நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும், அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்காத காரணத்தினால் மாணவன் ஒருவன் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறான். அதைத் தொடர்ந்து அவன் தந்தையும் தற்கொலை செய்துகொண்ட துயர நிகழ்வு சமீபத்தில் நடந்திருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் நீட் தேர்வைத் தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது தமிழ்நாட்டில் வழக்கமான ஒன்றாக மாறிவருகிறது. இது போன்ற சம்பவங்கள் நடக்கும் அந்த சில நாட்கள் மட்டும் நீட் பொது விவாதத்திற்கு வந்துவிட்டு திரும்பவும் எல்லோராலும் மறக்கப்பட்டு விடுகிறது. நீட் தொடர்பாகப் பொது விவாதங்கள் நடக்கும்போதெல்லாம் கூடவே சில திட்டமிட்ட பொய் பிரச்சாரங்களும் கட்டவிழ்த்து விடப்பட்டு, மிக வேகமாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றன.
ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் நீட் தேர்விற்கு எதிரான மனநிலையில் இருக்கும் போது, இப்படிப்பட்ட பொய் பிரச்சாரங்களின் வழியாக நீட் தேர்விற்கு எதிரான இந்தப் பொது மனநிலையை குலைத்துவிடலாமென்ற நோக்கத்தில் தான் இவை பரப்பப்படுகின்றன. இந்த பிரச்சாரங்களுக்கு பின்னால் உள்ள பொய்களை தரவுகளுடன் விளக்குவதே இந்த கட்டுரையின் நோக்கம்.
ஒவ்வொரு வருடமும் நீட் தொடர்பான உண்மைகளைத் திரும்பத் திரும்ப எழுதுவது அயற்சியாக இருந்தாலும், பொய் என்று தெரிந்தும் திட்டமிட்டுத் தொடர்ந்து பரப்புரை செய்ய அவர்கள் தயங்காதபோது, உண்மைகளை திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியதும் நமது கடமையாகிறது.
பொய் 1:
நீட் தேர்வு எல்லாருக்கும் சமமானது, சமமான வாய்ப்பை வழங்குகிறது
நிச்சயமாக இல்லை. நீட் தேர்வு ஏழை, எளிய அடித்தட்டு மக்களுக்கு எதிரானது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரும்பாலான ஏழை, எளிய அடித்தட்டு, விளிம்பு நிலை மாணவர்கள் மாநிலப் பாடத்திட்டங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் படித்து வருகிறார்கள். சிபிஎஸ்சி படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் உயர் மட்டும் உயர் நடுத்தர வர்க்கத்து மாணவர்களே!.
நீட் தேர்வு என்பது பெரும்பாலும் இந்த சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுவதால் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். சிபிஎஸ்சி படிக்கும் மாணவர்களுமே கூட நீட் தேர்வுக்கென்று பல லட்சங்களைச் செலவு செய்து பயிற்சி வகுப்பை எடுத்துக்கொண்டால்தான் அவர்களால் நிறைய மதிப்பெண்கள் வாங்க முடிகிறது. இந்தச் சூழலில் எந்தப் பயிற்சி வகுப்பிற்கும் செல்ல முடியாத, மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களால் எப்படி இவர்களோடு போட்டி போட முடியும்? எனவே நீட் தேர்வு எல்லோருக்கும் சமமானது என்பது மிகப்பெரிய பொய்.
கீழே உள்ள தரவுகளைப் பாருங்கள்:
மாநிலப் பாடத்திட்டத்தில் தமிழ் வழியில் படித்து அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைத்த மாணவர்களின் எண்ணிக்கை:
நீட் தேர்விற்கு முன்பு:
2015-2016 ஆம் ஆண்டு – 510 இடங்கள்
2016-2017 ஆம் ஆண்டு – 537 இடங்கள்
நீட் தேர்விற்குப் பிறகு:
2015-2016 ஆம் ஆண்டு – 52 இடங்கள்
2016-2017 ஆம் ஆண்டு – 106 இடங்கள்
சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்து அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைத்த மாணவர்களின் எண்ணிக்கை:
நீட் தேர்விற்கு முன்பு 2016 ஆம் ஆண்டு – 62
நீட் தேர்விற்கு பிறகு 2018 ஆம் ஆண்டு – 1220 இடங்கள் (கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகம்)
இந்தத் தரவுகளிலிருந்து நீட் தேர்வு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு எதிரானது, சிபிஎஸ்சி யில் படிக்கும் மாணவருக்கு சாதகமானது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். நீட் தேர்வு உண்மையில் சமமற்ற தேர்வு.
