளக்குகிறாள். எல்லாவற்றையும் கேட்டு விட்டு அவர், பேப்பர் அல்லாத மற்ற பொருட்களை எப்படி ஸ்கேன் செய்வது? என்கிறார். மற்ற பொருள் என்றால், எதை என்று சொல்ல முடியுமா? என்கிறாள் ஜினா. ஒரு டேட்டிங் தளத்தில் உறுப்பினராக வேண்டும். அவர்கள் என் முகத்தை ஸ்கேன் செய்து அனுப்பச் சொல்கிறார்கள். அதுதான் என்கிறார் அந்த அறிவாளி. ஜினா அவரது போனை எடுத்து ஒரு போட்டோ எடுத்து அதை அப்லோட்செய்து விட்டு, அடுத்த அறிவாளியைக் கவனிக்கச் செல்கிறாள்.
ஒரு தாத்தாவிற்கு ஒரு கடிதத்தை மின்னஞ்சல் செய்ய வேண்டும். இந்த கம்ப்யூட்டரை டைப் மிஷினாக மாற்றித்தா என்று பிடிவாதம் செய்கிறார். ஜினா மின்னஞ்சல் கணக்கு ஆரம்பித்து, அதைத் திறந்து கடிதம் எழுதச் சொல்கிறாள். எங்கு எழுத என்கிறார் பெரியவர். Compose என்றிருக்கும் பாருங்கள் என்று ஜினா சொல்லும்போதே, கம்போஸர்கள் எல்லாம் இதை வைத்துதான் இசையமைக்கிறார்களா? என்கிறார் அவர். யோவ், இது கடிதத்தை கம்போஸ் செய்வதற்காக என்றால், பிறகு ஏன் ரைட் என்று இல்லாமல் கம்போஸ் என்று வைத்திருக்கிறார்கள் என்கிறார். அன்று அரை நாள் முழுக்க அவரோடு போராடுவதில் கழிகிறது.
இம்சை அரசர்கள் நேரில்தான் வரவேண்டும் என்பதில்லை. போனிலேயே இம்சிப்போரும் உண்டு. ஒரு புரவலர் பெருமான் உங்கள் நூலகத்தின் இணைய தளத்தில் தகவல்களைத் தேடுவதில் சற்று சிரமமாக இருக்கிறது என்று போன் செய்கிறார். நீங்கள் நூலகத்தின் ஹோம் பேஜில் தானே இருக்கிறீர்கள்? என்று ஜினா கேட்க, அவர் அவசர அவசரமாக, இல்லை, இல்லை. நான் என் அபார்ட்மெண்டில் தான் இருக்கிறேன், என்கிறார். ஒரு தாய்க்குலம் என் பையனுக்கு டிராகன் பற்றிக் கட்டுரை எழுத வேண்டும். டிராகன் பியாகிரபி இருக்கிறதா? என்கிறாள். ஜினாவிற்கு என்ன சொல்வது என்றே தெரியாமல் முழிக்கும் போது, அது ஆட்டோபயாகிரபியாக இருந்தால் இன்னும் நல்லது, என்று அடுத்த பேட்ரியாட் ஏவுகணையை ஏவி விடுகிறாள். வடிவேலுவிடம் பின்லேடனின் முகவரி கேட்டவரின் அண்ணன் ஒருவர் போன் செய்து, நான் நான்கைந்து பேரிடம் கேட்டதில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் கிடைக்கின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொல்கிறார்கள். நீங்கள் சற்று உதவ முடியுமா? என்கிறார். கேளுங்கள். கண்டிப்பாக உதவுகிறோம் என்று ஜினா வாக்குறுதி தந்த அடுத்த நொடி, இளம் பெண்ணே ! இன்று என்ன தேதி ? என்று கேட்கிறார் அவர் !
