1

இந்த நகரிலே பிறந்து வளர்ந்தும் இப்போதுதான் இங்கு வர வாய்த்திருக்கிறது என நினைத்தபடி கூட்டத்தில் கறுப்பு பைஜாமாவில் தோரணையாய் முன்சென்ற நண்பரைப் பின் தொடர்ந்தேன். இடக்கரத்தால் தன் ஒன்பது வயது மகனைப் பிடித்திருந்தவாறு முன்னேறிக்கொண்டிருந்தவர்,

‘கேபா, இதெல்லாம் கூட்டமே இல்ல. பத்து மணிக்கு மேல சேரும் பாருங்க, அப்பலாம் இப்படி நகரவே முடியாது. மவன் இல்லனா அந்த நேரத்துலே வந்துருக்கலாம்’ என்று சொல்லிவிட்டு என் பதிலுக்குக் காத்திருக்காமல் நடந்தார். தன்னுடன் மகனை அனுப்பி வைத்த மனைவியை நொந்திருக்கலாம். இருபுறமும் பிரகாசித்துக்கொண்டிருந்த அலங்கார விளக்குகள் நன்கு இருட்டியிருந்த பொழுதை வைகறை விடியல் போல் ஆக்கியிருந்தது.

நாலாபுறமிருந்தும் வெவ்வேறு மணத்திலான அத்தர் மணம் கமகமத்தது. அதே வாசனைகளின் கூட்டு நறுமணம் மயக்கடிப்பதைப் போல் அதீதமாகவும் இருந்தது. தஸ்பிஹ், கலிமா அட்டைகள், கருப்புக் கயிறுகள், குழந்தைகளுக்கான பொம்மைகள், அலங்காரப் பொருட்கள் எனத் தெருவின் இடப்புறமெங்கும் வியாபாரம் சூடு பிடித்துக்கொண்டிருந்தது. சூடான எண்ணெய்ச் சட்டியிலிட்டுப் பதம் குலையாமல் எடுக்கப்படும் ஜாங்கிரிகளும், ஜிகிர்தண்டாக்களும் எனப் பலகார குளிர்பான வகைகள் வலப்புறமெங்கும் தயாராகியிருந்தன. விதவிதமான மனிதர்களின் நடமாட்டங்களைக் கண்டு வெகு நாளாகியிருந்தது. கண்களில் சூர்மா மினுக்க ஆஜானுபாகுவான தோற்றத்துடன் கவர்ச்சிமிக்க ஆண்களும், கண் மட்டும் தெரிய தீராத் தேடலுடனும் உற்சாகத்துடனும் எதிர்ப்புறமிருந்து பிரதான சாலையை நோக்கி நகர்ந்துவரும் பெண்களும் என அவ்வளவு எளிதில் காணக் கிடைக்காத காட்சிகள். நிச்சயம் விழாக்கள் பெண்களுக்கு ஓர் ஆசுவாசம்தான். அவர்களது நடையிலே தற்காலிக அன்றாட விடுப்பின் பெருமூச்சினை உணர முடிந்தது. தர்காவை நெருங்க நெருங்க நெரிசல் இன்னும் அதிகமானது. அடுத்தவர் காலினை மிதிப்பது தவிர்க்கவே முடியாத சடங்காகியிருந்தது. முகப்பின் பக்கவாட்டிலிருந்த இரு தேநீர்க் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. முன்னும் பின்னும் நெருக்கிக் கொண்டு வந்த கும்பலில் பெரும் பகுதியினர் தர்காவினுள் நுழையவே இல்லை என்பதை உள்ளே பார்த்ததும் புரிந்தது.

திசைகள் கடந்து ஒரு வாதைக் காற்று. இனி ஒருக்காலும் நீ என்னைத் துன்புறுத்தவே கூடாது என்று கண்டித்திருந்த துன்பத்தின் அலைவுகள் மீண்டும் மனத்தை அழுத்தியது. புலமும் பொழுதும் அறுந்துவிட்ட அந்தரத்தின் பிடியில் சிக்குண்ட பெயரறியாத் துகளாய் இழுவிசையோடு உள் நகர்ந்தேன். யாரோ என்னைப் பார்ப்பது போலவும் பேசக் காத்திருப்பது போலவுமான உந்துதலோடு உறைந்து நின்றேன்.

