துகில்

நான் கேட்டிருக்கிறேன்
நிறைய தீனக்குரல்களை
வதைமுகாம்களின் குரல்களை
காப்பற்ற யாரும்வராத அழுகுரல்களை

நான் படித்திருக்கிறேன்
கத்திமுனையிலோ
துப்பாக்கி முனையிலோ
ஒரு நிர்வாணப்புகைப்படத்தைக் காட்டியோ
செய்யப்பட்ட வன்புணர்ச்சிகளை

நான் கேள்விப்பட்டிருக்கிறேன்
உயிரற்ற உடல்களின்மீது
பிணவறையில் காமம் துய்ப்பவர்களை

இன்று வேறொரு குரலைக் கேட்டேன்
“அண்ணா நம்பித்தானே வந்தேன்
பெல்ட்டால் அடிக்காதீர்கள்
நானே கழற்றி விடுகிறேன்”

அந்த தீனக்குரல்
என் தலைக்குள் ஒரு பிசாசைப்போல இறங்குகிறது
அதை என்னால் உதற முடியவில்லை
அது என் இதயத்தின் ஆழத்தில்
ஒரு பாம்பைப்போல ஊர்ந்து செல்கிறது
அந்தக் குரல் என் நெருங்கிய சிநேகிதியின்
குரல்போல இருந்தது
அது யாரோ ஒருவரின்
மகளின் குரல் என்பதை நினைக்கும்போது
என் தொண்டை வலிக்க ஆரம்பிக்கிறது.

ஒரு சிறு பெண்
ஒரு மனிதனை எவ்வளவு
அழகாக நம்புகிறாள்
தனது வீட்டிலிருக்கும் உணவை
எவ்வளவு பிரியத்தோடு எடுத்து வருகிறாள்
தன் மேல் காட்டப்படும் சிறிய அக்கறையை
தனக்கு அளிக்கப்படும் சிறிய பரிசை
அவ்வளவு உவகையோடு ஏற்றுக்கொள்கிறாள்

அந்த மனிதன் அவளை
மறைவிடத்திற்கு அழைத்துச் செல்கிறான்
ஒரு பறவையை
தானியங்களை இறைத்து
வலையை நோக்கி அழைத்துவருவதுபோல
ஒரு எலிப்பொறியில்
ஒரு சிறிய கருவாட்டுத்துண்டை வைப்பதுபோல…
அன்பு, நட்பு, காதல் என்பவை
நம் காலத்தில் எவ்வளவு
எளிய உதாரணங்களாகிவிட்டன

பிறகு
அவளை யாரிடமோ ஒப்படைக்கிறான்
ஆடைகளைக் கழற்றும்படி பெல்ட்டால் அடிக்கிறான்
அந்தப் பெண் அடிவாங்கி பழக்கமில்லாதவளாக
இருக்க வேண்டும்
அடிதாங்க அவளுக்கு பயிற்சி இல்லாமல் இருக்கவேண்டும்

எந்த ஒரு மிருகமும்
தனது இரையை
இத்தனை குரூரத்தோடு வேட்டையாடுவதில்லை

சித்ரவதையின் மூலம்
ஒருவரைக் காட்டிக்கொடுக்கச் செய்வதைவிட துயரமானது
சித்ரவதையின் மூலம்
ஒருவரை தன்னைத்தானே நிர்வாணமாக்கிக்கொள்ளச் செய்வது
இது நிகழ்கிறது
இதை நாம் சிந்தித்துக்கொண்டிருக்கும்
இக்கணத்திலும்
வேறெங்கோ இடையறாது நிகழ்கிறது
வரலாற்றில் இதற்கு முன்பும்
இப்படித்தான் நிகழ்ந்தது

இதற்குப் பின்னும் அப்படித்தான் நிகழும்
பாஞ்சாலிக்கு ஒருமுறை நிகழ்ந்த அற்புதம்
பிறகு ஒருபோதும் நிகழவே இல்லை

தீனக்குரல்களுக்கு நம்மிடம் பதில் இல்லை
அபயக்குரல்கள் எந்த நேரம்
எந்த வீட்டிலிருந்து ஒலிக்குமென
நமக்குத் தெரியாது

