மேற்கு வங்கத்தில் சிபிஐ எம் கட்சிக்கு எதிராக அடுத்தடுத்து வெடித்த நந்திகிராம், சிங்குகூர், லால்கர் எழுச்சிகளைப் புரிந்து கொள்ள சிறு,குறு விவசாயிகள், மார்க்சிஸ்ட் கட்சி, நிலம் என்ற முக்கோணத்தைப் புரிந்து கொள்வது அவசியம்.

ஆபரேஷன் பர்கா

சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்று குத்தகை விவசாயிகளின் மேல் பெருநிலப்பிரபுக்களால் நிகழ்த்தப்பட்டு வந்த அடக்குமுறையும், சுரண்டலுமாகும். பெருநிலப்பிரபுக்களிடம் நிலத்தைக் குத்தகையாகப் பெற்று விவசாயம் செய்துவந்த சிறு விவசாயிகள் தங்கள் உழைப்பில் பெரும்பகுதியை நிலப்பிரபுவுக்குக் குத்தகையாகக் கொடுக்கவேண்டி வந்தது. எந்த நேரமும் நிலத்தை விட்டு வெளியேற்றப்படலாம் என்ற பயத்திலேயே வாழவேண்டியிருந்தது. இந்திய கிராமப்புறங்களில் நிலவிய குரூரமான வன்முறைக்கும் அடக்குமுறைக்கும்  தலித்துகள் மீதான பண்ணையடிமை முறையைப் போலவே சிறு குறு விவசாயிகள் மீதான இந்தக் குத்தகை விவசாய முறையும் காரணமாக இருந்தது.

குத்தகை விவசாயிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும்  land reforms act of India 1955 மற்றும் அதன் திருத்தங்கள் உரிய பலனளிக்கவில்லை. அதற்குக் காரணம் இச்சட்டங்களில் நிறைய ஓட்டைகள் இருந்தன. குத்தகை விவசாயி அரசிடம் பதிவு செய்திருக்கவேண்டும். நிலப்பிரபுவுக்குக் குத்தகை கொடுத்து ரசீது பெற்றிருக்கவேண்டும். நிலத்தைக் காலியாகப் போட்டு வைத்திருக்கக் கூடாது. நிலப்பிரபு சொந்த உபயோகத்திற்கு எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்றெல்லாம் விதிகள் இருந்தன. இதனால் இது பெரிய வெற்றி பெறவில்லை.

எனவே உழுபவனுக்கே நிலம் என்பது பொதுவுடமைக் கட்சிகளின் முக்கியமான முழக்கமாகவும், செயல்திட்டமாகவும் இருந்தது. நிலத்தின் மீதான உரிமைகளைப் பெற்றுத் தரப் போராடியதாலேயே இடதுசாரிக் கட்சிகளை விவசாயிகள் ஆதரித்தனர். மேற்கு வங்கத்தில் 1967 ஆம் ஆண்டு இடதுசாரிகள் பங்கு பெற்ற கூட்டணி அரசு அமைந்த போது மக்கள் அரசு நிலச்சீர்திருத்தத்தை முறையாக நடத்த வேண்டும் என்று எதிர்பார்த்தனர். அதன் படியே சிபிஎம் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களான ஹரே கிருஷ்ண கோனாரும், பினாய் செளத்திரியும் நிலச் சீர்திருத்தத்தைத் தீவிரமாக முன்னெடுத்தனர்.

இந்த நடவடிக்கையிலிருந்து தப்ப நிலப்பிரபுக்கள் பல்லாயிரம் குத்தகை விவசாயிகளைத் தங்கள் நிலங்களில் இருந்து வெளியேற்றினர், இதெல்லாம் நக்சல்பாரி எழுச்சிக்குக் காரணமாக அமைந்தது என்பதை முன்பு பார்த்தோம். நக்சல்பாரி எழுச்சியின் காரணமாக  1970ல் ஆட்சி கலைக்கப்பட்டது. பின்பு வந்த காங்கிரஸ் அரசு நிலச்சீர்திருத்தத்தைக்  கிடப்பில் போட்டது.

1977 தேர்தலில் வென்று மேற்கு வங்காளத்தில் ஆட்சியமைத்த ஜோதிபாசு தலைமையிலான இடது கூட்டணி முழுவீச்சில் நிலச் சீர்திருத்தத்தில் இறங்கியது. நிலச்சீர்திருத்தச் சட்டத்தில் இருந்த பல்வேறு ஓட்டைகளை அடைத்தது.

ஆபரேஷன் பர்கா(பர்க்காதார்- குத்தகைதாரர்) என்ற நடவடிக்கையின் மூலம் அரசு, கிராமங்கள் தோறும் அரசு அதிகாரிகளையும், கட்சி அணிகளையும் முடுக்கிவிட்டு குத்தகைதாரர்களின் உரிமைகளைப் பற்றிய பெரும் பிரச்சாரத்தை முன்னெடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது. குத்தகை விவசாயிகளை அமைப்பாகத் திரட்டியது. அடுத்து வந்த ஆண்டுகளில் சுமார் 18 லட்சம் குத்தகைதாரர்களைப் பதிவு செய்தது. சுமார் ஒரு கோடி மக்கள் தாங்கள் உழும் நிலங்களில் நிலைத்துத் தங்கியிருக்கும் வாய்ப்பைப் பெற்றனர். சட்டப்பூர்வமான பாதுகாப்பும் பெற்றனர். பின்பு 1981ல் காப்பி, தேயிலை, ரப்பர் தோட்டங்கள் ஏரிகள், குளங்கள், மத நிறுவனங்கள், டிரஸ்டுகள் ஆகியவற்றிற்குக் கொடுக்கப்பட்டிருந்த விலக்கை ரத்து செய்தது. ஆனால் இந்தச் சட்டம் மத்திய அரசின் எதிர்ப்பால் பல ஆண்டுக்கு நடைமுறைக்கு வரவில்லை.

ஆபரேஷன் பர்காவில் சிபிஐஎம் அரசு தாசில்தார் தலைமையிலான அரசு இயந்திரத்தை மட்டும் நம்பி இராமல் தனது கட்சி அணிகளையும் குத்தகை விவசாயிகளைத் திரட்டும்  பணியில் ஈடுபடுத்தியது நிலச்சீர்திருத்தம் பெரிய அளவில் வெற்றிபெறக் காரணமானது. சி பி ஐ எம் கட்சி வங்காள கிராமப் புறங்களில் ஆழமாக வேரூன்றி மக்களின் அன்றாட வாழ்க்கையில் பிரிக்கமுடியாத அங்கமாக மாறியது.   மக்களுக்கும் அரசுக்குமான உறவு மேம்பட்டதன் காரணமாக
மக்களின் வாழ்நிலை மிகுந்த முன்னேற்றமடைந்தது.

நிலச் சீர்திருத்தச் சட்டப்படி நிலப்பிரபு தனது நிலங்களை விற்க விரும்பினால் அதில் விவசாயம் செய்து வரும் குத்தகை விவசாயிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதன்படி அடுத்த கட்டமாக அரசு லேண்ட் கார்பரேஷன் என்ற அமைப்பை உருவாக்கி குத்தகை விவசாயிகள் தாங்கள் உழுது வரும் நிலங்களைத் தாங்களே விலைக்கு வாங்கிக் கொள்ள  உதவியளித்தது. ஆனால் இந்த நடவடிக்கைகளை மத்திய அரசு ஆதரிக்காததால் பெரிய வெற்றி பெறவில்லை. அதே நேரம் சிபிஎம் கட்சியணிகள் களத்தில் செயல்பட்டு குத்தகை விவசாயிகளை நிலத்திலிருந்து வெளியேற்றுவதை அடியோடு தடுத்து நிறுத்தின. ஜோதேதார்கள் எனப்படும் நிலப்பிரபுக்கள் ஆபரேஷன் பர்காவிற்கு எதிராக வன்முறைத் தாக்குதல்கள் நடத்தியபோது சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் ஒருங்கிணைந்து அதை முறியடித்தன.

இந்த ஆபரேஷன் பர்காவானது குத்தகை விவசாயிகள் விளைச்சலில் 75 சதவீதத்தை தாங்களே வைத்துக் கொள்ள சட்டத்தின் மூலம்  வழி செய்தது. குத்தகை விவசாயிகளின் மீதான சுரண்டல் அடியோடு நின்றுபோனது. சிபிஎம் அரசு கொண்டுவந்த  புதிய சட்டங்கள் ஒருவர் குத்தகை விவசாயி அல்ல என்று நிரூபிக்கும் பொறுப்பை நிலப்பிரபுவிடம் விட்டது. சொந்த உபயோகத்துக்காக நிலப்பிரபு நிலத்தை தான் திரும்ப எடுத்துக் கொள்ளலாம் என்ற சட்டப்பிரிவு இருந்தது. சிபிஐ எம் அரசானது சொந்தப் பயன்பாடு என்பது நிலப்பிரபு எடுத்துக் கொள்ளும் நிலத்தைத் தானே உழ வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகளை விதித்தது.