ஹுசைன், ‘வாங்க கேபா, செருப்ப இங்கே விட்டுடாதீங்க. கொஞ்சம் தள்ளி வச்சிடலாம்’ என்று சொல்லவும் அவரைப் பின் தொடர்ந்தேன். தர்காவின் உள்ளே இடப்புறமிருந்த மொசைக் தளத்தில் தாங்கள் கொண்டு வந்திருந்த சால்வைகளையும் போர்வைகளையும் விரித்துக் குடும்பம் குடும்பமாய் மக்கள் அமர்ந்திருந்தனர். பெரியவர்களும் குழந்தைகளும் அவர்களிடமிருந்த பயணப் பைகளில் தலைசாய்த்துக் கண்ணசந்திருந்தனர். ஒருவரைச் சிறு மணமேடை போன்ற குறுமண்டபத்தில் மலர்த் தோரணங்களுக்கு மத்தியிலே அமர வைத்திருந்தனர். ‘அவர் இறைநேசரின் பரம்பரையில் வருபவர். அவர்களுக்கு இதுபோல் மரியாதை தருவது ஒரு சடங்கு’ என்றார் ஹுசைன். அங்கே அமர்ந்திருந்த நபரின் முகத்தில் அமைதியே இல்லாததுபோல் பட்டது. நடுப்பாதையை வேறுபடுத்திக் காட்டவென இருபுறமும் கைப்பிடிகள் அமைத்திருந்தனர். அதன் ஓரத்தில் செருப்பைக் கழற்றிவைத்த பின்புதான் வலப்பக்கத்தைக் கவனித்தேன். வரிசையாய் இருபுறமும் நாற்பதுக்கும் மேற்பட்ட ஃபக்கீர்கள் தாள மேளத்தோடு வரிசை கட்டி நின்றனர். அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சிறுவத்தில் கண்டிருந்த ஃபக்கீர்களை, பெருங்குழுவாய்க் கண்டுகொண்டும் வியப்பில் ஆழ முடியாதபடி வேதனை மூண்டு உறுத்தியது. என்னவென்று அர்த்தப்படுத்திக்கொள்ளமுடியாதபடி நண்பரது மகனின் விரல்களைப் பிடித்தவாறு முன்னேறினேன். அவனது ம்ருதுவான விரல்கள் சற்றே நிகழுக்கு மீள உதவின. ஆனாலும் மூல தளத்திற்குள் நுழைந்தும் இரத்தமுறிஞ்சும் சூக்கும வாதை முழுதும் விடாதிருந்தது. ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா நத்ஹர்வலியுல்லாஹ் (ரலி) அவர்களின் 1026ஆம் ஆண்டு கந்தூரி சந்தனக்கூடு உரூஸ் நிகழ்வன்று அங்கே நின்றுகொண்டிருப்பது அர்த்தமின்மைகளை அர்த்தங்களாக்கி விடையாகியிருந்தவற்றைக் கேள்விகளாக்கும் கைக்கெட்டா விளையாட்டு போலிருந்தது.

‘தம்பீ… தம்பி கேபா. ஹலோ’

‘மன்னிச்சிக்கோங்க, கவனிக்கல. சொல்லுங்க ஹுசைன்!

‘ஏதோ சிந்தனைல மூழ்கிட்டீங்கபோல. இது சிந்தனைகளக் கொஞ்ச நேரமாவது விட்டெறிஞ்சிட்டு அமைதிய தரிசிக்கிற நேரமாச்சே. 1026ஆவது கந்தூரி இது. உங்களுக்கும் இப்ப 26தானே. எல்லாம் அவன் முன்னமே முடிஞ்சு வச்சிருக்க கணக்குத்தான்னாலும் இதுமாதிரி சின்னச் சின்ன ரிலேட்னஸை நினைக்கும்போது புல்லரிப்பாத்தான் இருக்குதுல’ என்றார்.

