முன்நெற்றியில் சின்ன வயதில் சாமிக்கி நேர்ந்துவிட்ட செம்பிளி ஆட்டுக்கும் இவனுக்குமாக நடைபெற்ற மோதலில் பெற்ற வடுவை வைத்திருப்பவனான ஆதிக்கு வயது முப்பதைத் தொட்டிருந்தது. முகநூலில் நான்கு வருடங்களாக இயங்குவதால் உலகம் முழுதும் நண்பர்களைப் பெற்றிருந்தான் ஆதி. பள்ளி வாழ்க்கையில் வாரம் ஒருமுறை வரும் ஓவிய பீரியடில் ஆசிரியர் வரையச் சொல்லி ஓவியம் கற்றுக்கொண்டவனான ஆதி ஓவியத்தின் நெளிவு சுளிவுகளை அப்போதே கற்றுக்கொண்டான். பின்பாக முருகர், விநாயகர், திருப்பதி
சாமி படங்களை வீட்டிலிருக்கையில் படம் பார்த்து படம் வரையக்கற்றுக்கொண்டான். மெதுவாக நண்பர்களை பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களை வாங்கி அவர்கள் உருவத்தை தாளில் வரையவும், தாளை அவர்களிடமே கொடுக்கவும் செய்தான்.
நண்பர்கள் சிலர் இப்படியே இருப்பதைவிட ஓவியக்கல்லூரியில் சேர்ந்து கற்றுக்கொண்டால் அரசாங்கப்பள்ளியொன்றில் உனக்கு ஓவிய ஆசிரியராக பணி வந்து சேர்ந்திடுமெனவும், பின்பாக ஒரு திருமணம் செய்து கொண்டால் பிள்ளைகுட்டி பெற்று நலமாக வாழ்க்கையை ஓட்டிவிடலாமெனவும் புத்தியாய் பேசினார்கள். நினைக்க அழகாய்த்தான் இருந்தது ஆதிக்கு. ஆனால் குடும்ப நிலைமை கவலைக்கிடமாக இருப்பதை நண்பர்கள் அறிய வாய்ப்பில்லை.
ஓவியக்கல்லூரியில் சேரலாமென நினைத்தாலே அடிபட நேரிடும். அப்பன் இவனுக்கென சாட்டைக்குச்சி வாங்கி வீட்டின் தாழ்வாரத்தில் சொருகி வைத்திருக்கிறார். உருவி நாலு இழுப்பு மாட்டுக்கு வீசுவது போல வீசிவிடுவார். அதிக நடமாட்டமில்லாத சாலை கிடைத்தால் நான்கைந்து கலர் சாக்பீஸ்களை வைத்துக்கொண்டு அங்கே ராமர், லட்சுமணர், அனுமர்படம் வரைந்தால் போவோர் வருவோர் அதன் அழகை
ரசித்து துட்டுப்போட்டு விட்டு போவார்கள். அது இவன் வயிற்றுப்பாட்டுக்கு ஆகிவிடும். மழை நாளில் பிழைப்பு போய்விடும் என்பது மட்டும் தான் கவலை. படிக்கும் காலத்திலேயே இவன் மனதானது இப்படித்தான் முன்கூட்டியே சிந்தித்து சிந்தித்து மிரண்டு போகும்.
ஆதி பின்பாக படிக்க வசதியின்றி காலேஜ் படி மிதிக்காமல் செல்போன் கடையில் குறுநகரில் பணிக்குச்சேர்ந்து கொண்டான். அப்பா காலமாகி இப்போது நான்கு வருடங்களாகிவிட்டது. வீட்டில் இவன் அம்மா மட்டும்தான். அதுவும் பனியன் கம்பெனி ஒன்றிற்கு கைமடிக்கவும் பிசுறு வெட்டவும் போய்வருகிறது. காலையில் இவன் பணிக்குத் தன் டூவீலரில் கிளம்பு கையில் அம்மாவையும் அமர்த்திக்கொண்டு வந்து கம்பெனி வாயிலில் இறக்கி விட்டு விட்டு இவன் குறுநகர் நோக்கி கிளம்பி விடுவான். மாலையில் அம்மா ஐந்தரைக்கு ஷிப்ட் முடிந்து சாலையில் நடந்தே ஊர் வந்து சேரும். சில நாட்களில் சாலையில் தெரிந்தவர்கள் டூவீலரில் வந்தால் அவர்கள் வண்டியில் ஏறி அமர்ந்து வீடு வந்துவிடும்.