நாளை நமக்கு வேறு பிரச்சினைகள் வந்துவிடும்
தன் பெயர் வெளியே வந்துவிடக்கூடாது என
கண்ணீருடன் சில பெண்கள்
பிரார்த்தனை செய்துகொண்டிருப்பார்கள்
இந்த இரவு
ஒரு பிசாசைப்போல
என் தலைக்குள் இறங்கிக்கொண்டிருக்கிறது

நம் காலத்துக் குதிரைகள்

இன்று காலை
மாநகராட்சி குப்பைத் தொட்டியில்
மேய்ந்துகொண்டிருந்த
இரண்டு குதிரைகளைக்கண்டேன்

சாப்பாடு கட்டிவந்த இலைகள்
அழுகிய முட்டைக்கோஸ்கள்
கழித்துப்போட்ட காய்கறி மிச்சங்களென
எதை எதையோ தேடி உண்டுகொண்டிருந்தன
நிரம்பி வழிந்த குப்பைத்தொட்டியிலிருந்து
உபயோகித்த நாப்கின்கள்
காலி பீர்பாட்டில்கள்

குதிரைகளின் முகத்தில் உரசி
தரையில் சரிகின்றன
குதிரை என்றால் வேகம்
குதிரை என்றால் வேட்டை
குதிரை என்றால் யுத்தம்
குதிரை என்றால் தீரம்
குதிரை என்றால் சாகசம்
குதிரை என்றால் ஆற்றல்
குதிரை என்றால் காமம்
குதிரை என்றால் நெருப்பு
குதிரை என்றால் மின்னல்
குதிரை என்றால் காடு
குதிரை என்றால் பந்ததயம்
குதிரை என்றால் ஓட்டம்
குதிரை என்றால் கம்பீரம்

மாநகராட்சி குப்பைத்தொட்டியில்
கைவிடப்பட்ட இரண்டு குதிரைகள்
பசியுடன் மேய்ந்துகொண்டிருக்கின்றன
பசி ஒரு குதிரையின் மனதை மாற்றிவிடுகிறது
ஆனால் அதன் உடலை மாற்றமுடிவதில்லை

குதிரைகளுக்கு
மூதாதையர்கள் குறித்த நினைவுகள் இல்லை
இறந்த காலம் குறித்த ஏக்கங்கள் இல்லை
தன்னைக் கைவிட்டவர்கள் குறித்த புகார்கள் இல்லை
முக்கியமாக தான் ஒரு குதிரை என்பதை
அவை நினைவில் வைத்துக்கொள்வதில்லை

என்னைப்போல
இப்படி ஒரு காலத்தில்
இப்படிப்பட்ட சமரசங்களுடன் வாழ்வது குறித்து
அவற்றிற்கு எந்த சுயநிந்தனையும் இல்லை

மாநகராட்சி குப்பைத்தொட்டியில்
மேயும் குதிரைகள்
ஒரு புல்வெளியில் மேயும்
அதே நிச்சலத்துடன் மேய்ந்துகொண்டிருக்கின்றன

கண் தெரியாத யானைக்கு பியானோ வாசிப்பவன்

பியானிஸ்ட் பால் பர்டன்
கண் தெரியாத குழந்தைகளுக்கு
பியானோ வாசிப்பவனாக இருந்தான்
அவன் பியானோவின் மூலம்
பார்வையற்ற குழந்தைகளின் இதயத்தில்
பார்வையுள்ள கண்களுக்கும் தெரியாத
பிரத்யேக பிம்பங்களை உருவாக்கினான்

பிறகு ஒருநாள் சாகசங்கள் செய்ய விரும்பி
நீண்ட தூரம் பயணம் செய்தான்
சாகசங்களுக்கு மாறாக
காயம்பட்ட யானைகளை புனரமைக்கும்
பேரன்பிற்கு தன்னை ஆட்படுத்திக்கொண்டான்
அப்போதுதான் ஒரு வினோத எண்ணம்
அவனை ஆட்கொண்டது
அது கண் தெரியாத யானைக்கு
பியானோ வாசிப்பதென்பது
அவன் அதைப்சோதித்துப்பார்க்க விரும்பினான்