பொய் 2:
மாணவர்கள் தோல்வியின் விரக்தியில் தாழ்வு மனப்பான்மையில் தற்கொலை செய்து கொள்கிறார்கள்
முதலில் நீட் தேர்விற்குப் பிறகு தற்கொலை செய்துகொண்ட மாணவர்கள் யாரும் திறமையற்றவர்களோ, தோல்வி அடைந்தவர்களோ இல்லை. தங்களது பாடத்திட்டங்களில் மிக அதிகமான மதிப்பெண்களைப் பெற்றவர்களே! தங்களது பாடத்திட்டத்தில் 97 சதவீதத்திற்கு மேல் எடுத்து தங்களை நிரூபித்தவர்கள். அதே போல அவர்கள் நீட்டில் தோல்வி அடைந்தவர்கள் கிடையாது, நீட் தேர்வில் தகுதியடைந்தவர்கள், ஆனால் அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கப்பெறாதவர்கள்.
சிபிஎஸ்சியில் படித்து, சில வருடங்கள் லட்சக்கணக்கில் பணம் கட்டிப் படித்தவர்களுக்கே பெரும்பாலும் அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைக்கிறது. இந்த சொகுசுகள் கிடைக்கப்பெறாத ஏழை, எளிய மாணவர்களால் இவர்களுடன் போட்டி போட முடிவதில்லை, அதன் விளைவாக நீட்டில் தேர்ச்சி பெற்றும் அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைக்காத நிலை இவர்களுக்கு ஏற்படுகிறது. அதனால் இதற்கான பழியை மாணவர்களின் மீது போட முடியாது, அவர்கள் தங்கள் திறமையை நிரூபித்தும் இடம் கிடைக்காத நிலைக்கு நீட் தேர்வு ஒரு பிரிவினருக்கு மட்டும் சாதகமாக இருப்பதே காரணமன்றி மாணவர்கள் அல்ல.
பொய் 3:
நீட் ஊழலை ஒழிக்கிறது
பொது மக்களிடம் ஊழல் என்ற வார்த்தையைக் கொண்டு சென்றால், மிக சுலபமாக என்ன சொன்னாலும் நம்பி விடுவார்கள் என்ற நம்பிக்கையில்தான் நீட் தேர்வு ஊழலை ஒழிக்கிறது என்ற பொய் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. நீட் தேர்வு முறைகேடுகள் குறித்துப் பல வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கின்றன. நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி, ஓஎம்ஆர் முறைகேடு, கேள்வித்தாள் வெளியானது போன்ற பல பெரிய முறைகேடுகள் வழக்குகளாகப் பதியப்பட்டிருக்கின்றன. முடிவுகளில் எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லாததும், மிகவும் குழப்பமான மதிப்பெண் கணக்கிடும் முறையும் இந்த முறைகேடுகளுக்குக் காரணமாக இருக்கின்றன.
நீட் தேர்வு நடத்தும் பொறுப்பும் தனியார் நிறுவனங்களுக்கே கொடுக்கப்படுகின்றன. இதனாலும் இந்த முறைகேடுகள் முறையாக விசாரிக்கபடாமலும், தீர்க்கப்படாமலும் இருக்கின்றன. உச்சநீதி மன்றம் நீட் தேர்வு முறைகேடுகள் குறித்துப் பல முறை கவலை தெரிவித்திருக்கிறது. 2022 ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் இடங்கள் 20 இல் இருந்து 25 லட்சம் வரை விற்கப்படுவதாக வந்த புகாரில் ஹரியானா மற்றும் டெல்லியைச் சேர்ந்த எட்டு பேரை சிபிஐ கைது செய்திருக்கிறது. அவர்கள் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து சில மாணவர்களுக்கு மருத்துவ இடங்களைப் பெற்று தந்தது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. பல வருடங்களாகவே இந்த ஊழலில் அவர்கள் ஈடுபட்டு வருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். நீட் தேர்வின் நோக்கம் மட்டுமல்ல அது நடத்தப்படும் முறைகளிலுமே பல ஊழல்களும், முறைகேடுகளும் இருக்கின்றன என்பதே உண்மை.