இந்த எண் விளையாட்டு பிடித்திருந்தது. எண்களைவிடப் புதிர்த்தன்மையைப் பெருக்கிக்காட்டக்கூடிய ஒன்று வேறென்ன உள்ளது. எண்களை எப்படித்தான் தர்க்கத்தின் மையம் என்கிறார்களோ தெரியவில்லை. தர்க்கத்துக்கும் விளக்கத்திற்குள் வராத, வரையறையில்லாத இன்ஃபைனைட்டின் பகுதிதான் உதவுகிறது. ஒருவேளை வரையறையில்லாததும் ஒரு வரையறைதானோ. இறைவன் அறிதலுக்கு அப்பாலானவன் என்று குறிப்பிடுவதும்கூட அறிதலின் சட்டகத்துள் புதைப்பதுதானோ என்று தோன்றியதை விழுங்கியவனாகப் புன்னகைத்தபடி அவரைத் தொடர்ந்து நெரிசலில் ஊர்ந்தேன். முழங்காலில் நின்றுகொண்டிருந்த பெரியவருடன் நல்ல நெருக்கம் என்பதை அவர்கள் பேசிக்கொண்டிருந்ததைப் பார்க்கையில் புரிந்தது. அவருக்குத் தன் பையிலிருந்து நூறு ரூபாய்த் தாளினைக் கொடுத்துவிட்டு என்னை இன்னும் நெருங்கி வருமாறு அழைத்தார்.

‘என்னங்க ஹுசைன்?’

‘இதோ அந்த ஐயாவுக்குப் பின்னாடி இருக்குதில்லயா இடம்! அங்கதான் நாகூர் ஆண்டகை நாற்பது நாள் தியானம் இருந்து பாதுஷாவோட தரிசனம் பெற்று, நாகூருக்குப் போகணும்னு வழிகாட்டல் பெற்றாங்க’ என்றார். அந்தக் காலிச் சதுரத்தையே பார்த்தேன். ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் ஒருவர் விடாப்பிடியாய் வழிகாட்ட வேண்டி அமர்ந்தவிடம் எவ்வித பூசுதல்களுமின்றிச் சாதாரணமாய்ப் பட்டது. அல்லது பார்ப்பவர் கண்களுக்கு அதன் முக்கியத்துவமும் அழகியலும் வெளிப்படுதலில் வேறுபாடுகள் இருக்கலாம். ஓர் இடம் என்பதைவிட, யார்? எதற்கு? எதனால் அப்படி விடாப்பிடியாய் வேர்பிடித்து அமர்ந்திருப்பார்கள்? என்ற கேள்விகளுக்கான பதிலில்தான் இரகசியம் இருப்பதாய்ப்பட்டது. நான் இங்கே தரித்திருந்த ஆண்டகையைப் போலவோ பாலைவனச் சர்ப்பங்களை இருக்கைகளாக்கி ஊன்றியிருந்த இயேசுவைப் போலவோ நாட்கணக்கில் எதற்காகவேனும் பொழுதுகள் மறந்து காத்திருக்க முடியுமா? என்று யோசித்துப் பார்த்தேன். தூசுக் காற்றுக்கு மூடிக்கொள்ளும் இமைகளைப் போல் உடனே பதிலடைந்தும் அதைச் சிந்தியாது அடக்க அறைக்குள் நுழைந்தேன்.

நடுவிலே ஆண்டகையோடு மேலும் சில அடக்கங்களும் அதற்கு முன்னே ஒரு அடக்கமும் அதையொட்டி கிளி ஓவியம் தீட்டப்பட்ட மற்றொரு சிறிய அடக்கமும் இருந்தன. மைய அடக்கத்தைப் பூக்களால் பிரம்மாண்டமாய் அலங்கரித்திருந்தனர். சுற்றிலும் தோரணைகளாய் மல்லிகைப் பூக்களும் ரோஜாக்களும் தொங்கிக்கொண்டிருந்தன. அடக்கத்தைச் சுற்றி நடக்க மட்டுமே பாதையுள்ளது என்னும் அளவுக்கு  நம்பிக்கையாளர்கள் சுற்றிலும் அமர்ந்திருந்தனர். கிளி சமாதியுடன் இருந்த அடக்கத்தின் அருகிலே நான் நின்றுகொண்டிருப்பதைக் கவனித்த ஹுசைன்,

‘அது மாமாவுடையது’ என்றார்.