இந்தியா முழுவதிலும் நிலச்சீர்திருத்தம் பெரும் தோல்வியடைய வங்காளத்தில் அது மகத்தான வெற்றி பெற்றது. விவசாய வளர்ச்சி உச்சத்தை எட்டியது. கிராமப்புற வறுமை பெரிய அளவிற்குக் குறைந்தது. பட்டினி குறைந்து எல்லோருக்கும் நல்ல உணவு கிடைத்தது. 65 சதவீத பர்கா குத்தகைதாரர்கள் பதிவு செய்யப்பட்டனர். பானர்ஜி அண்டு கடக் சர்வே (banerjee and ghatak survey) ஆபரேஷன் பர்காவின் காரணமாக விவசாய உற்பத்தி 36 சதவீதம் உயர்ந்தது என்று கூறுகிறது.  இந்த ஆபரேஷன் பர்காமீது பல விமர்சனங்கள் உள்ளன. இது வளத்தையல்ல வறுமையைப் பரவலாக்கியது. நவீனத் தொழில் நுட்பம் வருவதைத் தடை செய்தது என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் 2008 வரை மேற்கு வங்க கிராமப் புறங்களில் சிபிஐ எம் கட்சிக்கு இருந்த செல்வாக்கைப் பார்க்கும் போது மக்கள் கட்சியின் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பதையும் இந்த நடவடிக்கைகளால் பலனடைந்தனர் என்பதையும் உணர முடிகிறது. போராடிப் பெற்ற நிலத்தின் மீது மக்கள் கொண்டிருந்த பற்றும், தங்களுக்கு நிலம் வழங்கிய சி பி ஐ எம் கட்சியே அதைப் பிடுங்க முனைந்து நின்றதும்தான் நந்திகிராம், சிங்கூர், லால்கரில் கடும் கோபம் கொள்ளக் காரணமாக அமைந்தது.

 

பெரும் தொழில் நகரான கல்கத்தாவில் சி ஐ டி யு தொழிற்சங்கமானது தொழிற்கூடங்களை ஒழுங்காக இயங்க விடமாட்டேனென்கிறது, அதீத அரசியல் மயப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் உற்பத்திக்கான கட்டுப்பாடு கொண்டவர்களாக இல்லை என்று முதலாளித்துவவாதிகள் குற்றம் சாட்டினர். கல்கத்தாவிலிருந்து தொழில்கள் வெளியேறிக் கொண்டே இருப்பதாகவும் கல்கத்தா செத்துக் கொண்டிருக்கும் நகரம் என்றும் முத்திரை குத்தினர். ஆனால் இன்று வரை எல்லாப் பெருமுதலாளிகளும் மேற்கு வங்கத்தில் முதலீடுகள் செய்து கொண்டும், தொழில்கள் நடத்திக் கொண்டுமே உள்ளனர்.

 

சிபிஐ எம் கட்சிக்குப் பிரச்சினை வேறு இடத்திலிருந்து வந்தது. கல்கத்தா ஹுக்ளி நதியின் மீது அமைந்துள்ள துறைமுகம்தான் அப்பிரச்சினை. இந்நகரம் கடலிலிருந்து 230 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. உலகமய காலத்தில் பெருமளவு அதிகரித்த சரக்குப் போக்குவரத்துக்கு இந்தத் துறைமுகம் போதவில்லை. பக்கத்தில் ஹால்டியா என்று இன்னொரு துறைமுகத்தை உருவாக்கியும் கூட சரக்குப் போக்குவரத்தில் இருந்த சிக்கல் தீரவில்லை. இதனால் அரசு பாதிக்கப்பட்டது. தவிர உலகமய சீர்திருத்தங்களின் காரணமாக விவசாயப் பொருட்களிலிருந்து கிடைத்து வந்த வருவாயும் குறையத் தொடங்கியது.

ஒன்றிய அரசானது தொடர்ந்து வளர்ச்சிப்பணிகளுக்கும், அத்தியாவசிய சேவைகளுக்குமான நிதியுதவியைக் குறைத்து வந்தது. இவையனைத்தும் தனியார் மயமாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது.

உலகமயத்தையும் தனியார் மயத்தையும் ஏற்றுக் கொள்ளாவிட்டால் ஒரு மாநில அரசு இயங்குவது சாத்தியமே இல்லை என்ற நிலை பொருளாதார சீர்திருத்தங்களால் உருவானது. வேறு வழி இல்லாத நிலையில் மேற்கு வங்க இடதுசாரி அரசும் மாநிலத்தை உலகம் முழுவதுமுள்ள பெருமுதலாளிகளின் குழுமங்களின் முதலீடுகளுக்குத் திறந்து விட்டது. பெரும் பெரும் தொழில் நிலையங்கள் அமைக்க ஏராளமான நிலம் தேவைப்பட்டது.

எனவே நிலம் கையகப்படுத்தும் வேலையில் அரசு இறங்கியது. 1990 களில் கல்கத்தாவின் சால்ட் லேக் பகுதிக்கு அருகில் அதைவிட மூன்று மடங்கு பெரிய ரஜர்ஹட் என்ற பிராம்மாண்டமான புதிய நகரை ஜோதிபாசு திட்டமிட்டு உருவாக்கினார். 93 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் ஆறுகளும், ஏரிகளும் பசுமையான வயல்வெளிகளும் கொண்ட நிலப்பரப்பில் இந்த நகரம் அமைந்தது. மக்களுக்கு உரிய நட்ட ஈடு வழங்கப் பட்டது. இந்த நகரால் வேலை வாய்ப்புகளும் அதிகரித்தன. முணுமுணுப்புகள், சிறிய எதிர்ப்புகளுக்கு மேல் சிக்கல் எதுவும் வரவில்லை. இந்த அனுபவத்தால் தொழில் குழுமங்கள் அமைக்க நிலம் கையகப் படுத்துவது எளிதாக நடத்துவிடும் என்று சிபிஐ எம் அரசு நினைத்தது. ஆனால் புத்ததேவ் பட்டாச்சார்யா ஜோதிபாசு அல்ல.

—————–

நந்திகிராம்

2007 ஆம் ஆண்டு நந்திகிராமில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைத்து கெமிக்கல் தொழில் கூடங்கள் தொடங்க சி பி ஐ எம் அரசு முடிவு செய்தது. இந்தோனேஷியாவில் சலிம் குழுமம் இதை உருவாக்க இருந்தது. இதற்குப் பத்தாயிரம் ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. அரசு மிகத் தீவிரமாக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியது. ஆப்பரேஷன் பர்க்கா மற்றும் அதைத் தொடர்ந்த சிபிஐ எம் கட்சியின் அரசியல்படுத்தும் நடவடிக்கைகளால் தங்கள் நிலங்களின் மீது ஆழ்ந்த பற்றும் உரிமைகளுக்காக போராடும் மனநிலையும் கொண்டிருந்த விவசாயிகள் நிலங்களைக் கொடுக்க மறுத்தனர். 2000லிருந்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக நிலத்தை விவசாயிகளிடம் வாங்குவதும், பிடுங்குவதும் இந்தியா முழுவதும் நடந்து வந்தது. நந்திகிராம் என்ற இந்த ஒரே ஒரு கிராமம் மட்டுமே முதல் முதலாக சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து நின்றது.

அரசு விட்டுக் கொடுக்க மறுத்து விடாப்பிடியாக நின்றதில் பல குளறுபடிகள் நடந்தன. விவசாயிகள் தங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள பூமி உச்செட் ப்ரதிரோத் கமிட்டி என்ற அமைப்பை உருவாக்கினர்.  அரசு போலீஸ் படைகளையும், சிபிஐ எம் கட்சி அணிகளையும் கொண்டு பலவந்தமாக நிலம் கையகப்படுத்தும் பணியைத் தொடங்கியது. போராடிய மக்கள் மீது தாக்குதல் தொடுத்தது. ஏராளமான பகுதி விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

பூமி உச்செட் ப்ரதிரோத் கமிட்டி திருணாமூல் காங்கிரஸ், மாவோயிஸ்ட் கட்சி, எஸ்.யூ.சி. ஐ கட்சி ஆகியவற்றிடம் ஆதரவு கோரியது. திருணாமூல் காங்கிரஸ் சிபிஐ எம் கட்சியின் நடவடிக்கைகளுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் நிலம் கையகப் படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களிலும் அடையாள அளவில் மட்டும் பங்கெடுத்துக் கொண்டது. மாவோயிஸ்ட் கட்சி மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தது. போராட்டங்களை மாவோயிஸ்ட் கட்சிதான் நடத்துகிறது என்று அரசு குற்றம் சாட்டினாலும் நேரடியாக மாவோயிஸ்ட் கட்சி போராட்டங்களில் ஈடுபடவில்லை. அரசு கூறுவது உண்மையாக இருந்தால் மாவோயிஸ்ட் கட்சி பூமி உச்செட் ப்ரதிரோத் கமிட்டி மூலமே இயங்கியது என்று முடிவு செய்யலாம்.

