1. வாரத்தில் ஒரு நாள் நிலவுடன்

 

இந்த நிலா மட்டும்

இவ்வளவு அருகில் வந்து

பிரகாசித்திருக்காவிட்டால்

இந்த இரவை

இவ்வளவு தனிமையாக

உணர்ந்திருக்க மாட்டேன்

 

வாரத்தில் ஒரு நாள்

நிலவிடம் பேசுவேன்

வாரத்தின் ஒரு நாள்

அது இதயத்தின் கதவைத் தட்டும்

நான் அதற்கு

என் கண்ணீரின் உப்பைத் தருவேன்

 

நிலவு தேய்ந்துகொண்டும்

வளர்ந்துகொண்டும் இருக்கும்

மற்ற நாட்களில்

நானும் எங்கெங்கோ

வீழ்ந்துகொண்டும்

மீண்டுகொண்டும் இருப்பேன்

 

நடமாட்டம் குறைந்த

தெருவில் விழும் நிலவொளி

எனக்கு சற்று கூடுதல் உரிமையுடையதாகிறது

 

பெளர்ணமிக்கு

இன்னும் சில தினங்கள்

அப்போது என் பைத்தியமும்

வளர்ந்து வளர்ந்து முழுமையடைந்துவிடும்

 

அன்பே

அன்று நான் உன்னை

இதைவிடவும் முழுமையாக நினைப்பேன்

இதைவிடவும் முழுமையாக

உன்னால் கைவிடப்படுவேன்

 

  1. இன்னும் மிச்சமிருக்கும் அவலம்

 

நீ இன்று என்னை

ஒரே ஒரு விநாடி

ஏறெடுத்துப் பார்த்தால்

மனதிற்கு நன்றாக இருக்கும்

என்று தோன்றிவிட்டது

 

எப்படி உன் கண்காண

உன் முன்னால் வருவதென்று

எனக்குப் புலப்படவில்லை

 

சட்டென ஒரு யோசனை

என் வாட்ஸப் ஸ்டேடஸில்

என் புகைப்படமொன்றை வைத்துவிட்டு

நான் ஒரு மரத்திற்குப் பின்னால்

ஒளிந்துகொண்டேன்

 

சரியாக மூன்று நிமிடத்தில்

அதை நீ பார்த்தாய்

அதைக் காட்டும்

உன் பெயரையே

திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டிருந்தேன்

நெஞ்சில் ஒரு நிம்மதி

 

இப்படியெல்லாம்

சீரழியவேண்டுமா

எனத்தோன்றாமலில்லை

நான் அழிய

இதுபோல

இன்னும் எவ்வளவோ

மிச்சமிருக்கிறது

 

  1. திரும்ப முடியாத கணங்கள்

 

அவ்வளவு அதிகாலையில்

உன்னை எதற்கு அழைத்தேன்

எனத் தெரியவில்லை

 

ஒருவேளை உன்னைப் பற்றி

காணக்கூடாத கனவொன்றை

நான் கண்டிருக்கலாம்

 

இந்தப் புலரும் பொழுதை

உன் கைகளில் தந்து

ஆசிர்வதித்துத் தரும்படி

நான் உன்னை கேட்க நினைத்திருக்கலாம்

 

‘நான் இன்னும்

உறக்கத்தில் இருக்கிறேன்

பிறகு அழைக்கிறேன்’ என நீ கூறிவிட்டு

அழைப்பைத் துண்டித்தாய்

மணலில் தண்ணீர் மறைவதுபோல

அந்தக் கணத்தின் என் தத்தளிப்பு

அப்படியே மறைந்துவிட்டது

 

உன் உறக்கத்தைவிட

என் சொற்கள் மேலானவை,

உன்னைப் பற்றிய

என் கனவுகள் மேலானவை,

என் காதல் மேலானது என்று

இவ்வளவு காலம்

நம்பிக்கொண்டிருந்துவிட்டேன்

 

அன்பே

அப்படியல்ல என

புரிய வைத்ததற்கு நன்றி

 

அதற்குப் பிறகு

நீ எத்தனைமுறை அழைத்தாலும்

அந்த அழைப்பை நான்

ஏற்காமல் இருந்ததற்கு

ஒரு காரணமுமில்லை ;

நான் இழந்த எந்தக் கணத்திற்கும்

என்னால் திரும்பிப்போக

முடிந்ததேயில்லை

 

  1. கண்ணுக்குப் புலப்படாத வருத்தங்கள்

 

உன்னிடம் ஒரு வருத்தம் என்றால்

உன்னிடத்தே சற்று விலகி நிற்பது என்றால்

ரொம்ப தூரம் எல்லாம் போய்விடமாட்டேன்

உன் முன்னால் இருக்கும்

என் நாற்காலியை

ஓரடி சற்றே பின்னுக்கு இழுத்துக்கொள்வேன்

 

உனக்கு தேநீர் தருகையில்

என் விரல் நுனி

உம் விரல் நுனியில் பட்டுவிடாமல்

கவனமாக பார்த்துக்கொள்வேன்

 

எங்கும் போகவேண்டிய

அவசியம் இல்லாவிட்டாலும்

எங்காவது போகவேண்டிய

அவசர வேலை என

உன்னிடம் பொய் சொல்வேன்

 

‘ நீ எப்படியிருக்கிறாய்?’ என்ற

உன் கேள்விக்கு

‘ இன்று மழை பெய்யும் என்கிறார்கள்’ என

உன் கண்களைப் பாராமல்

பதில் சொல்வேன்

 

உனது ,’குட்மார்னிங்’ களை

‘பாப் அப்’பில் பார்த்துவிட்டு

அதை நான் பாராதுபோல

உன்னை உணரச் செய்வேன்

 

பெரும்பாலும்

உன்னிடம் வருத்தமாக இருக்கிறேன் என

கடைசிவரை உனக்குத் தெரியாதவண்ணம்தான்

உன்னிடம் வருத்தமாக இருப்பேன்

 

அன்பே

நீயும் தெரிந்து கொள்ள விரும்பாதது

உன்னைப்பற்றிய

இந்த வருத்தங்கள்தானே?