‘அப்படினா?’ என்றேன் மேலே அப்பெயர் (மாமா ஜிகினி) குறிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தவாறு.

‘மாமானா அம்மா, அப்பறம் அங்க ஜிகினினு எழுதிருக்குல அதை அப்படியே வாசிக்கக்கூடாது அது ‘ஜுக்னி’. அதுக்குப் ‘பெண் மின்மினிப் பூச்சி’னு அர்த்தம். அதாவது மின்மினிப்பூச்சிகள் தாய்ங்கிறது அவங்க பேரு. அவங்க எப்பவுமே மின்மினிப்பூச்சிகளைத் துரத்தி விளையாட்டிட்டு இருப்பாங்களாம் அதுனால இப்படி பேருனு சொல்லுவாங்க’ என்றார். அவ்வப்போது கதையை நான் பின்தொடரும் தலையாட்டல்களை ஏற்றபடி.

‘இன்னொன்னு தெரியுமா?’ என்றார்.

‘என்னங்க ஹுசைன்!’

‘அவங்க குந்தவை நாச்சியார்னு ஒரு மாற்று வரலாறு இருக்கு. பாதுகாப்புக்காகக் குழந்தையா இருக்கப்பவே இங்க ஒப்படைச்சிட்டாங்களாம். வளர்ந்தும் இங்கேயே இருந்துட்டதா சொல்லுவாங்க’ என்றார்.

அது சட்டென விழிப்பைப் பரிசளிக்கும் அதிர்ச்சிகர கனவைப் போலிருந்தாலும் அதற்குமேல் வரலாறு குறித்தெல்லாம் என்னால் சிந்திக்க முடியவில்லை. அந்த ஒருகணம் ‘ஆமீனா… ஆமீ’ என்ற பெயரும் அப்பெயருக்குப் பொருத்தமான அழகிய அவள் முகமும்தான் நினைவைக் கவர்ந்துகொண்டன. அரைச் சுற்றுக்குப் பின் ஓர் மூலையில் சுவரை ஒட்டி அமர்ந்துகொள்ள நகர்ந்தோம். மயிலிறகினால் என் தலையில் தடவியும் ஓதியும் அமர வைத்த பெரியவரின் பின்புறம் இருந்த மூன்று அடி உயரமும் இரண்டடி அகலமும் கொண்ட பழம் அரேபியிலிருந்த பாதுஷாவின் திருக்குரான் கண்ணில் பட்டது. மெல்லமாய்ச் சுவரில் சாய்ந்து என் இருப்பைப் போர்த்திக்கொண்டவாறு அடங்கினேன். ஹுசைன் தனது பைஜாமாவில் வைத்திருந்த தொப்பியை மாட்டிக்கொண்டு ஜன்னல் திட்டில் வைக்கப்பட்டிருந்த குரானின் சில அத்தியாயங்களைக் கொண்ட நூல்களில் இரண்டை எடுத்துத் தன் மகனுக்கு ஒன்றை அளித்துவிட்டுத் தாமும் ஓதத் தொடங்கினார்.

 