பூமி உச்செட் ப்ரதிரோத் கமிட்டி சாலைகளை வெட்டி போக்குவரத்தைத் தடை செய்தது. உள்ளூர் நிர்வாகத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டது. கமிட்டி உறுப்பினர்களான விவசாயிகள் பகுதி முழுவதிலும் நடமாடி அனைத்து நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்தினர். அரசின் பிரதிநிதியான எந்த அதிகாரியும் அங்கே தலைகாட்ட முடியாத நிலை ஏற்பட்டது. நிலம் கையகப் படுத்தும் அரசு நடவடிக்கைகளுக்கு உதவியாக இருந்த சிபிஐ எம் கட்சியின் 3500 ஊழியர்கள் விவசாயிகளின் தாக்குதலால் அப்பகுதியிலிருந்து தப்பியோடி முகாம்களில் அடைக்கலம் புகுந்தனர் என்று தி இந்து செய்திக் குறிப்பு கூறியது.

நந்திகிராம் பகுதியில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசு 3000 பேர் கொண்ட போலீஸ் படையை அனுப்பியது. 5000 மக்கள் குவிந்து போலீசைத் தடுத்தனர். தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 விவசாயிகள் கொல்லப்பட்டனர். 70பேர் காயம்பட்டனர். ஆனால் 100 க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயினர் என்று கமிட்டி கூறியது. திருணாமூல் காங்கிரஸ் 50 பேர் கொல்லப்பட்டதாக மதிப்பிட்டது. சி பி ஐ எம் கட்சியினர் அந்தப் பகுதி முழுவதும் செக் போஸ்ட்கள் அமைத்து சுற்றி வளைத்திருந்தனர் என்று அப்பகுதிக்குச் சென்ற பத்திரிக்கையாளர்கள் கூறினர்.

செப்டெம்பர் மாதத்தில் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா நந்திகிராமில் கெமிகல் ஆலைகள் அமைப்பதைக் கைவிட்டு வேறு இடத்தில் அமைக்கப்போவதாக அறிவித்தார்.

2007 நவம்பர் மாதத்தில் நந்திகிராமிலிருந்து தப்பியோடிய பெருந்திரளான சி பி ஐ எம் தொண்டர்கள் துப்பாக்கிகளுடன் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர். இதன் பின்பு தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சண்டைகளில் சிவில் நிர்வாகம் திரும்பவும் சீர்குலைந்தது.

 

சிங்கூர்

 

சிங்கூர் பகுதி மேற்கு வங்காளத்திலேயே மிகவும் செழிப்பானது. அந்தப் பகுதியில் டாட்டாவின் நானோ கார் தொழிற்சாலை அமைக்க 997 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட இருந்தது. சுமார் 400 ஏக்கர் நிலத்தை உரிமையாளர்கள் அரசிடம் விற்பனை செய்தனர். மீதி நில உரிமையாளர்கள் நிலத்தை ஒப்படைக்க மறுத்துப் போராடி வந்தனர். இந்த நிலையில் நிலப்பகுதி முழுவதும் 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி அரசால் வேலியிடப்பட்டது. நில உரிமை அமைப்பைச் சேர்ந்த இருபது வயது பெண் செயல்பாட்டாளரான தபஸி மாலிக் சி பி ஐ எம் தொண்டர்களால் எரித்துக் கொல்லப்பட்டார். பின்பு இந்தக் கொலை வழக்கில் சிபிஐ எம் பகுதி கமிட்டி செயலாளர் சுஜ்ரித் தத்தா சி பி ஐயால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்த போராட்டங்களால் அக்டோபர் 2008 இல் டாட்டா சிங்கூரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது. நிலங்கள் திரும்ப அளிக்கப்பட்டன.

 

லால்கர்

நவம்பர் மாதம் 2008 ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தின் ஷல்போனி பகுதியில் ஜிண்டல் இரும்பு உருக்காலைக்கு அடிக்கல் நாட்ட முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியாவும், மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானும் சென்று கொண்டிருந்தனர். அப்போது கண்ணி வெடி வெடித்து வண்டித் தொடரின் இறுதியில் வந்த ஜீப்பில் இருந்த ஆறு போலீசார்  படுகாயமடைந்தனர். மாவோயிஸ்டு கட்சி இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு பழங்குடி மக்களின் நிலத்தில் இரும்பு உருக்கு ஆலை அமைக்க முயன்றதற்காக முதல்வர் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அறிவித்தது. இதற்குப் பிறகு காவல்துறை லால்கர் பகுதியில் பெரும் தேடுதல் வேட்டை நடத்தியது. ஏராளமானவர்கள் கொடுமையாக அடித்து நொறுக்கப்பட்டனர். பெண்கள் மீது போலீஸ் பாலியல் வன்முறையும் நடத்தியது.

இப்பகுதியில் நவம்பர் 4 ஆம் தேதி  8, 9 வகுப்புகளில் படித்து வந்த மூன்று சிறுவர்கள் போலீஸால் கைது செய்யப்பட்டனர். ஏற்கெனவே கடும் கோபத்திலிருந்த லால்கர் பகுதி வெடித்துச் சிதறியது. மக்கள் பெரும் எண்ணிக்கையில் லால்கர் போலீஸ் ஸ்டேஷனைச் சூழ்ந்து கொண்டனர். மரங்களை வெட்டிப் போட்டு சாலைகளை மறித்தனர். காவல்நிலையம் மக்களால் முழுமையாகச் சுற்றி வளைக்கப்பட்டது. இந்தப் போராட்டத்திலிருந்து காவல்துறை அடக்குமுறை எதிர்ப்புக் குழு போலீஸ் சண்ட்ராஸ் பித்ரோஹி ஜனொசதாரண் கமிட்டி என்ற அமைப்பு உருவாகியது.

இப்பகுதியில் மாவோயிஸ்ட் வருகைக்கு முன்பே காவல்துறை நினைத்த போதெல்லாம் பழங்குடி மக்களைக் கைது செய்து கொடுமைப் படுத்தி வந்தது. இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என்று கோரிய பழங்குடி மக்கள் தங்கள் நீண்டகால கோரிக்கைகளான மருத்துவமனைகள், பள்ளிகள், சாலைகள் வேண்டும், தாங்கள் சேகரிக்கும் வனப் பொருட்களுக்கு உரிய விலை அளிக்கப்பட வேண்டும், வன அதிகாரிகளின் கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும், மரம் கடத்தும் மாபியா விடமிருந்து விடுதலை வேண்டும், ஆகியவை நிறைவேற்றப்பட வேண்டும் என்று முழங்கினர்.

லால்கர் காவல்நிலையத்தைச் சுற்றியிருந்த மக்கள் திரள் மேலும் மேலும் பெருகிக் கொண்டே இருந்தது. சுற்றிலுமிருந்த ஆதிவாசி கிராமங்களிலிருந்து மக்கள் வந்து குவிந்து கொண்டேயிருந்தனர். லால்கரிலும் சாலைகளில் பெருங்குழிகள் தோண்டப்பட்டன. மேற்கு வங்காளம் முழுவதும் பழங்குடி மக்கள் இயக்கங்கள் லால்கர் எழுச்சிக்கு ஆதரவளித்தன. கிழக்கு, மேற்கு மிட்னாப்பூர், பங்க்குரா, பிர்பூம், புருலியா மாவட்டங்களிலிருந்தும் மக்கள் பெருந்திரளாக வந்து கலந்து கொண்டனர். எழுச்சி ஜங்கல் மஹால் பகுதியிலிருந்த பல கிராமங்களுக்குப் பரவியது. ஒவ்வொரு கிராமமும் பத்துப் பேர் கொண்ட கமிட்டிகளை உருவாக்கி மற்ற கிராம கமிட்டிகளோடு தொடர்பு கொண்டது. உள்ளூர் நிர்வாகத்தை நடத்தியது. பழங்குடிப் பெண்கள் பெரிய அளவில் இந்த கமிட்டிகளில் பங்காற்றினர். ஒவ்வொரு கமிட்டியிலும் சரிபாதி பெண்கள் இருந்தனர். பெண்கள் மீதான தாக்குதல் உச்சக்கட்டத்தை எட்டியதால் அனைத்துப் பெண்களும் வில், அம்பு, கத்தி, வாள், ஈட்டி, கோடரி, கம்புகள், விளக்குமாறு ஆகியவற்றுடனேயே நடமாடினர்.