ஒரு கண் தெரியாத யானைக்குள்
ஒரு பியானோ இசை என்ன செய்யுமென்று
யானை ஒரு சிந்திக்கும் மிருகம் என்பதால்
அவனுக்கு முழு நம்பிக்கை இருந்தது

யானைக்கு
என்ன இசைபிடிக்கும் என்று யோசித்தவன்
கடைசியில் மிகச்சரியாக
பீத்தோவனின் சிம்பனியை
சோதனைரீதியில் இசைக்கத்தொடங்கினான்
அதைக்கேட்கத் தொடங்கிய
ஒரு பெண் யானை
தான் உண்டுகொண்டிருந்த உணவைக் கைவிட்டுவிட்டு
அவனையே உற்றுப்பார்க்கத் தொடங்கியது

பிறகு அவன் ‘மஞ்சள் மலர்களாலான மரம்‘
என்ற பெயர்கொண்ட
பார்வையற்ற வயதான யானைக்கு
பீத்தோவனின் சிம்பனியை வாசித்துக்காட்டினான்
மென்மையான
மனிதர்களால் காலம் காலமாகக் கேட்கப்பட்ட
அந்த இசையை
அவன் மலையடிவாரத்தில் யானைக்கு
இசைத்துக் காட்டினான்
வாழ்நாளில் பெரும்பகுதி
இருட்டைத்தவிர வேறு எதையும்
பார்த்தறியாத யானை
முதன் முதலாக ஒரு இசையைக் கேட்கிறது
அது பால் பர்டனை நெருங்கி வந்து நின்றுகொண்டது
பியானோ ஒலிக்க ஒலிக்க
அதன் தும்பிக்கை
தரையில் முளைத்திருந்த முள்ளின்மேல்
புரண்டுகொண்டே இருந்தது
சற்று நேரத்தில் அதுவும் நின்றுவிட்டது
பார்வையற்ற யானை
கல்யானைபோல அங்கேயே உறைந்துவிட்டது
அதன் பாழடைந்த கண்கள்
உணர்ச்சிப்பெருக்கில் துடித்தன

பால் பர்டன் ஒரு கண் தெரியாத யானையை
பியானோ இசைக்குப் பழக்குவதன் மூலமாக
யானையை ஒரு மிருதுவான சிறிய விலங்காக
மாற்றிக்கொண்டிருந்தான்

ஒரு கண் தெரியாத மனிதனிடம்
ஒருவர் தன் காதலைத் தெரிவிப்பதுபோன்றதுதான் இல்லையா
ஒரு கண்தெரியாத யானைக்கு
பியானோவை இசைப்பது

கண் தெரியாத ஒரு யானையும்
கண் தெரியாத ஒரு மனிதனும்
அவர்கள் இப்படியாக
எந்தப் பக்கம் நகர்வது
என்ற குழப்பத்திலிருந்து
தற்காலிகமாக விடுபடுகிறார்கள்

கண்ணீருக்குப் பின்

கண்ணீருக்குப் பின்
நான் அப்போதுதான் மலர்ந்த மலர் போல ஆகிவிட்டேன்
இது தெரிந்திருந்தால்
எப்போதோ அழுதிருக்கலாம்
இன்னொரு நாள் என்பது

விடியல் என்பது என்ன
ஒரு மாபெரும் நாளின் உதயமன்று

அது மற்றுமொரு நாளில்
உனக்கான காத்திருப்பு
உன் முகம் காணுதல்
உன் சொல் கேட்டு விம்முதல்
உன் முதல் அணைப்பு
உன் முதல் முத்தம்

விடியல் என்பது
இருள் விலகும் நேரமன்று
உன்னையும் என்னையும் பிரிக்கும்
இந்த உறக்கத்தின் சுவர் நீங்கும் தருணம்