பொய் 4:
அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சாதகமானது:
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வந்ததன் விளைவாகவே கணிசமான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் கிடைத்திருக்கின்றன. அதற்குக் காரணம் இட ஒதுக்கீடேயன்றி நீட் தேர்வு அல்ல. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசு மற்றும் தனியார் பள்ளி என்ற வகையில் மட்டும் மாணவர்களைப் பிரித்து பார்க்க முடியாது. ஏனென்றால் தமிழ்நாட்டில் ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்து மாணவர்கள் பெரும்பாலும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளும், மிஷன் பள்ளிகளிலுமே படிக்கிறார்கள். தனியார் பள்ளியில் படிப்பதால் இவர்களை மிக உயர் வருமான மாணவர்கள் எனக் கருத முடியாது.
தமிழ்நாட்டில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் நிகழ்ந்த கல்விப் புரட்சியின் விளைவாக ஏராளமான தனியார் பள்ளிகளும், மிஷன் பள்ளிகளும் அரசு உதவி பெற்று மிக குறைந்த கல்விக் கட்டணத்தில் கல்விச் சேவையை வழங்குகின்றன. ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களுக்குக் கல்வியை மிக இலகுவாக அடைய முடிந்ததற்கு இந்த பள்ளிகளும் காரணம். இவர்களெல்லாம் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கக்கூடிய மாணவர்கள். இவர்களையெல்லாம் தவிர்த்துவிட்டு அரசுப் பள்ளி மாணவர்களை மட்டும் கருத்தில் கொண்டு நீட் தேர்வை மதிப்பிடக்கூடாது, அது நமக்குள் பிளவை உண்டாக்கும் முயற்சி எனப் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் நீட் தேர்வின் வழியாகப் பயன் பெறும் மாணவர்களை மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களா அல்லது சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்தவர்களா என்றே பார்க்க வேண்டும். ஏனென்றால் மாநிலப் பாடத்திட்டத்தில் அரசுப் பள்ளியிலோ அல்லது தனியார் பள்ளிகளிலோ படிக்கும் அனைத்து மாணவர்களுமே ஏழை, எளிய, நடுத்தரப் பிரிவை சேர்ந்த மாணவர்களே! நீட் தேர்வு இவர்களைத் தான் ஒட்டு மொத்தமாக வஞ்சிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பொய் 5:
நீட் திறமையான, தகுதியான மருத்துவர்களை உருவாக்கும்.
திறமை, தகுதி என்பது என்ன? யார் திறமையான மருத்துவர்கள்?
கோவிட் பெருந்தொற்று தொடங்கிய நேரத்தில், இதன் தீவிரத்தை முழுவதுமாக அறிந்து கொள்ளும் முன்பு எந்தப் பரிசோதனை முயற்சியும் செய்ய வேண்டாம் என அனைத்து தனியார் மருத்துவமனைகளும் தங்களது கதவுகளை அடைத்துக்கொண்டனவே அங்கிருந்த மருத்துவர்கள் திறமையானவர்களா?
எய்ம்ஸ் போன்ற நாட்டின் தலை சிறந்த மருத்துவமனைகள் எனச் சொல்லப்படும் மருத்துவமனைகளெல்லாம் ஏழை, எளிய மக்களால் கோவிட் நேரத்தில் அணுக முடியாத வகையில் இருந்தனவே அங்கிருந்த மருத்துவர்கள் திறமையானவர்களா?