நந்திகிராம், சிங்கூர் போலல்லாமல் லால்கர் பகுதியில் மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு நன்கு உணரப்பட்டது. மாவோயிஸ்ட் கட்சி இதை ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் மாவோயிஸ்ட் கட்சியே இதை வழிநடத்துவதாக சிபிஐஎம் கூறியது. போராட்டத்தை முன்னின்று நடத்தி வந்த பழங்குடி மக்களின் தலைவரான சுதீர் மண்டல் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2009 தேர்தலில் சிபிஐஎம் தோல்வியடைந்தது. லால்கர் பகுதியில் மக்கள் சிபிஎம் அலுவலகங்களையும், தலைவர்களின் வீடுகளையும் தாக்கி ஏராளமான ஆயுதங்களைக் கைப்பற்றினர். காவல்துறைக்கு உணவும், நீரும் மறுக்கப்பட்டதால் காவலர்களும் அந்தப் பகுதியைவிட்டு வெளியேறினர். பத்தாயிரம் சிஆர்பிஎஃப் காவலர்களும், கோப்ரா போலிசும் குவிக்கப்பட்டனர். எல்லைப் பாதுகாப்புப் படையும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. எதிர்ப்புத் தெரிவிக்க கூடிய மக்கள் மீதெல்லாம் மூர்க்கமாகத் தாக்குதல் நடத்தப்பட்டது. கிழக்கு ஃப்ராண்டியர் ரைஃபில், மாநில ஆயுதப்படை என்றெல்லாம் படைகளைக் குவித்துக்கொண்டே இருந்தது. இவற்றில் பங்கு கொண்ட உள்ளூர் சி பி ஐ எம் தலைவர் அசிம் மண்டல் பழங்குடி செயல்பாட்டாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அடுத்த ஆறு மாதங்களில் பத்துக்கும் மேற்பட்ட உள்ளூர் சிபிஐ எம் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கண்ணிவெடித் தாக்குதலில் சில போலீசார் காயம்பட்டனர்.

மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜி இந்தத் தாக்குதல்களை முன்நின்று நடத்தினார். நான்கு நாட்கள் போராட்டத்திற்குப்பிறகு போலீஸ்படை லால்கர் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகையை உடைத்தது. மாவோயிஸ்ட் கட்சி பிகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒரிஸ்ஸா ஆகிய நான்கு மாநிலங்களில் பந்த் அறிவித்தது. பந்த் ஓரளவு வெற்றியடைந்தது என்றாலும் லால்கர் இயக்கம் பின்னடைவைச் சந்தித்ததைத் தடுக்க முடியவில்லை. மேற்கு வங்காளத்தில் மாவோயிஸ்டுகளின் தலைவராகக் கருதப்பட்டு வந்த மாவோயிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர் கிஷன் ஜி யின் உத்திகள் தோல்வியடைந்ததாகக் கருதப்பட்டது.

கிஷன் ஜி 1994 லிருந்து 95 வரையான காலத்தில் மேற்கு வங்கத்தில் நக்சல் இயக்கத்தை வளர்த்தெடுக்கப் பணிபுரிந்தார். 2007 காலகட்டத்தில் நடந்த நந்திகிராம் இயக்கத்திலும் பின்பு நடந்த லால்கர் இயக்கத்திலும் கிஷன் ஜி முக்கியப் பங்கு வகித்ததாகக் கூறப்பட்டது. கையில் ஏகே 47 துப்பாக்கியும், தோளில் லேப் டாப் உள்ளிட்ட சாதனங்கள் கொண்ட கெரில்லா முதுகுப்பையும் தாங்கி கிஷன் ஜி போராட்டம் நடந்த பகுதிகளில் கிராமம் கிராமமாகச் சென்று போராட்ட இயக்கத்தை கட்டியெழுப்பினார். அவரது பேட்டிகள், செயல்பாடுகள் அரசுக்குப் பெரிய தலைவலியாக மாறின.

திருணாமூல் ஆட்சி வந்ததும் கிஷன் ஜி பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டோ, உள்ளிருந்து காட்டிக் கொடுக்கப்பட்டோ அரசால் பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்.

கிஷன் ஜியின் நடவடிக்கைகள் மேல் மாவோயிஸ்ட் தலைமை அதிருப்தி கொண்டிருப்பதாகப் பல ஏடுகள் செய்தி வெளியிட்டன. சி பி ஐ எம் அரசின் தாக்குதல்களுக்கு எதிரான கூட்டணி என்பதற்கு மேல்  திரிணாமுல் காங்கிரசுடன் அவர் உறவு வைத்துக் கொண்டது, மீடியாவுடன் அதிக தொடர்பு கொண்டது ஆகியவை விமர்சிக்கப்பட்டன. மாவோயிஸ்ட் தலைமை திரிணாமுல் சிபிஎம் தேர்தல்போட்டியில் கிஷன் ஜி தலையிட்டதை அடியோடு விரும்பவில்லை. நந்திகிராம் இயக்கத்தின் போது கண்டறியப்பட்ட பலவீனங்களைக் களைய கிஷன் ஜி நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச் சாட்டும் அவர் மீது வைக்கப்பட்டது. நந்திகிராம் போராட்டத்தின் போது உருவாக்கப்பட்ட மக்கள் திரள் அமைப்புகள் ஏழு எட்டு காவல்நிலையங்களைத் தாண்டி வளரவில்லை என்பது சுட்டிக் காட்டப்பட்டது.

நம்காலத்தின் மிகவும் முக்கியமான கெரில்லாப் போர்த்தந்திர நிபுணரும் அல் கைதாவைச் சேர்ந்தவருமான அபு மூஸா அல் சூரி, பின் லேடன் மீது  மீடியாவில் அதிக நேரம் செலவழிக்கிறார் இது நல்லது அல்ல என்று கடும் விமர்சனம் வைத்தார்.  “Caught the desease of screens, flashes, fans and applause” என்று பின் லேடனைப் பற்றிக் கூறினார் அல் சூரி. மாவோயிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர்கள் கூடுமானவரை ஊடக வெளிச்சத்திலிருந்து விலகியே இருப்பார்கள். கிஷன் ஜி இந்தக் கட்டுப்பாடுகளை மீறியதே அவரது கொலைக்கும் கட்சியின் பின்னடைவுக்கும் காரணமானது என்று கட்சியின் மூத்ததலைவர்களே கூறினர்.

 

.லால்கர் பகுதி காடுகளும் மலைகளும் சூழ்ந்த ஜங்கல் மஹல் பகுதியில் இருந்தாலும் மேற்கு வங்காளம் போக்குவரத்து வசதிகள் வளர்ச்சியடைந்த மாநிலமாக இருந்ததால் கெரில்லா போருக்கு ஏற்றது அல்ல என்ற கருத்தும் பல ஆய்வாளர்களால் முன் வைக்கப்பட்டது.

சிபிஐ எம் கட்சி தோற்கடிக்கப்பட்டால் திரிணாமூல் ஆட்சிக்கு வரும், படைகள் ஜங்கல் மஹல் பகுதியில் இருந்து விலக்கிக் கொள்ளப்படும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று கிஷன் ஜி உள்ளிட்ட தலைவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் திருணாமுல் ஒரு சிறிய அமைதிக்காலத்தைக் கூடத் தர மறுத்து மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர அனுமதியளித்தது.

நந்திகிராம், சிங்கூர் பகுதிகளில் போராட்டம் வெற்றி பெற்றதும் விவசாயிகள் தங்கள் நிலங்களுக்குத் திரும்பினர். மாவோயிஸ்ட் கட்சிக்கு அங்கே வேலை இருக்கவில்லை. மாவோயிஸ்ட் கட்சியின் எந்த முன்னணி அமைப்பும் அங்கே உறுதியாக நிலபெறவில்லை. லால்கர் இயக்கம் அரசால் கடும் தாக்குதலுக்குள்ளாகி முடக்கப்பட்டது.

மாவோயிஸ்ட் அமைப்பு பெரிய பின்னடைவுக்கு ஆளானாலும் சி பி ஐ எம் கட்சியைத் தோற்கடிப்பதில் அது முக்கியப் பங்காற்றியது. மாவோயிஸ்ட் கட்சி மறுத்தாலும் அதுவே நந்திகிராம், சிங்கூர், லால்கர் இயக்கங்களில் முக்கியப் பங்காற்றியது. திருணாமுல் அடையாள ஆதரவு என்ற அளவுக்கு மேல் போராட்டத்தில் பங்கு கொள்ளவில்லை.

ஆனால் புத்திஜீபிகள் என்றழைக்கப்பட்ட வங்காள அறிவாளி வர்க்கம் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவாக வெளிவந்ததும் மம்தா தனக்கு வாய்ப்பு இருப்பதைக் கண்டு கொண்டார். அதுவரை வங்காள அறிவாளி வர்க்கம் இடதுசாரி அரசுக்கு எதிராக ஒருபோதும் பேசியதில்லை. எழுத்தாளர் சுனில் கங்கோபாத்யாயா, இயக்குநர் சத்ய ஜித் ரே போன்றவர்கள் ஜோதிபாசு, புத்ததேவ் பட்டாச்சாரியா ஆகிய முதலமைச்சர்களுக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். பாலிவுட் அளவுக்கு வங்க இயக்குநர்கள் பணம் ஈட்ட வில்லை என்றாலும்  இடதுசாரி அரசின் ஆதரவில் தங்கள் தனித்தன்மையைக் கைவிட்டுவிடாமல் நல்ல படங்களை எடுத்தனர். மேற்சொன்ன இருவரும் இல்லாத நிலையில் வங்கம் முழுவதும் அறிமுகமான மகேஸ்வேதா தேவி, அபர்ணா சென் போன்றவர்களும் கவிஞர்  ருசித் ஷா சுப்ரப்ரசன்னா, சலொனி மித்ரா உள்ளிட்ட முக்கியமான அற்வுஜீவிகளும் மாநில அரசைக் கண்டித்தனர்.

