“பாஸ்… தமிழ்ல இருக்கா?”

 

Avatar.com | The Official Avatar Website for Avatar Newsஅவதார் படத்தின் இரண்டாம் பாகம் உலகமெங்கும் பெருவெற்றி பெற்றிருக்கிறது. இந்தியாவிலும் முதல்  வாரத்தில் வசூல் சாதனையும் செய்திருக்கிறது. ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்குத் தமிழகத்தில் உள்ள பல திரையரங்குகள் தங்கள் அரங்கத்தின் திரையினையும், ஒலியமைப்பையும், படம் ஒளிபரப்பும் கருவியையும் சர்வதேச தரத்திற்கு ஏற்றவாறு மாற்றும் செய்தியைக் கடந்த ஒரு மாதங்களுக்கும் மேலாகத் தினமும் செய்திகளில் படித்துக்கொண்டிருக்கிறோம். ஒரு ஆங்கிலப்படத்திற்கு இத்தனை எதிர்பார்ப்பா என்று ஒரு கேள்வியும் எழுகிறது.

அவதார் பாகம் ஒன்றின் வெற்றி மட்டுமே இந்த எதிர்பார்ப்பிற்குக் காரணம் இல்லை. உண்மையில் அவதார் முதல் பாகத்தின் வெற்றிக்குத் தேவையான ஒரு மிகப்பெரிய அடித்தளம்  அந்தப்படம் வெளிவருவதற்கு சில வருடங்கள் முன்னரே போடப்பட்டுவிட்டது. அதன் முதல்படிதான் ஆங்கிலப் படங்களைப் பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடும் முறை. இந்திய சினிமாவில் குறிப்பாக தென்னிந்திய சினிமாவில் தெலுங்குப் படங்கள் பெருமளவு தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டன. அவை பெரும்பாலும் மந்திர தந்திரக் காட்சிகள் நிறைந்த படங்களாக இருந்ததை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். விட்டாலாச்சாரியாவின் படங்களுக்கென்றே தனி ரசிகர் கூட்டமும் இருந்தது.