எல்லா அம்மாக்களைப் போன்றே ஆதியின் அம்மாவும் தனக்கொரு மருமகள் வேண்டுமெனவும், பிற்பாடு பேரக் குழந்தை வேண்டுமெனவும் நினைக்கத்துவங்கி இரண்டு வருடங்களாகிவிட்டது. சொந்த பந்தத்தில் பெண்கள் இருக்கிறார்கள். சொந்தபந்தத்தில் நிறையப்பெண்கள் வயதுக்கு வருவதும், மண்டபங்களில் பூப்புனித நீராட்டு விழாக்களும் நடக்கத்தான் செய்கின்றன. அம்மாதிரியான சமயங்களில் அம்மா இவனைக் கொத்தாகத் தூக்கிக்கொண்டு மண்டபத்தில் நுழைந்துவிடும்.
சீர் நடக்கும் பெண் பத்தாவது படித்துக்கொண்டிருப்பாள். அம்மா மூளை உடனே கணக்கு போட்டு விடும். பின்நாட்களில் சமயம் பார்த்து ஒரு கிடாவிருந்து சமயத்தில், அல்லது இழவு காரிய சமயத்தில் சந்தித்துக் கொண்டால் பெண்ணைக் கட்டிக்குடுக்க ஏற்பாடு நடக்குதா? என்று கேட்டுவிடலாமென நினைத்திருப்பாள். ஆனால் போனில் ஒரு வருடத்திற்குள்ளாகவே தகவல் வந்துவிடும் எப்படியும். பெண் பக்கத்துவீட்டு பையனை இழுத்துக்கொண்டு ஓடிப்போய் விட்டதென்று. அம்மா அடுத்து எந்த வீட்டில் எந்தப்பெண் சமைவாள் என்று கணக்குப்போடும். ஓடிப்போன பெண் அடுத்த நிகழ்ச்சியில் இடுப்பில் குழந்தையோடு, ‘நல்லா இருக்கீங்களாம்மா? அண்ணன் இன்னும் செல்போனு கடையிலயா வேலை செய்யுது? பனியன் கம்பெனில எல்லாம் இப்ப வேலை கம்மீங்கறாங்களேம்மா?’ என்று நலம் விசாரிக்கும்.
ஆதி செல்போன் கடையில் பணிக்குச் சேர்ந்து ஐந்து வருடங்களாயிற்று. முதலாளி அருகிலிருந்த குறுநகர் ஒன்றில் பிரான்ச் துவங்கிவிட்டார். கார் வாங்கிவிட்டார். ஆன்மீகவாதியாகி கோயில் குளங்களுக்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டார். ஆதிக்கு வருடம் ஒருமுறை இருநூற்றி ஐம்பது ரூபாய் சேர்த்திக்கொடுக்கிறார் மாதச் சம்பளத்தில். குறுநகரில் வேறு செல்போன் கடைக்காரர்கள் இவனுக்குத் தூண்டில் போட்டார்கள்.
ஒருவர் மீன்பிடி வலையையே வீசினார். இவன் சிக்கவில்லை. அதற்கு ஓனரின் கல்லூரி செல்லும் பெண் மஞ்சுளா காரணமாகிவிட்டாள்.
மஞ்சுளா கல்லூரி விடுமுறை நாட்களில் செல்போன் கடைக்கு வந்து விடுகிறாள். அவள் நெருப்பாயிருக்க இவன் பஞ்சாய் நின்றிருந்தான் கடையினுள். மளாரென தீப்பிடித்து ஒரு வருடகாலமாக எரிந்துகொண்டிருக்கிறது கடைக்குள் அணைக்க முடியா தீ! அன்று வெளியூரிலிருந்து இரண்டு முகநூல் நண்பர்கள் இவனைச் சந்திக்க வருவதாய் அலைபேசியிருந்தார்கள். அம்மாதிரியான சமயங்களில் இவனது பர்ஸ் இளைத்துவிடுவதும் நடந்துவிடுகிறது. சில நேரங்களில் நண்பர்கள் சந்திப்பே வேண்டாமென்ற மனநிலைக்கு வந்துவிடுகிறான். மஞ்சுளா கடையில் இருக்க இவன் பனிரெண்டு மணிக்கு நண்பர்களை வரவேற்க பேருந்து நிறுத்தத்திற்கு நடந்தே வந்து சேர்ந்தான். வருபவர்களாவது குடியை வெறுத்தவர்களாக இருந்தால் பரவாயில்லையென மனதில் நினைத்தான். ஆனால் இவனைச் சந்திக்க வருபவர்கள் ஒன்று ஒரு ஃபுல் பாட்டிலோடு வந்து இறங்குகிறார்கள். இவன் கண்ணால் காணாத பாட்டிலாய் அதுகள் இருந்து தொலைக்கும்கள். பேருந்திலிருந்து இறங்கிய இருவரும் இவன் வயதையே ஒத்திருந்தார்கள். முகநூலில் பார்த்த முகங்கள் என்பதால் இறங்கியதும் கையை உயர்த்தி மகிழ்ச்சியைக் காட்டினான் ஆதி. வந்தவர்கள் இவனுக்கு கைகொடுத்து குலுக்கிக்கொண்டே, நான் சாமுவேல் திருச்சி, இவன் பீட்டர் கரூர், என்றான் சாமுவேல்.