இன்னும் எண்ணற்ற கவிஞர்களும், எழுத்தாளர்களூம், இயக்குநர்களும் நடிகர்களும் இடதுசாரி அரசுக்குத் தீவிரமான எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

மேற்கு வங்கத்தின் அறிவுஜீவி வர்க்கம் செல்வாக்கு வாய்ந்தது. அதன் ஆதரவை இழந்ததும் சிபிஐ எம் தோல்விக்குக் காரணமாக அமைந்தது. திருணாமுல் காங்கிரஸால் ஒருபோதும் இந்த அறிவாளி வர்க்கத்தின் ஆதரவைப் பெற்று இருக்க முடியாது. மாவோயிஸ்டுகளின் பங்கேற்பே அறிவாளி வர்க்கத்துக்குக் காரணமாக அமைந்தது.

லால்கர், நந்திகிராம், சிங்கூர் விவசாயிகளின் போராட்டமே சி பி ஐ எம் கட்சியை வீழ்த்தியது. மிக விரைவில் அதற்குக் காரணமான மாவோயிஸ்ட் கட்சியும் ஒடுக்கப்பட்டு மாவோயிஸ்டுகள் பிஹாரிலும் ஜார்கண்டிலும் இருந்த தங்கள் தளங்களுக்குப் பின்வாங்கினர்.

————————————-

2008 ஆம் ஆண்டு ஒரிஸ்ஸாவின் சிலெரு நதியில் கிரே ஹவுண்ட்ஸ் என்ற அதிநவீன பயிற்சி பெற்ற மாவோயிஸ்ட் எதிர்ப்பு சிறப்புப் படையைச் சேர்ந்த அறுபது வீரர்கள் ஒரு படகில் பயணம் செய்து கொண்டிருந்தனர். இரண்டு குன்றுகளுக்கு இடையே நதி குறுகி ஓடும் இடத்துக்கு இந்தப் படகு வந்த போது குன்றுகளில் நிலையெடுத்திருந்த மாவோயிஸ்டுகள் இலகுரக இயந்திரத்துப்பாக்கிகள், ஏ கே 47 ரக துப்பாக்கிகள் ஆகியவற்றைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். இதில் 38 அதிரடிப்படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.

அதற்கு முன்பு இப்படையை உருவாக்கிய ஐ ஏ எஸ் அதிகாரியான வியாஸ் மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். மாவோயிஸ்ட் கட்சி மேலும் சில தாக்குதல்களை இந்த கிரே ஹவுண்ட்ஸ் படையைக் குறிவைத்து நடத்தியது. இதற்குக் காரணமிருந்தது.

1995லிருந்து 2016 வரையான கால கட்டத்தில் ஆந்திராவில் 1780 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று அரசு கூறியது. இது பொய்யான தகவல். கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்துக்கும் மேல் என்று மாவோயிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்கள் கூறினர். இதில் 80 சதவீதம் பேர் கிரே ஹவுண்ட்ஸ் என்ற இந்தப் படைகளால் கொல்லப்பட்டனர்.

கிரே ஹவுண்ட்ஸ் படையானது ஆந்திராவில் உருவாக்கப்பட்டது என்றாலும் மாவோயிஸ்ட் அமைப்பு இயங்கிய எல்லா மாநிலங்களும் இதன் உதவியைக் கோரிப் பெற்றன. மத்திய இந்தியாவில் சிறப்பு உரிமைகள், அதிகாரங்கள், நிதி வசதி, ஆயுதபலம் பெற்ற மிகவும் வலிமை வாய்ந்த அமைப்பாக இந்தப் படை வளர்ச்சி பெற்றது.  இந்தப் படைக்கு ஒரு தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட எந்த அரசின் முன் அனுமதியும் அவசியமில்லை. இதன் நிதி ஆதாரங்கள் ஒருபோதும் எந்த ஜனநாயக அமைப்பின் முன்னும் சமர்பிக்கப்பட்டதில்லை.

மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போரில் கிரே ஹவுண்ட்ஸ் படையானது முக்கியமான ஆயுதமாக மத்திய மாநில அரசுகளால் கருதப்பட்டது.

எண்பதுகளில் ஆந்திரபிரதேச அரசானது நக்சலைட்டுகள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் கிராமங்களில் போலீசாரைக் கொண்டு தேடுதல் வேட்டை நடத்துவது, நக்சல் ஆதரவாளர்களைக் கொல்வது என்று வழக்கமான முறையில் இயங்கியது.

கோடா ஸ்ரீநிவாஸ் வியாஸ் என்ற ஐ பி எஸ் அதிகாரி இந்த முறையால் நக்சல் இயக்கம் வளரவே செய்கிறது என்று கருதினார். பொத்தாம் பொதுவாக கிராமங்களைத் தாக்குவது, மக்களை அடித்துக் கொல்வது, எரிப்பது ஆகிய செயல்கள் நக்சல் இயக்கத்தை ஒடுக்கத் தவறுவதோடு மக்கள் வெறுப்பையும் சம்பாதித்துக் கொடுக்கின்றன. கீழ் நிலை நக்சல் ஆதரவாளர்களைக் கொல்வதால் ஒரு பலனும் இல்லை. நக்சல் இயக்கத்தின் தலைமையைத் தாக்குவதும், அதன் வலைப்பின்னலைத் தகர்ப்பதுமே வெற்றியைத் தரும் என்று கருதினார்.

1989 ஆம் ஆண்டு நக்சல் தேடுதல் வேட்டைகளுக்காக மட்டுமே பயன்படுத்தக் கூடிய கிரே ஹவுண்ட்ஸ் படையையும், சிறப்பு உளவுப் பிரிவையும் உருவாக்கினார். இப்பிரிவில் உள்ள அனைத்துக் காவலர்களும் 35 வயதுக்குட்பட்டவர்கள். அடர்காடுகளில் போரிடவும் வாழ்க்கை நடத்தவும் பயிற்சி பெற்றவர்கள். ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்கள் இந்தப் படைக்கு வழங்கப்பட்டன.

இவை தவிர அரசு உதவியுடன் திட்டவட்டமான தகவல்கள் தரக்கூடிய உளவாளிகளின் வலைப்பின்னலையும் உருவாக்கினார். ஒரு நக்சல் இயக்கத் தலைவர் வரக்கூடும் என்று சந்தேகிக்கக் கூடிய இடங்களில்  வீடுகள் கட்டிக் கொடுத்தும், வேலை வாங்கிக் கொடுத்தும் எண்ணற்ற உளவாளிகளை நிரந்தரமாக நிறுத்துவது, ஆண்டுக்கணக்கில் காத்திருப்பது ஆகிய முறைகள் அமுலுக்கு வந்தன.

அதே நேரம் வெளிப்படையாக இயங்கிய அறிவுத் துறையினர், உள்ளூர் மக்கள் தலைவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் மேல் மூர்க்கமான தாக்குதல்களை அரசு நடத்தியது. இந்த நடவடிக்கைகளில் நானூறுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

கத்தார் மீதே துப்பாக்கிச் சூடு நடந்தது. புகழ் பெற்ற மனித உரிமை வழக்குரைஞரான கண்ணபிரானைக் கொல்லவும் முயற்சி நடந்தது.  மாவோயிஸ்ட் அல்லது அவர்கள் பால் அனுதாபம் கொண்டவர் என்று சந்தேகிக்கப்பட்ட ஒவ்வொருவர் மேலும் இந்த கிரே ஹவுண்ட்ஸ் அமைப்பு கொலைவெறித் தாக்குதல் நடத்தியது.

நல்லமலா காடுகள் கர்நூல், பிரகாசம், மஹபூப்நகர் குண்டூர், நலகொண்டா மாவட்டங்களில் பரந்து விரிந்திருந்தன. இப்பகுதி போலீஸ் நுழைய முடியாத வலிமை வாய்ந்த மாவோயிஸ்ட் கோட்டையாகவிருந்தது. இந்தக் காடுகளைத் தளமாகக் கொண்டு மாவோயிஸ்ட் அமைப்பினர் சுற்றிலுமிருந்த மாவட்டங்களில் அமைப்புச் செயல்பாடுகளை நடத்தி வந்தனர்.