2

அன்று ஆமீனா ரோஸ் நிறச் சுடிதாரில் டியூசனுக்கு வந்திருந்தாள். நாளையிலிருந்து அக்காவும் வருவாள் என ஒரு வாரமாய்ச் சொல்லிக்கொண்டிருந்த ஃபாயிதாவும் அவளைத் தொடர்ந்து அறையினுள் நுழைந்தாள். டியூசன் ஆண்ட்டி, ‘வா மா’ என அழைத்து அவளுக்குக் கணிதத்தில் என்னென்ன பிரச்சனைகள்? எனக் கேட்டுக்கொண்டு தினமும் வர வேண்டும் எனச் சொல்லி அமரச் சொன்னார். இயல்பாகவே பெண்களது பக்கம் நிலைக் குத்தும் கண்களைக் கொண்ட பருவம் என்பதால் அவள் வந்த பின் வேறு பக்கம் விழி திருப்பவே இல்லை. புத்தகம்கூட விரலால் பக்கங்களைத் திருப்புவதற்காகத்தான் உள்ளது என்றாகிப்போனது. பார்வையே அவளை ரசிக்கத்தான் என்ற உணர்வை அப்போது யார் தவறென்று சுட்டியிருந்தாலும் மறுக்கவே செய்திருப்பேன். அதில் இச்சை இருந்ததாக நினைப்பில்லை. இச்சையில்லாது பெண் ஈர்ப்பு இல்லை என்றாலும் நேரடியான ஆசையோ உடல் விழைவோ இருந்ததெனச் சொல்லுவதற்கில்லை. அவள் எனக்குத்தான் என்ற தீவிரமான சிந்தை பார்த்த ஓரிரு நாட்களிலே வேரூன்றிவிட்டது. இயல்பிலே பெண்களோடு ஆண் நண்பர்களுடன் சகஜமாய்ப் பேசுவதைப்போல் பழகும் இயல்புகொண்டவன் என்பதால் ஆமீனாவோடு நட்பாக அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளவில்லை.

தினமும் புதுப்புது வண்ணச் சுடிதாரில் வருவாள். எந்த ஓர் ஆடையும் இதை இவள் முன்பே அணிந்திருக்கிறாளே என்ற உணர்வைத் தந்ததே இல்லை. பெரும்பாலும் கூந்தலைப் பின்னாமல்தான் வருவாள். புர்காவைக் கழற்றியப் பின் தனது ஷாலினால் கூந்தலைச் சுற்றி அமர்வதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கும். மிகச்சிறிய அளவில் ஒரு ஐஸ்க்ரீம் ஸ்கூப்பின் சுவடுபோல், முதல் பிறை சுழிப்பைப் போல், உடைந்திருக்கும் மேலடுக்கின் முன் பல்லில் அவளது சிரிப்பின் மொத்த அழகும் குடிகொண்டிருந்தது. அப்படிப் பல்லிருப்பதைச் சிதைவு என்றும் அசிங்கம் என்றும் நினைத்திருப்பாள் போல சிரிக்கும்போதெல்லாம் அனிச்சையாய் அவளது கைகள் வாயை மூடிக்கொள்ளத் திரண்டுவிடும். அதையும் மீறிச் சில கணங்களில் பிரகாசிக்கும் அப்பிறைச் சிரிப்பைக் காணவே அவளைச் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பேன். உண்மையிலே பகடி செய்யத்தான் அதிகக் கூருணர்வும் மொழி லயமும் தேவைப்படுகிறது. அதுநாள்வரை எங்கிருந்து வந்தது இத்தனை ஹாஸ்யம் என்று பீதிகொள்ளுமளவு என் பேச்சில் சரளமாய்க் கலாய்ப்புகள் நிறைந்திருந்தன. யாருமே சிரிக்காதுபோகும் தருணங்களிலும் அவள் சிரித்தாள். எனக்காய்ச் சிரித்தாள்.

ஆண்ட்டி இல்லாத சமயங்களில் என் தோளில் அறைந்தும் உள்ளங்கையைத் தட்டியும் சிரித்தாள். நெருங்கி அமர்ந்திருப்பதும் தோள் உரசச் சாய்ந்திருப்பதும் சகஜமாகிப் போனது. அவளது உள்ளங்காலைக் கழுத்துறம் விழாதபடி குழந்தையைத் தூக்கும் ஜாக்கிரதையுடன் மெதுவாய் உள்ளங்கையில் வைத்துப் பார்ப்பேன். அவள் கண்ணில் அப்போது கசியும் அன்பைக் காதலென்ற சொல்லுக்குள் சுருக்கிவிட முடியுமா என்று தெரியவில்லை. யாருக்குமே எங்கள் நெருக்கம் தவறாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன். அவள் பன்னிரண்டாவது, நான் பத்தாவது என்பதால் இருக்கலாம். முன்னமே பிறந்திருந்திருந்தால் இன்னும் குரல் கட்டையாக உடைந்திருக்கும். மாரில் ரோமங்கள் அடர்த்தியாய் வளர்ந்திருக்கும். நன்கு திரண்ட புஜங்கள் வாய்த்திருக்கும் என யோசித்துக்கொண்டே இருந்தேன். எல்லாவற்றையும் விட ஒரே பள்ளி என்பதால் அவள் வகுப்பிலே அவளுடனே சேர்ந்து படித்திருப்பேனே என்ற நினைப்பு அதிகமாய் இருந்தது.