அரசு அலுவலகம் ஒன்றின் முகவரி கேட்டு வருகிறார் ஒரு புரவலர். அவர் கேட்ட முகவரியைத் தேடி எடுத்து பிரிண்ட் போட்டுத் தருகிறாள் ஜினா. பாப்பா, ஒரு பென்சில் இருந்தால் தருகிறாயா? என்கிறார் அவர். ஜினா பென்சில் தர அந்த முகவரியைப் பார்த்துப் பார்த்து அந்த முகவரி இருக்கும் தாளின் பின்பக்கம் பென்சிலால் எழுதிக் கொள்கிறார். பென்சிலைத் திருப்பித் தரும் போது, எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு பேக்கப் எடுத்துக் கொண்டேன் என்று சொல்லிச் செல்கிறார் அந்த முன்ஜாக்கிரதை முத்தண்ணா.
நூலகத்தின் இணைய தளத்தில் நுழைவதற்கான பின்னை மறந்து விட்டார் ஒருவர். ஜினா தங்கள் ஆவணங்களைப் பார்த்து ட்வெல் செவன்டீன் என்று சொல்ல, நான் ஒன் டூ ஒன் செவன் என்று வைத்திருந்தேன், யாரோ மாற்றி இருக்கிறார்கள் என்று புலம்பிக் கொண்டே போகிறார் வந்தவர்.
நூலகத்தின் வாயிற் கதவு உடைந்து விடுகிறது. சரியாக மூட வரவில்லை. அரைகுறையாகத் திறந்திருக்கிறது. ஒரு வில்லங்கம் வீராச்சாமி வந்து கதவ நல்லா மூடுங்க…. ஏசி காத்து பூரா வெளில போகுது. எல்லாம் என்னோட வரிப் பணம் – இப்படி காத்தா போகுது… என்கிறார்.
ஒரு இளைஞன் வருகிறான். நான் வேலைக்கு விண்ணப்பிக்க எனது ரெஸ்யூமை ஏற்ற வேண்டும் என்கிறான். எந்தக் கம்பெனிக்கு என்கிறாள் ஜினா. இல்ல… இண்டர்நெட்ல போட்டு விடுங்க… நெட்ல இருக்கற எல்லா கம்பெனிகளும் பாக்கட்டும்… யாருக்குத் தேவையோ அவங்க கூப்பிடட்டும்.. என்கிறான். அப்படி இல்லங்க… நீங்க எந்த கம்பெனிக்கு அப்ளை பண்றீங்களோ அவங்களுக்கு உங்க ரெஸ்யூம மெயில் பண்ணனும், என்று ஜினா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் பிடிவாதம் செய்கிறான்.
புத்தகம் எடுக்க வருபவர்கள் மட்டும் என்ன புத்திசாலித்தனத்தில் குறைந்தவர்களா? அவர்கள் தம் பங்கிற்கு ரகளை செய்கிறார்கள். ஒருவர் வாரா வாரம் வந்து நீலக் கலர் அட்டை போட்ட புத்தகம் ஏதாவது கொடுங்கள் என்பார். அவருக்கு இன்ன எழுத்தாளர், இன்ன இலக்கிய வகைமை என்று எதுவும் கிடையாது. அட்டை நீல நிறத்தில் இருக்க வேண்டும். அவ்வளவுதான். ஒரு நீல அட்டைப் புத்தகத்தை வாங்கிச் செல்வார். படிப்பாரோ, படிக்க மாட்டாரோ, உரிய நாளில் திருப்பித் தந்து விட்டு, மற்றொரு நீல அட்டைப் புத்தகத்தோடு அமைதியாகக் கிளம்பிச் செல்வார் அந்த நீலகேசி! மற்றொரு பெரியவர் தான் எடுத்துச் செல்லும் புத்தகத்தில் உள்ள கெட்ட வார்த்தைகளை கறுப்பு ஸ்கெட்ச்சால் அடித்துக் கொண்டு வந்து தருவார். பொது நூலகம் பாருங்க… இப்படி வார்த்தைகள் எல்லாம் எல்லார் கண்லயும் படக்கூடாது… என்பார்.