ஒய் எஸ் ஆர் ராஜசேகர ரெட்டி முதலமைச்சராகப் பதவியேற்றதும் 2004 ஆம் ஆண்டு மாவோயிஸ்டுகளைப் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தார். பெரும்பாலான மாவோயிஸ்டுத் தலைவர்கள் பேச்சு வார்த்தைகளுக்காக நல்லமலா காடுகளில் இருந்து வெளி வந்தனர். போர் நிறுத்தம் நிலவியதை முக்கிய வாய்ப்பாகக் கருதிய போலீஸ் உளவாளிகள் மூலம் காடுகளுக்குள் ஊடுருவி மாவோயிஸ்டுகளின் தங்கிடங்கள், நடமாடும் பகுதிகள், போன்றவற்றைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தது.

பின்பு பேச்சு வார்த்தை முறிந்ததும் நல்லமலா காடுகளில் மாதவ் என்ற மிக முக்கியமான மாவோயிஸ்ட் தலைவர் தங்கியிருந்த இடத்தைப் பல ஆயிரம் போலீசாரும் சிறப்பு அதிரடிப்படையினரும் தாக்கினர். மாதவ் உட்பட பல நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.  ஒய் எஸ் ஆரும் கீழ் மட்ட நக்சல்களுக்குப் பதிலாக மேல் மட்டத் தலைவர்களைக் குறி வைப்போம் என்றார்.

2006 ஆம் ஆண்டு கர்நாடகாவில் மாவோயிஸ்ட் மூத்த தலைவர்கள் அப்பா ராவ், மட்டா ரவி குமார், நவீன் என்ற ஷியாம் ஆகியோர் பிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

நல்லமலா காடுகளில் ஆழமாக ஊடுருவிய கிரே ஹவுண்ட்ஸ் அதிரடிப்படையினரின் தாக்குதல்களால் 2009 வாக்கில் அங்கே மாவோயிஸ்ட் அமைப்பு செயல்படுவது சாத்தியமில்லாமல் போனது. எற்கெனவே தடைசெய்யப்பட்டிருந்த முற்போக்கு இளைஞர் அணி, முற்போக்கு மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகளும் இயங்கமுடியாமல் முடங்கிப் போயின.

மாவோயிஸ்ட் தலைமையும், ஆயுதக் குழுக்களில் பெரும் பகுதியும் சட்டிஸ்கர் காடுகளுக்குப் பின்வாங்கின.

மாவோயிஸ்ட் கட்சி வட தெலங்கானாவில் பலவீனமடைந்ததற்குக் காரணம் போலீஸ் நடவடிக்கைகள் மட்டுமல்லாமல் வேறு அரசியல் பொருளாதாரக் காரணங்களும் இருந்தன. உலகமயமாக்கலுக்குப் பிறகு வட தெலங்கானா நகரங்கள் பெரிய வளர்ச்சி பெற்றன. நக்சல் அமைப்பின் மையமாகவிருந்த கரிம் நகர் முக்கியமான வணிக நகரமாக மாறியது. ஏராளமான புதிய தனியார் கல்லூரிகள் தோன்றின. புதிதாக வந்த கணிணிக் கல்வி போன்றவை இதற்கு முன்பு நினைத்தே பார்க்க முடியாததாகவிருந்த ஊதியம், செல்வாக்கு, அமெரிக்கக் குடியுரிமை ஆகியவற்றை நடுத்தரவர்க்கத்தின் ஒரு பகுதிக்குக் கொடுக்கக் கூடியவையாக உருவெடுத்தன. இந்தப் புதிய கல்லூரிகளுக்குள் அரசியல் நுழையவே முடியாத நிலை உருவாகியது. எந்த விதமான மாணவர் அமைப்புகளுக்கும், சமூக முன்னேற்றத்துக்கான கருத்துகளுக்கும் அங்கே இடமே இல்லாமல் போனது.

லட்சியவாதம் என்பதற்குப் பதிலாக வசதி வாய்ப்புகள், முன்னேற்றம் என்பது முன்னுக்கு வந்தது. தனிநபர் வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவை நடுத்தர வர்க்கத்தின் முக்கிய முழக்கங்களாயின. ஏற்கெனவே முற்போக்கு மாணவர் சங்கம், முற்போக்கு இளைஞர் அணி ஆகியவை தடை செய்யப்பட்ட நிலையில் கல்வி தனியார் மயம் புதிய தோழர்கள் அமைப்புக்கு வருவதைத் தடை செய்தது.

தெலங்கானா கிராமப்புறங்களில் முதன்மையான முரண்பாடு நிலப்பிரபுத்துவத்துக்கும் கூலி ஏழை விவசாயிகளுக்கும் என்பதும் மாற்றம் கண்டது. சிறு நகரங்கள் உலகச் சந்தை சங்கிலியில் இணைக்கப்பட மக்களின் வாழ்க்கை முறையே மாறியது. தகவல் தொடர்பு பெரும் வளர்ச்சி கண்டது. இவையெல்லாம் மாவோயிஸ்ட் கட்சிக்குப் பெரும் பலவீனமாக அமைந்தன.

அரசானது போலீஸ் ஸ்டேஷன்களைக் கோட்டைகளாக மாற்றி தாக்குவது சாத்தியமில்லாத சூழ்நிலையை உருவாக்கியது. கிரே ஹவுண்ட்ஸ் படை ஒரிஸ்ஸாவில் நடத்திய தாக்குதலில் சில முக்கியத் தலைவர்கள் உள்ளிட்ட முப்பது மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். கட்சி பலத்த சேதமடைந்தது. இருந்த போதிலும் அது பரந்து விரிந்த தளத்தைக் கொண்டிருந்ததால் அதனால் இன்னும் கூட இழப்புகளைத் தாங்கியிருக்க முடியும். ஆனால் மாணவர் இளைஞர் அமைப்புகள், விவசாயிகள் சங்கங்கள், மற்ற பகுதி அமைப்புகள் ஆகியவை தகர்க்கப்பட்டது கட்சிக்குப் பேரிடியாக அமைந்தது. இழப்புகளைச் சரிகட்ட மேலும் புதிய தோழர்களை உருவாக்கும் வாய்ப்பு குறைந்து கொண்டே வந்தது.

ஏறக்குறைய இதே நிலைதான் பிஹாரிலும் நிதிஷ் ஆட்சியின் போது ஏற்பட்டது. எனவே 2015 க்குப் பிறகு மாவோயிஸ்ட் கட்சியின் நடவடிக்கைகள் பெரும்பாலும் சட்டிஸ்கர், ஜார்கண்ட் ஆகிய காடுகள் சூழ்ந்த, பலவீனமான போலீஸ் படைகள், மோசமான சாலை வசதிகள் கொண்ட மாநிலங்களை மையமாகக் கொண்டிருந்தது.

சட்டிஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்கள் அறுபது சதவீதத்துக்கு மேல் காடுகள் சூழ்ந்தவை. பழங்குடி மக்கள் பெருவாரியாக வசிப்பவை. இப்பகுதிகள் பெரும்பாலும் கார்ப்பரேட்டுகளின் வணிகச் செயல்பாடுகளுக்குத் திறந்து விடப்படாமலிருந்தன. உலகமயத்துக்குப் பின்பு இப்பகுதிகளில் குவிந்து கிடக்கும் இரும்பு போன்ற கனிம வளம் கண்டுபிடிக்கபட பன்னாட்டு நிறுவனங்களும், உள்நாட்டுப் பெருமுதலாளிகளும் அங்கே பிரம்மாண்டமான சுரங்கங்கள் அமைக்கவும், ஆலைகள் கட்டவும் தொடங்கினர்.

பழங்குடிகளை வெளியேற்றுவது என்று இந்த சுரங்க நடவடிக்கைகளுக்குத் தவிர்க்க முடியாததாகியது. மாவோயிஸ்டுகள் பழங்குடி மக்கள் பக்கமும், அரசு கார்ப்பரேட்டுகள் பக்கமும் நிற்க மோதல்கள் தவிர்க்கமுடியாதவையாக மாறின.

சட்டிஸ்கர்  பல்லாயிரம் கிலோமீட்டர் பரப்பளவுள்ள மலைகளும் காடுகளும் சூழ்ந்த மாநிலம். இது முழுவதும் படைகளைக் கொண்டு வந்து குவித்து நக்சலைட்டுகளை ஒழிப்பது சாத்தியமில்லை என்பதை அரசும், கார்ப்பரேட்டுகளும் நன்கு உணர்ந்திருந்தனர். அவர்கள் ஒரு புதிய வழியைக் கண்டு பிடித்தனர்.

சட்டிஸ்கர் ஒரு மாநிலமாவதற்கு முன்பு நக்சலைட்டுகளை எதிர்கொள்ள மகேந்திர கர்மா என்ற காங்கிரஸ் தலைவர் ஜன் ஜக்ரன் அபியான் என்ற இயக்கத்தை உருவாக்கியிருந்தார். உள்ளூர் வணிகர்கள், ஒப்பந்ததாரர்கள் ஆதரவை மட்டுமே பெற்றிருந்த இந்த அமைப்பு பெரியதாக வளரவில்லை. இது நக்சலைட்டுகளால் ஒழிக்கப்பட்டு கர்மாவும் மற்ற தலைவர்களும் போலீஸ் பாதுகாப்பில் வாழ்ந்து வந்தனர்.