“தோழரே, இங்க டாஸ்மாக் பக்கத்துல இருக்குங்களா?” சாமுவேல் தான் இவனிடம் கேட்டான். வடபக்கம் திரும்பிப்பாருங்க தோழர்! என்று சொல்லவும் இருவரும் திரும்பிப்பார்த்து புன்னகை புரிந்தார்கள். ‘வாங்க தோழர், அப்பிடியே கட்டிங் போட்டுட்டு நாம பேசுவோம்!’ என்று இவனையும் அழைத்துக்கொண்டு சென்றார்கள். பாரின் மூலையில் காலியான டேபிளில் சென்று தங்களின் முதுகு மூட்டையை இறக்கி வைத்து
விட்டு சேரில் அமரவும் இவனும் தசுங்கி அமர்ந்தான். அவர்கள் பெயர் வேறு இவனுக்கு யேசு சாமியை கும்பிடுபவர்கள் என்று தெரிவித்திருந்தது. போதை மிகுதியாகிவிட்டால் இயேசு எப்போ வருவார்? வந்ததும் மலைப்பிரசங்கம் செய்வாரா? இப்படியெல்லாம் கேட்டுத் தொலைத்துவிடுவோமென மிரண்டான். அளவாய் குடிக்க வேண்டுமென மனதில் நினைத்துக்கொண்டான். சப்ளையர் டேபிளுக்கு வந்ததும் சாமுவேல் தன் பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு பர்ஸை எடுத்து இரண்டு ஐநூறு ரூபாய் தாள்களை கொடுத்தான். 1848 ஒரு ஃபுல், என்று சொல்லவும் சப்ளையர் மண்டையை ஆட்டிக்கொண்டு நகர்ந்தான்.
முதல் ரவுண்ட் ஆரம்பமாகி டம்ளர் கீழே வைக்கப்பட்டதுமே பீட்டர் தான் ஆரம்பித்தான்.
“தோழர் ஆதி, முகநூல்ல உங்க பதிவுகள், ஓவியங்களை ரெண்டு வருசமா கவனிச்சுட்டு வர்றேன். நீங்க லெஜண்ட். நான் எப்பவும் கவிதைகள் தான் எழுதிட்டு இருக்குறது. என்னோட தொகுப்புகள் ரெண்டு வந்திருக்கு. உங்களுக்கு முதல் தொகுப்பு அனுப்புன ஞாபகம் இருக்கு தோழர். ஆனா நீங்க வாசிச்சீங்களா? புத்தகம் கெடச்சுதா? ஒரு தகவலையும் சொல்லலை. அதனால இரண்டாவது தொகுப்பை உங்களுக்கு அனுப்பலை. ஆனா கையோட கொண்டு வந்திருக்கேன் தோழர் ” என்றான். ஆதிக்கு சில கவிதை தொகுப்புகளை முகநூல் நண்பர்கள் அனுப்புகிறார்கள் தான். ஆனால் கவிதைகள் இவனுக்குப் புரிவதில்லை என்பதால் படிப்பதில்லை. ஆதி ஓவியக்காரன் மட்டுமே! அதிலும் சில சிற்றிதழ்கள் இவனிடம் ஓவியம் கேட்டன. இவன் வெட்கப்பட்டுக்கொண்டு அப்படியான மெசஞ்சர்களுக்கு பதிலிடுவதில்லை. அலைபேசி எண் பிடித்துப் பேசுவார்கள். ஓவியம் கேட்பார்கள். பணம் எவ்ளோ கொடுப்பீங்க? என்று இவன் கேட்டால் போனை வைத்துவிடுவார்கள். அப்படியும் இரண்டு முன்று தொகுப்பு புத்தகங்களுக்கு ஓவியங்கள் வரைந்து கொடுத்திருக்கிறான். அவர்கள் முதலாகவே ஆயிரம் ரூபாய் இவனுக்கு ஜிபே செய்துவிட்டுத்தான் ஓவியம் கேட்டார்கள் என்பதால்.