ஹாலிவுட்டில் வெளியாகி கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகுதான் ஜுராசிக் பார்க் திரைப்படம் இந்தியாவில் வெளியானது. அதற்கான வெகுமுக்கிய காரணம், அந்தப் படம்தான் முதன்முதலில் இந்தியாவில் இந்தி, தெலுங்கு மற்றும் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான படம். சிங்கிள் ஸ்க்ரீன் எனப்படும் திரையரங்குகள் மட்டுமே ஆட்சி செய்துகொண்டிருந்த காலகட்டமான 1994-இல் இது நிகழ்ந்தது. வழக்கமாக ஒரு வாரம் மட்டுமே திரையரங்குகளில் ஓடும் ஹாலிவுட் படங்களுக்கு மத்தியில், திரையிட்ட எல்லா இடங்களிலுமே குறைந்தது நான்கு வாரங்கள் ஓடிய பெருமையை இந்தப்படம் பெற்றது. சில திரையரங்குகளில் வெள்ளிவிழா கண்ட இந்தத் திரைப்படம் அந்த காலகட்டத்திலேயே, இந்தியாவில் மட்டும் 19 கோடி ரூபாய் மொத்தம் வசூல் செய்து சாதனை படைத்தது. அதற்கு டப்பிங் செய்து வெளியிட்டதும் முக்கிய காரணம். என்னதான் மொழி புரியாமல், வசனங்கள் எதுவும் விளங்காமல், டைனோசர்களின் அட்டூழியங்களைப் பெரிய திரையில் கண்டு மக்கள் ரசித்து மெய்மறந்து இருந்தாலும்கூட,  பிராந்திய மொழிகளில் வெளியானபோது அவை தந்த உணர்வே வேறு. இப்போதும் கூட பல கலைநிகழ்ச்சிகளில் கேலி செய்யப்படும்,”அந்த மிருகம் நம்மள நோக்கிதான் வருது.. எல்லோரும் ஓடுங்க” போன்ற வசனங்களின் ஆரம்பமே இந்தப் படம்தான்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த டப்பிங் செய்யும் போக்கு பெருமளவில் தொடரவில்லை. அதே 1994-இல் வெளிவந்த ஜிம் கேரியின்  தி மாஸ்க் திரைப்படம் தமிழில் வெளிவந்தபோதும் கூட பெரும் வெற்றியைப் பெறவில்லை. சுமாராகவே ஓடியது. 1997-இல் வெளியான அனகோண்டா படம்தான்  பெருவெற்றியைப் பெற்றது. எப்படி ஜுராசிக் பார்க் பார்க்க பள்ளியிலிருந்து எல்லாம் மாணவர்களை அழைத்துச் சென்றார்களோ அதேபோல இந்தப் படத்திற்கு நிகழ்ந்தது.  1998-இல் காட்ஜில்லா படம் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது. ஆனால் இந்தப்படம் உலகளவிலேயே எதிர்பார்த்த அளவிற்கான வெற்றியைப் பெறவில்லை. இன்னும் கூறினால் இந்தப்படம் ஜுராசிக் பார்க்கின் டைனோசர்களையே பெருமளவு நினைவூட்டியதாக அந்த நேரத்தில் ரசிகர்கள் வெளிப்படையாகவே பேசிக்கொண்டனர். பிரமாண்ட அடிப்படையில் இந்தப்படம் சிலரைக் கவர்ந்தாலும் கூட, அதுமட்டுமே படத்தை ஓடவைக்கப் போதுமானதாக இல்லை. தமிழ் மொழியிலேயே பார்க்க கிடைத்ததால் கதையின் போக்கும் யூகிக்கும்படி அமைந்ததும் காரணம்.

ஆனால் 1999-இல் நடந்தது அந்த மேஜிக். தி மம்மி என்றொரு திரைப்படம் பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது. திரையிட்ட இடமெல்லாம் திருவிழாக்கோலம் என்பார்களே.. அப்படியான ஒரு உணர்வை வெளியான இரண்டே நாட்களில் இந்தப்படம் பெற்றது. அப்போதுதான் தமிழகத்தில் பெரும்பான்மையான நகரங்களில் திரையரங்குகள் டி.டி.எஸ். ஒலி நுட்பம் செயல்படுத்தப்பட்டிருந்தது. அதுவரையில் இந்த ஒலிநுட்பத்தில் வெளியான தமிழ்ப்படங்களில் இல்லாத அல்லது கேட்டறியாத சத்தங்களை இந்தப்படத்தில் கேட்க முடிந்தது. கதையும் மாயாஜால, மந்திர தந்திர வகையைச் சார்ந்ததாக இருந்தாலும் அந்த ஃபேண்டஸி உலகிற்குள் நம்மவர்கள் நுழைந்து புது அனுபவம் கண்டார்கள்.

மம்மியின் வெற்றியைத் தொடர்ந்து, டீப் ப்ளூ ஸீ என்றொரு திரைப்படம் உடனே தமிழ் டப்பிங்கில் வெளியானது. சுறாமீன்களின் அலப்பறைகளைக் காண மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரையரங்கை நோக்கிச் சென்றனர். இந்தப்படமும் பெருவெற்றி பெற, அதன்பின்னர் எண்ணிக்கையில் அடங்காவண்ணம் ஹாலிவுட் படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகத் தொடங்கின. தி மம்மி படத்தின் இரண்டாம் பாகம், தமிழின் உச்சநட்சத்திரம் ஒருவர் நடித்த படத்தின் அளவுக்கு முதல்நாள் ஓப்பனிங் இருந்தது. பெயர் தெரியாத அந்த நாயகன் திரையில் துப்பாக்கியை ஏந்திப்பிடித்தவாறு, அந்த நூலாம்படைகள்  படர்ந்த பாழடைந்த ஒரு எகிப்து மாளிகைக்குள்  தோன்றியபோது விசில் சத்தம் விண்ணைப்பிளந்தது.