அதே நேரத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல் தமிழ்நாட்டின் அனைத்து அரசு மருத்துவமனைகளும் ஏழை, எளிய மக்களுக்குத் தேவையான மருத்துவ உதவியை எந்த நேரமும் கொடுத்துக்கொண்டிருந்தன. அங்கிருந்த மருத்துவர்கள் தங்களின் உயிரைப் பற்றித் துளியும் கவலையில்லாமல் ஓய்வின்றி எந்த நேரமும் கோவிட் பணியில் தங்களை இணைத்துக்கொண்டனரே அதற்கு என்ன காரணம்? ஏனென்றால் அவர்கள் நம்மிடம் இருந்து சென்றவர்கள், நம்மைப் போன்ற ஏழை, எளிய குடும்பங்களிலிருந்து வந்தவர்கள்.
தம் மக்களுக்குப் பயன்படாத அறிவையோ, திறமையையோ வைத்துக்கொண்டிருப்பதில் என்ன பயன் இருக்கிறது?
ஐஐடி, எய்ம்ஸ் போன்ற ஒன்றிய அரசின் அதிசிறப்பு வாய்ந்த மருத்துவமனைகளில் படிக்கும் மாணவர்கள் தங்களது படிப்பை முடித்தவுடன் பெரும்பாலும் வெளிநாடுகளுக்குச் சென்று விடுகின்றனர். அவர்களின் கல்வியையோ அல்லது அறிவையோ ஏழை, எளிய மக்களுக்காக எப்போதாவது பயன்படுத்தியிருக்கிறார்களா?
தமிழ் நாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் அவர்களின் சொந்த ஊருக்கே சென்று சேவை புரிகின்றனர், தங்களது மக்களுக்கே தங்களின் அறிவை பயன்படுத்துகின்றனர், இப்படிப்பட்ட அறிவும், திறமையும்தானே அவசியம்.
இன்று தமிழ்நாட்டு மருத்துவக் கட்டமைப்பு ஏனைய மாநிலங்களை விட மிகச் சிறப்பாக வலுவானதாக இருப்பதற்கு மாநிலப் பாடத்திட்டத்திலிருந்து படித்து வந்த ஏழை, எளிய, கிராமப்புற மருத்துவர்கள தானே காரணம்!. அவர்கள் என்ன நீட் தேர்வு எழுதியா வந்தார்கள்? நாட்டிற்கு முன்னுதாரணமாகத் திகழும் வகையில் மருத்துவக்கட்டமைப்பை உருவாக்கிய ஏழை, எளிய பின்ணணியில் இருந்து வந்த மருத்துவர்களைத் தகுதி இல்லை, திறமையில்லை எனச் சொல்ல முடியுமா? நீட் தேர்வின் விளைவாக இத்தனை ஆண்டுகள் நாம் திட்டமிட்டு உருவாக்கிய தமிழ்நாட்டு மருத்துவ இடங்கள் வெளி மாநில மாணவர்களுக்குத் திறந்து விடப்படும், இதன் விளைவாக நமது அரசு மருத்துவமனைகளில் ஹிந்தி பேசும் மருத்துவர்கள் ஏராளமாக வந்து சேர்வார்கள், அவர்கள் எப்படி நம் மக்களைப் புரிந்து கொள்வார்கள்? உரையாடுவார்கள்? அவர்களுக்காக நிற்பார்கள்?
நீட் தேர்வு வெறும் மருத்துவக்கல்வியை மட்டுமே பாதிப்பதல்ல, நீண்ட நாள் நோக்கில் அது நமது வலுவான மருத்துவக் கட்டமைப்பையே தகர்க்கக்கூடியது, அப்படிப்பட்ட ஆபத்துதான் தகுதி, திறமை என்ற ஸ்டிக்கர் ஒட்டி கொண்டு வரப்படுகிறது.
பொய் 6:
மருத்துவப் படிப்பு மட்டும் தான் படிப்பா?
நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக் கனவு என்பது இன்று, நேற்று வந்ததல்ல, பல காலங்களாகவே இருந்து வருகிறது. அதற்குக் காரணம் கல்வியில் முன்னேறிய மாநிலமாக நாம் இருப்பதே.