இரண்டாவது ரவுண்டு ஓடி முடித்ததும் தான் சாமுவேல் ஆரம்பித்தான்.
”தோழர், திருச்சில இருந்து ஒரு காத்திரமான சிற்றிதழ் கொண்டு வரலாம்னு நண்பர்கள் பேசி முடிவெடுத்திருக்கோம். அதுல உங்க பங்களிப்பும் இருக்கணும்னு தான் நேர்லயே உங்களை சந்திச்சு பேச வந்தேன். அப்படியே வர்ற வழியில தோழர் பீட்டரையும் தூக்கிட்டு வந்துட்டேன். சிக்கன் வறுவல் நல்லா காரஞ்சாரமா பண்ணியிருக்காங்க தோழர். கூச்சப்படாம எடுத்து சாப்பிடுங்க.. ரெண்டு விரல்ல எடுத்து சாப்புடறீங்களே! எல்லா சிற்றிதழ்காரங்களும் மண்டைக்கனம் பிடிச்சவங்களாவும், குண்டி சாத்துறவிங்களாவும் இருக்கறதால தான் நாங்க தனி இதழ் நடத்த துணிஞ்சுட்டோம் தோழர்.”
ஆதிக்கு, குண்டி சாத்துறது என்றால் என்ன? என்று அவனிடம் கேட்கலாமென ஒருகணம் யோசித்தான். அதைப்பற்றிய கூறுகள் இவனுக்கு அறிமுகமாகியிருக்கவில்லை. குண்டி என்றால் குண்டான தாட்டியமான பெண் என்றும், சாத்துதல் என்பது ஒரு கட்டையை வைத்தோ அல்லது அப்பனைப்போல சாட்டைக்குச்சி வைத்தோ நாலு சாத்து சாத்துவதாக நினைத்துக்கொண்டான். இதைப்போய் விளக்கம் கேட்டால் இவனை முட்டாள் என்று நினைத்து விடுவார்கள்.
“ரெண்டு மாசம் முன்ன ஒரு பத்திரிகை தோழருக்கு போன் போட்டேன் தோழர். பத்திரிகையில அலைபேசி எண் இருந்ததால தான் கூப்பிட்டேன். அவரும் எடுத்து, யார் பேசுறீங்கன்னு? கேட்டாரு. நான் இந்த மாதிரி திருச்சீல இருந்து சாமுவேல் பேசுறேன். உங்க இதழ் நல்லா வந்திருக்குங்க தோழர். அதுல போர்ஹே பத்தி ஒரு கட்டுரை தமிழ்ல இதுவரை வராத கட்டுரை தோழர்னு சொன்னேன். ‘டேய், உனக்கு புத்தகம் வேணும்னா அட்ரசைக்குடு அனுப்பி வைக்கிறேன்.. அது நல்லா இருக்குது இது நல்லா இருக்குதுன்ற நாயமயிரெல்லாம் வேண்டாம்!’ அப்படிங்கறாரு தோழர். எனக்கு என்ன பேசுறதுன்னே தெரில.. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்னு சொல்லிட்டு வச்சுட்டேன் தோழர். பாருங்களேன்! பைத்தியக்காரனுங்க பூராப்பயலும் அடையாளம் தெரியாத பேர்வைக்குள்ள ஒளிஞ்சுட்டு இருக்கானுங்க! நம்ம பத்திரிகை பேரைக்கேட்டா அதிரும் தோழர்.. நீங்க இவருக்கு சொல்லுங்க தோழர் பேரை!” என்று சாமுவேல் முடித்துவிட்டு அடுத்த கட்டிங்கிற்கு சென்றார். ஆதி பீட்டரின் வாயைப் பார்த்தான். அவனோ சிக்கன் பீசை சதக் புதக்கென மாவாட்டிக்கொண்டிருந்தான் வாயில்.
“ஜீவிதம், ஜீவிதம், ஜீவிதம்! அதான் பத்திரிகை பேருங்க தோழர்” மூணுவிசுக்காவா? என்று ஆச்சரியப்பட்டான் ஆதி.
“இது ஏதோ மதப்புத்தகம் மாதிரி இருக்குங்க தோழர். இலக்கியப்பத்திரிகை பேரு மாதிரி இல்லை” என்றான் ஆதி.