ஆனால் இது அப்படி டப்பிங் செய்து வெளியிடப்பட்ட எல்லா படங்களுக்கும் நிகழ்ந்துவிடவில்லை. குறிப்பாக எப்படி டீப் ப்ளூ ஸீ வெளியானதோ அதேபோல் டீப் ரைசிங் என்றொரு படம் வெளியானது. ஆனால் ஒருவாரம் கூட அது ஓடவில்லை. அனகோண்டா திரைப்படம் ஓடியதை வைத்து அதேபோன்று ஹாலிவுட்டில் வெளியான வேறு படங்களை, அனகோண்டாவின் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என்று கூறி வெளியிட அவை எல்லாமே வந்த வேகத்தில் பெட்டிக்குள் திரும்பின. எல்லா ஹாலிவுட் படமும் நல்ல படமில்லை என்கிற மிகப்பெரிய ஞானோதயம் உண்டாக இந்தத் தமிழ் டப்பிங் மக்களுக்கு மிகவும் உதவியது.

இன்னொரு புகழ்பெற்ற ஹாலிவுட் படவரிசையான ஜேம்ஸ்பாண்ட் படங்கள் தமிழில் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பெற்றுக்கொண்டிருந்தன. ஜேம்ஸ்பாண்ட் படங்களை அதற்குமுன் நம்மவர்கள் அந்தப் பிரமாண்டமான சண்டைக்காட்சிகளுக்காகவும், கவர்ச்சியான நாயகிக்களுக்காகவும் மட்டுமே ஆங்கிலத்தில் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தனர். ஏனெனில் மற்ற ஆக்க்ஷன் படங்களைப்போல இரண்டு காட்சிகளுக்கு ஒரு சண்டை என்கிற வீதத்தில் ஜேம்ஸ்பாண்ட் படங்கள் இருக்காது. நிறைய வசனங்கள் இருக்கும். சர்வதேச அரசியல் இருக்கும். அவைகளை எல்லாம் தமிழில் கேட்டுக்கொண்டே மற்றவைகளை ரசிப்பது மிகவும் கொண்டாட்டமாக இருந்தது.

இதில் ரசிகர்களுக்கு இருந்த மிகப்பெரிய சவால் மற்றும் வருத்தம் என்னவென்றால் இந்திய தணிக்கைத்துறையின் செயல்பாடுகள்தான். ஆங்கிலத்தில் நேரடியாக வெளியானபோது தணிக்கை செய்ததை விட, பிராந்திய மொழிகளில் வெளியிடும்பொழுது தணிக்கை இன்னும் அதிகமாக இருந்தது. முத்தக்காட்சிகள் கூட நீக்கப்பட்டன. உதாரணத்திற்கு ஹாலோமேன் என்றொரு படம் தமிழில் வெளியாகி மிகுந்த பரபரப்பை உண்டாக்கியது. கதைப்படி நாயகன் ஒரு கட்டத்தில் யார் கண்ணுக்கும் தெரியாத ஒருவனாய் மாறிவிடுவான். அதன்பின் வரும் முக்கியமான இரண்டு மூன்று நெருக்கமான காட்சிகள் எல்லாமே தணிக்கையால் வெட்டி எறியப்பட்டது. அதுவும் முழுமையாக இல்லாமல் அரைகுறையாய். உண்மையில் முழுமையாக வெட்டியிருந்தால்கூட படம் இப்படிப் பிரபலமடைந்திருக்காது. அந்த அரைகுறை சம்பவத்தால் தூண்டப்பட்ட இளைஞர்கள், அந்தக் காட்சிக்காக மட்டும் ஆங்கில டிவிடி வாங்கிப் பார்த்த கதையெல்லாம் இங்குண்டு.