ஏனைய மாநிலங்களிலெல்லாம் மருத்துவப் படிப்பு என்பது ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களுக்கு அடைய முடியாத ஒன்றாகயிருந்த சூழலில் தமிழ் நாட்டில் நன்றாகப் படிக்கும் எந்த மாணவராலும் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை திராவிடக் கட்சிகள் உருவாக்கின. அதன் விளைவாக இயல்பாகவே நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு டாக்டராகலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. மருத்துவப் படிப்பு என்பது பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் அது அவர்களின் அத்தனை துயரங்களில் இருந்தும் மீட்கக்கூடிய ஒன்றாக மாணவர்களால் பார்க்கப்பட்டது.
மருத்துவராகிவிட்டால் தன் குடும்பத்தின் அத்தனை பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மாணவர்களுக்கு இயல்பிலேயே இருந்தது. இதன் காரணமாகவே நன்றாகப் படிக்கும் மாணவர்களின் கனவாக மருத்துவ படிப்பு இருந்தது. அதற்குரிய வகையில் தங்களைச் சிறு வயதில் இருந்தே தயார் படுத்தி வருகிறார்கள். நன்றாகப் படித்தும், போதுமான மதிப்பெண்களைப் பெற்றும் தங்களுக்கு மருத்துவப் படிப்பு கிடைக்கவில்லை என்பது அவர்களைப் பொறுத்த வரையில் பெரும் ஏமாற்றம். இவர்கள் சொல்வது போல இந்த மாணவர்கள் திறமையற்றவர்களோ, தேர்ச்சி பெறாதவர்களோ இல்லை, 97 சதவீதத்திற்கும் மேற்பட்ட மதிப்பெண்களை வாங்கும் திறமை இருந்தும் நீட் என்ற சதியின் விளைவாக அவர்களுக்கு மருத்துவ படிப்பு கிடைக்காதபோது அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் விபரீத முடிவுக்குச் செல்கிறார்கள். அதனால் மருத்துவப் படிப்பு என்பது தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மாணவர்களுக்கு வெறும் படிப்பு மட்டுமல்ல, அது ஒரு விடுதலை. தங்களின் வாழ்நாள் துயரங்களிலிருந்து விடுதலை. அதற்கு அவர்கள் கொடுக்கும் நேர்மையான உழைப்பையும் மீறி அவர்கள் வஞ்சிக்கப்படும் போதே அவர்கள் நிலைகுலைந்து போகிறார்கள்.
பொய் 7:
திமுக அமைச்சர்கள் தனியார் மருத்துவக்கல்லூரிகள் வைத்திருப்பதால்தான் நீட் தேர்வை திமுக எதிர்க்கிறது:
முதலில் நீட் தேர்வைத் திமுக மட்டும் எதிர்க்கவில்லை, தமிழ்நாட்டில் பாஜகவை தவிர கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் நீட்டிற்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றன. ஏனென்றால் தமிழ்நாட்டின் பொது மனசாட்சியே நீட் தேர்விற்கு எதிரானதாகவே இருக்கிறது.
இரண்டாவது, நீட் தேர்வின் விளைவாக எந்தத் தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கும் நட்டம் எதுவுமில்லை, முன்பெல்லாம் மறைமுகமாகப் பெற்றுக்கொண்டிருந்த லட்சக்கணக்கான கட்டணத்தை நீட் தேர்விற்குப் பிறகு நேரடியாகவே கேட்டுப்பெற முடிகிற சூழல் உருவாகியிருக்கிறது. இப்போதும் நீட் கவுன்சிலிங் வலைத்தளத்தில் இந்தக் கட்டணத்தொகையை நீங்களே நேரடியாகப் பார்க்க முடியும். பெரும்பாலான நிகர்நிலைப் பல்கலைகழகங்களில் எம்பிபிஎஸ் படிப்பிற்கான கட்டணம் ஆண்டிற்கு இருபது லட்சம் முதல் முப்பது லட்சம் வரை இருக்கிறது. ஐந்து வருடங்களுக்கு ஒரு கோடிக்கு மேல். பணமிருந்தால் யார் வேண்டுமானாலும் மருத்துவம் படிக்கும் நிலையே இன்றும் இருக்கிறது, அதை நீட் மாற்றவில்லை. இன்னும் சொல்லப்போனால் நீட்டிற்குப் பிறகு இந்தக் கட்டணக்கொள்ளை அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அதனால், நீட் தேர்வினால் தனியார் மருத்துவக்கல்லூரிகள் பாதிக்கப்படுகின்றன என்பதே பொய்யான வாதம். இன்னும் நேரடியாகக் கேட்டுப்பெறும் சாதகமான சூழலைத் தான் நீட் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. 97 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் வாங்கியும் கிடைக்காத மருத்துவ இடம் பணம் இருப்பவர்களுக்கு மிகவும் சொற்ப மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் கிடைக்கிறது என்பது தான் நிலை. நீட் தேர்வு எந்த வகையிலும் இந்த நிலையை மாற்றவில்லை.