“ஆமாங்க தோழர், நானும் நாலஞ்சு பேருகிட்ட சொன்னதுல எல்லோரும் உங்களைப் போலத்தான் சொன்னாங்க. சரி நீங்க ஒரு பேரு சொல்லுங்க தோழர். குருதெ, கல்லு, மணலு, காலம், அடவு, தமிழு, மண்ணாங்கட்டியெல்லாம் வராம ஒன்னு சொல்லுங்க.”
“மண்ணாங்கட்டியே நல்லா இருக்கே தோழர்.”
“ஆஹா! அதுக்குத்தான் உங்களைப் பார்க்க வந்ததே! நீங்க ஜீனியஸ் தோழர்.. நான் பஸ்ல வந்துட்டு இருக்கப்பவே பீட்டர்கிட்ட சொன்னேன். அறிவு ஜீவிகள் எல்லாரும் அமைதியாத்தான் ஒரு ஓரமா சத்தம் காட்டாம உக்காந்திருப்பாங்க.. அது நம்ம தோழர் ஆதி தான்னு!” சேரிலிருந்து எழுந்த சாமுவேல் ஆதியை நோக்கி குனிந்து அவன் கன்னத்தில் முத்தா ஒன்று கொடுத்துவிட்டு ‘மண்ணாங்கட்டி!’ என்று குரல் கொடுத்தான். கூப்புட்டீங்களா சார்? என்று சப்ளையர் டேபிளருகில் வந்து நின்றான். ஒருகணம் குழம்பிய சாமுவேல், ‘போய் இன்னொரு பிளேட் சிக்கன் கொண்டு வா மேன்!’ என்றவாறு சேரில் அமர்ந்தான். ஆதி கன்னத்து எச்சிலை துடைத்துக்கொண்டான். அடுத்த ரவுண்டு ஓடியது.
“முதல் இதழ்ல எட்டு கதைகள் போடுறோம். மூணு ரெடியா இருக்கு. ஒரு பெரிய மனுசன் நேர்காணல், கொஞ்சம் கவிதைகள், கட்டுரை நாலு. இருமாத இதழ்னு அறிவிப்பு போடுறோம். தோழர் ஆதியோட ஓவியங்கள் தான் இதழ் முழுக்க இருக்கணும். பிரிண்ட் ஆகி வந்தா சும்மா கண்ணுல ஒத்திக்கறாப்ல இருக்கணும். சைசு இந்தாதண்டி இருக்கணும். டேபிள்ல போட்டா டிமீருனு சத்தத்தோட விழணும். ஆமா!”
“டிமீருனு சத்தத்தோட விழணும்னா அட்டையை தகரத்துல தான் போடணும் தோழர்!” என்றான் பீட்டர்.
“போட்டாப் போவுது.. இப்ப என்னாங்கறேன்? தோழர் நீங்க ஒரு முப்பது நாப்பது ஓவியங்கள் வரைஞ்சு என்னோட மெயில் ஐடிக்கி அனுப்பிடுங்க. அட்டைப்படம் கலர்ல வரணும். அதனால கலர்ல வெறும் சிலுவை ஒன்னை வரைஞ்சிடுங்க! அதுல ஆள் இருக்கக்கூடாதுங்க தோழர். வெறும் சிலுவை. வெளிநாட்டுல டொனேசன் வாங்கணும்னா அப்படியெல்லாம் பண்ணனும். உள்ளார ஜீஸஸ் பத்தி ஒரு கட்டுரையை பாஸ்டர் ஒருத்தர் எழுதுவாரு. அவர் பத்தாயிரம் தர்றதா சொல்லிட்டாரு தோழர்.
பத்தாயிரம் செத்துக்கிடக்கு ஜோப்புல!” ஆதிக்கு முப்பது ஓவியங்கள் என்கிற சமாச்சாரம் மகிழ்ச்சியை கொடுத்தது. ஒரு ஓவியத்திற்கு ஐநூறு என்று போட்டால் கணக்கு கொப்பத்திற்குப் போய்விடும்.
“தோழர் முப்பது ஓவியங்களுக்கு எனக்கு தொகை எவ்ளோ கொடுப்பீங்க? ஏன்னா என்கிட்ட அதுக்கான பொருட்கள் எதுவுமில்ல. எல்லாம் வாங்கணும்” என்றதும் இருவருமே ஆதியை உற்றுப்பார்த்தார்கள்.