ஒருநாள் இரவு எட்டுமணியளவில் டியூசன் ஆண்ட்டியின் நர்சரி படிக்கும் இளைய மகளின் பிறந்தநாளுக்குக் கேக் வெட்டிவிட்டு இடத்தைக் காலி செய்கையில் நானும் ஆமீயும்தான் இறுதியில் வெளியே வந்தோம். வீட்டிலிருந்து வாசலுக்கு வரும் இடைவெளியில் சிறு தோட்டமிருக்கும். மாடியிலிருந்து கசியும் விளக்கின் வெளிச்சம் மிக லேசாகக் கீழே வழிவதைத் தவிர அங்கு வேறு வெளிச்சம் இல்லை. கைகளைக் கோர்த்தபடி வெளியேறிய நான், அவள் ‘நாளைக்குப் பாக்கலாம் கேபா’ என விடைபெற்றுக்கொள்ள முயல்கையில் ஆசையாய்த் தழுவிக்கொண்டேன். அவளுமே அத்தருணத்தை நேசித்தவளாய் அமைதியாய்த் தனது இடக்கை என் முதுகில் படர நின்றாள். பத்து விநாடிகளே நீடித்த இறுக்கம். அந்த நொடி அதுவரை நாங்களாய் எங்களுக்குள் உருவாக்கி வைத்திருந்த கட்டுகளையெல்லாம் தளர்த்திவிட்டிருந்ததென நினைக்கிறேன். நான் அவளது கூந்தல் மணத்தையும் சருமத்தின் பளபளப்பையும் உணர்ந்ததுபோல் அவளும் என்னுடலின் சில அசைவுகளை, வாசனையை, துளிர்ப்பை உணர்ந்திருக்கலாம். யாரும் பார்க்கவில்லை என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு என் கன்னத்தில் அரை நொடி வேகத்தில் முத்தம் தந்துவிட்டு நகர்ந்தாள். தோட்டத்தின் பூக்களிடமிருந்து தப்பிய வண்ணத்துப்பூச்சியைப் பிடிக்க முயன்ற மின்மினியாய்ச் சுழன்றபடி என்னைப் பார்த்துப் புன்னகைத்தவாறு வாசலுக்குச் சென்றாள். அன்றுமட்டும் அந்த நொடி மட்டும் எங்கள் அணைப்பை மட்டும் ஃபாயிதாவின் கண்கள் காணாதிருந்தால் என்றுமே அந்த அணைப்பிற்குச் சொந்தமானவனாகும்படி வாழ்வை வடிவமைத்திருக்கலாம்.