பொய் 8:
பயிற்சி வகுப்புகள் செல்லாமலேயே நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும்.
முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பது வேறு, அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைப்பது என்பது வேறு.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற எல்லோருக்கும் அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைக்காது. தற்கொலை செய்து கொண்ட மாணவர்களெல்லாம் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்களே! ஆனாலும் அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைக்கும் அளவிற்கு அவர்களிடம் நீட் மதிப்பெண் இல்லை. உதாரணத்திற்கு நீட் தேர்வில் தேர்ச்சியடைய வெறும் 100 இல் இருந்து 110 மதிப்பெண் வரை எடுத்தால் போதும், ஆனால் அரசு மருத்துவக்கல்லூரி இடங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு வேண்டுமானால் குறைந்தபட்சம் 500 மதிப்பெண்களாவது எடுத்திருக்க வேண்டும்.
நீட் தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு மேல் எடுப்பது சிபிஸ்சி பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கே சவாலானது. ஏதேனும் ஒரு பயிற்சி வகுப்பிற்குச் செல்பவர்களே இந்த மதிப்பெண்களை பெரும்பாலும் எடுக்கிறார்கள், அதுவும் முதல் முயற்சியிலேயே இந்த மதிப்பெண்களை எடுப்பவர்கள் மிகவும் குறைவு. குறைந்தபட்சம் இரண்டாண்டுகள் பயிற்சி வகுப்பில் இணைந்து படிப்பவர்களாலேயே இந்த மதிப்பெண்களை எடுக்க முடிகிறது. இந்தப் பயிற்சி வகுப்புகளுக்கெல்லாம் லட்சக்கணக்கில் பணம் கட்ட வேண்டும். அதனால் தான் நீட் என்பது வெறும் வர்த்தகம் எனப் பெரும்பாலான கல்வியாளர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.
பொய் 9:
நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சியிலேயே வந்துவிட்டது:
மருத்துவக்கல்விச் சேர்க்கைக்கான சில அடிப்படை உண்மைகளைப் புரிந்தால், இதுவும் திட்டமிட்ட திசைத் திருப்பல் என்பது புரியும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நீட் தேர்விற்கு முன்பு வரை அதாவது 2016 வரை, மொத்தம் உள்ள மருத்துவ இடங்களில் 85 சதவீத இடங்கள் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கே ஒதுக்கப்பட்டு வந்தது. அரசுப் பள்ளியில் படித்தாலும் அல்லது தனியார் பள்ளிகளில் படித்தாலும் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கே இந்த 85 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டன. மிச்சம் உள்ள 15 சதவீத இடம் மத்தியத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது.
ஒவ்வொரு மாநிலமும் ( ஆந்திராவை தவிர) இப்படி மத்தியத் தொகுப்பிற்கு இடங்களை ஒதுக்கின. இப்படி ஒதுக்கும் இடங்களுக்கான அகில இந்திய நுழைவுத்தேர்வை ஒன்றிய அரசே நடத்திக்கொள்ளும். இந்த மத்தியத் தொகுப்பில் உள்ள இடங்களுக்கான நுழைவுத்தேர்வுதான் காங்கிரஸ் ஆட்சியில் நீட் தேர்வாக நடத்தப்பட்டது. இதனால் மாநில ஒதுக்கீட்டில் உள்ள 85 சதவீத இடங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருந்தது. அந்த இடங்களை நுழைவுத்தேர்வே இல்லாமல் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு நிரப்பி வந்தது, அதனால்தான் ஏழை, எளிய மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கினால் மருத்துவராகிவிடலாம் என்ற கனவுகளுடன் படித்து வந்தனர்.