“தோழர், இப்போதைக்கு என்னால உங்களுக்கு தொகை தரமுடியாதுங்களே தோழர். ஏன்னா பத்திரிகையே டொனேசன்களை நம்பித்தான் கொண்டு வர்றோம். அப்படித்தான் நேத்து அந்த குஞ்சுத்தாடி ரைட்டர் கிட்ட பேட்டி ஒன்னு வேணும்னு போன்ல கேட்டேன். பத்தாயிரம் குடுத்தா பேட்டி தர்றேன்னாரு. அதுக்கு கரூர் பக்கம் டொனேசன் கேக்கத்தான் இவரை உதவி ஆசிரியரா நான் நியமிச்சிருக்கேன். நீங்க உங்களால முடிஞ்ச தொகையை இங்க வசூல் பண்ணி எனக்கு அனுப்பணும். அப்பத்தான் இதழ் தொடர்ந்து வரும். பாக்குறவங்க கிட்டவெல்லாம் பணம் கேட்கணும் தோழர். நாலு தாட்டி கேட்டா ஒருதாட்டி பணத்தை எப்படியும் குடுத்துருவாங்க! பத்திரிகை நடத்துறதெல்லாம் கடவுளுக்கு சேவை செய்யுற மாதிரி தோழர். ஒரு சர்ச் கட்ட எவ்ளோ செலவாகுது தெரியுமா தோழர். யாராவது ஒருத்தரா செலவை ஏத்துக்க முடியும்? சொல்லுங்க. எல்லோரும் பகிர்ந்துக்கறோம்.”
ஆதிக்கு சப்பென்றாகிவிட்டது. சாமுவேல் சர்ச் கட்ட பணம் கேட்பது மாதிரி தான் தெரிந்தது. வெளிச்சுவற்றில் பைபிள் வாசகங்களை பெயிண்ட்டில் எழுத இவனைக் கூப்பிட வந்தது மாதிரி பேசினான்.
“ஆசான் கிட்ட நேர்காணல் பண்ண நாளை மறுநாள் நாங்க ரெண்டுபேரும் போறோம் தோழர். நீங்களும் வாங்களேன். ஆசான்கிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு அங்கயே பொன்னியின் செல்வன் ரெண்டாம் நெம்பரைப் பார்த்துட்டு திரும்பிடுவோம். என்ன தோழர் ஓகேவா?” என்று பீட்டர் கேட்க, ‘சொல்றேன் தோழர்!’ என்றான் ஆதி.
“வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு பேசிப்பழகுங்க தோழர். பாக்கலாம். சொல்றேன்னெல்லாம் பேசிப்பழகாதீங்க. ஊருக்குள்ள பொழைக்க முடியாது. ஃபுல்லு காலியாயிடுச்சுங்க தோழர். அடுத்த சப்ளை தோழர் பார்த்துக்குவார்னு நினைக்கிறேன். ஏன்னா தோழரை சந்திக்க ரொம்ப தூரத்துல இருந்து வந்திருக்கோம். அதுக்கும் முன்ன யாரையாச்சிம் தூக்கிப்போட்டு நாலு மிதி வைக்கலாம்னு காலும் கையும் துடிதுடிக்குது தோழர் எனக்கு. நம்ம சப்ளையருக்கு இந்த செவுத்துல காலைவச்சு ஊனி ஒரு உந்து உந்தி ஒரு திருகல் போட்டு ஒதை கொடுக்கட்டா தோழர்?” என்றான் பீட்டர்.
ஆதிக்கு வியர்க்க ஆரம்பித்துவிட்டது.
“பீட்டர் தோழர் எப்பயும் இப்படித்தான். போதை ஏறிடுச்சுன்னா யாரையாச்சிம் வம்புக்கு இழுத்து நாலு சாத்து சாத்தலீன்னா குடிச்சதுக்கே அர்த்தமில்லீம்பாரு தோழர். போனவாட்டி சென்னையில புத்தக கண்காச்சிக்கி போனப்ப அப்படித்தான் பண்ணிட்டாரு. புதுசா கவிதை தொகுப்பு எழுதியிருக்கேன்.. படிச்சுட்டு முகநூல்ல விமர்சனம் எழுதுங்கண்ணான்னு ஒரு தம்பி பார்ல கொண்டாந்து குடுத்துச்சு பீட்டர் தோழர்கிட்ட. தூக்கிப்போட்டு நாலு மிதி போட்டுட்டாரு. அப்புறம் நான் பிரிச்சி வுட்டு அந்தத் தம்பி கையில ஐநூறு ரூவா குடுத்து ‘போதையில இருக்கவங்க கிட்ட எப்பயும் இந்த மாதிரி கொண்டுபோயி நீட்டீட்டு நிக்காதே தம்பின்னு’ சொல்லி அனுப்பினேன்.”