2005 வாக்கில் டாட்டாவும் எஸ்ஸார் குரூப்பும் சட்டிஸ்கரில் சுரங்கம் தோண்டும் நடவடிக்கைகளைத் தொடங்கின. தங்கள் பாதுகாப்புக்கு இப்பகுதியிலிருந்து மாவோயிஸ்டுகளை ஒழித்தே ஆகவேண்டும் என்று இவர்கள் அரசுக்கு நெருக்கடி கொடுத்தனர். மகேந்திர கர்மாவுக்குப் புத்துயிர் அளித்துப் பழக்குடி அமைப்பு உருவாக்க அனுப்பியது. அவர் தமது இயக்கத்துக்கு சல்வா ஜுடும் என்று பெயரிட்டு மாவோயிஸ்டுகள் மையமான தண்டேவாதா பகுதியில் தமது தலைமையகத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

சல்வா ஜுடும் போலீஸ், துணைராணுவப் படைகளின் உதவியோடு குறைந்தது மூன்று லட்சம் பழங்குடி மக்களைப் பெரும் பெரும் முகாம்களில் அடைத்தது. பழங்குடி இளைஞர்களையும் சிறுவர்களையும் கடத்திச் சென்று தங்கள் அமைப்பில் பலவந்தமாகச் சேர்த்தது. கிராமங்களை எரித்தது. எண்ணற்ற படுகொலைகளில் ஈடுபட்டது. சல்வா ஜுடும் மட்டும் 600 பழங்குடி கிராமங்களை எரித்ததாக மனித உரிமை அமைப்புகள் கணக்கிட்டுள்ளன. லட்சக்கணக்கானவர்கள் தங்கள் கிராமங்களை விட்டோடி அகதிகளாயினர்.

சல்வா ஜுடும் உறுப்பினர்களுக்குச் சிறப்புக் காவல் அதிகாரிகள் என்ற அந்தஸ்த்தை அரசு வழங்கியது. இது போன்ற அமைப்புகளைத் தடை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் இது தொடர்ந்து இயங்கியே வந்தது.

மாவோயிஸ்ட் அமைப்பு இரண்டு விதமாக இதை எதிர்கொள்ள முயன்றது.

  1. பதிலடித் தாக்குதல்கள் மூலம் சல்வா ஜுடுமை ஒழிப்பது, துணைராணுவப்படைகளுக்குச் சேதத்தை ஏற்படுத்தி அவர்கள் இயக்கத்தைத் தடை செய்வது.
  2. லஷ்கர் ஈ தோய்பா, அல் கைதா, இஸ்லாமிக் ஸ்டேட் ஆகிய அமைப்புகள் வலிமை வாய்ந்த எதிரிக்கு எதிராக ஆயிரம் வெட்டுகள் அதாவது பல காயங்கள் ஏற்படுத்தி பெரும் எதிரியை பலமிழக்கச் செய்வது என்ற உத்தியைப் பயன்படுத்திவருகின்றன. மாவோயிஸ்ட் கட்சி மேலும் பல தளங்களை உருவாக்குவதன் மூலம் அரசின் பலத்தைச் சிதறடிப்பது என்ற உத்தியைச் செயல்படுத்த முடிவு செய்தது.

முதல் உத்திப்படி சட்டிஸ்கரில் தண்டேவாதா காடுகளில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் ஜூன் வரை மாவோயிஸ்ட் கட்சி பதிலடித் தாக்குதல்களில் ஈடுபடும். இது Tactical counter offensive என்றழைக்கப்பட்டது. அரசுக்கு இழப்புகள் ஏற்படுத்துவது, முற்றுகையிடப்பட்ட நிலைமையை உடைப்பது, அரச படைகளின் இயக்கத்தைத் தடை செய்வது, மக்களிடம் படைகள் பலவீனமானவை என்ற எண்ணத்தை ஏற்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது இந்த நடவடிக்கை. 2010 ஆம் ஆண்டு ஏப்ரலில் நடத்தப்பட்ட ஒரு பெரிய தாக்குதலில் 76 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 3 ஏப்ரல் 21ல் கோப்ரா என்ற சி ஆர் பி எஃப் சிறப்பு அதிரடிப்படை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 22 வீரர்கள் கொல்லப்பட்டனர். 31 பேர் காயமடைந்தனர்.

வேனில்காலங்களில் வெப்பநிலை 45 டிகிரி செல்ஷியசை எட்டும், தொலைவில் இருந்து தாக்குபவர்களைக் காண முடியாது. ஆறுகள் வறண்டு நடமாட்டம் எளிதாகும், தரை வறண்ட இலைகளால் மூடப்பட்டிருக்க படைகள் வரும் போது சத்தம் எழும்பும். மக்கள் பீடி இலை பறிக்கும் காலம். எனவே காட்டில் நடமாட்டம் இருக்கும், உளவுத் தகவல்கள் கிடைகும். எனவே வெயில் காலத்தில் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் நடக்கும்.

அரசு டிரோன்கள் மூலம் நக்சல் நடமாட்டத்தைக் கண்காணிக்கிறது. காடுகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. தவிர சமவெளிகளில் இருந்து அடக்குமுறை காரணமாகக் காட்டுக்கு வந்தவர்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் சரணடைவதும் நடக்கிறது.

சட்டிஸ்கர் போலவே ஜார்கண்ட் மாநிலத்திலும் புர்ஹா பஹார் என்ற அடர்ந்த காடுகள் சூழ்ந்த பகுதி மாவோயிஸ்டுகளின் தளமாகவிருந்தது. 2022 ஆபரேஷன் ஆக்டோபஸ் மூலம் கோப்ரா அதிரடிப்படைகள் நடத்திய தாக்குதலில் அப்பகுதி அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இரண்டாவது தந்திரமான விரிவுபடுத்தும் செயல்தந்திரத்தின் படி கடந்த பதினைந்து ஆண்டுகளாகவே மாவோயிஸ்ட் கட்சி தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா எல்லையில் ஆயுதப் போராட்டத்துக்கான தளம் அமைக்க முயன்று வருகிறது. ஒப்பீட்டளவில் கேரளக் காவல்துறையின் பலம் குறைவானது என்பதால் கேரளா எல்லைக்குள் இருக்கும் வயநாடு, அட்டப்பாடி பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் ஆயுதக் குழுக்கள் இயங்குவதாகச் செய்திகள் கூறுகின்றன.

ஆனால் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் ஒரு மாநில அரசின் பலவீனம் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத நிலை உள்ளது.  தவிர கேரள அரசு பலவீனமாக உள்ளது என்றால் அது சட்டிஸ்கர் ஜார்கண்ட் போல உள்ளது என்று கருத முடியாது. விரைந்து தன்னை பலப்படுத்திக் கொள்வதற்கான எல்லா உள்கட்டமைப்பு வசதிகளையும் கேரள மாநிலம் கொண்டுள்ளது.  மாவோயிஸ்ட் குழுக்கள் இயங்குவதாகக் கருதப்படும் பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே பழங்குடி கிராமங்கள் காலி செய்யப்பட்டு வேறிடங்களில் குடியமர்த்தப்பட்டுவிட்டன. காடுகள் இந்தப் பகுதிகளில் மக்கள் நடமாட்டமில்லாத பச்சைப் பாலைவனங்களாகவே உள்ளன. இந்தக் காடுகளில் அட்டையும், யானையும் மட்டுமே உள்ளன. மக்களே இல்லை என்று ஒரு தோழர் கூறினார். இருக்கும் கிராமங்களும் அரசின் முழுமையான பார்வையில், அனைத்து தகவல் தொடர்பு வசதிகளும் கொண்டவையாக உள்ளன. தமிழ்நாடு – கர்நாடகப் பகுதிகளில் வீரப்பன் வேட்டையின் காரணமாக அரசுகளுக்குக் காடுகளில் செயல்பட்ட அனுபவமும், உளவாளிகளின் வலைப்பின்னலும் உள்ளது.  இந்த நிலை ரகசிய செயல்பாடுகளுக்குக் கொஞ்சமும் ஏற்றதாக இல்லை.

வனங்கள் இப்போது இந்தியாவில் முதலீட்டுக்கான மையங்களாக உள்ளன. பல வலிமை வாய்ந்த பன்னாட்டு சுற்றுச் சூழல் நிறுவங்கள் இங்கே செயல்பட்டு வருகின்றன. ஒன்றிய அரசும் காடுகளைப் பசுமைச் சுற்றுலா, காடுகளைப் பாதுகாத்து வைப்பதன் மூலம் பன்னாட்டு நிதி பெறுதல், கார்பன் டிரேடிங் எனப்படும் புதியவை சூழல் வணிகம் ஆகியவற்றுக்காகப் பயன்படுத்த முயன்று வருவதால் இங்கே நக்சல் அமைப்பு காலூன்ற விடக்கூடாது என்பதில் தீவிரமாக உள்ளது.