இந்தச் சூழலில்தான் அதிமுக ஆட்சியின் போது, மொத்தமுள்ள அத்தனை மருத்துவ இடங்களும் நீட் தேர்வின் வழியாகவே நிரப்பப்படும் என்ற ஒன்றிய அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அப்போதைய அமைச்சர் மாபா பாண்டியராஜன் கையெழுத்திட்டார், அதன் விளைவாகவே தமிழ்நாட்டில் உள்ள அத்தனை மருத்துவ இடங்களும் ஒன்றிய அரசிற்குத் தாரை வார்க்கப்பட்டது. மாநிலப் பாடத்திட்டத்தில் படித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் இதை முற்றிலுமாக எதிர்பார்க்கவில்லை, அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதே புரியாமல் இதற்குப் பலியானர்கள்.
1176 மதிப்பெண்கள் வாங்கிய அனிதாவால் தன்னைச் சுற்றி நடக்கும் இந்த அரசியலைக் கடைசி வரை புரிந்துகொள்ளவே முடியவில்லை. நீட் தேர்வு என்பதே சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. மேலும் அதற்கென்று பயிற்சி வகுப்பெல்லாம் எடுத்தால்தான் அதில் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்வதற்குத் தேவையான மதிப்பெண்களை எடுக்க முடியும் என்பதே நமது ஏழை, எளிய மாணவர்களுக்கு இன்னும் முழுமையாகப் புரியவில்லை. அதனால் தான் அப்பாவி மாணவர்களை வஞ்சித்து நடத்தப்படும் நீட் தேர்வைத் தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறது.
பொய் 10:
தமிழ்நாடு மட்டும்தான் நீட் தேர்வை எதிர்க்கிறது:
ஆம். தமிழ்நாடு தான் எதிர்க்கும். அதற்குச் சில முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட அரசியலின் விளைவால் கல்வி இங்கு அனைவருக்குமானதாக இருக்கிறது. பெரும்பாலான மாநிலங்களில் அடிப்படை கல்வியே கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் உயர்ககல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகம், மாணவர்களின் கல்விக்குப் பொருளாதாரம் தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக அவர்களுக்குச் சத்துணவு, இலவசப் பேருந்து, புத்தகங்கள், காலணி, கல்வி உதவித்தொகை, மிதிவண்டி, கணினி என மாணவர்கள் கல்வி கற்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்திருக்கின்றன திராவிடக் கட்சிகள். அதனால் ஏழை, எளிய, மாணவர்களுக்கு உயர்கல்வி என்பது எவ்வளவு முக்கியத்துவம் என்பது புரியும். அதனால்தான் அதற்கு எதிரான நடைமுறைகளை எதிர்த்து தமிழ்நாடு போராடுகிறது. அடிப்படைக் கல்வி வசதியே இல்லாத மாநிலங்கள் மருத்துவக்கல்வியைப் பற்றிக் கவலைப்பட அவசியமில்லையே!
தமிழ்நாடு அரசின் மருத்துவக்கட்டமைப்பு மிகவும் வலிமையானது, மாநில அரசின் வருவாயில் ஏராளமான அரசு மருத்துவக்கல்லூரிகள் திறக்கப்பட்டிருக்கின்றன, ஒடுக்கப்பட்ட ஏழை, எளிய, மாணவர்களுக்காக பார்த்துப் பார்த்து உருவாக்கிய இந்த கட்டமைப்பிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுவதை சமூக நீதியை அடிப்படையாக வைத்திருக்கும் தமிழ்நாடு அரசு நிச்சயம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது. அதன் காரணமாகவே நீட் தேர்வைத் தமிழ்நாடு உறுதியாக எதிர்க்கிறது, நீட் முழுமையாக விலக்கிக்கொள்ளும் வரையில் அதைத் தொடர்ச்சியாக எதிர்த்துக் கொண்டேயிருக்கும்.