ஆதி ஏற்பாடு செய்வதாய் கூறி அவர்களை பாரிலிருந்து வெளியில் கூட்டி வந்தான். இடையில் மஞ்சுளா வேறு ஐந்தாறு தடவை கூப்பிட்டிருக்கிறாள். திருப்பிக் கூப்பிட்டான் என்றால் எடுக்க மாட்டாள்.
“தோழர், நீங்க எங்களுக்கு சப்ளை பண்ணாம நேக்கா வெளிய கூட்டிட்டு வந்துட்டீங்க பார்த்தீங்களா.. இதெல்லாம் எனக்குப் புடிக்காதுங்க தோழர்.” என்ற பீட்டரைப்பார்த்து ஆதி புன்னகைத்தபடி அவர்களை வேறு வீதியில் கூட்டிப்போனான். புலம்பிக்கொண்டே பீட்டர் தோழர் பின்னால் வந்தார். சாமுவேல் தோழர் வலது கை ஆள்காட்டி விரலை காற்றில் நீட்டி தனக்குள் கணக்குப்போட்டபடி வந்தார். இரண்டாவது திருப்பத்
தில் திரும்புகையில் வெள்ளைநிற நாயொன்று வீட்டு வாசலில் படுத்திருந்தது வாலை ஆட்டிக்கொண்டு எழுந்து பீட்டரைப்பார்த்து உறுமியது. பீட்டர் நிதானித்து ‘கமான் பேபி!’ என்றான். நாய் கோபமாய் ஒரு தாவல் தாவியது பீட்டர் மீது. பீட்டர் தாவிய நாயின் முன்னங்கால்களைப் பிடித்து ஒரு சுத்து சுத்தி தூரமாய் விசிறினான். திப்பென மூட்டை விழுவது போல விழுந்து அது. நாய் உயிர்பயம் எழ வினோத ஒலியுடன் நேர் கிழக்கு வீதியில் ஓடியது. ‘யாருகிட்ட? கரூர்ல நாம் பாக்காத நாய்களா? அப்பிடியே ஊரை உட்டே ஓடீரு!’ என்றபடி நடக்கத்துவங்கினான்.
சற்று தூரத்தில் ஒதுக்குப்புறமாயிருந்த வேப்பை மரத்தடியில் ஐம்பது வயது மதிக்கத்தக்க மனிதர் ஒரு ஜீன்ஸ் அணிந்த பெண்ணிடம் மிதி வாங்கிக் கொண்டிருந்தார். அந்தப்பெண்ணோ அவரை ஆங்கிலத்தில் ‘ப்ளடி ரேஸ்கல்..’ என்றெல்லாம் சொல்லித் திட்டியபடி ஓடி வந்து ஓடி வந்து மிதித்துத் துவைத்துக்கொண்டிருந்தாள் அவரை. அவளது ஒவ்வொரு மிதிக்கும் தூரம் தூரமாய்ப்போய் அந்த மனிதர் விழுந்து புரண்
டெழுந்து அடுத்த மிதிக்கு உடனேயே தயாராகி நின்றார்.
நான்கைந்துபேர் நின்று அதை வேடிக்கை பார்த்தனர். யாரும் போய் தடுப்பாரில்லை. மூவரும் மரத்தடிக்கு வந்து நின்றனர். அடிமரத்தில் ஒரு ப்ளக்ஸ் இருந்தது.
“யார் வேண்டுமானாலும் இந்த மனிதரை மிதித்தோ அடித்தோ வைத்து தங்களது கோபத்தை தணித்துக்கொண்டு செல்லலாம். கட்டணம் இலவசம்!”
தோழர் பீட்டரும், தோழர் சாமுவேலும் ப்ளக்ஸையே வெறித்துப்பார்த்தார்கள். பின்பாக தோழர் பீட்டர் ஆதியைக் கட்டியணைத்து வலது கன்னத்தில் உம்மா ஒன்று கொடுத்தார். மிதிபடும் மனிதரையே சாமுவேல் உற்றுப்பார்த்தான். மிதிபடும் மனிதரின் முதுகில் மரத்தூண் கட்டியிருப்பதாக நினைத்துக் கண்ணீர் சிந்தினான். ஒரு கட்டத்தில் கேவி அழ ஆரம்பித்தான். ஆதிக்கு அவனை எப்படித் தேற்றுவதெனத் தெரிய வில்லை.