எனவே அரசு பலவீனமாக உள்ள இடத்தில் தளப்பிரதேசம் அமைத்தல் என்ற கோட்பாடு முதலிலேயே அடிபட்டுப் போகிறது. வனத்தில் ஆயுதப் போராட்டத்துக்கான தயாரிப்புகள் நடப்பதாக அரசு கருதுவதால் கீழே உள்ள நகரங்களில் மாவோயிஸ்ட் கட்சியின் முன்னணி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்று அரசு கருதும் தோழர்கள் மீது கடும் அடக்குமுறை பிரயோகிக்கப்படுகிறது. வனங்களிலும் மக்கள் திரள் அமைப்புகள் எதுவும் கட்டப்பட்டதாகவோ, குறிப்பிடத்தக்க பதில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவோ செய்திகள் இல்லை.

அதே நேரம் சுமார் பத்து தோழர்கள் நக்சல் எதிர்ப்புச் சிறப்பு அதிரடிப்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் பகுதியில் கட்சிக்கு உள்ள பலத்தை வைத்துப் பார்க்கும் போது இது மிகப்பெரிய சேதமாகும். கேரள மக்கள், கலைஞர்கள் இடையே அடுத்துத்தடுத்து நடந்து வரும் இந்த போலி மோதல் கொலைகள் மாவோயிஸ்டுகள் மேல் அனுதாபத்தை ஏற்படுத்தியிருந்தாலும் அதைப் பயன்படுத்திக் கொள்ளும் இடத்தில் கட்சி உள்ளதா என்பது சந்தேகமே.

பொதுவாக இந்தியா முழுவதிலுமுள்ள நிலைமையைப் பரிசீலித்துப் பார்த்தால் எழுபது காலகட்டங்களில் நக்சல்பாரி கட்சியானது முழுமையாக அழிக்கப்பட்டது போன்ற சூழல் இப்போது இல்லை என்றாலும் மாவோயிஸ்ட் கட்சி பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.

சட்டிஸ்கர், ஜார்கண்ட் பகுதிகளை மாவோயிஸ்ட் கட்சி பின்வாங்கு தளமாகப் பயன்படுத்தவே முடிவு செய்திருந்தது. ஆனால் இப்போது பாதுகாப்பான பின்வாங்கும் தளமாக உருவாக்க நினைத்திருந்த காட்டிலேயே போரிட வேண்டிய நிலை உள்ளது.

முதன்மையான எதிரியாக நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கு பதில் கார்ப்பரேட் அமைப்புகள் உள்ளன.  அரசு தனது முழு பலத்துடன் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக இயங்கிவருகிறது. உழுபவனுக்கே நிலம் என்ற நக்சல்பாரி எழுச்சியின் அடிப்படை நோக்கமே மாற வேண்டிய நிலை உள்ளது. அதே போல சர்வ வல்லமை வாய்ந்த நிலப்பிரபுக்கள் பெரும்பாலும் அழிந்து விட்டனர் அல்லது வேறு தொழில்களுக்கு மாறிவிட்டனர். அவர்களுக்கு பதில் கிராமங்களில் சாதி அடையாள அரசியல் குழுக்கள் உள்ளன. சாதியை வர்க்கமாக உடைப்பதிலும் நிலப்பிரபுக்களுக்கு எதிராக அவரது சாதியைச் சேர்ந்தவர்களையே நிறுத்துவதிலும் இதுவரை இடதுசாரி கட்சிகள் வெற்றி பெற்றே வந்துள்ளன. ஆனால் இப்போது முழு முழு சாதிகளே ஒன்று திரண்டு எதிரும் புதிருமாக நிற்கும் நிலையில் வேறு செயல்தந்திரங்கள் தேவைப்படுகின்றன.

எந்த வெளிப்படையான அமைப்பும் இயங்க முடியாத நிலையில் கட்சி மாற்று வழிகளை உருவாக்கிச் செயல்படுத்துவது போலத் தெரியவில்லை. உலகம் முழுவதுமுள்ள இடதுசாரி அறிவாளிகள் மாறிவரும் சூழலுக்கு ஏற்ற பிரச்சார உத்திகளை விவாதித்து வருகின்றனர். உதாரணமாக நூறாண்டுகளுக்கு முன்பு தொழிலாளர்கள் மீதான சுரண்டலை பல்சக்கரத்துக்கு இணையாக வைப்பது மிகச் சிறந்த பிரச்சார உத்தியாவிருந்தது. இன்றைய தொழிலாளிக்கும், இளைஞர்களுக்கும் இது புரியுமா என்பது சந்தேகமே. ஒவ்வொரு இளைஞரும் இரண்டு மூன்று வேலை செய்ய வேண்டிய நிலை இன்று உள்ளது. இது போன்ற வாழ்நிலைகளைப் பிரதிபலிக்கும் வண்ணம் புதிய குறியீடுகளை உருவாக்க மார்க்சியர்கள் முயன்று வருகின்றனர். ஆனால் மாவோயிஸ்ட் கட்சி இது குறித்து வெளிப்படையாக எதுவும் பேசியதாகத் தெரியவில்லை.

அபு மூஸா அல் சூரி தலைவரில்லாத போர்முறை, மையமில்லாத போர்முறை, தனிநபர் முன்முயற்சியில் தாக்குதல்கள் என்ற கோட்பாட்டை உருவாக்கினார். இணையத்தின் மூலம் அமைப்பானது அரசியல் கோட்பாட்டை பிரச்சாரம் செய்யும். வழிவகைகள் ஆகிவற்றை உருவாக்குவதில் உதவும். ஆனால் உறுப்பினர்கள் தனித்தே இயங்க வேண்டும். ஒரு குழுவுக்கும் இன்னொரு குழுவுக்கும் இணைப்பே இருக்காது. இத்தகைய தாக்குதல்களில் இருந்தே ஒரு கெரில்லாப் படை உருவாகி வரும் என்கிறார் அபு மூஸா அல் சூரி. இந்தத் தந்திரங்களைப் பயன்படுத்தியே ஈராக்கில் அல் கைதா அழியும் நிலையிலிருந்து மீண்டு வந்தது. இணையத்தை மிகச் சிறப்பாகப் பயன்படுத்துவதில் அல் கைதா, இஸ்லாமிக் ஸ்டேட் ஆகிய அமைப்புகள் மிகவும் செயல்திறனுடன் செயல்படுகின்றன.

இந்தியாவில் மாவோயிஸ்ட் கட்சியைப் பொருத்தவரை முன்பு போல கிராமங்களுக்குச் செல்வோம் இயக்கங்களை நடத்துவது சாத்தியமில்லை. ஒவ்வொரு கிராமத்திலும் சாதியிலும் அடையாள அரசியல் பேசும் சாதியக் குழுக்கள் உள்ளன. அவற்றை மீறியே கட்சி மக்களை அணுக வேண்டி உள்ளது. அதே நேரம் இணைய வெளி மிகப் பெரிய அளவுக்கு வளர்ந்து யாராலும் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு வந்துள்ளது. பெண்கள் கல்லூரியில் போய் அமைப்பு கட்டுவது சாத்தியமில்லை. ஆனால் சமூக வலைத்தளங்கள் மூலம் எல்லாப் பெண்களிடமும் அரசியல் பேசிவிட முடியும். புது உலகம் அதற்கே உரிய வாய்ப்புகளையும் சிக்கல்களையும் கொண்டுள்ளது.

இணையத்தில் மாவோயிஸ்ட் கட்சியின் பிரச்சாரம் பெரிய அளவுக்கு செல்வாக்கு செலுத்துவது போலத் தெரியவில்லை. அதுவும் பிஜேபி போன்ற கட்சிகளின் பிரம்மாண்டமான இணையச் செயல்பாடுகளுக்கு முன் மாவோயிஸ்ட் கட்சியின் செயல்பாடுகள் குறிப்பிடத்தக்கதாக இல்லை. எனவே நகரங்களில் உள்ள இளைஞர்கள் மாணவர்களிடம் தொடர்பு கொள்ள கட்சி என்ன நடைமுறையைப் பின்பற்றுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

முன்னேற்றமும் பின்னடைவும் மாறி மாறிவரும். இது பின்னடைவுக் காலம். நீண்டகால மக்கள் யுத்தத்தில் இது வழக்கமானதுதான் என்று மாவோயிஸ்ட் கட்சி கருதுகிறது. தங்களால் இந்த நெருக்கடியைச் சமாளித்து முன்னேற முடியும் என்றும் கட்சித் தோழர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். அரசோ மாவோயிஸ்டுகள் ஏற்கெனவே தங்கள் இறுதி நாட்களில் இருக்கின்றனர். மீதியிருப்பவர்களை விரைவில் முழுமையாக ஒழித்துவிடுவோம் என்று கூறுகிறது.

காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

 

முற்றும்