மேலும் உனக்கு
நான் இன்னொரு நாள் இருக்கிறேன்
எனும் நிம்மதி

அப்பா வந்திருந்தார்

நேற்றிரவு ஒரு கனவு கண்டேன்
இறந்து ஏழாண்டுகளுக்குப் பிறகு என் தந்தை
முதல் முறை கனவில் வந்தார்
அப்போதுதான் எங்கள் பூர்வீக வீட்டை
எங்களுக்குத் தெரியாமல்
எங்கள் தந்தை வாங்கிய கடனுக்காக
ஜப்தி செய்ய ஆட்கள் வந்து அமர்ந்திருந்தார்கள்
யாரோ ஒருவன் என் கட்டிலைக்
கழற்றிக்கொண்டிருந்தான்
இன்னொருவன் என் புத்தகங்களை
அள்ளி எறிந்துகொண்டிருந்தான்
நான் சில ரகசிய ஆவணங்களை
மறைப்பதற்காகப் போராடிக்கொண்டிருந்தேன்
அதில் நான் இழந்த காதலின்
கடிதங்களும் இருந்தன
“இவ்வளவு நாள் எங்கே போயிருந்தீர்கள்
உங்களை எங்கெல்லாம் தேடுவது?” என்றேன்
பதில் சொல்லாமல் முகத்தை திருப்பிக்கொண்டார்

ஜப்தி செய்ய வந்தவர்கள்
சீக்கிரம் வெளியே போகும்படி அதட்டினார்கள்
“ஏன் இப்படிச் செய்தீர்கள்?” என்றேன்
என் தகப்பனிடம்
அம்மா மூலையில் அமர்ந்து
அழுதுகொண்டிருந்தாள்
“போடா போய் பிச்சை எடு..” என்று கத்தினார்

திடுக்கிட்டு விழித்தபோதுதான்
நினைவுக்கு வந்தது
அம்மா, அப்பா இருவருமே
இறந்துவிட்டார்கள் என்று
இறந்தவர்கள் அனைவருமே என்னிடம்
கோபமும் வருத்தமுமாகத்தான் நடந்துகொள்கிறார்கள்

இன்று முழுக்க நினைத்துக்கொண்டிருக்கிறேன்
அப்பா ஏன் இவ்வளவு துரும்பாக
இளைத்துப் போயிருந்தார் என்று
மேலும் அவரை சாவுக்குப் பின்
யாருமே பார்த்துக்கொள்ளவில்லையா என
மனமுடைந்து போகிறேன்

எதிர்ப்பின் வடிவங்கள்

புலரியிலிருந்து
அந்திவரை
இருந்த இடத்தைவிட்டு
அசையாமல் வேலை செய்துகொண்டேயிருந்தேன்

ஏதோ ஒரு கணம்
இதற்குத்தான் நம்மை நேர்ந்துவிட்டிருக்கிறார்களாயென
ஒரு ஆத்திரம் பொங்கியது

பழம் நறுக்க வைத்திருந்த கத்தியை எடுத்து
லேசாக என் சருமத்தில் கீறினேன்
ஒரு ரத்தக்கோடு துளிர்த்தது
நெஞ்சில் ஏதோ ஒரு நிம்மதி

அப்புறம் வேலைகளில்
மறுபடி மூழ்கிப்போனேன்

இறந்தவனுடனான சமாதானம்

என்னை மனதார வெறுத்த ஒருவன்
திடீரென இறக்கிறான்
எனக்கு எப்படி
நடந்துகொள்ளவேண்டுமெனத் தெரியவில்லை
நான் என்ன செய்தாலும்
அது மிகையாகவோ
பொய்யாகவோ
தோற்றம் கொள்கிறது

இறந்தவனோடு
சமாதானம் செய்துகொள்ள
ஏதேனும் வழி இருக்கிறதா நண்பர்களே?

கவிஞர்கள் உண்மையாகவே இறக்கிறார்கள்

‘கவிஞர்கள் இறப்பார்கள்
அவர்கள் சொற்கள் இறப்பதில்லை’
என்ற கட்டுக்கதையை நம்பி
இன்னும் எத்தனை கவிஞர்கள்
அகாலத்தில் இறப்பார்கள்?

