கண்ணீர் இயல்பாக்கப்பட வேண்டும்

உன் கண்ணீர் இயல்பாக்கப்படவேண்டும்
நாளைக்கு ஒரு முறையாவது
நீ பிறர் காண
கண்ணீர் சிந்தவேண்டும்
உன் கண்ணீருக்கு
இந்த உலகைப் பழக்கப்படுத்தவேண்டும்
எதற்கும் அழவே அழாதவர்கள்
திடீரென ஒரு நாள் அழும்போது
அது தாளமுடியாதிருக்கிறது

பின் தேதியிட்ட சமாதானங்கள்

வருத்தமாக இருக்கிறேன்
என்னைக் கொஞ்சம்
சமாதானப்படுத்து
“ஏன் என் மேல்
என்ன வருத்தம் உனக்கு?”
ஒரு வருத்தமும் இல்லை
பிறிதொரு நாள்
என்னை நீ காயப்படுத்திவிட்டு
சமாதானப்படுத்தக்கூட மனமின்றி
உன் வழியே சென்றுவிடலாம்
அப்போது நான்
மனம் கசந்து அழுவேன்
இப்போதே நீ
என்னை சமாதானப்படுத்தினால்
எப்போதாவது
அதை நான் பயன்படுத்திக்கொள்வேன்

வீழும் மலர்

நான் மென்மேலும்
மனதால் வீழ்கிறேன்
எனக்கு ஒரு ‘குட்மார்னிங்’
போதவில்லை
அதைவிட மேலான ஒன்றைக் கொடு
‘உன்னை அணைத்துக்கொள்கிறேன்’
என்று சொல்வது
சற்று பயனுள்ளதாக இருக்கலாம்
என்றாலும் என் மனம் வீழ்வதை
எதனாலும் தடுக்க முடியும் என்று
தோன்றவில்லை

குதிரைகள் என்று
அறியாத குதிரைகள்

சவாரிக் குதிரைகளுக்குத் தெரியாது
தாம் சவாரிக் குதிரைகள் என்றோ
போர்க்குதிரைகள் என்றோ
மேலும் அவை தாம்
குதிரைகள் என்பதையும்
அறியாது
அவை வெறுமனே
தம் சாகசத்தில் நீந்துகின்றன
தம் உக்கிரத்தில் விரைகின்றன
குதிரைகளாக இருக்கவேண்டும்
தான் யாரென்ற நினைவுகளற்ற
சக்தியின் வெள்ளத்தில்
அல்லது
மணலில் பதியும்
குதிரையின் கால்த்தடங்களாகவேனும்
இருக்க வேண்டும்

குதிரைகளின் மெளனம்

குதிரைகளைப் பார்த்துக்கொண்டே
எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இருக்கலாம்
குதிரைகளின் மெளனத்தை
குதிரைகளின் கண்களில் கசியும் தனிமையை
இரண்டு நிமிடங்கள்கூட
தாள முடியவில்லை

அவ்வளவுதான் நடந்தது

யாருடனோ எப்போதோ
பிரியத்தைப் பகிர்ந்துகொண்ட இடத்தில்
ஏன் இந்த அந்தியில்
இவ்வளவு தனியாக
முகம் வாடி நின்றுகொண்டிருக்கிறீர்கள்?
தலைக்கு மேல்
அன்று கண்ட வளர் பிறை
இன்றும் ஒளிர்ந்துகொண்டிருக்கிறது
அங்கே
நீங்கள் எப்போதோ தொலைத்த மோதிரம்
இப்போதும் ஒளிர்ந்துகொண்டிருக்கும் என்று
நம்ப விரும்புகிறீர்கள்
நம்புங்கள்
அப்படி ஒன்றும் எல்லாம் மாறிவிடவில்லை
அன்று உங்களுடன் இருந்தவர்கள்
இப்போது வேறொருவருடன் இருக்கிறார்கள்
அவ்வளவுதான் நடந்தது

உன்னையே வெயிலெனக்கொண்டு

நீ என்னைக் காண வரவேண்டாம்
என்னோடு பேச வேண்டாம்
எனக்கு ஒரு வாய் தண்ணீர் தரவேண்டாம்
என் மனமுறிவுக்கு மருந்திட வேண்டாம்
என் தனிமையின் இருட்டில் விளக்கேற்ற வேண்டாம்
‘ஏன் இப்படியிருக்கிறாய்?’ என
என் வாடிய முகம் கண்டு கேட்கவேண்டாம்
மிகவும் வெயிலாக இருக்கிறது
எங்கிருக்கிறாயோ
அங்கேயே இரு
நான் இந்த வெயிலையே
நீயெனக் கொண்டு
அதனோடு இருந்து கொள்வேன்

கலையும் வண்ணங்கள்

நீர்க்குமிழிக்குள்
ஒரு வானவில்
சட்டெனக் கலைகிற எதற்குள்ளும்
எத்தனை வண்ணங்கள்

திரும்பத்தான் வேண்டும்

ஒரு சிறு அன்பைத்தேடி
சிறுபொழுது உற்றதுணை தேடி
இடுக்கண் களையும் ஒரு நட்புத் தேடி
‘நான் இருக்கிறேன்’ எனும் ஒரு சொல்தேடி
இவ்வளவு தூரம் வெயிலில் வந்துவிட்டேன்
எங்கும் பாவனைப் புன்னகைகள்
வணிகப்பேச்சுகள்
போலி வாக்குறுதிகள்
ஒருதேநீரைத் தாண்டாத கருணைகள்
திரும்பிப் போகும் வழியிலாவது
அந்தியின் நிழல் வந்துவிடுமா?
வராவிட்டாலும்
திரும்பிப்போய்த்தானாக வேண்டும்