ஆனால், ஜினா மனம் தளர்வதில்லை. நீங்கள் ஒரு விஷயம் பற்றிக் கேள்வி கேட்கும் வரை அந்த விஷயத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளப் போவதில்லை. உங்கள் ஊரில் உங்கள் கேள்விக்கான அத்தனை விடைகளும் குவிந்து கிடக்கும் ஒரே இடம் உங்கள் ஊர் நூலகம்தான். ஒரு விதத்தில் அது இணையம் போன்றதுதான் என்றாலும், இணையத்திற்கும், நூலகத்திற்கும் மிகப் பெரிய வேறுபாடு ஒன்று இருக்கிறது. இணையத்தைப் போன்று இல்லாமல், இங்குள்ள தகவல்களில் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் உண்மையானவை. எனவே, இங்கே வந்து என்ன வேண்டுமானாலும் கூச்சப்படாமல் கேளுங்கள் என்று தினமும் கடை திறந்து காத்திருக்கிறாள் ஜினா. ஆட்கள் வந்து கேட்காமல் இல்லை. கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவற்றில் பெரும்பாலான கேள்விகள், ஜினா தனது பிரும்மாண்டமான அறிவுக் களஞ்சியமான நூலகத்தின் புத்தகங்களைப் புரட்டி பதிலைத் தேட வேண்டிய அவசியமற்ற கேள்விகள். “மன்னிக்கவும். கழிப்பறை எங்கே இருக்கிறது?“ ,“இந்த பீர் டின் திறக்க வரமாட்டேன் என்கிறது. திறந்து தர முடியுமா?“, “ என் பிரட்டிற்குள் வைத்து சாப்பிட வெங்காயம் கொண்டு வந்துள்ளேன். கத்தியை எடுத்து வர மறந்து விட்டேன். உங்களிடம் கத்தி இருக்கிறதா?“,“என் பக்கத்து வீட்டுக்காரர் மீது வழக்குத் தொடர வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?“,“ இப்போது பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் இந்தத் திரைப்படத்தை என் மனைவி பார்த்துவிட்டாளா என்று நான் எப்படிக் கண்டுபிடிப்பது?“ ஆனாலும் சிலர் வந்து நல்ல கேள்விகள் கேட்பார்கள். ஜினா புத்தகங்களில் தேடி விடை தருவாள். ஆனால், அந்தக் கேள்வியை எதற்குக் கேட்டார், அதைத் தெரிந்து கொண்டு அவர் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்விக்கு மட்டும் ஜினாவிற்கு எப்போதுமே விடை தெரியாது. ஒரு புரவலர் வந்து கேட்ட இப்படியான கேள்வி என்ன தெரியுமா? “ மனிதர்களின் புருவ முடியின் சராசரி நீளம் என்ன?“ கரகாட்டக்காரன் கவுண்டமணி போல் இந்தக் கேள்வியை ஏண்டா ஏங்கிட்ட கேக்கற? என்று அடிக்கவா முடியும்? ஜினாவிற்கு சம்பளம் தருவதே இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லத்தானே !
புத்தகம் முழுக்க இப்படி வேடிக்கை வேடிக்கையான சம்பவங்கள்தான் என்றாலும், அந்த வேடிக்கையை மீறி, பொது நூலகத்திற்கு அமெரிக்க அரசு ஏராளமாகச் செலவு செய்வது, அந்த நூலகங்களின் பிரும்மாண்டம், அங்கு மக்களுக்குக் கிடைக்கும் சேவை ஆகியவற்றை அறிய வியப்பாக இருக்கிறது. இத்தனை வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ளாத சராசரி அமெரிக்கர்களைப் பற்றிக் கோபமும் வருகிறது.
ஆண்டுக்கொரு முறை கோவில் யானைகளை, அவற்றின் பாகன்களைப் புத்துணர்வு முகாமிற்கு அனுப்புகிறார்களே, அது போல நம் ஊர் நூலகர்களைப் புத்துணர்வுக்காக ஜினாவின் நூலகத்திற்கு அனுப்ப வேண்டும் போல் இருக்கிறது.
அங்கு வரும் புரவலர்களின் கேள்விகளைப் பார்த்தாவது அவர்கள் சிரிப்பதற்குப் பழகட்டும்!
ஆா்வமுள்ளோர் வாசிக்க – I work at a Public Library ny Gina Sheridan