இதையெல்லாம் தாண்டிய பெரும் பாய்ச்சல் தொலைக்காட்சிகளால் நிகழ்ந்தது. ஏற்கனவே ஜாக்கிசான், ஜெட்லீ நடித்த குங்ஃபு படங்கள் திரையரங்குகளில் பெருவாரியாக டப்பிங் செய்யப்பட்டு வெளிவந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திக் கொண்டிருந்தபோது, அதைத் தனியார் தொலைக்காட்சிகளும் தங்களது கைகளில் எடுத்துக்கொண்டனர். ஜாக்கிசானின் ஆரம்பகால படங்கள் எல்லாவற்றையும் மிகத்தரமாக டப்பிங் செய்து  வெளியிடத்தொடங்கினர். குறிப்பாக, நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் தந்து, வசனங்களில் எல்லாம் நம்மை உள்ளூர் திரைப்படம் ஒன்றைப் பார்ப்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கும் அளவிற்குப் புகழடைந்தன. தினமும் ஒரு புதுப்படம் என்கிற அளவில் அதன் ராஜ்ஜியம் நீண்ட நாள் நீடித்தன. நாம் அதற்குமுன் கேள்வியேபட்டிருக்காத  பல புது நாயகர்களை அந்தப் படங்கள் அறிமுகப்படுத்தின. அதைத்தொடர்ந்து பழைய ஹாலிவுட் க்ளாஸிக் படங்களான சஷாங் ரிடம்ப்ஷன், ஃபாரஸ்ட் கம்ப் போன்ற  படங்களும் கூட நல்ல டப்பிங்கில் தொலைக்காட்சிகளில் வெளியாகின. குழந்தைகள் விரும்பிப் பார்க்கும் படங்களான ஹோம் அலோன், மவுஸ் ஹண்ட் போன்ற படங்களும் இதில் விதிவிலக்கில்லை.

இப்படியான சூழலில்தான், அவதார் திரைப்படம் 2009-இல் வெளியானது. ஹாலிவுட் படங்கள் மிக சகஜமாக பிராந்திய மொழிகளில் வெளியாவதும், ஹாலிவுட் படங்கள் பார்ப்பது மிகவும் கடினம் என்பது   மாறிப்போய், ஆங்கிலப்படங்களை அண்ணாந்து பார்க்கின்ற காலம் மெல்ல குறைந்துபோகத் தொடங்கியிருந்த காலகட்டம் அது. இதையெல்லாம் மீறி ஒரு திரைப்படம், அதுவும் நேரடித் தமிழ்ப் படமாக இல்லாமல், ஒரு மொழிமாற்றுத்  திரைப்படம் கூட்டம் கூட்டமாய் மக்களைத் திரையரங்கை நோக்கி இழுப்பதற்கு ஒரு தனித்தன்மை கண்டிப்பாக வேண்டும். அந்த மாயாஜாலத்தை அவதார் பாகம் ஒன்று செய்தது. அதுவரை நாம் பார்த்திராத ஒரு தொழில்நுட்பத்தில், நாமே அந்த உலகத்தில் ஒரு பார்வையாளராக அமர்ந்திருப்பதைப் போன்ற உணர்வு தரக்கூடிய 3டி வடிவத்தில் இந்தப்படம் வெளியானது. இதற்கு மேல் என்ன இருக்கிறது என்கிற கேள்வியைத் தவிடுபொடியாக்கி, இனிமேல்தான் ஆட்டம் ஆரம்பம் என்பதை உலகிற்கு உரக்க சொன்னது இந்தப்படம்.

