மாருதியின் பெண்கள்

மாருதி இறந்துவிட்டார்
மாருதியின் பெண்கள்
தலைவிரி கோலமாக
வார இதழ்களின் கதைகள் நடுவே
அழுதுகொண்டிருக்கிறார்கள்

நீர் அன்னங்கள் போல
கண்களில் மிதக்கும்
அந்த உருண்டை விழிகள்
இப்போது கண்ணீரில் மிதக்கின்றன

புன்னகை மாறாத
அந்தத் தளும்பும் கன்னங்கள்
துயரத்தில் வாடிவிட்டன

மாருதி பெண்களின் முகத்தை
வரைந்த பிறகுதான்
‘நிலவு முகம்’ என்ற புலவனின் உருவகத்திற்கு
ஒரு உருவம் கிடைத்தது

‘குடும்பப் பெண்’ என்ற
தமிழ் ஆணின் மூட்டமான கற்பனைக்கு
ஒரு சித்திரத்தை வழங்கியதே
மாருதியின் தூரிகைதான்

மாருதியின் பெண்கள்
எப்போதும் தாய்மையுடன் இருந்தார்கள்
தம் வசீகரத்தால்
ஆண்களை தாழ்வுணர்ச்சி
அடையச் செய்பவர்களாக இருந்தார்கள்
மாருதியின் பெண்கள்
‘டயட்’ டில் நம்பிக்கையற்றவற்றவர்களாக
இருந்தபோதும்
அவர்கள் ஆரோக்கியமாகவே இருந்தார்கள்
பருமனான, சற்றே உயரம் குறைந்த பெண்களையே
தமிழ் ஆண்கள் மோகிக்கிறார்கள் என
ஒருவர் எழுதியதை எங்கோ படித்தேன்
அதற்கு பழைய தமிழ்சினிமா கதாநாயகிகள் மட்டுமல்ல
மாருதியின் படங்களில் இருந்த பெண்களும்
காரணமாக இருந்திருக்கவேண்டும்

மாருதியின் பெண்களை
திருமணம் செய்துகொள்ள விரும்பியவர்கள்
பிறகு இருட்டறையில்
சமரசம் செய்துகொண்டார்கள்

எனக்கு மாருதியின் பெண்களைவிட
ஜெயராஜ்ஜின் பெண்களையே
மிகவும் பிடித்திருந்தது
அவர்களைத்தான் நான் காதலித்தேன்
அவர்களுக்காக
என் வாழ்வை பணயம் வைத்தேன்
மாருதியின் பெண்கள் சுதந்திரமற்றவர்கள் எனவும்
ஜெயராஜ்ஜின் பெண்கள் விடுதலையடைந்தவர்கள் எனவும்
என் இளம் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது

ஆனால்
வாழ்நாள் முழுக்க
என்னைப் பாதுகாத்தது என்னவோ
மாருதியின் பெண்கள்தான்.

துயில் கலைப்பவர்கள்

அலாரம் இருந்தாலும்
‘காலை ஆறு மணிக்கு
போன் செய்து கொஞ்சம் எழுப்பிவிடு’
என்று சொல்வதில்
ஒரு பிரியம் இருக்கிறது
கேட்கும் முதல் குரல்
நீயாக இருக்கவேண்டும் எனும்
விருப்பம் இருக்கிறது

ஆயினும் ஆறுமணிக்கு
உன் அலைபேசி ஒலித்தாலும்
உன்னைக் கனவுகண்டபடி
ஏழுமணிவரை தூங்குவேன்

எழுப்புவதற்கு யாருமற்ற காலங்களில்
கேட்பதற்கு முதல்குரல்களற்ற பருவங்களில்
அதிகாலை ஐந்து மணிக்கு எல்லாம்
விழிப்பு வந்துவிடுகிறது
அவ்வளவு தனிமையாய் விடியும் காலையை
நெடுநேரம் பார்த்துக்கொண்டேயிருப்பேன்.

இழக்க ஒன்று

நான் இல்லாவிட்டால்
உன் உலகத்தில்
ஒன்றுமே இல்லாமல்போகாது
என அறிந்துகொண்ட நாளில்
கொடியில் காய்ந்த
உன் ஆடை ஒன்றையும்
உன் முற்றத்தில்
அப்போதுதான் பூக்கத் தொடங்கியிருந்த
ரோஜா செடி ஒன்றையும்
எடுத்துக்கொண்டு போய்விட்டேன்

நான் இல்லாமல்போனதால்
உன் வாழ்க்கையில்
ஏதேனும் ஒன்றை நீ இழக்காவிட்டால்
இந்தக் காதலே அர்த்தமற்றதாகிவிடும் இல்லையா?

சைக்கிள் பழகுவது போன்றதுதான்

தலைவாருவதில்லை
சட்டைகள் தொளதொளவென்றிப்பதை
கவனிக்கவே இல்லை
முகத்தில் கருமை கூடிவிட்டது
விழிகள் எவர் விழிகளையும்
சந்திப்பதே இல்லை
நண்பர்களின் பெயர்கள்
மறந்து போகின்றன
கல்யாண வீடோ சாவு வீடோ
போகலாமா வேண்டாமா என
நூறு முறை யோசனைகள்
கெட்ட கனவுகள் இரவுகளை சூழ்ந்திருக்கின்றன
எதற்கென்று தெரியாத சஞ்சலங்கள்
அடுத்த வாக்கியம் பேசுகையில்
அதற்கு முந்தைய வாக்கியம்
மறந்துவிடுகிறது
நிலவைப் பார்த்தால் காரணமற்ற கண்ணீர்
மழையைப் பார்த்தால் காரணமற்ற கண்ணீர்
எவரிடமும் எதையும்
எதிர்பார்ப்பதை விட்டுவிட்டேன்

இந்த உலகின் அன்பின்மைகளை
ஏற்றுக்கொண்டு
வாழப் பழகிக்கொண்டிருக்கிறேன்
சைக்கிள் பழகுவதுபோல
ஆரம்பத்தில்
கொஞ்சம் பதற்றமாகத்தான் இருக்கிறது.

manushyaputhiran@gmail.com