அலைக்கழிவு

லிஃப்டில் உதிர்ந்து கிடக்கிறது
மல்லிகைச் சரத்திலிருந்து உதிர்ந்த
ஒற்றை மல்லி
யாருடையதோ,
எக்கணம் உதிர்ந்ததோ,
ஒரு பிரியத்தில்
மீள வழியற்று அலைக்கழியும்
மனம் போல
நாளெல்லாம் லிஃப்டில்
ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறது

கண்ணீர் எனும்
வாசனைத் திரவியம்

எனக்கு
எந்த துக்கத்திலும்
அழுகை வராது
ஆனால்
அழுபவர்களைப் பார்த்தால் மட்டும்
அழுகை வந்துவிடும்
அழுகை என்பது
ஒரு வாசனைத் திரவியம்
எளிதில் பரவிவிடுகிறது

கோடையின்
மாற்றுப் பாதைகள்

இதே போன்ற ஒரு கோடையில்தான்
நான் உன்னை நிரந்தரமாக இழந்தேன் என்பது
இந்தக் கோடையின் காலையில்
கண் விழிக்கும்போதே
நினைவுக்கு வரத்தான் வேண்டுமா?
நான் எவ்வளவு நாகரிகமாகவும்
போலிப் பெருந்தன்மையுடனும்
அது ஏற்பதுபோல நாடகமாடினேன் என்பது
இப்போதும் நினைவில் இருக்கிறது
என் முன் அடுக்கப்பட்ட
போலி குற்றவுணர்வின் சீட்டுக் கட்டுகளை
ஒரு சிறுவனைப்போல
பார்த்துக்கொண்டிருந்தேன்
அந்தக் கோடைகாலம்
நீண்டு நீண்டு
இதோ இன்னொரு கோடைவரை
வந்துவிட்டது
இந்தக் கோடையின் சாலைகளை
ஏதேனும் ஒரு மாற்றுப் பாதையில்
சீக்கிரம் கடந்துவிட்டால் நல்லது

தேநீரைத் தவிர யாருமில்லை

எனக்கு யாருமில்லாதபோதும்
ஒரு தேநீர் அருகில் இருந்திருக்கிறது

என் தனித்த பயணங்களில்
நள்ளிரவில் ஒரு தேநீர் கடையில்
என் காரை நிறுத்தும்போது
நிச்சயமற்ற பயணங்களில்
சற்றே விடுதலையை உணர்வேன்

Tea Art Images - Free Download on Freepikஒரு கூடலுக்குப்பின்
அல்லது பிரிவுக்குப்பின்
என் மனதில் நிரம்பும் தனிமையை
ஒருதேநீரால் நிரப்புவேன்

மோசமான தேநீர்கள்
மோசமான காதல்களை
நினைவூட்டியிருக்கின்றன
சிறந்த காதல்கள்
சிறந்த தேநீரை நினைவூட்டியிருக்கின்றன

‘காஃபி டீ குடிக்கும் பழக்கம் இல்லை’ என
என் தேநீரை மறுதலிப்பவர்கள்
இந்த வாழ்வின் அற்புதம் ஒன்றை
எப்படி மறுதலிக்கிறார்கள் என வியந்திருக்கிறேன்

ஒரு தேநீரின் சூட்டினால்தான்
என் சூரியன்கள் புலர்கின்றன
ஒரு தேநீரின் இதத்தினால்தான்
என் நிலவுகள் உதிக்கின்றன
ஒரு முத்ததின் வெம்மையை
ஒரு தேநீரைப் பருகுவதுபோலத்தான்
நான் பருகுவேன்

ஒரு அவமானத்தை சகிப்பதற்கு
ஒரு இழப்பை தாங்குவதற்கு
ஒரு துரோகத்தை எதிர்கொள்வதற்கு
ஒரு அற்பத்தனத்தை கடப்பதற்கு
ஒரு தேநீரை விட்டால்
எனக்கு வேறு யார் இருக்கிறார்கள்?

கடவுள்களால் நமக்கு ஒரு ஆறுதலும் இல்லை
தேநீர் நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை

என்னை ஒவ்வொருவரும்
ஒரு சக்கர நாற்காலியில்
உட்காரவைத்துவிட்டு
திரும்பிப் பார்க்காமல் போனீர்கள்
ஒவ்வொரு முறையும் பயந்தேன்
மனம் உடைந்து அழுதேன்
பிறகு
ஒரு தேநீரை அருந்தியபடி
நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருப்பேன்

இன்று தேநீர் தினம் என்கிறார்கள்
தேநீர் இல்லாத தினம் என
ஒன்றிருந்தால்
அன்று நான் சாரமிழந்துவிடுவேன்

manushyaputhiran@gmail.com