விளையாட்டு இதோடு முடியவில்லை. 2008-இல் அயர்ன்மேன் படம் வெளிவந்தது. மார்வல் ஸ்டூடியோவில் பயணம் அதில் இருந்து தொடங்கியது. சூப்பர் ஹீரோக்கள் வரவு இதற்கு முன்னே ஸ்பைடர்மேன் மூலம் தொடங்கி இருந்தாலும்கூட, மார்வலின் இந்த அசுர பாய்ச்சல் யாருமே எதிர்பாராதது. 2008-இல் தொடங்கி 2019 வரை கிட்டத்தட்ட 12 வருடங்கள் தொடர்ச்சியாக, 23 படங்களைப் பார்க்க வைப்பதென்பது மிகப்பெரிய சவால்தான். அதை மார்வல் எந்தவித பிசிறும் இல்லாமல் நிறைவேற்றியது. இடையில் ஒன்றிரண்டு பிசகினாலும்கூட, அந்த படங்களின்மீதான விருப்பம் சற்றும் குறையாமல் காத்ததில் மார்வல் உண்மையிலேயே ஜெயித்தது.

மார்வல் காமிக்ஸ் கதைகள் அப்படி எளிதானது அல்ல. என்னதான் சூப்பர்  ஹீரோக்கள்,பெரிய சண்டைக்காட்சிகள் என்று இருந்தாலும் கூட, அதன் பின்னணியில் வலுவான கதையமைப்பு ஒன்று இருந்தது. அது எல்லோருக்கும் சென்று சேர தமிழ் மொழிபெயர்ப்பு உதவியது. எங்கிருந்து கதை தொடங்கி, எப்படி அது பயணித்து, எப்படி அது முடிகிறது என்பது வரையிலான மொத்தப் பயணத்திற்கும் இந்த தமிழ் டப்பிங் பெரும் உதவி செய்தது. நகரங்களில் மட்டுமல்லாது சிறு கிராமங்களில்கூட இந்த சூப்பர்  ஹீரோக்கள் ஜொலிக்க இந்த தமிழ் வசனங்கள்  உதவி செய்தன. இதன் உச்சகட்டமாகப் பலர் அதுவரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியும் கண்டுகொள்ளாமல் இருந்த அனிமேஷன் வகையறா மார்வல் படங்களை இதேபோன்று தமிழ் டப்பிங்கில் காணத்தொடங்கினர். அமெரிக்காவில் எல்லாம் இந்த காமிக்ஸ் புத்தகங்களுக்குப் பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. அதைப்பற்றிய அறிமுகமும் இந்தப்படங்கள் மூலம் நம்மவர்களுக்குக் கிடைத்தது என்றால் அது மிகையில்லை.

எப்போதுமே மொழி மிகமுக்கியமான ஒரு கருவியாகச் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது. அந்நியமான எந்தவொரு விஷயத்தையும் நமக்கு அருகில் கொண்டுவரும் சக்தி தாய்மொழிக்கு உண்டு. அந்தப்பணியை இந்த மொழிமாற்றுப் படங்கள் செவ்வனே செய்ததை உணரலாம். சஷாங் ரிடம்ப்ஷன் படம் ஒரு தனியார் தொலைக்காட்சியில், இரவு பத்து மணிக்கு மேலேதான் ஒளிபரப்பானது. எம்.எஸ்.பாஸ்கர் அவர்கள், மார்கன் ஃபிரீமேன் அவர்களுக்குக் குரல் கொடுத்திருப்பார். மிக நிதானமாக நகரும் இந்தப்படம் முழுக்க சிறையிலேயே நடக்கும். நாயகன் படும் இன்னல்களும், அதை அவன் சமாளிக்கும் விதமும், அச்சிறையில் இருந்து அவன் தப்பித்து வெளியேறி, கொட்டும் மழையில், அந்த நடு இரவில், தன் இரு கைகளையும் ஏந்தி வானத்தை நோக்கி ஒரு கூக்குரல் இடும்பொழுது நமக்கு சிலிர்க்கும். நம்மையறியாமல் கண்ணீர் பெருகும். இந்தத் தருணத்தை அப்படியே உணர முதலில் நமக்குக் காட்சிகள் புரியவேண்டும். என்ன நிகழ்கிறது என்பது நம் புத்திக்கு உரைக்கவேண்டும். அவை யாவும் தாய்மொழியில் காண்கையில் கண்டிப்பாய் நிகழும்.