3

மலைக்கோட்டை உச்சிப் பள்ளியின் தியான பீடத்திலிருந்து நத்தர் வலியுல்லாஹ் விட்டெறிந்த செங்கோல் என் மார்பைப் பிளந்து நிலத்தில் ஊன்றியது போல் விழிப்புற்றேன். நெற்றியெல்லாம் வியர்வை முத்துகள் அரும்பியிருந்தன. அவற்றைக் கைக்குட்டையால் துடைக்கவும் ஹுசைன் போகலாமா என நூல்களை ஜன்னல் திட்டில் வைக்கவும் சரியாய் இருந்தது. ஆண்டகையின் அடக்கத்தில் கைவைக்க வேண்டுமென விரும்பிய மகனிடம் அப்புறம் வரலாம் என்று சொல்லியபடி வெளியே நகர்த்தினார். நான் அவருக்கு முன்பே உஷ்ணம் தாளாது வெளியேறியிருந்தேன். இன்னுமா அவள் பற்றிய நினைவுகளும் அவளது கூந்தல் மணமும் என்னைவிட்டு அகலாமல் இருக்கின்றன என ஆச்சர்யமாக இருந்தது. முன்னெப்போதைவிடவும் அவளைப் பார்க்க வேண்டும் என்ற அரித்தல் என்னைச் செதில் செதிலாய் உதிர்க்கத் தொடங்கியது. ஒரு வழிகாட்டுதலின் ஒளி எனக்கென நிழலிட்டதைப் போல் ஒவ்வொரு அசைவிலும் நான் என்ன செய்ய வேண்டுமென்ற துலக்கம் தெளிவானது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் மாறியிருந்த செருப்புகளை உடனே அடையாளம் கண்டுகொண்டேன். அத்தனைக் கூட்டத்திலும் யாருடைய வஸ்திரத்தின் நுனியையும் உரசாத நடை வெளி எனக்கென ஒதுக்கப்பட்டிருந்தது. தர்காவை விட்டு வெளியேறி சாலையை அடைவதற்கான வீதியில் நடக்கத் தொடங்கினேன். இரண்டடி இடைவெளியில் ஹுசைனும் அவரது மகன் நியாஸும் என்னைப் பின்தொடர்வதை உணரமுடிந்தது. எதிரே நான் பார்க்க வேண்டுமா? அல்லது தெரியாததைப் போல் கடந்துசெல்ல வேண்டுமா? என யோசிக்கவிடாது செய்யும் ஒரு முகம், கையில் ஒரு பெண் குழந்தையுடன் என்னை நெருங்கி வந்தது.

‘நீ கேபாதானே. என்னத் தெரியுதாடா?’ எனக் கண்கள் விரிய கேட்டவளிடம் இனியென்ன தப்பிக்க முயல்வதென,

‘கேபாவேதான் ஃபாயிதா. எப்படி இருக்கீங்க எல்லாரும்’ என அவள் பெயரை வாயெடுக்க முயன்று நிறுத்தியதை உணர்ந்தவள்,

‘எல்லாரும் நல்லாருக்கோம் கேபா. ஆமீனா உன்னைப் பத்தி எப்பவாது விசாரிப்பா. நீதான் சென்னைக்குப் படிக்க போயிட்டியாமே, வேற தகவலே இல்ல. இதோ இவதான் அக்கா குழந்தை அனீஷா!’ எனச் சுட்டியவளைப் பார்த்தேன். ஆமீனாவைப் போலவே சாந்தம் நிறைந்த முகம். கைகளைச் சீண்டி அவள் சிரிப்பை அடையாளங்காண முயன்றேன். இல்லை அந்தப் பிறைப் பல் இவளிடம் இல்லை. அவளைப் போல் எந்தவொரு நகலையும் செய்துவிட முடியாது. கன்னங்களிலும் நெற்றியிலும் இடப்பட்டிருந்த மையில் கிள்ளி முத்தமிட்டேன். தன் சித்தியின் முதுகில் பதிய தன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

‘ஆமீ தர்கா வாசல் பக்கத்துலதான் அப்பா அம்மாவோட இருந்தாளே! நீ பாத்தீயா கேபா?’

‘இல்லை. பார்த்ததா நினைப்பில்ல’ என்றேன்.

அவளால் வா பார்க்கலாம் என்று கூப்பிட முடியாதெனத் தெரியும். சங்கடப்பட்டு நின்று கொண்டிருந்தவளிடம் அனீஷாவைச் சுட்டி, ‘அதான் இந்தச் செல்லத்தைப் பார்த்துட்டேனே. நான் பாப்பாவைப் பார்த்ததா ஆமீனாகிட்ட சொல்லாத ஃபாயிதா’ என்று விடைபெற்றுக்கொண்டேன். ஏதோ கேட்க நினைத்துக் கேட்காமல் தலையசைத்த ஹுசைனின் தோள்தனில் தட்டிவிட்டு நடந்தேன். என் முன்னே நூறு அனீஷாக்கள் கிளிகளைப்போல் சுழன்றபடி துரத்த அவர்களால் பிடிக்கமுடியா மாயப்பூச்சியாய் வளையவும் மிதக்கவுமாய் ஒளிந்தேன்.