“என்னாச்சுங்க தோழர்? ஏன் அழறீங்க?” என்று ஆதி கேட்கவும் அவன் அழுகை பெரிதானது. மிதிபட்டவருக்கு அந்தப்பெண் இருநூறு ரூபாய் தாளொன்றை அவர் கையில் கொடுத்துவிட்டு ஓரமாய் கிடந்த தன் தோள்பேக்கை எடுத்து மாட்டிக்கொண்டு டிக்கியை ஆட்டிக்கொண்டு சென்றாள். வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தவர்களில் ஒருவர் அடுத்துக் களமிறங்கினார்.
“அழுவாச்சி பசங்கெல்லாம் இங்க நிக்கப்புடாது.. ஓடிரோணும்!” என்றவர் சாமுவேலை விரட்ட ஓடிப்போய் ஒரு கல்லை எடுக்க, அடுத்த கணமே சாமுவேல் அழுகையை நிப்பாட்டி விட்டு அவரைப்பார்த்து சிரித்தான். அவரோ கையிலிருந்த கல்லை தூரமாய் வீசிவிட்டு ‘அது!’ என்றார். பீட்டர் அவசரமாய் களமிறங்கினான். வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்த மனிதர்களில் ஒருவன், ‘யாருப்பா அது குறுக்க லேட்டா வந்துட்டு முன்னுக்கு வர்றது? நாங்கெல்லாம் காத்துட்டு நிக்குறது கண்ணுக்கு தெரில? ஊருக்குப் புதுசா? இன்னம் நாலு பேரு மிதிச்சுட்டு போன பொறவு
களமிறங்குடா!’ என்று சொல்லவும், பீட்டர் திரும்பி ஆதியைப் பார்த்தான். ஆதி அவனை ஓரமாய் வந்து நிற்கச்சொன்னான்.
அவரை மிதித்தும் அடித்தும் வைத்தவர்களெல்லாம் தாங்கள் சலித்துக் களைத்துப்போகுமளவு அடித்து முடித்து விட்டுத்தான் இடத்தைக் காலி செய்தார்கள். பீட்டர் களம் இறங்குகையில் நேரம் மாலை ஐந்தாகிவிட்டிருந்தது. மிதிபடுபவர் பீட்டரை உற்றுப்பார்த்தார்.
“தம்பி அந்த ப்ளக்சை சரியா படிக்கலையோ! டைம் முடிஞ்சுது.. நாளைக்கிக் காலையில எட்டு மணிக்கி வா. இப்பகிளம்பு” என்றார்.
“என்னது டைம் முடிஞ்சிடுச்சா? யோவ்! என்னை யாருன்னு நெனச்சே.. என்னைப்பத்தி கரூர்ல வந்து விசாரிச்சுப்பாரு. மரத்துல கட்டி வெச்சு எத்தனை பேரை கும்மாங்குத்து போட்டிருக்கேன்னு! டைம் முடிஞ்சிடுச்சாமா டைமு!” என்றவன் கோபம் மிகுதியில் கையை ஓங்கிக்கொண்டு அவர் அருகில் செல்ல, கை கீழே அவரை அடிக்காமல் ஏன் இறங்க மறுக்கிறதென குழம்பி நின்றான். ஓங்கிய கை அப்படியே நின்று
விட்டது. ஒன்றும் செய்ய முடியவில்லை. அவரோ ப்ளக்ஸை அவிழ்த்து சுருட்டி மரத்தில் தொங்கிய தன் மஞ்சள் பையினுள் திணித்துக்கொண்டு கிளம்ப ஆயத்தமானார்.
அவர் முதுகிலிருந்து றெக்கைகள் இரண்டு வளரத் துவங்கிற்று. ‘இன்னும் ஒருமணி நேரமாகும் உன்னோட கையி நல்லவிதமா வேலை செய்யுறதுக்கு!’ சொல்லியவர் அப்படியே குறுக ஆரம்பித்தார். அப்படியே வடக்கு நோக்கி உயரப்பறக்கத் துவங்கியவரை சாமுவேல் பார்த்து, ‘ஜீஸஸ்! நீங்க இங்கதான் இருக்கீங்களா?’ என்றான். “அவரு ஜீஸஸ் இல்லங்க தோழர்! எல்லமேட்டு கருப்பன்! ” என்றான் ஆதி. ‘மண்ணாங்கட்டி!’ என்றான் பீட்டர்.
vaamukomu@gmail.com