இதேபோல்தான் லார்ட் ஆஃப்  தி ரிங்ஸ் மற்றும் ஹாப்பிட் போன்ற படங்கள். என்னதான் பிரமாண்டமான ஆக்க்ஷன் காட்சிகள் இருந்தாலும், மந்திர தந்திரக் காட்சிகள் இருந்தாலும்கூட, இதன் கதை மிகவும் ஆழமானது. அநேக கிளைக்கதைகளைக் கொண்டது. மூன்று மூன்று பாகங்களாக  ஆறு பாகங்கள் கொண்ட பெரிய சரித்திரம் இது. இதன் மொத்த வீச்சையும் புரிந்துகொள்ள இதன் தமிழ் மொழிபெயர்ப்பு உதவியது. திரையில் வந்த அந்த கதாபாத்திரங்கள் மூலம் நாம் இன்னொரு உலகிற்குப் பயணப்பட்டோம். நம் தாய்மொழி என்னும் பாலம் அதை சாத்தியமாக்கியது.

அவதார் முதல் பாகம் வந்து 13 வருடங்களுக்குப் பிறகு அடுத்த பாகம் வெளிவந்திருக்கிறது . இதற்கிடையில் திரையில் என்னவெல்லாம் சாத்தியமோ அவை யாவுமே செய்துமுடித்து விட்டார்கள் என்றே நம்பிக்கொண்டிருந்தோம். ஆனால் மீண்டும் அதை இந்தப் படம் உடைத்திருக்கிறது. மனிதன் சமநிலையைப் பேணுவதில்லை.. அது அவனுக்கு சாத்தியமாகவே அவன் அனுமதிப்பதில்லை போன்ற வசனங்களை நம் மொழியில் கேட்டு உணரும் வாய்ப்பும் நமக்குக் கிட்டியுள்ளது. திரையில் காணும் பிம்பங்களை இன்னும் நெருக்கத்தில் உணர இந்தப் படம் வழிகாட்டியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எந்தவொரு வேற்றுமொழி  திரைப்படம் அல்லது தொடர் பற்றி எழுதுகையில், அதற்கு வரும் முதல் பின்னூட்டமாக ,”பாஸ் தமிழ்ல இருக்கா?” என்கிற கேள்வியே இருக்கிறது. எல்லா ஓடிடி தளங்களும்  மொழிகளில் டப்பிங் செய்துதான் ஒரு திரைப்படத்தையோ அல்லது சீரீஸையோ வெளியிடுகிறார்கள். திரையரங்கில் ஒரு மொழியில் மட்டுமே வெளியானாலும் கூட ஓடிடியில் வருகையில் அவை டப்பிங் செய்யப்பட்டே வெளிவரும் அளவு இதன் தேவை அதிகரித்துள்ளது. இப்படியாக வியாபாரக் காரணங்களுக்காக  மொழிமாற்றம் என்கிற விஷயம் ஆரம்பிக்கப்பட்டு, இதோ உலகின் எந்த மூலையில் வெளியானாலும், அதைத் தன் மொழியில், தன் வசதிக்கேற்ற வகையில் பார்த்து ரசித்து அதைக்கொண்டாடும் ஒரு பெரும் புரட்சி இப்போது நிகழ்ந்துள்ளது. கலை எல்லோருக்குமானது. மொழி என்கிற தடையை நாம் இப்போது உடைத்துவிட்டோம். மற்ற தடைகளும் உடைந்து அது எல்லோருக்கும் போய் சேரட்டும்.