அப்படி
நம்ப வைக்காதீர்கள்
நான் இறக்கும்போது
என்னுள் ததும்பும்
என் சொற்கள் இறக்கின்றன
என் காதல் இறக்கிறது
என் நினைவுகள் இறக்கின்றன
என் ருசிகள் இறக்கின்றன
என் இச்சைகள் இறக்கின்றன
என் இரவுகளும் பகல்களும் இறக்கின்றன
என் அகந்தை இறக்கிறது
என் கண்ணீர் இறக்கிறது
என் பதட்டங்கள் இறக்கின்றன
என் குழந்தைகளை அணைத்துக்கொள்ளும்
என் கைகள் இறக்கின்றன
என் வேலைகள் இறக்கின்றன
என் மூளை இறக்கிறது
என் பயங்கள் இறக்கின்றன

நம்புங்கள்
ஒரு கவிஞன் இறக்கும்போது
அவன் வேறு எவரையும்போலவே
முழுமையாக இறக்கிறான்

இரங்கற் பாவிற்கான ஒரு குறிப்பு

எனக்கு எழுதப்படும்
இரங்கற்குறிப்புகளில்
நான் படுக்கையறையில்
எவ்வளவு அற்புதமானவனாக இருந்தேன்
என்பது மட்டுமே
எழுதப்படவேண்டுமென
விரும்புகிறேன்

லட்சம் மைல்களின் பயணம்

சாலையில் ஒரு மனிதன்
மோட்டார் சைக்கிளில்
சென்றுகொண்டிருக்கிறான்
காலை வேளையின்
பைத்திய வேகத்தில்
சாலை நகர்ந்துகொண்டிருந்தது

தற்செயலான ஒரு கணத்தில்
கார் கண்ணாடி வழியே
மிக அண்மையில் அதைக்கண்டேன்
மோட்டார் சைக்கிள் ஆளின் தலை
ஒரு பக்கமாக வெட்டி இழுத்துக்கொண்டிருந்தது
அவன் பிடிவாதமாக மோட்டார் சைக்கிளை
செலுத்திக்கொண்டிருந்தான்
மோட்டார் சைக்கிள்
தண்ணீரில் படகைப்போல
வாகன நெரிசலில் தளும்பிக்கொண்டிருந்தது
தலை வெட்டியிழுக்கும் வேகம்
அதிகரித்துக்கொண்டேயிருந்தது
அவன் எந்த நேரமும் சாலையில்
தலை குப்புற சரிவான் எனத் தோன்றியது
எனக்கு என்ன செய்ய வேண்டுமெனத் தெரியவில்லை
அந்த இயலாமை பயங்கரமானது
அந்த மனிதனின் நடுங்கும் தலையின்
இயலாமை போன்றதுதான் அது
அவன் வாகனத்தை சாலையைவிட்டு இறக்க
போராடிக்கொண்டிருந்தான்
அவன் கீழே விழ இடம் தேடிப் பரிதவித்துக்கொண்டிருந்தான்

நூறு வாகனங்களுடன் சேர்ந்து
நானும் அந்தக் காட்சியைக்
கடந்து சென்றுவிட்டேன்
யாராவது அவனுக்குத் தண்ணீர் கொடுப்பார்கள்,
கையில் இரும்புசாவி கொடுப்பார்கள் என
என்னை நானே சமாதானம் செய்துகொண்டேன்
வெட்டும் தலையுடன்
தளும்பித் தளும்பிச் செல்லும்
ஒரு மோட்டார் சைக்கிள்
என் தலைக்குள் ஓடிக்கொண்டேயிருக்கிறது
அந்த மனிதன் எவ்வளவு நேரம்
அந்த வாகனத்தை அப்படியே
செலுத்தினான் என்று தெரியாது
ஆனால் அது லட்சம் மைல்களின் பயணம்
என்றெனக்குத் தெரியும்

மேலும் நல்லவேளை
அந்த சமயத்தில்
அந்த மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில்
அவன் நேசிக்கும் பெண் யாருமில்லை
எவ்வளவு சங்கடமாகப் போயிருக்கும் அது !

கடவுளுக்கு வேறு வேலைகள் இருக்கின்றன

ஒவ்வொருமுறையும்
மருத்துவ அறிக்கைகள் வரும்போது
இப்படித்தான் தூங்காமல் இருக்கிறேன்
இப்படித்தான் பயப்படுகிறேன்

ஆனாலும் சிறிய நம்பிக்கை
கடவுளுக்கு ஏற்கனவே நிறைய வேலைகள்
இதற்கிடையே
என் கணக்கைத் தீர்க்க
அவ்வளவு சீக்கிரம் வரமாட்டார்

*